கட்டுரை, அரசியல் 8 நிமிட வாசிப்பு

பாஜகவைக் கட்டுப்படுத்தவல்ல ஒரே சக்தி: தோல்வி பயம்

ப.சிதம்பரம்
29 Nov 2021, 5:00 am
5

ணக்காரர்கள் பெரிய மனிதர்கள் ஆகிறார்கள், பெரிய மனிதர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள். இப்படிப் பெரியவர்களாகவும் பணக்காரர்களாகவும் வளர்ந்த பிறகு அவர்கள் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாதவர்கள் என்கிற ஆபத்தான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

அமெரிக்காவில் வாழ்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் ஷெர்மன், இது தொடர்பான மேற்கோளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுகிறார். “மன்னரை அரசியல் சக்தியாக நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லையென்றால், உற்பத்தி - போக்குவரத்து மற்றும் வாழ்க்கையின் எந்த முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் அவரை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது!”

தொழில் நிறுவனங்களின் சக்தி வாய்ந்த அறக்கட்டளை அமைப்புகளின் ஆதிக்கத்துக்கு எதிராக 1890-ல் இயற்றப்பட்ட அமெரிக்கச் சட்டத்துக்கு, ‘ஷெர்மன் சட்டம்’ என்றே பெயர். இந்தச் சட்டத்தின் தொடர்ச்சியாகவே  ‘ஸ்டாண்டர்ட் ஆயில்’, ‘ஏடி அண்டு டி’ பெருந்தொழில் நிறுவனங்கள் உடைக்கப்பட்டன. இன்றும் ‘அலிபாபா’, ‘டென்சென்ட்’, ‘டீடி’, ‘மைக்ரோசாஃப்ட்’, ‘கூகுள்’, ‘ஃபேஸ்புக்’ ஆகிய நிறுவனங்கள் ஆள்வோரின் நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளன.

ஏன்? ஏனென்றால், அவை மிகப் பெரியதாகவும் மிகுந்த செல்வம் மிக்கதாகவும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில்லை என்கிற அளவுக்கும் வளர்ந்துவிட்டன.

எப்படி அகந்தை கொண்ட மன்னரை ஆட்சியாளராக  ஏற்றுக்கொள்ள மாட்டோமோ அப்படியே, மன்னராக விரும்பும் ஓர் ஆட்சியாளரையும் சகித்துக்கொள்ளத் தேவையில்லை. பல நாடுகளில் அதிபர், பிரதமர் ஆகிய பதவிகளை ஒருவர் இத்தனை முறைதான் வகிக்க வேண்டும் என்று சட்டப்படியே வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, காரணம், அவர் அதிகாரத்தை முழுதாகக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதே ஆகும்.

புதின், ஜின்பிங் ஆடும் ஆட்டம்

ரஷ்யாவில் விளாதிமிர் புடின், அதிபராகவும் பிரதமராகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை விடாமல் கையில் வைத்திருக்க அரசமைப்புரீதியாகவே வழி கண்டுபிடித்திருக்கிறார். சீனத்தின் ஜி ஜின்பிங்கும் ஒருவர் எத்தனை முறை அதிபர் பதவியை வகிக்கலாம் என்ற வரம்பையே தவிடுபொடியாக்கிவிட்டு தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டுவிட்டார். எந்த இலக்கணப்படி பார்த்தாலும் ரஷியாவையும் சீனாவையும் ஜனநாயக நாடுகள் என்று கூறிவிட முடியாது. அவ்விரண்டும் பணக்கார நாடுகள் வரிசையிலும் சேர்ந்துவிடவில்லை.

தனிநபர் வருமான அடிப்படையில் உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் இவைதான்: 1. லக்சம்பர்க், 2. அயர்லாந்து, 3. சுவிட்சர்லாந்து, 4. நார்வே, 5. அமெரிக்கா, 6. ஐஸ்லாந்து, 7. டென்மார்க், 8. சிங்கப்பூர், 9. ஆஸ்திரேலியா, 10. கத்தார். இவற்றில் கத்தார், மன்னராட்சி நாடு. சிங்கப்பூர், வரையறைக்குட்பட்ட ஜனநாயக நாடு. எஞ்சிய எட்டும் முழு அளவிலான ஜனநாயக நாடுகளாகும்.

அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளின் அதிபர், பிரதமர் பெயர்களைச் சட்டென்று நினைவிலிருந்து என்னால் கூறிவிட முடியாது, சற்று முயன்றால் ஆஸ்திரேலியப் பிரதமர் பெயர் நினைவுக்கு வரக்கூடும். இப்படிச் சொல்வதன் காரணம், அமைதியான, தன்னடக்கம் மிக்க - உலக அரங்கில் அவ்வளவாகப் புகழ் பெறாமலிருந்தாலும் - தலைவர்களால் ஆளப்படும் நாடுகள் பணக்கார நாடாகவும் ஜனநாயகத் தன்மைகள் மிகுந்த நாடாகவும் இருப்பது இயல்பே. எனக்குத் தெரிந்தவரை இந்த நாடுகளின் தலைவர்கள் எவரும் அவர்களுடைய அகந்தைக்காகவோ, இறுமாப்புக்காகவோ குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அல்ல.

பாஜகவின் அதீத பலம்

வரம்பற்ற அதிகாரம், நாடாளுமன்றம் - ஊடகம் ஆகியவற்றின் மீது அலட்சியம் ஆகியவை இணைந்திருந்தாலே ஜனநாயகம் நலிவுற்றுவிடும். எனக்கு எல்லாம் தெரியும் அல்லது நான்தான் உங்களுடைய ரட்சகன் என்ற பேச்சுக்கு ஜனநாயகத்தில் இடமே இல்லை. இந்த குணங்கள், ஓர் அரசியல் கட்சி பெரியதாகவும், பணபலம் மிக்கதாகவும், யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதில்லை என்ற நிலையை எட்டும்போதும் வந்துவிடும்.

உலகிலேயே பெரிய ஜனநாயக கட்சி என்று பாஜக கூறிக்கொள்கிறது. இந்தியாவில் உள்ள கட்சிகளில் அதுதான் செல்வ வளம் மிக்கது என்று நமக்குத் தெரியும். மக்களவையின் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக 300 இடங்களைப் பெற்றிருக்கிறது. மாநில சட்டப் பேரவைகளின் மொத்தமுள்ள 4,036 இடங்களில் 1,435 இடங்களைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 17 மாநிலங்களில் தனித்தோ, கூட்டணிக் கட்சிகள் உதவியுடனோ ஆளும் சக்தியாக இருக்கிறது. இவற்றின் காரணமாக அது பெரிய கட்சியாகிறது.

பாஜக, நிதி வசதி மிக்க கட்சியும்கூட. ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் திரட்டிய தரவுகளின்படி 2019-20-ல் பாஜகவுக்கு மட்டும் கிடைத்த நன்கொடை ரூ.2,642 கோடி. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த நன்கொடை ரூ.3,377 கோடி. இது நேரடி சந்தா, நன்கொடை மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய தேர்தல் கால நன்கொடை பத்திரம் உள்ளிட்ட மறைமுக வரவையும் உள்ளடக்கியது. கடைசியாக நடந்த ஐந்து மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ரூ.252 கோடி செலவிட்டது, அதில் ரூ.151 கோடி மேற்கு வங்கத்தில் மட்டும் செலவிடப்பட்டது. இது அதிகாரபூர்வக் கணக்கு.

எவரும் ஒரு பொருட்டு அல்ல

யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதல்ல என்ற நிலைக்கு, கடந்த ஏழு ஆண்டுகளில் பாஜக வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்களை அது தவிர்க்கிறது, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் பரிசீலித்துவிடாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது, விவாதங்கள் ஏதுமின்றியே இரு அவைகளிலும் பல முறை அவை நிறைவேறுகின்றன. நாடாளுமன்றத்தையும் ஊடகத்தாரையும் சந்திப்பதை பிரதமர் ஒவ்வொரு முறையும் கவனமாகத் தவிர்த்துவிடுகிறார். மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), வருவாய்ப் புலனாய்வு அமல் பிரிவு இயக்குநரகம் (இ.டி.) வருமான வரித்துறை, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ), தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி) ஆகியவற்றை அரசியல் எதிரிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அரசு தயங்குவதே இல்லை.

மிகப் பெரியதாகவும் மிகுந்த செல்வம் மிக்கதாகவும் யாருக்கும் பதில் சொல்லக்கடமைப்படாததாகவும் இருக்கும் நிலையிலும் பாஜக தொடர்ந்து தேர்தல்களில் வென்றுவருகிறது. எங்கெல்லாம் அது பொதுத் தேர்தலில் ஆட்சியை இழக்கிறதோ, அங்கெல்லாம் மாற்றுக்கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கி - உதவி செய்வதற்காகவே காத்திருக்கும் தான் நியமித்த ஆளுநர்கள் உதவியுடன் - ஆட்சியமைத்தும் சாதிக்கிறது. வெட்கக்கேடான இந்தச் செயலுக்கு ‘தாமரை செயல்திட்டம்’ என்ற பெயரையும் பெருமையாகச் சூட்டுகின்றனர் பாஜகவினர்.

தோற்பதற்கு மட்டுமே அச்சம்

தான் என்ற அகங்காரமும், தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற ஆணவமும்தான் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியபோதும், அது விவசாயிகளின் நலனுக்கானவைதான் என்று வாதிட்டபோதும் முழுதாக வெளிப்பட்டது. அவை முதலில் அவசரச் சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பிறகு நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் தொடர்ந்து 15 மாதங்கள் போராடினார்கள், அரசு அசைந்து கொடுக்கவில்லை. பேச்சு நடத்த வாருங்கள் என்று விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அனைத்துமே தீர்வு காண வேண்டும் என்ற அக்கறையற்றவை, அரசியல் நாடகத்துக்கானவை.

போராடும் விவசாயிகளையும் அவர்களை ஆதரிப்போரையும், இழிவாகவும் பட்டம் சூட்டியும் (காலிஸ்தானிகள், தேச விரோதிகள்) அழைத்ததில் அநாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றனர். விவசாயிகளுக்கு எதிரான காவல் துறை அடக்குமுறைகள் முரட்டுத்தனமானவை. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டையும் ஏற்கப் பிடிவாதமாக மறுத்தனர்.

இப்படிப் போராட்டக் காலம் முழுவதும் அரசு தனக்குத் தானே திருப்தியடைந்ததாகவும், சுய பெருமையில் மகிழ்ச்சி கொண்டதாகவும் காணப்பட்டது. எதுவரையில் என்றால், மக்களுடைய மனநிலை குறித்த உளவுத்துறை அறிக்கைகளும் தேர்தல் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளும் உயர்நிலை வட்டாரங்களை எட்டும்வரை.

மோடி அரசு ஒன்றே ஒன்றுக்குத்தான் அஞ்சுகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது – அது தேர்தலில் கட்சிக்குக் கிடைக்கும் தோல்வி. நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் 30 சட்டப் பேரவைகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி என்ற தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாக, உயர்த்திக்கொண்டேவந்த பெட்ரோல், டீசல் விலையை ஓரளவுக்காவது சட்டென்று குறைத்தனர். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது என்று - மத்திய அமைச்சரவையைக் கூட கலக்காமல் - மோடி எடுத்த திடீர் முடிவுக்குக் காரணம் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா (இப்போது பாஜக ஆள்கிறது) ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்குப் பெருந்தோல்வி நிச்சயம் என்ற அச்சம்தான்.

இந்த விலக்கலுக்குப் பிறகு பிரதமரின் ‘ராஜதந்திர முடிவு’க்குக் கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்த பாராட்டுகள், எப்படிப்பட்ட ஊமை உற்சாகிகள் அவர்கள் என்பதையே காட்டுகிறது. மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தபோதும் அவரை மிகச் சிறந்த ஆட்சியாளர் என்று பாராட்டுகின்றனர், அவற்றைத் திரும்பப் பெறும்போதும் முன்பைவிடப் பெரிய ராஜதந்திரியாகப் பாராட்டப்படுகிறார்!

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் பாஜகவுக்கு இருக்கும்வரை இந்தியாவில் ஜனநாயகம் பிழைத்துக்கொண்டிருக்கும். 2022 பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் கட்சிக்கு முழுத் தோல்வி கிடைத்தால் அகங்காரத்தையும், வீம்பையும் கட்சி முழுமையாகக் கைவிட்டுவிட வழி பிறக்கும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

சே.நா. விசயராகவன், காரைக்குடி   3 years ago

காலவரையறையற்ற ஆட்சி குறித்த விழிப்புணர்வு பத்தாண்டுக்காலம் மன்மோகன் ஆளும்போது தோன்றாமல், இப்போது தோன்றியது மகிழ்ச்சிக்குரியதே. இன்றைய ஆட்சி பாராளுமன்ற விவாதங்களைத் தவிர்க்கிறது என்பது குற்றச்சாட்டு. ஆனால், பாராளுமன்றத்தில் கலகங்களை நடத்தி, ஒத்திவைப்புக்கள் தொடர்வதாலே விவாதங்கள் நடத்தாமல், ஒரே நேரத்தில் பல தீர்மானங்கள் படிக்காமலேகூட, படித்ததாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. இதில் இவர் கட்சியும் பங்காளிதானே. வரம்பற்ற அதிகாரம் தரும் குணங்கள் மக்களாட்சியை நலிவுறச் செய்யும். அந்நிலை எப்போது எட்டப்படும் என்ற நிலைக்கு அவருடைய கட்சியும் ஆட்சியுமே சான்றல்லவா. நெருக்கடி நிலை மறந்து போனாலும், வரலாற்றுப் பதிவல்லவா. நடுவணரசின் அதிகார அமைப்புக்கள், புலனாய்வு அமைப்புக்கள் இந்த ஆட்சியில் எதிரிகள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை உள்துறை அமைச்சராக இருந்த இவர் சொல்லக்கூடாது. இவர்களும் இப்படித்தானே நடந்துகொண்டார்கள். மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டது இவர்கள் ஆட்சியிலும் தானே. ஆளுநரை வைத்து எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்கி தமது அரசாக்கிக் கொள்ளுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. உண்மைதான். நேர்மையற்ற ராசதந்திரம். ஆனால் உங்கள் காலத்தில் - 356 - நம்பூதிரிபாட் தொடங்கி, கலைஞர் ஆட்சி உட்பட, ராமாராவ் வரையில் நீங்கள் நடத்திய நாடகங்கள் தானே உங்கள் கட்சியைக் காணாமல் ஆக்கியிருக்கிறது. உங்கள் வீழ்ச்சியில் இருந்தும் அவர்கள் பாடம் கற்கிறார்கள். மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தோற்பதற்கு மட்டுமே அஞ்சுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. உண்மைதான். ஆனால், நீங்கள் இந்திப் போராட்டத்தில் இருந்து, ஈழத்தமிழர் அழிப்பு வரை தோற்பதற்கும் அஞ்சாமல் போனீர்களே. எந்தச் சரக்கும் பெறாமல் கர்சான் வணிக நிறுவனத்திற்கு 149 கோடி வழங்கியதில் இருந்து, குட்ரோச்சி காலம் உட்பட பணப் பரிவர்த்தனை கணக்குகள் தானே உங்களை ஆட்சிஅதிகாரத்தில் இருந்து அவ்வப்போது நீக்கியது. அதிலே நீங்கள் பாடம் கற்றிருந்தால், அலைக்கற்றை வழக்கு நிகழ்ந்திருக்குமா? முறைகெட்ட மதவாத அரசியல் வெற்றிபெற்றிருக்குமா? தோற்றுவிடுவோம் என்ற அச்சம் இருக்கும்வரை, சனநாயகம் நீடிக்கும். அஞ்சாதவர்கள் கட்சி அழிந்துதான் போகும். அஞ்சினாலும், ஆதிக்கநோக்கச் சிந்தனையாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். அகங்காரத்தையும் வீம்பையும் கடந்துவிட்டீர்களா? நிகழ்கின்ற தீமைக்கெல்லாம் பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். குடும்பப் பரம்பரை தவிர்த்துப் புதிய ஆளுமையைத் தேடுங்கள். வாக்குவலிமை மிக்க மக்களாட்சி வெல்லட்டும்.

Reply 2 3

Login / Create an account to add a comment / reply.

Raja   3 years ago

அருமையான பதிவு, அனைவருக்கும் அனுப்பி வைத்தேன். ஏற்கனவே சொன்னபடி வாட்ஸாப்பில் அனுப்பும் போது படத்துடன் கூடிய லிங்க் என்பது மிக பொருத்தமாக இருக்கும். சில பதிவுகளுக்கு மட்டும் அது போல் வருகிறது. மற்றபடி வருவதில்லை. கவனிக்க வேண்டும். 

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அப்துல் காதிர்   3 years ago

ஓரிடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவது என்பது ஜனநாயகத்தை நீர்த்து போகச் செய்வது மட்டுமின்றி அதனை இல்லாமல் செய்து விடும் என்பதை கட்டுரை வாயிலாக அருமையாக விளக்கியுள்ளார். தனிப்பட்ட நபரை முன்னிருத்தி மேம்பட்ட மாநிலமாக குஜராத்தை காட்டியதும் 2ஜி என்ற மெகா போலி பிம்பத்தை கட்டி ஆட்சியை பிடித்தவர்களால் இன்று அதே யுக்தியை செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு வேறு வேறு பிரித்தாளும் வேலைகள் என்றில்லாமல் போலியான வளர்ச்சியை அரச விளம்பரங்கள் மூலமும் தங்களது கட்டுப்பாட்டில் வசப்பட்டு விட்ட முதலாளிய ஊடகங்களாலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை தொடர்ந்து செய்து வந்த போது இடைவேளையில் தங்களால் கொண்டு வந்த விவசாய சட்டங்களே தங்களது முன்னேற்ற பாதையில் தடை கற்களாக மாறிவிடும் அவலத்தை முன்னமே உணர்ந்தாரில்லை. அது பஞ்சாப் எழுச்சியாக மாறும் தலைநகரை மையம் கொண்டு அடக்குமுறைகளை கடந்து ஓராண்டை கடந்து செல்லும் என்று துளியும் எண்ணினாரில்லை. ஐயகோ!... இனியும் தாமதம் செய்தால் தங்கள் வாய்ப்புகள் குறைந்து விடுமோ! வெற்றிகள் தடைபடுமோ! என்ற அச்ச உணர்வே அவர்களை பின்னோக்கி நகர்த்தியது. இருந்தும் எப்போதும் போல அதனையும் சாதனையாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க முன்பு போல இன்றும் தொடர்ந்து தனது வழக்கமான பிரச்சார உத்தியை கையிலெடுக்கிறார்கள். மக்கள் அதிகார குவிப்பு ஆபத்தானது என்பதை உணரும் வரையில் அவர்களுக்கான காலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கூட்டாட்சி முறை என்பது மக்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட வேண்டிய காலம் இது. இதனை இருக்கும் அரசியல் அமைப்புக்கள் அனைவரும் உணர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இல்லையெனில் இந்த அரசியல் அமைப்பே கேள்விக்குறியாகும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

அவர்களுக்கு ஆணவமும் இல்லை. அகங்காரமும் இல்லை. தங்கள் முதலாளிகள் ஆர்எஸ்எஸ், அதானி சொல்படி நடக்கும் பொம்மைகள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Suresh kumar   3 years ago

வணக்கம். ஆளும் மத்திய ஆட்சியாளர்களில் எண்ணத்தை உள்ளங்கை நெல்லிகனியாக தெளிபடுத்தியுள்ளார் கட்டுரையாளர். மிகவும் உண்மை எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்போதும் வெற்றி. இதுதான் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இந்த வெற்றிக்கு மக்களின் மனங்ளை வென்றாக வேண்டும் என்பது மட்டும் ஏனோ இவர்களுக்கு நினைவில் இல்லை

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஹெர்னியாமெட்ரோ டைரிஓம் சகோதர்யம் சர்வத்ரஉபிந்தர் சிங்பேருந்துகள்கோவிட்ரெட்ரோகிரேட் எஜாகுலேஸன்துறவிமக்களவைக் கூட்டத் தொடர்முற்காலச் சோழர்கள்காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிறகுராஜீவ் மீதான வெறுப்புசோழர் காலச் சுவடுகள்உணவு விற்பனைமடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?கூட்டுறவு கூட்டாட்சிமோடியின் இரட்டை வெற்றி: சமஸ் பேட்டிமுற்காலச் சேரர்கள்வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?மாநிலத் தலைகள்: சிவராஜ் சிங் சௌஹான்மாநில அரசுகள்இந்தியத் தேர்தல்கள்கோடை காலம்பென்சிலின்வர்க்கம்காலவெளியில் காந்திதுயரம் எதிர் சமத்துவம்பொருளாதாரப் பங்களிப்புஉழைக்கும் வயதினர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!