கட்டுரை, தொடர், வாழ்வியல் 7 நிமிட வாசிப்பு

வேலை உங்களை எரிக்க அனுமதிக்காதீர்கள்!

ஸ்ரீதர் சுப்ரமணியம்
04 Dec 2021, 5:01 am
4

ங்கிலாந்தில் பணிபுரிந்தபோது எங்கள் டீமில் டிம்* என்று ஒருவர் இருந்தார். நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவர் திடீரென்று சொதப்ப ஆரம்பித்தார். யுஐ டிசைனராக இருந்த அவரிடம் இருந்து, டிசைன்கள் அரைகுறைத் தரத்துடன் வர ஆரம்பித்தன. ஏதாவது கமென்ட் சொன்னால் அதை வைத்து ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார். "என்னால் இவ்வளவுதான் முடியும் ஸ்ரீ" என்று சிடுசிடுப்பார். ரொம்ப அழுத்திக் கேட்டால், கோபக் கணையுடன் எதிர்மறை கமென்ட்டுகள் பாய்ந்து வரும். ஒருகட்டத்தில் இந்த ஆளை வேலையை விட்டுத் தூக்கிவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். டிம்மைப் பற்றி என் மேனேஜரிடம் சொன்னேன். முழுவதையும் நிதானமாகக் கேட்ட அவர், "டிம் ஒருவேளை 'பர்ன் அவுட்' ஆகி இருக்கலாம்" என்றார்.

அது என்ன பர்ன் அவுட்?

தொடர்ந்து இடைவெளியின்றி எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தி, விரைவிலேயே எரிந்து வடிந்து போகும். அதேபோல மனிதர்களும் இடைவெளியின்றி தொடர்ந்து வேலை செய்துகொண்டேயிருந்தால், ஒருகட்டத்தில் உளவியல்ரீதியாக, 'எரிந்து போன' நிலைக்குப் போய்விடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் 'பர்ன் அவுட்'  (Burn Out) என்று சொல்கிறார்கள். இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து இடைவெளியின்றி வேலை செய்துகொண்டேயிருந்த டிம் எரிந்துபோய்க் கிடந்தார். அதைப் புரிந்துகொண்டு நிறுவனத்தின் மனித வளத் துறை மேலாளரை அவருடன் பேச வைத்து, ஒரு மாதம் விடுப்பு கொடுத்து அனுப்பினோம். கூடவே ஓர் உளவியல் நிபுணரையும் கலந்தாலோசிக்கச் சொன்னோம். ஒரு மாத விடுமுறை, ஒன்றரை மாதமாக அதிகரித்தது. விடுமுறை முடிந்து திரும்பிய டிம், 'பழைய பன்னீர்செல்வம்' ஆக மாறி வந்தார். முழு உற்சாகத்துடன், தான் முன்னர் செய்துவந்த அதே உயர்தர படைப்புத் திறத்தில் தன் டிசைன் வேலைகளைச் செய்யலானார்.

உடல் உழைப்பு செய்பவர்களுக்கு மட்டும்தான் இடைவேளை தேவைப்படும் என்று நம்மில் பலர் நம்புகிறோம். அறிவு-சார் உழைப்பைப் போடுபவர்களுக்கு என்ன ஓய்வு வேண்டிக்கிடக்கிறது? சும்மா ஜாலியாக சுழல் நாற்காலியில் அமர்ந்துதானே வேலை செய்கிறார்கள் என்றும் தோன்றலாம். ஆனால் அவர்களும் பாதிப்படைகிறார்கள் - எரிந்துபோகிறார்கள். நிறைய பேருக்கு, நாம் உளவியல்ரீதியாக எரிந்துபோயிருக்கிறோம் என்பதுகூடத் தெரிவதில்லை. உடலில் காயம் வந்தால் கண்டுபிடித்து மருந்து போடலாம். உள்ளத்தில் காயம் வந்தால் என்ன செய்வது? "சே, இதெல்லாம் ஒரு மேட்டரா சார்?" என்று நீங்கள் கேட்கலாம். இது அவ்வளவு எளிய பிரச்சினை அல்ல. சிகரெட், மதுபோல அதீத உழைப்பும் உடல் நலத்துக்குத் தீங்கானது. உயிருக்கே ஆபத்து விளைவிப்பது.

மதுவுக்கு அடிமையாவதற்கு 'ஆல்கஹாலிஸம்' (Alcoholism) என்பதுபோல வேலைக்கு அடிமையாவதற்கு 'வொர்கலிஸம்' (Workaholism) என்று சொல்கிறார்கள். இந்த விஷயம் முதலில் ஜப்பானில்தான் கண்டறியப்பட்டது. 

வொர்காலிஸ கொடுமை

உலகிலே கடுமையான உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள் ஜப்பானியர்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். 1990களில் அங்கே, பல ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போதே அலுவலக நாற்காலியில் விழுந்து இறந்துபோயிருக்கிறார்கள். இதனை ஜப்பானிய மொழியில், 'கரோஷி' என்று அழைக்கிறார்கள். 'அதீத வேலை காரணமாக இறப்பது' என்று அர்த்தம்.

இப்படி கரோஷியில் இறப்பதை சில காலம் பெருமையாக கருதிக்கொண்டிருந்தார்கள். அதாவது எல்லையில் ராணுவ வீரர்கள் மரிப்பது தியாகமாக, பெருமையாக கொண்டாடப்படுகிறது அல்லவா?! அதுபோல இதையும் ஒரு மெடல் கிடைத்ததுபோலத்தான் அணுகினார்கள். பின்னர்தான், இது ஒன்றும் அவ்வளவு பெருமைக்குரிய விஷயம் அல்ல, ஒரு ஊழியனை 'உசுப்பேத்திவிட்டு கொலை செய்கிறோம்' என்ற தெளிவு நிறுவனங்களுக்கு வந்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதீத அலுவலக உழைப்பு காரணமாக ஆண்டுக்கு சுமார் 7.5 லட்சம் பேர் உலகெங்கும் இறக்கிறார்கள். அப்படி கவலைக்குரிய எண்ணிக்கையில் கரோஷி இறப்புகள் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்த மாதிரியான புள்ளி விபரங்களில் ஒன்றாக ஆகிவிட நம் யாருக்குமே விருப்பம் இருக்காதுதானே? அப்படியானால் இந்த 'எரிந்து போவதை' எப்படித் தடுப்பது? அதற்கு முன்பு நாம் எரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை எப்படிக் கண்டறிவது?

அதீத வேலையில் பாதிப்புற்று இருப்பவர், ஒருவித தோல்வி மனப்பான்மையில் உழலுவார். தனக்கு இருக்கும் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இல்லை என்று நம்பிக்கொண்டிருப்பார். எதற்கும் ஊக்கமின்றி ஏதோ இயந்திரம்போல வாழ்வைக் கழித்துக்கொண்டிருப்பார். எதிர்மறைச் சிந்தனைகள் அவரை ஆக்கிரமித்து இருக்கும். பிறந்து இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து என்ன சாதித்தோம் என்பதான ஒரு விரக்தி மனப்பான்மை அவரைக் கவ்விக் கிடக்கும்.

அப்படி ஒரு நிலை உங்களுக்கு இருந்தால் என்ன செய்வது?

பேசுங்கள்:

உங்கள் நண்பர்களுடன், காதலன், காதலி, கணவன், மனைவி யாருடனாவது பேசுங்கள். உங்கள் பிரச்சினைகளை, அலுவலகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை விவாதியுங்கள். இவர்கள் உங்களுக்கு அறிவுரை தராமல், உங்களை மதிப்பிடாமல் அணுகுபவர்களாக இருக்க வேண்டும். அப்படி யாரும் இல்லையேல் நல்ல உளவியல் ஆலோசகரை நாடலாம்.

தனித்திருங்கள், விழித்திருங்கள்:

தினமும் கொஞ்சம் தனியாக இருங்கள். அதற்காக எல்லோரையும் விட்டுவிட்டு காட்டுக்குப் போக வேண்டாம். உங்கள் சிந்தனைகளைச் சேகரிக்க, அவற்றை அலச அல்லது எதுவும் யோசிக்காமல் சும்மா இருக்க கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். சும்மா இருப்பதன் பலன்கள் பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன்.

வேலை-வாழ்வு எல்லை வகுத்தல்:

வேலை அலுவலகத்தோடு நின்றுவிட வேண்டும். வாழ்வின் நேரத்துக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது. அப்படி ஓர் எல்லை வகுத்து செயல்படுங்கள். தேவைப்பட்டால் ஓரிரு வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உளவியல் ஆலோசகரை ஆலோசிப்பதானால், அவரேகூட உங்களுக்கு விடுமுறைக்கான மருத்துவச் சான்றிதழை வழங்க முடியும்.

உங்களை மன்னியுங்கள்:

பல முறை நாம் நம்மிடமே கடுமையாக நடந்துகொள்வதை நாம் உணருவதே இல்லை. நேரத்துக்கு ஒரு இடத்துக்குப் போவதில்லை, ஒரு வேலையை திறன்பட முடிப்பதில்லை, அதைச் செய்வதில்லை, இதைச் செய்வதில்லை என்று நம்மை நாமே தொடர்ந்து கடிந்துகொண்டேயிருப்போம். இதுவேகூட பல நேரம் நம்மை உளவியல்ரீதியாகப் பாதிக்கிறது. இதை நிறுத்தினாலே வாழ்வில் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நாம் வெறும் மனிதர்கள்தான். பல்வேறு குறைபாடுகளும், பிரச்சினைகளும் கொண்டவர்கள். தவறுகள் வாழ்வில் சகஜம்தான் என்று அணுகுங்கள். ஏதாவது சொதப்பினால் 'இட்ஸ் ஓகே ப்ரோ, ரிலாக்ஸ்' என்று உங்களை நீங்களே சொல்லிக் கொண்டு கடந்து போக முயலுங்கள்.

உங்கள் தேவைகளையும் கவனியுங்கள்:

பல நேரம் நாம் நம்மை கவனித்துக்கொள்வதே இல்லை என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுதான் உண்மை. குறிப்பாக குடும்ப சூழலில் புழங்குபவர்கள், பிறரின் தேவைகளை முன் நிறுத்தியே வாழப் பழகிப் போனவர்களாக இருக்கிறார்கள். வேலையில் மேனேஜர் சொல்வதுதான் சரி, வீட்டில் அம்மா, அப்பா, மனைவி அல்லது கணவன் தேவைகள்தான் பிரதானம் என்று மாறி மாறி வாழ்ந்ததில், உள்ளே அழுந்திப் போயிருக்கும் சுயம் திடீரென ஒரு நாள் பொங்கி எழும். பல நேரம் இதுவும் எரிந்துபோதலுக்கு காரணமாக இருக்கிறது. நிறுத்தி நிதானமாக உங்கள் தேவைகளையும் கொஞ்சம் கவனியுங்கள். அதற்கும் நேரமும் நிதியும் ஒதுக்குங்கள்.

கரோஷி என்பது சின்ன விஷயம் இல்லை; உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்று பார்த்தோம். உயிர் போகிறதோ இல்லையோ, ஆனால் உளவியல்ரீதியான எரிதல் மூலம் வாழ்வின் தரம் கண்டிப்பாக பாதிக்கப்படுகிறது. நாம் எரிந்து கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் வீடு, ஆபீஸ் என்று வாழ்வைத் தொடரும்போது நாமும் நம் சுற்றமும் பாதிப்புறுகிறோம். அதைக் கொஞ்சம் கவனமாக கண்டறிந்து, அதற்கு தீர்வுகள் கண்டு சரி செய்தால் நம் வாழ்வின் தரம் உயரும். நமது குடும்பத்தினரும் மகிழ்ச்சியுறுவார்கள். வேலையின் தரம் கூடுவதால், அலுவலகத்திலும் நமக்கு வெற்றிகள் சேரும்.

எரிதலை நிறுத்துவோம். மெழுகுவர்த்தியை அவ்வப்போது அணைத்து வைத்துப் பாதுகாப்போம்.

(* டிம் அவர் உண்மைப் பெயர் அல்ல.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.


2


பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   3 years ago

It is surprising that India is one of the countries in which burn-out deaths are high! A deeply religious country, India is, contradicts the notion that religiosity and faith in Gods of everyone's choice are having tremendous effect on psychological well-being of its people. But in realty, situation is otherwise and burn-outs are high. More than the religious aspects of life, new economic policies-LPG are having tremendous impact on the people to compete and survive. Supposed to be modern, lifestyles of today and undue pressure at the work-spots are emerging as silent killers.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Kannan   3 years ago

burnout issue is much more than what has been talked here. this is just skimming the surface. the concept of work, why we work, what is life, the purpose of it, the meaning of it need to be the fundamental questions that would lead us to the answer... take for example why are people resigning en masse in the world now? most stress or burn out at work is due to the insecurities created by the current work culture and corporations' that have only profit as their goal, not people or society.... and this is compounded by a unsupported social welfare network by the governments (mostly in USA and developing countries and far less in Europe due to labor security) unless this changes burn outs and stress would continue....

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

panneerselvam Marimuthu   3 years ago

Good one.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 years ago

One of the best advice. Thank you ஸ்ரீ சர்.. அரசு அலுவலக( சில வகை மட்டும் ) /மருத்துவமனையில் ஆள் பற்றாக்குறை மற்றும் deadline வைத்து டார்கெட் முடிக்க சொல்லி.... வேலை யை அலுவலகம் அருகே வைத்து விட்டு வெளியே வரும் வழி யை கூறுங்களேன். நன்றி

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சிறிய மருத்துவமனைகள்ரிலையன்ஸ் நிறுவனம்காவிரி நதிமது வகைகள்முடித்துவிட்டோம்முத்துசாமி பேட்டிவினைச்சொல்75 ஆண்டுகளில் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்ல முடியாதா?ராஜாஜிபரம்பரைக் கோளாறுமார்க்சிஸ்ட் கட்சி குற்றங்களும்சேரன்வட இந்திய மாநிலங்கள்கௌதம் அதானிதரவுகள்ட்விட்டர் சிஇஓ பரக் அகர்வால்சக்ஷு ராய் கட்டுரைஆர்.எஸ்.எஸ்.பாலியல் வண்புணர்வுஹைதராபாத்வேத காலம்அரசியல் விழிப்புணர்வுஅருஞ்சொல்.காம்டாக்டர் ஜீவா விருது சமஸ் பேட்டிஅசல் மாமன்னன் கதைவாட் வரிபொதுச் செயலாளர்2024 மக்களவைத் தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!