கட்டுரை, தலையங்கம், சட்டம் 5 நிமிட வாசிப்பு

அவதூறுகளுக்கான சுதந்திரம்

ஆசிரியர்
19 Sep 2022, 5:00 am
5

நீதித் துறை தொடர்பான விமர்சனங்களுக்காக அரசியல் விமர்சகர் ‘சவுக்கு’ ஆ.சங்கருக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தால் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மோசமான ஒரு தீர்ப்பு என்பதோடு, இந்திய நீதித் துறை தன்னுடைய சகிப்புத்தன்மையின் எல்லையை விஸ்தரித்துக்கொள்வது காலத்தின் கட்டாயம் என்பதையும் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

இந்திய ஜனநாயகத்தின் எல்லைகளையும், நீதித் துறை மீதான விமர்சனங்களையும் வளர்த்தெடுக்கும் வகையில் ‘நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று நெடுங்காலமாக இங்கே தாராளர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். அது ஏன் அவசியம் என்பதை மீண்டும் நமக்குச்  சுட்டுவதுடன், நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய மேலும் சில விஷயங்களையும் இந்த வழக்கு பொதுச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது.

தண்டிக்கப்பட்டிருக்கும் சங்கர் சமூகவலைதளங்கள் வழியாக உருவாகியிருக்கும் புது யுக ஊடகர்களில் ஒருவர். சில சந்தர்ப்பங்களில் அவர் விசிலூதியாகவும் செயல்பட்டிருக்கிறார். சில முறைகேடுகள், ஊழல்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறார். கூடவே, எல்லாம் தெரிந்ததான தொனியில் பல விஷயங்களைப் பற்றி ஏராளமான அவதூறுகளையும் பரப்பியிருக்கிறார்.

சமூக ஊடகங்களிலிருந்து உருவாகிவரும் இத்தகையோர் இன்று மரபார்ந்த ஊடகங்களுக்குச் சவால் விடத்தக்க அளவுக்குப் பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்தாலும், துரதிருஷ்டவசமாக அதற்கான பொறுப்புணர்வை எடுத்துக்கொள்வது இல்லை. மரபார்ந்த ஊடகங்கள் / ஊடகர்கள் தமக்கென்று வகுத்துக்கொண்டு கடைப்பிடிக்கும் எந்த நெறிமுறைகளும் இவர்களுக்குப் பொருட்டு இல்லை.

பல சமயங்களில் மேலெழுந்தவாரியான சில தகவல்களை அடித்தளமாகக் கொண்டு கிசுகிசுக்களைப் பரப்புவதும், இந்தக் கிசுகிசுக்களையே அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்கள் என்ற பெயரில் அவதூறுகளைப் பரப்புவதும் இத்தகையோரின் செயல்பாடுகள் ஆகிவிடுகின்றன. மோசமான தனிநபர் தாக்குதல்களும் இவற்றின் ஓர் அங்கம். சங்கர் இதுவரை விமர்சித்திருக்கும் பல விஷயங்களை வசைகள், அவதூறுகள் என்ற வரையறையின் கீழ் கொண்டுவர முடியும். ஆனால், இவையெல்லாம் சமூக ஊடகங்கள் கொண்டிருக்கும் உலகளாவிய பண்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும், சங்கர் போன்றவர்களை முன்வைத்து ஒரு ஜனநாயகச் சமூகம் தன்னுடைய சுதந்திர எல்லையை மட்டுப்படுத்திக்கொள்ளவும் முடியாது.

பெரும் மக்கள் திரளிலிருந்து வரும் குரல் அது. எல்லாவற்றையும் சேர்த்து அடித்துக்கொண்டுதான் வரும். பொதுப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் / செல்வாக்கு மிக்கவர்கள் அங்கே கவனிப்பதன் மூலம் சமூகத்தின் வெவ்வேறு எண்ணப் போக்குகளைப் புரிந்துகொள்ள முற்படலாம். அதற்கு மேல் அங்கே இடம் இல்லை. இரு தனிநபர்கள் இடையே இத்தகு பிரச்சினை எழும்போது அதை எதிர்கொள்ளும் வழிமுறை வேறாக இருக்கலாம். அமைப்பில் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒருவேளை தனிநபர் தாக்குதலுக்கு ஆளானாலும்கூட அதைப் புறந்தள்ளிக் கடக்கும் பெருந்தன்மை எதிர்பார்ப்புக்கு உரியது. சட்டத்தைக் கையாளும் நீதித் துறையினர் இயல்பாகவே ஏனையோரைக் காட்டிலும் சகிப்புத்தன்மையையும், பெருந்தன்மையையும் அதிகம் கொண்டிருக்க வேண்டும். 

முன்னதாக, யூட்யூபர் மாரிதாஸுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரைச் சந்தித்த பிறகுதான் அவருக்குச் சாதகமான தீர்ப்பைத் தந்ததாக ட்விட்டரில் சங்கர்  இட்ட பதிவை மேற்கோள் காட்டி மதுரை உயர் நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, ஒரு யூடியூப் சேனலில் பேசிய சங்கர், நீதித் துறை முழுவதிலுமே ஊழல் படிந்திருப்பதாக விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக அவர் மீது இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தாமாக முன்வந்து இந்த அவமதிப்பு வழக்கைப் பதிய உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போதைய தீர்ப்பையும் அவரை உள்ளடக்கிய அமர்வே தந்திருக்கிறது. உண்மையில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் சங்கர் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகளைத் தாண்டி, மொத்த நீதித் துறைக்கும் எதிரான அவரது குற்றசாட்டுகளே இந்தத் தீர்ப்பில் கணக்கிலெடுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், வெளியிலிருந்து பார்க்கும் மக்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள் என்று தார்மிக அடிப்படையில் நீதிமன்றம் யோசித்திருக்க வேண்டாமா? இந்தத் தீர்ப்பானது, நீதித் துறை உச்சபட்ச அதிகாரத்தைச் செயல்படுத்திப் பார்ப்பதான ஒரு தோற்றத்தை இன்று உருவாகிவிட்டிருப்பதையாவது நீதித் துறை உணர்கிறதா?   

வளர்ந்துவரும் பல ஜனநாயகங்கள் ‘நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்’ போன்ற காலனிய காலச் சட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டன;  இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழாவைக் கடந்துவிட்ட நிலையிலும், அவற்றைத் தூக்கிச் சுமப்பது ஓர் அவலம். நீதித் துறை மீதான விமர்சனங்களிலிருந்து பொதுச் சமூகத்தை விலக்கிவைக்கும் சட்டமாகவே மக்களால் இது பார்க்கப்படுகிறது. இந்தப் பார்வைக்கு இந்திய நீதித் துறை மதிப்பளிப்பது காலத்தின் கட்டாயம். 

இந்தியாவின் எல்லா அமைப்புகள் மீதும் எப்படி ஊழல் தொடங்கி சாதியம் வரை பல குற்றச்சாட்டுகள் மக்களுக்கு இருக்கின்றனவோ அதேபோல நீதித் துறை மீதும் அவர்களுக்குத் தீவிரமான முறைப்பாடுகள் இருக்கின்றன. ஏனைய எல்லா அமைப்புகளையும்போல அவற்றுக்குக் காது கொடுப்பதில் நீதித் துறைக்கு என்ன பிரச்சினை? கண்ணியத்தைக் குலைத்துவிடும் என்ற நீதித் துறையின் நம்பிக்கைக்கு மாறாக உண்மையில் இதுவரை வெளிவந்திருக்கும் விமர்சனங்கள்தான் நீதித் துறையின் கண்ணியத்தை மேம்படுத்தியிருக்கின்றன. எந்த ஒரு துறையிலும் பேசப்படாத முறைகேடுகளே அத்துறையைச் சீர்குலைக்கின்றன. 

ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் தொடர்பில் சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன் ‘யங் இந்தியா’ இதழில் (12.1.1922) இப்படி எழுதினார் காந்தி: “பேச்சு சுதந்திரம் என்பதற்கு, ஒருவருடைய பேச்சினால் மனம் புண்ணானாலும் அதைத் தடுக்காது விடுவது என்றுதான் அர்த்தம். பத்திரிகைகள் மிகவும் காரசாரமாக கருத்துகளை வெளியிடுவதோடு நில்லாமல், விஷயங்களைத் திரித்துக்கூறவும் விடப்படும்போதுதான் அவற்றுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று ஆகும்!” ஆம். நாம் பேசிக்கொண்டிருப்பது வசைகள், அவதூறுகளுக்குமான சுதந்திரத்தையும்தான்.

அடிப்படையில் அது கருத்துச் சுதந்திரம் இல்லை; வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இல்லை; சிந்தனைச் சுதந்திரம்; சிந்திப்பதற்கான சுதந்திரம். மனிதர்கள் சிந்திப்பதற்கான சுதந்திரம் சக மனிதர்களால் முடக்கப்படுவதை எதன் பெயராலும் மனித குலம் நியாயப்படுத்தவே முடியாது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

8

31


பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Kannan   2 years ago

ஒட்டு மொத்தமாக நீதிமன்ற அவமதிப்பு சட்டம் நீக்கப் படவேண்டும் என்று மேலோட்டமாக ஒரு கருத்து வைக்கப்படுவது மிக அபாயமான ஒன்றாகும். நெருப்பென்றால் சுட வேண்டும், பனி என்றால் குளிர வேண்டும் அது விதி. கட்டுரையில் சொல்லப்பட்டது போல சவுக்கு சங்கர் மேலோட்டமான ஒரு யூடியூபர். அழமின்றி அவர் சொன்ன சில கருத்துகளால் நீதிமன்றம் மீது மக்களுக்குள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட்டால் கலகம்தான் மிஞ்சும். தவிர நீதித்துறை மீது அடிப்படையற்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதிபதிகளை நிலைகுலைய வைப்பது சமூகப் பொறுப்பற்ற ஓர் குற்றம். சங்கர் தண்டிக்கப்பட்ட சட்ட நடைமுறை தவறாக கூட இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக சட்டத்தை நீக்க வேண்டும் என கோருவது நீதிபதிகளின் சுதந்திரத்தை பாதிக்கும், நீதி பரிபாலனம் குலையும். நீதிபதிகள் மனதில் அச்சம் ஏற்படும். தவிர ஏனைய பல வழக்குகளின் தீர்ப்புகள் செயலற்றுப் போய் விடும். அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவது அடியோடு நின்றுவிடும்.

Reply 3 3

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

I am also one among those who have been going through the postings of Savukku Sankar. Arunchol's editorial is exactly reflecting what were in my mind about his role as a social media contributor. It is a fair and justified assessment of Savukku Sankar.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

சவுக்கு சங்கர் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இவ்வளவு விரைவாக நடத்தப்பட்டதும்,எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக தீர்ப்பு தர முடியுமோ அதை தந்ததும், பொது மக்களிடையே பல்வேறு வகையான வினாக்களை எழத்தானே வைக்கும்.... சமூக ஊடகங்கள் பலவற்றில் பேச்சு சுதந்திரம் பற்றி பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக பேச வைத்தது சவுக்கு சங்கரின் வெற்றியாகவே பார்க்க வேண்டியுள்ளது... பல்வேறு ஜனநாயக நாடுகளில் காலனியாதிக்க , தேவையற்ற சட்டங்கள் புறந்தள்ளி இருப்பது கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது... பல தீர்ப்புகள் மற்றும் நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குரியதாகவே இருப்பினும், பொதுமக்கள் அதை தன்னளவில் விமர்சனம் வைத்து விட்டு நகர்ந்து செல்கிறார்கள்.... கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல் ,நீதித்துறையின் மேல் வைக்கும் விமர்சனங்கள் தான் நீதித்துறையை மேம்படுத்தும் என்று மேதகு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை வெளியிட்டால் தான் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடு,தன்னை மீண்டும் மீண்டும் உலகளவில் நிலைநிறுத்திக்கொள்ளும்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Abi   2 years ago

பேச்சு சுதந்திரத்தை மிக தவறாக பயன்படுத்தி வருவதில் சங்கர் No 1. ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்த நீதிபதி இடம் பெறாமல் இருந்திருந்தால் தண்டனை விதிக்கப்பட்டது சரியாக இருந்திருக்கும். It must be a warning to Misguiding and wrong teaching people like sankar. He gave wrong /false information about Kallakurichi incident.

Reply 2 7

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   2 years ago

சவுக்கு பிரபலமாக இருப்பதற்கு பாரம்பரிய ஊடகர்களின் பொறுப்புணர்வு மட்டுமல்ல; அவர்களின் கள்ள மௌனமும், கடமை மறத்தலும், கையறு நிலையும், அவர்கள் மத்தியில் உள்ள கருப்பு ஆடுகளும் காரணங்கள். தங்கள் 'மாண்பு' குலைவது குறித்து பொருட்படுத்தாதவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. ஊடகர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து அதிகாரத் தரப்புகளும் தங்கள் மாண்பு குறித்து மிகைமதிப்பு கொண்டுள்ளன. அதற்கெதிரான நீதித்துறையின் ஆயுதம் நேரடியாகவும் பட்டவர்த்தனமாகவும் இருக்கிறது. அவ்வளவே

Reply 11 3

Login / Create an account to add a comment / reply.

தி டெலிகிராப்முஸ்லிம்கள் படுகொலைதேவேந்திர பட்நவிஸ்ஆண் பெண் உறவுச் சிக்கல்விளைபொருள்சொற்கள்ஆட்சி மீது சலிப்புதகவல் தொழில்நுட்பத் துறைபாகிஸ்தான்நான் எதிர்காலத்தைச் சிந்திக்கிறேன்: லூலா பேட்டிவனப்பகுதிபாரத ஒற்றுமை யாத்திரைமுகப்புக் கடிதம் எழுதுவது எப்படிஜொமெட்டோவைக்கம்டீஸ்டா நதிஉள்ளத்தைப் பேசுவோம்சேவைத் துறைகே.அஷோக் வர்தன் ஷெட்டிk.chandruஆல்கஹால்சமஸ் திருமாவளவன்பெஜவாடா வில்சன்சுர்ஜீத் பல்லா கட்டுரைமாநிலங்கள்ஆசிரியர் பணியிடங்கள்அலுவலகம்நாடாளுமன்றம்ஆங்கிலத்தை அகற்றுவதில் நிதானம் அவசியம்காலம் மாறிப்போச்சு காங்கிரஸ்காரரே!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!