இன்னொரு குரல் 7 நிமிட வாசிப்பு

என்ன ஆனது மழைநீர் சேகரிப்புத் திட்டம்?

வாசகர்கள்
05 Dec 2021, 4:59 am
0

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்

 

@மூன்று வேளாண் சட்டங்களையும் சேர்த்து நிராகரிப்பது பகுத்தறிவு அல்ல

வாசகர்கள் உள்வந்து வாசிக்கவே முடியாமல் பூட்டி வைத்திருக்கும் மின்னிதழ்கள் மத்தியில், எளிமையாக உள்வந்து கட்டுரைகளை, விவாதங்களை வாசிக்க வழிவிட்டதோடு அல்லாமல் வாசகனின் உடன்பாட்டுக்குரலுக்கும் எதிர்க்குரலுக்கும் 'அருஞ்சொல்' இடமளிக்கிறது. எதிர்க்குரலை நசுக்கி மயக்கத்தில் கிடக்கும் சனநாயகத்தின் முகத்தில் நீர்தெளித்து உயிர்ப்பிக்கும் செயல் இது. நல்ல முயற்சி. வாழ்த்துகள்!

-மகா.இராஜராஜசோழன், தமிழாசிரியர். திருச்சி.

@ அரசு மருத்துவமனையின் சுத்தம் ஒரு கூட்டுப் பொறுப்பு: டீன் எதிர்வினை

முதலில் பொறுப்போடு பதில் தந்திருக்கும் மருத்துவர் அவர்களுக்கு பாராட்டுகள். // அறியாமையால் அசுத்தம் செய்பவர் சிலர்; ....... அநாகரிகமான பேச்சுகளையும் நியாயமற்ற ஏச்சுகளையும் கேட்டுக்கேட்டு எங்கள் ஊழியர்கள் பரிதவித்துப்போவது நிஜம். // இவை நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கவும் படலாம். பிழையே அல்ல. பெரும் சவால்களுக்கிடையே ‘பொது மக்கள் சேவை’ என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இப்படி அலட்சியமாக சீரழிக்கப்படுவதற்கல்ல. அப்படி அதன் மதிப்பு தெரியாமல் சீரழிப்பவர்கள் அதனுள்ளே காலடி வைக்கவும் தகுதியற்றவர்கள். அப்படி செய்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினாலும் - ஏன் சிறையில் வைத்தாலும், பிழையே அல்ல. இதுபோன்ற விஷயங்களிலாவது செட்டிநாட்டுக் கவி சொன்னதுபோல, ‘ஜனநாயகத்தை சற்றே நிறுத்தி சவுக்கெடுக்கவேண்டும்’. ஆம், நாம் இன்னமும் கோலெடுத்தால் மட்டுமே ஆடும் குரங்குகள்தான். இதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

- பொன்.முத்துக்குமார்

@ அரசு மருத்துவமனையில் என் பிரசவ அனுபவம்

தனிப்பேச்சில் ஒரு நாவலாசிரியர் சொன்னார், "தமிழில் துறைசார் நாவல்கள் அந்ததந்தத் துறையில் உழல்பவர்களாலேயே எழுதப்படும்போது பல நுட்பமான பிரச்சினைகள் வெளிப்படும்" என்று. அதற்கு நல்ல உதாரணம் இக்கட்டுரை. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனை எனும் கனவு நிறைவேறிக்கொண்டிருக்கையில் இத்தகைய உட்கட்டமைப்புப் பிரச்சினைகள் கையிலெடுக்கப்பட்ட வேண்டும். சூழலைச் சரியாக்க மருத்துவர்/மருத்துவ ஊழியர் சங்கங்கள் கூட்டாக கோரிக்கை எழுப்ப வேண்டும். உடல்தானம், உடலுறுப்பு தானம் ஊக்குவிக்கப்பட வேண்டும். கோவிட் தொற்றுக்காலத்தில் நகைகளை விற்று மின்விசிறி வாங்கிக்கொடுத்த தம்பதிகளைப் போல பொதுச்சமூகமும் தம்மால் இயன்ற பங்களிப்பை நல்கவேண்டும். ஊழியர்களுக்கு மென்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்ட வேண்டும். கட்டுரையாளரும் அவர் கணவரும் பின்பற்றும் விழுமியங்கள் வணங்கத்தக்கது. பக்கச் சார்பின்றி நல்ல விவரணைகளுடன் எழுதப்பட்ட கட்டுரை.

- விஜயகுமார்

@ பிரியங்காவை மையம் கொள்ளும் உபி அரசியல்

பிரியங்கா காந்தியை உபியில் முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை என்னை போன்றோர்களால், 5 ஆண்டுகளுக்கு முன்பே சோனியாகாந்தி அவர்களிடம் வைக்கப்பட்டது. பிரியங்கா காந்தி மீது திடமான நம்பிக்கை ஏற்படும் வண்ணம் அவர் தொடர்ந்து செயல்படவேண்டும். 'மதத்திற்காக ஆட்சி' என்ற பாஜகவின் சித்தாந்தத்தை முறியடிக்க, 'மக்கள் நலனுக்கான ஆட்சி’ என்ற கொள்கையை உரக்கச் சொல்வது நல்லது. வட்டார அளவில் பிரியங்கா இறங்கி உறவுகளை வளர்க்க வேண்டும். காங்கிரஸின் பண்ணையார்த்தன அரசியல் இனியும் கை கொடுக்காது.

- எம்.பி.எம்.பத்ருதீன்

@ ஆண்களை இப்படி அலையவிடலாமா?

அதிரடியான பதிவு. பதிவை பார்த்தவுடன் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸில் வைத்துவிட்டேன். எதிர்பார்த்ததுபோல் விசாரிப்புகள். "செம", "இதை காலேஜ் படிக்கும்போது யாராவது எழுதி இருக்கக் கூடாதா?" என்று நண்பர்களிடம் இருந்து விதவிதமான அங்கலாய்ப்புகள். நீங்கள் சொல்வது சரியா தவறா என்று இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், எழுதிய சங்கதி எதிர்ப்பார்த்த விளைவை எனக்குள் ஏற்படுத்திவிட்டது.

- ராஜா, கல்லூரி மாணவர் 

@ நாத்திகர் நேருவின் ஆன்மிகம்

நேரு இல்லாமல் ஹிந்து மதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்க முடியாது. படேல் இறந்துவிட, மிச்சமுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் சனாதானத்தை ஆதரித்தார்கள். சங்கராச்சாரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். காஞ்சி காந்தியை சந்தித்து ஆலய பிரவேசத்திற்கு எதிர்த்து வாதாடியது எல்லோருக்கும் தெரிந்ததே. வேத வழி அந்தணர்களும் எதிர்த்தனர். நேருவால் மட்டும் தான் இவற்றை எல்லாம் கடந்து, சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்ற முடிந்தது. இதற்கு மட்டுமே இந்து சமுதாயமும், பிரத்யேகமாக பெண்கள், நேருவிற்குக் கடன்பட்டிருக்கிறது. நேரு ஒரு தீவிர மதத்தை பின்பற்றுவாரானால் இது மாதிரி செய்ய முடியாது. ஒரு அஞ்ஞானவியர் (agnostic) மட்டுமே இதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

- ராஜா ராஜாமணி

@ சென்னையில் வெள்ளத்தைத் தவிர்க்க ஒரு செயல்திட்டம்

மிக முக்கியமான கட்டுரை. இதில் விடுபட்டுப்போன ஒன்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன். வீடுகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டம். நான் குடியிருக்கும் அடுக்ககத்தில், 120 வீடுகள் உள்ளன. அடுக்ககம் இருக்கும் பரப்பளவில் இருக்கும் மொட்டைமாடிகளில் இருந்து திரளும் மழைநீரும், தரை வழியே திரளும் மழை நீரும் முழுவதுமாக, 7 மழை நீர்ச் சேகரிப்புத் தொட்டிகளில் சேர்கிறது. இவற்றில் இரண்டு, அடுக்ககத்தின் மத்தியில் வருமாறு அமைக்கப்பட்டு, அதன் அருகில் ஒரு கிணறு தோண்டப்பட்டது. அந்தக் கிணறு எங்கள் அடுக்கத்தின் 40% நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. ஆறு நாட்களில் 46 செ.மீ. மழை பெய்தது எனக் கட்டுரை சொல்கிறது. எங்கள் அடுக்ககத்தில் பெய்த மழை, எங்கள் அடுக்ககத்தின் தரைக்குள் முழுமையாகச் சென்றுவிட்டது. வெளியே செல்லவில்லை. சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் முழுமையாக உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது அரசு செய்ய வேண்டியது. நம் வீடுகளில், அடுக்ககங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது தனிமனிதர்களின் தவிர்க்க முடியாத கடமை. ஜெயலலிதா அரசு கொண்டு வந்த சட்டங்களில், முக்கியமான ஒன்று இது. எங்கள் அடுக்ககம் போலவே, சென்னையில் பல அடுக்ககங்களிலும், வீடுகளிலும் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு நன்றாக அமைக்கப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், இது சென்னையில் 5%க்கும் குறைவான கட்டிடங்கள் மட்டும்தான். அரசு அலுவலகங்கள் உள்பட பெரும்பான்மையான கட்டிடங்களில், இவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. அரசு விதி என ஒன்றைச் சொன்னாலே, அதை அலட்சியப்படுத்தும் ஒரு சமூக விரோதப் போக்கு நம்முள் உள்ளது. ஓர் இயக்கமாக, விதிவிலக்குகள் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டம் இது. அரசு மட்டுமல்ல, குடிமக்களும் இணைந்து செயல்படுகையில் தான் மக்களாட்சி வளம் பெறுகிறது

- எம்.பாலசுப்ரமணியம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பவன் கேராநார்வேசெயலூக்கம்டான்சிம்பிட்காயின்யாதும் ஊரேசிறுபான்மைக்கு வெற்றிமாநில அரசுகள்ஆறுகள்தாய்மொழி மதிப்பெண்மூன்று சவால்கள்18 லட்சம் வீடுகள்ஜான் க்ளாவ்ஸர்புரட்சியாளர்கள்மிஃப்தா இஸ்மாயில் பேட்டிபற்கள் ஆட்டம்சமதா சங்கதான்டென்டின்தேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்? தென்னிந்தியா மோதலுக்கு வாய்ப்பு தரக் கூடாதுஆழி செந்தில்நாதன்மகாத்மா ஜோதிபா பூலேஎண்ணிக்கைநாடகசாலைத் தெருஅமைதியின் உறைவிடம்சிற்றரசர்கள்அரசியல் கள விதிகள்தனிநபர் வருவாய்கருணாதிலக பேட்டிபொதுவுடமை இயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!