கோவையில் நடந்திருக்கும் கார் வெடிப்புச் சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பயங்கரவியக் குழுக்கள் தலையெடுக்கின்றனவா எனும் கேள்வியைத் தீவிரமாக எழுப்புகிறது. அப்படியென்றால், இத்தகு நடவடிக்கைகளில் தொடர்புடைய எந்த அமைப்பும் வேரடி மண்ணோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.
கோவை மட்டும் அல்லாது, மாநிலத்தில் எங்கெல்லாம் இத்தகு ஆட்கள், அமைப்புகள் செயல்பட்டுவருகிறார்கள் என்பதைக் கண்டறிந்து எல்லோரையும் சட்ட வளையத்துக்குள் வளைக்க வேண்டும். சமூக விரோதிகளை அணுகுவதில் எந்த வேறுபாடுகளுக்கும் இடம் இல்லை. இத்தகு அமைப்புகளுக்கு ஆதரவாக அரசியல் தளத்தில் செயல்படும் அமைப்புகளும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஒத்துழைத்து அரசோடு சேர்ந்து செயல்படுவதில் மதம்சார் அமைப்புகளுக்கும் இந்தப் பணியில் தார்மிகப் பொறுப்பு உண்டு.
கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த ‘கோவை தொடர் குண்டுவெடிப்புகள்’தான் தமிழகத்தில் மதவெறி அரசியலுக்குப் பெரும் தூபவூக்கியாக அமைந்தது. 11 இடங்களில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். இந்து - முஸ்லிம் இரு சமூகங்கள் இடையிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, தமிழகத்தில் அதுவரை இல்லாத மனப் பிளவை அது உண்டாக்கியது.
தீபாவளியை ஒட்டி நடந்திருக்கும் இப்போதைய சம்பவத்தின் முழு விவரங்களும் இன்னும் வந்தடையவில்லை என்றாலும், கிடைத்திருக்கும் தரவுகள் ‘நடந்திருப்பது இயல்பான விபத்து இல்லை’ என்பதை உணரத் தருகின்றன.
காரில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்த இளைஞர் ஜமேஷா முபீன் (25), தேசியப் புலனாய்வு முகமையால் (என்ஐஏ) ஏற்கெனவே விசாரிக்கப்பட்டிருக்கும் பின்னணியைக் கொண்டிருக்கிறார். ஜமேஷா முபீனின் வீட்டிலிருந்து 75 கிலோ பொட்டாஷியம் நைட்ரேட், அலுமினியம் தூள், சல்பர், சார்கோல் உள்ளிட்ட வெடி உட்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஜமேஷா முபீனோடு தொடர்பில் இருந்து கைதுசெய்யப்பட்டிருக்கும் ஐந்து பேரில் ஒருவரான முஹம்மது தல்கா முந்தைய கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான நவாப் கானுடைய மகன் என்பது தெரியவந்திருக்கிறது. கேரளம், இலங்கை என்று இவர்களுடைய தொடர்புகள் விரிந்திருப்பதான சந்தேகங்களின் அடிப்படையில், அப்படியான தொடர்புகள் பயங்கரவிய குற்றப் பின்னணியோடு இணைந்திருப்பதான சாத்தியங்களைத் தமிழக போலீஸார் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த உடனேயே துரிதமாகச் செயல்பட்டது தமிழக அரசு. அடுத்த ஆறு மணி நேரத்தில் டிஜிபி சைலேந்திர பாபு கோவையில் இருந்தார். அடுத்தடுத்து துப்புகளையும் காவல் துறை வெளிக்கொண்டுவந்தது. இந்நிலையில், ‘மாநிலம் தாண்டிய பரிணாமங்கள், பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்பு உள்ளதால், வழக்கை தேசியப் புலனாய்வு முகமை’க்கு மாற்றிட பரிந்துரைப்பதாக அடுத்த மூன்றே நாட்களில் அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
மாநிலத்துக்கு வெளியே நீளும் இத்தகைய வழக்குகளை விசாரிப்பதில் உள்ளூர் போலீஸாருக்கு சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன; தேசியப் புலனாய்வு முகமைக்கு அப்படி இல்லை; மேலும், பயங்கரச் செயல்பாடுகள் தொடர்பான எந்த வழக்கையும் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே தேசியப் புலனாய்வு முகமையால் தனக்குக் கீழே எடுத்து விசாரிக்க முடியும். நிர்வாகரீதியாக இந்த விஷயம். “தமிழகக் காவல் துறை இந்த வழக்கை முறையாகக் கையாளவில்லை; பயங்கரவாதிகளிடம் திமுக அரசு மென்மையாக நடந்துகொள்கிறது” என்று மூன்று நாட்களாகப் பேசிவந்ததோடு, கோவையில் முழு அடைப்புப் போராட்டத்தையும் அறிவித்தது பாஜக. அரசியல்ரீதியாக இந்த விஷயம். தமிழக அரசு இம்முடிவு நோக்கி நகர்ந்ததற்கான நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், இந்த முடிவை அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
அடிப்படையிலேயே கூட்டாட்சி விழுமியங்களைப் புறந்தள்ளியே ‘தேசிய புலனாய்வு முகமை’ உருவாக்கப்பட்டது. மாநிலக் காவல் துறைகளைக் காலத் தேவைக்கு ஏற்ப சீரமைப்பதற்குப் பதிலாக ஒரு குறுக்குத் தீர்வாக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. அசாதாரண அதிகாரங்கள் அதற்கு வழங்கப்பட்டன. பிற்பாடு மாநிலக் காவல் துறைகளைக் கையாலாகதவையாக ஆக்கும் வகையிலேயே ‘மாநிலங்கள் அனுமதியே இல்லாமல் விசாரிக்கும் அதிகாரம்’ அதற்கு வழங்கப்பட்டது.
தமிழகம் கொள்கை அடிப்படையில் இதையெல்லாம் எதிர்த்துவரும் அரசைக் கொண்டிருக்கிறது. நிர்வாகரீதியாக, கோவை சம்பவத்தை உள்ளூர் போலீஸாரின் ஆற்றல் என்னவென்று வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக ஆக்கியிருக்க வேண்டும். தேவையெனில், மாநில அளவில் பயங்கரச் செயல்கள் தடுப்புச் சிறப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கி இருக்கலாம். அதேபோல, அரசியல்ரீதியாக இந்த அரசு எல்லாச் சமூகங்களையும் ஒன்றுபோலவே பாவிக்கிறது என்பதையும் கடும் நடவடிக்கைகளின் வழி வெளிப்படுத்தி இருக்கலாம். அந்த வகையில் தமிழக அரசுக்கு இது ஒரு சறுக்கல் என்றே கருத வேண்டும்.
வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிவிட்டாலும், இது தொடர்பில் தமிழக அரசுக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. தமிழக உளவுத் துறைக்கு இத்தகையோரின் நகர்வுகள், நடமாட்டங்கள் எப்படித் தெரியாமல் இருந்திருக்கின்றன; ஒருவேளை இந்த விபத்து நடக்காமல், காவல் துறையின் இப்போதைய சந்தேகங்களின்படி வழக்கில் சிக்கியிருப்பவர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தால் எவ்வளவு பெரிய விளைவுகளைத் தமிழகம் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்? இந்தக் கேள்விகளுக்குத் தமிழக அரசு விடை தேட வேண்டும். இதற்கேற்ப தமிழகக் காவல் துறையை மறுசீரமைக்க வேண்டும்!

2

1





பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 5 months ago
அருஞ்சொல்லின் கருத்து முழுதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. கோவையின் கடந்தகால, இதேமாதிரியான விரும்பத்தகாத. சம்பவங்கள் மற்றும் தற்போது அங்கு நிலவும் சட்ட ஒழுங்கு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே அத்தகைய முடிவை மாநில அரசு எடுத்திருக்க வேண்டும். விசாரணையை மாநில காவல் துறையே தொடர்ந்திருந்தால், திமுக அரசு மீது பிஜேபி கட்சி சொல்லும் குற்றச்சாட்டு, அதாவது சிறுபான்மையினர் மீதான மென்மைப்போக்கு மற்றும் வாக்கு வங்கி அரசியல் மேலும் வலுப்பெற்று மாநில அரசுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். மேலும், சிறுபான்மையினர் மீதான நடுவனரசின் போக்கு பற்றி முழுவதாக அறிந்த ஸ்டாலின் அரசு, ஒரு நடைமுறை சாத்தியமான முடிவை எடுத்ததின் மூலம், விரும்பத்தகாத மோதல் சூழ்நிலையை தவிர்த்துள்ளது..
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Periasamy 5 months ago
நல்ல தோழமை சுட்டுதல்.. அருஞ்சொல்லுக்கும் திமுக அரசுக்கும் இடையிலான தேனிலவு காலத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வாருங்கள்
Reply 2 1
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 5 months ago
இன்றைய இந்து ஆங்கிலப் பதிப்பின் முதல் பக்கத்தில் அமித் ஷா சொல்கிறார்: NIAவின் அங்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் வேண்டும், நாம் எதிர்கொள்ளவிருக்கும் நாட்களுக்காக, உண்மையான கூட்டாட்சியை எய்துவதற்காக.
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.