கட்டுரை, வரலாறு, ஆளுமைகள், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

பெரியார்: அவர் ஏன் பெரியார்?

கல்யாணராமன்
02 May 2023, 5:00 am
0

ந்தச் சாதியச் சமூக அமைப்பு ஒரு சரியில்லாத அமைப்பு; இது உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டியது என்பதை வலியுறுத்தியதுடன் தம் வாழ்நாளில் அதற்காக அளப்பரிய பணிகளை ஆற்றிய மாபெரும் தலைவர் ந்தை பெரியார் (1879 - 1973). பெரியாரைப் புரிந்துகொள்ளுதல் எளிதல்ல. எந்தத் தலைவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லையென்றாலும், புரிதல் சிக்கலின் பெயரால், விமர்சனம் என்ற பெயரில் பெரியார் மீது பாய்வோரும் உண்டு. பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் தமிழில் பல்லாயிரம் பக்கங்களுக்கும் மேல் விரிந்து கிடக்கின்றன. அவற்றைத் திறம்படப் பயன் கொண்டு, பெரியார் மீதான புரிதல் பிழையான ‘விமர்சனங்களுக்கு’ ஆதாரபூர்வமாகப் பதிலளிக்கும் தேர்ந்த ஆவணமாக வெளியாகியிருக்கிறது ப.திருமாவேலனின் ‘இவர் தமிழர் இல்லை என்றால், எவர் தமிழர்?’

ஒரு மாபெரும் அரசியல் ஆளுமையின் மீதான பல்வேறு தரப்பினரின் எதிர்த் தாக்குதல்களையும், ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்’ என்ற முறையில் நேருக்கு நேராகச் சந்தித்து, அடிச்சாரமான மெய்ப்பொருளச் சிந்தாமல் சிதறாமல் கைப்பற்றிப் பொது வாசகரின் முன் வைக்கும் அரும்பணியைத் தனி ஒருவராக வரலாற்றில் ப.திருமாவேலன் செய்திருக்கிறார்

எத்தனை எத்தனை தாக்குதல்கள்?

பெரியார் மீதுதான் எத்தனை தாக்குல்கள்?

‘தமிழ்நாடு’ என்று கேட்காமல் ‘திராவிட நாடு’ என்று கேட்டவர், ‘தமிழர் கழகம்’ என்று பெயர் வைக்காமல் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டியவர், ‘தன்மான இயக்கம்’ என்று தனித்தமிழில் அடையாளப்படுத்தாமல் ‘சுயமரியாதை இயக்கம்’ என்று வட மொழிக்குத் தமிழிலும் இடம் கொடுத்தவர், தமிழ் மொழியைக் ‘காட்டுமிராண்டி மொழி’ என்று ஏசியவர், திருக்குறளைக் கடுமையாக விமர்சித்தவர், அனைவரையும் ஆங்கிலம் படிக்கச் சொன்னவர், கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் ஏற்க மறுத்தவர், கலைகளை மறுதலித்தவர்,  எழுத்துச் சீர்திருத்தத்தைப் புகுத்தித் தமிழின் மரபையும் மாண்பையும் கெடுத்தவர்...

இப்படிப் பெரியார் மீது வீசப்படும் பல கணைகளுக்கும் நிதானமாகவும், அடுக்கடுக்கான சான்றுகளின் மூலமாகவும், மிக ஆழமான எதிர்வாதங்களினூடாகவும் இந்த நூலில் பேசுகிறார் திருமாவேலன்.

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

ப.திருமாவேலன் 26 Dec 2021

இது 1,600 பக்கங்களுக்கும் மேற்பட்ட பெருநூல் என்பதால், அத்தனை பகுதிகளையும் எடுத்துக்கொண்டு விவாதிப்பது இயலாத காரியம். ‘பெரியாருடன் இயைந்து வாழ்ந்த பத்துத் தமிழ் ஆளுமைகள்’ (பக்.93 - 266) என்ற சிறு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, இதன் வழியே ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்?’ என்று எப்படி திருமாவேலன் பேசுகிறார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். 

வ.உ.சி., மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், கி.ஆ.பெ. விசுவநாதம், இலக்குவனார், தேவநேயப் பாவாணர், கு.மு. அண்ணல் தங்கோ, தவத்திரு. குன்றக்குடி அடிகளார் என்ற பத்துத் தமிழ் ஆளுமைகளுக்கும் பெரியாருக்குமான நயத்தக்க, நனிநாகரீக உறவின் அனைத்து நுட்பக் கோணங்களையும் தர்க்க ஒழுங்குடன் நூலில் எடுத்துக்காட்டுகிறார் ப.திருமாவேலன். தத்தம் துறைகளில் தலைசிறந்து விளங்கிய இவர்கள் ஒவ்வொருவரும், பெரியாரைத் தம் தலைவராக ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்குப் ‘பலரையும் ஒருங்கிணைக்கும் தமிழ்ப் பால’மாகப் பெரியார் விளங்கியமையே ஒரே காரணம் ஆகும் என்கிறார்.  எப்படி?

சரியான வரலாற்றுப் பார்வை

இந்திய அரசியல் விடுதலையில் மட்டும் அதிலும் குறிப்பாகத் தீவிரவாதக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டவர் வ.உ.சிதம்பரம் என்பது அவரைப் பற்றிய ஒரு குறை மதிப்பான பொதுச் சித்திரமாகும். தொல்காப்பியத்தைப் பதிப்பிப்பது முதலிய தமிழ்ப் பணிகளிலும் ஈடுபட்டவர் வ.உ.சி. பெரியாருக்கும் அவருக்கும் மிக நெருங்கிய உறவு இருந்தது; இருவரும் ஒருவரையொருவர் உயர்ந்த மதிப்புடன் போற்றியிருக்கின்றனர். எந்தப் புள்ளியில் இருவரும் இணைந்தார்கள்?

பின்வரும் சொற்களைக் கவனியுங்கள். “இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதில்லை என்பதும், நமக்குள் ஒற்றுமையுண்டாகாமல் நாம் உண்மையான சுய அரசாட்சி அடையப்போவதே இல்லை என்பதும் மனித அறிவுடைய எவர்க்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மைக்கு மாறாகப் பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர்!” 

இதைப் பேசியவர் யார் தெரியுமா? பெரியார் அல்ல; வ.உ.சி. (05.11.1927: சேலத்தில் நடைபெற்ற மூன்றாவது அரசியல் மாநாடு).  ‘வ.உ.சி.யையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன்’ எனப் பிற்காலத்தில் பெரியார் பேசியதற்கும், தேசிய இயக்க முன்னோடி வ.உ.சி.யின் இப்பேராளுமையே காரணமென்பதில், இனி யாருக்கும் ஐயம் வர நியாயமுண்டா? “எப்போதெல்லாம் தியாகத்தைப் பற்றி, சிறையைப் பற்றி, போராட்டம் பற்றி எழுதவேண்டி வந்ததோ அப்போதெல்லாம் வ.உ.சி.யை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார் பெரியார்” என்றெழுதுகிறார் ப. திருமாவேலன். 

“ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராடிய வ.உ.சி. தனது மகனை ஆங்கில அரசின் காவல் துறைக்கு அனுப்பும் அளவுக்குத்தான் அவரை இந்த நாடு வைத்திருந்துள்ளது. அவ்வளவு பொருளாதாரத் துன்பங்களை அடைந்துள்ளார்” எனப் பரிவுடன் எழுதும் ப.திருமாவேலன், இது தொடர்பில் பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதத்தைப் பகிர்கிறார். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன் 01 Apr 2023

மறைமலையடிகளும் பெரியாரும் 

திலகரின் சிஷ்யர், காந்தியைப் பின்பற்ற முயன்றவர், பாரதியாரின் மாமா எனப் பல நிலைகளில் வ.உ.சி. பயணித்திருந்தாலும், இறுதியாக அவர் - பெரியாரின் திசை நோக்கியே வந்துகொண்டிருந்தார் என்பதைப் ப.திருமாவேலன், “வ.உ.சி. மரணிப்பதற்கு ஆறு மாதத்துக்கு முன்பு எழுதிய கடிதத்தில் வ.உ.சி. சொல்கிறார்: அனைத்துக் கட்சியில் இருக்கும் பார்ப்பனரல்லாதாரை ஒன்றுகூட்ட வேண்டும்!” இதுதான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் கனவு; இது மறைக்கப்பட்ட வ.உ.சி. என்கிறார் திருமாவேலன்.

சரி, இந்த 'வீரத் திராவிடன்' (இது பெரியார் கொடுத்த பட்டம்) வ.உ.சி.யைப் பற்றிப் பெரியார் என்ன நினைத்தார்? “தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோகமானியர், முனீந்திரர் போன்று சிதம்பரம் கட்டடம், சிதம்பரம் உருவச்சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கருத்து, சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால், அவர் பிள்ளை. அதுவும் சைவப்பிள்ளையானாலும் சூத்திரப்பிள்ளையானதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்துவருகிறது. சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமானப் பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்...” என்கிறார் பெரியார் (குடிஅரசு: 22.11.1936). 

பார்ப்பனரான பாரதியாருக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும்கூடத்தான் பெரியார் சொன்னபடியெல்லாம் பெரிய மரியாதைகள் நடக்கவில்லை (அதிலும் சுப்பிரமணிய சிவாவுக்குச் சுத்தமாக எதுவுமே நடக்கவில்லை) என்பதையும் இங்கே கருதாமலிருக்க முடியவில்லை. ஆனால், அவரது மகத்தான தியாகத்திற்கேற்ப, ஒருசிறிதும்கூட வ.உ.சி. போற்றப்படவில்லை என்ற பெரியார் கருத்தின் உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

மறைமலையடிகளுக்கும் பெரியாருக்குமான உறவைப் பின்வரும் செறிவான சொற்களில் தொகுத்தளிக்கிறார் ப.திருமாவேலன். “நம் காலத்துப் பேரறிஞர்; நம்மவர்’ என்று நினைத்து மறைமலையடிகளைப் போற்றினார் பெரியார். ‘அவர் இன்னொரு பக்கத்திலிருந்து நம் கொள்கையைப் பேசிவருபவர்' என்று பெரியாரைக் கருதினார் மறைமலையடிகள். இருவரும் மிகக் கடுமையாக மோதிக்கொண்ட காலமும் உண்டு. ஆனால் ஒருவர் மதிப்பை இன்னொருவர் காத்து நின்றார்கள்" என்கிறார் ப.திருமாவேலன். பார்ப்பனிய எதிர்ப்பில் இருவருக்கும் உடன்பாடிருந்தாலும், சைவ எதிர்ப்பிலும்,  இலக்கியங்களின் சமயச் சார்பைக் கேள்விக்குட்படுத்தியதிலும் பெரியாருடன் கடுமையாக முரண்பட்டவர் மறைமலையடிகள். இதைத் தாண்டியும் பெரியார், இந்தி எதிர்ப்புப் போரை இரண்டு முறையும் மறைமலையடிகள் தலைமையிலேயே தொடங்கினார் என்பதிலிருந்தே, மறைமலையைப் பெரியார் எவ்வளவு மதித்தார் என்பதை நாம் அறியலாம். ஆனால், “அபிப்பிராய பேதத்தைப் பற்றிய விஷயத்தில் அவர் (மறைமலையடிகள்) எவ்வளவு இணங்கி வருவதாயினும், நாம் நமது கொள்கையிலோ அபிப்பிராயத்திலோ ஒரு சிறிதளவுகூட விட்டுக்கொடுக்கவோ, திரு.வேதாசலத்தினுடையவோ அல்லது வேறு யாருடையவோ நட்பைக் கருதினாலும் கடுகளவு மாற்றிக்கொள்ளவோ நாம் சிறிதும் தயாராயில்லை. ஏனெனில், ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தங்களின் உழைப்புகள் பலன் தராததற்குக் காரணமே இவ்விட்டுக்கொடுக்கும் தன்மையும் தாட்சண்யமும் ராஜதந்திரச் செய்கையும்தான் என்பது நமது முடிவு” என்ற தெளிவுதான்,பெரியாரின் வலிமையாகும். 

இதனால்தான் மறைமலையடிகளேகூட, “எனது நோக்கங்களும் விருப்பங்களும் அவராலே (பெரியாராலே) எளிதில் எங்கும் பரவுகின்றன” என்றெழுதியுள்ளதாகக் கூறலாம். பற்பல கருத்து வேறுபாடுகளைத் தாண்டியும், இருவருக்கும் தமிழினத்தின் முன்னேற்றத்தில் காணப்பட்ட பொது ஈடுபாடு காரணமாகவே, “தந்தை பெரியாருக்கும் தனித்தமிழ்த் தந்தையாக இருந்துள்ளார் அடிகள்” எனக் குறிப்பிடுகிறார் ப.திருமாவேலன்.

திருவிக எனும் இணைப்புச் சங்கிலி

தமிழுக்கும் பெரியாருக்கும் இணைப்புச் சங்கிலியாக இருந்தவர் திருவிக. “திருவிகவைச் சாமியாராகிவிடாமல் தடுத்தவர் பெரியார்.  ஈ.வெ.ராமசாமியாக இவர் முடிந்துவிடக் கூடாது என்று பெரியாராக உயர்த்தியவர் திருவிக” என்பதோடு, இவ்விருவரையும், "உண்மையான நட்பின் உதாரணங்கள்" என்கிறார் ப.திருமாவேலன். 

பெரியாரைப் பார்ப்பன விரோதியாகப் பலரும் கட்டமைத்த அக்கருத்துநிலையைக்கூடத் திருவிக, "இந்நாட்டில் வாழும் பிராமணச் சமூகத்தினர் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியால் பெரிதும் அச்சப்படுகிறார்கள். அதுதான் காரணம், அவர்கள் செய்திகளை மறைப்பதற்கும்! 'பெரியார் என்றால், ஐயோ! அவரா?’ என்று அச்சக் குரல் எழுப்புகிறார்கள். இது தவறு. பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பிராமணனிடத்திலும் கடுகளவும் விரோதமில்லை. இம்மியும் பகையில்லை. இதை உணரக்கூடிய சரியான தலைவர்கள் பிராமணச் சமூகத்தில் இன்றில்லை என்றுதான் நான் கூறுவேன்... பெரியாருடன் திராவிட நாடு பிரிவினை முயற்சியில் பிராமணத் தோழர்கள் உழைக்க முன்வருவார்களானால், விரைவில் பிரிவினை பெற்று, எல்லோருமே இன்ப வாழ்வு நடத்தலாம். இந்நாட்டில் வாழும் நாய், கழுதை, குதிரை, புலி, சிங்கம் யாவற்றிற்கும் திராவிட நாட்டில் உரிமை இருக்குமென்றால், மனிதர்களாக இருக்கும் பிராமணச் சகோதரர்களுக்கு மட்டும் இந்நாட்டில் வாழ இடம் இருக்காதா? இவர்கள் தாம் கொண்டுள்ள தவறான அச்சத்தைப் போக்கிக்கொண்டு பெரியாருடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும்!" என்று தமக்கேயுரிய சமரச நோக்குடன் திருவிக வேண்டுவதைப் ப.திருமாவேலன் எடுத்துக்காட்டுகிறார். இதுபோலப் பொதுவெளியில் அதிகம் பகிரப்படாத மேற்கோள்களின் தொகுப்பாக இந்நூல் திகழ்வதும் நாம் அறிந்துகொள்ளத்தக்கதாகும்.

பெரியாருக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியாருக்குமான உறவு, இந்தி எதிர்ப்பின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். வஉசியின் சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்காக நிதி திரட்டியவர்களுள் ஒருவரான நாவலர் பாரதியார், காந்தியடிகளைத் தென் தமிழகத்துக்கு முதன்முதலாக அழைத்து வந்தவருமாவார். கதர் உடைதான் அனைவரும் உடுத்த வேண்டும் என்று காந்தி சொன்னபோது, எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள் என்றவர் இவர். 

காலம் சென்ற மறைமலையடிகளுக்கு இணையான பெரும் புலவராக இவரைப் பெரியார் பார்த்தார் என்றும், “இந்தியை யார் எதிர்க்கிறார்கள்? ஒரு இராமசாமியும் ஒரு சோமசுந்தர பாரதியும்தானே. இராமசாமியோ பார்ப்பனத் துவேஷி. பாரதியோ பண்டிதர். ஒரு பண்டிதரும் ஒரு பார்ப்பனத் துவேஷியும் எதிர்ப்பதற்கா நான் இந்தியை விட்டுவிடுவது?” என்றார் இராஜாஜி.

சென்னை சட்டமன்றத்தில் முதலமைச்சர் இராஜாஜி இப்படிச் சொன்னபோது, உறுப்பினராக இருந்த சர் ஏ.டி.பன்னீர்செல்வம் எழுந்து, “இன்று இந்தியை எதிர்ப்பது இருவர் என்றால், கொண்டுவருவது நீங்கள் ஒருவர்தானே?” என்றார். எனவே, பெரியாருக்கும் நாவலர் பாரதியாருக்குமான நட்பு என்பது, தமிழ் உரிமை நட்பு. அதனால்தான், தாம் நடத்திய திருக்குறள் மாநாடுகளில் எல்லாம், நாவலர் பாரதியாரைப் பெரியார் அழைத்துப் பேச வைத்துள்ளார்” என்கிறார் ப.திருமாவேலன். 

ஞாலப் பெரியார்

திராவிட இயக்கமும் தமிழியக்கமும் வேறு வேறு அல்ல என்ற புரிதலுடையவர் பாரதிதாசன். இந்த எளிய உண்மையைக்கூடத் தெரிந்துகொள்ளாமல், “போலித் தமிழ்த் தேசியர்கள், தாங்கள் உரிமை கொண்டாட ஒருவரும் இல்லாத நிலையில், பாவேந்தரை வைத்தும் திரிபுவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ப.திருமாவேலன். பெரியார் - மணியம்மையார் திருமணத்தைப் பாரதிதாசன் கண்டித்திருந்தாலும், எந்த நிலையிலும் பெரியாரை விட்டுக்கொடுத்துவிடாமல், “கிழவன் செய்யுற தொண்டை எவன் செய்றான்? காலமெல்லாம் இந்தக் கிழவனல்லாமல் வேறு எவன் துணிஞ்சு மக்கள் வாழ்வுக்குத் தடைகள் எவை எவைனு கண்டு சொல்றவனாக இருக்கான்?” எனப் பாவேந்தர் பெரியாரைத் தாங்கிப்பிடித்துள்ளதையும் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார். மேலும் அவர், “பாவேந்தர் இறுதிக் காலத்தில் திராவிடர் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தார் என்று போலிகள் பொல்லாத வரலாறு எழுதுகிறார்கள். இல்லை. இதில் உண்மை இல்லை. இன்னும் தீவிரமான பெரியாரியராகவே பாவேந்தர் இருந்தார்!” என்பதற்கு, “பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல், நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்?” என்ற புரட்சிக்கவிஞரின் கேள்வியையே பதிலாக்கியுள்ளார் ப.திருமாவேலன்.

ஞாலப் பெரியாராகத் தந்தை பெரியாரைக் கண்டவர் பாரதிதாசன். இந்த ‘ஞாலப் பெரியார்’ என்பதற்கு என்ன பொருள் என்று யோசிக்கிறேன். நான் சொல்லும் பொருளைப் ப.திருமாவேலன் ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. என்றாலும், என் மனதில் தோன்றியதை ஒளிக்காமல் இங்குச் சொல்லிவிட விரும்புகிறேன். எங்கெல்லாம் மானுட மனம் வேதனைப்படுகிறதோ, எங்கெல்லாம் மனிதர்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே அவர்களின் இன மொழி சாதி பால் மத அடையாளங்களை எல்லாம் தாண்டி வஞ்சிக்கப்படும் அந்தக் கடைசி மனிதனுக்கும் தம் எழுத்தால் பேச்சால் வாழ்வால் கருத்தால் சிந்தனையால் தொடர்ந்து நம்பிக்கையூட்டிப் பேராதரவு காட்டி நிற்பவரே ஞாலப் பெரியார். இந்த இலக்கணத்துக்குத் தமிழ் நிலத்தில் இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தோருள் பெரிதும் பொருந்தியவர் நம் பெரியாரே என்பதுதான் என் கருத்து. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?

சமஸ் | Samas 24 Dec 2017

ஒடுக்குமுறைக்கு எதிராகப் பெரியார்

பெரியாரை ஐயுறுவதும், கன்னடியர் - தெலுங்கர் என்பதும், இடைநிலைச் சாதிகளின் தலைவர் என்பதும், தலித் மக்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய கவனம் அளிக்காதவர் என்பதும் அவர் மீது பொய்யாக ஏவப்படும் வசைகளே; அதேவேளையில், தமிழ்த் தேசியம் பேசுவோரின் கடுமையான - உண்மைக்குப் புறம்பான – எதிர் விமர்சனங்களிலிருந்து பெரியாரை விடுவிப்பதற்காகத் தமிழ்த் தேசியம் பேசுவோரைவிடவும் தீவிரமாகப் பெரியார் தனித் தமிழியம் பேசியவர் என்பதாகப் ப.திருமாவேலன் அவரைக் காட்ட முனைகிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

ஒடுக்கப்படுவோர் யாராக இருந்தாலும், அமுக்கப்படுவோர் யாராக இருந்தாலும், ஒதுக்கப்படுவோர் யாராக இருந்தாலும், சுரண்டப்படுவோர் யாராக இருந்தாலும், அவர்களுக்கான நியாயங்களை உரக்கப் பேசியவர் பெரியார் என்பதுதான் வரலாற்றில் அவரது இடமாகும். அவர் வாழ்ந்த வரலாற்றுக் காலகட்டத்தில், எல்லாத் தரப்பிலிருந்தும் 'தமிழ் - தமிழர் - தமிழ்நாடு' ஒடுக்கப்பட்டது என்பதால், இன விடுதலையையும் மொழி விடுதலையையும் மண் விடுதலையையும் பெரியார் புரட்சிகரமாகப் பேசினார். அதேவேளையில், இனப் புனிதம் - மொழிப் புனிதம் - பழந்தமிழ்ப் புனிதம் - சமய இலக்கியப் புனிதம் - மரபுப் புனிதம் முதலிய எந்த வகைப் புனிதத்திற்கும் நடைமுறைத் தேவையிருந்தால் ஒழியப் பெரியார் முக்கியத்துவம் அளித்ததில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - இது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக அந்தப் பெயரின் பெயரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ, தங்கள் எண்ணத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளவோ அது பயன்படுத்தப்படுகிறது. பழந்தமிழன் யாராயிருந்தால், எனக்கு என்ன? உங்களுக்குத்தான் என்ன காரியம் ஆகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாயிருந்தாலும் இங்கு, இன்று நமக்கு அதனால் என்ன இலாபம் என்பதுதான் என் கேள்வி... இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்குப் பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாகக் கேட்கிறேன். வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும், அந்நியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்தச் சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாகிவிட்டது. பழந்தமிழன் வந்து போதிக்கத்தகுந்த நிலையில் இன்று நமது மனிதச் சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனிதச் சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டியெழுப்ப ஒரு ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால், சாது மக்களை ஏமாற்ற, அதைப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதோடு, அவ்வளவு மடையர்களாகவும் நாம் இல்லை. இன்று நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்குக் காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை என்பன போன்ற பழமையேயாகும். பழந்தமிழர் பேச்சைப் பேசி இனி ஆகவேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியக் கடமையாகும்” என்கிறார் தந்தை பெரியார். இது இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ச் சூழலிலிருந்து எழுந்த ஒரு ஞாலப் பெரியாரின் தனித்துவமான பகுத்தறிவுப் பெருங்குரல்,  இல்லையா?

பெரியாரைப் பற்றி கிஆபெ

பெரியார் 94 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்றால், 95 ஆண்டுகள் வாழ்ந்தவர் கி.ஆ.பெ.விசுவநாதம். “இருவரும் பிரிந்திருந்த காலத்தில் எழுதப்பட்ட கிஆபெவின் எழுத்துகளை மட்டுமே படித்து வாந்தியெடுத்து வருபவர்களே இன்றைய தமிழ்த் தேசியர்கள். இருவரும் மீண்டும் நட்பு கொண்ட காலகட்டத்தை இவர்கள் அறிய மாட்டார்கள்” என்கிறார் ப.திருமாவேலன். “சுயமரியாதை இயக்கத்தை இனி எக்காலத்திலும் எவராலும் எந்த வகையிலும் அழிக்க முடியாது. அப்படி அழித்துவிடலாம் என்று எண்ணுவது சமுத்திரத் தண்ணீரை இறைத்துவிடலாம் என்பதைவிட மோசமானது” எனக் கி.ஆ.பெ. எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டிச் 'சுயமரியாதை இயக்கம்' என்ற தத்துவம் குறித்த ‘அழியாத விளக்க உரை’யாக உள்ளது எனப் போற்றுகிறார் ப.திருமாவேலன்.  

பெரியாரையும் அண்ணாவையும் கி.ஆ.பெ. எப்படி மதித்தார்? “தமிழ்நாட்டில் படிப்பில்லாத மக்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும் பங்கு பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்கு உண்டு. அது போலவே, படித்த இளைஞர்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும் பங்கு அண்ணாதுரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்!” எனப் பெரியார் மற்றும் அண்ணாவின் தனித்துவத்தைக் கி.ஆ.பெ. வரையறுத்துள்ளார்.

ப.திருமாவேலனின் எழுத்து நடையிலேயே, ஒரு திராவிட இயக்க உணர்வு, நீக்கமற நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. வெளி முரண்களுக்கும் உள்முரண்களுக்கும் சேர்த்தே இந்நூலில் ப.திருமாவேலன் பதிலளித்துள்ளார்.

சில இடங்களில், மிகுந்த சொற்செறிவுடன், பல பக்கங்களில் எழுத வேண்டியதை மிகச் சுருக்கமாக அவர் எழுதிவிடுகிறார்.

“நான் வேறு இலக்குவனார் வேறு இல்லை என்றவர் பெரியார். திருவள்ளுவருக்குக் கிடைத்த கொடையே பெரியார் என்றவர் இலக்குவனார்!”  என மிகக் குறைந்த சொற்களிலேயே ஒரு மிக விரிந்த வெளியைத் தீட்டிவிடுகிறார். 

இலக்குவனாரின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் கருத்துகள், அவரது வேலையைக் காலி செய்தன. அரசை எதிர்க்கும் கருஞ்சட்டைக்காரராக இலக்குவனார் மீது புகார் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட தீரரான இலக்குவனாரின் எழுத்துகளுக்கு உறுதுணையாக இருந்தது, பெரியாரின் 'குடிஅரசு'தான் என்கிறார் ப.திருமாவேலன். “எப்படிக் காரல் மார்க்ஸ் சித்தாந்தத்தை லெனின், ஸ்டாலின் நடைமுறைக்குக் கொண்டுவந்தார்களோ அப்படித் திருவள்ளுவருக்கே ஒரு பெரியார் கிடைத்தார்!” என்றும், “இருபதாம் நூற்றாண்டின் வள்ளுவரே பெரியார்” என்றும் எழுதுகிறார்.

பெரியார் அளித்த பட்டம்

அடங்காத் தமிழ் பற்றும் மடங்காத் தன்மானமும் கொண்டு பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்த்த ஞா.தேவநேயப் பாவாணருக்குத் ‘திராவிட மொழி நூல் ஞாயிறு’ எனப் பட்டம் கொடுத்தவரே தந்தை பெரியார்தான் என்கிறார் ப.திருமாவேலன். “எனக்கு நெஞ்சும் உண்டு; வயிறும் உண்டு; இவற்றுக்கு மேலே தன்மானமும் உண்டு என்று சொன்னவர் அவர். சொன்னபடி வாழ்ந்தவர் அவர்” என்றும், “பாவாணரை அறிஞராய்க் கொண்டாடினார் பெரியார்; பெரியாரைத் தலைவராகப் போற்றினார் பாவாணர்” என்றும் எழுதுகிறார் ப.திருமாவேலன். மேலும் அவர், "1938ஆம் ஆண்டு ஈரோட்டிலிருந்து ஏழு பக்கம் கொண்ட கடிதம் பெரியார் அனுப்பி வைத்தார் என்று பாவாணர் குறிப்பிடுகிறார். அந்தக் கடிதம் கிடைத்தால் அது மிக முக்கியமான ஆவணமாக அமையும். 1938ஆம் ஆண்டு முதலே அவர்கள் இருவரும் நட்பிலிருந்ததை இதன் மூலம் அறியலாம்” என்று எழுதுவதன் வாயிலாக, இந்நூல், இதன் எதிரிகள் சுட்டுவதுபோல் - வெறும் தொகுப்பு நூலன்று - அரியதோர் ஆய்வு நூல் என்று நாம் தெளியலாம். இதைப் படிக்கும் இளம் ஆய்வாளர்களுக்கு, அந்தக் கடிதத்தை எப்படியாவது நாம் தேடியெடுத்துவிட மாட்டோமா என்ற ஆர்வத்தைக் கிளறிவிடும் விதத்தில் இத்தகவலைப் ப.திருமாவேலன் பகிர்ந்துகொண்டுள்ளார். 

இன்னும் ஒரு நுண்குறிப்பும் இந்நூலில் உண்டு. “தங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ் காணுமாறு 'பெரியார் தென்மொழிக் கல்லூரி' எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன். பள்ளி இறுதி அல்லது அதற்குச் சமமான தேர்வில் முதல் வகுப்பில் தேறிய ஐம்பதின்மர் குல மத கட்சி நாடு வேறுபாடின்றித் தேர்ந்தெடுக்கப்படுபவர்” எனப் பெரியாருக்குப் பாவாணர் அளித்த அவ்வேண்டுகோள், இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே இருக்கிறதென்கிற - பலரும் அறியாத - 25.06.1969இல் - பாவாணர் எழுதிய அக்கடிதத்தை - இந்நூல்வழி மீண்டும் கவனப்படுத்தியிருக்கிறார் ப.திருமாவேலன். 

சரி, தேவநேயப் பாவாணரின் பெருஞ்சிறப்பு என்ன? இக்கேள்விக்குப் “பெரியாரியத்தின் அடிப்படை நோக்கம் அனைத்தையும் ஆதரித்து நின்றவர் பாவாணர்” எனப் பதிலளிக்கிறார் ப.திருமாவேலன். பெரியாரின் பெருஞ்சிறப்பாக, "கன்னடியரான நாயக்கர் தமிழ் வெள்ளாளப் பெண்ணை மணந்தது இருமடிப் பிறவிக்குல ஒழிப்பாகும்” என்றும், “பெரியார் என்றேனும் உண்மையை மறுத்ததாகவும் இல்லாததைச் சொன்னதாகவும் ஒரு குறிப்புமில்லை” என்றும் தேவநேயப் பாவாணர் எழுதியதைப் ப.திருமாவேலன் எடுத்துக்காட்டுகிறார்.

அண்ணல் தங்கோ

தனித்தமிழ் இயக்க வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு தனிமனித இயக்கமாகச் செயல்பட்டவர் அண்ணல் தங்கோ. 1922லேயே பெரியாரை சந்தித்துவிட்டவர் இவர். இந்நட்பு இறுதிவரை நீடித்ததாகக் குறிப்பிடுகிறார் ப.திருமாவேலன். 1944இல், சேலம் நீதிக்கட்சி மாநாட்டில், “திராவிடர் கழகம் என்ற பெயரே கூடாது. நாம் தமிழர்கள்; நமது இனம் தமிழ் இனம்; நமது மொழி தமிழ் மொழி. எனவே, நமது நாட்டு எல்லையை மொழியை இனத்தை அடிப்படையாகக் கொண்டு, அதைத் ‘தமிழர் கழகம்’ என மாற்றவேண்டும்" என்று அண்ணல் தங்கோ போராடியதாகச் செ.அருள்செல்வன் பதிவுசெய்வதைப் ப.திருமாவேலன் சுட்டிக்காட்டுகிறார். 

மேலும் அவர், "திராவிடர் கழகம் - தமிழர் கழகம் என்ற பெயர் மோதல் அண்ணல் தங்கோவுக்கும் திராவிட இயக்கத்துக்கும் இருந்ததே தவிர, வேறு எந்த மோதலும் இல்லை. இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், 'திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டியதால் 1944ஆம் ஆண்டோடு வெட்டிக்கொண்டு போய்விடவில்லை அண்ணல் தங்கோ என்பதுதான்" என்றும், “தமிழர் கழகம் என்று வைக்காமல் போனதால், திராவிடர் கழகத்தை அசிங்கப்படுத்தவில்லை அண்ணல் தங்கோ, அதற்காகத் தமது 'திராவிடர்' என்ற சொல் எதிர்ப்பை(யும்) ('சொல்' எதிர்ப்பை) கைவிடவில்லை அண்ணல் தங்கோ. 'திராவிடர்' என்று பயன்படுத்தக் கூடாது என்பது நிலைப்பாடு. அதற்காகத் 'திராவிடர்' என்று பயன்படுத்தியவர்களை விழுந்து பிறாண்டவில்லை அவர். தமிழர்களுக்கு எதிரான இயக்கம் எனச் சொல்லவில்லை. சுயமரியாதை இயக்கத்தைத் 'தன்னுணர்வு இயக்கம்' என அவர் குறிப்பதுபோல, இதனை ஒரு மொழிச் சொல் வழுக்கலாகத்தான் பார்த்தார்”  என்றும் விளக்கித் தெளிவுபடுத்துகிறார். 

ஓர் ஆத்திகரும் ஒரு நாத்திகரும்  

“பெரியாரின் தொண்டின் பலன் நான்” எனத் தம்மைக் குறிப்பிட்டவர் குன்றக்குடி அடிகளார் ஆவார். பெரியாரால் மிகவும் மதிப்புடன் ‘மகா சந்நிதானம்’ என்று விளிக்கப்பட்டவர் அவர். ‘விடுதலை’ வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையென்றும், 'தமிழர்களின் இல்லங்கள்' என்பதற்கு அறிவிப்புப் பலகை போல், ‘விடுதலை’ தமிழர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும் என்றும் கூறியதை இங்கே திருமாவேலன் குறிப்பிடுகிறார். 

ஓர் ஆன்மீகர் ஒரு நாத்திகரைத் தம் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுத்தியவராகக் குறிப்பிட்டது, உலகில் வேறு எங்கும் நிகழாததும், பெரியார் - குன்றக்குடி அடிகளார் வாழ்வில் மட்டுமே நிகழ்ந்ததுமான ஒரு தனிப் புதுமை ஆகும். அதேபோல், “நான் திருநீறு பூசிக்கொண்டது மகா சந்நிதானத்துக்காக. அது அவருக்குக் கௌரவத்தைக் கொடுக்கும் என்றால் நான் பூசிக்கொண்டது சரியே" எனப் பெரியார் பேசியதும் அரிய நிகழ்வு.

இப்படி ஒரு கொள்கை நட்பு, பெரியாருக்கும் அடிகளுக்கும் எப்படிப் பூத்தது? 1800 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் சாதி வேற்றுமைகளை மாற்ற வேண்டும் என்ற போரில், "தமிழகத்திற்குக் கிடைத்தது தோல்விகள்தான். அந்தத் தோல்விகளினுடைய கடைசி எல்லையாகத் தலைவர் பெரியார் அவர்கள் பல்வேறு வரலாற்று அதிருப்திகளின் காரணமாகக் கடுமையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் தன்னுடைய கருத்துகளை வைத்தார்கள்" எனக் குன்றக்குடி அடிகள் பேசியதைப் ப.திருமாவேலன் பதிவுசெய்துள்ளார். 

கடவுளும் பெரியாரும்

பெரியாருடன் இயைந்து வாழ்ந்த பத்துத் தமிழ் ஆளுமைகளுடன், பெரியாருடன் இணைந்து பயணித்த மேலும் ஐம்பது புலவர்களையும் தம் நூலில் விரிவாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் ப.திருமாவேலன். இவை ஒவ்வொன்றும் - ஒவ்வொரு தனிவிதத்தில் - ஒளிக்கதிர்களாகப் பொலிகின்றன.

இந்நூலின் கடைசிப் பக்கத்தை படித்து முடித்தவுடன், ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்?’ என்ற கேள்வியை நானே எனக்குள் கேட்டுக்கோண்டேன். நூலிலிருந்து கிடைத்த உடனடி பதில், “கொள்கை மாறுபாடு கொண்டவரையும் வசப்படுத்தும் வல்லமை பெரியார் என்ற மனிதருக்கு உண்டு!” 

தென்னாடுடைய பெரியாரே போற்றி! 
எந்நாட்டவர்க்கும் பெரியவரே போற்றி!

தொடர்புடைய கட்டுரைகள் 

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
பெரியாரின் வைக்கம் சிறைவாசங்களும் ஆறுக்குட்டி நினைவகமும்
பெரியாரை ஏன் வட இந்தியா வரித்துக்கொள்ளவில்லை?
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?
பெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கல்யாணராமன்

கல்யாணராமன். பேராசிரியர், எழுத்தாளர்.


2


1
அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

டாக்டர் தேரணிராஜன்ஆன்லைன் ரம்மி25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையைக்கூட தீர்க்கவில்லை: அம்பேத்கர் பேசுகிறார்!பொருளாதாரக் கொள்கைகள்கல்லில் அடங்கா அழகுதனிக் கொள்கை‘ஈ-தினா’ சர்வேரஜினிகாந்த்மனக்குழப்பம்தனியார்மயம்அடர் மஞ்சள்சித்தராமையாபாண்டுரங்கன் - ருக்மணி சிலைமாண்டேகு-செம்ஸ்ஃபோர்டுவிஜயகாந்த்அரசியல் கட்சிகளின் நிலைவாசிப்புமாநிலப் பாடல்தேசிய புள்ளிவிவரம்இருவகைத் தலைவர்கள்அயோத்தி ராமர் கோயில்சட்டப்பூர்வ உரிமைமிலிட்டரி புரோட்டாசென்னைப் புத்தகக்காட்சிஜீன் டிரேஸ் கட்டுரைதேவ பிரசன்னம்தைவான் தனி நாடாக நீடிக்குமாஎதிர்கட்சிகள்பட்டாபிஷேகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!