கட்டுரை, அரசியல், சட்டம் 7 நிமிட வாசிப்பு

நடைமுறையே இங்கு தண்டனை!

ப.சிதம்பரம்
25 Jul 2022, 5:00 am
1

நம்முடைய குற்றவியல் நீதி வழங்கல் அமைப்பில், நடைமுறையே தண்டனையாக இருக்கிறது. அவசரகதியில் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் கைதுகளால் இடைக்கால விடுதலை (ஜாமீன்) வாங்குவதற்குள் நீண்ட காலம் சிறையில் கழிக்க நேர்கிறது; இது உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாக வேண்டும். நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 6,10,000 பேரில் 80% பேர் விசாரணைக் கைதிகள் (வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்)தான். வழக்கு விசாரணையை நடத்தாமல் வெறும் குற்றச்சாட்டின் பேரிலேயே இத்தனைப் பேரை சிறைகளில் நீண்ட காலம் அடைத்து வைக்கும் இந்த நடைமுறை குறித்து கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. 

இதைவிட அறிவார்ந்த வார்த்தைகள் இதுவரை பேசப்படவில்லை; குறிப்பாக இந்த நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் இப்படி சமீப காலத்தில் பேசப்பட்டதே இல்லை. நீதிபதி ரமணா 17 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தவர், நீதிபதியாக 22 ஆண்டுகள் பணியாற்றியவர். குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகள் என்ற பெயரில் நீதிமன்றங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியாதவர் அல்லர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள், மக்கள் குழுக்களின் தன்னார்வத் தொண்டர்கள், ஊடகர்கள், பாதிக்கப்படும் மக்கள் ஆகியோருடனும் அவர்களுடைய குடும்பத்தாருடனும் அவர் நிச்சயம் இதுபற்றி நிறையப் பேசியிருப்பார். அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான சோகக் கதைகளை இத்தனை ஆண்டுகள் அனுபவத்தில் கேட்டிருப்பார். இந்தக் கட்டுரையின் நோக்கம் அத்தகைய சில சோகக் கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்.

விசாரணையின்றி சிறையில்…

சமீப காலத்தில் பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரைப் பற்றிய கதையைவிட அதிர்ச்சி அளிக்கும் வேறு கதை சமீப காலத்தில் நடக்கவில்லை. 2018 ஜனவரி முதல் நாள் – அந்த நாளில் ஆண்டுதோறும் நிகழ்வதைப் போலவே – பட்டியல் இன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பீமா கோரேகான் என்ற இடத்தில், பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சண்டையின் இருநூறாவது ஆண்டு நிகழ்ச்சிக்குக் கூடியிருந்தனர். அங்கே வலதுசாரி குழுக்களால் தூண்டிவிடப்பட்ட பலர் அங்கு திரண்டிருந்தவர்கள் மீது கற்களை வீசியதுடன் வன்செயல்களிலும் ஈடுபட்டனர். அந்தச் சம்பவத்தில் ஒருவர் இறந்தார், ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

அப்போது ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசு நடத்திய விசாரணை வினோதமான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. 2018 ஜூன் 6இல் பட்டியல் இனத்தவர் மற்றும் இடதுசாரி கொள்கைகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் 5 பேர் மாநிலக் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டனர். அதற்குப் பிறகு மேலும் பலர் அடுத்தடுத்த மாதங்களில் கைதுசெய்யப்பட்டனர்.

அப்படிக் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு வழக்கறிஞர், ஒரு கவிஞர், ஒரு பாதிரியார், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இருந்தனர். 2019 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாஜக அல்லாத கூட்டணி அரசு மகாராஷ்டிரத்தில் பதவிக்கு வந்தது. முந்தைய விசாரணை நடுநிலையற்ற வகையில் நடந்தது என்ற புகார்களின் அடிப்படையில், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது மாநில அரசு. இரண்டு நாள்களுக்குப் பிறகு மத்தியில் ஆண்ட பாஜக அரசு இதில் தலையிட்டது.

வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்தது. பல முறை விண்ணப்பித்தும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை விடுதலை மறுக்கப்பட்டது. ஏசு சபையைச் சேர்ந்த 84 வயது பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி சிறையிலேயே 2021 ஜூலை 5இல் இறந்தார். வரவர ராவ் என்கிற 82 வயதுடைய கவிஞர் மட்டுமே மருத்துவக் காரணங்களுக்காக 2021 செப்டம்பர் 22 முதல் பிணை விடுதலையில் வெளியே இருக்கிறார்.

ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019க்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேசியதற்காக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான ஷர்ஜில் இமாம் என்ற மாணவர் கைதுசெய்யப்பட்டார். தில்லியில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டதல்லாமல் அசாம், உத்தர பிரதேசம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 2020 ஜனவரி 28 முதல் அவர் சிறையில் இருக்கிறார், பிணை விடுதலை மறுக்கப்பட்டுவருகிறது.

அதே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் தன்னார்வத் தொண்டருமான உமர் காலித் 2020 பிப்ரவரியில் நடந்த கலவரங்கள் தொடர்பாக 2020 செப்டம்பர் 14இல் கைது செய்யப்பட்டார். அவருக்கும் தொடர்ந்து பிணை விடுதலை மறுக்கப்படுகிறது.

கேரளத்தில் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சித்திக் கப்பன் என்ற ஊடகர், உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை விசாரித்து செய்தி தரச் செல்லும் வழியில் தடுத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2020 அக்டோபர் 5 முதல் சிறையில் இருக்கும் அவருக்கும் பிணை விடுதலை தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது பற்றியல்ல இந்தக் கட்டுரை. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை விடுதலை மறுக்கப்படுவது ஏன் என்பதுதான் கேள்வி. விசாரணை நடைபெறும்போது, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே விசாரணைக் கைதி என்ற நிலைக்கும் முற்பட்டவர்கள். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது அவர்கள் விசாரணைக் கைதிகளாகிறார்கள். குற்றஞ்சாட்டப்படுவதற்கு முந்தைய ஆதாரங்கள், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தல், குற்றச்சாட்டு தொடர்பான வாத – பிரதிவாதங்கள் ஆகியவை முடிய நாள்கள் – ஏன் வருடங்கள்கூட ஆகும். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை அவர்கள் சிறையிலேயே கைதிகளாக வாட வேண்டியதுதானா? இதுதான் இந்த நாட்டின் சட்டமா? அப்படி அதுவே இந்த நாட்டின் சட்டமாக இருந்தால் இந்நேரம் அதற்குப் புதிய விளக்கம் தரப்பட வேண்டாமா அல்லது சட்டம் திருத்தப்பட வேண்டாமா?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணாவின் ஆதங்கம் நிறைந்த பேச்சுக்குப் பின்னாலிருக்கும் கேள்விகள் இவைதான். இதற்கான விடையை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலேயே காணலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் குருபட்ச சிங் சிப்பியா வழக்கில் (1980) உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு இந்தச் சட்டத்துக்கு இப்படியொரு விளக்கம் அளித்திருக்கிறது: “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து நாம் திரட்டும் மையக்கருத்து என்னவென்றால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை விடுதலை தருவதுதான் விதிமுறையாக இருக்க முடியும், பிணை விடுதலை மறுக்கப்படுவது விதிவிலக்காக மட்டுமே அமைய வேண்டும்.”

2014இல் ஆமேஷ் குமார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து: "கைதுசெய்யும் அதிகாரம் அலைக்கழிப்பதற்கான ஆயுதம், அடக்குமுறை நடவடிக்கை, நிச்சயமாக மக்களுக்குத் தோழமையுள்ள செயல் அல்ல."

சுசீலா அகர்வால் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு 2020 ஜனவரி 29இல் அளித்த விளக்கமானது குருபட்ச சிங் சிப்பியா, ஆமேஷ் குமார் வழக்குகளில் அளித்த விளக்கங்களுக்குப் பிறகும் படிந்த குழப்பங்களை நீக்கும் விளக்கமாக அமைந்தது. “நாட்டு மக்கள் அனுபவிக்கும் குடிமையுரிமைகள் அனைத்தும்தான் அரசியல் சட்டப்படி அடிப்படையானவை – அவற்றின் மீதான கட்டுப்பாடுகள் அடிப்படையானவை அல்ல.”

கரும்புள்ளி

இவ்வளவு தெளிவான விளக்கங்களுக்குப் பிறகும் கைது செய்யும் அதிகாரம் பெருமளவு தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. கைது செய்யும் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. 2022 ஜூலை 11இல் சதேந்திர குமார் ஆன்டில் வழக்கில் வழங்கிய திட்டவட்டமான விளக்கம் மூலமும், 2022 ஜூலை 20இல் முகம்மது ஜுபைர் வழக்கில் முகத்தில் அறைந்தார் போன்று வழங்கிய தீர்ப்பின் மூலமும் உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்தத் தீர்ப்புகளுக்குப் பிறகும் பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷர்ஜில் இமாம், உமர் காலீத், சித்திக் கப்பன் ஆகியோரும் ஆயிரக்கணக்கான பிறரும், விசாரித்து தண்டிக்கப்படாமலேயே சிறையிலேயே கைதிகளாக நீடிக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியதாகும். இதனால்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா பேசியபடி இங்கு நடைமுறையே தண்டனையாக இருக்கிறது; இனியும் இது தொடராது, பிணை விடுதலை தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

6

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

ஒன்று புரியவேயில்லை.மக்கள் தான் கையாலாகாத தனத்தோடு நொந்து கொண்டு கடக்கிறோம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் புலம்புகிறாரே!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

பெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிஇஸ்லாமியர்எஸ்.எம்.அப்துல் காதிர்பிராமணர்முடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வுஇந்திய தண்டனையியல் சட்டம்முல்லைக்கலியின் குறிப்புகள்மண்டல் குழுவிழுமியங்களும் நடைமுறைகளும்உங்களைப் போன்றோர் தேவை சாருஜனநாயக மையவாதம்தடாஸரமாகோவின் உலகம்புற்றுக்கட்டிநாகரிகம்அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினைசீனப் படையெடுப்புசுதந்திரத்தின் குறியீடு மயிர்கல்லணைஅரசன்நேரு வெறுப்புஅசோகர் கல்வெட்டுகள் துயரம்தூய்மைப்பணி14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்?ஹிலாரிபொருளாதாரச் சுதந்திரம்வீட்டுச் சிறைரூபாய் - டாலர் செலாவணி விகிதம்மாவோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!