கட்டுரை, தொடர், வாழ்வியல் 9 நிமிட வாசிப்பு

என்னதான்மா உங்க பிரச்சினை?

அராத்து
04 Dec 2021, 5:00 am
8

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதிக்கொண்டிருக்கிறார். 

ண் - பெண் உறவுச் சிக்கலைப் பற்றி பேசுகையில் இந்தப் புத்தகத்தைத் தவிர்க்க முடியாது:  ‘மென் ஆர் ஃப்ரம் மார்ஸ், விமன் ஆர் ஃப்ரம் வீனஸ்’. உலக அளவில் பிரபலமான புத்தகம் இது. தமிழிலும் வெளியாகியிருக்கிறது, ‘ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்!’ - மஞ்சுள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

உண்மையிலேயே ஆண் - பெண் அடிப்படை வேறுபாடுகளை, அவர்களின் சிந்தனாமுறைகளை, எளிமையாக விளக்கும் புத்தகம். சரி, இதை யாரடா எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் அவரும் ஓர் ஆண்தான். ஜான் கிரே!

புத்தகத்தில் ஜான் கிரே நடுநிலைமையாக இருவரைப் பற்றியும் எழுதியிருக்கிறார். இருவருக்குள்ளும் கணக்கிலடங்கா வித்தியாசங்கள் இருக்கின்றன. எப்படி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சரிசெய்து வாழ்வது? இந்த முயற்சிகளிலும் எப்போதும் ஆண்தான் முன் நிற்கிறான் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சின்ன உதாரணம். 

பெண்களும் இதைப் போன்ற புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால், பெண்கள் எழுதி நான் படித்த புத்தகங்கள், கட்டுரைகள் வரையில், அவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தங்களுடைய முன்னுரிமைகள், தங்களுக்கு விருப்பமானவை என முழுக்க முழுக்கப் பெண்கள் உலகை முன்வைத்து மட்டுமே எழுதியிருக்கிறார்களே தவிர ஆண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

“ஏய், நான் இப்டிதான், இதைப் படிச்சி புரிஞ்சிகிட்டு எனக்கு ஏத்த மாதிரி மாறிக்கோ!” என்பதுதான் பெண்கள் எழுதும் பெரும்பாலான புத்தகங்களின் அடிநாதம்!

Ω 

கணவனை ஏன் குறை கூறுகிறார்கள்?

ஓர் ஆண் எவ்வளவுதான் கேடு கெட்டவனாக இருந்தாலும், தன் நண்பர்கள் வட்டத்திலும் உறவினர் வட்டத்திலும் மனைவியை அசிங்கமாகப் பேச மாட்டான். மனைவி எவ்வளவு கேடு கெட்டவளாக இருந்தாலும், கொடூரமானவளாக இருந்தாலுமே இதுதான் நிலைமை. இன்னும் கேட்டால், நண்பர்கள் குழு ஜமாவில் மனைவி ஒரு பேசுபொருளே இல்லை அல்லது அது சட்டென்று கடக்கும் ஒரு விஷயம்.

ஆனால், பெண்கள் அப்படியா? உறவினர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் கணவன் கதி சிரிப்பாய் சிரித்தபடி இருக்க வேண்டும். கணவனைப் பற்றி விமர்சனம் மட்டுமல்ல, அவனைப் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பெண்கள் பரப்பிவிடுவார்கள். குறிப்பாக, மனைவியின் குடும்பத்தார் மத்தியில்தான் அவனுடைய அவமானங்கள் அதிகம் அரங்கேறும். உலகக் கண்களுக்குக் கம்பீரமானவனாக இருக்கும் அந்தக் கணவன், அவனுடைய மனைவி சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் கோமாளியாகக் காட்சியளிப்பான்.

ஆண்கள் எந்த விஷயத்திற்கும் மனைவியை இழுப்பதே கிடையாது. ஆனால், சம்மந்தம் இல்லாத விஷயத்துக்குக் கூட மனைவிமார்களுக்கு கணவனை இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது. 

நான் இரவில் வெகுநேரம் விழித்து, அதிகாலையில் படுத்து, நண்பகல் எழுந்துகொள்ளும் ஆசாமி. இரவில் என்ன செய்வேன்? படிப்பேன், எழுதுவேன், டெக்னிக்கலாக சிலதைக்  கற்றுக்கொள்வேன்… இன்னும் என்னமோ செய்துவிட்டுப்போகிறேன். இதெல்லாம் என் பர்ஸனல் அல்லவா?

எனக்குப் பத்து மணிகூட அதிகாலைதான். அரைத்தூக்கத்தில் இருப்பேன். என் மனைவிக்கு ஒரு போன் வருகிறது. ஸ்பீக்கர் போனில் அவள் பேசுவது எனக்கு அரைகுறையாக காதில் விழுகிறது.

“ஆழிக்கு எப்ப ஸ்கூல் ரீ ஓப்பனிங்க்?”

“அதுவா… இவர் இன்னும் தூங்கிட்டு இருக்கார், 12 மணி ஆவும் எழுதிருக்குறதுக்கு. நைட்டு எதுவோ தெருக்கடைல இட்லி சாப்புட்டு வந்தாராம். பசங்க எப்பவும் டிவி, மொபைல்னு கேட்டுக் கேள்வி இல்லாம ஆடிகிட்டு இருக்குதுங்க, இவரு அதை எல்லாம் ஒண்ணும் கேக்கறதே இல்ல. எழுந்த உடனே ஷேவ்கூட பண்ணிக்காம, ஒரு பழைய ஷார்ட்ஸை தூக்கி மாட்டிகிட்டு வெளில கெளம்பிடுவார். ஸ்கூல் எப்ப தொறப்பாங்கன்னே தெரியலை. பாப்போம்.”

தூக்கத்திலிருந்தபடியே முணுமுணுக்கிறேன். 

“ஏம்மா அவங்க என்னா கேக்கறாங்க? நீ என்னாம்மா சொல்ற?”

திடீரென்று எழுந்து எகிறிவிட்டு மீண்டும் தூக்கத்துக்குள் ஆழ முயற்சித்தேன். மீண்டும் ஒரு போன்.

“நாம எழுப்பினா எழுந்திருக்க மாட்டார். ஆனா நான் போன் பேசினா ஆகாது. தூக்கத்துலகூட எழுந்து திட்டுவார். ஒரு போன்கூட என்னால வீட்ல நிம்மதியா பேச முடியாது!”

இதைக் கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள்? என்னை ஒரு சைக்கோ, சாடிஸ்ட் என்று நினைப்பார்கள்.  இதனால்தான் பல மாமியார் வீடுகளில், மனைவி சார்ந்த உறவுகள் நடுவில் மாப்பிள்ளை என்பவன் கொடூர வில்லனாகவும், கோமாளியாகவும் நிலைபெற்றிருக்கிறான்.

சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவதை என் மனைவியிடம் நான் குற்றமாகக் காணவில்லை. ஆனால், தாமதமாகத் தூங்கி தாமதமாக எழுவதை அவர் ஏன் குற்றமாகக் காண்கிறார் என்று எனக்குப் புரிபடுவதே இல்லை. 

ஓர் உறவுக்குள் தீவிரமாக இருக்கையில் நிறைய ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ இருக்கும். சில பைத்தியக்காரத்தனங்களும் இருக்கும். தவிர்க்க முடியாத பழக்கவழக்கங்கள் இருக்கும். இவை எல்லாம் அந்த இருவருக்குள் மட்டும் இருக்க வேண்டியவை. இதைப் போன்ற விஷயங்கள் சம்பந்தப்பட்ட இருவரைத் தாண்டி வெளியே போகும்போது அவை நகைப்புக்குரியவையாக மாறுகின்றன.

காதலும் ரொமான்ஸும் உச்சத்தில் இருக்கையில் இருவரும் அந்தரங்கமாக இருக்கும் தருணங்களில், பெண்கள் தூண்டிவிட ஆண்கள் இதைப் போன்ற பித்துக்குளி விஷயங்களைச் செய்வார்கள். அப்போது ரசித்துவிட்டு, தானும் அதில் ஒரு பங்காற்றிவிட்டு, பிறகு தன் சுற்றத்தாரிடம் இவற்றைச் சொல்லி அசிங்கப்படுத்துவதைப் பெண்கள் வழக்கமாகச் செய்துவருகிறார்கள்.

தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும்படியும், ஆணைப் பற்றி கேவலமாக நினைக்கும்படியும் நுட்பமாகச் சித்திரிப்பதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள். இதை ஏன் இங்கே முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால் - காதலன் / கணவனுடன் பெரிய பிரச்சினை இருக்காது. அவனைப் பிரிய வேண்டும் என்ற நோக்கமும் இருக்காது. அவனுடன் எந்தச் சிக்கலும் இன்றி வாழ்க்கை தொடர்ந்துகொண்டிருக்கும்போதே பிரியும் அளவுக்குக் கொடூரமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களுக்கு என்ன பயன்; என்ன நோக்கம்; என்ன லாபம்? எப்படிச் சிந்தித்துப் பார்த்தாலும் விடை கிடைப்பதில்லை.

விவாகரத்து வழக்கு நடக்கும்போது இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். சும்மா நல்ல நாட்களிலேயே தொட்டால் கணவர்களைப் பற்றிப் புகார் பட்டியல் வாசிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் பல பெண்களை நான் கண்டிருக்கிறேன். "என்னதான்மா பிரச்சினை?" என்று கேட்க தோன்றும். கேட்டாலும் உருப்படியான பதில் கிடைக்காது!

டுத்து என்னை கொலைவெறியில் தள்ளும் வார்த்தை, ‘கேரிங்!’

இந்த 'கேரிங்' இருக்கிறதே, அது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வார்த்தை. ஆண்களுக்கு வெறுப்பான வார்த்தை.

ஓர் ஆணுக்கு அவனுடைய விவரம் தெரியாத நாட்களில் அவன் தாயிடம் கிடைத்த கேரிங்கைத் தாண்டி, வாழ்வில் அவனுக்கு கேரிங் என்றால் என்னவென்றே தெரியாது. நவீன வாழ்வில் தன் இணையை கேர்செய்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் ஜந்து அவன். அதுவும் சாதா கேரிங் அல்ல, ஆன் டிமாண்ட் கேரிங். “என்னை கேர் பண்ணிக்கோ!”, “என்னை கேர் பண்ணவே மாட்டீங்கற!” எனப் பெண்கள் கூட்டத்திலிருந்து காட்டுக் கத்தல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பெண்களே, மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். காதலில் இருக்கும் போது நீங்கள் உங்கள் காதலனை என்னென்ன விதமாக கேர் செய்திருக்கிறீர்கள்? தன் இணைக்காக என்னென்னவோ செய்யும் ஆண்களை எனக்குத் தெரியும். ஆனால், அவர்களும் இந்தப் புகார்களை எதிர்கொள்ளாமல் இல்லை.

“பர்த்டே அன்னிக்கு 12.02-க்குதான் நீ விஷ் பண்ண!”

“ரெஸ்டாரண்ட்ல, நான் சாப்டு முடிக்கிறதுக்கு முன்னாலயே நீ போய் கைகழுவிட்டு வந்துட்ட!”

“என் ஆஃபீஸ்ல நடந்ததைச் சொன்னா நீ கேக்கவே மாட்டேங்கிற. உன் ஆஃபிஸ்ல என்ன நடக்குதுன்னும் சொல்ல மாட்டேங்கிற!”

எல்லாமே அற்ப காரணங்கள். ஆனால், பெரிய புலம்பல்கள்!

தனக்குச் சின்னதாக உடல்நலம் குன்றும்போதும்கூட காதலனைத் துணைக்கு அழைக்கும் பெண்கள் காதலிக்கும்போது ஆடவன் உடல் நலமில்லாமல் படுத்துவிட்டால் பெண்கள் அளிக்கும் கேரிங் என்ன தெரியுமா?

முதல் கேரிங்க்: மாத்திரையின் செயலால் அரை மயக்கத்தில் கிடக்கும் அவனை தொடர் தொலைபேசி, மெசேஜ் மூலம் டார்ச்சர் செய்வது.

இரண்டாவது கேரிங்: ‘எனக்கு அப்பவே தெரியும் இப்பிடி ஆகும்னு!’ என்று ஆரம்பித்து அவனை அக்கறை என்ற பெயரில் வறுத்து எடுக்க வேண்டியது.

மூன்றாவது கேரிங்: அவன் மருத்துவமனை செல்கையில், அனைத்தையும் உடனுக்குடன் நேரலை செய்யச் சொல்வது அல்லது பிரேக்கிங்க் நியூஸ்போல அப்டேட்ஸ் கேட்பது…

நான்காவது கேரிங்: ஐந்து சதவீதம் ரெகவர் ஆகிறான் என்று தெரிந்த உடனேயே தங்களுடைய நிலுவையில் உள்ள வேலைகளைச் செய்யப் பணிப்பது.

ஐந்தாவது கேரிங்: வந்து சென்ற நோயைக் காரணம் காட்டி, அவனை எந்த உல்லாசத்திலும் ஈடுபட விடாமல் அடிப்பது.

இதற்குப் பேர் கேரிங்கா?

எல்லா விஷயங்களிலும் தலையீடு

பெண்கள் உலகில், அவர்கள் பழக்கவழக்கங்களில், அவர்களுடைய ரசனை மற்றும் வாழ்க்கைமுறைகளில் கூடுமானவரை நவீன ஆண்கள் தலையிடுவதே இல்லை. இன்னும் கேட்டால் அவர்கள் இதற்கெல்லாம் உதவிசெய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆணின் வாழ்வில் உறவாக நுழைந்துவிட்ட ஒரே காரணத்தினாலேயே, பெண்கள் தேவையில்லாமல் ஆண்களின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்வு, வட்டம் இல்லாத காரணத்தால், போர் அடித்துப்போய்  இப்படி மூக்கை நுழைப்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஒருவனுடைய செய்கை அவர்களையோ, அவர்கள் வாழ்வையோ பாதிக்கும்போது எதிர்ப்புத் தெரிவிப்பதைப் பற்றி நான் பேசவில்லை. எந்தப் பாதிப்பும் இல்லாத விஷயத்திலும், வெட்டியாக எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைத்து வம்பு வளர்த்துக்கொண்டிருப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

காதலில் கசிந்துருகும்போது, ‘ஈருடல் ஓருயிர்’, ‘செம்புலப் பெயநீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ போன்ற மாய யதார்த்த தருணங்கள் உச்சம் பெறும்தான். அது இருவருக்கும் நடக்கும். இரண்டு பேர் சேர்ந்து ஒருவரானால் அதில் இருவருடைய பண்புகளும், ஆசாபாசங்களும்தானே இருக்க வேண்டும்? ஆனால், இந்த விநோத ரசாயனக் கலவை ஏற்பட்டு இருவர் ஒன்றாகும்போது ஆடவனை உயிருள்ள ஜடப் பிண்டமாக மட்டுமே தன்னுடன் பெண்கள் பிணைத்துக்கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது!

தொடர்ந்து பேசுவோம்...

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


2

1





பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   3 years ago

Better to wait and read the Article in full and give comments. Thanks for understanding.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Dakshin V   3 years ago

அருஞ்சொல் கட்டுரைகள் அனைத்தும் அருமை. கோணங்களும் சிறப்பு! வாழ்த்துகள்!!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Boopathi raja E   3 years ago

அருமை அருமை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ashwin Kumar   3 years ago

Excellent article from Araathu 👏. From the comments i could see people completely misinterpreting and not even willing to give some thought. Can't wait for the next chapter.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 years ago

நான் முற்றிலும் இநத கட்டுரை யில் இருந்து மாறுபடுகிறேன். எனது மனைவி இநத கட்டுரைக்கு நேர் எதிர்...

Reply 2 2

Murale   3 years ago

எல்லா இடத்திலும் விதி விலக்குகள் உண்டு

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Balaganesh   3 years ago

This article doesn't aim to understand anything about man woman relationships. It is plain and simple, a rant from someone's personal life. The author cribs saying that women complain all the time. This is because there's no concept of boundaries in relationships. Men take women for granted for all intents and purposes. When woman does the same, they get annoyed. There's not even a single mention about patriarchy here in this article. I wonder how the editor agreed to publish such rubbish in what I consider as a respectable platform. The author cringes that about 'caring'. There's a concept called love language. Different people irrespective of their gender tend to express how they care in a number of different ways. And ideally one should have an honest conversation with their partner regarding this. And it is options like these that would solve the problem. The author might have different opinions about the book 'Men are from Mars and Women are from Venus'. Such misguided, outdated literature being cited as a reason for different behavioural outcomes for men and women is shows plain ignorance. The author may refer to Gender and the Brain by Prof. Gina Rippon to update themselves. Shortly, there's plenty of neuroimaging studies claiming that there are inherent differences between the brain of men and women. This is plain trashy talk (neurotrash) and the jury is still out there whether there are inherent differences between the ways men and women behave. Interestingly, Rippon highlights how social and cultural expectations shape gendered behavior among children. Without taking such contexts into consideration, we can't even start talking about gendered differences. This article by Araathu is plainly sexist and should be taken down.

Reply 10 8

Murale   3 years ago

பால கணேஷ், நீங்க காதலிச்சிகிட்டிருக்கீங்க,இல்ல காதலிக்கப் போறீங்க. ரைட்டா?

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

தொழில்முனைவோர்பிரிட்டிஷ் நாடாளுமன்றம்பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைமாரி செல்வராஜ்இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது:எரிபொருள்டென்டின்கருத்துக் கணிப்பு செயல்பட விடுவார்களா?பீஷ்ம பிதாமகர்ரத்தன் டாடாயானைகள்தசை வலிசாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் வேண்டும்ஊசி குத்தும் வலிதோசை!புதிய பொருளாதாரக் கொள்கைதேசிய குடும்ப நலம்: நல்லதுரவிச்சந்திரன் அஸ்வின்எக்காளம் கூடாதுபிரதமர்துறவிஇந்தியா - சீனா பிரச்சினைகளின் வரலாறுஉணவு தானியங்கள்கருத்துச் சுதந்திரம்கொடூர சம்பவம்திமுகபிஎன்ஸ்மாயக் குடமுருட்டி: வெற்றிடத்தின் பாடல்கள்பெரும்பான்மைவாதம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!