அரசியல் 6 நிமிட வாசிப்பு

பிரியங்காவை மையம் கொள்ளும் உபி அரசியல்

டி.வி.பரத்வாஜ்
25 Nov 2021, 5:30 am
1

த்தர பிரதேசத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு, காங்கிரஸ் இங்கே முன்னகர்த்தும் காய்கள் அபத்தமானதாகக்கூட தெரியலாம். ஆனால், மெல்ல காங்கிரஸை மக்கள் மத்தியிலான பேச்சுக்குக் கொண்டுசேர்க்கிறார் பிரியங்கா. அவருடைய ‘பிரதிக்ஞா யாத்ரா’ (சபதமேற்பு யாத்திரை) எல்லாக் கட்சிகளிலுமே அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. 

உபியின் முக்கியத்துவம்

இந்தியாவின் அரசியலில் உத்தர பிரதேசத்தின் முக்கியத்துவத்தைப் பெரிதாக விளக்க வேண்டியது இல்லை. 138 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 23 கோடி மக்களைக் கொண்டிருக்கும், அதாவது நாட்டின் மக்கள்தொகையில் 16% பங்கைக் கொண்டிருக்கும் மாநிலம் அது. டெல்லியைக் கைப்பற்ற வேண்டும் என்றால், உத்தர பிரதேசத்தை வசப்படுத்த வேண்டும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் 80 தொகுதிகளைத் தன் வசம் வைத்திருக்கிறது உத்தர பிரதேசம்.

இங்கே பாஜக வலுவான இடத்தில் இருக்கிறது. என்றாலும், முலாயம் - அகிலேஷ், மாயாவதிக்கு இணையான செல்வாக்கு கொண்ட ஆளுமை அங்கே இல்லாத சூழலில்தான், 2014 தேர்தலில் மோடியை வாரணாசி தொகுதியில் போட்டியிடவைத்து உத்தர பிரதேசத்தின் முகமாக மோடியை மாற்றியது பாஜக. 2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் யோகி ஆதித்யநாத்  செல்வாக்குள்ள தலைவராக உருவெடுத்திருக்கும்போதும், இன்றைக்கும் பாஜகவின் பெரிய முகம் இங்கே மோடிதான்.

இந்தப் பின்னணியில்தான், பிரியங்காவை உத்தர பிரதேசம் நோக்கி நகர்த்தியது காங்கிரஸ் தலைமை. 403 தொகுதிகளுடன் நாட்டின் பெரிய சட்டமன்றத்தைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சியை இழந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1989-ல் அதன் கடைசி முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி.

2012 சட்டமன்றத் தேர்தலில்கூட 11.63% வாக்குவீதத்தோடு 28 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 2017 தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவியது. வெறும் 6.5% வாக்குகளோடு, நடப்பு சட்டமன்றத்தில் வெறும் 7 உறுப்பினர்களை மட்டுமே அது கொண்டிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலிலும் சோனியா காந்தி மட்டுமே காங்கிரஸ் சார்பாக இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ராகுல்கூட தோற்றுப்போனார். பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான இடைவெளியை ஓட்டுகளை வைத்துச் சொல்ல வேண்டும் என்றால், மாநிலத்தில் காங்கிரஸுக்கு 55 லட்சம் ஓட்டுகளை வாங்கியிருக்கிறது என்றால், பாஜக 3.44 கோடி ஓட்டுகளை வாங்கியிருக்கிறது.

பிரியங்கா என்ன செய்கிறார்?

பிரியங்காவின் வருகை பாஜகவுக்கு மாற்றாக ஆகிவிடும் அளவுக்கு காங்கிரஸுக்குப் பலம் சேர்க்கவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை. அதேசமயம், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை உசுப்பிவிட்டிருக்கிறது.

பாஜகவுக்கு மாற்று என்கிற இடத்தில், உறுதியான எதிர்சக்தியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வங்கத்தில் மம்தா மாதிரி, தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாதிரி உறுதிபட நிற்கும் கட்சித் தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் இன்றைய நிலை அப்படி இல்லை. அகிலேஷ், மாயாவதி இருவருமே பம்மிப்பம்மிதான் அரசியல் செய்கின்றனர். விளைவாக, இந்த இரு கட்சித் தொண்டர்களுமே கீழே கலக்கத்தோடுதான் பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஆதித்யநாத்தால் இவர்களை ஆட்டிவிக்க முடிகிறது.

ராகுல் – பிரியங்கா விஷயத்தில் இது நடப்பதில்லை. அவர்களை இடைமறித்தால் அது தேசிய செய்தியாகிறது. பிரியங்கா அடித்து ஆடுகிறார். இது எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறது.

ஆதித்யநாத் அரசு பதவிக்கு வந்தது முதலே, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்தின்போதும் காங்கிரஸ் மக்கள் பக்கம் நின்று போராடுகிறது. மூளைக்காய்ச்சல் நோயால் ஏராளமான குழந்தைகள் இறந்தபோதே இது தொடங்கியது. கோவிட் 19 காய்ச்சலை எதிர்கொள்வதில் ஆதித்யநாத் அரசு செய்த மகாதவறுகளைத் துணிச்சலாக அம்பலப்படுத்தினார். மாநிலத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயத்துறை நெருக்கடி, விலைவாசி உயர்வு, சிறு – நடுத்தரத் தொழில்களுக்கு ஏற்பட்ட நசிவுகள், ஹத்ராஸில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை, போலீஸ் என்கவுன்டர்கள் எதுவாக இருந்தாலும் பிரியங்கா வந்துவிடுகிறார்.

லக்கிம்பூர் கெரி முன்னகர்வு

கார் ஏற்றி விவசாயிகள் கொல்லக்கப்பட்ட லக்கிம்பூர் கேரிக்கு, எதிர்க்கட்சித் தலைவர்களைச் செல்லவிடாமல் தடுத்த முதல்வரின் செயல்களை உறுதியான போராட்டம் மூலம் ராகுலும் பிரியங்காவும் முறியடித்தனர்.

லக்கிம்பூர் கெரிக்குச் செல்ல முடியாமல் சீதாபூரில் காவல் துறையால் தடுக்கப்பட்டு, ஒரு கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டபோது, குப்பையும் கூளமுமாக இருந்த தரையை துடைப்பம் எடுத்து பிரியங்கா பெருக்கிய படம் மாநிலம் முழுவதும் பரவியது. “பிரியங்கா இனி தெருக்கூட்டத்தான் லாயக்கு” என்ற வகையில் அதைக் கேலி செய்தார் முதல்வர் யோகி. “ஆதிக்க சாதி உணர்வு பொங்க யோகி எப்படித் துச்சமாகப் பேசுகிறார் பாருங்கள்” என்று வால்மிகி சமூகத்தினர் மத்தியில் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார் பிரியங்கா. வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் பெரிய அளவில் குரல் கொடுத்த நிலையில், இப்போது அந்தச் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டிருப்பது காங்கிரஸாருக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பாக செல்வாக்கான சாதி அமைப்புகளுடன் பேசி அவர்கள் ஆதரவைத் திருப்புவதில், பாஜகவுக்கு இணையாக சமாஜவாதி, பகுஜன் சமாஜ் இரண்டும் திறம்படச் செயல்படுகின்றன. காங்கிரஸ் இந்தப் பாதையைப் புறந்தள்ளிவிட்டு ஆதிக்க சாதிகள் அல்லாத சாதியினரை ஒருங்கிணைப்பதிலும், விளிம்புநிலையினருக்கான பிரதிநிதியாக பிரியங்காவை முன்னிறுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

காங்கிரஸ் இந்த முறை வேட்பாளர்களில் 40% பெண்களை நிறுத்தவுள்ளது. ஆகவே, புதியவர்கள், இளைஞர்கள், ஏற்கெனவே பதவி, புகழ் அடைந்த குடும்பங்களைச் சேராதவர்கள், அதிகம் முன்னுக்கு வராத சாதிகளைச் சேர்ந்தவர்கள் இம்முறை வேட்பாளர்களாக வாய்ப்பு அதிகம்.

அகிலேஷ், மாயாவதி முன்னகர்வுகள்

பிரியங்காவின் தீவிரச் செயல்பாடுகள் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மத்தியில் உண்டாக்கியிருக்கும் உசுப்பலை  வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.  அகிலேஷ் ‘விஜய் ரத் யாத்ரா’ (வெற்றி ரத யாத்திரை) தொடங்கியிருக்கிறார்.  ‘மிஷன் 2022’ என்றும் இதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். முன்புபோல அல்லாமல் அடித்து ஆடுகிறார். பெரும் கூட்டம் அவருக்குக் கூடுகிறது.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைகள் நடத்தியிருக்கிறார். பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறார். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதையும் அறிக்கை அனுப்புவதையும் அதிகரித்திருக்கிறார்.

உச்சம் என்னவென்றால், மாநில பாஜக மோடியை அழைக்க வேண்டிய நிலை உருவானது. அக்டோபர் 20-ல் குஷிநகரில் மோடி கலந்துகொள்ளும் பெரிய பொதுக்கூட்டத்துக்கு பாஜக திட்டமிட்டிருந்தது. பிரம்மாண்டமான கூட்டம் பாஜகவுக்கு சந்தோஷம் என்றாலும், இதற்கு நிர்ப்பந்தம் பிரியங்காவால் உருவானது என்பதை காங்கிரஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

காங்கிரஸ் இம்முறை தனித்துத்தான் போட்டியிடும் என்ற பிரியங்காவின் அறிவிப்பை எல்லாக் கட்சியினருமே சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். தேர்தல் நெருங்கும் சூழலில், எப்படியும் மஹா கூட்டணி ஒன்று அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், காங்கிரஸாருக்கு, பெரிய கட்சிகளுடன் கூட்டணிச் சவாரி எனும் எண்ணம் முதலில் மறக்க வேண்டும் என்றே உள்கூட்டங்களில் பேசுகிறார் பிரியங்கா.  

உத்தர பிரதேசத்தில் சமீப கால வரலாற்றில் எந்த முதலமைச்சரும் இரண்டாவது முறையாக அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே இல்லை. இத்தகு சூழலில்தான் பிரியங்காவை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தும் யோசனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெரிய அளவில் இடங்களை வெல்ல முடியாவிட்டாலும், கணிசமான இடங்களை காங்கிரஸ் பெற்றாலே ‘கிங் மேக்கர்’ அவதாரத்தை அது எடுக்கும்; விளைவு 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள். ஓட்டுக் கணக்குப் பார்த்தால், கள நிலவரங்கள் எதுவும் இப்படி காங்கிரஸுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை. 

பாஜகவும் இவை எல்லாவற்றையும் உற்றுநோக்கியபடி இருக்கிறது. ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் இணையும் சாத்தியம் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே உண்டு. பிரியங்கா இந்த இரு கட்சிகளோடு காங்கிரஸையும் கூட்டணியில் இணைத்தால், நிச்சயம் யோகிக்கு அது பெரும் சவாலாக அமைந்துவிடும்; ஆனால், தனித்தனியே செல்வது என்ற இப்போதைய முடிவை பிரியங்கா, அகிலேஷ், மாயாவதி மூவரும் தொடரும்பட்சத்தில் தன்னுடைய வெற்றி உறுதியானது என்றே அது நம்புகிறது. பிரியங்கா தனியாகச் செல்வது என்ற முடிவில் உறுதி காட்டும் வரை ஏனைய இருவரும் இணைவதும் சாத்தியமற்றது என்றே பாஜக கருதுகிறது.

எப்படியோ, உத்தர பிரதேசம் என்றால், அகிலேஷ், மாயாவதி, யோகி என்று மட்டுமே பேசப்பட்டுவந்த காலம் மாறுவதும், இந்தப் பட்டியலில் பிரியங்காவும் சேருவதும், காங்கிரஸை மையக் கவனம் நோக்கித் தள்ளுவதாக மகிழ்கிறார்கள் காங்கிரஸார். அவர்களுடைய இந்த மகிழ்ச்சி உண்மையான பலனைத் தருமா என்பதைத் தெரிந்துகொள்ள தேர்தல் வரைகூட நாம் காத்திருக்க வேண்டியது இல்லை. வரவிருக்கும் மாதங்களில் பிரியங்காவின் நகர்வு நமக்கு அதைச்  சொல்லிவிடும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

MBM.BATHURUDHEEN    3 years ago

பிரியங்கா காந்தியை உபியில் முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை 5 ஆண்டுகளுக்கு முன்பே என்னை போன்றோர்களால் சோனியாகாந்தி அவர்களிடம் வைக்கப்பட்டது. பிரியங்கா காந்தி மீது திடமான நம்பிக்கை ஏற்படும் வண்ணம் தோடர்ந்து செயல் படவேண்டும். "மதத்திற்க்காக ஆட்சி "" என்ற பாஜக சித்தார்த்த திடமாக முறியடிக்க "மக்கள் நலனுக்கான ஆட்சி"என்ற கொள்கை முடிவை கடைப்பிடிப்பது நல்லது. Revolution இல்லாமல் மக்களை விழிப்புனர்வுக்கு கொண்டு வரமுடியாது. ஆகவே தேர்தலில் மக்களுக்காக நான் ஜாதிய தீண்டாமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து காங்கிரஸ் தத்துவத்தை நோக்கி நடக்க வேண்டும். அதற்க்கு வட்டார அளவில் பிரியங்கா இறங்கி உறவுகளை வளர்க்கவேண்டும். பண்ணையார் அரசியல் வழியை கையில் எடுக்கலாகாது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

ஜிஎஸ்டிக்கு முற்றுப்புள்ளி எப்போது?சாதி உளவியல்போல்சொனாரோநிதியமைச்சர்ஆஸ்டியோபோரோசிஸ்கீழவெண்மணிமனுஷ் விமர்சனம்வி.ரமணிமேற்கு வங்க காங்கிரஸ்உரத் தடையால் தோல்வி75இல் சுதந்திர நாடு இந்தியாபேச்சுசங்கம் புகழும் செங்கோல்மோடியின் குடும்பம்வகுப்புக் கலவரங்கள்மாநில வருவாய்குடல் புற்றுநோய்முத்தவல்லிகருத்துச் சுதந்திரம்பா.வெங்கடேசன் - சமஸ்கர்த்தாதபுரம்ஆளுந(ரி)யின் அநாகரீக செயல்பாடுகள் முற்றுப் பெறுமா?தென்காசிஅச்சு ஊடகத் துறைபொதுச் சார்பியல் கோட்பாடுபயணம்காந்தாரா: பேசுவது தெய்வமாஒடுக்கப்பட்ட சமூகம்கும்பகோணம்அவதூறான பிரச்சாரங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!