கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 10 நிமிட வாசிப்பு

மீண்டெழட்டும் அதிமுக

சமஸ் | Samas
26 Oct 2022, 5:00 am
0

தாரை தப்பட்டைகள் முழங்க, லட்டுகள் விநியோகம் சூழ, பெரிய குத்தாட்டத்துடன் ஊருக்கு ஊர் அதிமுக கொண்டாடியிருக்க வேண்டிய ஒரு தருணம் அதன் பொன் விழா. தமிழ்ச் சமூகம் நினைவுகூர வேண்டிய தருணமும்தான். 

தமிழ்நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு ஒரு நூற்றாண்டு வயது என்றால், அதில் அதிகமான காலம் - 30 ஆண்டு காலம் - அதை ஆண்டிருக்கும் கட்சி;  உருவான நாட்களிலிருந்தே வாக்கு வங்கி அடிப்படையில் தமிழ்நாட்டின் பெரிய அரசியல் இயக்கம் என்ற இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கட்சி எனும்  மேலோட்டமான சாதனைகளுக்கு அப்பாலும், இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு அதிமுகவும்  முக்கியமான சில பங்களிப்புகளைச் செய்திருக்கிறது.

இந்திய ஒன்றியத்தில் ஒரு தனித்துவமான அரசியல் தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது என்றால், அதில் அதிமுகவுக்கு உள்ள பங்கு அதில் முக்கியமானது. சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி போகிற போக்கில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். “தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ‘திராவிட மாதிரி’ என்ற முழக்கத்தை மூச்சுக்கு முந்நூறு முறை முழங்குகிறார். அவர் அப்படிக் குறிப்பிடும் திராவிட அரசியலுக்கு அதிமுகதான் சொந்தம் கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தது அதிமுக!” என்றார் பழனிசாமி.

இந்தப் பேச்சில், “திராவிட அரசியலுக்கு அதிமுகவும் சொந்தம் கொண்டாட வேண்டும்” என்று பழனிசாமி பேசியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கூடவே அதிமுக இன்று கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையும், சொந்தமாக்கிக்கொண்டு தொடர வேண்டிய அரசியல் பண்பும் அது.

கொள்கையற்ற கட்சியா அதிமுக?

கொள்கையிலும் சரி, செயல்பாட்டிலும் சரி; திராவிட இயக்கத்தின் சாரம்சத்தோடு ஒட்டிய கட்சி என்றே அதிமுகவைக் குறிப்பிட வேண்டும்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் திகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான வேறுபாடுகள் அர்த்தபூர்வமானவை என்றால், அதுபோலவே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான வேறுபாடுகளும் அர்த்தபூர்வமானவை. கொள்கையில் திக அடர்த்தன்மை கொண்டது என்றால் அதிமுக நீர்த்தன்மை கொண்டது. ஒட்டுமொத்த ஓட்டத்தில் எல்லோரும் சேர்ந்தே ஒரு பண்பாட்டை உருவாக்குகிறார்கள். இதில் மேலே கீழே என்று எதுவும் இல்லை.

திராவிட இயக்கத்தின் அடிப்படை சாராம்சம் என்ன? கூட்டாட்சி. அதற்கான பாதை சமூக நீதியும் ராஜ்ய நீதியும். அதாவது, சமூகங்களுக்கான பிரதிநிதித்துவமும் பிராந்தியங்களுக்கான பிரதிநிதித்துவமும்! கூட்டாட்சிக்கான இந்த இரட்டைப் பாதையில் அதிமுக இந்த 50 ஆண்டுகளிலும் தன்னைப் பிணைத்துப் பயணப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்.

அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் தன்னுடைய புதிய கட்சிக்கு 1972 செப்டம்பர் 30இல் உருவாக்கிய கொள்கை அறிக்கையானது இதைத் திட்டவட்டமாக பிரகடனப்படுத்துகிறது. “இன்றைய அரசமைப்பின்படி அதிகாரங்கள் தலைமையில் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. அவை பரவலாக்கப்பட்டு, மாநிலங்களும் அவற்றின் கீழ் அமைப்புகளும் போதுமான அதிகாரங்களைப் பெற வேண்டும்… பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரோடு பொருளாதாரத்தில் பிற்பட்டிருக்கின்ற அனைத்துச் சமூகத்தவர்களும் சமுதாயத்தில் உயர்நிலை வாழ்வைப் பெற தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!”

கூட்டாட்சித்துவத்தின் மிக முக்கியமான அம்சமாக ஆட்சிமொழி விவகாரத்தை அதிமுக பார்ப்பதை இந்த ஆவணம் சொல்கிறது. “இந்திய துணைக் கண்டத்தில் இந்தி ஒன்றுதான் தகுதியான மொழி; நாட்டைக் கட்டியாளத் தகுந்த மொழி; இந்திய துணைக் கண்டத்தின் ஆட்சிமொழி என்று சொல்லப்படும் எல்லாக் காரணங்களையும் எதிர்க்க அதிமுக முதன்மையாக நிற்கிறது! ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிமொழியாக அந்தந்த மாநில மொழியும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்புமொழியாக ஆங்கில மொழியும் அமைய வேண்டும்!”

சுவாரஸ்யமாக, மக்கள் பிரதிநிதிகளை மக்கள் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அதிமுக பேசுகிறது: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்போது அவர்களைத் திருப்பி அழைக்கிற உரிமை அவர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்!”

இந்த விஷயங்களுக்கு ஏற்ப இந்திய அரசமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்கிறது அதிமுக பிரகடனம். இந்தப் பாதைக்குத்தான் ‘அண்ணாயிஸம்’ என்று பெயரிட்டார் எம்ஜிஆர்.

சொல் அல்ல, தொடர் செயல்பாடு

இப்படி அதிமுக ஏட்டளவில் பேசிய விஷயங்களுக்கான அக்னி பரிட்சையைச் செயல்பாட்டு தளத்தில் அடுத்த ஓராண்டிலேயே எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

அப்போதுதான் கட்சி தொடங்கப்பட்டிருந்த நிலையில் திமுகவுடன் அதிமுக முற்றிலும் முரண்பட்டிருந்த நாட்கள் அவை. மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கோரும் வகையில் திமுக அரசு 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

இந்தத் தீர்மானத்தை அரசியல்ரீதியாக ஆதரித்து வாக்களிக்கவில்லை என்றாலும், எதிர்த்தும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது அதிமுக. மற்றபடி ஐந்து நாட்களுக்கு நீண்ட விவாதத்தில் அதிமுக சார்பில் பேசிய ஹெச்.வி.ஹண்டே, எட்மண்ட், கோவை செழியன், பெ.சீனிவாசன் ஆகியோர் திமுகவை எதிர்த்தாலும், கூட்டாட்சியை வலியுறுத்தியே பேசினார்கள். இந்த விவாதத்தில் தன்னுடைய கூட்டாட்சி முழக்கத்தை அதிமுக மீண்டும் உறுதிப்படுத்தியது: ‘கட்டுண்டு வாழோம், பிரிவினை நாடோம், சமநிலையில் இணைவோம்!’

அடுத்து 1977இல் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றி எம்ஜிஆர் முதல்வராக அமர்ந்தபோது திமுக தலைவர் கருணாநிதி சொன்னார்: “காவிரி விவகாரம் உள்ளிட்ட மாநிலம் சார்ந்த பிரச்சினைகளில் புதிய அரசு எடுக்கும் நல்ல முயற்சிகளுக்குத் திமுக ஆதரவு அளிக்கும்.” தொடர்ந்து எம்ஜிஆர் அறிவித்தார், “மொழிக் கொள்கையில் அதிமுகவும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருப்போம்!”

1980ல் அதுவரை 31% ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக்கியவர் எம்ஜிஆர். தமிழகத்தில் இன்று அமலில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டைத் தனிச் சட்டமாக நிறைவேற்றி அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இடம்பெறச் செய்ததன் வழியாகச் சட்டபூர்வப் பாதுகாப்பை உருவாக்கியவர் ஜெயலலிதா.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளி அமைப்புகளிடம் அனுசரணையாக இருந்ததோடு, அவர்களுக்கு மிக இக்கட்டான தருணத்தில் இரண்டு கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் எம்ஜிஆர். தன்னுடைய இறுதிக் காலத்தில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கைத் தமிழர் பிரச்சினையை மீண்டும் கனிவோடு அணுகலான ஜெயலலிதா ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

ஒரு மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா 1984 ஏப்ரல் 23 அன்று பேசிய கன்னி உரையிலும் சரி; அவர் உறுதிபட பேசிய கடைசி பேச்சான 2016 ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையிலும் சரி; தமிழகத்தின் உரிமைகளே பிரதான அம்சமாக இருந்தது. தன்னுடைய இறுதி நாட்களில் ஜெயலலிதா குறிப்பிட்ட முத்தாய்ப்பான வரி இது: “சுதந்திரம் என்றால் பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமை மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரம்தான்.” ஜிஎஸ்டி வழியே மாநிலங்களின் வரி இறையாண்மையை ஒன்றிய அரசு கையில் எடுக்கவிருந்த நாட்களில் அதை முழுமையாக எதிர்த்துவந்த ஜெயலலிதா ஜிஎஸ்டியை மனதில் கொண்டு குறிப்பிட்டது இது.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் திமுக உண்டாக்கிய அழுத்தங்களும், திமுகவுடனான ஊடாட்டமும் அதிமுகவின் செயல்பாட்டில் முக்கியமான பங்கு வகித்திருப்பதை உணர முடியும். எதிரெதிரே நின்று அரசியலில் ஈடுபட்டாலும், இரு கட்சிகளும் சேர்ந்தே பல செயல்பாடுகளுக்கு முழுமை கொடுத்திருக்கின்றன.

அரசியல் பண்புருவாக்கம்

ஒரு அரசியல் இயக்கம் அது பேசும் சித்தாந்தத்தைத் தாண்டி அதன் செயல்பாட்டில் எத்தகைய பண்பைக் கொண்டிருக்கிறது என்பதும், சமூகத்தில் எந்தத் தளத்தினரை விசேஷமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதும், ஒட்டுமொத்த அரசியல் சூழலுக்கு அது எதைக் கொடுத்திருக்கிறது என்பதும் முக்கியம்.

அதிமுக பெருமளவில் எல்லோரையும் அரவணைக்கும் பண்பைக் கொண்டிருக்கிறது; சமூகத்தில் உதிரிகளை விசேஷமாகப் பிரதிநிதித்துப்படுத்தியிருக்கிறது; ஒட்டுமொத்த தமிழக அரசியல் சூழலுக்கு ஒரு மிதத்தன்மையை அது  கொடுத்திருக்கிறது.

நெருக்கடிநிலைக்கான ஆதரவு, மாநில அரசைக் கவிழ்க்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 357க்கான ஆதரவு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு ஆதரவு, மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற இப்படியான பல சறுக்கல்களை அது எதிர்கொண்டிருந்தாலும், தேர்தல் தோல்விகள் வழியே மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு சரிவுகளில் இருந்து சீக்கிரமே அது மேலே வந்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனநிலையை அது பெருமளவில் அனுசரித்திருக்கிறது. எம்ஜிஆர் தன்னுடைய எல்லா பேச்சுகளிலும் கடவுளைக் குறிப்பிட நேர்கையில் எல்லாம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மூவரையும் உள்ளடக்கிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததும், கோயில்களில் அன்னதானத் திட்டத்தைக் கொண்டுவந்த ஜெயலலிதா கூடவே மசூதிகள், தேவாலயங்களுக்கும் அத்திட்டத்தைக் கொண்டுபோனதும் தற்செயல்கள் இல்லை.

எல்லாவற்றினும் அதிமுகவின் சிறப்பு, அது உருவாக்கிக்கொண்ட ‘வெகுஜன போட்டிக் கட்சி’ வடிவம் ஆகும். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இன்று எதிரெதிர் அரசியல் போக்குகள் அல்லது எதிரெதிர் நலன்களைக் கொண்ட கட்சிகளே பிரதான இடத்தில் இருக்கின்றன. ‘திமுகவுக்கான போட்டி’ என்பதை மட்டுமே - அதாவது நீ கிழக்கு என்றால், நான் மேற்கு என்று அல்லாமல் நீ கிழக்கு என்றால், நான் உன்னைக் காட்டிலும் கிழக்கு என்று முந்துவதை - தன்னுடைய பாதையாகக் கொண்டு வளர்ந்ததால்  அதிமுக தனக்கென்று ஒரு தனித்த வடிவத்தை உண்டாக்கிக்கொண்டிருப்பதுடன், ‘தமிழக அரசியல் மாதிரி’ எனும் பொதுத்தன்மை ஒன்றும் உருவாக இந்த அரை நூற்றாண்டில் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது. 

தீவிரப் போக்காளர்களுக்கான இடம், மென்போக்காளர்களுக்கான இடம் என்று இரு இடங்களையுமே திராவிட இயக்கமே கையில் கொண்டிருப்பதற்கு அது காரணமாக இருந்திருக்கிறது.

திமுக, அதிமுக இரண்டுமாகச் சேர்ந்தே ஏனைய மாநிலங்களை ஒப்பிட அமைதியான, நல்லிணக்க அரசியல் சூழல் இங்கே நிலவுகிறது. ‘திராவிட மாதிரி’ என்று பெயர் சூட்டிக்கொண்டாலும், அது ‘தமிழ் மாதிரி’தான். இதில் தனக்குள்ள உரிமையையும் பங்கையும் அதிமுக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று அது கையில் எடுக்க வேண்டியதும், காலங்காலமாக அது வெற்றிகரமாகக் கையாண்டுவந்திருக்கும் அரசியல் உத்தியும் அதுவே.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தன்னுடைய அடையாளத்தையும், பண்பையும் வெளிப்படுத்திக் கொள்வதில் அதிமுகவுக்குக் குழப்பமும் தயக்கமும் இருக்கிறது. தேவையில்லை. தன்னுடைய பிரதான இடத்தை அது விட்டுக்கொடுக்கலாகாது. துவண்டு கிடக்கும் அதிமுக மீண்டெழட்டும். துடிப்பான செயல்பாட்டோடு நூற்றாண்டை நோக்கி அது அடியெடுத்துவைக்கட்டும்!

- ‘குமுதம்’, அக்டோபர், 2022

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

2





லண்டன் மேயர் பதவிநயி தலீம்சுவாரஸ்ய அரசியலர் உம்மன் சாண்டிஅகமணமுறைசவுரவ் கங்குலிபாடத் திட்டம்வங்கிக் கொள்கைஇரைப்பைப் புற்றுநோய்எல்டிஎல்வாழ்க்கை முறைராஜன் குறை கிருஷ்ணன் கட்டுரைஅரசியல் பிரதிநிதித்துவம்லாபமின்மைகசாப்பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரியா?மேற்கத்திய உணவுகள்பாஜகவை வீழ்த்த கடுமையாக உழைக்க வேண்டும்: சமஸ் பேட்1962 மக்களவை பொதுத் தேர்தல்வாசகர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅரசு நிறுவனங்கள்ஈரான்விஐஎஸ்எல்சுகிர்தராணிகடுமையான கட்டுப்பாடுகள்ஜார்கண்ட்வட மாநிலத்தவர்கள்நல்ல ஆண்முன்னெடுப்புசோழர்கள் இன்று

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!