தலையங்கம், அரசியல், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

இன்னொரு சிதம்பரம் யார் பொறுப்பு?

ஆசிரியர்
10 Jun 2022, 5:00 am
4

நாடாளுமன்றத்தில் மேலும் கொஞ்ச காலம் ப.சிதம்பரத்தின் குரல் ஒலிப்பதைத் தமிழ்நாடு உறுதிபடுத்தியிருக்கிறது. மாநிலங்களவையில் இந்த மாதத்தோடு பதவிக் காலம் முடியும் 57 இடங்களில் தமிழ்நாட்டிலும் 6 இடங்கள் இருந்தன. திமுக சார்பில், சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்; அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்; காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் என்று இந்த ஆறு இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிதம்பரத்தின் தேர்வு நாம் பேச வேண்டிய ஒன்றாகிறது. 

நாடாளுமன்றத்தில் 1984இல் அடியெடுத்து வைத்தார் சிதம்பரம். மக்களவை உறுப்பினராகக் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் (1984 -1999; 2004 - 2014) பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தினூடாகத்தான் நெருக்கடிகள் மிகுந்த சூழல்கள் இடையே நாட்டின் நிதித் துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் செலுத்தினார்.

அடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக (2016-22) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆறாண்டு காலத்தில் காங்கிரஸின் துடிப்பான எதிர்க்குரலாக சிதம்பரம் ஒலித்தார். பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு வழக்குகளை ஏவியபோதும், சிறையில் அடைத்தபோதும் சிதம்பரத்தின் பேச்சோ, எழுத்துகளோ தணியவில்லை. மீண்டும் அவர் மாநிலங்களவைக்கு இப்போது அனுப்பப்படுவதானது (2022-28) கட்சி உணரும் அவருடைய தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. 

சங்கடமான ஒரு விஷயம் என்னவென்றால், அனேகமாக வரும் ஆறாண்டுகளோடு சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறவு முடிவுக்கு வந்துவிடலாம். காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்புக்கு சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பரிந்துரைகளேகூட கட்சியில் மூத்தவர்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த சொல்கிறது. 1945இல் பிறந்தவரான சிதம்பரம் இந்த முறை மாநிலங்களவைக் காலகட்டத்தை முடிக்கும்போது அவருக்கு 83 வயது ஆகியிருக்கும். சிதம்பரத்தின் இடத்தை அப்படியே இட்டு நிரப்ப முடியாது என்றாலும், அவரை ஈடுசெய்ய காங்கிரஸுக்கு அப்போது இன்னொரு சிதம்பரம் கிடைக்கலாம். கேள்வி இதுதான்: டெல்லி அரசியலில் இவ்வளவு செல்வாக்கோடு பங்கெடுக்க இன்னொரு சிதம்பரம் தமிழ்நாட்டுக்குக் கிடைப்பாரா; தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதுபற்றி சிந்திக்கின்றனவா?

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ராஜாஜிக்கு அடுத்து தேசிய அரசில் மிகப் பெரிய இடத்தில் அமர்ந்த தமிழர் ப.சிதம்பரம். தமிழ்நாட்டுக்கு இவர்கள் விசேஷமாக என்ன செய்தார்கள் அல்லது தமிழ்நாட்டு மக்களின் அரசியல் அபிலாஷைகளை இவர்கள் எந்த அளவுக்கு தேசிய அரசியலில் பிரதிபலித்தார்கள் என்ற கேள்விக்குச் செழுமையான ஒரு பதிலைப் பெற முடியாது என்பது ஒரு துரதிருஷ்டம். அதேசமயம், இது ஒன்றின் நிமித்தம் தேசிய அரசியல் போக்குக்கு இவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அதிலும் உலகமயமாக்கல் காலகட்டத்துக்குள் இந்தியா செலுத்தப்பட்ட காலகட்டத்தில் ஓர் அரச பிரதிநிதியாக சிதம்பரம் கையாண்ட விஷயங்களும், ராஜ்ய விவகாரங்களில் அவர் பெற்றிருக்கும் அனுபவங்களும் தமிழ்நாட்டில் வேறு எவருடனும் ஒப்பிட முடியாதவை.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி கடும் விமர்சனத்துக்குள்ளான ஒரு சந்தர்ப்பத்தில் பிரதமரை மாற்றும் யோசனை பரிசீலிக்கப்பட்டபோது, மாற்றாக அந்த இடத்தில் யோசிக்கப்பட்டவர்களில் சிதம்பரம் இருந்தார். அது நடக்காவிட்டாலும், உலகப் பொருளாதார மந்தம், காஷ்மீர் விவகாரம், மாவோயிஸ்ட் விவகாரம், இலங்கை உள்நாட்டுப் போர் என்று மன்மோகன் சிங் அரசு கையாண்ட முக்கிய விவகாரங்கள் எல்லாவற்றிலும் முடிவுகளைப் பேசும் இடங்களில் சிதம்பரம் இருந்தார். இன்றும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகள், அன்றாட அரசியலில் அதன் கொள்கை நிலைப்பாடுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் அவர் இருக்கிறார். காங்கிரஸின் எதிர்கால வியூகத்தைத் திட்டமிட சமீபத்தில் கூடிய உதய்பூர் காங்கிரஸ் மாநாட்டின் வியூக அறிக்கையும்கூட சிதம்பரத்தின் பங்களிப்புடனேயே வெளியானது.

கூட்டாட்சி ஒன்றியமான இந்தியாவில் பிராந்தியங்களுக்கு இடையிலான சமநிலைக்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் சிதம்பரம் போன்ற சிலரேனும் அமைவது அவசியம். காங்கிரஸ் மட்டுமல்லாது பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, அதிமுக என்று எல்லாக் கட்சிகளிலுமே இப்படியானவர்கள் இருக்க வேண்டும்.

டெல்லியை மையப்படுத்திய ஒற்றையாட்சி கதையாடலை முன்வைக்கும் பாஜகவுக்கு மாற்றான ஒரு கூட்டாட்சி கதையாடலை வலுவாகப் பேசும் பிராந்தியமாக தமிழ்நாடு இருந்தாலும், டெல்லி அரசியலில் தங்களுடைய தனி அடையாளத்துடன் செல்வாக்கு செலுத்தக்கூடிய தலைவர்களுக்கான பற்றாக்குறை எப்போதுமே இங்கு நிலவுகிறது. இதற்கான காரணம் என்று வேறு எதைவிடவும், ‘தமிழ்நாட்டு அரசியலர்களின் தொலைநோக்கின்மை மற்றும் கற்பனை வறட்சி’யையே பேச வேண்டி இருக்கிறது.

டெல்லி அரசியலுக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. ராஜாஜியின் இடத்துக்கோ, சிதம்பரத்தின் இடத்துக்கோ செல்ல வேண்டும் என்றால், அதற்குத் தன்னை ஒரு தலைவராகக் கருதும் பெரிய கற்பனை வேண்டும். குறித்த நேரக் கண் விழிப்பு, கட்டுப்பாடான உணவு, பல தரப்பினருடனுமான தொடர்பு, அயராத வாசிப்பு, தொடர்ச்சியான எழுத்து என்று திட்டமிட்ட வாழ்க்கை ஒழுங்கையும், கடுமையான உழைப்பையும் கோரும் கற்பனை அது.

துரதிருஷ்டவசமாக டெல்லி அரசியலை நாடாளுமன்ற அரசியலோடு சுருக்கிப் பார்ப்பவர்களே இங்கு அதிகம். தமிழ்நாடு இன்று பேசும் பல விஷயங்கள் எதிர்காலத்தில் நடந்தேற மக்கள்தொகையில் பெரும் கூட்டமான இந்தி பிராந்தியத்தவர்களுடனான விவாதத்தையும், ஏனைய சமூகங்களுடனான உரையாடலையும் நிர்ப்பந்திப்பவை. குறைந்தபட்சம் அரசியல் பேரத்துக்காகவேனும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்கூட இங்கிருந்து டெல்லி அரசியலுக்கு செல்பவர்களில் பெரும்பான்மையினரிடத்தில் இல்லை.

தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் இதில் பங்கு உண்டு. சமீபத்திய மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக அறிவித்த வேட்பாளர்கள் பட்டியல் மோசமான ஓர் உதாரணம். உட்கட்சி விவகாரங்களைச் சரிகட்டும் அணுகுமுறையைத் தவிர இந்தப் பட்டியல்கள் நமக்கு எந்தக் கனவையும் வெளிப்படுத்தவில்லை. அது மக்களவையோ, மாநிலங்களவையோ வங்கத்தின் டெரிக் ஓ பிரையன், மஹுவா மொய்த்ரா போன்றவர்களோடு ஒப்பிட தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தேசிய அரசியல் பெரும் முக்கியத்துவம் பெற்றுவரும் இந்நாட்களில் அப்படியானவர்களை உருவாக்க வேண்டிய தேவையைக் கட்சித் தலைமைகள் சிந்திக்க வேண்டாமா?

இந்தியாவுக்கு மான்டேகு-செம்ஸ்ஃபோர்ட் பரிந்துரைகளின் வாயிலாக 1919இல் அறிமுகமான நாடாளுமன்ற அமைப்புமுறையில் மிகச் சிக்கலான சூழலை ‘மாநிலங்களவை’ வந்தடைந்திருக்கும் காலகட்டம் இது. நூற்றாண்டு கண்டுவிட்ட மேலவை உண்மையில் இப்போது பெரும் சீர்திருத்தத்தை வேண்டி நிற்கிறது.

நோக்கத்தின் அடிப்படையில் மட்டும் அல்லாது, செயல்பாட்டின் அடிப்படையிலும் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையானது,  மாநிலங்களின் பிரதிநிதித்துவ அவையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றால், உத்தர பிரதேசத்துக்கு 38 இடங்கள், சிக்கிமுக்கு 1 இடம் என்று இப்போதுள்ளதுபோல மக்கள்தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளைப் போல எல்லா மாநிலங்களுக்கும் சமமான இடங்களை அது கொண்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல மாற்றங்களை நாம் பேச வேண்டிய காலம் இது. நீர்க்கடிக்கப்பட்டுவரும் மாநிலங்களவையின் அதிகாரம் தொடர்பிலும் விரிவாக விவாதிக்க வேண்டிய காலம். இப்படிப்பட்ட சூழலில் எத்தகையோரைத் தங்களுடைய பிரதிநிதிகளாக திமுகவும் அதிமுகவும் அனுப்பியிருக்க வேண்டும்?

சிதம்பரங்கள் உருவாகிவருவது சிதம்பரங்களின் கைகளில் மட்டுமே இல்லை. கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் அத்தகு கனவு வேண்டும்!

தொடர்புடைய கட்டுரை 

 

தமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்!


5

8

1
பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

B   1 year ago

சு.வெங்கடேசன் போன்றவர்களை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

arulselvan   1 year ago

வைகோவின் பெயரை கடைசி வரைக்கும் உச்சரிக்க மறுத்ததன் காரணம் என்னவோ? டெல்லிக்கு தமிழகம் அனுப்பிய டாப் 5ல் நிரந்தர இடம் பெறக்கூடியவர் வைகோ என தெரிந்தும் பேசாமல் இருப்பது வன்மம் அன்றி வேறொன்றும் இல்லை..

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

அதிமுக வை விடுவோம். இங்கிருந்து சென்ற திமுக mp க்கள், உதயநிதி வாழ்க என்ற முழக்கம் நாடாளுமன்றத்தில் ஒலிக்க, தங்கள் விசுவாச த் தை காட்ட, நேரம் எடுக்கும் போதே இவர்கள் தரம் தெரிந்து விட்டது

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

BABUJI S   1 year ago

பாராட்டுக்கள் ஆசிரியர் சமஸ் . இக்கட்டுரை நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு சிதம்பரம் போன்ற அறிவார்ந்த, அரசியல் அமைப்பு கட்டமைத்த அம்சங்களின் இன்றைய தேவைகளை வலியுறுத்தி பேசும் வல்லமை உள்ள உறுப்பினர்களை அனுப்ப வேண்டிய அவசியத்தை ஒலிக்கிறது. திமுக உட்பட மற்ற கட்சிகள் தங்கள் உறுப்பினர்களைத் தேர்வு செய்ததில் உள்ள குறைகளையும் சுட்டுகிறது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

மு.கருணாநிதிThirunavukkarasar Arunchol Tamilnadu now Interviewபெருமாள் முருகன்சோழர்கள் இன்று...ஆழி செந்தில்நாதன் கட்டுரைகாமாக்யா கோயில்அருண் மைராவசந்திதேவிபேக் பிளேஇடதுசாரிஎஸ்.பாலசுப்ரமணியன்ஆர்வம் இல்லாத வேலைஅண்ணாவின் மொழிக் கொள்கைதிக தலைவர் கி.வீரமணி பேட்டிமேதமைஷிழ் சிங் பாடல்சமஸ் - ச.கௌதமன்ஈரானியப் பெண்கள்உணவு நெருக்கடிமிகெய்ல் கோர்பசெவ்குடும்ப வருமானம்ஒரு கோடிப் பேர்புலம்பெயர்வின் சவால்கள்நடைமுறையே இங்கு தண்டனை!கருணாநிதி சமஸ்உளவியல்பெருமாள்முருகன் அருஞ்சொல்பிரிட்டிஷ் நாடாளுமன்றம்ஃபுகுவோக்காஅரசியல்வாதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!