கட்டுரை, அரசியல், சட்டம் 5 நிமிட வாசிப்பு

கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பின் முக்கியத்துவம்

கே.சந்துரு
27 Apr 2023, 5:00 am
2

கேரளத்தின் காசர்கோடு அருகில் உள்ளது ‘டநீர் மடம்’. இந்த மடம் ஆதிசங்கரரின் சீடர்கள் ஒருவரால் ஸ்மார்த்த துளு பிராமணர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. அதன் மடாதிபதி கேசவானந்த பாரதி ஸ்ரீபாத கல்வாரு 6.9.2020 அன்று இறந்துவிட்டார். திராவிட மாதிரி ஆட்சி செய்யும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்கூட அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.  

வழக்கை வென்ற மடாதிபதி

யார் இந்தக் கேசவானந்த பாரதி? அவர் நலிவுற்ற மக்களுக்காக ஏதேனும் பாடுபட்டாரா? அவருடைய மடத்தின் நிலங்களைக் கேரள அரசு 1968ஆம் ஆண்டின் கேரள நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் தனிநபர் வைத்துக்கொள்ளக்கூடிய நிலங்களுக்கான உச்ச வரம்பை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதேபோல், சொத்துரிமையை அடிப்படை உரிமை என்றும் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறி அதுபோன்ற பல வழக்குகளை ஒன்றாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது. 1978ல் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, தலைமை நீதிபதி உட்பட 16 மட்டுமே! அதில் 13 நீதிபதிகள் அமர்வு கேசவானந்த பாரதி வழக்கை விசாரித்தது. 

வழக்கில் 24.4.1973 அன்று சரித்திரம் வாய்ந்த தீர்ப்பொன்று வெளியிடப்பட்டது. அந்தத் தீர்ப்பு வந்து 50 ஆண்டுகள் கடந்ததனால் அதன் பொன் விழா இப்போது கொண்டாடப்படுகிறது. அந்தத் தீர்ப்பை பெற்றுத் தந்ததனால் அந்த வழக்குக்கு பெயர் ‘கேசவானந்த பாரதி தீர்ப்பு’ என்று அழைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பைப் பெற்றுத் தந்ததனால் மடாதிபதி கேசவானந்த பாரதி புகழ்பெற்றார். எனவேதான் அவரது மறைவிற்கு இரங்கல் செய்தியைப் பல தரப்பினரும் வெளியிட்டனர். 

கேசவானந்த பாரதி தீர்ப்பில் அப்படி என்னதான் விசேஷம்? அதற்கு முன் அரசமைப்புச் சட்டம் வந்த 23 ஆண்டுகளில் பல்வேறு தீர்ப்புகளில் சொத்துரிமையை அடிப்படை உரிமையாகவும் அதை ரத்துசெய்வதற்கோ திருத்தம் செய்வதற்கோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்புகள் பகிரப்பட்டன. இறுதியாக கோலக்நாத் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று (1967) தீர்ப்பளிக்கப்பட்டது. 

கோலக்நாத் வழக்கு தீர்ப்பினால் சொத்துகள் வைத்துக்கொள்வதற்கான அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட்டதுடன், ஏகபோக சொத்துகளைக் கைப்பற்றி மக்கள் நலனுக்காக பயன்படுத்தக்கூடிய சட்டங்களை இயற்றும் உரிமையை நாடாளுமன்றம் இழந்தது. இதனால் பல சமூக நலத் திட்டங்கள் செயலுக்குக் கொண்டுவருவது தடுக்கப்பட்டது. 14 தனியார் வங்கிகள் தேசவுடைமை ஆக்கப்பட்டதும், மறைந்துபோன சமஸ்தான மன்னர்களுக்கு அளித்துவந்த மானியத்தை ரத்துசெய்யும் சட்டங்களும் செல்லத் தகாதவையாக ஆகிவிட்டன. நீதிமன்றம் தனியார் சொத்துகளுக்குக் கொடுத்த அதீத பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நடைமுறையே இங்கு தண்டனை!

ப.சிதம்பரம் 25 Jul 2022

இரண்டு காங்கிரஸ்

இந்தத் தீர்ப்பு வந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசில் ஆட்சி செலுத்தியது. அதன் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தார். 1967இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களில் பதவியை இழந்தது. அது மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் அதனுடைய பெரும்பான்மை பலம் குறைந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சொத்துரிமையை அடிப்படை உரிமையாகக் கருதுவதை எதிர்த்தும் மக்கள் நலனுக்காக உருவாக்கும் திட்டங்களை சொத்துரிமையை காரணம் காட்டி நீதிமன்றங்கள் ரத்துசெய்வதை எதிர்த்தும் கருத்துகள் உருவாயின. காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து இந்திரா காந்தி தலைமையில் ஒரு அணியும் (இண்டிகேட்), காமராஜர் தலைமையில் மற்றொரு அணியும் (சிண்டிகேட்) உருவானது. 

தன்னுடைய முற்போக்கு முகத்தை வெளிக்காட்ட இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியையே உடைப்பதற்குத் தயாரானார். வங்கிகள் தேசியமயமாக்கும் சட்டத்தை ரத்துசெய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையை நீக்குவதற்காக 24வது அரசமைப்புச் சட்டத் திருத்தமும், மன்னர் மானியத்தை ரத்துசெய்த தீர்ப்பின் அடிப்படையில் நீக்குவதற்காக 25வது அரசமைப்புச் சட்டத் திருத்தமும் (20.4.1972) கொண்டுவரப்பட்டது.

இந்தத் திருத்தங்கள் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் 4வது பகுதியிலுள்ள சமூக நலத்துக்கான சட்டங்களை நாடாளுமன்றம் உருவாக்கும்போது அவை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஷரத்துகள் 14 மற்றும் 19இன்படி முரண்பட்டது என்று கூறி நீதிமன்றங்கள் அந்தச் சமூக நலச் சீர்திருத்தத்துக்கான சட்டங்களை ரத்துசெய்ய முடியாது என்று கூறும் ஷரத்து 31சி அரசமைப்புச் சட்டத்தில் நுழைக்கப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசிய இடதுசாரி அணியினர்கூட இந்திய அரசமைப்புச் சட்டம் பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாக்கிறது என்றும், அது உண்மையானால் இச்சட்டத்தையே ஒட்டுமொத்தமாக வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டும் என்றும் பேசினார்கள்.

1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தார். சிண்டிகேட் காங்கிரஸ் இடம் தெரியாமல் போனது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முற்போக்கு முகமூடியில் மயங்கி காங்கிரஸை முழு மனதாக ஆதரித்தனர். திமுகவும் தமிழ்நாட்டில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக 1967இல் எதிர்த்த அதே காங்கிரஸுடன் 1971 தேர்தலில் கூட்டு வைத்துக்கொள்ள தயங்கவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நீதிபதிகள் நியமனம்: என்னதான் தீர்வு?

ப.சிதம்பரம் 05 Dec 2022

ஏன் இந்தக் கொண்டாட்டம்?

ஒருபுறம் தொழிலாளர் நலன் பற்றிப் பேசிய இந்திரா அரசு மறுபுறம் மக்களை ஒடுக்கக்கூடிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை (மிசா) 1971இல் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அந்தச் சட்டம் பிற்காலத்தில் எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது என்பதைத் திமுக உணராமலேயே அந்த மிசா சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தனர். 

இந்தச் சூழ்நிலையில்தான் நாடாளுமன்றம் சொத்துரிமையைப் பற்றி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் முற்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 26. அதில் சரிபாதி நீதிபதிகள், அதாவது 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேசவானந்த பாரதி உட்பட்ட வழக்குகளை விசாரித்தது. இறுதித் தீர்ப்பில் 7 நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பையும், 6 நீதிபதிகள் சிறுபான்மைத் தீர்ப்பையும் 24.4.1973 அன்று வழங்கினர். அவ்வழக்கில் அளித்த தீர்ப்பில் நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளைக்கூட சட்டத் திருத்தத்தின் மூலம் திருத்தலாம். ஆனால், அடிப்படைக் கட்டமைப்பை எந்தத் திருத்தமும் மேற்கொள்ள முடியாது என்று கூறினார்கள் (1973 (4) SCC 225). இதன் மூலம் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் வரையறுக்கப்பட்டது; நீதித் துறைக்கான தன்னாட்சியும் நிலைநிறுத்தப்பட்டது. 

இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அந்த தீர்ப்பின் பொன் விழாவை இன்றைக்கு நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்தத் தீர்ப்பில் நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை (basic structure of the Constitution) மாற்ற முடியாது என்று கூறியதுடன், அடிப்படை கட்டமைப்பு என்றால் என்ன என்பதையும் விளக்க முற்பட்டனர். 

சிக்ரியின் சில குறிப்புகள்

பெரும்பான்மை தீர்ப்பை அளித்த தலைமை நீதிபதி சிக்ரி அடிப்படைக் கட்டுமானம் என்று குறிப்பிட்ட விஷயங்கள் என்ன என்பதை கீழே பார்க்கலாம். 

  1. அரசமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கம் 
  2. அரசின் குடியரசு மற்றும் ஜனநாயக வடிவம்
  3. அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை
  4. சட்டமன்றங்கள், அரசு மற்றும் நீதித் துறைக்கு இடையேயுள்ள அதிகாரப் பங்கீடு
  5. அரசமைப்புச் சட்டத்தின் ஒன்றியத்தன்மை

இவை தவிர நீதிபதிகள் ஷீலட் மற்றும் குரோவர் இருவரும் இந்தப் பட்டியலில் இரண்டு கூடுதல் கட்டமைப்புகளையும் கூறினர். 

  1. அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைப்படி ஒரு ஷேமநல அரசை உருவாக்குவதற்கான ஏற்பாடு 
  2. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு 

ஆனால், நீதிபதிகள் இப்படி சில அடிப்படை கட்டுமானங்களைக் குறிப்பிட்ட அதேநேரத்தில் இப்பட்டியல் இறுதியானது அல்ல என்றும் எதிர்காலத்தில் இதுபற்றி வரையறுக்க நீதிமன்றம் முயலும் என்றும் கூறினர். 

இந்தத் தீர்ப்பை வழங்கிய பின் தலைமை நீதிபதி சிக்ரி ஓய்வுபெற்றார். அவருடைய இடத்தில் அவருக்கு அடுத்த மூத்த நிலையிலுள்ள நீதிபதிகளில் ஒருவரைத் தலைமை நீதிபதியாக நியமிக்கும் நடைமுறையை மாற்றி நான்காவது முதுநிலையில் இருந்த நீதிபதி ஏ.என்.ராய் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரைவிட மூத்த நீதிபதிகளான ஷீலட், ஹெக்டே மற்றும் குரோவர் மூவரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். 

இந்தத் தீர்ப்பு பரவலாக வரவேற்பை பெற்றாலும், காங்கிரஸ் அரசைப் பொறுத்தவரை இத்தீர்ப்பைக் குறுகிய கண்ணோட்டத்தில் மட்டுமே நோக்கினர். இதன் விளைவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட முயற்சி செய்தது. இந்தத் தீர்ப்பை மாற்றுவதற்கு பல்வேறு சதி வேலைகள் நடத்தப்பட்டன. கேசவானந்த பாரதி தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த முயன்றார் புதிய தலைமை நீதிபதி ஏ.என்.ராய். அதற்கான மனு ஏதும் பரிசீலிக்கப்படாமலேயே சுயமாகவே அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க முயற்சி செய்தது கடுமையாக எதிர்க்கப்பட்டதால், கைவிடப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில்தான் 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் (உத்தர பிரதேசம்) வெற்றிபெற்ற இந்திரா காந்தியின் தேர்தல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. இந்திரா காந்தியின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக அனைத்துத் தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் தோன்றின. ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் இந்திரா காந்தியைப் பதவியிலிருந்து விரட்டுவதற்காக ‘முழுப் புரட்சி’ என்ற முழக்கம் வெளியிடப்பட்டது. 

நெருக்கடிநிலை பிரகடனம்…

தனது நாடாளுமன்ற பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த இந்திரா காந்தியின் மனுவில் நிபந்தனையற்ற தடை உத்தரவு கொடுப்பதற்கு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறுத்துவிட்டார். இதனால் நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்த இந்திரா காந்தி முடிவெடுத்தார். தன்னுடைய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமலேயே குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கி 26.7.1975 அன்று உள்நாட்டு நெருக்கடிப் பிரகடனப்படுத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமைகள் எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. 

இடது வலது என்று எந்த வித்தியாசமும் பாராட்டாமல் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 22,000 தலைவர்களைச் சிறையில் அடைத்து தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இந்திரா முயன்றதுடன், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் இவர்கள் தேர்தல்களை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். பின்னர் இச்சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

நீதித் துறை யார் கையில்?

ஏ.பி.ஷா 02 Mar 2023

மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வெளிவருவதைத் தடுப்பதற்காக அவ்வழக்குகளை ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது. அவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.என்.ராய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நெருக்கடிநிலையின்போது அடிப்படை உரிமைகள் தள்ளிவைக்கப்பட்டிருப்பதனால் மிசா கைதிகள் நீதிமன்றத்தை அணுக முடியாது என்று அதிர்ச்சி தரக்கூடிய தீர்ப்பை வெளியிட்டனர்.

அந்தத் தீர்ப்பில் சிறைக் கைதிகளை நன்றாக தங்கும் வசதியுடன் நல்ல உணவையும், நல்ல கவனிப்பும் செலுத்துவதாகவும் அது ஒரு தாய்மையின் உணர்வை பிரதிபலிப்பதாகவும் அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினர். இந்திய நீதித் துறையில் அதுபோன்ற ஒரு மோசமான தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை. அந்த தீர்ப்பு வழங்கிய தினம் நீதித் துறையின் கருப்பு நாள் என்று கருதப்படுகிறது. 

நீதிபதிகளுக்கான வெகுமதிகள்

இந்த நெருக்கடிநிலை சமயத்தில்தான் தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்திய மு.கருணாநிதி அரசு கலைக்கப்பட்டு (1.2.1976) குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைபடுத்தப்பட்டது. அப்போது கைதுசெய்யப்பட்ட திமுக (தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட) திக மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சென்னை சிறையில் எப்படி கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதைப் பக்கம் பக்கமாக நீதிபதி இசுமாயில் ஆணையம் புட்டுவைத்தது (1978). ஐந்து நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றதில் நீதிபதி யஷ்வந்த் சந்திரசூடும் ஒருவர். பின்னர் இவர் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அவருடைய மகன் தனஞ்செய் சந்திரசூட் தற்போது தலைமை நீதிபதி. ஆதார் அட்டை வழக்கில் தீர்ப்பு வழங்கிய அவர் தனது தந்தை நெருக்கடிநிலையின்போது கொடுத்த தீர்ப்பு தவறு என்பதோடு, அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான தீர்ப்பு என்று கூறவும் தயங்கவில்லை. 

இப்படி நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தை மறந்து அரசுக்கு சாதகமாக செயல்படுவதும், அதற்கான வெகுமதியை ஓய்வுபெற்ற பின் புதிய பதவிகள் மூலம் பெற்றுக்கொள்வதைப் பற்றி பரந்த விமர்சனங்கள் எழுந்தன. இதனால் நீதித் துறையை உள்ளிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது. அதை ஒட்டித்தான் உயர் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் தீர்ப்புகளை வழங்க ஆரம்பித்தனர். மூன்று தீர்ப்புகள் மூலம் நீதிபதிகள் நியமனத்தையே தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுடன், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத கொலிஜியத்தின் மூலம் நியமன நடைமுறையை உருவாக்கினர். இதன் மூலம் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கலாம் என்ற ஏற்பாடு உருவாக்கப்பட்டது. 

சட்ட அமைச்சரின் தாக்குதல்

அரசமைப்புச் சட்டத்தின் 99வது சட்டத் திருத்தத்தின் மூலம் இந்த நீதிபதிகள் நியமன முறையை மாற்றுவதற்கு பாஜக அரசு முயன்றது. அதன்படி புதிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்கியது (2014). இந்தப் புதிய நீதிபதிகள் நியமன முறையின்படி நீதிபதிகள் நியமனம் ஒரு நியமனக் குழுவின் பரிந்துரைப்படி நடைபெறும் என்றும், அதற்கான நிரந்தரச் செயலகம் பணியாற்றும் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு முறை நீதித் துறையின் சுதந்திரத்தைப் பறித்துவிடும் என்று சொல்லி 99வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது (2016). 

ஆனால், தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் நீதிபதிகள் நியமன நடைமுறையை மீண்டும் உருவாக்க முயற்சிக்கவில்லை. மாறாக தற்போது கொலிஜிய பரிந்துரை நியமனத்தின் மூலமே தன்னுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் வென்றுவருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவின் அகில இந்திய பெண்கள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்த விக்டோரிய கௌரியை நீதிபதி ஆக்கியதுடன், பிரதமர் மோடியை முகநூலில் விமர்சனம் செய்த ஜான் சத்யன் (மதராஸ் உயர் நீதிமன்றம்), சோமசேகர் (பம்பாய் உயர் நீதிமன்றம்) இவர்களுக்கு கொலிஜியம் பரிந்துரைத்தும் ஆண்டுகள் ஒன்று கடக்கப்போகும் நிலையில் இன்றும் நியமன உத்தரவுகளை வழங்கவில்லை. 

மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் மற்றும் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகிய இருவரும் நீதிமன்றத்தின் அதிகார வரையறையை எதிர்த்து தினசரி தாக்குதல் நடத்திவருகின்றனர். அவர்களைப் பொருத்தவரை கேசவானந்த பாரதி வழக்கு தவறாக முடிவுசெய்யப்பட்டது என்றும், நாடாளுமன்றத்தின் அதிகார வரையறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என்றும், ஜனநாயகக் குடியரசில் நாடாளுமன்றமே உயர் அதிகாரம் பெற்றது என்றும் பேசிவருகின்றனர். 

பொன்விழா கொண்டாட்டத்தின் அவசியம்

தொடர்ச்சியாக இந்த அரசமைப்புச் சட்டத்தைத் தகர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்னால் வாரணாசியில் நடைபெற்ற இந்து துறவியர்கள் மாநாட்டில் இந்தியாவுக்கு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது பற்றியும் அது இந்துக்களுக்கானது மட்டுமாக இருக்கும் என்றும் இதர சமயத்தினர் இருந்துகொள்ளலாம், ஆனால் ஓட்டு அளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டனர்.  

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருபடி மேலே சென்று “1950இல் இருந்த இந்திய மக்கள்தொகை விகிதம் அதேபோன்று தொடரும் வரைதான் இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கும். இல்லையென்றால் புதிய சட்டம் இயற்றப்படும். அது பாரதீய அரசமைப்புச் சட்டமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார். 

அடிப்படைக் கட்டமைப்பில் அரசமைப்புச் சட்டத்தின் முகவரியான ‘இறையாண்மை பெற்ற சோசலிஸ, மதசார்பற்ற ஜனநாயக குடியரசு’ என்றுள்ள வரிகளும் அடங்கும். இன்றைக்கு அதற்கான ஆபத்து தோன்றிவிட்டது. மீண்டும் இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தின் மூலம் (16 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் மூலம்) கேசவானந்த பாரதி வழக்கு தீர்ப்பின் சாராம்சத்தை ரத்துசெய்வதற்கு எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

இன்றைக்கு அந்தத் தீர்ப்பின் பொன் விழாவை கொண்டாடுவதன் மூலம் அந்தத் தீர்ப்பின் சாராம்சத்தை மக்களிடம் எடுத்துச் சென்று அதை மாற்றுவதற்கான முயற்சிகளை முறியடிப்பதுதான் இன்று சமூக நலச் செயல்பாட்டாளர்கள் முன் உள்ள தலையாய சவால். 

கேசவானந்த பாரதி தீர்ப்பில் ஜனநாயக மதசார்பற்ற குடியரசு என்பது அடிப்படைக் கட்டுமானத்தில் உள்ளடங்கும் என்றும் அதை நாடாளுமன்றம் சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்ற முடியாது என்றும் 13 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு 50 ஆண்டுகளாக நிலைபெற்று நிற்பதனால் அதன் பொன் விழாவை கொண்டாடுவதோடு அதற்கான நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுவதற்கு மக்கள் செயலாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தின் சர்வாதிகாரத்தின் மூலம் இந்த அமைப்பு முறையை மாற்றி ‘ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர், ஒரு உணவு’ என்ற முழக்கங்கள் வலுப்பெற்று இந்நாட்டை சர்வாதிகாரப் பாதையில் இட்டுச் செல்வதுடன் மக்கள் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும்! 

 

தொடர்புடைய கட்டுரைகள்

அரசமைப்புச் சட்டத்தில் கை வைக்க நயவஞ்சகத் திட்டமா?
நீதிபதிகள் நியமனம்: நாம் செல்ல வேண்டிய திசை எது?
நீதித் துறை யார் கையில்?
நீதிபதிகள் நியமனம்: என்னதான் தீர்வு?
நடைமுறையே இங்கு தண்டனை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


4

2

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Manithi Selvi   1 year ago

மதச்சார்பற்ற குடியரசு என்பது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிபடுத்துப்பட்டிருந்தும், பெரும்பான்மை அரசு நிர்வாகங்கள், நிறுவனங்கள், பொதுத்துறைகளில் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற சூழல் நிலவுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்க நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் , ஜனநாயக அரசியல் செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து வினையாற்ற வேண்டும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   1 year ago

மக்களும் அரசமைப்புச் சட்டமும் மக்கள் விரோத பாஜக அரசால் பெரும் தாக்குதலுக்கு உட்பட்டு வரும் இந்த நிலையில் மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் இந்த கட்டுரை புரிதலை ஏற்படுத்துவதில் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆனாலும் ஒரு சிறு தவறு என் பார்வையில் உள்ளது. 1969இல் காங்கிரஸ் பிளவுண்டபோது இந்திரா காந்தி தலைமையில் ஒரு பிரிவும் காமராஜர் தலைமையில் சிண்டிகேட் என அழைக்கப்படும் பிரிவும் இருந்தன என்பது தவறு. தமிழ்நாட்டில் வேண்டுமானால் காமராசர் அவர்கள் தலைமையில் ஒரு பெரும் பிரிவு அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அகில இந்திய ரீதியில் மொரார்ஜி தேசாய் காமராசர் எஸ்கே பாட்டில் நிஜலிங்கப்பா (அப்போதைய காங்கிரஸ் தலைவர்) போன்ற பல பெரும் தலைவர்கள் தலைமையில் தான் அந்த பிரிவு இருந்தது. குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் மொரார்ஜி தேசாய் தான் அகில இந்திய ரீதியில் முக்கியமானவர். கட்டுரையின் மைய பொருள் வேறாக இருந்தாலும் சிறு தவறும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கூறுகிறேன். அடுத்து கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பின் அடிப்படையை மாற்ற ஏதுவாக 16 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க முனைவார்கள் என்றால் அந்த நீதிபதிகள் மக்களின் உரிமைகளை பாதுகாப்பவர்கள் என எப்படி கருத முடியும்?

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

உணவுக் குழாய்சுதந்திரத்தின் குறியீடு மயிர்ஏர் இந்தியாஜின்னாஎஃப்பிஓஉதய சூரியன்ஈரான் - ஈராக்பழச்சாறுகாலனிய கலாச்சார மேலாதிக்கம்சிவசங்கர் எஸ்.ஜேவேலைவாய்ப்பின்மைஏறுகோள்அமினோ அமிலங்கள்ஹரிஜனங்கள்சபாநாயகர்கலைஞர் செல்வம்சட்ட பாடப்பிரிவுசமஸ் கி.ரா.sub nationalism in tamilசூழலியர் காந்திகாளியாஅமெரிக்க அரசமைப்புச் சட்டம்சத்திரியர்கேலிதேசிய ஒட்டக ஆய்வு மையம்தேசிய அவமானம்அழகு நீலா பொன்னீலன் கட்டுரைகான்கிரீட் தளங்கள்ஆயிரம் நடன மங்கைகள்ரயில்வே அமைச்சர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!