கட்டுரை, வாழ்வியல், வேலையும் வாழ்வும் 9 நிமிட வாசிப்பு

சுவாரசியமான வாழ்க்கைக்கு உதவுமா வேலை மாற்றம்?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
20 Nov 2021, 5:00 am
1

னக்குத் தெரிந்த இளைஞர் ஒருவரிடம் ஒரு அதீத குணம் இருந்தது. எப்போதாவதுதான் பேசிக்கொள்வோம். ஆனால், ஒவ்வொரு முறை பேசும்போதும் 'எங்கே வொர்க் பண்றே?' என்று கேட்பேன். ஒரு புதிய நிறுவனத்தின் பெயரை சொல்வார். ஆச்சரியமாக இருக்கும்.  'எப்படிய்யா இப்டி கம்பெனி மாறிக்கிட்டே இருக்கே?' என்று கேட்டால், 'அப்படி மாறினாதான் சார் முன்னேற முடியும்!' என்று சொல்வார். 

இப்படி நிறுவனங்கள் மாறிக்கொண்டேயிருக்கும் 'குற்றத்தை' நானும் செய்திருக்கிறேன். தற்போது பணிபுரிவது, நான் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து பத்தாவது நிறுவனம். இது சொந்த நிறுவனம் என்பதால் இதிலிருந்து மாறும் வாய்ப்பில்லை; எனவே இத்தோடு கணக்கு நின்றுவிடும் என்று நம்புகிறேன். ஆனால், இப்படி தாவிக்கொண்டே இருப்பதைத் தவறாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். 'அந்தக் காலத்தில, நான் வேலை செய்யும்போது...' என்று ஆரம்பித்து அளக்கப்படும் செய்யப்படும் அங்கலாய்ப்புகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். 'அந்தக் காலத்தில்' படிப்பை முடித்த ஒரு இளைஞர் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தால் ஓய்வு பெறும்வரை அங்கேயேதான் ஊழியம் செய்துகொண்டிருப்பார். இந்தக் கருத்து பெரும்பாலும் மேற்சொன்ன இளைஞர்களுடன் ஒப்பிடப்படுகிறது. அப்படி ஒப்பிடப்பட்டு அப்படித் தாவுவது ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. 

முதலில் 'அந்தக்காலம்' என்பது என்ன என்று வரையறுத்துவிடுவோம். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலம் முதல் 1990 வரை என்று வைத்துக்கொள்வோம். புள்ளிவிவரங்கள் எதற்குள்ளும் போக அவசியமே இல்லாமல், அப்போது பெரும்பாலானோர் வாழ்நாள் முழுவதும் ஒரே நிறுவனத்தில் வேலைசெய்து ஓய்வுபெற்றார்கள் என்பது உண்மையாகவே இருக்கும் என்றுதான் நம்புகிறேன். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. 1950களில் இந்தியாவில் நிறுவனங்களே அதிகம் கிடையாது. இன்று நாம் பார்க்கும் பொதுத்துறை நிறுவனங்களேகூட முக்கால்வாசி சுதந்திரத்துக்குப் பின் அரசுகள் தொடர்ந்து உருவாக்கியவைதான். அதன் பின்னர் 1980கள் வரை கூட தனியார் நிறுவனங்கள் இவ்வளவு உருவாகவில்லை. வேலைமாற்றத்தை நாம் இன்று சகஜமாக எடுத்துக்கொள்ளும் ஐடி துறையில் பாய்ச்சலை 1990களுக்குப்பின் உருவானது.  தாராளமயமாக்கலுக்குப் பிறகுதான் தனியார் நிறுவனங்கள் தழைத்தோங்கி முன்னேறின. 1960களில் வேலை செய்த ஒருவர், நிறுவனம்விட்டு வேறு நிறுவனத்துக்குத் தாவ ஆசைப்பட்டால்கூட, அவருக்கு அதிகமான தேர்வுகள் இருந்திருக்காது. டாடா எக்கு ஆலையில், வேலைசெய்யும் ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை நிறுவனங்கள் தாவிவிட முடியும்? போலவே செய்தித்தாள், தொலைக்காட்சி, ரேடியோ, கடிகார நிறுவனம் என்று எந்த உதாரணத்தை எடுத்தாலும் இதுதான் பதில். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஓரிரு நிறுவனங்களைச் சுட்டிக்காட்டலாம். அதைத் தாண்டி அவருக்கு சாத்தியங்கள் இருக்கவில்லை. 

இன்று இந்தியாவில் 850 டிவி சேனல்கள் உள்ளன. 32,000 ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வார, மாத, நாளிதழ்கள் உள்ளன. இதேபோல ஒவ்வொரு துறையை எடுத்தாலும் அதீதமான எண்ணிக்கையையே அங்கே காண முடிகிறது.

ஒரு நிமிடம் யோசித்துப்பார்ப்போம். ஐடியில் வேலையைத் தொடங்கும் ஒரு இளைஞருக்கு 32,000 தேர்வுகள் இருக்கின்றன. அவர் வருடாவருடம் ஒரு புதிய கம்பெனி என்று மாறிக்கொண்டிருந்தால்கூட, ஓய்வுபெறும் வயதில் இருக்கும் மொத்த நிறுவனங்களில் அரை சதவிகிதத்தைக்கூட தொட்டிருக்க மாட்டார். அந்த அளவுக்கு யாரும் மாறுவதில்லை என்பது வேறு விஷயம். இந்தியாவில் சராசரியாக 3 முதல் 10 ஆண்டுகள் கழித்துதான் வேலை மாறுகிறார்கள். 

'அதெல்லாம் இருக்கட்டும். நிறைய கம்பெனி இருக்கு, அதனால நிறைய தாவுறோம்னு சொல்றது எல்லாம் ஒரு வாதமா?' - இப்படிக் கேட்கலாம். அது நியாயமான வாதம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதை விடுத்துப் பார்த்தால், அப்படி வேலை தாவுவதில் சில சாதகங்கள் இருக்கின்றன.

ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர் ஒரே ஒரு தொழில்முறையை மட்டும் அறிந்தவராக இருப்பார். மூன்று நிறுவனங்களில் அனுபவம் பெற்றவர் மூன்று நிறுவனங்களின் தொழில்முறைகளை அறிந்தவராக இருப்பார். அப்போது அவரது திறன் விசாலமடையும். நிறுவனங்கள் மாறுவதால் புதுபுது நிறுவனங்களின் தொழில் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

சம்பளத்தைக் கூட்டிக் கொண்டே போகலாம். ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை பார்ப்பவருக்கு அந்த நிறுவனத்தின் பாலிசிப்படிதான் ஆண்டு சம்பள உயர்வு கிடைக்கும். அது சுமார் 5 முதல் 8 சதவிகிதம் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் வேலை மாறுபவருக்கு தடாலென 30-40 சதம் ஊதிய உயர்வு கிடைக்கும். குறிப்பிட்ட சில ஐடி திறன் கொண்ட ஊழியர்களுக்கு, சம்பளம் இரண்டு மடங்காகக் கூடவும் வாய்ப்பிருக்கிறது.

வாழ்க்கை போராடிக்காமல், துள்ளித் துடிப்பாகப் போக வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இப்படி வேலை மாறுதல் ரொம்பவே உகந்ததாக இருக்கும். புதிய நிறுவனம், புதிய மனிதர்கள், புதிய சவால்கள் என்று வாழ்க்கை தொடர்ந்து சுவாரசியமாகப் போகும். ஒரே நிறுவனத்தில் வேர் கொண்டு தொடர்பவர்களுக்கு அந்த அளவுக்கு புதிய சவால்கள் இருக்காது. ஒருகட்டத்துக்குப் பின் நிறுவனத்தின் வேலை செய்யும் வழிமுறை, தொழில்நுட்பங்கள் எல்லாம் புரிந்துகொண்டு பழக்கமாகிவிடும். அதை அப்படியே தொடர்வதில் பெரிய சவால் இருக்காது. அப்படித்தான் வாழ்க்கை வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரே நிறுவனத்தில் தொடர முயற்சி செய்யலாம். 

இப்படி அடிக்கடி மாறுவதில் முன்பெல்லாம் இன்னொரு சாதகம் இருந்தது. வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றல் ஆகுதல், புதிய அளவிலான சுவாரஸ்யங்களை வாழ்வில் கொண்டுவரும். நான் தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், மைசூர், கேரளா, சிங்கப்பூர், இங்கிலாந்து என்று பல்வேறு இடங்களில் வேலை செய்திருக்கிறேன். பணிநிமித்தமாக இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்துக்கும் போயிருக்கிறேன். இவை புதுப்புது அனுபவங்களைக் கொடுத்தன. இப்போது புனே போனால் அங்கே ஓரிரு நண்பர்கள் வீட்டில் தங்கலாம்; பெங்களூரு போனால் வேறு சில நண்பர்கள் என்று வசதி இருந்தது. வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்ததின் மூலம் எனக்குக் கிடைத்த வாழ்வனுபவங்களை இப்படி ஒரே ஊரில் வேலை செய்பவர்கள் எப்படிப் பெறுவார்கள் என்று யோசிக்கிறேன். 

இந்தப் பக்கம் இப்படி என்றால், அந்தப் பக்கத்திலும் பிரச்சினை இருக்கிறது. தொடர் வேலை மாற்றலில் ஒரு முக்கியமான பாதகம் இருக்கிறது. ஒரே நிறுவனத்தில் குறிப்பிட்ட காலம் பணிபுரிபவர்களுக்குத்தான் பெரும்பாலும் பதவி உயர்வுகள் கிட்டுகின்றன. நீங்கள் ப்ராஜக்ட் மேனேஜர் என்றால் வேலை மாறினால் அடுத்த நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜர் என்ற பதவிதான் கொடுப்பார்கள். அடுத்த நிறுவனத்தில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜர் கிடைக்கும் வாய்ப்புக் குறைவு. ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து சில காலம் பணிபுரிபவர்கள் தங்கள் திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி பங்களிக்கும்போது அவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கின்றன. நிறைய நிறுவனங்களில் பொது மேலாளர் அல்லது குழுத்தலைவர் போன்ற பதவிகள் வகிப்பவர்கள் அந்த நிறுவனங்களில் பல காலம் வேலை செய்தவர்களாகவே இருப்பார்கள். அல்லது போட்டி நிறுவனங்களில் அதே பதவியை வகித்தவர்களாக இருப்பார்கள். 

எனவே, 'தொடர்ந்து வேலை மாற்றல்கள் செய்வது நல்லதா?' என்றால் அதற்கு எளிய விடை இல்லை. இப்போதைக்கு தொடர்ந்து நிறுவன மாற்றல் செய்வது காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் அதில் நிறைய சாதகங்கள் இருக்கின்றன. அதே நேரம் இதனை கொஞ்சம் திட்டமிடலுடன் செய்யவேண்டும்.

உங்களுக்கு அலுவலகத்தில் ஆண்டு மதிப்பீடு வருகிறதா? அதற்குக் காத்திருங்கள். அதனை முடித்து அதில் உங்களுக்குக் கிட்டும் ஊதிய அல்லது பதவி உயர்வு எதையேனும் பெற்றுக்கொண்டு பின்னர் புதிய வேலைக்குத் திட்டமிடுங்கள். நீங்கள் இருக்கும் நிறுவனத்தில் போட்ட உழைப்புக்கு உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பலனைப் பெற்றுக்கொண்டு அதன் பின்னரே அடுத்த வேலையைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் வேலைசெய்ய ஆரம்பித்த முதல் பத்து வருடங்கள் குறைந்தது 2 முதல் 3 வருடங்கள், ஒரே நிறுவனத்தில் பணிபுரிய முயலுங்கள். நீங்கள் இருக்கும் நிறுவனத்திலேயே புதிய சவால்கள் மற்றும் பெரிய ப்ராஜக்ட்டுகள் வந்தால் அதில் ஈடுபடுத்திக்கொள்ளப் பாருங்கள். வேறு நிறுவனத்தில் சேருவதில் கிடைக்கும் அனுபவங்கள் மற்றும் சலுகைகள் உங்களுக்குப் பணிபுரியும் நிறுவனத்திலேயே கிடைக்கும். அதேநேரம் நீங்கள் தற்போது இருக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகள், ஆண்டு வருமானம், வளர்ச்சி சாத்தியக் கூறுகள் போன்றவற்றை கண்காணித்து வாருங்கள். அந்த சாத்தியக் கூறுகள் பிரகாசமாக இருக்கும்பட்சத்தில் வேலை மாற வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, நிறுவனம் சில பிரச்சினைகளை எதிர்கொண்டால், உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தனியாகத் திட்டமிட வேண்டியிருக்கும். 

2020-க்கு முன்பே நடந்துகொண்டிருந்த நிறைய மாற்றங்களை கோவிட் தீவிரப்படுத்தி இருக்கிறது. உதாரணத்துக்கு ஜும் பயன்பாடு, ஓடிடி தளங்கள் என்று பல விஷயங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமான ஒன்று வேலை மாறுவது. அதற்கு முன்பே கூட புதிய நூற்றாண்டின் இளைஞர்கள் வேலை மாறிக் கொண்டிருந்தாலும் கோவிட் உருவாக்கிய நிலையற்றத்தன்மை அவர்களை மேலும் ஆக்ரோஷமாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. புதிய தலைமுறை நிறுவனங்களும் அதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. வாழ்வின் மாற்றங்களை ஆர்வமுடன் அணைத்துக் கொண்டு முன்னேறுவதில் மானுட குலம் நிகரற்றது என்பதை புத்தாயிரமாண்டினர் (millenials) எனப்படும் புதிய இளைஞர்கள் நிரூபித்துவருகிறார்கள். 

'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு' என்ற வாழ்த்தைப் போல பண்டைய சீனாவில் ஒரு வாழ்த்து இருக்கிறது. 'நீங்கள் சுவாரசியமான காலத்தில் வாழ்வீர்களாக!' என்பதுதான் அது. வேறெந்த காலத்தையும்விட அது இன்றைக்கு நமக்குப் பொருந்துகிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   2 years ago

நல்ல வழிகாட்டுதல்... தனியார் நிறுவனங்கள் பெருகுகிவிட்ட இன்றைய சூழலில் பணி மாறுதல் என்பது இயல்பான ஒன்றாகிவிட்ட நிலையில் முடிவெடுக்க ஒரு தீக்குச்சி அளவான வெளிச்சத்தைக் காட்டுகிறார் ஸ்ரீதரன். நன்றி ஐயா...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தியாகராய கீர்த்தனைகள்உயிரிப் பன்மைத்துவம்மகாஜன் ஆணையம்சமூக வலைதளம்தில்லிஇரு வல்லரசு துருவங்கள்பூர்வ பௌத்தம்பிரம்ம முகூர்த்தம்சதுர்தசா தேவதாமதுரை வீரன் கதைகாவல் துறைஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்ஷாம்பு எனும் வில்லன்எடப்பாடி கே.பழனிசாமிபிராமணர்கள்கல்வியாளர்களுக்கு முதுகெலும்பு தேவைமகளிர் இடஒதுக்கீடு எனும் கேலிக்கூத்து!அண்ணல் அம்பேத்கர்சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படைகண் எனும் நுகர்வு உறுப்புஅச்சத்துடனா?ராஜன் குறை கிருஷ்ணன் வாரிசு அரசியல் கட்டுரைநாடுநெருக்கடி நிலைமீண்டும் கறுப்பு நாள்ஆப்பிள் இறக்குமதிதமிழர் உரிமைஇரவுத் தூக்கம்மூட்டுவலிக்கு முழுமையான தீர்வுசபரீசன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!