தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.
தொழில் முனைவோருக்குப் பொருந்துமா?
@ உறவுகள் எப்போது தீர்ந்துபோகிறார்கள்?
இந்தக் கதையாடல் முழுக்க ஒருவரின் பார்வை மற்றும் அபிப்பிராயம் என்பது வாசகரின் நினைவில் இருக்க வேண்டியது அவசியம். மனித உறவுகளைப் பொறுத்தவரை, அதிலும் ஆண் - பெண் இணையுறவுகளை இது இப்படித்தான் என்றெல்லாம் ஒரேயடியாக வரையறுத்துவிட முடியாது. சில பொதுமைப் பண்புகளை வைத்து மண்டையில் குட்டு வைப்பதும், முதுகில் தட்டிக் கொடுப்பதும் முதிர்ச்சியடையாத செயல்கள். நீண்ட நெடிய இந்த வாழ்க்கையில் மனித உறவுகள் எந்தச் சட்ட ஏட்டின் படியும் (copybook) நெறிமுறைகளின் படியும் அமைந்து விடுவதில்லை. ஓஷோ சொல்வது போல, Life is not a problem to be solved but is a mystery to be lived and learnt. எப்படி இருந்தாலும், அனுஷா நாராயணன் இந்தத் தொடரில் கைவசப்படுத்தியிருக்கும் தொனி வியப்பிற்குரியது.
- பிரபு
@ உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?
ஸ்ரீதர் சுப்ரமணியன் கட்டுரை பணிபுரிவோருக்கு வேண்டுமானால் சரியாக வரலாம். சுய தொழில் முனைவோர், அதுவும் ஆரம்ப கட்டத்தில் இருப்போருக்கு, மொபைலை சைலண்ட் மோடில் வைத்துக்கொண்டு ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பது வரும் வாய்ப்புகளை வலிந்து நழுவவிடுவதாகிவிடும். நானும் இப்படிச் செய்து பல வாய்ப்புகளை நழுவவிட்டவன். முந்தைய காலம் போல, வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் காத்திருப்பதில்லை. ஒருவர் குறிப்பிட்ட நேரம் அழைப்பை எடுக்கவில்லையென்றாலோ, தவறவிட்ட அழைப்புகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப அழைக்கவில்லையென்றாலோ, அடுத்த சேவையாளரை தேடிப்போய் விடுகிறார்கள். மும்பையில் சில வருடங்கள், மென்பொருள் சேவைத்துறையில் பணிபுரிந்தேன். உள்ளூர் அணியை விட, தமிழகத்திலிருந்து சென்ற அணியின் விற்பனை விகிதம் எப்போதும் 50% கூடுதலாக இருக்கும். காரணம், மும்பைவாசிகளின் அப்போதைய(2007-2010) பழக்கம், மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை மொபைல் ’அட்டெண்ட்’ செய்யமாட்டார்கள். (இப்போது எப்படியென்று தெரியாது). ஆனால் வணிகர்களுக்குச் சேவை தேவைப்படும் நேரம் எதுவென்று அவர்களுக்கேத் தெரியாது. அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் சேவையளித்ததால், நான் பங்கு கொண்ட அணியின் விற்பனை நன்றாக இருந்தது. அதே நேரத்தில், எங்களுடைய பொழுதுபோக்கு நேரத்தில் வரும் அழைப்புகளை சில விநாடிகளில் சூழ்நிலையை விளக்கிவிட்டு மறு வேலைநாளில் அழைக்கிறோம் என சொல்லி பொழுதுபோக்கினைத் தொடர்வோம். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் எல்லாமே, நன்கு வளர்ந்துவிட்ட அல்லது (தனியாரில்) உயர்பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இரண்டாம் நிலை - அதற்கு கீழுள்ள - நகரங்களில் பணிபுரிவோருக்குப் பொருந்தாது. பொதுவாகவே, ஐரோப்பிய பாணி நம்மூருக்கு அப்படியேப் பொருந்துமா என்பது சந்தேகமே.
- சிவக்குமரன் ராமலிங்கம்







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.