கட்டுரை, தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

அருஞ்சொல்லுக்கு வயது ஒன்று

ஆசிரியர்
22 Sep 2022, 5:00 am
8

அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம்.

உங்களுடைய ஆத்மார்த்தமான ஆதரவோடு முதல் வயதை நிறைவுசெய்து, இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது ‘அருஞ்சொல்’.

புதிதாகத் தொடங்கப்படும் எந்த ஓர் ஊடகமும் தனக்கென்று சில இலக்குகளை வகுத்துக்கொள்வது வழக்கம். நாம் சில இலக்குகளுக்காகவே ஊடகத்தைத் தொடங்குகிறோம். காந்தி குறிப்பிட்ட சுயராஜ்ஜியமும் சமத்துவமுமே நம் லட்சியம். இதில் நமக்கான பணிக்களம் தமிழ்ச் சமூகம்... 

எல்லாச் சமூகங்களுக்கும் இணையாகத் தமிழ் மக்களின் உரிமைகளைத் தூக்கிப்பிடிப்பதும், தமிழ்ச் சமூகம் உரிய அதிகாரப் பகிர்வைப் பெறச் செயலாற்றுவதும், சர்வதேச சிந்தனைத் தளத்தில் தனக்கென்று ஒரு தனியிடத்தை அது பெற தமிழ்ச் சமூகத்தில் அறிவொளி பாய்ச்சுவதுமே ‘அருஞ்சொல்’ இதழின் பிரதான பணி இலக்குகள் ஆகும். அதாவது, யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், ஒட்டுமொத்த மனித குல சமத்துவத்துக்காகச் செயலாற்றும் ஓரிடத்துக்குத் தமிழ்ச் சமூகம் முன்னகர வேண்டும். இதற்காக அறிவுத்தளத்தில் உழைப்போரின் முன்வரிசையில், இனி ‘அருஞ்சொல்’ எப்போதும் நிற்கும்...

உலகின் நிகழ்வுகளைத் தமிழ்ப் பார்வையிலிருந்து ‘அருஞ்சொல்’ அணுகும்; பொருளாதாரம், கலாச்சாரம், கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல் என்று பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்த முற்பட்டாலும், அரசியலுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் அது பிரதான கவனம் அளிக்கும்; ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையிலான பாலமாக அது இருக்கும். இந்தியாவில் சமத்துவத்துக்கான கூட்டாட்சிப் பாதைகளாக சமூக நீதியையும், ராஜ்ஜிய நீதியையும் அது நம்புகிறது; எது ஒன்றின் பெயராலும் உருவாக்கப்படும் வெறுப்பரசியலை ஒருபோதும் அது அனுமதிக்காது; எந்த வகைப் பாகுபாட்டுக்கு எதிராகவும் எப்போதும் அது உறுதிபட நிற்கும்; சாமானிய மக்களின் குரலாக ‘அருஞ்சொல்’ செயல்படும்.”

நாம் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த பயணத் திசை இது! 

முதல் ஆண்டில் செய்தது என்ன?

தன்னுடைய வாக்குறுதிக்கு இயன்றவரை ஒப்பளித்துச் செயல்பட்டிருக்கிறது ‘அருஞ்சொல்’.

இந்த ஓராண்டில் தன்னுடைய சாத்தியத்துக்குட்பட்டு பல தனித்துவமான விஷயங்களை ‘அருஞ்சொல்’ கையாண்டிருக்கிறது. ராமச்சந்திர குஹா, ப.சிதம்பரம், யோகேந்திர யாதவ் என்று பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழுக்கு அது கொண்டுவந்திருக்கிறது. தமிழிலும் அப்படி கே.சந்துரு முதல் சீனிவாச ராமாநுஜம் வரை பலர் தொடர்ந்து எழுதும் களமாக அது உருவெடுத்திருக்கிறது. இந்த ஓராண்டில் 600+ கட்டுரைகளை ‘அருஞ்சொல்’ வெளியிட்டிருக்கிறது என்றால், 150+ எழுத்தாளர்கள் அவற்றைப் பங்களித்திருக்கிறார்கள். ஏதோ பத்துப் பேர் தங்களுக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இடமாக இது இல்லை. இத்தகைய விரிந்த பன்முகப் பங்களிப்பு தமிழில் இதுவரை நிகழ்ந்திராதது.

அது ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்த அரசை அணுகுவதிலும் பிரச்சினைகளின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்தது ‘அருஞ்சொல்’. ஒருபோதும் தனிநபர் தாக்குதலையோ, வெறுப்பரசியலையோ அனுமதிக்கவில்லை. அரசுகளின் எந்த ஒரு முடிவையும் சாமானிய மக்கள் பார்வை சார்ந்து விமர்சித்தது.

தமிழக ஊடகங்கள் கவனத்துக்கே வராத பல விஷயங்களை முன்கூட்டி ‘அருஞ்சொல்’ அடையாளம் காட்டியது. ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை இனி முழுவதுமாக ஒரே நுழைவுத்தேர்வின் கீழ் கொண்டுவரப்படவிருப்பதை முன்கூட்டி எச்சரித்ததும்,  மக்கள்தொகை மறுவரையறையானது இப்போதுள்ள நடைமுறைப்படியே மேற்கொள்ளப்பட்டால், தென்னிந்தியா பெரும் இழப்பை எதிர்கொள்ளும் என்று இப்போது தொடர்ந்து எச்சரித்துவருவதும் உதாரணங்கள்.

தன்னுடைய ஆக்கபூர்வமான விமர்சனங்களால் சில முக்கியமான விஷயங்களில் அரசின் கவனத்தைத் திருப்பியது ‘அருஞ்சொல்’. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்; சென்னை, அடுத்து கோவை இந்த இரு பிராந்தியங்களைத் தாண்டி தமிழ்நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக முன்னெடுக்கப்படும் தொழில் கொள்கை. இவை இரண்டும் அவற்றில் முக்கியமானவை.

சாமானியர்கள் தங்கள் பிரச்சினையை முன்வைக்கலாம் என்ற நம்பிக்கையை அது பெற்றது. சாகுபடியை முடித்துவிட்ட ஒரு விவசாயி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொண்டுசேர்க்க வழியில்லாமல் அலைக்கழிக்கப்பட்டபோது ‘அருஞ்சொல்’ கவனத்துக்கு அதைக் கொண்டுவந்தார். உடனடியாக அரசின் கவனத்துக்கு அந்த விஷயம் சென்று வேளாண் அலுவலர்கள் அந்த விவசாயியின் கிராமத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து உரிய நடவடிக்கையைக் கையோடு எடுத்தார்கள்.

சர்வதேச அளவிலான சில விஷயங்களில் ‘அருஞ்சொல்’ பெரும் கவனத்தைக் கொடுத்ததற்கு, கோர்பசெவ் மறைவை ஒட்டி வெளியிடப்பட்ட தொடர் கட்டுரைகளைச் சுட்டலாம். வரலாற்றில் இரு முரண்பட்ட திசைகளை விவாதிக்க அது வெளியிட்ட சாவர்க்கர், நேரு தொடர் கட்டுரைகளையும் சுட்டலாம். ஆண் - பெண் உறவை விவாதிக்கும் வகையில் அனுஷா நாராயண் - அராத்து எழுதிய ‘இரு உலகங்கள்’, வேலையையும் அலுவலகத்தையும் வெற்றிகரமாக அணுகும் வழிமுறையைப் பேசும் வகையில் ஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய ‘வேலையும் வாழ்வும்’, டிஜிட்டல் முறைகேடுகளை எச்சரிக்கும் வகையில் ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய ‘சைபர் வில்லன்கள்’, ஒவ்வொருக்கும் மருத்துவ விழிப்புணர்வைப் புகட்டும் வகையில் டாக்டர் கணேசன் எழுதிவரும் ‘வரும் முன் காக்க’ ஆகிய தொடர்களை வாசகர்கள் கொண்டாடினர்.

சிந்தனைச் சுதந்திரத்துக்கான உறுதியான குரலாக ‘அருஞ்சொல்’ திகழ்ந்திருக்கிறது. அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொண்ட  சாட்டை முருகன், சவுக்கு சங்கர் ஆகியோரின் அவதூறுகளுக்கும்கூட அது பரிந்து பேசத் தயங்கவில்லை.

பல முக்கியமான காணொளிப் பேட்டிகளை ‘அருஞ்சொல்’ வெளியிட்டது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுடனான மூன்று மணி நேர உரையாடல் போன்ற பேட்டிகள் இத்துறையில் ஒரு புதிய முயற்சி.

இவை அத்தனைக்கும் இடையில் பதிப்புப் பணியிலும் ‘அருஞ்சொல்’ இறங்கியது. ‘அருஞ்சொல் வெளியீடு’ கொண்டுவந்த நீதிநாயகம் கே.சந்துருவின் ’நானும் நீதிபதி ஆனேன்’ நூல் 2022 சென்னை புத்தககக்காட்சியில் அதிகம் விற்ற நூல்களில் ஒன்றானது. சமஸ் எழுதிய ‘லண்டன்’ நூலும் அடுத்து, அயல்பணி முறையில் 'அருஞ்சொல்' தொகுத்துக் கொடுத்த ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

வரும் ஆண்டுக்கான மாற்றங்கள்

தன்னுடைய பாதையில் தொடர்ந்து முன்னகரும் ‘அருஞ்சொல்’, சில மாற்றங்களை வாசகர்களோடு விவாதித்து முடிவெடுத்திருக்கிறது.

அன்றாடம் இரு பதிவுகள்; ஐந்து நிமிடத்துக்குள் வாசித்திட தக்க வகையில் சின்னதாகவும், நெடுங்கட்டுரைகளை ஞாயிறு அன்று மட்டும் பிரசுரித்திடுமாறும் கேட்டிருக்கிறார்கள். 

ஆசிரியர்கள் - மாணவர்கள் தரப்பிலிருந்து ஒரு விஷயத்தை முழுமையாக அறிமுகப்படுத்தும் விளக்கக் கட்டுரைகளைக் கேட்டிருக்கிறார்கள். 

வாரம் ஒரு புத்தக அறிமுகம் கட்டாயம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆளுமைகளுடனான உரையாடல்கள் வகையிலான பேட்டிகளையும் கேட்டிருக்கிறார்கள்.

உள்ளூர் விஷயங்களுக்குக் கூடுதல் இடம் கேட்டிருக்கிறார்கள்.

இவை அத்தனையையும் ஆசிரியர் குழு விவாதித்து அடுத்தடுத்து நடைமுறைக்குக் கொண்டுவரும். இன்னும் வரவிருக்கும் வாசகர்களின் கருத்துகளும் கருத்தில் கொள்ளப்படும்.

அச்சு வடிவிலும் ‘அருஞ்சொல்’ கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தைப் பலர் வலியுறுத்துகிறார்கள். இந்த விஷயத்தில் கொஞ்சம் நிதானமாகக் கால் பதிக்க ஆசிரியர் குழு நினைக்கிறது. சீக்கிரமே அச்சிதழாகவும் ‘அருஞ்சொல்’ மலரும். 

தொடரட்டும் பந்தம்

தமிழில் முற்றிலும் மாறுபட்ட ஒரு முயற்சியாகத்தான் ‘அருஞ்சொல்’லின் அறிமுகம் அமைந்தது. ஒவ்வொரு நிமிடமும் செய்திகளையும் கட்டுரைகளையும் வாசகர்கள் மீது ஊடகங்கள் கொட்டும் ஒரு காலகட்டத்தில், ‘வாசகர்களை நுகர்வோராக அணுக மாட்டோம்; பரபரப்பின் பின் ஓட மாட்டோம்; ஒரு நாளில் அதிகபட்சம் மூன்று பதிவுகளுக்கு மேல் தர மாட்டோம்; அன்றாடம் அரை மணி நேரத்தை எங்களுக்குத் தாருங்கள்; உங்கள் அறிவுப் பசிக்கான சரியான தீனியை நாங்கள் தருகிறோம்’ என்ற உத்தரவாதத்துடனேயே வாசகர்களை ‘அருஞ்சொல்’ அணுகியது.

எளியோரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணினோம். சந்தா செலுத்துவோருக்கானதாக மட்டும் அல்லாமல், தளத்தை எல்லோருக்குமானதாகத் திறந்து வைத்தோம். சந்தாதாரராகப் பதிவுசெய்துகொள்ளவும் சந்தா தொகை தேவை இல்லை என்று சொன்னோம். ‘வாசியுங்கள்... பின்னர் உங்களால் இயன்ற தொகையைச் சந்தாவாக அளியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டோம். வாசிப்பனுபவத்தைத் தொந்தரவுக்குள்ளாக்கக் கூடாது என்பதால், மிகக் குறைந்த விளம்பரங்களையே தளத்தில் அனுமதித்தோம்.

இப்படியெல்லாம் ஓர் ஊடகத்தை நடத்த முடியுமா என்ற கேள்வி பலருக்கு இருந்தது. இந்த ஓராண்டுப் பயணம் அந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலாக அமைந்திருக்கிறது.

நல்ல விஷயங்களை மக்கள் ஒருபோதும் புறக்கணிப்பது இல்லை என்பதை ‘அருஞ்சொல்’ வாசகர்களாகிய நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். ‘அருஞ்சொல்’ இதழை வாரியணைத்துக்கொண்டீர்கள்.

அன்றாடம் காலை எழுந்ததும் செய்தித்தாளைத் தேடுவதைப்போல, பலர் இன்று 5 மணிக்கெல்லாம் ‘அருஞ்சொல்’ தளத்துக்கு வந்துவிடுகிறார்கள். இன்னும் தங்களுக்குத் தோதாக மதியத்தில், மாலையில், இரவில் என்று குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் வாசகர்களும் இருக்கிறார்கள். படைப்பாளிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியலர்கள்,  சமூகச் செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், குடியானவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் வாசிக்கும் இதழாக அது உருவாகியிருக்கிறது. குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், போட்டித்தேர்வர்கள் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள்.

இப்படி வாசிப்பவர்களில் பலர் தங்களால் இயன்ற அளவுக்கு சந்தா தொகையையும் செலுத்துகிறார்கள். தனிநபர் சந்தாவாக அல்லாமல் சமூக சந்தாவாகக் கருதி லட்ச ரூபாய் அளித்த வாசகரும்கூட உண்டு. குடும்பத்தோடு ‘அருஞ்சொல்’ அலுவலகம் தேடி வந்து பிள்ளைகள் சேமிப்புப் பணத்தை சந்தாவாகத் தந்துச் சென்ற வாசகரும் உண்டு.

முக்கியமான விஷயம் இதுதான்... சமூகத்துக்காக காரியமாற்றுவோரைச் சமூகம் தம் கைகளில் ஏந்தி நிற்கும். இந்த முதலாண்டின் செய்தியாக நீங்கள் கொடுத்துவரும் ஆதரவை நாங்கள் இப்படித்தான் எடுத்துக்கொள்கிறோம். இதற்காக உங்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவிப்பதோடு, உங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையில்  ‘அருஞ்சொல்’ செம்மையான பாதையில் பயணிக்கும் என்று உறுதியையும் உங்களிடம் கூறுகிறோம்.

தொடர்புடைய பதிவுகள்

நல்ல இதழியலை ஆதரியுங்கள்... இது உங்கள் கடமை

விடைபெறுகிறேன்: நன்றி தி இந்து!

என்னைச் சுற்றும் வதந்திகள்

வேலையைத் தொடங்கினோம்

அருஞ்சொல்: நமக்கென்று ஒரு பாதை...  


3

6

பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   4 months ago

விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டால் மகழ்ச்சி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   4 months ago

தவறான கருத்துகளை நீக்குவோம் என்று சொல்லும் நீங்கள் வாசகர்கள் கருத்தில் உள்ள எழுத்துப் பிழைகளையும் முடிந்தால் இலக்கண பிழைகளையும் நீக்கலாமே!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Elavarasi T   4 months ago

அறம் வளர்க்க கல்பவி அடிப்படை. அதிலும் பள்ளிக்கல்வி குறித்தும் தேவையான மாற்றஙாகள் குறித்தும் ஊபகங்கள் நேர்மறையான கருத்துகளை பகிர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒரு ஆசிரிய வாசகமாக வாழ்த்துகிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

SASI ANANTH   4 months ago

தமிழ் ஊடக உலகில் புதுமையை நிகழ்த்திக் கொண்டிருக்கிற அருஞ்சொல் தளத்தின் அறிவுப் பயணம் தொடர வாழ்த்துகள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Thillai Govindan R   4 months ago

ஓராண்டு பயணம் அர்த்தமுள்ளதாக இருந்தது.வாழ்த்தகள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Arunachalam Vetrivel   4 months ago

தமிழ் ஊடக உலகில் மாபெரும் துணிச்சலுடன் நீங்கள் ஆரம்பித்த “ அருஞ்சொல்” ஒரு புதிய அறிவுலக இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளது ஓராண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் “ அருஞ்சொல்” தரமான ஊடகத்திற்கு சான்றாக நின்று அறம் வளர்க்கட்டும் வாழ்த்துகள் சமஸ்!!!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ravichandran Somu   4 months ago

வாழ்த்துகள் !!!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Abi   4 months ago

வாழ்க வளர்க

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

வரிவிதிப்புசாவர்க்கர் காந்திஇந்தியாப.சிதம்பரம் அருஞ்சொல்பி.எல்.சந்தோஷ்தமிழர்பத்ம விருதுகளை எவ்வளவு காலத்திற்குப் புனிதப் போர்வவங்க தேசப் பொன் விழாபிடிஆர் பேட்டிகலைஞர் சண்முகநாதன்அதிதீவிர தேசியவாதிகள்ஷுபாங்கி கப்ரே கட்டுரைசீர்திருத்தங்கள்பல் சொத்தைஜி ஸ்கொயர்ஜெயின்கள்கலைஞர் செல்வம்கேரளம்உள்ளூரியம்வினோத் ராய்வ.உ.சி.மழைநீர் வடிகால்சமஸ் - சேதுராமன்பகத்சிங்ஸரமாகோவின் உலகம்காஷ்மீர் அரசியல்பெரும்பான்மைவாதத்தின் பெருமிதம்லவ் டுடேலால்பகதூர் சாஸ்திரிசமஸ் ராஜன் குறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!