பேட்டி, கலை, மொழிபெயர்ப்பு 15 நிமிட வாசிப்பு

அச்சுஅசலாக மொழிபெயர்ப்பு இருக்க வேண்டியதில்லை - எடித் கிராஸ்மன் பேட்டி

26 Sep 2021, 6:00 am
1

மெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரான எடித் கிராஸ்மன், மொழிபெயர்ப்புப் பயணத்துக்குள் அடியெடுத்து வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. நோபல் பரிசு பெற்ற காப்ரியல் கார்ஸியா மார்க்குவெஸ், மரியோ வர்கஸ் யோசா போன்ற இலக்கிய ஆளுமைகளை உலகம் கொண்டாடுவதற்குக் காரணமாக இருந்தவர் இவர். லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியமான படைப்பாளுமைகளை ஆங்கிலத்துக்குக் கொண்டுசேர்த்த இவர் தன்னுடைய 85-வது வயதிலும் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். படைப்பாளிக்கு நிகரான அங்கீகாரம் மொழிபெயர்ப்பாளருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்த முன்னோடியும்கூட. முதன்முதலில் மொழிபெயர்ப்பாளரின் பெயர் அட்டைப்படத்தில் இடம்பெற்ற அதிசயத்துக்குச் சொந்தக்காரர். தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்புக்கெனப் பெரும் வாசகத்திரள் உருவாகியிருக்கும், மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவருடைய பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இதழ்களுக்காக எடித் கிராஸ்மன் அளித்த பேட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு தொடர்பாக அவர் பேசியிருக்கும் விஷயங்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. மூலப் பிரதியைப் போலவே அச்சுஅசலாக மொழிபெயர்ப்பும் இருக்க வேண்டும் என்ற பரவலான அபிப்ராயம் எப்படி வெளித்தள்ளும் பண்பைக் கொண்டிருப்பதாக உள்ளது என்பதை இந்தப் பேட்டி உணர்த்துகிறது. மொழிபெயர்ப்பு தொடர்பான இவருடைய அணுகுமுறையானது தமிழ்ச் சூழலில் உள்ள நிலைப்பாடுகளைப் பரிசீலித்துக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்கள் பயணத்தை நீங்கள் தொடங்கவில்லை, இல்லையா? நெருதாவின் ‘ரெஸிடென்ஸியா என் லா டியெரா’வை வாசித்ததுதான் உங்களுடைய பாதை என்ன என்பதைத் தீர்மானிக்கக் காரணமாக இருந்ததாக எழுதியிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்களேன்…

ஆமாம். நெருதாதான் என்னை லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பக்கம் அழைத்துவந்தது. ‘ரெஸிடென்ஸியா என் லா டியெரா’ அபாரமான கவிதை. அப்படியொரு கவிதையை அதற்கு முன்பாக நான் வாசித்ததில்லை. அப்போது நான் நினைத்தேன்: ‘நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக ஆகப் போகிறேன்’. அதுவரை, ஒரு விமர்சகராகவோ ஆசிரியராகவோ ஆவேன் என்றுதான் நினைத்துவந்திருந்தேன்.

நீங்கள் மொழிபெயர்க்கத் தொடங்கியது எப்படி?

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நான் ஒரு மாணவியாக இருந்தபோது யுவான் ரூமோ ஹிமெனெஸின் (Juan Ramon Jimenez) சில கவிதைகளை மொழிபெயர்த்தேன். மாணவர்களுக்கான இலக்கியப் பத்திரிகையில் இந்தக் கவிதைகள் பிரசுரமாகின. 1970-களின் முற்பகுதியில், ‘ரிவ்யூ’ (Review) இதழின் ஆசிரியராக ரொனால்ட் கிறிஸ்ட் இருந்தபோது, மாஸிடோனியோ ஃபெர்னாண்டஸை (Macedonio Fernández) மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார். ‘தி சர்ஜரி ஆஃப் சைக்கிக் ரிமூவல்’தான் மாஸிடோனியோவின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக அமைந்தது. அது 1973-ல் ‘ரிவ்யூ’ இதழில் வெளியானது. மாஸிடோனியோவின் எழுத்தில் மனதைக் கவரும் வினோதங்கள் பல இருந்தன என்பதற்கு அப்பாற்பட்டு, நான் அந்த வேலையை நேசிக்கிறேன் என்பதைக் கண்டுகொண்டேன். அன்றிலிருந்து மொழிபெயர்த்துவருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அது என்னுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியது. அதற்காக நான் கொஞ்சம்கூட விசனப்படவில்லை. இப்போதும் அந்த வேலையை நேசிக்கவே செய்கிறேன்.

முதல் மொழிபெயர்ப்பு அனுபவம் எப்படி இருந்தது? தடையற்ற தொடக்கமாக அமைந்ததா?

போர்ஹேவுக்கு வழிகாட்டிபோல இருந்த மாஸிடோனியோவின் ‘தி சர்ஜரி ஆஃப் சைக்கிக் ரிமூவல்’, மூளையில் சில பகுதிகளை நீக்குவது தொடர்பானது. அதன் தொனியைப் பிடிக்கும் வேலை எனக்கு வேடிக்கையானதாக இருந்தது. நூலகத்தில் உட்கார்ந்து ‘முக்கியமான விஷயங்கள்’ பற்றி ஆராய்ச்சி செய்வதைவிட இதைச் செய்வது உசிதம் என்று நினைத்துக்கொண்டேன்.

மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

சில கோட்பாடுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. மற்றவை எனக்கு அர்த்தமற்றதாகப் படுகின்றன. பயிலரங்குகள் நடத்தத் தொடங்கியபோது, மொழிபெயர்ப்பு தொடர்பான பொதுவான விதிகளை எல்லா இடங்களிலும் பயன்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்துகொண்டேன். மொழிபெயர்க்கும்போது எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சிக்கல்களெல்லாம் மொழிபெயர்ப்பாளரின் உள்ளுணர்வைச் சார்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, மொழிபெயர்ப்பின்போது அர்த்தத்தின் முழுமை கூடிவரவில்லை என்றால், மூலப் பிரதியில் இல்லாத சில வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்க்க முயன்றிருக்கிறேன்.

ஒரு புத்தகத்தை எது மொழிபெயர்க்க உகந்ததாக மாற்றுகிறது?

ஒரு புத்தகத்தை எது மொழிபெயர்க்க உகந்ததாக மாற்றுகிறது என்று என்னால் சொல்ல முடியாது. மாறாக, எல்லாப் புத்தகங்களையும் மொழிபெயர்க்க முடியும் என்பேன். மொழிபெயர்ப்பு என்பது அச்சு அசலாக மூலப் பிரதியில் உள்ளதுபோலவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. அதுதான், ஒரு புத்தகம் மொழிபெயர்க்க உகந்ததா, இல்லையா என்ற கேள்வி எழுவதற்கான காரணம். உண்மையில், மொழிபெயர்ப்பு என்பது முதலில் மூலப் பிரதியைத் திருப்பி எழுதுவதாகவே உள்ளது. மூலப் பிரதியைப் போலவே மொழிபெயர்க்கவும் சில புத்தகங்கள் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான சவால் எங்கே இருக்கிறதென்றால் நுட்பங்களையும், அர்த்தத் தளங்களையும், இரண்டு மொழிகளிலும் உள்ள கலாபூர்வ அம்சங்களையும் எவ்வளவு நுண்ணுணர்வோடு அணுகிறோம் என்பதில்தான்.

பல விதமான அர்த்தங்களைக் கொண்ட ஒரு வார்த்தையை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்? ஸ்பானிஷ் மொழியில் அப்படியான வார்த்தைகள் நிறைய இருக்கின்றனவே?

மூல மொழி தரும் அர்த்தத்துக்கு நெருக்கமான ஒரு ஆங்கில வார்த்தை கிடைக்கும் வரை சாத்தியமான எல்லாவற்றையும் முயன்றுபார்ப்பேன். அது தொடர்பாகப் படிப்பதற்கு நிறைய நேரம் செலவிடுவேன். சில சமயங்களில், எனக்குத் திருப்தி தரும் ஒரு வார்த்தையைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சலிப்பூட்டும் அளவுக்கு நீண்ட நேரம் தேட வேண்டியிருக்கும். பிறகு திடீரென, தெருவில் போகும்போது நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வார்த்தை என் காதில் விழும்.

மொழிபெயர்ப்பின்போது முடிஸைச் (Mutis) சந்தித்திருக்கிறீர்கள். வேறுசில எழுத்தாளர்களையும் சந்தித்திருக்கிறீர்கள். உங்களுடைய மொழிபெயர்ப்பை அவர்கள் வாசிக்கிறார்கள் என்பது உங்களுக்கு இடையூறாக இருந்திருக்கிறதா?

இல்லை, அப்படி இருந்ததில்லை. பல நேரங்களில் மிகவும் உதவிகரமாகவே இருந்திருக்கிறது. என்ன அர்த்தத்தில் எழுதினோம் என்பதையும், சில சொற்றொடர்களின் முக்கியத்துவத்தையும் அவர்கள் சொல்வது மொழிபெயர்ப்பாளர்களுக்கு நுட்பமான பார்வையை வழங்குவதாக அமையும். அப்படிச் சொல்லித் தருவதில் அவர்கள் பரந்த மனதுடனேயே நடந்திருக்கிறார்கள். குறிப்பாக, முடிஸ்.

முடிஸ் நாவல்களை மொழிபெயர்ப்பதற்காக ஏதேனும் தனித்துவமான வழிமுறைகளை உருவாக்கினீர்களா?

இல்லை. எப்போதும் என்ன செய்ய முயல்வேனோ அதையே செய்தேன்: அதாவது, ஸ்பானிஷ் மொழி கொண்டிருக்கும் தொனியில் என்னுடைய நுண்ணுணர்வைக் கூர்மைப்படுத்துவது, ஸ்பானிஷ் வாசகர்கள் என்ன அனுபவத்தைப் பெற்றார்களோ அதே அனுபவத்தை ஆங்கில வாசகர்களும் பெற வேண்டும் என்பதற்கான மொழிபெயர்ப்பு பாணியை உருவாக்குவது. முடிஸின் இலக்கிய மொழியும் பாணியும் நேர்த்தியானவை. அடர்த்தி மிகுந்தவை. எனவே, அவருடைய எழுத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டுபோக அதற்கு ஈடான உழைப்பு வேண்டியிருந்தது.

நீங்கள் கொலம்பியாவுக்கு வந்ததே இல்லை. ஆனால், அந்த வெப்ப மண்டல நிலங்களின் அழகை ஆங்கிலத்திலும் பிரமாதமாக மறுவுருவாக்கம் செய்திருந்தீர்களே எப்படி?

அதை நான் செய்யவில்லை. வெப்ப மண்டலத்தையும் மலைகளையும் எழுத்தாளர் மறுவுருவாக்கம் செய்திருந்தார். அந்தப் படிமங்களை எவ்வளவு முடியுமே அவ்வளவு நேர்மையாக ஆங்கிலத்தில் வழங்கியதுதான் என்னுடைய வேலையாக இருந்தது.

இவ்வளவு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதிலிருந்து உங்களுக்கென மொழிபெயர்ப்பு வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறீர்களா? இல்லையெனில் எப்போதும் ஒரே விதமாகத்தான் அணுகுகிறீர்களா?

நான் ஒரே மாதிரியாக எந்த வேலையையும் செய்வதில்லை. ஆனால், நான் எப்போதெல்லாம் வாசிக்கிறேனோ அப்போதெல்லாம் என்னுடன் சேர்ந்து வாசிக்கும் இன்னொரு குரலுக்கான இடம் என் மனதில் இருக்கிறது. எனவே, நான் வாசிக்கும்போது கேட்கவும் செய்கிறேன், பார்க்கவும் செய்கிறேன். அந்தக் குரலுக்கு எப்போதும் செவிசாய்ப்பேன்.

அது உங்களுடைய சொந்தக் குரலா?

ஆமாம், அது என்னுடைய குரல்தான். கவிதைகளை வாசிக்கும்போதோ அல்லது கலைநயமிக்க உரைநடையை வாசிக்கும்போதோ அந்தக் குரல் கேட்கும். கவிதையை அந்தக் குரல் ‘சொல்’லிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், நான் அந்தக் கவிதையை ‘பார்’க்கவும் செய்கிறேன்.

1600-களில் வெளிவந்த மிகப் புராதானமான பிரதிகளையெல்லாம் நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அந்த எழுத்தாளர்கள் உயிருடன் இல்லை என்பதால் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதற்கு மேலாக அவர் என்ன சொல்ல நினைத்திருப்பார் என்று இன்னும் அதிகமான சுதந்திரம் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறதா?

இல்லை. அதை நான் செய்வதில்லை. 21-ம் நூற்றாண்டு எழுத்தாளராக இருந்தாலும் சரி, பழைய எழுத்தாளராக இருந்தாலும் சரி, ஸ்பானிஷ் மொழியில் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்களோ அதையே நான் ஆங்கிலத்தில் சொல்லக் கடமைப்பட்டவள் ஆகிறேன். என்றாலும், மொழிபெயர்ப்பின்போது இட்டுநிரப்புவதற்கு எப்போதுமே இடமுண்டு. ஏனெனில், எந்த இரண்டு மொழிகளும் ஒன்றுபோலானது அல்ல.

நீங்கள் மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் புத்தகங்களுக்கு ஏற்கெனவே வேறு மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன என்றால் அதை வாசித்துப் பார்ப்பீர்களா?

உண்மை என்னவென்றால், நான் ஏதாவது மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டால் அந்தப் புத்தகத்தின் வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடவே மாட்டேன். ஒருபோதும் தொட மாட்டேன். என்னுடைய காதை நான் மாசுபடுத்த விரும்புவதில்லை. என்னுடைய திறனுக்கு ஏற்றபடி மூலப் பிரதியைக் கேட்கவும், அதன் அடிப்படையில் மொழிபெயர்க்கவுமே விரும்புவேன். சில நேரங்களில், மொழிபெயர்ப்பு முடிந்த பிறகாக மற்ற மொழிபெயர்ப்புகளைப் பார்த்திருக்கிறேனே தவிர ஒருபோதும் மொழிபெயர்க்கும்போதோ அதற்கு முன்பாகவோ பார்ப்பதில்லை.

அப்படி வேறு மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது உங்களுடைய புரிதலுக்கும் அவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை எப்போதேனும் கண்டுகொண்டிருக்கிறீர்களா?

நான் எவ்வளவு அகங்காரம் கொண்டவன் என்பதை அறிய விரும்புகிறீர்களா, என்ன?

பரவாயில்லை, சொல்லுங்கள். உங்களுடைய புகழ் அதற்கும் மேலானது!

சில நேரங்களில் மற்ற மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது, “என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?” என்று நினைப்பதுண்டு. மற்றவர்களின் மொழிபெயர்ப்புகளைவிட என்னுடையது மேம்பட்டது என்பதே என்னுடைய எண்ணம். அப்பாடா, சொல்லிவிட்டேன்!

நகைச்சுவையையும் பகடியையும் மொழிபெயர்ப்பதில் நீங்கள் வல்லவராக இருக்கிறீர்கள். பல மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அது கைவருவதில்லை.

அதுதான் மொழிபெயர்ப்பில் இருக்கக்கூடிய சவாலே. ஒரே நேரத்தில் நீங்கள் பல்வேறு தொனிகளையும், எழுத்தாளரின் விதவிதமான சொற்தேர்வுகளையும் கையாண்டு ஆங்கிலத்துக்குக் கொண்டுசெல்கிறீர்கள். ஆங்கிலம் மிகவும் பழமை வாய்ந்த மொழி. எந்தவொரு மொழியிலும் சாதிக்க முடிவதை ஆங்கிலத்திலும் சாதிக்க முடியும்.

ஆனால், நகைச்சுவையை மொழிபெயர்ப்பதில் உங்களுடைய திறமை அசாத்தியமானதாக வெளிப்படுகிறது. அகஸ்டோ மோன்டெர்ரெஸோவின் (Augusto Monterroso) அட்டகாசமான கதைகளை நீங்களும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். கலகலப்பும் வேடிக்கையும் நிரம்பியதாக உங்களுடைய மொழிபெயர்ப்பு இருக்கிறது. மோன்டெர்ரெஸோவின் தாளகதியை நீங்கள் தவறவிடுவதில்லை. நகைச்சுவையுடனும் பகடியுடனும் விளையாடுவதற்கான இடத்தில் உங்களை எப்படிப் பொருத்திக்கொள்கிறீர்கள்?

அவையெல்லாம் என்னுடைய இயல்பிலேயே இருப்பதாக நினைக்கிறேன். நான் சோம்பேறித்தனம் கொண்டவள் அல்ல. என்னுடைய குணநலனில் நையாண்டித்தனமும் சேர்ந்திருக்கிறது. பல விஷயங்களிலும் நகைப்புக்குரிய அம்சங்கள் இருப்பதைப் பார்க்கிறேன்.

உங்களுடைய மொழிபெயர்ப்பு வாழ்க்கையில் உங்களுடைய பாலினம் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்திருக்கிறதா?

நிச்சயம் இருந்திருக்கிறது. பெண்ணாக இருப்பதால் இதெல்லாம் செய்யக் கூடாது என்பன போன்ற கருத்துகளை மறைத்து வைக்க வேண்டிய சமூக அழுத்தம் இப்போது உருவாகிருப்பதால் ஓரளவு நிலைமை சீரடைந்திருக்கிறது எனலாம். பழைய இலக்கியங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிறுபான்மையினரை நடத்தும் விதமும் மாறியிருக்கிறது. பெரும்பாலும், பழைய எழுத்தாளர்களெல்லாம் சமூகத்தின் பொதுபுத்திக்குள் மாட்டிக்கொண்டிருந்தார்கள். அப்படியான பிரதிகளை மொழிபெயர்ப்பது மிக மிகக் கடினம்.

அரசியல் பேசலாமா?

நீங்கள் ட்ரம்புக்கு எந்தக் காலத்திலும் வாக்களிக்க மாட்டீர்கள் என்றால் பேசலாம்.

நான் அமெரிக்கக் குடிநபர் கிடையாது. என்னால் வாக்களிக்க முடியாது.

அப்படியென்றால் பேசலாம்.

நீங்கள் மொழிபெயர்த்த பல எழுத்தாளர்கள் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அதில் பலரும் புலம்பெயர்ந்து சென்றவர்கள். தங்களுடைய பிராந்தியத்தின் சமூக, அரசியல் செயல்பாடுகளை விசாரணை செய்வதற்குப் புனைவு வடிவத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களில் யாராவது உங்களுடைய அபிப்ராயங்களை மாற்றியிருக்கிறார்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. நான் ஒரு பழைய இடதுசாரி என்றே அழைக்கப்படுகிறேன். நான் படிக்கும் புத்தகங்களோ, மொழிபெயர்க்கும் புத்தகங்களோ என்னுடைய சித்தாந்தத்தை மாற்றவில்லை.

ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்களுடைய தெரிவுநிலை மாறியிருக்கிறதுதானே. உங்களுடைய சமீபத்திய புத்தகத்தில், எழுத்தாளர் குறிப்புக்கு நிகராக மொழிபெயர்ப்பாளர் குறிப்பும் இருந்தது. அட்டைப்படத்தில் உங்களுடைய பெயர் ஆரம்பக் காலகட்டத்தில் இடம்பெறவில்லையே?

அது பெரிய போராட்டம். என்னுடைய வழக்கறிஞர் நீல் கேட்ச்சர் மிகவும் தைரியமான நபர். ஒருமுறை என்னிடம், “அட்டைப்படத்தில் ஏன் உன்னுடைய பெயர் இல்லை?” என்று கேட்டார். “ஏனென்றால், மொழிபெயர்ப்பாளர்களின் பெயரெல்லாம் புத்தகத்தின் முகப்பில் வராது” என்றேன். அதற்கு அவர் சொன்னார்: ”அப்படியா, இதற்குப் பிறகு வரும்.” பின்னர், அட்டைப்படத்தில் என்னுடைய பெயர் வருவதற்காகப் பதிப்பாளர்களை நெருக்கத் தொடங்கினார்.

அது எப்படி இருந்தது? அசௌகரியமாக உணர்ந்தீர்களா? உற்சாகமாகவா?

இரண்டும். முதலில் அசௌகரியமாக இருந்தது. பின்னர், மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பாளரை மோசமான உறவில் வைத்திருந்த காலம் போய், சமமான கூட்டாளியாக மதிக்கும் காலம் வந்திருக்கிறது.

நீங்கள்தான் இதற்கு முன்னோடியா?

அப்படித்தான் நினைக்கிறேன். அவரால்தான் அது சாத்தியமாயிற்று. அதற்குப் பிறகு, அது வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டது. இப்போது பெரும்பாலும் அட்டைப்படத்தில் மொழிபெயர்ப்பாளரின் பெயர் இருக்கிறது இல்லையா?

உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதற்காக மட்டும் எப்போதாவது மொழிபெயர்த்திருக்கிறீர்களா?

இல்லை. என்னுடைய அப்பா ஒரு தொழிற்சங்க நிர்வாகி. எவ்வளவுதான் உங்களுடைய வேலையால் நீங்கள் மகிழ்ச்சியடைந்தாலும் செய்யும் வேலைக்குச் சம்பளம் வாங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஒரு நற்காரியத்துக்காகப் பங்களிக்கிறீர்கள் என்றால் பரவாயில்லை. மற்றபடி, ஊதியம் பெற்றே ஆக வேண்டும்.

அரசுசாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டெர்நேஷனலுக்காக நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். பைஸான்டைன் பேரரசின் வீழ்ச்சிதான் முக்கியமான கடைசி அரசியல் நிகழ்வு என்று அறிவித்த முடிஸ் படைப்புகளையும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். எழுத்தாளரின் சித்தாந்தத்துக்கும் மொழிபெயர்ப்பாளரின் சித்தாந்தத்துக்கும் இடையே உள்ள உறவு என்னவாக இருக்க வேண்டும்?

எழுத்தாளரின் அரசியலை மொழிபெயர்ப்பாளரும் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை; விமர்சகரும் அப்படித்தான். ஆனால், எழுத்தாளர் பேசும் அரசியலின் வெவ்வேறு அர்த்தத் தளங்களைப் புரிந்துகொண்டு, அதை மொழிபெயர்ப்பதற்கான திறந்த மனதுடனும், அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துபவராகவும் மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டியது அவசியம்.

படைப்பிலக்கிய எழுத்துடனும் விமர்சனத்துடனும் ஒப்பிடுகையில் இலக்கிய மொழிபெயர்ப்புக்கான இடம் எப்படி இருக்கிறது? மொழிபெயர்ப்புக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்கிறதா?

மொழிபெயர்ப்பு என்பது ஒரு படைப்பிலக்கியச் செயல்பாடு என்றும், விமர்சனச் செயல்பாடு என்றும் எனக்குத் தோன்றுகிறது. விமர்சகர்கள் நுழைவதைவிட மிகவும் ஆழமான இடத்துக்கு மொழிபெயர்ப்பாளரால் ஊடுருவ முடியும். பிரதியுடனும் அது கொண்டிருக்கும் உட்பிரதியுடனும் ஒரு மொழிபெயர்ப்பாளர் தொடர்ந்து உறவாடிக்கொண்டிருக்கிறார். இது மூலப் பிரதியின் தொனியும் உணர்வுகளும் உருவாக்கும் தாக்கத்தை இன்னொரு மொழியில் தருவதற்கான மொழிபெயர்ப்பாளருடைய கடமையின் பகுதியாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு வருவோம். விமர்சனத்தளத்திலும் சரி, வணிகத்தளத்திலும் சரி, இலக்கிய மொழிபெயர்ப்புக்கான மதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. மிக முக்கியமாக, பதிப்பாளர்கள் பதிப்பிக்கவிருக்கும் புத்தகங்கள் மொழிபெயர்ப்பாளரை நம்பித்தான் இருக்கின்றன என்றாலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு எவ்வளவு குறைவாக முடியுமோ அவ்வளவு குறைவாகத் தருவதையே அவர்கள் விரும்புகிறார்கள். மேலும், பெரும்பாலான விமர்சகர்கள் தாங்கள் ஒரு மொழிபெயர்ப்பைத்தான் விமர்சிக்கிறோம் என்பதை அக்கறையுடன் புறந்தள்ளிவிடுவார்கள். ஒருவேளை அவர்கள் மொழிபெயர்ப்பைப் பற்றிக் குறிப்பிட்டால், ‘சிறப்பான மொழிபெயர்ப்பு’ என்பதோடு முடித்துக்கொள்வார்கள்.

அடுத்து என்ன?

எதுவும் செய்யாமல் இருப்பது எவ்வளவு இனிமையானது என்று இத்தாலியர்கள் சொல்லும் வயதை அடைந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இந்த நாள் முடிவதற்குள் பத்து பக்கங்கள் மொழிபெயர்க்க வேண்டுமே என்று மனதுக்குள் ஏதும் ஓடிக்கொண்டிராமல் உங்களுடன் நிதானமாக அமர்ந்து பேசுவது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன்.

தமிழில்: கதிரவன்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Satheesh Kumar   4 years ago

ஆஹா. அரிய தொகுப்பு தெரியுமா இது. மொழிபெயர்ப்பாளராக அவர் சொன்னதையெல்லாம் தமிழில் கதிரவன் அவர்கள் மொழிபெயர்க்க, தற்போது ஒரு நூலை மொழிபெயர்த்து வரும் நான் அத்தனை இலயத்துப்போய் படித்தேன். கூடவே அவரின் அரசியல் நையாண்டியும் இடதுசாரி பார்வையும் எல்லாம் கலந்த ஒரு கலவையாக எடித் கிராஸ்மென்னை கண்முன் காட்டியது. மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு என்ற அவர் சொல்லிய மட்டில் நான் நிறுத்திக் கொள்ள மாட்டேன். முதலில் இது மிக அழகானத் தொகுப்பு. பொருத்தமான கேள்விகளை மட்டும் கத்தரித்து கட்டுரையாக்கியது மிகப் பெரிய பலம். வாழ்த்துகள். நன்றி

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

2000 ரூபாய் நோட்டுகுழந்தையின் அனுபவம்ஜனநாயகப் பண்புகணக்கெடுப்புஹைக்கூதமிழகத்தில் பள்ளிகள் திறப்புஅட்லாண்டிக் பெருங்கடல்தாமஸ் ஜெபர்சன்நேர்முக வரிஒரு தலைவன்மரம்கறியாணம்வதந்திகளும் திவால்களும்முகத்துக்குப் ‘பரு’ பாரமா?ஹண்டே பேட்டிசம்ரிதி திவாரி கட்டுரைகல்விக் கட்டணம்வட கிழக்கு மாநிலங்கள்ஆதிநாதன்பிரணாய் ராய்2024 மக்களவைத் தேர்தல்ஜாம்ஷெட்ஜி டாடாபுதிய பயணம்கண் எனும் நுகர்வு உறுப்புமஹ்வா மொய்த்ராநடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்ஊர்மாற்றம்அறிவியல் துறைவிவேக் கணநாதன் கட்டுரைபள்ளி மாணவர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!