வாழ்வியல், இரு உலகங்கள் 10 நிமிட வாசிப்பு
உறவுகள் எப்போது தீர்ந்துபோகிறார்கள்?
ஒரு காதலன் அல்லது காதலி தீர்ந்துவிடுவதாகச் சொல்லும்போது பலருக்கும் ரொம்பவும் முகத்தில் அறைந்தாற்போல் இருக்கிறது இல்லையா? ஏன் அல்லது எப்போது அல்லது எப்படி ஒருவர் தீர்ந்துபோய்விடுபவராக இன்னொருவருக்குத் தோன்றுகிறார்?
Ω
கொல்கத்தா - ஹௌரா இரட்டை நகரங்களுக்கு இடையே பாயும் ஹூக்ளியில், தண்ணீர் இல்லாதுபோகும் நாட்களை நான் பார்த்ததே இல்லை. காளி கோயிலுக்கு பூஜை நாட்களில் செல்லும் பெண்கள் ஹூக்ளியில் நனையாமல் வர மாட்டார்கள்.
பூஜை நாட்களை ஒட்டி இங்கு நடக்கும் நடனக் கொண்டாட்டங்களில் ஹூக்ளியே புடவைக் கட்டி வந்து ஆடுவதாக எனக்குத் தோன்றுவது உண்டு. பூஜை நாட்களில் ஹூக்ளியில் தண்ணீரை அளவு எடுத்தால், கரை புரண்டு ஓடுவதாக நீரியல் நிபுணர்கள் சொல்வார்கள். அதே பூஜை நாட்களில் ஹூக்ளி வறண்டுவிட்டதாகச் சொல்லி, வெறித்த கண்களோடு அதில் இறங்கிய பெண்களின் கதை எனக்குத் தெரியும்.
தீர்ந்துபோதல் முற்றிலும் அகம் சம்பந்தப்பட்ட விஷயம். வலியை நீங்கள் அனுபவித்திருந்தால், உங்களாலும் உணர முடியும்.
Ω
வெகு சமீபத்தில் கவிஞர் ஃப்ரான்சிஸ் கிருபா மரணித்தார். நிறைய இரங்கல் குறிப்புகளை அவர் சார்ந்து வாசிக்க முடிந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் என்னுடைய ஜூனியர் ஒருத்தி ஃப்ரான்சிஸ் கிருபா எழுத்துகளைப் பித்து பிடித்ததுபோல வாசித்துவந்தாள். பலர் - குறிப்பாக பெண்கள் - ஃப்ரான்சிஸ் கிருபாவைப் பற்றியும், அவரது ‘கன்னி’ நாவலைப் பற்றியும் சிலாகித்துப் பேசுவது உண்டு.
எனக்குத் தமிழில் பெரிய வாசிப்பு கிடையாது என்றாலும்கூட ‘கன்னி’ மிகப் பிடித்தமான நாவல். அதில் வருகிற சாராவைப் போலக் காதலிக்கப்பட யாருக்குத்தான் பிடிக்காது? பாண்டியைப் போல ஒப்புக்கொடுக்கிற காதலனை யார்தான் கனவு கண்டிருக்க மாட்டார்கள்!
நான் என் கணவரிடம் சொன்னேன், “காந்தியைப் பார்க்கும்போது நமக்கு அவர் மீதான மரியாதையைத் தாண்டி, அவர்போல வாழ முடியாத ஏக்கமும் எரிச்சலும் அந்தரமாக எழும் இல்லையா? அது போன்ற ஓர் உணர்வு எனக்கு ஃப்ரான்சிஸைப் பார்க்கும்போது தோன்றும்!” எவரைப் பற்றியும் கவலை கொள்ளாத, சமூக மதிப்பீடுகளைப் புறக்கணிக்கிற ஒரு தன்னிச்சையான வாழ்வாகவே ஃப்ரான்சிஸ் கிருபாவின் வாழ்க்கை எனக்குத் தோன்றுகிறது. தான் விரும்பிய விஷயத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கிற வாழ்வு அது. ‘கன்னி’யின் நாயகனும் அப்படிப்பட்டவன் தான். எதற்காக இதை எழுதுகிறேன்? அவனுடைய காதல் தீர்ந்துபோகாததாக இருக்கிறது.
Ω
இது ரொம்பவும் ரொமான்டிசைஸிங்காக இருப்பதையும் நான் உணர்கிறேன். எப்படித் தோன்றுகிறதோ அப்படியே எழுதுவதையே இங்கு கடைப்பிடிக்கவும் எண்ணுகிறேன்.
தன்னையே மறந்து ஒரு விருப்பத்திற்கு ஒப்புக்கொடுக்கிற சொகுசு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது தேவையும் இல்லை. அன்று அலுவலகத்தில் மதிய உணவின்போது உறவுகள் பற்றிய ஒரு சம்பாஷனை. என் அஸாம் தோழி ப்ரியங்கா எப்போதும் சொல்வாள், “ஏய் அனுஷ்… ஞாபகத்தில் வை! நண்பர்கள் என்றெல்லாம் உலகில் எவரும் இல்லை. அடிப்படையாகவே மனிதர்கள் தன்னை மையப்படுத்தி வாழ்பவர்கள்!”
அப்படியா என்று யோசிப்பதைத் தாண்டி அவளுக்குப் பதில் தந்ததில்லை. அன்று எனக்கு சாப்பாட்டு மேஜையில் இப்படிப் பதில் தரத் தோன்றியது, “நான் அப்படி நினைக்கவில்லை. தன்னைத் தாண்டி நலம் நாடும் உறவுகளை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், எந்த ஒரு உறவும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனில், அதற்கு நாம் மெனக்கெடல் கொடுக்க வேண்டும்.”
எங்கள் பக்கத்திலிருந்த இளம் நண்பன் தீரஜ் சொன்னான், “அப்படி எஃபர்ட் போட வேண்டிய அவசியம் இருக்கக்கூடிய உறவு ஒரு உறவே இல்லை!”
எனக்கு சரியான கோபம் வந்தது. “சின்ன வயதுதானே தீரஜ் உனக்கு, இவ்வளவு பொறுப்பில்லாமல், வாழ்க்கையை இழந்துவிடாதே” என்று சொன்னேன்.
உறவுக்கான மையம் இந்த மெனக்கெடல். அப்படி இல்லாத மனிதர்கள் உறவை நாசப்படுத்திவிடுகிறார்கள்.
நீ எனக்கு முக்கியம் என உணர்த்துகிற சில மெனக்கெடல்கள், உன் முன்னேற்றத்தில் எனக்கு அக்கறை இருக்கிறது என உணர்த்தக்கூடிய சில மெனக்கெடல்கள் எல்லா உறவுகளுக்குமே தேவைப்படுகின்றன. அவை இல்லாமல் போகிறபோதுதான் அந்த உறவு உயவு இல்லாத இயந்திரமாகப் பழுதடைந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் பயனற்று தீர்ந்தும்விடுகிறது. ‘லவ் இஸ் ஹார்ட்வொர்க்!’ என்பதைக் காதலுக்குள் இருக்கிற எவரும் அறிவர்.
Ω
உடல் அடிப்படையில்தான் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலான நெருக்கம் தீர்மானிக்கப்படுகிறதா? இதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் சரி பாதி பதில்களை எடுத்துக்கொள்ளலாம்.
என் கல்லூரித் தோழிகளில் ஒருத்தி தமிழ்நாட்டின் தென்கோடி கிராமத்தில் இருக்கிறாள்; இப்போதும் அவள் தொடர்பில் உண்டு. எனது நடனத்தைப் பற்றியோ அதில் நான் செய்கிற முயற்சிகளைப் பற்றியோ அவளுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், எனது வெற்றிகளை நான் முதன்முதலில் அவளுக்குத்தான் தெரிவித்திருக்கிறேன். தொழில் சார்ந்த என் சந்தேகங்களுக்கு எந்த நேரத்திலும் பதில் அளிக்கக்கூடிய, உதவி செய்யக்கூடிய இன்னொரு தோழி இருக்கிறார். உணர்வுத் தளங்களில், அறிவுத் தளங்களில் வேறுபட்ட பல தோழிகள் எனக்கு உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நெருக்கம்.
ஆண்களும் இப்படித்தான் - பல்வேறு தளங்களில் என் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அந்த நண்பர்கள் பலரோடும் இன்று தினசரி தொடர்புகொள்வதில்லை எனினும், என்றேனும் நினைத்துக்கொண்டால் உடனடியாக அழைத்துப் பேச முடியும் என்னால். அவர்களும் அழைப்பதுண்டு. இந்த உறவுகளெல்லாம் தீர்ந்துபோனதாக எனக்குத் தோன்றவில்லை.
வேறு எப்போதுதான் உறவுகள் தீர்ந்துபோகின்றன? சில உறவுகள் பிரத்யேகமானவை. கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. காதல் உறவு அதன் உச்சத்தில் இருக்கிறது.
காதல் என்கின்ற சொல்லிற்கு அன்பு என்பது மட்டுமல்ல, மரியாதை என்ற பொருளும் உண்டு. அந்த அடிப்படை மரியாதைதான் காதல் உறவுகளை நீட்டிக்க உதவுகின்றன. பெண்களுக்குள் எப்போதுமே ஓர் அச்சம் உறைந்திருக்கும், இந்த ஆண் என் மீதான அழகினால் மட்டும்தான் ஈர்க்கப்பட்டிருக்கிறானா, இந்த அழகு இல்லாமல் போய்விடும் காலத்தில் அவன் என்னைவிட்டு விலகிவிடுவானா, என்னைவிட அழகான இன்னொரு பெண் வந்ததும் எனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமா எனப் பல கேள்விகள்.
உணவு உடல்நலம் என பல விஷயங்களில் தன்னை கணவன் சார்ந்திருக்கும்படி மனைவி செய்துவிடுவதற்கான காரணமும் இந்தக் கேள்விகளுக்கான பதிலில் இருக்கக்கூடும். எனவேதான், ஆண்களின் சிறு சிறு நடவடிக்கைகளைக்கூட தங்களது சுயமரியாதையைத் தீண்டும் விஷயமாக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
Ω
என்னுடைய கல்லூரிப் பேராசிரியரைப் பற்றி முந்தைய அத்தியாயத்தில் கூறியிருந்தேன் இல்லையா! நான் படித்தது பெண்கள் கல்லூரி. அங்கிருந்த, கை விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடக்கூடிய, ஆண்களில் அவரும் ஒருவர். நான் விடுதியில் தங்கியிருந்தேன். அவ்வாறாக, நான் தினசரி சந்திக்க நேர்ந்த வெகுசில ஆண்களில் அவர் ஒருவராய் இருந்தார். போதாதற்கு என் திறமையையும் ஊக்குவிப்பவராகவும் அவர் இருந்ததில் எனக்கு அவர் மீது அதீத பிரியம் தோன்றிவிட்டது. என் திறமையை ஊக்குவித்த பெண் விரிவுரையாளர்களும் அங்கிருந்திருப்பார்கள் என்பதை நான் கூறத் தேவையில்லை.
எனக்கு ஆண் பேராசிரியரையே பிடித்திருந்தது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கிறது என்று அவருக்குத் தெரியும். அதை நான் வெளிப்படையாகச் சொல்லவோ, நெருங்கிப் பழகவோ அவர் அனுமதித்ததே இல்லை. மிகவும் நல்லவர்.
நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது அவருக்குத் திருமணம் நடந்தது. முன்னரே சொன்னதுபோல காதல் திருமணம் என்கிற கனவை நான் எனக்குள் ஒருபோதும் அனுமதித்திராததால் அதுபற்றி எனக்கு ஏமாற்றம் எதுவும் தோன்றவில்லை. விசித்திரமாக உங்களுக்கு இருக்கலாம், நான் அவரது மனைவியையும் சேர்த்து மனதிற்குள் நேசிக்கத் தொடங்கினேன். இன்றளவும்கூட ஒவ்வோர் ஆசிரியர் தினத்தன்றும் நான் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவது உண்டு.
ஒரு நாள் மாலை வீடு திரும்புவதற்கான பேருந்தை நோக்கி நடந்த அவருடன் இணைந்து நடந்தவாறே, “மேடம் எப்படி இருக்காங்க சார்?” என்றேன். “ம்! நல்லா இருக்காங்களே” என்றார். “அவங்க பிறந்த நாள் எல்லாம் சரியா நினைவில் வச்சு பரிசு வாங்கிக்குடுங்க சார்” என்றேன். “அதெல்லாம் செய்யக்கூடாதுப்பா. நிறைய எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க” என்றார். “கணவர் உங்கக்கிட்டே இல்லாம, வேறு யார்ட்ட அவங்க அதை எதிர்பார்க்க முடியும். தயக்கமோ யோசனையோ இல்லாமல் இதையெல்லாம் செய்யுங்க சார்” என்றேன்.
இருவரும் மண்ணைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம்.
Ω
என் வாழ்வில் தீர்ந்துபோய் நின்ற உறவுகள் எவை என்று நான் யோசித்துப் பார்க்கிறேன். நான் எப்போதெல்லாம் அப்படி உணர்ந்தேன், உணர்கிறேன்?
நானும் அவனும் மூன்றாண்டு கால நண்பர்கள், எனக்கு அவன் மீது காதலும் இருந்தது. சமூக வலைதளப் பழக்கம். அப்படிப்பட்ட ஒரு பழக்கத்தில் நாம் எதிர்பார்க்க முடிகிற விஷயங்களுக்கென ஓர் எல்லை இருப்பதையும் நினைவில் இருத்தியே நான் எழுதுகிறேன்.
இந்த உறவுகளில் ஆண்கள் பெரும்பாலும் எதிர்ப்பாலினத்திடம் பேசுகிற அந்த அடிப்படைக் கிளர்ச்சிக்காகவே நீடிக்கிறார்கள், அதைத் தாண்டி அவர்கள் அதற்கு எந்த மதிப்பும் தருவதில்லை. எனவேதான் அவர்களால் சட்டென ஒரு பெண்ணிடமிருந்து இன்னொரு பெண்ணிற்கு நகர்ந்துவிட முடிகிறது. ஆனால், பெண்களோ அதில் ரொம்பவும் உணர்வுரீதியாகப் பிணைந்துவிடுகிறார்கள்.
இயற்கை ஏற்படுத்தியுள்ள உடற்கூறின் அடிப்படையில் பார்க்கும்போதேகூட நம்மால் இதை உணர்ந்துகொள்ள முடியும். ஆண் வெளியேற்றிவிட்டு வெளியேறிவிடுகிறவனாகவும், பெண் உள்வாங்கி அதை போஷித்து வளர்த்தெடுப்பவளாகவும் இருக்கிறாள். இந்தக் குண நலனை அவர்களது நடத்தைக்கும் நாம் பொருத்திப் பார்க்க முடியும்தானே!
சரி, ஒரு நண்பனைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன் இல்லையா? அவனும் நானும் எவ்வளவோ விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். பாலுறவு சார்ந்துகூட நிறையப் பேசியிருக்கிறோம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், எனக்கு அவன் - அவனது தோற்றம், திறமை, ஆளுமை மீது பெரிய பித்தே இருந்தது.
நாங்கள் தனியாக சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம். நிறையப் பேசினோம், திடீரென முத்தங்கள் அங்கே வந்தபோதுகூட எனக்கு எதுவும் அந்நியமாகத் தெரியவில்லை. என்றாலும்கூட இறுதிவரையில் கலவி நோக்கி என் மனம் நகரவே இல்லை. ஒருவேளை அதை அவன் வற்புறுத்தியிருந்தால் நானும் அது நோக்கி எந்தத் தயக்கமும் இல்லாமல் நகர்ந்திருக்கக் கூடும் என்றால், இயல்பாக நான் அது நோக்கி நகரவில்லை. உடைக்க முடியாத ஓர் இடைவெளி அங்கே இருந்ததை அவனும் உணர்ந்திருக்க வேண்டும்.
அவன் ஒரு ஜென்டில்மேன், அதில் சந்தேகமே இல்லை. ஆனால், எனக்கு அவனிடம் என்ன தடை? ஒருவேளை நான் உடலை புனிதப் பொருளாகக் கருதுகிறவளா? இல்லவே இல்லை. என்னைப் பொறுத்தவரை என் உடலும் நான் மிகவும் நேசிக்கிற ஒரு பேனாவைப் போலத்தான். எனக்கு விருப்பமான ஒருவருக்கு அதைக் கையளிப்பதில் எனக்குத் தடை ஒன்றும் இல்லை. எனில், இந்தக் குறிப்பிட்ட நண்பனிடம் எனக்கிருந்த தடை என்னவெனப் பிறகு யோசித்திருக்கிறேன், இப்போதும் யோசிக்கிறேன். அவன் என்னைத் தனக்குச் சமமாக நடத்தியதே இல்லை என்பதே அந்தக் காரணம் என்கிற முடிவிலேயே அதை யோசிக்கும்போது நான் ஒவ்வொரு முறையும் வந்து நிற்கிறேன்.
எனது திறமை சார்ந்தோ உணர்வுரீதியான பிரச்சினைகள் சார்ந்தோ அவன் ஒருபோதும் அக்கறை காட்டியது இல்லை. அதன் பின்னும் அது எப்படி மூன்றாண்டு காலம் தொடர்ந்ததென்றால், அவன் மீதான எனது பித்து மட்டும்தான் அதற்குக் காரணமாய் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு இன்றைக்கு வருகிறேன். அவன் என்றேனும் ஒருநாள் என்னைச் சமமாக நடத்துவான் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு இருந்திருக்கிறது. இப்போது அவன் என் தொடர்பில் இல்லை. அவனைச் சந்தித்தால் பேசிக்கொள்வதற்கும்கூட எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
“நான் எப்போதும் காமத்தை நேசமென்று தவறுதலாக எண்ணிவிடுவதுண்டு. எனது தவறைப் புரிந்துகொள்வதற்குள் காலம் கடந்து விடுகிறது” என்கிற கமலா தாஸின் வரிகளை ஏனோ மனம் இப்போது நினைத்துக்கொள்கிறது.
Ω
சமந்தா - சைதன்யா உறவு முறிவு தொடர்பான கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளை எல்லாம் வாசித்தேன். பெண்கள் எப்படி என் கட்டுரையைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று காணும்போது அவர்களுடைய உணர்வை நான் பிரதிபலிப்பதாக உணர்ந்தேன். ஆண்கள் எப்படி என் கட்டுரையைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று காணும்போது அவர்கள் தரப்பின் வலியையும் உணர்ந்தேன். ‘நாக சைதன்யாவுக்கும் சமந்தா தீர்ந்துபோயிருப்பார்’ என்றுகூட ஒரு வாசகர் எழுதியிருந்தார். உண்மைதான். இருக்கலாம். மனம் விட்டு பேசினால்தானே இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்!
ஆண்களும் பெண்களும் இருவேறு உலகங்களில் வசித்துவருகின்றனர். எதிர்ப் பாலினத்தைப் பற்றி முன்னரே அவர்களுக்குப் புகட்டப்பட்ட கற்பிதங்கள் ஒரு பரந்தவெளி போன்று இடையே கிடக்கிறது. அதைக் கடந்தால்தான் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ முடியும். அதற்கான வழிகளை உரையாடல்கள் மூலம் கண்டடைய முயல்வோம்; தொடர்ந்து 'இரு உலகங்கள்' தொடர்பில் மனம் திறந்து பேசுவோம்!
1
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Almas Ahamed N 3 years ago
"அவன் என்னைவிட்டு விலகிவிடுவானோ என்ற அச்சம் பெண்களுக்குள் எப்போதுமே உறைந்திருக்கும்" என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டபோது கவிஞர். பழநி பாரதியின் இந்த வரிகள் நினைவில் எழுந்தது... "நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா" நல்லதொரு கட்டுரை.
Reply 8 0
Login / Create an account to add a comment / reply.
Prabhu 3 years ago
இந்த கதையாடல் முழுக்க ஒருவரின் பார்வை மற்றும் அபிப்பிராயம் என்பது வாசகரின் நினைவில் இருக்க வேண்டியது அவசியம். மனித உறவுகளைப் பொறுத்தவரை, அதிலும் ஆண் பெண் இணையிறவுகள், இது இப்படித்தான் என்றெல்லாம் ஒரேயடியாக வரையறுத்து விட முடியாது. சில பொதுமைப் பண்புகளை வைத்து மண்டையில் குட்டு வைப்பதும், முதுகில் தட்டிக் கொடுப்பதும் முதிர்ச்சியடையாத செயல்கள். ஆனால், இந்த வகையான எழுத்துக்களுக்கு மில்ஸ் அண்ட் பூன் போன்ற ஒரு வாசிப்பு கவர்ச்சி உண்டு. பாலகுமாரன் எழுத்துக்களுக்கு எண்பதுகளில் மிகுந்திருந்த கவர்ச்சியைப் போல. நீண்ட நெடிய இந்த வாழ்க்கையில் மனித உறவுகள் எந்த copybook நெறிமுறைகளின் படியும் அமைந்து விடுவதில்லை. ஓஷோ சொல்வது போல, Life is not a problem to be solved but is a mystery to be lived and learnt. இது இப்படியெல்லாம் இருந்தாலும், அனுஷா நாராயணன் இந்தத் தொடரில் கைவசப்படுத்தியிருக்கும் "தொனி" வியப்பிற்குரியது.
Reply 27 0
Login / Create an account to add a comment / reply.