இன்னொரு குரல் 6 நிமிட வாசிப்பு

பெரியார் நிலைப்பாடுகளையும் குறிப்பிட்டிருக்கலாம்

வாசகர்கள்
16 Dec 2021, 4:30 am
1

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். இந்தக் கருத்துகள் 'அருஞ்சொல்'லைப் பிரதிபலிப்பவை அல்ல. உங்கள் கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

 

ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது?

நல்ல பதிவு. ஃபேஸ்புக்கிலேயே நாள் முழுவதும் குப்பை கொட்டினாலும் எத்தனை பேர் சமீபத்தில் பேஸ்புக் சார்ந்து வெளியான பல்வேறு ஆர்ட்டிகிள்களை, ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவை முன்வைத்தே பேஸ்புக் சார்ந்த விவாதம் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக நடந்துகொண்டிருக்கிறது, அந்தச் செய்திகளைத் தொடர்ந்தவர் மிகச் சொற்பம். 'அருஞ்சொல்' கட்டுரை அது தொடர்பான ஒட்டுமொத்த பார்வையை அளிக்கிறது. குறிப்பாக இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு இதற்கான 'ஆதாரச் சுட்டிகள்' கொடுத்தது ரசிக்க வைத்தது. எந்த ஆதாரமில்லாமல் மானாவாரியாக பொய்ச்செய்திகளைப் பரப்புபவர்களுக்கு - அதைத் தமது அரசியல் சாதுர்யமாகக் கொண்டு - அது சார்ந்த குற்ற உணர்வு இல்லாதவர்களுக்கான ஒரு கட்டுரையில் 'ஆதாரச் சுட்டிகள்' கொடுப்பது என்பது ஒன்றைக் குறிப்பால் உணர்த்துவது. இதையும் 'அஜெண்டா' என்று சொல்லி கடக்க முயல்பவர்களுக்கானவை அந்த 'ஆதாரச் சுட்டிகள்'.

- சரண் விவேகா

 

What an important article. But this was not discussed and published with this much details in any main stream medias (Tamil) like what we are imagining as 'media'. Keep doing 'ARUNCHOL'!

- DHAMU

 

@ராஜாஜியின் மொழிக் கொள்கை ஏன் இன்று முக்கியமானதாகிறது?

ராஜாஜியின் இந்தித் திணிப்பை முப்பதுகளில் எதிர்த்த பெரியார், பின்னர் இந்தித் திணிப்புக்குத் துணைபோனதையும் தமிழ்ப் பண்டிதர்களையும், தமிழையும் கேலிசெய்த வரலாற்று முரணையும் கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தால், இன்றைய தலைமுறைக்கு அன்றைய அரசியல் மேலும் சரியாகப் புரிபட்டிருக்கும். 1965ல் ராஜாஜி இந்தியைக் கடுமையாக எதிர்த்தபோது, பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கடுமையாகக் கண்டித்தார். போராட்டத்தைக் காலித்தனம் என வர்ணித்தது 'விடுதலை' பத்திரிகை. காவல் துறையும், ராணுவமும் நடத்திய வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகளை ஆதரித்தது. அப்போது பெரியார் 'ஆனந்தவிகடன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது. "அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?'' என்று கேட்கிறார் பேட்டியாளர் சாவி. காதை வலது கையால் அணைத்து அவர் சொல்வதை உற்றுக் கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், ''அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?'' என்கிறார். ''இந்திதான் ஆட்சிமொழியா வந்துட்டுதே...'' என்று சாவி கேட்க, ''எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?'' "ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?'' ''நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?'' "மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...'' ''படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப்போறவங்க 'சர்வே’ படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே, நஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறே... இது லாபம்தானே?'' என்றார் பெரியார். 

-பத்மநாபன் சஹஸ்ரநாமம்

 

ராஜாஜியின் 1958ல் எழுதிய 'ஸ்வராஜ்யா' கட்டுரையில், மற்ற மொழிபேசு்பவர்களை இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ள வைப்பது இந்திய ஒற்றுமைக்கு ஊறு விழைத்துவிடும் என்பதை அவருக்கான முன் யோசனையோடும் அறிவார்ந்த வாதத் திறமையோடும் வெளியிட்டிருக்கிறார். அவர் தன் முந்தைய மொழிக் கொள்கையை மாற்றிக் கொண்டுவிட்டார் என்று மேலெழழுந்த வாரியாக நான் அறிவேனே தவிர, அதற்கான காரணங்களை அறிந்திருக்கவில்லை. 'அருஞ்சொல்' கட்டுரை வழியாக எங்களைப் போன்றோருக்கு அவற்றை நினைவூட்டியதற்கு நன்றி.

-எஸ்.நீலகண்டன்

 

@ வங்கிகளை முழுமையாக தனியார்மயமாக்க திட்டமா?

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மக்கள் நலன் காப்பதற்கு தானே தவிர அவர்களுடைய ஊதிய உயர்வுக்காக அல்ல என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. காத்திரமான தரவுகளை சுருக்கமாக தந்திருப்பது சிறப்பு.

- பத்ரி

 

பரக் அகர்வால் நியமனத்தைக் கொண்டாட ஏதும் இல்லை, ஏன்?

இந்திய மக்களின் வரி பணத்தில் கட்டமைக்கப்பட்ட ஐஐடி(IIT), ஐஐஎம்(IIM)-கள் மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த லட்சகணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும், தொழில் மேலாண்மை வல்லுனர்களையும் உருவாக்கிவருகிறது. அவர்களை இந்தியா பயன்படுத்திக்கொள்கிறதா? என்றால் இல்லை என்பதே நிதர்சனம்! பெரும்பான்மையான மாணவர்கள் - அதுவும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வுபெறும் மாணவர்களை அமெரிக்க மற்று ஐரோப்பிய நாடுகள் / நிறுவனங்கள் கவர்ந்து சென்றுவிடுகின்றன. நமது மாணவர்களும் படிக்க வைத்த நாட்டை மறந்து, யார் பணத்தில் படித்தோம் என தெரியாமல் பணம் தேடி, சுக வாழ்வு தேடி ஓடிவிடுகிறார்கள். இந்த நிலையை கட்டுப்படுத்த ஒரு சட்ட திட்டம் தேவை. அதாவது அவர்கள் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் இளங்கலை அல்லது முதுகலை படிப்பு முடிந்த பின் அவர்களுக்கு கொடுக்கப்படும் புரவிஷ்னல் (provisional degree) டிகிரியை வைத்து கொண்டு, இந்தியாவில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்த பின் (தனியார் அல்லது அரசு நிறுவனங்களில்) அதற்கான சான்றிதழைச் சமர்பித்தபின் அவர்களது பட்டத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அவர்களின் திறமைகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

- மன்னை. அரவிந்தன்

 

@அமுல்: காந்தியின் கனவு

காங்கிரஸ் என்பது ஏதோ ஊழல் செய்ய மட்டுமே உருவான கட்சி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தை நீங்கள் முற்றிலும் மாற்றிவிட்டீர்கள். 'அருஞ்சொல்' கட்டுரைகளைப் படித்ததும், உணர்வுகளை நொடியில் வெளிப்படுத்த, Like, love போன்ற smileyகள் இருந்தால் நன்றாக இருக்கும்.

- கணேஷ்ராம் பழனிசாமி

 

@பாஜகவைக் கட்டுப்படுத்தவல்ல ஒரே சக்தி: தோல்வி பயம்

காலவரையறையற்ற ஆட்சி குறித்த விழிப்புணர்வு பத்தாண்டு காலம் மன்மோகன் ஆளும்போது தோன்றாமல், கட்டுரையாளருக்கு இப்போது தோன்றியது மகிழ்ச்சிக்குரியதே. பாஜக மீது கட்டுரையாளர் சுமத்தும் குற்றச்சாட்டுகள், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும் பொருந்தும். காங்கிரஸ் செய்த தவறுகளால்தானே, இன்று பாஜக ஆட்சியில் இருக்கிறது? தோற்றுவிடுவோம் என்ற அச்சம் இருக்கும்வரை சனநாயகம் நீடிக்கும். அஞ்சாதவர்கள் கட்சி அழிந்துதான் போகும். அஞ்சினாலும், ஆதிக்கநோக்கச் சிந்தனையாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். அகங்காரத்தையும் வீம்பையும் காங்கிரஸ் கடந்துவிட்டதென்றால், நிகழ்கின்ற தீமைக்கெல்லாம் பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். குடும்பப் பரம்பரை தவிர்த்துப் புதிய ஆளுமையைத் தேடுங்கள். வாக்குவலிமை மிக்க மக்களாட்சி வெல்லட்டும்.

- சே.நா. விசயராகவன், காரைக்குடி

 

@நச்சரிப்பு காதல் இல்லை!

அனுபவ மொழிகளால் நன்கு எழுதியுள்ளீர்கள் தோழரே... உணர்வுகளாலும், உணர்ச்சிகளாலும் ததும்பியவள் பெண்... நாங்கள் செய்யும் அக்கறைகூட உங்களுக்கு இம்சையாகத் தெரிகிறது - திருமணத்துக்குப் பின் மட்டும்....

- மனோ

 

@என்னதான்மா உங்க பிரச்சினை?

 நான் இந்தக் கட்டுரையில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறேன். எனது மனைவி இந்தக் கட்டுரைக்கு நேர் எதிர்...

-டாக்டர் பிரபு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

ராஜன் குறை கிருஷ்ணன்   2 years ago

பெரியார் ”இந்தி திணிப்பை” ஆதரித்தார் என்று பத்மநாபன் சஹஸ்ரநாமம் கூறுவது மிகவும் தவறானது. இது போன்ற பின்னூட்டங்களை அருஞ்சொல் கவனத்துடன் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இளம் வாசகர்கள் மனதில் இத்தகைய தவறான எண்ணம் பதிய நேர்வது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். என்ன நடந்தது என்றால் நேரு அனைத்து மாநில மக்களும், தமிழ்நாட்டு மக்களும் இந்தியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக, இணைப்பு மொழியாக ஏற்கும்வரை ஆங்கிலமும் தொடரும் என உறுதிமொழி அளிக்கிறார். அதற்கான சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது. அதில் "English may continue" என்று இருப்பதை “English shall continue" என்று மாற்றச்சொல்லி கேட்கிறார்கள். ஆனால் நேரு அது ஒரு பெரிய பிரச்சினையில்லை என்று கூறிவிடுகிறார். அலுவல் மொழி மாற்றத்திற்கு கெடு விதிக்கப்பட்ட தேதியான 1965 குடியரசு தினம் நெருங்கும்போது நேரு இறந்துவிடுகிறார். லால் பகதூர் சாஸ்திரி, பிற அமைச்சர்கள் இந்தி அலுவல் மொழியாகப் போவதைக் குறித்து உற்சாகமாக பேசுகிறார்கள். ஆங்கிலமும் கூடுதலாக தொடருமா என்பது ஒன்றிய அரசின் விருப்பத்தின் அடிப்படையிலேயே உள்ளது. அதனால் தமிழகத்தில் அச்சம் தோன்றுகிறது. தி.மு.க ஆங்கிலம் தொடரும் என திட்டவட்டமாக, சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்கிறது. கட்சி உறுப்பினர் சின்னச்சாமி தாமாகவே 1964-இல் தீக்குளிக்கிறார். ராஜாஜி அதை ஆதரிக்கிறார். காமராஜரும், தமிழக காங்கிரஸும் ஏற்கனவே கொடுத்த உத்திரவாதமே போதும் என்கிறார்கள். பெரியார் அந்த நிலைபாட்டை ஆதரிக்கிறார். ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் இந்தி மொழி பயில்வது குறித்து பெரியார் கவலைப்படவில்லை. ஆனால் ஆங்கிலம் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தொடர வேண்டும் என்பதிலும், இந்தி பள்ளிகளில் கட்டாயமாக பயிற்றுவிக்கப்படக்கூடாது என்பதிலும் பெரியார் கொள்கை மாறாமல்தான் இருந்தார். உள்ளபடி சொன்னால் 1965-இல் ஒன்றிய அரசில் காங்கிரஸ் அமைச்சர்களான சி.சுப்ரமணியமும், ஓ.வி.அளகேசனும் தங்கள் பதவிகளையே ராஜிநாமா செய்கிறார்கள். தமிழகத்தில் மாணவர் போராட்டமும், தி.மு.க-வின் குறியீட்டு ரீதியான போராட்டமும் பக்தவத்சலம் அமைச்சரவையின் தவறான ஒடுக்குமுறை போக்கினால்தான் பெரும் கலவரமாக மாறுகிறது. சின்னச்சாமி போல அரங்கநாதன் உள்ளிட்ட பலர் தீக்குளிக்கிறார்கள். துப்பாக்கி சூட்டிலும் கலவரங்களிலும் பலர் இறக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை திட்டவட்டமாக அறிவித்தபிறகு போராட்டங்கள் ஒய்கின்றன. ஒன்றிய அரசை பொறுத்தவரை என்றாவது இந்தி மட்டுமே அலுவல் மொழியாக விளங்கவேண்டும், ஆங்கிலம் அகற்றப்பட வேண்டும் என்ற கனவுடனேயே இருக்கிறது. ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு போனால் அங்கே ஒரு பலகை வைத்து தினமும் ஒரு இந்தி மொழிச்சொல்லை எழுதிப்போடுவார்கள். மெள்ள, மெள்ள இந்தி பயிற்றுவிக்கிறார்களாம். இந்த எண்ணத்தை கைவிட்டு ஆங்கிலமே ஒன்றிய அரசின் ஒரே அலுவல் மொழி, இணைப்பு மொழி என்று சட்டத்திருத்தம் செய்வது இந்தியாவின் ஒற்றுமைக்கு அவசியமானது. அதன் பொருட்டே பெரியார் ஆங்கிலம் பயில்வதை வலியுறுத்தினார் எனலாம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆவணப்படுத்துவதில் அலட்சியம்ஸ்பைவேர்கும்ப்ளேதேவ பிரசன்னம்பத்திரிகையாளர் ஹார்னிமன்குழந்தையின் அனுபவம்ஆற்றல்கொள்கைகள்பாஷைகள்சிந்தனை உரிமையின் மேல் தாக்குதல் கூடாதுதமிழ் சினிமாகைதுதேசப் பாதுகாப்பில் முட்டாள்தனமான சிக்கனமா?பாரத்குறிப்பு எடுத்தல்மனம்நடப்புக் கணக்கு பற்றாக்குறைசெ.வெ. காசிநாதன்முளைபுரட்டாசி - கார்த்திகைவிவாதம்தமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட்டம்மீள்கிறது நாசிஸம்தேர்தல் சீர்திருத்தம்வேலையின் தரம்பத்திரிகையாளர் கலைஞர்இந்திய தண்டனைச் சட்டம்ஒரே தலைநகரம்இந்திய குடிமைப் பணி மாற்றங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!