கட்டுரை, அரசியல், சட்டம், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு

நீதிபதிகள் நியமனம்: என்னதான் தீர்வு?

ப.சிதம்பரம்
05 Dec 2022, 5:00 am
0

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கும் (பத்திரிகைகளில் வெளியானபடி), ஒன்றிய சட்ட அமைச்சருக்குமான கருத்துப் பரிமாற்றங்கள் – வார்த்தைகளாக இங்கே தரப்படுகிறது. 

உச்ச நீதிமன்றம்: ‘கொலீஜியம்’ (நீதிபதிகள் குழு) பரிந்துரைத்த பெயர்களை ஏற்று அவர்களை நீதிபதிகளாக நியமிக்க முடியாதபடிக்கு இடையில் தலையிட்டு ஏமாற்றமளிக்கிறது ஒன்றிய அரசு.

சட்ட அமைச்சர்: கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் அரசு அவற்றைக் கிடப்பில் போடுகிறது என்று எப்போதுமே குற்றஞ்சாட்டாதீர்கள்; (அப்படியானால்) கோப்புகளை அரசுக்கு அனுப்பாதீர்கள், நீங்களே உங்களுடைய நியமனங்களையும் மேற்கொள்ளுங்கள், நீங்களே நீதித்துறையின் எல்லா வேலைகளையும் பாருங்கள்.

உச்ச நீதிமன்றம்: அவர்கள் (எங்களுக்கு) அதிகாரம் தரட்டும். அதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை, நாங்களே அடுத்தடுத்த வேலைகளையும் பார்த்துக்கொள்கிறோம், அதில் பிரச்சினைகளே இல்லை.

ச்ச நீதிமன்றத்துக்கும் அரசு நிர்வாகத் துறைக்கும் இடையில், அரசமைப்புச் சட்டத்தின் கூறு 124(2), 217(1) தொடர்பாக ஆழ்ந்த – கசப்பான என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது – கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்தில், நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசின் நிர்வாகத் துறையிடம்தான் இருந்தது; உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அந்தந்த உயர் நீதிமன்றத்திடமும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றத்திடமும் அரசு நிர்வாகத் துறை ஆலோசனை கலந்தது.

அந்தந்த மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை கலந்து, நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடியவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்கும். ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 217வது கூறின்படி உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும். அதேபோல ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 124வது கூறின்படி, நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கும், பிறகு அவர்களை நீதிபதிகளாக நியமிக்கும். நீதித் துறை நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய பல நீதிபதிகளை அரசு நிர்வாகத் துறை இப்படித்தான் நியமித்துவந்தது, பிரச்சினைகளை ஏற்படுத்திய சில நீதிபதிகளும்கூட இப்படி நியமனமானதும் உண்டு.

தலைகீழான நடைமுறை

இந்த நடைமுறை, நீதிபதிகள் (நியமனம் தொடர்பான) இரண்டாவது வழக்கு-1993, மூன்றாவது வழக்கு- 1998 ஆகியவற்றின்போது அளிக்கப்பட்ட விளக்கம் மூலம் தலைகீழாக்கப்பட்டது. ‘கொலீஜியம்’ (மூத்த நீதிபதிகளை மட்டுமே கொண்ட குழு) மூலம் தேர்ந்தெடுப்பது என்ற புதிய நடைமுறை உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை ‘கொலீஜியம்’ எடுத்துக் கொண்டது. ஒன்றிய அரசு ‘கொலீஜியத்தின்’ பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்றும் முடிவானது.

ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் பெயர்களை ‘கொலீஜியம்’ மீண்டும் பரிந்துரைத்தால் ஏற்றாக வேண்டும் என்ற நடைமுறையும் உருவாக்கப்பட்டது. முதல் நாற்பதாண்டுகளில் அரசின் நிர்வாகத்துறை நியமித்த நீதிபதிகளின் தரத்தைவிட ‘கொலீஜியம்’ தேர்வு செய்து நியமித்த நீதிபதிகள் அனைவருமே தரமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. பல திறமைசாலிகள் நியமிக்கப்பட்டார்கள்.  இதிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1993 முதலே உரசல்தான்

இதில் 1993ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் நீதித் துறைக்கும், மாற்றப்பட்ட இந்த நியமன முறை காரணமாக உரசல்கள் இருந்துவருகின்றன. ஆனால், நியமனங்களைத் தடுத்து நிறுத்தியே விடுவது என்ற நடைமுறை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வழக்கமாகிவருகிறது. ‘உச்ச நீதிமன்றம் அறிவித்த (நியமன) சட்டத்துக்கு முரணானது இந்தச் செயல்’ என்று இரண்டு நீதிபதிகளைக் கொண்ட ‘அமர்வு’ (பெஞ்ச்) சமீபத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஒன்றிய அரசின் நிலை காரணமாக இப்போது உச்ச நீதிமன்றத்தில் 7, உயர் நீதிமன்றங்களில் 381 நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கின்றன. 2022 ஜூலை 1 கணக்கின்படி ஒன்றிய அரசு அனுமதித்த மொத்த நீதிபதிகளின் பதவியிடங்களின் எண்ணிக்கை 1,108. இந்த மோதலால் விளைந்த சோகம் என்னவென்றால், தகுதி வாய்ந்த பல வழக்கறிஞர்கள் நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படவே இல்லை அல்லது, மாதக்கணக்காக தங்களுடைய பெயரை ஒன்றிய அரசு ஏற்கவில்லை என்பதால் ரோஷப்பட்டு பலர், தங்களுடைய பெயர்களை இனியும் பரிசீலிக்க வேண்டாம் என்று பரிந்துரைப் பட்டியலிலிருந்தே விலக்குமாறு கூறிவிட்டனர்.

கருவிலேயே கரைந்தது

இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணும் விதத்தில், ‘தேசிய நீதித் துறை நியமன ஆணையம்’ (என்ஜேஏசி) என்ற அமைப்பை, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி 2014இல் கொண்டுவந்தது ஒன்றிய அரசு; நீதிபதிகளை நியமிப்பதில் நீதித் துறைக்கும் அரசின் நிர்வாகத் துறைக்கும் சம முக்கியத்துவம் அளித்தது இந்த ஆணையச் சட்டம். இந்தச் சட்டத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை, அதைப் பிற்காலத்தில் சரிசெய்திருக்க முடியும், ஆனால் இரண்டு தரப்புமே அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் 93வது திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட ‘என்ஜேஏசி’ சட்டத்தை உச்ச நீதிமன்றம் 2015 அக்டோபர் 16இல் செல்லாது என்று அறிவித்துவிட்டது. அத்துடன் அந்தச் சட்டமும் சமாதிக்குச் சென்றுவிட்டது (இந்த வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, நீதிபதி சலமேஸ்வர் அளித்த மாறுபட்ட தீர்ப்பு).

இதையடுத்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் 2015 நவம்பர் 1இல் நான் எழுதிய ‘த என்ஜேஏசி கொனன்டிரம்’ (The NJAC Conundrum) என்ற கட்டுரையில் அத்தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தேன். அதேசமயம், இருதரப்பும் ஒப்புக்கொள்ளக்கூடிய புதிய சட்டத்துக்கான வழியையும் தெரிவித்திருந்தேன்.

அரசு அந்த வழக்கில் முன்வைத்த கருத்துகளிலேயே மிகவும் வலிமையானது எதுவென்றால், ‘உலகின் எந்த நாட்டிலும் புதிய நீதிபதிகளை ஏற்கெனவே உள்ள நீதிபதிகளே தேர்ந்தெடுத்து நியமிப்பதில்லை; நீதிபதியாக நியமிக்கப்படவிருப்பவர் நல்ல நடத்தை உள்ளவரா, சட்டம் அறிந்தவரா, திறமைசாலியா, பதவிக்கு உகந்தவரா என்பதையெல்லாம் சரிபார்த்து நியமிக்கும் நிலையில் அரசு நிர்வாகத் துறைதான் இருக்கிறது’ என்பது ஆகும்.

இதற்கு எதிராக, நீதிபதிகளாக நியமிக்கப்படப்போகும் வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோரின் தகுதிகளை அறிந்து அவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் அனுபவம் - ஆற்றல் பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்குத்தான் அதிகம்’ என்று நீதித் துறை வாதிட்டது. இவ்விரு வாதங்களிலும் பெரிய அளவுக்கு உண்மையும் இருக்கிறது.

இரு தரப்புகளும் இப்படியே மோதிக்கொண்டிருந்தால் நிலைமை மேலும் மோசமாகிவிடும். மேலும் பல நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாகிவிடும். காலியிடங்கள் அதிகமானால் அவற்றை நிரப்புவது மேலும் சிக்கலாகிவிடும். ‘எங்களுக்கு இந்தப் பதவியே வேண்டாம்’ என்று மேலும் பலர் மறுப்பார்கள்; ‘பட்டியலிலிருந்து விலகுகிறோம்’ என்று அறிவிப்பார்கள். பணிச் சுமையால் ஏற்கெனவே முதுகு வளைந்து மூச்சுத்திணறும் நீதித் துறை இதனால் முறிந்துவிழும் நிலைக்குக்கூட சென்றுவிடும்.

அப்படி நேர்ந்தால், அதற்காக அதிகம் துயரப்படுவது நீதிபதிகளாகத்தான் இருப்பார்கள், அதிகம் மகிழ்ச்சி அடைகிறவர்கள் அரசு நிர்வாகத் துறையாகத்தான் இருக்கும். இறுதியில் இதில் அதிக இழப்பைச் சந்திக்கப் போகிறவர்கள் இந்தியத் திருநாட்டின் குடிமக்கள்தான், அதிலும் வேறெந்த வழியிலும் நீதியைப் பெற முடியாமல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் கதியற்ற ஏழைகள்தான் பரிதவிப்பார்கள்.

சாத்தியமான தீர்வு

நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களை அடையாளம் காணும் நடைமுறையிலிருந்து அரசின் நிர்வாகத் துறையை முற்றாக விலக்கிவைத்துவிட முடியாது என்பதே என் கருத்து. அதேசமயம், இப்போதுள்ள சித்தாந்த சார்பு, பேரினவாதப் போக்கு, பழிவாங்கும் எண்ணம் மிகுந்த அரசின் நிர்வாகத் தலைமையிடமே நீதிபதிகள் நியமன முழு அதிகாரத்தையும் விட்டுவிடவும் முடியாது. நீதித் துறையும் நிர்வாகத் துறையும் இணைந்து ‘தேசிய நீதித் துறை நியமன ஆணையம்- 2’ என்கிற புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

நீதிபதி பதவிகளுக்குரியவர்களை ‘கொலீஜியம்’ அடையாளம் கண்டு முன்மொழியட்டும் அல்லது நியமிக்கட்டும், தேசிய நீதித் துறை நியமன ஆணையம் அவர்களில் தகுதியானவர்களைத் தேர்வுசெய்யட்டும், பரிந்துரைக்கட்டும்; அதன் பிறகு அரசின் நிர்வாகத் துறை (கடமையை நிறைவேற்றும் பொறுப்புடன்) அவர்களுக்கான நியமன ஆணைகளை வழங்கட்டும். இந்த நடைமுறையை, எதிர்காலங்களில் பெறும் அனுபவங்களின் அடிப்படையில் மேலும் மேலும் செம்மைப்படுத்திக்கொண்டே வரலாம் – நீதித் துறையில் பணியில் இல்லாத – ஆனால், சட்டம் படித்த அறிஞர்கள் சிலரிடம் இந்தக் கடமையை ஒப்படைக்கலாம்.

வழக்காடு மன்றங்களில் ஏற்படும் காலி நீதிபதிப் பணியிடங்கள் அதிகமாகிவரும் நிலையும், நாட்டின் நலன் தொடர்பான பொதுப் புத்தியும் உணர்த்துவது என்னவென்றால், பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க அரசின் நிர்வாகத் துறையும் நீதித் துறையும் ஒன்றுபட்டு தீர்வைக் கண்டாக வேண்டும். பொது நலனில் அக்கறையுள்ள பெரும்போக்கு இல்லாமல், காட்டமான வார்த்தைகளைப் பரிமாறுவதும், ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டுக்கொள்வதும் மனப்புண்களை ஆற்றாது, மாறாக அவை மேலும் ரணமாகி சீழ்பிடிக்க வைத்து நாட்டின் நலனைச் சீரழித்துவிடும், இதனால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதிதான் பலியாகும்.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5

1

அதிகம் வாசிக்கப்பட்டவை

வரி வசூலிப்போர்சமஸ் கட்டுரைக்கு எதிர்வினைசெபிகேசவ விநாயகன்வெங்கய்ய நாயுடுஜார்கண்ட்ஒன்றிய நிறுவனங்கள்சித்திரம் பேசுதடிசாரிசமதா சங்கதான்இருளும் நாட்கள்பெகஸஸ்பெண்கள் கவனம்!ஹிந்திபிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டிஜல்லிக்கட்டு அருஞ்சொல்தமிழ்ச் சமூகம்மகப்பேறுகிரிப்டோ கரன்சிகல்விச் சீர்த்திருத்தங்கள்செயலிதேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்புள்ளி விவரம்பரம்பரைக் கோளாறுஹெச். பைலோரை கிருமிஒரே அரசுநீடித்த வளர்ச்சிசெயல் வீரர் கார்கே: செயல்பட விடுவார்களா?அகில இந்திய மசாலாசமஸ் அருஞ்சொல் ராகுல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!