கட்டுரை 5 நிமிட வாசிப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சரியான ஒரு முன்மாதிரி இல்லை, ஏன்?

சி.பி.கிருஷ்ணன்
01 Oct 2021, 5:00 am
3

ந்திய வங்கிகள் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் நம்முடைய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். “ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வுக்கு இணையாக நான்கைந்து வங்கிகள் இன்றைக்கு இந்தியாவுக்குத் தேவை” என்று அதில் அவர் பேசியிருந்தது கவனம் ஈர்ப்பதாக இருந்தது.

இதன் அர்த்தம் புரியாதது இல்லை. இந்தியாவுக்கு ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’போல நான்கு பெரிய வங்கிகள் வேண்டும் அல்லது போதும் என்கிறார் அவர்; இப்படிச் சொல்லும்போது வங்கிகள் இணைப்பைத்தான் வலியுறுத்துகிறார் என்றாகிறது. ஏனென்றால், ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வின் வரலாறு அத்தகையது.

நாட்டின் பெரும் வங்கி

இன்றளவில், உலகின் பெரிய வங்கிகளில் ஒன்றான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’, நாடெங்கிலும் 22,000 கிளைகள், 62,000 ஏடிஎம்கள், 72,000 வங்கி முகவர்களின் வியாபார ஸ்தலங்கள்; 31 நாடுகளில் 229 அயல் நாட்டு கிளைகள் என்று இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு வங்கியாக உள்ளது. இது நீங்கலாக ‘எஸ்பிஐ பொது காப்பீடு’, ‘எஸ்பிஐ ஆயுள் காப்பீடு’, ‘எஸ்பிஐ ம்யூசுவல் பண்டு’, ‘எஸ்பிஐ கார்டு’ என்று நான்கு துணை நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. நாட்டின் வங்கித் துறையின் மொத்த வணிகத்தில் நான்கில் ஒரு பங்கினையும், 45 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

பெரிய சாதனைதான் இது. ஆனால், இவ்வளவு வளர்ச்சியும் அதன் தனித்த முயற்சியினுடைய விளைவு இல்லை. பல வங்கிகளை விழுங்கிக்கொண்டதன் விளைவு அது!

ஸ்டேட் பேங்க் வரலாறு

1806 ஜூன் 2 அன்று இன்றைய கொல்கத்தாவில் உருவானது, ‘பேங்க் ஆஃப் கல்கட்டா’.  இதைத் தொடர்ந்து 1840 ஏப்ரல் 15 அன்று ‘பேங்க் ஆஃப் பம்பாய்’, 1843 ஜூலை 1 அன்று ‘பேங்க் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய இரண்டு வங்கிகளும்  தொடங்கப்பட்டன. இந்த மூன்று வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, 1921 ஜனவரி 27 அன்று ‘இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’ உருவாக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947இல் ரூ.275 கோடி இருப்பும், ரூ.73 கோடி கடனும் 172 கிளைகளும் கொண்ட வங்கியாக இருந்தது இந்த வங்கி.

பின்னர் 1955 ஜூலை 1 அன்று ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’  சட்டத்தின் மூலமாக, ‘இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’ என்பது ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற பொதுத் துறை வங்கியாக உருவெடுத்தது. 1959இல் ‘ஸ்டேட் பேங்க் துணை வங்கிகள் சட்டம்’ உருவாக்கப்பட்டு, 8 துணை வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

1963இல் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர்’ மற்றும் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் ஜெய்பூர்’ ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்பூர்’ என்று ஒரே வங்கியாக மாற்றப்பட்டது. இதனால் 8 துணை வங்கிகள் 7 என்றாகின.

இதற்குப் பின் 1969இல், ‘பேங்க் ஆஃப் பிஹார்’, 1970இல், ‘நேஷனல் பேங்க் ஆஃப் லாகூர்’, 1975இல் ‘கிருஷ்ணராம் பால்டியோ வங்கி’, 1985இல், ‘பேங்க் ஆஃப் கொச்சின்’ ஆகிய வங்கிகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இணைத்துக்கொண்டது. பின்னர், 2008இல், ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் செளராஷ்ட்ரா’, 2010இல் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூர்’, 2017இல், ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத்’, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் ட்ராவாங்கூர்’, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் பாடியாலா’, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்’, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்பூர்’ ஆகிய 7 துணை வங்கிகளும் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வுடன் இணைக்கப்பட்டன. கூடவே 2017இல் ‘பாரத் மஹிலா பேங்க்’கும் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வுடன் இணைக்கப்பட்டது.

தவறான முன்னுதாரணம்

இப்படிப் பல வங்கிகளையும் இணைத்து ஒரு வங்கி பெரிதாக்கப்படுவது தவறான முன்னுதாரணம். ஏனென்றால், ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வின் துணை வங்கிகள் முன்னதாக அந்தந்த மாநிலம் சார்ந்து மகத்தான சேவை ஆற்றி வந்தன. பல துணை வங்கிகள் அந்தந்த மாநிலங்களில் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வை விட வியாபாரத்திலும், அளவிலும் பெரிய வங்கிகளாக இருந்தன. தாம் சார்ந்திருந்த பிராந்தியங்களுக்கு அவை அதிக சேவை ஆற்றின.

ஆக, இப்படி வங்கிகள் ஒன்றாக்கப்பட்டபோது  வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அந்தந்த மாநில மக்களும் இணைப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையெல்லாம் மீறித்தான் ஒன்றிய அரசு இந்த இணைப்பை ஏற்படுத்தியது. 

இப்படி அதிகாரத்தைக் குவிக்கும்போது முடிவுகளை முழுக்கத் தன் கைக்குள் வைத்து எடுப்பது ஒன்றிய அரசுக்கு வசதியாக இருக்கிறது. சிறிய வங்கிகளாக இருக்கும்போது அங்கிருந்து பெரிய முதலீடுகளைப் பெருநிறுவனங்கள் நோக்கி நகர்த்த முடியாது. பெரிய வங்கிகளாகும்போது அது சாத்தியம்.

ஓர் உதாரணத்துக்கு, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' இந்த முதலீடுகளைக் கொஞ்சம் பரிசீலியுங்கள்.

இத்தனை பெரிய வங்கியான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஜியோ பேமென்ட் வங்கி’யில் 30% இளைய பங்காளியாக இணைந்துள்ளதே, ஏன்?

தனது போட்டி வங்கியான ‘யெஸ் வங்கி’ சமீபத்தில் கவிழும் நிலையில் இருந்தபோது, அந்த வங்கியின் பங்குகளை வாங்கி அந்த வங்கிக்கு முட்டு கொடுக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.  ‘யெஸ் வங்கி’ வளர்ந்தால் அது ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வுக்குப் போட்டியாக மாறும்; வீழ்ந்தால்,  ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வின் முதலீடு காணாமல் போகும். ஆனாலும், எப்படி இப்படிப்பட்ட ஒரு ‘புத்திசாலித்தனமான முடிவு’ எடுக்கப்படுகிறது?

யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்? 

மக்களிடமிருந்து அந்நியம்

வங்கிகள் பெரிதாக, பெரிதாக அவை சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படத் தொடங்கிவிடுகின்றன; குறிப்பாக சாமானிய மக்களின் வங்கிச் சேவை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது; பெரிய வங்கிகள் பெரும் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கவே அதிகம் பயன்படுகின்றன என்பதே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் வரலாறு. ஆனாலும், அதிகாரத்தை மையப்படுத்துவதில் பிரேமை கொண்ட அரசுகள் வங்கிகளையும், நிதியையும் மையப்படுத்துவதிலும் பிரேமை கொண்டிருக்கின்றன.

இன்றைய மோடி அரசு இதில் தீவிரமாக இருக்கிறது. இதன் காரணமாக பல்லாயிரம் கிளைகள் மூடப்படுகின்றன. வளர்ந்த நாடுகளில் 2,500 பேருக்கு ஒரு வங்கிக் கிளை என்ற ரீதியில் வங்கிகள் உள்ள நிலையில் நம் நாட்டில் 13,000 பேருக்கு ஒரு வங்கிக் கிளை என்ற எண்ணிக்கையிலேயே வங்கிகள் உள்ளன. இப்போது வங்கிகள் இணைப்பினால் கிளைகளின் எண்ணிக்கை மேலும் வீழ்ந்துகொண்டிருக்கிறது.

கிளைகள் குறைவதன் பாதிப்பு

இந்தியா டிஜிட்டல் சேவையில் முந்தைய நிலையைவிட முன்னேற்றம் கண்டுள்ளது என்பதும், நிறைய விஷயங்களை இன்று வங்கிக் கிளைகளுக்குச் செல்லாமலேயே நம்மால் செய்துகொள்ள முடியும் என்பதும் உண்மை. ஆனால், இந்த வசதிகள் நகர்புற மேல்தட்டு மக்களுக்கே அதிகம் பலன் தருகிறது; அதாவது ஏற்கெனவே வங்கி வசதியுள்ள மக்களுக்கு. இன்னமும் வங்கிகளின் சேவைகளே சென்றடையாத கிராமங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்! 

மேலும், பொதுத் துறை வங்கிகளின் இடத்தைத் தனியார் வங்கிகள் நிரப்பிவிடும் என்று நம்புவதும் ஆபத்தானது. அரசு வங்கிகளதாம் சாமானிய மக்களுக்கான விவசாயம், சிறு தொழில், சுய உதவிக் குழுப் பெண்கள், கல்விக் கடன் என்று சமூக மேம்பட பேருதவி புரிகின்றன. அதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது. தனியார் வங்கிகள் பெருமளவில் வங்கிச் சேவையை ஒரு வணிகமாகவே பாவிக்கின்றன. எந்தத் தனியார் வங்கியில் பணியிடங்களில் பட்டியிலின மக்கள், முன்னாள் படை வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு இருக்கிறது, சொல்லுங்கள் பார்ப்போம்! 

அரசோ நேர் எதிர்ப் பாதையில் செல்கிறது. ஒன்றிய அரசின் கொள்கை அறிவிப்பின்படி அதிகபட்சமாக நான்கு பொதுத்துறை வங்கிகள் மட்டுமே விட்டுவைக்கப்படும் என்று தெரிகிறது. அதேசமயம், தனியார் வங்கிகள் ஊக்குவிக்கப்பட்டுகின்றன. பாஜகவின் முதலாவது ஆட்சிக் காலகட்டத்தில் மட்டும் 22 தனியார் வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆக, ஒன்றிய நிதி அமைச்சர் சொல்லும் வகையில் பார்த்தால்,  வங்கிகள் இணைப்பு மேலும் வலுவடையும் என்று தெரிகிறது. அது எந்த வகையிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சாமானிய மக்களின் நலனுக்கும் உகந்ததல்ல! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சி.பி.கிருஷ்ணன்

சிபி கிருஷ்ணன், இணைச் செயலாளர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com


1


1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

naan raam   3 years ago

good and neady writeup comrade. first the employees want to understood the truth behind government policies and they stood wakeup their voices for their work and the service for the people both are not separate.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Nesan   3 years ago

நல்ல பதிவு வங்கிகளின் தனித்துவம் அப்பகுதிமக்களுக்கு செம்மையாக செயல்படுவதில்தான் உள்ளது. ஒன்றிய அரசுக்கு மக்களை திசைதிருப்ப இதுபோல் கோக்குமாக்கு யோசனைகள் வருகிறதா அல்லது நாட்டை சுரண்ட நினைக்கும் கார்பரேட்கள்(கூடாநட்பு) இவ்வாறு அலோசனை வழங்குகிறார்களா? அரசின் செயல்பாடு மக்களுக்கானதாக இருக்கவேண்டும்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

SHANKAR K   3 years ago

mika mika sariyana katturai. SBI nevr render the service.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

லவ் ஜிகாத்சிந்து சமவெளிஆவணமாகும் புகைப்படத் தொகுப்புபுத்தக வாசிப்புமுதன்மைப் பொருளாதார ஆலோசகர்எண்ணும்மைசந்துரு சமஸ் பேட்டிமகாதேவ் தேசாய்மடாதிபதிமுற்காலச் சேரர்கள்சென்னையை நாசப்படுத்திவிட்டோம்: ஜனகராஜன் பேட்டிசாதிப் பிரிவினைதேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்சத்துணவுஅன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்இன்ஷார்ட்ஸ்வ.ரங்காச்சாரிஷிழ் சிங் பாடல்பி.சி.கந்தூரிஉரையாசிரியர்வயிற்றுவலிஅம்ரீந்தர் சிங்முடிவுக்காலம்ரோபோட்கீழ் முதுகு வலிகடவுள் கிறிஸ்தவர் அல்ல - இந்துவும் அல்ல!ஜிஇஆர்மாத்திரைகிராமமாபேட்டரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!