இரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.
ஜனகராஜ், “என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா" என்று மகிழ்ச்சியாகக் கத்திக்கொண்டே ஓடும் காட்சி, தமிழ்கூறும் நல்லுலகில் மிகப் பிரபலம். ஏழை எளிய ஆண்கள் முதல் எலீட் ஆண்கள் வரை எந்தப் பாகுபாடும் இல்லாமல் ரசிக்கும் காட்சியாக இந்தக் காட்சி மாறிப்போனது ஏன் என்று எப்போதேனும் பெண்கள் யோசித்து இருக்கிறார்களா ?
பெரும்பாலான வீடுகளில் இன்னமும் பெண்கள்தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்கிறார்கள். காதலி அல்லது மனைவி வீட்டில் இருந்தால் அது ஆண்களுக்குதானே வசதி? அவர்கள் இல்லை என்றால் அனைத்து வேலைகளையும் இவன்தானே செய்ய வேண்டும்? அப்படி இருக்கையில் அவள் ஊருக்குப் போனால் வருத்தம்தானே அடைய வேண்டும் ? ஆனாலும் ஏன் ஆண்களுக்கு இவ்வளவு குதூகலம்? மகிழ்ச்சி?
எளிமையான பதில், சுதந்திரம்!
¶
காதலி அல்லது மனைவி வீட்டில் இருக்கையில் சதா 'நையி நையி' என்று பிராண்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதுதான் ஆண்களின் பிரதானமான புகார். தூங்கி எழுந்தது முதல், படுக்கப்போகும் வரை 'நையி நையி' என இன்னதுதான் என்றில்லாமல் தொடர் பிராண்டல்கள். மேம்போக்காகப் பார்க்க இது ஒன்றுமே இல்லாததுபோல இருக்கும். 'இந்தச் சின்ன விஷயத்தை ஏன் பூதாகரப்படுத்துகிறாய்?' எனக் கேட்கத் தோன்றும். இது ஒரு நுட்பமான உளவியல் தாக்குதல். எவ்வளவு மென்மையான தொந்தரவாக இருந்தாலும், அது தொடர்ந்துகொண்டே இருக்கும் போது மூச்சடைத்ததுபோல இருக்கும். இருட்டறையில் அடைத்து கும்மாங்குத்து குத்துவதுபோல ஆகிவிடும்.
பல சமயங்களில் “உங்க நல்லதுக்குதான்!” என்ற லேபிளில்தான் இந்த அத்துமீறல்கள் அரங்கேறும். அதுதான் நியாயம் என்பதுபோல நமக்கேகூட தோன்றிவிடும்.
ஒரு டீ கொடுப்பார்கள். நாம் ஒரு சிப் அருந்திவிட்டு, டீ குவளையைக் கீழே வைத்துவிட்டு, பேப்பரில் செய்தி படிப்போம். “டீய நிம்மதியா குடிச்சிட்டு பேப்பர் படிச்சா என்னவாம்? நியூஸ் எங்கயும் ஓடிடாது!” என்பார்கள்.
“டேய், அதான் ரெண்டு பீர் குடிச்ச இல்லடா? போதும். ஏற்கனவே பத்து வருஷமா குடிச்சி உடம்பைக் கெடுத்துவச்சிருக்க!"
“ஃபர்ஸ்ட் பால்ல இருந்து லாஸ்ட் பால் வரைக்கும் பாத்துட்ட இல்ல, அப்புறம் என்ன ஹைலைட்ஸ்?”
இதைப் போல எழுதிக்கொண்டுபோனால், அன்றாட வாழ்வில் இவர்கள் அத்துமீறும் விஷயங்களை மட்டும் 'அருஞ்சொல்'லில் 52 வாரங்களுக்கு எழுதலாம்.
இருவருக்குள்ளும் ஓர் உறவு மலரும் வரையில் தென்றலாக இருக்கும் பெண், அந்த உறவு நிலைப்பெற்றதும் ஏனோ வெப்பக்காற்றாக மாறிப்போகிறாள்.
வெளியுலகில்தான் அனைவருக்கும் நடிக்க வேண்டிய தேவை இருக்கிறது, நடித்துக்கொண்டும் இருக்கிறோம். அனைவரும் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தனக்குப் பிடித்ததுபோலவும் இருக்கும் ஒரே இடம் வீடு. அந்த வீட்டிலும் இயல்பான சுதந்திர வாழ்க்கையில் கை வைப்பது ஓர் ஆணின் அடிமடியில் கைவைப்பது போன்றது. தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான பெண்கள் இந்த இடத்தில் அதீதமாக அத்துமீறுகிறார்கள். தன் இணை உடனிருக்கும்போது ஆண்களிடம் ஒரு சின்ன பதற்றமாவது நீடிப்பதைத் தொடர்ந்து அருகில் இருப்போர் கவனித்திருக்க முடியும். யாரோ தன்னைக் கண்காணித்துக்கொண்டிருப்பதுபோலவே இருந்தால் யாரால்தான் நிம்மதியாக இருக்க முடியும்?
காதல் வாழ்வு கனிகையில் கனவுலகத்தில் மிதப்பதுபோல இருக்கும் ஒருவனுக்கு, அது உறுதியான சில நாட்களிலேயே இத்தகைய 'இட்சிங்க்' ஆரம்பித்துவிடுகிறது. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், உடையணிந்த பின்பு மேலே நாலு கம்பளிப் பூச்சிகளைவிட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பல ஆண்மகன்கள் தன் இணையுடன் இருக்கையில் உணர்கிறார்கள். இது ஒரு நுட்பமானத் தாக்குதல். இதை யாராலும் விளக்கி வெளியே சொல்ல முடியாது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
¶
பேசுவது, சிரிப்பது, நடப்பது, நலம் விசாரிப்பது, பல் துலக்குவது, வாய் கொப்பளிப்பது… இன்னும் மல ஜலம் கழிப்பதுவரை அங்கிங்கெனாதபடி எங்கும் பிராகசமாய் தங்கள் தலையீடு இருந்துகொண்டேயிருப்பதை எத்தனை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
“ஏம்மா நாங்க எல்லாம் என்னமோ குப்பையில வளந்து வந்த மாதிரியும், நீங்க எல்லாம் என்னமோ தேவலோகத்திலிருந்து டேரக்டா தட்கால் டிக்கட் புக் பண்ணி வந்து எறங்குன மாதிரியும் பிஹேவ் பண்றீங்களேம்மா!"
இப்படிப் புலம்பும் ஆண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா?
எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் இவை.
1) எப்போதேனும் இசை கேட்க வேண்டும். ஒரு பாட்டுகூட வீட்ல முழுசா கேட்டதில்ல...
2) அவ்ளோ பெரிய வீட்ல, என் ஜட்டி வக்க இடம் இல்ல மாப்ள..
3) நைட் 11 மணிக்கு மேல வீட்ல எங்கயும் லைட் எரியக்கூடாதுங்கிறா மாப்ள!
இன்னும் எவ்வளவோ! “இவ்ளோ சத்தமாவா காலிங்க் பெல் அடிப்பீங்க (!)” என்று எரிந்து விழும் மனைவிகளின் கதையை சோகம் குழையும் வெடிச்சிரிப்போடு கேட்டது உண்டு.
இவை எல்லாவற்றையும்விட ‘முடிவெடுத்தல்’ என்ற சடங்கு அரங்கேறுகையில் ஓர் ஆண் பைத்திய மனநிலைக்குத் தள்ளப்படுவான். தான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் காதும் காதும் வைத்த மாதிரி முடிவெடுத்து, அதைச் செயல்படுத்தியும்விட்டு, இப்படிச் செய்யலாமா என்று அனுமதி அல்லது ஆலோசனை கேட்பதுபோல கேட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல் விவாதிப்பார்கள் பெண்கள்.
“உன் இஷ்டம், என்ன வேணா பண்ணிக்கோ” என்று மனம் நிறைந்து, மனம் கசிந்து சொன்னாலும், “என்னடா இப்டி விட்டேத்தியா பேசற?” என்று திருப்பியடிப்பார்கள்; வேறு ஒரு முடிவைச் சொன்னாலும் அதை ஏற்க மறுப்பார்கள்; என்னதான் செய்வான் ஆண்?
இதுவரைகூடப் புரிந்துகொள்ள முடியும். நம் தங்கையும், தங்கையின் கணவனும், எந்த ஊருக்கு ஹனிமூன் போக வேண்டும் என்பதையும் இவர்கள் முடிவுசெய்ய முயல்வார்கள். அவர்கள் இஷ்டத்துக்கு (தங்கை இஷ்டத்துக்கு - அங்கேயும் இதே கதைதானே) அவர்கள் சென்றுவிட்டால் முகம் கோணிவிடும். அதற்கும் நம் தலை உருளும். ஏன் இப்படி சம்பந்தம் இல்லாத விஷயங்களைத் தலையில் தூக்கிப் போட்டுக்கொண்டு தானே முடிவெடுக்க வேண்டும் என்று வெறியோடு திரிகிறார்கள் என்பது ஆராய வேண்டிய விஷயம் என்று நினைப்பது உண்டு. ஆணுக்கு இங்கே அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தையே முடிவெடுக்கும் நிலையே இல்லை என்பதையாவது உணர்கிறார்களா!
¶
பெண்கள் மேக்கப் போட்டுக்கொள்வதை ஆண்கள் கிண்டல் செய்வது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆண்கள் இப்படி நகைச்சுவைக்காக எதையாவது செய்து கெட்டப்பெயர் வாங்கிக்கொள்வதில் வல்லவர்கள். நக்கல் செய்கிறார்களே ஒழிய பெரும்பாலான ஆண்கள் தங்கள் இணை அழகுப்படுத்திக்கொள்வதை விரும்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள்.
சரி, இப்படி ஆணுக்கும் சில ஆசைகள் இருக்கலாம். ஓர் ஆண் பெரிதாக என்ன ஆசைப்படப்போகிறான்? ஒரு நல்ல டிரிம்மர் அல்லது ரேஸர் வாங்க ஆசைப்படுவான். அது விலை அதிகம் என்று எத்தனை வீட்டில் தடை என்பதை உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறதா ? 300 ரூபாய் மதிப்புள்ள ரேஸர் வாங்க முடியாமல் 30 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் பல ஆண்களை நான் சந்தித்திருக்கிறேன். ரேஸர் என்றால் வெறும் ரேஸர் மட்டுமல்ல. அவன் பயன்படுத்தும் அனைத்துக்கும் பொருந்தும்.
இதைப் போன்ற ஏப்பை சாப்பைப் பிரச்சினைகளைகூட விட்டுவிடுவோம். தனித்தனியாக இருந்து காதலிக்கும்போது ஓரளவு நன்றாகத்தானே இருந்தது. ஒரு வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்ததும் ஏன் ஆண்களுக்கு அது ஒரு கொடூர துன்பமாகவும் காவிய சோகமாகவும், தீர்க்கவியலா சிக்கலாகவும் மாறிப்போகிறது? அடிப்படை பிரச்சினைதான் என்ன?
பெண்கள், ‘லிவ்-இன்’ ஆக இருந்தாலும் சரி, திருமணப் பந்தத்துக்குள் நுழைந்தாலும் சரி, ஒரு வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாக அந்த வீட்டின் தலைமை போலீஸ் அதிகாரியாக மாறிவிடுகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. பிறகு, ஹெல்த் இன்ஸ்பெக்டர், இன்கம்டேக்ஸ் கமிஷ்னர், ஆர்டிஓ, ஹெச்ஏஓ - அதுதான் ஹோம் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீஸர் , குவாலிட்டி கண்ட்ரோல் மேனேஜர், சுற்றுச்சூழல் கண்காணிப்பு அதிகாரி, மனித உரிமை ஆணையர், மாஜிஸ்ட்ரேட், தலைமை ஜெயில் சூப்பிரண்டண்ட் என பல்வேறு பதவிகளைத் தனக்குத் தானே வழங்கிக்கொண்டு ‘மல்டிபிள் பர்ஸ்னாலிட்டி’யாக விஸ்வரூபம் எடுத்து ஆட்சிசெய்ய ஆரம்பிக்கும்போது ஆண் சித்திரவதையின் உச்சத்தை அடைகிறான். ஏனென்றால், அம்மணிகளின் சாம்ராஜ்யத்தில் ஒரே நிரந்தரக் குடிமகனாக அந்தப் பாவப்பட்ட ஆண்தானே மாட்டிக்கொள்கிறான். தன்னுடைய அனைத்து அதிகாரங்களையும் அந்த அல்ப மானுடன் மேல் போட்டுத்தாக்கினால் அவன் என்னத்துக்கு ஆவான்?
ஆகவே சொல்கிறேன், அது ஆணோ - பெண்ணோ நச்சரிப்பு காதல் இல்லை; அதிகாரம் அன்பு இல்லை!
7
4
1
பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
surya 3 years ago
அருமை . நுண்ணிய அலசல் . போலீஸ் அதிகாரி /ஜெயில் சுப்பரின்டென்ட் பாரா ஆரம்பித்தவுடன் கண்ணில் நீர் வர சிரிக்க முடிந்தது. ஒரு தாய் இதை செய்யும் போது சகித்து கொள்ளும் ( பெருமையாய் வேற) பேசும் ஆண்கள் , மனைவியின் அதிகாரத்தை மறுப்பது ஏன் ?? மற்றபடி ,உண்மை உரைக்கும், மிக சிறப்பான பதிவு .
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Mano 3 years ago
அனுபவ மொழிகளால் நன்கு எழுதுயுள்ளீர்கள் தோழரே... உணர்வுகளாலும், உணர்ச்சிகளாலும் ததும்பியவள் பெண்.... நாங்கள் செய்யும் அக்கரை கூட இம்ைசையாக தெரிகிறது திருமணத்திற்கு பின் மட்டும்....
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
இரா.ப.இராக்கண்ணன் 3 years ago
💯நிகழ்காலத்தை தத்ரூபமாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.👏
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
R.Kamarasu 3 years ago
மிக அருமை.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Melkizedek 3 years ago
உள்ளுணர்வுக்குள் பயணித்து எழுதி இருக்கிறீர்கள்... எழுத்து நடை சூப்பர்!!...
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Prabhusankar 3 years ago
It cannot be explained better than this. Also tamil cinema industry needs Arathu. Most of the cinema directors are thinking eve teasing as love. Despite I agreed each and every line of this article as a family man.
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.