சமஸ் கட்டுரை 10 நிமிட வாசிப்பு

விடைபெறுகிறேன்: நன்றி தி இந்து!

சமஸ்
22 Sep 2021, 12:00 am
2

சமஸ் ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகியது முதலாக, ‘அருஞ்சொல்’ இதழ் தொடங்கப்பட்டது வரையிலான பதிவுகள் இங்கே தனித்தனியே தரப்படுகின்றன. வாசகர்கள் ‘அருஞ்சொல்’ உருவாகிவந்த கதையை அறிந்துகொள்ள இதைத் தருகிறோம்.

 

எனது அன்புக்குரிய நண்பர்கள், வாசகர்களுக்கு, வணக்கம்!

இந்த வாரத்தோடு ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். 2013 ஜூன் மாதத்தில் ‘தி இந்து’ குழுமத்தில் தொடங்கிய என்னுடைய பணி, 2021 ஜூன் மாதத்தோடு நிறைவுக்கு வந்திருக்கிறது. நெகிழ்வான மனதுடனேயே வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறேன். 

மன்னார்குடி போன்ற ஒரு சிறு நகரப் பின்னணியில், ‘அன்றாடம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழைப் படி’ என்ற தன்னுடைய தாத்தாவின் கிடுக்குப்பிடியிலிருந்தும், ஆங்கிலத்தின் அவஸ்தையிலிருந்தும் தப்பிக்க, “ஐயா, நீங்கள் ஏன் தமிழில் உங்கள் நாளிதழைக் கொண்டுவரக் கூடாது?” என்று கேட்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதிய ஒரு  பள்ளிக்கூடச் சிறுவனுக்குப் பின்னாளில் அதே பத்திரிகையின் அலுவலகத்திலிருந்து, “தமிழில் நாங்கள் ஒரு பத்திரிகை தொடங்கவிருக்கிறோம். எங்கள் சிஇஓ உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். ஹோட்டல் ட்ரைடென்ட்டில் சந்திக்கலாமா?” என்று செல்பேசி அழைப்பு வந்தால் எப்படி இருக்கும்? விதிபோலவே இருந்தது அது!

அப்போது இதழியலில் 135 வருடங்களைக் கடந்திருந்த ‘தி இந்து’ குழுமமானது ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய தமிழ் நாளிதழை உருவாக்கும் பணியை ஒப்படைத்தது. அப்போது என் வயது 33. ஆசிரியர்அசோகன், நண்பர்கள் அரவிந்தன், கோலாகல சீனிவாசன், கவிதா முரளிதரன் நால்வரை ஒப்பிட, வயது, படிப்பு, அனுபவம் எல்லாவற்றிலும் சிறியவன்.   

இந்த உருவாக்க அணியை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. ஒரு நாளிதழில் எவ்வளவு உயரிய பதவிக்கும் சென்று பணியாற்றுவதும்,  ஒரு நாளிதழை உருவாக்குவதும் ஒன்றல்ல. நூறாண்டுகளுக்கு மேல் இதழியலில் ஒரு பெரிய அனுபவத்தையும், சர்வதேசப் பார்வையையும் கொண்டிருந்தாலும் ‘தி இந்து’ குடும்பத்தினர் தங்களை முழுமையாக விலக்கிக்கொண்டு எங்களிடம் இந்த உருவாக்கப் பணியை ஒப்படைத்தனர். முழு சுதந்திரத்தையும் அளித்தனர். ஆள் தேர்வு உட்பட எதிலும் அவர்கள் தலையீடு இல்லை. 1878 செப்டம்பரில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட வரலாற்றுப் பின்னணி அறிந்த ஒருவருக்கு, 2013 செப்டம்பரில் ‘தி இந்து’ தமிழ்  நாளிதழைத் தொடங்க ஐந்து பேரைத் அவர்கள் தேர்ந்தெடுத்து, பணியை ஒப்படைத்ததன் ஒப்புமை புரியவரும்.

வெறும் இரு மாதக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நேர்கண்டு, நூற்றுச் சொச்சம் பேரைத் தேர்ந்தெடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் அணைத்துக்கொண்டு இந்தப் பத்திரிகைக்கு ஓர் உருவத்தைக் கொடுத்தோம். குறைகள், நிறைகள் நிறைந்ததாயினும் 2013 செப்டம்பர் 16-ல் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்  வெளியானபோது அது தனித்துவமானதாக இருந்தது. 

இதன் பின்னர் என் கவனத்தை நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட நடுப்பக்கங்களில் செலுத்தலானேன். பத்திரிகையில் பத்தோடு ஒரு பக்கமாக அல்லாமல் நடுப்பக்கங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின்  தனித்துவமான அடையாளமாக மிளிர அபாரமான ஒரு சுயாட்சித்தன்மை எனக்கும் என்னுடைய அணியினருக்கும் கிடைத்தது. நாங்கள் உருவாக்கிய பக்கங்கள், நூல்களோடு மட்டுமல்லாமல், முன்னெடுத்த நிகழ்ச்சிகள், விருதுகள் என்று எல்லா முயற்சிகளிலும் அந்த சுதந்திரம் தொடர்ந்தது. தமிழில் வேறு எந்தப் பத்திரிகையிலும் இதுவரை நிகழ்ந்திராதது இது. இப்படியொரு ஜனநாயக வெளி இங்கு உருவாக ‘தி இந்து’ நிறுவனத்துக்கும், அதன் இயக்குநர்களுக்கும், அந்த ஜனநாயக வெளியைக் கண்ணியத்தோடு பாதுகாத்த ஆசிரியர்  அசோகனுக்கும் நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மிகச் சிறந்த நண்பர்கள் - அவர்களில் பலர் தனித்துவம் மிக்க ஆளுமைகள்; என்னைக் காட்டிலும் பல்வேறு சிறப்புத் திறன்களைப் பெற்றிருப்பவர்கள் -  வ.ரங்காசாரி, எஸ்.சிவசுப்பிரமணியன், தே.ஆசைத்தம்பி, செல்வ புவியரசன், த.ராஜன், எஸ்.சண்முகம் ஆகியோர் எனக்கு அணியினராக வாய்த்தார்கள். அதேபோல, அணிக்கு வெவ்வேறு காலங்களில் பங்களித்தவர்களான  வெ.சந்திரமோகன், நீதிராஜன், ம.சுசித்ரா, கே.கே.மகேஷ்; வடிவமைப்பாளர்கள் ஏழுமலை, ரீகன் இவர்கள் எப்போதும் உடன் இருந்தார்கள். அணிக்கு வெளியிலும், அரவிந்தன் தொடங்கி  ஷங்கர்ராமசுப்ரமணியன் வரை ஒரு நீளமான நண்பர்களின் பட்டியல் இருந்தது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் என்றாலோ, நடுப்பக்கம் என்றாலோ என்னுடைய பெயர் தெரிய இவர்கள் அத்தனை பேருடைய அபாரமான உழைப்பும், அர்ப்பணிப்பு மிக்க அணிச் செயல்பாடுமே முக்கியமான காரணங்கள். 

மிகத் தெளிவாக, தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பண்பாட்டு வெளியில் ஒரு பெரிய குறுக்கீட்டை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கங்கள் நிகழ்த்தின. காந்தி அதன் ஆன்ம வழிகாட்டலாக இருந்தார்.

பொதுவாக, நடுப்பக்கங்கள் என்றாலே பண்பாட்டு மேட்டுக்குடிகளும், வெறும் தரவுகள் அடங்கிய கட்டுரைகளும் புழங்கும் இடம் அது என்பதை உடைத்தெறிந்தோம். எவர் வேண்டுமானாலும் இங்கு எழுத முடியும் என்ற சூழலை உருவாக்கினோம். களத்துக்குச் சென்று, மக்களுடைய குரலைப் பதிவுசெய்து அதை அந்தந்த மக்களின் வட்டார மொழியிலேயே எழுதுவது என்பதில் தொடங்கி, வார்த்தைகளின் அரசியல் வரை கவனம் அளித்தோம். எல்லாக் கட்சியினரும் வாசித்து, விவாதிக்கும் களம் ஆக்கினோம்.

தமிழ்நாட்டில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது இன்றைக்குப் பேச்சாகியிருக்கிறது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நடுப்பக்கங்கள்தான்; சில ஆண்டுகளாகவே ‘ஒன்றிய அரசு’ எனும் வார்த்தையைப் பயன்படுத்திவந்ததை வாசகர்கள் அறிவார்கள். கூட்டாட்சி, அதிகாரப் பரவலாக்கம் என்று பேசும்போது, அதைப் பேசுவோரின் சிந்தனை, உள்ளடக்கம், மொழியில் முதலில் கூட்டாட்சியுணர்வு வர வேண்டும் என்று எண்ணினோம்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் விவாத அரங்கின் மையத்துக்குக் கூட்டாட்சி வந்ததில் நடுப்பக்கங்கள் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் உரிமைகளை நடுப்பக்கங்கள் உரக்கப் பேசின. இந்த 8 ஆண்டுகளில் அதிகாரப்பரவலாக்கல் -  கூட்டாட்சியம் தொடர்பில் ‘இந்து தமிழ்’ வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், தலையங்கங்களைத் தொகுத்து ஒப்பிட்டால் இந்தியாவின் எந்த வெகுஜனப் பத்திரிகையும் அதன் பக்கத்திலேயே வர முடியாது என்பது  புரியவரும். 

மனித குலத்தையும், இந்த நாட்டையும் தாங்கி நிற்கக்கூடிய அடிப்படை விழுமியமான பன்மைவியத்தைப் பேணுவதில் உறுதியாக நின்றோம். சமத்துவம், சமூகநீதிக்கு எங்களால் இயன்றவரை குரல் கொடுத்தோம். வெறுப்பு அலையில் மூழ்கிவிடாமல் தாக்குப்பிடித்தோம். முக்கியமாக, குமரியிலிருந்து சென்னை வரை ஒரு சாமானியரின் குரல் எங்களை வந்தடைந்தால் அவருடைய நியாயம் மேடை ஏறும் எனும் சூழலை உருவாக்கினோம். தமிழில் ஆகிவந்த இதழியல் வரையறைகளை எங்களால் இயன்றவரை விஸ்தரித்தோம்.

நான் முதல் முறையாக சிஇஓ அருண் ஆனந்திடம் பேசுகையில் சொன்னேன், “தமிழில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை; ஆனால், அறிவுலகுக்கும் ஊடகவுலகுக்கும் இடையே பெரிய பாலைவனம் விரிந்து கிடக்கிறது. முக்கியமான ஒரு விவகாரத்தில் ஒரு சின்ன அறிக்கையைப் பொதுவெளியின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை என்று புழுங்கினார் சுந்தர ராமசாமி. நோபல் விருதாளர்களை விஞ்சும் பல எழுத்தாளர்கள் நம்மிடம் உண்டு. ஆனால், அவர்கள் இறந்தால்கூட ஒரு பத்தி செய்திக்கு மேல் இங்குள்ள தினசரிகளுக்கு அவர்கள் பொருட்டு அல்ல. இந்த நிலையை மாற்ற வேண்டும்!”

வாய்ப்புக் கிடைத்தபோது மாற்றினோம். 

ஒரு சமூகத்தின் மிகுந்த மதிப்புக்குரியவர் எழுத்தாளர் என்பதை அவர்களுக்கு அளித்த முதல் மரியாதையின் வழி திரும்பத் திரும்பச் சமூகத்துக்குச் சொன்னோம். ஜெயகாந்தன், அசோகமித்திரன் முதல் ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன் வரை பல ஆளுமைகளுக்கான இறுதி  அஞ்சலி இரு முழுப் பக்கங்களுக்கு நிறைந்தது. 

புத்தக வாசிப்பைத் தொடர் இயக்கம் ஆக்கினோம். ‘தினமணி’யின் சென்னைப் பதிப்பு நீங்கலாக, ஏனைய பத்திரிகைகளில் தொடக்க நாள்,  நிறைவு நாள் செய்திகள், வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் இரு புகைப்படங்கள் என்பதாக முடிக்கப்பட்ட சென்னை புத்தகக்காட்சி அனைத்து ஊர்களுக்கும் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடுப்பக்கத்தில் வெளியானபோது ஏனைய பத்திரிகைகளும் கண் விழித்தன. இன்று செய்தித் தொலைக்காட்சிகள் நேரலைக்குப் புத்தகக்காட்சித் திடல் நோக்கி வருகின்றன. மூன்று தசாப்தங்கள் சென்னையை மையமிட்டிருந்த பபாசி, தமிழ்நாட்டின் சிறுநகரங்கள் நோக்கிப் புத்தகக்காட்சிகளை முன்னெடுத்துச் செல்லலானது. 

உள்ளூர் செய்திகளையே ‘முந்நூறு சொற்களுக்கு மிகாமல் எழுதுங்கள், இது ட்விட்டர் காலம்’ என்று பத்திரிகைகள் வலியுறுத்தலான  காலகட்டத்தில் முழுப் பக்கக் கட்டுரைகள், பேட்டிகள் என்று எதிர்ப்பாதையில் தனி வாசகர் கூட்டத்தை உருவாக்கினோம். ‘நியு யார்க் டைம்ஸ்’, ‘கார்டியன்’, ‘டான்’ என்று ஒரு புதிய அலை மொழிபெயர்ப்புகளை உள்ளே கொண்டுவந்தோம். அறிவியல் கட்டுரைகளுக்கும் பேட்டிகளுக்கும் தொடர்ந்து இடம் அளித்தோம். விளையனூர் ராமச்சந்திரனின் முழுப் பக்கப் பேட்டி; ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நீண்ட திருமாவளவனின் பேட்டி எல்லாம் வெகுஜன  ஆங்கில தினசரிகளில்கூட இன்று சாத்தியம் இல்லை என்பதே உண்மை. 

விருதுகள், இலக்கிய நிகழ்ச்சிகள் என்றாலே குழு அரசியல் சர்ச்சைகளில் பிறப்பிடங்கள் என்றாகிவிட்டிருக்கும் தமிழ்ச் சூழலில் நாங்கள் முன்னெடுத்த இலக்கியத் திருவிழாக்களும், ‘தமிழ் திரு’ விருதுகளும் தமிழுக்காக வெவ்வேறு வகைகளில் உழைக்கும் எல்லோரையும் உள்ளடக்கும் பார்வையைக் கொண்டிருந்தன. இந்த விருதுகளில்  ஐராவதன் மகாதேவனும் இருந்தார், கி.ராஜநாராயணனும் இருந்தார்; கீரனூர் ஜாகீர் ராஜாவும் இருந்தார், சீனிவாச ராமாநுஜமும் இருந்தார்; கோவை ஞானியும் இருந்தார்,  பா.வெங்கடேசனும் இருந்தார். 

பதிப்புத் துறையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழானது, ‘தமிழ்த் திசை பதிப்பக’த்தின் வழி கால் வைத்தபோது நடுப்பக்க அணி ஆண்டுக்கு ஒரு அரசியல் ஆளுமையின் வரலாற்று நூலைக் கொண்டுவரும் திட்டத்தைக் கையில் எடுத்தது. அப்படி அது தொகுத்த தமிழ்நாட்டின் நெடுநாள் முதல்வர் மு.கருணாநிதி, இன்றைய இரு திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பிதாமகர் அண்ணா இருவரது வரலாற்றையும் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரு நூல்களும் 60,000 பிரதிகளை இன்று கடந்திருக்கின்றன; அரசியலில் அந்நூல்கள் இன்று உண்டாக்கியிருக்கும் தாக்கம் வெளியிலுள்ளோரால் பேசப்பட வேண்டியது.

இளையோர் எப்போதும் எங்கள் மையக் கவனத்தில் இருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய நிர்வாகப் பணிக்குச் செல்லும் மாணவர்களின் கருத்தறிந்து அவர்களுக்கான களமாகவும் இடையில்  நடுப்பக்கங்களை மாற்றியபோது போட்டித் தேர்வுகளுக்கு உத்வேகப்படுத்தும் நிகழ்ச்சிகள் எங்களை நோக்கி வந்தன. ஆண்டுக்குக் குறைந்தது இருபத்தைந்தாயிரம் மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை இந்நிகழ்ச்சிகள் உருவாக்கின; அவர்களிடத்தில் வாசிப்பியக்கத்தைக் கொண்டுசென்றோம். இதேபோல வாசகர்களுடன் தொடர் உரையாடல்களை முன்னெடுத்தோம்; அவர்கள் சொன்ன கருத்துகளுக்கு மதிப்பளித்து அவ்வபோது பக்கங்களைப் புதுப்பித்துக்கொண்டேயிருந்தோம்.

குற்றம் குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டோம்; இயன்றவரை தவறுகளைத் திருத்திக்கொண்டோம். விமர்சனத்தின் அடிப்படையில் தனிநபர்களிடம் வெறுப்பு பாராட்டியதும் இல்லை; பகையாக முரண்பாடுகளை நீட்டித்துக்கொண்டதும் இல்லை.

ஆண்டுகள் வளரும்போது எந்தப் பணியிலும் தேக்கங்கள் உண்டாவது இயல்பு. அதை உடைத்துச் சிதறடிக்கவில்லை என்றால், மனதையும் பிற்பாடு உடலையும் மெல்ல பனிமூட்டம்போல சோர்வு ஆக்கிரமித்து, அழுத்தி, புதைத்துவிடும். டிஜிட்டல் ஊடகங்களின் பாய்ச்சல்,  ஜனநாயகத்தின் பின்னடைவு, கொடுந்தொற்றின் பரவல் இந்தப் பின்னணியில் இந்திய ஊடகச் சூழல்  நிலைக்குலைவுக்குள்ளான காலகட்டத்தில் அப்படியொரு தேக்கத்தை நான் உணரலானேன்; உளச்சோர்வு மெல்லச் சூழ்ந்து உடலையும் சோர்வு நோக்கித் தள்ளலானது.   

ஆக, சில மாதங்களாகவே இந்த முடிவில் இருந்தேன். நிறைய எழுத வேண்டும்; முக்கியமான தமிழ் ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டும்; ஊடகத் துறையில்  அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் துரத்தியபடி இருந்தன. இனி அதில் கவனம் செலுத்த உத்தேசித்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்த அளவில் எட்டாண்டுகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டம். என்னுடைய கடந்த கால வாழ்வை அறிந்தவர்களுக்கு இந்த முடிவை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ‘தினமலர்’, ‘தினமணி’, ‘விகடன்’, ‘புதிய தலைமுறை’ என்று நான் கடந்துவந்திருக்கும் பாதையில் இதுவே அதிகபட்ச பணி வாழ்க்கை. இதுவரையிலான எல்லா நிறுவனங்களிலுமே ஆசிரியர்களின் மதிப்புக்குரியவனாக, விசேஷ இடம் அளிக்கப்பட்டவனாகவே இருந்திருக்கிறேன். மரியாதைக்குரிய சேகர், வைத்தியநாதன், கண்ணன், கைலாசம், அசோகன் யாவருமே எனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைத் தந்திருந்தார்கள். ஒரு நிறுவனத்தில் பிரகாசமான நிலையில் இருக்கும்போதே அடுத்த இடம் நோக்கி நகர்ந்திருக்கிறேன். ஆயினும், பணம் அல்லது பணி அந்தஸ்து இதில் முக்கியப் பங்கு வகித்தது இல்லை. நிச்சயமாக, கருத்து வேறுபாடுகளும் விலகலுக்கான காரணங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாலும், அது மட்டுமே எங்கும் காரணமாக இருந்தது இல்லை. 

பெரும்பாலும் பணி வாழ்க்கை ஒரு தேக்க நிலையை அடையும்போது, மனம் சோம்பும்போது, அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி  ஒன்றுக்கு என்னுடைய எழுத்து துடிக்கும்போது வெளியேறுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில், இப்போது ‘இந்து தமிழ்’ அனுபவமும் அமைகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறு அனுபவங்கள், பல்வேறு படிப்பினைகள். இவற்றில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் இந்த எட்டு ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அளப்பரியன. அது எனக்குக் கொடுத்த மேடைகளும், கொண்டுசென்ற உயரங்களும் மறக்க முடியாதவை. ஒரு பத்திரிகையில் ஒரு தனிநபருக்கு கிடைத்த இடம் என்று இதைச் சுருக்கிட முடியாது. தமிழ் ஊடகச் சூழலில் நிகழ்ந்த அரிய சாத்தியங்களில் ஒன்றும் அது. 

இதுவரை எத்தனையோ நிறுவனங்கள் நான் பணியாற்றியிருந்தாலும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நாட்களை அந்த வரிசையில் இணை வைத்துவிட முடியாது. நாங்கள் கூடி உருவாக்கிய குழந்தை அது; ஒரு பெரும் கனவு; அந்தக் கனவில் நானும் இருந்தேன்; என்னுடைய கடமைகளை நெறிப்படி முடித்தேன்; என்னால் இயன்றவரை, என்னுடைய எல்லைக்குட்பட்டு என்னுடைய மதிப்பீடுகளை இழக்காமல் காப்பாற்றினேன் என்ற மகிழ்ச்சி என் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்கும். ‘இந்து தமிழ்’ நாளிதழ் எல்லா வகைகளிலும் செழித்திடவும், மேன்மேலும் வளர்ந்து தமிழ்ச் சமூகத்துக்கான அதன் நற்பங்களிப்புகளைத் தொடர்ந்திடவும் உளமாரப் பிரார்த்திக்கிறேன்.

ర  

சரி, அடுத்தது என்ன?

சில ஆண்டுகளாக, நிர்வாக நிமித்தமான பணிகள் நிறைய என்னைச் சூழ்ந்துகொண்டிருந்த இடத்திலிருந்து விடுபட்டு, தீவிரமாக எழுதுவது என்ற இடம் நோக்கி நகர்கிறேன். நெடுநாட்களாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்த சில புத்தகங்கள் முன்னுரிமையில் முன்வரிசையில் நிற்கின்றன. இந்திய ஜனநாயகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்நாட்களில் எந்த நிறுவனத்துக்கும் வேலைக்குச் செல்வதைக் காட்டிலும், என்னுடைய எழுத்தியக்கத்துக்குத் தடை நிற்காத வகையில் சுயாதீனமான ஒரு சிறு டிஜிட்டல் ஊடகத்தை உருவாக்கவும் விழைகிறேன். “நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கிறாய்; பள்ளி செல்லும் குழந்தைகள் முக்கியமான பருவத்தில் இருக்கிறார்கள்; இதுபோன்ற பலப்பரீட்சை தேவைதானா?” என்று நிறைய நண்பர்கள் கேட்கின்றனர்.  காந்தி சொன்னதையே பதிலாகச் சொல்லிக்கொள்கிறேன்:  ‘மகிழ்ச்சி என்பது எதுவென்றால்,  உங்களுடைய சிந்தனை, உங்களுடைய பேச்சு, உங்களுடைய செயல் யாவும் ஒத்திசையும் தருணம்!’

தமிழில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய  இருக்கின்றன. தமிழ் ஊடகச் சூழல் அடுத்தடுத்த பாய்ச்சலுக்காகக் காத்திருக்கிறது. என்னாலான சிறு முயற்சிகளை மேற்கொள்வேன். காந்தியிடமிருந்து  எளிமையான வாழ்க்கை முறையை மட்டுமல்ல; தீர்க்கமான இலக்கை நோக்கிய பயணத்துக்கான உறுதிப்பாட்டையும் கற்றிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் சமூகத்தையும் மக்களையும் நம்புவன் நான். தமிழ் மக்கள் எனக்குத்  துணை நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த சமயத்தில் வாசகர்களாகிய உங்களுடைய அன்பை ஒருபோதும் நான் மறந்திட முடியாது. ஏனென்றால், வாசகர்களிடம் நான் பெற்றிந்த அன்புதான் எந்தப் பத்திரிகையிலும் எனக்கு இருந்த செல்வாக்குக்கான அடியுரமாக இருந்தது. வாசக நண்பர்கள் தரும் உற்சாகமும் உத்வேகமும்தான் அடுத்தடுத்த எல்லைகளை நோக்கி சிந்திக்கவும் வைக்கிறது. ஆகையால், இந்தத் தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறுகிறேன்!

ஜூன், 2021

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com



1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Satheesh Rajan    3 years ago

தங்களின் மகத்தான நல் நோக்கத்திற்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள், சார். அருஞ்சொல் லுக்கு வலு சேர்க்கும் விதமாக சந்தா செலுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். அருஞ்சொல்- தமிழ் அறிவின் கைவிளக்கு! வாழ்க வளமுடன் 🙏

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Almas Ahamed N   3 years ago

கருத்தாளர்களாகவும் அரசியல் விழிப்புற்றவர்களாகவும் எங்களை உருவாக்கியதில் உருவாக்குவதில் உங்களுடைய பங்கு அளப்பரியது ஆசிரியரே... நன்றி!! தொடர்ந்து இயங்குங்கள்.. தமிழ்ச் சமூகம் உங்களோடு துணைநிற்கும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பேரரசுகள்சர்வதேசம்இந்திய எல்லைபச்சோந்திஆசை பேட்டிமார்கழி மாதம்நா.ப.இராமசாமிஇந்து கடவுளர்கள்அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன்சாலிகிராமம்சுற்றுச்சூழலியல்ஊடகர்கள்பொதுப் பாஷையின் அவசியம்ஜப்பான் பிரதமரின் புதிய பொருளாதாரத் திட்ட அறிவிப்பகுஜராத்தியர்களின் பெருமிதம்சமஸ் - விஜய்பக்கிரி பிள்ளைகேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்காஜோதிராதித்யா சிந்தியாதர்காஎஸ்.சிவக்குமார்செல்வந்தர்களின் இந்தியாநினைவுச் சின்னங்கள்புனித மரியாள் ஆலயம்ஹார்மோனியம்திஷா அலுவாலியா கட்டுரைநீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் பேட்டிவாழ்வியல்ஔரங்ஸேப்சமஸ் உதயநிதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!