கட்டுரை, அரசியல், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

மோடி அரசின் மாபெரும் மறைப்பு

ஜி.என்.தேவி
23 Sep 2022, 5:00 am
1

வான் இலிச் எழுதிய ‘டீஸ்கூலிங் சொசைட்டி’ (Deschooling Society -1970) மற்றும் மிஷேல் ஃபூக்கோவின் ‘டிசிப்லின் அண்ட் பனிஷ்’ (Discipline and Punish -1975) இரண்டு நூல்களும் சில வருட இடைவெளிக்குள் வெளியானவை என்பது தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. ஒன்று, பள்ளி என்பது அறிவுக்கான விநியோக அமைப்பு என்ற எண்ணத்தின் மீதான தாக்குதல், மற்றொன்று சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதற்கான அமைப்பாகச் சிறைச்சாலை இருக்கிறது என்ற கருத்தின் மீதான தாக்குதல். நவீனத்துவ சமுதாயத்தின் அடித்தளமாகக் கருதப்படும் கருத்துகள் மற்றும் நிறுவனங்களைச் சுற்றியுள்ள அறிவுசார் நோக்குநிலையை வடிவமைப்பதில் இந்த இரு சிந்தனையாளர்களும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். 

இந்த இரண்டு கருத்தாக்கங்களும் எந்தவொரு கொள்கைக்கும் எதிரானவை அல்ல - இலிச்சின் விஷயத்தில் அறிவு, ஃபூக்கோவின் விஷயத்தில் சமூக நல்வாழ்வு - ஆனால் அவை அந்தக் கொள்கைகள் நிறுவனங்களினூடாக வெளிப்படும்போது நிகழும் கேலிக்கூத்தை அம்பலப்படுத்தின. இரண்டு கருத்தாக்கங்களின் நிறுவன வெளிப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்துவதனூடாக, இலிச் மற்றும் ஃபூக்கோ ஆகிய இருவரும் நவீன உலகின் பல்வேறு தரிசனங்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையாக இருக்கும் கருத்தியலை வெளிப்படுத்தினர். நவீனத்துவத்தை உருவாக்கும் கருத்தியலைக் குறித்துக் கேள்வி எழுப்பினர். நவீன உலகில் இயல்பானது என்று நாம் நினைக்கும் விஷயங்களில் கொடூரத்தன்மை எப்படி ஊடாடியிருக்கிறது என்பதையும், தேசங்களை தேசமாக உருவாக்க அனுமதியளித்த மக்களிடமிருந்து அரசு எவ்வாறு தனது ஆரம்ப காலப் பண்பைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டுவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டியது. 

சொற்பிறப்பு

மக்கள் மத்தியில் அரசின் அணுகலை அதிகரிப்பதற்கான பல கருவிகளில் ஒன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. வெளிப்படையான, கருத்தியல் நோக்கம் எதுவும் இல்லாத வெறும் புள்ளிவிவர சேகரிப்பாக மட்டுமே தோற்றம் தரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்னும் நடவடிக்கை, தோற்றம் தருவதைப் போல எளிமையான ஒன்று அல்ல. வேர்ச்சொல் ஆய்வு ஒரு கருத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கு ஏதேனும் உதவியாக இருக்குமென்றால், ‘சென்சஸ்’ (census) என்ற சொல் ‘சென்சார்’ (censor) என்ற வார்த்தையுடன் நெருங்கிய சொற்பிறப்பியல் தொடர்பைக் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

கி.பி 5ஆம் நூற்றாண்டு வாக்கில் “மதிப்பீடு செய்வது, மதிப்பிடுவது, தீர்ப்பது” என்று பொருள்படும் ‘சென்செர்’ (censere) என்ற லத்தீன் சொல்லானது படிப்படியாக ‘தணிக்கை’ ஆனது. மத்திய கால பிரஞ்சு மற்றும் பழைய ஆங்கிலத்தில் அதன் தொடர்ச்சியான பயன்பாடு ‘தார்மீக நீதிபதி’ என்ற கூடுதல் பொருளைக் கொடுத்தது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் ஒருவரின் சமூக அந்தஸ்தில் அவருக்கு தேவாலாயத்துடன் இருக்கும் இணைப்பு ஒரு முக்கிய காரணியாக மாறிய காலகட்டத்தில் தார்மிகத் தீர்ப்புகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி 17ஆம் நூற்றாண்டில் 'தணிக்கையாளர்' என்று அழைக்கப்பட்டார். கத்தோலிக்க பிரான்ஸ் மற்றும் புராட்டஸ்டன்ட் இங்கிலாந்து ஆகியவற்றுக்கு இடையே இடைவிடாது நடந்த போர்கள் தணிக்கையின் அதிகாரத்துவ முக்கியத்துவத்தை அதிகரித்தன.

19ஆம் நூற்றாண்டில், நெப்போலியனுக்குப் பிறகு ஐரோப்பாவின் அரசியல் சூழலில், இந்த வார்த்தை இரண்டாகப் பிரிந்தது, ஒன்று ‘குடிமக்களை ஆய்வு செய்யவும் ஒடுக்குவதற்கும் பொறுப்பான அரசு அதிகாரி’, மற்றொன்று ‘குடிமக்கள் மற்றும் அவர்களின் சொத்துகளைக் கணக்கிடுதல்’. ஒன்று ‘சென்சார் போர்டு’ என்ற சொல்லில் நாம் புரிந்துகொண்ட ‘சென்சார்’ என்ற பொருளில் ஆனது, மற்றொன்று 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து இங்கே நாம் பார்த்துவரும் 'சென்சஸ்' என ஆனது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்

1860களில் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டபோது, காலனி ஆட்சியாளர்களின் நோக்கம், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய துணைக்கண்டத்தில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள் என்பதை அறிவது மட்டும் அல்ல. மதம், சாதி மற்றும் மரபுவாரியாக அவர்கள் எவ்வாறு துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவதாகவும் அது இருந்தது. 1857க்குப் பிறகு அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் 1860கள் ஒரு சிக்கலான தசாப்தமாக இருந்தது. ஐரோப்பாவில், பிராங்கோ-பிரஷியன் போர் அரசியல் சமன்பாடுகளை மாற்றியது, ‘தேசங்களின் சமூகத்தில்’ இங்கிலாந்துக்கு அதிகப் பொறுப்பை வழங்கியது. ஐரோப்பாவின் சூழலில் ‘தேசியவாதம்’ சட்டபூர்வமான தன்மையைப் பெற்றது. இந்தியாவில், ரயில் பாதைகளை அமைப்பதற்கும், தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் நிலம் தேடிய காலனிய ஆட்சியாளர்களுக்கு, இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருந்த சமூகங்களைப் பட்டியலிடுவது அவசியமானது. பழங்குடியினர் மற்றும் நாடோடி சமூகங்களைப் பட்டியலிடுவது அவசரமான தேவையாக மாறியது.

1830கள் மற்றும் 1840களில், வில்லியம் ஹென்றி ஸ்லீமன் (William Henry Sleeman) ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு மோதலையும் பதிவுசெய்வதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு :ஆபத்தான சமூக'ங்களின் பட்டியலைத் தொகுத்தார். இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ஸ்லீமனின் புத்தகங்கள் மூலம் ‘துகி’ (Thugee) என்ற தொன்மக்கதை மிகவும் பிரபலமாக ஆனது. அக்டோபர் 1871இல் முதன்முதலாகக் குற்றப் பரம்பரைச் சட்டத்தை (Criminal Tribes Act) இயற்றியபோது அவரது பட்டியலை லார்ட் மேயோ பயன்படுத்திக்கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு, 1872இல் மேயோ கொல்லப்பட்டார். ஆனால் இந்தியாவின் ஆட்சியாளர்களின் நீடித்த பயன்பாட்டிற்காக அவர் ஒரு கருவியை விட்டுச் சென்றார். அதுதான் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. 1872இல் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட தசாப்த கால மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ‘அரசின் கொள்கை’யைத் தீர்மானிப்பதற்கான ஒரு கருவியாக இணையற்ற இடத்தைப் பெற்றது.

முதல் விரிவான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1881இல் நடத்தப்பட்டது. ஆபத்தான விலங்குகள் முதல், கிராமங்களின் எண்ணிக்கை வரை, தொற்றுநோய்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை முதல் மத நிறுவனங்களின் எண்ணிக்கை வரை – இப்படி கணக்கெடுக்கப்பட்ட அம்சங்கள் மாறிக்கொண்டே இருந்தன.

பெரிய இடைவெளிகள், பிழையான கணக்கீடுகள் மற்றும் குறைபாடுள்ள வழிமுறைகள் முதலானவை இருந்தபோதிலும், கணக்கெடுத்தல் ஒரு உண்மை மதிப்பைப் பெற்றது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் எழுத்தறிவு மிகக் குறைவாகவும், மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கையின் அளவு சிறிதாகவும் இருந்த காலத்தில் அது இன்னும் கடினமானதாக இருந்தது.

காலனித்துவ ஆட்சியின்போது நடைபெற்ற மக்கள்தொகைத் தரவுகளின் கண்ணோட்டத்தில் மிக முக்கியமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1931 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகும், இது சாதிகள் மற்றும் சமூகங்கள் பற்றிய விலை மதிப்பற்ற தகவல்களைச் சேகரித்தது. இப்படியானதொரு சமூகவியல் கணக்கெடுப்பு மேற்கொள்ளவேண்டும் என்ற யோசனைக்கான பாராட்டில் பாதியை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திறனுக்கும், இன்னொரு பாதியை 1920களில் ஐரோப்பிய அறிஞர்கள் ஏற்படுத்திய பெரும் முன்னேற்றத்தின் காரணமாக மானுடவியல் என்பது முக்கியமானதொரு அறிவுத் துறையாக மாறியதற்கும் தர வேண்டும்.

திட்டமிடலுக்கான கருவி

சுதந்திரத்திற்குப் பிறகு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் பணி உள்துறை அமைச்சகம் மற்றும் ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் மற்றும் சென்சஸ் கமிஷனருக்கு வழங்கப்பட்டது. இப்படிதான், 1948ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தை (Census of India Act) இயற்றியுள்ளோம், மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியானது நிர்வாகத்திற்கு எவ்வளவு அவசியமானதாகக் கருதப்பட்டது என்பதற்கு இந்த சட்டம் ஒரு சான்றாகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் அதிகரித்தது, பொருளாதார வளர்ச்சியின் மாதிரியானது ஐந்தாண்டுத் திட்டங்களை மூலைக் கல்லாகக் கொண்டிருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து வரும் தரவு திட்டமிடலுக்குப் பயனுள்ளதாக இருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முறைகளில் இடைவெளிகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், மக்கள்தொகை, கல்வியறிவு, விவசாயம் மற்றும் மொழி போன்ற கேள்விகளில் ஒரு தெளிவான நோக்கை உருவாக்கிக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சேகரிக்கப்படும் தரவுகளை ஒப்பீடு செய்வது பயன்பட்டது. எனவே, வளர்ச்சி மற்றும் சமூக மாற்றம் குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை ஊக்குவித்ததற்காக மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கும் நன்றி செலுத்துவதில் தவறில்லை.

பல நூறு அரசுகளை ஒன்றிணைத்து ஒரு தேசமாக மாறிய, உலகின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், ‘புறவயமான’ தரவு சேகரிப்பு அவசியம். இந்தியா ஒரு ஜனநாயக வெளி என்ற கருத்தை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட பிற நிறுவனங்களின் தோற்றத்திற்கு ஏற்ப, இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மக்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு பயிற்சியாக மாற்றுவதற்காக மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் முடிவுகள் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, பல்வேறு மாநிலங்களில் கல்வியறிவு விகிதங்கள் பற்றிய தரவுகள் எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பதில் உதவின, இது காலப்போக்கில் அந்த இலக்குகளை அதிகரிப்பதற்கும் பங்களிப்புச் செய்தது. இடஒதுக்கீடு போன்ற மக்களின் உரிமைகள் சார்ந்த கொள்கைகளையும், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற மக்கள் நலன்கள் சார்ந்த கொள்கைகளையும் உருவாக்குவதற்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு பயனுள்ளதாக இருந்தது. அதைவிட முக்கியமானது என்னவென்றால், பல்வேறு ஆர்வலர்களின் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாயிகளின் குழுக்கள் மற்றும் அரசாங்கத்தின் செயல்திறனை விமர்சிக்கும் ஊடகங்கள் அனைத்தும் தங்கள் பிரச்சாரங்கள், செயல்பாடுகள் மற்றும் வாதங்களைக் கட்டியெழுப்புவதற்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவையே பெரிதும் சார்ந்திருந்தன.

இவ்வாறு பல தசாப்தங்களாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் இந்தியாவில் சமூக நலன் மற்றும் ஜனநாயகத்தைக் கணிசமாக ஆழப்படுத்த உதவியிருக்கிறது. இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவின் சிறந்த பயன்பாடு எது எனக் கூறினால் அது சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் தங்களது வாதங்களுக்கு நம்பகத்தன்மையை நிறுவ அந்தப் புள்ளிவிவரத் தரவுகளைப் பயன்படுத்தியதைக் கூறலாம்.

இருப்பினும், இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்போதுமே அளவு என்னும் விதத்தில் சவாலாகவே இருந்தது. அதிக மக்கள்தொகை மற்றும் புவியியல் பரப்பு ஆகியவை ரெஜிஸ்ட்ரார் ஜெனரலுக்கும், சென்சஸ் கமிஷனருக்கும் இந்தக் கணக்கெடுப்பை ஒரு கொடுங்கனவாகவே மாற்றிவிட்டன. மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு அதிக எண்ணிக்கையிலான பள்ளி ஆசிரியர்களை கணக்கெடுப்பாளர்களாகச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் பல்வேறு மொழி பின்னணியில் இருந்து வந்தவர்கள்; சில மாதங்களில் அவர்களை 'பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்'களாக மாற்றுவது மிகவும் சிக்கலான சவாலாக இருந்தது.

தசாப்த மாற்றம்

கடந்த பத்தாண்டுகளில், ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. வயது, மதம், வீட்டுச் சொத்துகள், திருமண நிலை, பாலின நிலை – இப்படி பல புதிய தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றுமே தனித்தனியாகக் கணக்கெடுப்பு செய்யத் தகுதியானவை. எனவே, தசாப்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, உண்மையில், ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பல கணக்கெடுப்புகளின் கலவையாகவும், குறுகிய காலத்தில் ‘முடிக்கப்பட்ட தரவாகவும்' அமைந்துபோனது. பெரிய அளவிலான தரவுகளைத் தொகுத்தல், அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான தயாரிப்பு, கேள்வித்தாளில் உள்ள தெளிவற்ற தன்மைகளை நீக்குவதற்கான விவாதங்கள், என்று இவை அனைத்துமே நேரத்தைக் கோருபவை.

ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலும் இரண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளுக்கு இடையேயான ஒன்பது ஆண்டு இடைவெளி என்பது மிகவும் குறைவு. எனவே, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சில அமைச்சகங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பஞ்சாயத்துகள் மற்றும் தாலுகா அளவிலான அரசு அலுவலகங்கள் மூலம் தங்கள் சொந்த கணக்கெடுப்பு முறைகளை உருவாக்கத் தொடங்கின. உண்மையான தரவுகளைப் பெறுவதற்காகப் பல்வேறு கமிஷன்களால் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசாங்கச் செயல்பாடுகளின் விரிவாக்கம் மற்றும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் வலையமைப்பு ஆகியவை குறுகிய காலத்தில் அதிக அளவிலான தரவு உள்ளீடுகளை உருவாக்க வழிவகுத்தது, இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தேவையான புள்ளிவிவரத் தகவல்களைப் பெறுவதற்கு போதுமானதாக இல்லை. 1980களில், ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் அலுவலகத்தின் மீது அரசாங்கத்தின் சார்பு கணிசமாகக் குறைந்துவிட்டது.

1990களில் இருந்து, இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தகவல் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியின் மறைமுகமான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பாலும், நுகர்வு சாதன உற்பத்தியாளர்கள், ஆட்டோமொபைல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சேவைகள் வழங்குவதற்கான ஆலோசனை நிறுவனங்கள் முதலான தனியார் நிறுவனங்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலம் திரட்டப்படுவதைவிட சிறந்ததும், அண்மைக்  காலத்தியதுமான தரவுத் தொகுப்புகளைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. 

காணாமல் போன பயிற்சி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தாலும், நாட்டில் மிகப் பெரிய தரவு சேகரிப்புப் பயிற்சி தற்போது வழக்கற்றுப் போய்விட்டது என்பது இந்திய ஜனநாயகத்தின் துயரம் தோய்ந்த முரண் நகையாகும். இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காலாவதியாகிப்போய்விட்டது என்பதை பொது மக்கள் உணரத் தொடங்கிய அதேநேரத்தில்தான், ஒன்றிய பாஜக அரசாங்கம் 2021ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு முடிவு செய்தது. இது அழுக்குத் தண்ணீருடன் சேர்த்து குழந்தையை வீசி எறிந்ததற்கு ஒப்பானதாகும்.

இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களுக்கு தரவு மோசடி செய்வது என்பது என்னவென்றே தெரியாது. உதாரணமாக, 1971ஆம் ஆண்டில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10,000க்கும் குறைவான மக்கள் பேசும் மொழிகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தது, அதேசமயம் 1961ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் தங்கள் தாய்மொழிகளாகத் தெரிவித்த மொழிகளின் பெயர்கள் அனைத்தும் வெளியிடப்பட்டன. கல்வியறிவு பற்றிய புள்ளிவிவரங்களை இறுதிசெய்யும்போது சிறிய அளவில் ‘அட்ஜஸ்ட்’ செய்வது எப்போதும் நடப்பதுதான். ஆனால், தரவுகளை மக்களுக்குக் கிடைக்காமல் தடுப்பதில் பாஜக அரசு வேறு எந்த அரசாங்கத்தையும் மிஞ்சியுள்ளது. அதன் பிரச்சாரத்திற்கும் நாட்டிலுள்ள சூழ்நிலைக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை மறைப்பதற்காக, அது தரவுகளை ஒப்பேற்றும் முறையைக் கைக்கொண்டது.

பொருளாதாரம், சமூக நலன், சமூக அமைப்பு மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விவாதத்திற்கான தரவுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் செயல்பாடு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. கரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் குறித்து, சர்வதேச நிறுவனங்களிலிருந்து நம்பகமான மதிப்பீடுகள் வெளிவந்தபோது, உண்மையான புள்ளிவிவரங்களை பாஜக அரசு மறைத்தது.

2022இல் மேற்கொள்ளப்படவிருந்த 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை கைவிடுவதற்கு வலுவான காரணம் எதுவும் இல்லை என்றபோதிலும், சென்சஸ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் முடிவு மக்களிடம் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், அவ்வாறு நடக்கவில்லை என்பது, ‘சென்சார்’ என்ற வார்த்தையின் இரண்டுவிதமான அர்த்தங்களை, பல நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்த அரசாங்கம் மீண்டும் எவ்வாறு ஒன்றாக்கி இருக்கிறது என்பதை சுட்டுகிறது. எதிர்காலத்தை நோக்கிப் பயணம் போவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டே நாட்டைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் பாஜகவின் செயல்திட்டம், சென்சஸ் கணக்கெடுப்பு மூலம் தரவுத் தொகுப்பைப் பெறும் பொதுமக்களின் உரிமையை இல்லாமல் ஆக்குவதன் மூலம் நிறைவேறியிருக்கிறது. 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஜி.என்.தேவி

கணேஷ் என்.தேவி, ‘தி பிப்பிள்ஸ் லிங்விஸ்ட்டிக் சர்வே ஆஃப் இந்தியா’வின் முதன்மை ஆசிரியர். பேராசிரியர், எழுத்தாளர். மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் மூன்று மொழிகளில் எழுதுகிறார். இலக்கிய விமர்சனம், மானுடவியல், கல்வி, மொழியியல் மற்றும் தத்துவம் எனப் பல துறைகள் சார்ந்தும் தொண்ணூறு புத்தகங்களை எழுதியும் தொகுத்தும் இருக்கிறார்.

தமிழில்: ரவிக்குமார்

2

1





1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

இந்த கட்டுரை மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் பின்னுள்ள தத்துவங்களையும் நடைமுறைகளையும் அறிய முடிகிறது. தற்போதய நடுவணரசு மக்கள்தொகை கணக்கடுப்பைத் தவிர்ப்பதின் உள்நோக்கம், சில உண்மைகள் அவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பது மட்டுமல்ல, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் விளைவாக ஏற்பட்டதே! அதுமட்டுமல்ல, கடந்த ஏழு ஆண்டுகளில் சிதைக்கப்பட்ட அரசமைப்பு நிறுவனங்களின் வரிசையில் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனத்தையும் சேர்ப்பது தறபோதைய ஆட்சியாளர்களுக்கு கடினமான காரியமல்ல.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒடிஷா அடையாள அரசியல்டெல்லி பச்சையை நம்மூருக்குக் கொண்டுவர முடியாதா?பயன்பாடு மொழிபச்சிளம் குழந்தைகள்பல் வலிக்கு என்ன செய்வது?உரிமைதமிழக அரசுடன் மோதும் ஆளுநர்நன்மாறன்மதமும் மத வெறியும்நம்பிக்கைதி வயர் கட்டுரைwriter samas thirumaகாலை உணவுத் திட்டம்மூலநோய்சாரு நிவேதிதா சமஸ்குடும்ப அமைப்புநவ நாஜிகள்களைப்புசமூக விலங்குப.சிதம்பரம் அருஞ்சொல்விஷ்ணு தியோ சாய்தேசப் பாதுகாப்புகூட்டணி முறிவுஐ.ஏ.எஸ்.விடுப்புஊட்டச்சத்துக் குறைவுமாயக் குடமுருட்டி: அவட்டைராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து?தேசிய அரசுஒடுக்குமுறைத் தேர்வுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!