கட்டுரை, தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

மூன்றாமாண்டில் அருஞ்சொல்: சாதித்தது என்ன?

ஆசிரியர்
22 Sep 2023, 5:00 am
2

அன்பு வாசகர்களுக்கு, வணக்கம்!

வெற்றிகரமாக இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் ‘அருஞ்சொல்’. பெரும் வணிக நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் பின்னின்று இயக்க பிரம்மாண்ட பலத்துடன் கோலோச்சும் ஊடகங்கள் மத்தியில், ஒரு சின்ன தாவரம் போன்று தோன்றியது ‘அருஞ்சொல்’. இன்று தனக்கென்று ஓர் இடத்தை அந்தச் சிறு தாவரம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.  

அன்றாடம் நூற்றுக்கணக்கான செய்திகள், பரபரப்பான விவாதங்களை வாசகர்களுக்குத் தருவதே ஊடகப் பணி என்று ஆகிவிட்டிருக்கும் இன்றைய போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வகைமையை ‘அருஞ்சொல்’ உருவாக்கியது. அதிகாலையில் வெளியாகும். அன்றாடம் ஒரு கட்டுரை; அதிகமானால் மேலும் ஒன்று. விஷயம் எதுவாயினும் விரிவான தரவுகளோடு, அறிவார்ந்த விவாதத்துக்கு வழிவகுக்கும் வகையில் இருக்கும். பரபரப்பு இதழியலுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. 

2021இல் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு நாம் களம் இறங்கியபோது, ‘இதெல்லாம் நடக்கிற கதையா?’ என்று பலர் திகைத்தார்கள். இதோ, இரண்டாண்டே ஆண்டுகளில் ஒரு தனித்த அடையாளத்தையும் மதிப்பையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது ‘அருஞ்சொல்’. மாணவர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை அறிவார்த்த வாசிப்புக்கான திறவுகோலாக நம்முடைய தளத்தைக் கருதும் பெரும் வாசகப் படை இன்று உருவாகியிருக்கிறது.

என்ன செய்திருக்கிறோம் இந்த இரண்டாண்டுகளில்?

எவ்வளவோ செய்திருக்கிறோம். இரண்டு முக்கியமான விஷயங்களை மட்டும் இங்கே சுட்டுகிறோம்.

• 2021 செப்டம்பர் 22 அன்று ‘அருஞ்சொல்’ வெளியான முதல் நாளில் அது வெளியிட்ட இரு கட்டுரைகளில் ஒன்று, பாலசுப்ரமணியன் முத்துசாமி எழுதிய ‘உழவர் எழுக!’ விவசாயிகளுடைய வருமானத்தை அதிகரிக்கும் வகையில், சூரிய ஆற்றல் வழி மின்சார உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்த வேண்டும் என்பதே அந்தக் கட்டுரையின் மையம். குஜராத்தில் இந்தத் திட்டம் எப்படி வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறது; தமிழகம் எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரையின் வழி விவரித்ததோடு தொடர்ந்து தலையங்கம், பேட்டிகளையும் வெளியிட்டோம். விளைவாக இத்திட்டம் குறித்து நம்முடைய கட்டுரையாளர், பேட்டியாளருடன் பேசியது தமிழக அரசு. தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வில் ஓர் ஒளியை உண்டாக்கும் வகையில் சமீபத்தில் இத்திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

• புதிய நாடாளுமன்றம் கூடுதல் இருக்கைகளோடு கட்டப்படுவதானது, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறுக்கப்படவுள்ளதற்கான அறிகுறி. இதன்படி இந்தி பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்; தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், இது ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்தாக அமையும் என்று சொல்லி, மிக விரிவாக ஒரு வாரம் முழுக்கத் தொடர் கட்டுரைகளை சென்ற ஆண்டில் வெளியிட்டது அருஞ்சொல். இதோ மூன்றாமாண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் நாட்களில், தமிழக முதல்வர் தொடங்கி தமிழ்நாடு முழுக்க விவாதிக்கப்படும் பேசுபொருளாக இது உருவெடுத்திருக்கிறது. வேறு எந்தப் பத்திரிகையும், தொலைக்காட்சியும் தமிழகத்தில் இவ்வளவு தீவிரமான விவாதத்தை நடத்திடவில்லை என்பதை இங்கே நாம் சுட்ட விரும்புகிறோம்.

ஊடகத்தின் உண்மையான வெற்றி என்பது இதுதான்; சமூகத்தில் தொடர்ந்து அது இடையீடு செய்வதும், மாற்றங்களுக்கு அடிகோலுவதும்! ‘அருஞ்சொல்’ தொடர்ந்து அதைச் செய்கிறது.

சென்ற ஆண்டில் ‘அருஞ்சொல்’ முன்னெடுத்த பெரும் காரியம் என்று ‘சோழர்கள் இன்று’ நூல் உருவாக்கத்தைக் குறிப்பிடலாம். பண்டைய தமிழகத்தின் 2500 ஆண்டு வரலாற்றை சாமானிய வாசகர்களும் அறிந்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்நூல் தமிழில் முன்னுதாரணமற்ற ஒரு முயற்சி. அதனால்தான் ‘தினத்தந்தி’ முதல் ‘ஆனந்த விகடன்’ வரை, ‘குமுதம்’ முதல் ‘புத்தகம் பேசுது’ வரை பல பத்திரிகைகளும் ‘இந்நூல் ஒரு பொக்கிஷம்’ என்று பொருள்பட எழுதின. வெளிவந்த மூன்று மாதங்களுக்குள் மூன்று பதிப்புகள் வெளியானது இந்நூலுக்கும் ‘அருஞ்சொல்’ உருவாக்கத்துக்கும் வாசகர்கள் கொடுக்கும் மதிப்புக்கான சாட்சியம்.

ஊடகச் சுதந்திரத்துக்கு அவற்றின் பொருளாதாரச் சுதந்திரம் மிக முக்கியம். ‘அருஞ்சொல்’ இங்கு வெளியாகும் ஒவ்வொரு தரவும் சமூகத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் சென்றடைய வேண்டும் என்று எண்ணுகிறது. ஆகையால், நாம் சந்தா செலுத்துவோருக்கானதாக மட்டும் அல்லாமல், தளத்தை எல்லோருக்குமானதாகத் திறந்து வைத்திருக்கிறோம். ‘வாசியுங்கள்... பின்னர் உங்களால் இயன்ற தொகையைச் சந்தாவாக அளியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டோம்.

அன்றாடம் காலை எழுந்ததும் செய்தித்தாளைத் தேடுவதைப் போல, ‘அருஞ்சொல்’ தளம் தேடி வந்து வாசிக்கும் பல வாசகர்களும் தங்களால் இயன்ற அளவுக்குத் தொடர்ந்து சந்தா தொகையைச் செலுத்திவருகிறார்கள். தனிநபர் சந்தாவாக அல்லாமல் சமூக சந்தாவாகக் கருதி லட்ச ரூபாய் அளித்த வாசகரும்கூட உண்டு. ஆண்டுதோறும் ரூ.25,000 அனுப்பிவரும் வாசகர்களும் உண்டு. கூடவே ‘இது என்னுடைய தளம்; இது என் பொறுப்பு’ என்று வாசகர்கள் அனுப்பும் கடிதங்கள்தான் இந்த இரண்டாண்டுகளில் நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் சான்றும் ஊக்கமும்.

இந்த உறவுக்காக உளமார உங்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவிப்பதோடு, உங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையில்  ‘அருஞ்சொல்’ செம்மையான பாதையில் பயணிக்கும் என்று உறுதியையும் ‘அருஞ்சொல் அணி’ சார்பில் உங்களிடம் கூறுகிறோம்.

அன்புடன்

சமஸ்

 


3

8

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   2 months ago

மக்களின் மேன்மைக்கான திறவுகோலாக அருஞ்சொல் வளரட்டும் வாழ்த்துக்கள்... மகா.இராஜராஜசோழன் சீர்காழி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 months ago

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருஞ்சொல். இதில் பங்களிக்கும் ஆசிரியர், ஆசிரியர் குழு, எழுத்தாளர்கள், தொழிநுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி. ஒரு இணைய இதழை, தரமாகவும் சமரசமின்றியும், மிக முக்கியமாக கட்டணமின்றியும் நடத்துவதென்பது மிகச் சவாலான காரியம். இத்தனைக்கும் இடையே துருத்தும் விளம்பரங்கள்கூட இல்லாத இணையப்பக்கம். ஆசிரியர் சமஸ் முன்னெடுக்கும் பக்க வரைமுறை இல்லாத எழுத்துவழி நேர்காணல்கள், நேரவரம்பற்ற காணொளி உரையாடல்கள் மிகச் சிறந்த முயற்சி. அருஞ்சொல் புதிய திட்டங்களோடும் கனவுகளோடும் தமிழ்ச்சமூகத்திற்கு தொடர்ந்து பங்களிக்க வேண்டும், வாசகர்கள் எங்களால் இயன்றதை நிச்சயம் செய்வோம். எனக்கு அருஞ்சொல்லிடம் இருப்பது தீர்க்க இயலாத கடன். மிக நன்றி.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஃபின்னிஷ் மொழிசிறுநீர்ப்பைபயங்கரவாத அமைப்புமன்னார்குடி ஸ்ரீநிவாசன்பிரேன் சிங்சோம்பேறித்தம்மு.ராமநாதன் கட்டுரைகல்லில் அடங்கா அழகுஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்மின்சார சீர்திருத்தம்ஒருங்கிணைப்பாளர்கள்ஆதியோகிபுதியன விரும்புபிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிவெற்றிடத்தின் பாடல்கள்ஜவாஹர்லால் நேரு கட்டுரைநேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுவது எப்படி?என்.வி.ரமணாசைபர் சாத்தான்கள் – இணைய மோசடிகளும்ப.சியின் தொழில் பசிஅரசியல் சட்டம்முற்பட்ட சாதியினர்தோள்பட்டை103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – 2019மெமோகிராம்பண்டிதர் 175குறுவை சாகுபடிசாவர்க்கர் அந்தமான் சிறைஅலைக்கற்றை விவகாரம்சமஸ் பிரசாந்த் கிஷோர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!