சமஸ் கட்டுரை, ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு

என்னைச் சுற்றும் வதந்திகள்

சமஸ்
22 Sep 2021, 12:00 am
2

ண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நீண்ட காலத்துக்குப் பிந்தைய உரையாடல்.  ‘ஆயிரம் கோடி ரூபாய் ப்ராஜக்ட் ஒன்றில் இறங்கியிருக்கிறீர்களாமே, ஆல் தி பெஸ்ட்!’ என்றார். விளையாட்டாக அல்ல. ‘எப்படி இவ்வளவு வெள்ளந்தியாக எல்லாவற்றையும் நம்புகிறீர்கள்?’ என்றேன். அவரிடம் வேலை கேட்டும், என்னிடம் பரிந்துரைக்கச் சொல்லியும் பலர் பேசியிருக்கிறார்கள்; அவர்களில் பலர் முன்னணி ஊடகங்களில் இருப்பவர்கள், இருந்தவர்கள்.

இரு மாதங்களாக அதிகமான வதந்திகள் என்னைச் சுற்றுகின்றன. ‘தி இந்து’ குழுமத்திலிருந்து வெளியேறிய நாளில் இது தொடங்கியது. அன்றாடம் 10 பேர் ஏதாவது ஒரு வதந்தியின் பெயரால் அழைக்கிறார்கள். ‘அந்த ஆங்கிலப் பத்திரிகை தமிழில் தொடங்குகிறார்களாம்; நீங்கள்தான் ஆசிரியராம்’ என்பதில் தொடங்கி ‘இந்தத் தலைவர் இப்படி ஒரு பத்திரிகையை வாங்கியிருக்கிறாராம்; அதற்கு நீங்கள்தான் தலைமைப் பொறுப்பாம்’ என்பது வரை வாரம் ஒரு வதந்தி கிளம்புகிறது.

நான் பொதுவாக இதையெல்லாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், நேற்று இதுபற்றி விசாரித்தவர்களில் மூவருடைய பின்புலமே இந்தக் குறிப்பை எழுதக் காரணமாகிறது. ஒருவர் பத்திரிகைத் துறையிலும் கோலோச்சிய எழுத்தாளர், இன்னொருவர் ஒரு முன்னணி பத்திரிகை அதிபரின் நண்பர், மற்றொருவர் குறிப்பிடத்தக்க பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி. அவ்வளவு தீவிரமாக வதந்தி பரவுகிறது. அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின் பல ஆயிரம் கோடி ப்ராஜக்ட்டின் (ஒரு ஓடிடி சேனல், ஒரு டிவி நெட்வொர்க், ஒரு பத்திரிகை வரிசை) தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காகத்தான் நான் பணி விலகியிருக்கிறேன் என்று திட்டவட்டமான மொழியில் என்னிடம் பேசினார்கள். இதைச் சொன்னதாகப் பின்னணியில் உச்சரிக்கப்படும் சில பெயர்களைக் கேள்விப்பட்டபோது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். விளைவாகவே, இது என்னுடைய ஆளுமையையும் நற்பெயரையும் குலைப்பதற்கான தாக்குதல் என்று உணர்ந்தேன்.     

இயல்பாகவே நான் வெளிப்படையானவன். என்னுடன் பழகியவர்களுக்கு இது நன்றாகவே தெரியும், ஒளித்து மறைத்துப் பேச மாட்டேன்; கருத்துக் கேட்டால் மனதுக்குப் பட்டதை வெளிப்படுத்திவிடுவேன். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு இது கடமையும்கூட. அதை இயன்றவரை நான் பின்பற்றுகிறேன். என் பலம், பலவீனம் இரண்டும் இது என்றும் சொல்லலாம். பரிசீலிக்க ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அது அப்படித்தான் என்றே வாழ்கிறேன்.

நான் ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து வெளியேறிய நாளிலேயே சக  ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்; அடுத்தடுத்த  நாட்களிலேயே வாசகர்களிடமும் பகிர்ந்துகொண்டேன்; ‘தி இந்து’ இயக்குநர்களிடம் என்ன சொன்னேனோ, அதையே எல்லோரிடமும் சொன்னேன், ‘எனக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது; நான் தனியே ஒரு சிறு ஊடகத்தை ஆரம்பிக்கவிருக்கிறேன்.’

வெளியிலிருந்து கேட்பதற்கு இது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தனிப்பட்ட வகையில் அது சவால்கள் மிகுந்த ஒரு முடிவு. நீங்கள் நேசிக்கும் ஒரு நிறுவனத்திலிருந்தும், உறவினர்கள்போல பழகிவிட்ட நண்பர்களிடத்திலிருந்தும் ஒரு திடீர் நாளில் பிரிந்து வருவது என்பது உங்கள் உடலில் ஒரு பகுதியை நீங்களே விரும்பி அறுத்துக்கொள்வதாகும். அதுவும் மனைவி – குழந்தைகளைவிடவும் அதிகமான நேரத்தை அலுவலக நண்பர்களுடனே கழிப்பது, வீட்டிலிருந்து இயங்கும்படி அலுவலகமே கோரும் கொள்ளைநோய்க் காலகட்டத்தில்கூட அலுவலகத்துக்குச் செல்லும் பழக்கத்தைக் கைவிட முடியாத அளவுக்கு ஓர் உறவைப் பணி சார்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பது என்று வாழ்பவர்களுக்கு இப்படியான பிரிவு உண்டாக்கும் வலி எளிதில் விடுபடக் கூடியதல்ல.

முழுக்கவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த முடிவாக மட்டும் இது இருக்க முடியாது என்பதைக் கொஞ்சம் நுண்ணுர்வுள்ளவர்கள் எவரும் உணர முடியும். நான் பணியாற்றிய நிறுவனத்தின் மீது எனக்கு முறையீடுகள் இல்லை. ஆனால், இந்தியாவில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழல் ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் எவருக்கும் அபாயம் விளைவிப்பது; முக்கியமாக, ஊடகங்களின் கழுத்து நெறிபட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நான் தீவிரமாக இயங்க வேண்டும் என்று எண்ணினேன்; அதற்கு சுயாதீனமாக இயங்குவதே சரியான வழிமுறை.

இப்படி ஒரு முடிவைத் தனியாளாக எடுத்துவிடலாம்; கூடவே உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது; படிக்கும் வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள்; நீங்கள் லட்சங்களில் மாத வருமானம் தரும் ஒரு வேலையை விடுவதோடு அல்லாமல், உங்களுடைய சேமிப்பிலும் கை வைக்கும் வேலையைக் கையில் எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல, உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கூடவே பணயம் வைக்கிறீர்கள் என்று பொருள். அதிர்ஷ்டவசமாக நல்ல மனைவி – குழந்தைகள். புரிந்துகொண்டவர்கள் என்பதைக் காட்டிலும், தன்னளவிலேயே எளிமையானவர்கள், அவர்களும் சில  விழுமியங்களைப் பேணுபவர்கள் என்பதாலும், எளிய வாழ்க்கையை வரித்துக்கொண்டிருப்பதாலும் துணிச்சலாக ஆதரிக்கிறார்கள். ஆயினும், உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

வெளியான வதந்திகள் ஒன்றிலும் துளி உண்மை இல்லை; ஆனால், வேறு சில பெரிய வேலைவாய்ப்புகள் வந்தன; வருகின்றன. உங்கள் நிறுவனத்திலேயே முதலீடு செய்கிறேன் என்று பெரும் தொகையோடு பேசியவர்களும் உண்டு. உங்கள் வார்த்தைக்கு நன்றி; நான் சுயாதீனமாக இயங்கப்போகிறேன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேன். நான் பெரிதும் மதிக்கும் ஒரு நண்பர், வணங்கத்தக்க சேவையாற்றியவர், அதேசமயம் சமூகச் செல்வாக்கு மிக்கவர், என் மீதும் என் எழுத்தின் மீதும் அவருக்குப் பெரும் மதிப்பு உண்டு; அந்த ஒரே காரணத்துக்காக என்னோடு இணைய முன்வந்தார், அவரிடமும்கூட இதையே சொன்னேன். 

என்னுடன் பழகிய சில ஊடக நண்பர்கள், பதிப்பாளர்கள் அவர்களுடைய நிறுவனங்களோடு இணைந்து சில திட்டங்களில் பணியாற்ற அழைக்கிறார்கள்; ஊடக நிறுவனம் / பதிப்பகம் தொடங்கும் விருப்பம் உடைய சிலர் ஆலோசனை கேட்டு வருகிறார்கள்; என் நிறுவனத்துக்குப் போக எஞ்சிய நேரங்களில் கன்சல்டேஷன் அடிப்படையில் சில காரியங்களில் அவர்களோடு  இணைந்து செயலாற்றலாம். ஒருவேளை நாளைக்கு என் நிறுவனத்துக்கே கூட்டு தேவைப்பட்டாலும், நண்பர்கள் - அதிலும் சாதாரணப் பின்னணி கொண்டவர்களோடு கை கோப்பேனே அன்றி பெரும் செல்வாக்குடையவர்கள் எவரோடும் கை கோக்கும் எண்ணம் இல்லை. காரணம், சுதந்திர இதழியலுக்கு என்றேனும் அது பெரிய தடையாகக் கூடும். 

அடிப்படையிலேயே நான் ஒரு மினிமலிஸ்ட். அப்படியென்றால், சின்ன காரியங்களால் பெரிய மாற்றங்களை உண்டாக்க முடியும் என்று தீவிரமாக நம்புபவன். சமகாலத் தமிழ்ச் சமூகத்துக்கு, வெகுஜனத்தளத்தில் பலர் தயங்கும் சில சிந்தனைப் பங்களிப்புகளை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஒரு சின்ன அணியாலும், ஒரு சிறிய சுயாதீன ஊடகத்தாலுமே இன்றைய சூழலில் அது சாத்தியம்; அதேபோல சமூகத்தின் மீது விதைக்கப்படும் நல்ல நம்பிக்கைகள் ஒருபோதும் தோற்பதில்லை என்றும் நம்புகிறேன். 

நம்பிக்கை என்ன ஆகிறது என்பதை ஓரிரு ஆண்டுகள் கழித்துப் பார்க்கலாம். இந்த வதந்திகள் ஓராண்டுக்குள் சாம்பலாகும். இதற்கிடையே வதந்திகளைப் பரப்புவோருக்குச் சொல்ல ஒரு செய்தி உண்டு, ‘அதிகாரம், பணம், பெரும் செல்வாக்கு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட சில லட்சியங்களோடு இயங்கும் மனிதர்களும் இங்கே இருப்பார்கள். உங்களால் முடிந்தால் அவர்களுடைய முடிவுகளை அவர்களுடைய நம்பிக்கைகளின் வழி புரிந்துகொள்ள முயலுங்கள்; அற்பத்தனத்தின் வழி வாழ்வில் எந்த உண்மையையும் ஒருபோதும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது!’

- 2021, ஆகஸ்ட் 21, முகநூல் பதிவு 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

HAMEEDIMRANS S   2 years ago

ஒரு சிறிய வலைப்பூ நிர்வாகியாக சொல்கிறேன் என்னைப் போன்ற எண்ணற்ற வாசகர்கள் தங்களுடன் உள்ளோம் இத்தகைய வதந்திகளை புறந்தள்ளி வெற்றிநடை போட வாழ்த்துகள். அன்புடன், ஷாகுல் ஹமீது http://idayakottai.blogspot.com

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

நண்பர் சமஸ் அவர்களின் எழுத்துகள் எனக்கு அறிமுகமானதே தி இந்து நாளிதழின் நடுப்பக்கங்கள் மூலமாகத்தான். அவரின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் காலையில் நாளிதழைப் பிரித்து முதலில் படிப்பது நடுப்பக்கங்களைதான். அவருடைய எழுத்தில் உள்ள உண்மைத்தன்மையும், உள்மன வெளிப்பாடும் உணர்வு பூர்வமான வார்த்தைகளும் படிப்பவர் மனங்களில் எழுச்சியை ஏற்படுத்தின என்றால் அதில் மிகையில்லை ஒரு பொதுஜன ஊடகத்தின் எல்லைகளைக் கடந்து, மற்றவர்கள் நினைத்துப்பார்க்கக்கூடத் தயங்கும் சாதனைகளை இந்து நாளிதழில் செய்தார்.. மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க அவர் எடுத்த முன்னெடுப்புகள் ஏராளம். புத்தக கண்காட்சிகளுக்கு அவர். கொடுத்த முக்கியத்துவமும் விளம்பரமும் அளவிட முடியாதவை. அதேபோன்று எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு யாரும் இணையில்லை. இந்து தமிழ் நாளிதழை விட்டு விலகுகிறார் என்ற செய்தி என்போன்றவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், அவரே ஒரு இணையவழி இதழைத் தரப்போகிறார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி.வந்து ஆறுதலைத் தந்தது. கடந்த ஒரு ஆண்டு அவருக்கு மட்டுமல்ல அவரை நேசிக்கும் என்போன்ற வாசகர்களுக்கும் சவாலாக இருந்தது என்றால் அதில் மிகையில்லை. அவருடைய முயற்சி வெற்றிபெற வேண்டும் அவரின் எழுத்துகளை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று மனதார விரும்பியவர்களின் எண்ண ஓட்டமும் அதுவே. ஓராண்டு சாதனையைப் பார்க்கும்போது அருஞ்சொல்லுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.. வாழ்க..வளர்க.சமஸின் அரும்பணி.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இரும்புநிகர கடன் உச்சவரம்புஅன்வர் ராஜா பேட்டி கோலோச்சி நிற்கும் ஜாதியமும்அமர்த்யா சென்காந்தி பேச்சுகள் தொகுப்புபொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்கையூட்டுக்குப் பல வழிகள்பிராமணியம்ஹிந்துத்துவர்நவதாராளமயம்பாஜகவின் அரசியல் வெற்றிகளும் வாக்காளர்களின் மதவாதமசாதிப் பெயர்விடுதலைப் புலிகள்வருவாய் ஏய்ப்புதிருக்குறள்வசந்திதேவிதிருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்தேசிய குடும்ப நலம்: நல்லதுவரிமுறைமருத்துவர் கணேசன்பிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்சல்மான் ருஷ்டிக்காக ஒரு பிரார்த்தனைதமிழ்த் திரைப்படம்நிதி அமைச்சகம்ஜெயமோகன் கருணாநிதி ஸ்டாலின்எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும்திக தலைவர் கி.வீரமணி பேட்டிபெரியார் சிலைநடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!