1) மஸ்டேங்குகள்1
இன்னொரு பிறவியில், என் சகோதரன் அழகான கட்டுமஸ்தான ஆணாக இருந்தான். அவனால், கூடைப்பந்து வளையத்தினுள் புகாமல் தவறும் பந்தினை நின்றவாறே குதித்துக் கைப்பற்றி அதிவேகத்தில் இன்னொருவரிடம் வீசவோ, மீண்டும் எதிர்புறத்துக்குக் குதித்தோடி எளிதான இரண்டு புள்ளிகளை வெல்லவோ முடியும். மெலிந்த கணுக்காலையும் ஒல்லியான நீண்ட கால்களையும் கொண்டிருந்தான் அவன். அவனது கெண்டைக்கால்கள் முஷ்டியைப் போல் இறுகியும் தலைகீழ் இதயத்தைப் போல் பிளந்தும் காணப்பட்டன – ஓட்டக்காரனின் கால்கள், குதிப்பவனது கால்கள், இந்தியனது கால்கள். அவனுடைய உடலின் மேற்பகுதி மொஹாவியைச் சேர்ந்தவர்களுடையதுபோல் இருந்தது – விரிந்த மார்பு, அகன்ற தோள்கள், முழங்கால் வரை தொங்கும் கவண் போன்ற கைகள். என் அம்மா அப்படித்தான் குறிப்பிடுவார், அதாவது அவன் போர்க்குணம் கொண்டவன். எங்களது நகரின் சிறிய உயர்நிலைப் பள்ளியான நீடில்ஸ் மஸ்டேங்கின் சார்பில் அவன் பல்கலைக்கழகக் கூடைப்பந்துப் போட்டிகளில் கலந்துகொண்டான். கருநீலமும் வெள்ளையும் அணிந்தனர் அவர்கள். உடற்பயிற்சிக் கூடத்தின் முன்பக்கத்தில் பளீர் நீலத்தில் ஒரு மஸ்டேங் வரையப்பட்டிருந்தது, அதன் உட்புறச் செங்கற்சுவரில் மற்றொன்று, மரத்தாலான மைதானத்தின் மைய வட்டத்துக்குள் மூன்றாவது. மஸ்டேங்குகள். நான் அவற்றைக் கூடைப்பந்து விளையாட்டோடு தொடர்புபடுத்துவதுண்டு. அவற்றை எனக்குள் உணர்ந்ததுண்டு – என் செவிகளிலும் மார்பிலும் அதன் குளம்பொலி தடதடக்க, தசைகளின் அதிர்வு தொண்டையில் இறுக்க – நான் அவற்றை உணர்ந்ததுண்டு. அவற்றின் வேகம் தன் நரம்புகளில் முண்டியடிப்பதை அவன் அந்தக் காலத்தில் உணர்ந்திருக்கக்கூடும், அதனால்தான் அதை வெல்வதற்கு அவன் உச்சமாய்ச் செயல்பட்டிருக்கிறான்.
அவனை இதுபோன்ற நினைவுகளில்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நீடில்ஸ் மஸ்டேங்க் மைதானத்தின் சடசடக்கும் இருக்கைகளில் அம்மாவுடனும் அப்பாவுடனும் உடன்பிறந்த அத்துணை பேருடனும் அமர்ந்து தண்டர்ஸ்ட்ரக் ஆயத்தப் பாடல் ஒலிக்க அவன் மைதானத்துக்குள் நுழைவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஏசி/டிசி குழுவினரது பித்தேறிய குரலில் மந்திரம் போன்ற உச்சஸ்தாயி கூச்சலாக வெளிப்படும் இந்தப் பாடலானது தண்டர் (இடி) என்ற வார்த்தையுடனும், அதையடுத்து தண்டர்ஸ்ட்ரக் (அதிர்வு) என்னும் வார்த்தையுடனும் அதிர்வுறும். தண்டர் என்னும் சொல் 15 முறை உறுமலாய் வெளிப்பட, தண்டர்ஸ்ட்ரக் என்னும் வார்த்தை 19 முறை போர் அறைகூவல்போல வெளிப்படும்.
மஸ்டேங் நீலத்தில் கால்சட்டையும் பனியனும் அணிந்திருந்த என் அண்ணனும் அவனது அணியினரும் – அவர்களில் சிலர் எங்களது குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் – நளினமும் லாகவமும் கொண்டிருந்தனர். அவர்களது காலணிகள் தரையைத் தொட்டதுபோலவே இல்லை. மைதானத்தை இரண்டு முறை வலம்வந்து உள்ளே குறுக்காக ஓடி லே-அப்2 பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டபோது மைதானத்தை நிறைத்தது தண்டர்ஸ்ட்ர்க் பாடல். தத்தமது அதிசிறந்த ரூபத்தில் அப்போது அவர்கள் இருந்தார்கள் – மன்னர்களாகவும் வெற்றியாளர்களாகவும்.
பாடல் ஒலிக்க ஒலிக்க, செவ்வாய் கிரகத்தைப் போன்ற கூடைப்பந்தைத் தங்களிடையே வீசியபடியும் தரையில் மோதவிட்டும் லே-அப் பயிற்சியில் விடாது ஈடுபட்டனர். தண்டர்ஸ்ட்ரக் பாடல் அத்தனை சத்தமாக ஒலித்ததில், அண்ணனை உற்சாகமூட்டுவதற்காக அம்மா என்ன சொல்லிக் கத்தினாள் என்பதே எனக்குக் கேட்கவில்லை – அவளது வாய் திறந்து மூடுவதை மட்டுமே என்னால் காண முடிந்தது. பத்து வயதினளான எனக்கு, அப்போதே, துப்பாக்கிகள்போல் அதிர்ந்த அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே, எங்களுக்குள் சப்தமாகத் துடித்துக்கொண்டிருக்கும் ஒன்றினை அமைதிப்படுத்தும் – எங்கள் இதயங்களை மிதித்துக்கொண்டிருக்கும் மாய விலங்குகளைக் கட்டவிழ்த்துவிடும் – சக்தி இந்த விளையாட்டுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதை என் அம்மாவில், என் அண்ணனில், கட்டற்ற அந்த வீரர்களில் என்னால் காண முடிந்தது. இந்த நீண்ட ஆயுள் முழுவதும் மைதானத்தின் ஒளியினூடாக நாங்கள் – மஸ்டேங்குகளாகிய நாங்கள் – அனைவரும் சுதந்திரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த இரவுகளில், என்றென்றைக்குமான எங்கள் தவறுகளுக்காக, நாங்கள் மன்னிக்கப்பட்டோம்.
குறிப்புகள்:
[1] மஸ்டேங்குகள் — ஸ்பெயினிலிருந்து அமெரிக்காவுக்குக் கொணர்ந்து குடியேற்றப்பட்ட குதிரை வகைமை.
[2] லேஅப் — கூடைப்பந்தை வளையத்தின் பின்பலகையில் மோதி வளையத்தினுள் விழச்செய்தல்.
ర
2) அமெரிக்கப் புள்ளிவிவரம்
அமெரிக்கப் பூர்வகுடியினர் அமெரிக்காவின் மக்கள்தொகையில் வெறும் 1 சதவீதம்தான் உள்ளனர்.
100 சதவீதத்தில் 0.8 சதவீதம்.
ஏ, என் திறன்மிகு தேசமே,
அமெரிக்காவுக்கு முந்தைய நாட்களைப் பற்றி எனக்கு நினைவில்லை –
நாங்கள் எல்லோரும் இங்கிருந்த நாட்களைப் பற்றியும் எனக்கு நினைவில்லை.
வேறு எந்த இனத்தினரையும் விட அமெரிக்கப் பூர்வகுடி இனத்தினரே காவலர்களால் அதிகமும் கொல்லப்படுகின்றனர்.
இனம் என்பதை ஆங்கிலத்தில் ரேஸ் (Race) என்கிறார்கள்.
ரேஸ் என்பது ஒரு வேடிக்கையான வார்த்தை.
யாரோ ஒருவர் வெல்லப்போகிறார்கள் என்று அது குறிக்கிறது,
வெற்றி பெற எனக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது என அது குறிக்கிறது —
பந்தயமே அல்லாத ஒரு பந்தயத்தில் யார் வெல்வார்கள்?
காவலர்களால் நிகழ்த்தப்படுகிற கொலைகளில் 1.9% கொலைகள் அமெரிக்கப் பூர்வகுடியினருக்கு நிகழ்ந்தவை,
வேறு எந்த இனத்தின் விகிதத்தையும் விட அதிகம்.
சில நேரங்களில் ரேஸ் எனும் சொல் ஓட்டம் எனப் பொருள் தருகிறது.
கணக்கில் நான் அப்படி ஒன்றும் சிறந்தவளில்லை – அதற்கு நீங்கள் என்னைக் குற்றவாளி ஆக்க முடியுமா?
அமெரிக்கக் கல்வியைத்தான் நான் பெற்றேன்.
நாங்கள் அமெரிக்கர்கள், ஆனால் மொத்த அமெரிக்கர்களில் ஒரு சதவீதத்தைவிடக் குறைவாகத்தான் இருக்கிறோம்.
வாழ்வதைவிடக் காவலர்களால் கொல்லப்படுவதில் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம்.
இறந்துகொண்டிருக்கும்போது நாங்கள் யாரை அழைக்க வேண்டும்?
காவலர்களையா? மந்திரியையா?
தயவுசெய்து, யாரேனும், என் அன்னையை அழையுங்கள்.
தேசிய அமெரிக்க இந்தியர்கள் அருங்காட்சியகத்தின் 68% சேகரிப்புகள் ஐக்கிய அமெரிக்காவினுடையவை.
நானும் ஒரு அருங்காட்சியமாகிவிடாமல் இருப்பதற்கு என்னால் முடிந்த அளவு முயல்கிறேன்.
உள்ளும் புறமுமாய்த் தொடர்ந்து சுவாசிப்பதற்கு நான் முயல்கிறேன்.
கெஞ்சிக் கேட்கிறேன்: நான் தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன், காணாமலாகிவிட அல்ல.
ஆனால் நூறு அமெரிக்கர்கள் இருக்கக்கூடிய ஒரு அறையில்,
அமெரிக்கப் பூர்வகுடியினளான நான் ஒரு ஆள் கூட இல்லை – ஒன்றையும்விடக் குறைவு
ஒரு முழுமைகூட இல்லை – நான் என்னைவிடக் குறைவு. ஒரு உடலின் ஒரு பின்னம் மட்டுமே,
நான் ஒரு கரம் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம்.
அதோடு, அந்தக் கரத்தை என் காதலனின் சட்டைக்கு அடியில் விடுகையில் நான் முற்றிலுமாகக் காணாமலாகிவிடுகிறேன்.
ర
3) உடலே நீரின் ஆதி வடிவம்
ஐக்கிய அமெரிக்க நதிகளிலேயே அதிகம் அபாயத்தில் இருப்பது கொலெராடோ நதிதான் – அது என் உடலின் ஒரு பகுதியும்கூட.
நான் ஒரு நதியைச் சுமக்கிறேன். அதுதான் நான்; அஹா மகாவ். இது உருவகம் இல்லை. ஒரு மொஹாவியன், இன்யேச் ‘அஹா மகாவ்ச் இதூம் என்று சொல்லும்போது, நாங்கள் எங்கள் பெயரைச் சொல்கிறோம். எங்களது இருப்பின் ஒரு கதையைப் பற்றிச் சொல்கிறோம். என் உடலின் மையத்தினூடாக அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை வந்த அத்தனை பத்திகளிலுமே நதி என்ற வார்த்தையைச் சொல்லிவிட்டேன். நான் நீரை வீணாக்க விரும்பவில்லை. அதிக சிக்கனமாக இருக்க முயல்வேன். அந்த நதியை நான் என் உடலில் சேமித்தாக வேண்டும்.
ஸ்பானியர்கள் எங்களை மொஹாவே என்றழைத்தனர். எங்கள் நதியின் படுகை செஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததால் அதற்கு கொலெராடோ என்று பெயரிட்டனர்.
பூர்வகுடியினரும் சிவப்பினர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால், பூர்வகுடியினர் ஒருபோதும் சிவப்பாய் இருந்ததில்லை. இதுவரை ஒரு சிவப்புப் பூர்வகுடியினனைக்கூட நான் கண்டதில்லை, எங்களது குடியிருப்பிலும்கூட இல்லை, அமெரிக்க இந்தியர்களுக்கான தேசிய அருங்காட்சியகத்திலும் இல்லை, அரிசோனாவின் பார்க்கர் நகரின் பௌவௌ திருவிழாவிலும்கூட இல்லை.
அணை கட்டப்பட்ட நீல நதியின் அருகில் உள்ள ஒரு பாலைவனத்தில்தான் நான் வசிக்கிறேன். சுற்றுலா வந்து நீருக்கு வெளியே சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் கிடப்பதால் சிவந்துபோயிருக்கும் வெள்ளையர்கள் மட்டுமே இதுவரை நான் பார்த்த சிவப்பு மனிதர்கள்.
அஹா மகாவ் என்பதுதான் எங்களது நிஜப் பெயர், பூமியில் ஓடும் நதியை உயிர்ப்புள்ள எங்களது உடலின் கட்டமைப்பில் கலந்த படைத்தவன் எங்களுக்கிட்ட பெயர் அதுதான்.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது, அஹா மகாவ் என்பதற்கு, உடலின் மையத்தில் நதி ஓடுகிறது என்று பொருள் வருகிறது. அதேபோல்தான் அது எங்களது நிலத்தின் மையத்திலும் பாய்கிறது.
எல்லா மொழிபெயர்ப்புகளையும் போலவே, இது ஒரு மோசமான மொழிபெயர்ப்பு,
அமெரிக்க வெகுஜனக் கற்பனையில் இந்தச் சித்திரத்தின் தர்க்கம் ஒரு ஆழ்மன வெளிப்பாட்டியலாகவோ (surrealistic) மாயயதார்த்தமாகவோ உருக்கொள்ளும் – அமெரிக்கர்களுக்கு ஒரு மாயச் சிவப்பிந்தியனைப் பிடிக்கிறது, சாமியாடியைப் பிடிக்கிறது, அல்லது சிவப்பாடை அணிந்த போலி இந்தியனைப் பிடிக்கிறது. ஆனால், உண்மையான பூர்வகுடியினனைப் பிடிப்பதில்லை. தன் உடலில் நதியின் அபாயமும் திண்மையுமான துயரத்தைச் சுமக்கிற ஒரு பூர்வகுடிப் பெண்ணைக்கூடப் பிடிப்பதில்லை.
வெள்ளையர்களை எது அச்சுறுத்துகிறதோ அது பெரும்பாலும் தொன்மம் என்று நிராகரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நான் ஒருபோதும் உண்மையாய் இருந்ததில்லை. அமெரிக்காதான் எனக்குக் கட்டுக்கதை.
மொழிபெயர்க்கப்படும் வரை எல்லாப் பிரதிகளுமே துக்கத்தில் இருக்கின்றன என ழாக் தெரிதா குறிப்பிடுகிறார்.
மொஹாவியர்கள் கண்ணீர் என்று சொல்கிறபோது, நாம் நதியை நினைத்துக்கொள்கிறோம், என்னவோ எங்கள் கண்களிலிருந்து எங்கள் நதி பாய்ந்தது என்பதைப் போல! ஒரு பெரிய அழுகை என்று நீங்கள் அதை மொழிபெயர்ப்பீர்களாய் இருக்கும். அல்லது அழுகையின் நதி என்பதாக.
ஆனால் இந்த மொழிபெயர்ப்பு யாருக்காக, மொழிபெயர்ப்புக்கான என் முயற்சிகளின் வழியே என் மொழி இழந்தவற்றுக்கு நான்கு-நாள் துக்கம் அனுஷ்டிப்பதற்காக அவர்கள் வருவார்களா? எங்களது நதி முழுவதையும் குடித்துத் தீர்த்த பிறகு வெளிறிய பாலைவனத்தினூடாக நகரும் துக்க ஊர்வலத்தில் அவர்கள் கலந்துகொள்வார்களா?
வறட்சி என்பதற்கு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் மாறுபட்ட சொற்கள் இருக்கின்றன. என்றாலும், தாகத்தின் வலி, எல்லா உடல்களிலும் ஒரே வழியாகத்தான் — நாவு, தொண்டை — பெயர்கிறது. நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள், உங்களது நிறம் எது என்பதெல்லாம் அதைத் தீர்மானிப்பதில்லை.
நாங்கள் நதியையும் அதில் இருக்கும் நீரையும் எங்களது உடலில் சுமக்கிறோம்.
ஒரு காட்சிரீதியிலான தொடர்பை உணர்த்த நான் முயலவில்லை. இதுபோல: முழங்காலிட்ட ஒரு பூர்வகுடிப் பெண்ணின் கையில் இருக்கும் லாண்ட் ஒ லேக்ஸ் வெண்ணெய் டப்பாவில் இருக்கும் முழங்காலிட்ட ஒரு பூர்வகுடிப் பெண்ணின் கையில் இருக்கும் லாண்ட் ஒ லேக்ஸ் வெண்ணெய் டப்பாவில் இருக்கும் முழங்காலிட்ட ஒரு பூர்வகுடிப் பெண்ணின் கையில் இருக்கும் லாண்ட் ஒ லேக்ஸ் வெண்ணெய் டப்பாவில் இருக்கும்...
நாங்கள் நதியை அதன் நீர்ப்பரப்பை எங்களது உடற்பரப்பில் சுமக்கிறோம். ட்ராஸ்ட்டே விளைவை உணர்த்துவதற்காக நான் இதைச் சொல்வதில்லை –
நதியை நான் ஒரு வினைச்சொல்லாகச் சொல்கிறேன். ஒரு நிகழ்வு. இப்போது அது எனக்குள் நகர்ந்துகொண்டிருக்கிறது.
இது வெறும் முரண்தொகை அல்ல. உடலும் நீரும் மாறுபட்ட தன்மை கொண்டவையல்ல – அவை ஒன்றோடொன்று, ஒன்றின் அருகில் மற்றொன்று மிகவும் நெருக்கமானவை. அவை ஒன்றேயானவை – உடல், இருத்தல், சக்தி, தொழுகை, நீரோட்டம், நகர்வு, மருந்து.
இந்த உடல் ஆறு புலன்களைத் தாண்டியும் கொண்டிருக்கிறது என்று இனங்காண்பதிலிருந்து இந்தப் புரிதல் வருகிறது. உடலானது ஆறு புலன்களுக்கும் அப்பாற்பட்டது. அது உணர்ச்சிமிக்கது. எப்போதும் சக்தியின் ஒரு பரவசநிலையாய் இருப்பது. கிட்டத்தட்ட வேண்டுதலைத் தொடங்கும் நிலையில் இருப்பது, அல்லது ஏதோ ஒரு நதியோட்டத்தில் நுழைவதற்குத் தயாராய் இருப்பது. . .
நகரும் என் உடலை நகர்த்தும் ஒரு நதிபோல சக்தியும் ஒரு நகர்தலே.
மொஹாவியர்களின் சிந்தனையில் உடலும் நிலமும் ஒன்றுதான். ‘ii மற்றும் ‘a என்கிற எழுத்துகளால்தான் இரண்டு வார்த்தைகளும் மாறுபட்டுள்ளன. ‘உடலுக்கு iimat, ‘நிலத்துக்கு amat. உரையாடல்களின்போது இரண்டுக்குமே நாங்கள் சுருக்கமான ஒரு சொல்லைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்: mat-. நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை அறிந்திருக்காவிட்டால் நாங்கள் உடலைக் குறிப்பிடுகிறோமா நிலத்தைக் குறிப்பிடுகிறோமா என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது: எது காயம்பட்டது, எது நினைக்கிறது, எது உயிருடன் இருக்கிறது, எது கனவில் வந்தது, எது கவனம் கோருகிறது, எது மறைந்துபோய்விட்டது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் போய்விடக்கூடும்.
எங்கள் நதி அழிந்துகொண்டிருக்கிறது என நான் சொல்லும்போது, எங்கள் மக்கள் அழிகிறார்கள் என்று நான் சொல்கிறேனா?
நதி என்பதும் ஒரு உடல்தான், உங்களைப் போலவோ என்னைப் போலவோ அதற்கும் உயிர் இருக்கிறது, அது இல்லாமல் வாழ்க்கையே கிடையாது என்பதை எப்படி நான் மொழிபெயர்க்க முடியும்; மொழியில் அல்ல, நம்பிக்கையில் மொழிபெயர்த்தல்.
உண்மையான மொழிபெயர்ப்பானது, இரண்டு மொழிகளுக்கு இடையேயான இருமை உறவு அல்ல, முக்கோண உறவு என்று ஜான் பெர்கர் குறிப்பிடுகிறார். மூலப் பிரதி எழுதப்படும் முன்பு அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் என்ன இருந்தது என்பதுதான் அந்த முக்கோணத்தின் மூன்றாவது கோணமாக இருக்கிறது. உண்மையான மொழிபெயர்ப்பானது மொழிக்கு முந்தைய கட்டத்துக்குத் திரும்ப உங்களைக் கோருகிறது.
இந்தக் கதை எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்பது, இதற்கு முன்பு அஹாவ் மகாவ் என்கிற வார்த்தையைக் குறிப்பிட எனக்கு இருந்த உந்துதலுக்கும் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்கியதற்கும் இடையில் இல்லை.
அந்த இரண்டு புள்ளிகளுக்கும் முந்தைய இடத்துக்கு நாம் செல்ல வேண்டும் – மூன்றாவது இடத்துக்கு, அதாவது நதிக்கு நாம் செல்ல வேண்டும்.
எங்களைப் படைத்தவர் ஈட்டியால் பூமியைத் துளைத்த அந்த இடத்துக்கு, அதன் மண்ணுடலிலிருந்து பீறிட்ட முதல் நதி என்னுடலில் பாய்ந்த அந்த இடத்துக்கு நாம் செல்ல வேண்டும். ஒருசமயம் வெம்மையும் சிவப்புமாய் இருந்து தற்போது நீலமும் தண்மையுமாய் வழிப்படுத்தப்பட்டுவிட்ட நதிக்கு அடியில் நாம் மூழ்க வேண்டும், வாழ்க்கையை வழங்குவதற்கோ எடுத்துக்கொள்வதற்கோ போதுமான வேகத்துடன் நிலத்தைப் போர்த்தி நகர்ந்தபடி இருக்கும் நீரோட்டத்தின் முடிவற்ற மரகதப்பச்சைக்கு அடியில் நாம் வர வேண்டும்.
ஈரமும் கருமையுமாக நங்கூரமிட்டிருக்கும் வேர்களை நுகர முடிகிற சகதியான நதிக்கரைகள் வரை நாம் செல்ல வேண்டும். நாம் ஒருபோதும் மையமாய் இருந்திராத ஒரு இடத்தை நோக்கி, தொலைவுக்கு வெகுதொலைவுக்கு நாம் செல்ல வேண்டும். நாமின்றி இருக்க முடிகிற, ஆனால் நம்மை உருவாக்க முடிகிற ஒரு இடத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
மேற்பரப்பை உடைக்கும் இந்த மூன்றாவது இடம் என்பது என்ன, ஆழமாக வெட்டப்பட்டு வளைந்த எலும்புபோல் ஆகிவிட்ட நதிப்படுகைகளில் பாயும் கொலெராடோவின், ஆயிரத்தி நானூற்றி ஐம்பது மைல் தொலைவு தாகத்தை ஒரு உடலினுள்ளாக அதனூடாகப் பாயச்செய்வதுதானே அது?
பெர்கர் அதை சொல்லுக்கு முந்தைய கணம் என்கிறார். அக்கணமானது உடல் உடலைவிட மேலான ஒன்றாக இருக்கும் நிலையைப் போன்றது. உடல் எனத் தன்னைக் குறிப்பிட்டு அந்தச் சொல்லின் வரையறைகளுக்குள் அது தன்னைக் குறுக்கிக்கொள்வதற்கு முந்தைய நிலை.
சொல்லாவதற்கு முந்தைய நிலையானது, நதி இன்னமும் பசிய-நீல ஆற்றலாக இருக்கும் ஒரு இடம். கற்களைப் பச்சையாகவும் நீலமாகவும் ஆக்கி, சிவந்த வெள்ளமாக ஓடி, ரேஸர் முதுகு மீன்கள், வண்டுகள், பருத்திமரங்கள் மற்றும் வில்லோ மரங்களின் நிழலாடும் நிழல்கள் நிறைந்த ஒன்றாக நதி இருக்கும் நிலை.
சொல்முன் நிலையானது, உடல் உடலைவிட மேலானதாகவும் சாத்தியங்கள் கொண்டதாகவும் இருக்கும் நிலை.
தனக்குள் அது ஒரு நதியைக் கொண்டிருக்க முடியும் என்பது அவற்றுள் ஒரு சாத்தியக்கூறு.
நதி என்பது நீரை உடலாகக் கொண்டது. அதற்கு ஒரு பாதம் இருக்கிறது, முழங்கை இருக்கிறது, வாய் இருக்கிறது. அது ஓடுகிறது. ஒரு படுக்கையில் படுத்திருக்கிறது. அதனால் உங்களை நலமாக்க முடியும். அதனால் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள முடிகிறது.
கொலெராடோ நதியைக் கொள்வதற்காக, அதன் வேகத்தை எனக்குள் சுமப்பதற்காக, நான் படைக்கப்பட்டிருக்கிறேன் எனில்; என் தொண்டையின் வடிவமும் தொடைகளின் வடிவமும் ஈரத்துக்கானது என்றால்; என் நதி இல்லாமல் போன பிறகு, நான் என்பது எது என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்?
அதற்குள் இருக்கும் மீன்களெல்லாம் எலும்புக்கூடுகளாய் கிடக்கும் அளவுக்கும், அதன் வறண்ட படுகைகளின் மீச்சிறு மணற்குன்றுகள் வெளித்தெரியும் அளவுக்கும் அந்த நதி காலியாக்கப்பட்டால் அஹா மகாவ் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
இந்த நதி ஒரு ப்ரேதாத்மா என்றால், நானுமா?
ஆற்றுப்படுத்த முடியாத தாகமும் ஒருவகையிலான பீடித்தல்தான்.
நீர்தான் முதன்மையான மருந்து என்னும் வாக்கியம், ஸ்டாண்டிங் ராக் (Standing Rock) முகாமின்போது, பூர்வகுடியினரல்லாதோரிடையே அதிக பிரபலமாகவும் அறியப்பட்டதாகவும் இருந்தது. அது உண்மைதான்.
எங்கள் பிரதேசத்தில் நாங்கள் எங்களை நதியில்தான் தூய்மைப்படுத்திக்கொள்கிறோம். சோப்பு போட்டுக் குளிப்பதுபோல் அல்ல. அதாவது, எங்களது இலக்குகளாக முன்னரே நியமிக்கப்பட்டிருப்பவற்றை நாங்கள் சிறந்த ஆற்றலுடன் செய்வதற்கும் அதை நோக்கிச் செல்வதற்கும் ஏதுவாக நீர்தான் எங்களுக்கு வலிமை தருகிறது.
நீர் இன்றி எங்களால் சிறப்பாக வாழ முடியாது, எங்களால் வாழவே முடியாது.
நதியை இப்படி நஞ்சாக்கியும் தீர்த்தும் விட்டால் பிறகு எப்படி நம்மால் நமது காயங்களையும் தவறுகளையும் சரிசெய்ய முடியும்? நாம் விட்டுச்செல்ல வேண்டியவற்றை எப்படிக் கழுவிக்கொள்ள முடியும்? நம்மை நாம் எப்படிப் புதுப்பித்துக்கொள்ள முடியும்?
தாகித்திருப்பதும் தணித்துக்கொள்வதுமே ஒருவர் உயிருடனும் நன்றியுடனும் இருப்பதற்கான அடையாளம்.
தாகித்திருப்பதும் தண்ணீர் இல்லாமல் இருப்பதும்…
உங்களைப் படைத்தவரால் உங்களது மார்பில் ஒரு சிறிய பறவையை இதயம் என்று துடிக்க வைக்க முடிந்திருக்கிறதென்றால், மெல்லிய சதைகளும் வளைவுகளுமாய் நீண்டிருக்கும் என் உடலுக்குள் ஒரு நதியின் ஓட்டத்தை உருவகித்துக்கொள்வது உங்களுக்குச் சிரமமா என்ன? சுவாசத்தைப் போலவோ நட்சத்திரத்தைப் போலவோ பக்கவாட்டில் நகரும் கிலுகிலுப்பைப் பாம்பைப் போலவோ உங்கள் அன்னையைப் போலவோ நீங்கள் நேசிப்பவர்களைப் போலவோ அதுவும் புனிதமானதுதான் என்று நம்புவது உங்களுக்குச் சிரமமாய் இருக்கிறதா என்ன? என்னால் உங்களை அப்படி நம்ப வைக்க முடிந்தால், நமது பழுப்பு உடல்களும் நீல நதியும் கூடுதலாக நேசிக்கப்பட்டுக் குறைவாக சிதைக்கப்படுமா?
நியூசிலாந்தின் வாங்கனூயி நதிக்கு, ஒரு மனிதனுக்குரிய அத்தனை சட்ட உரிமைகளும் இப்போது உள்ளன. இந்தியாவின் கங்கா யமுனா நதிகள் ஒரு மனிதனுக்குரிய அத்தனை சட்ட அந்தஸ்தையும் கொண்டுள்ளன. சுத்தமான குடிநீர் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என ஸ்லோவேனியாவின் அரசமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில், வட டகோடாவின் ஸ்டாண்டிங் ராக்கை மாசுபடுதலிலிருந்தும் தூய்மைக்கேட்டிலிருந்தும் காக்கும் பொருட்டுப் போராடும் பூர்வகுடியினர் மீது கண்ணீர்ப்புகையும் ரப்பர் தோட்டாக்களும் வீசி தாக்கிக்கொண்டிருக்கிறோம். ஃப்ளிண்ட்டிலும் மிச்சிகனிலும் பல ஆண்டுகளாக ஈயம் கலந்த நீரைப் பருகிக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம் அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை இனிதான் நாம் காணவிருக்கிறோம்.
மோசமான கணிதமும் அறிவியலும் கொண்ட நிலமாய் இருக்கிறது அமெரிக்கா. நிலத்தின் மீதும் நீரின் மீதும் அவர்கள் செலுத்தும் வன்முறையிலிருந்து இயேசுவின் இரண்டாம் வருகையின்போது பிழைத்துக்கொள்ளலாம் என வலதுசாரிகள் நம்புகின்றனர்; இடதுசாரிகளோ, எந்த அறிவியல் தொழில்நுட்பம் இந்த நிலத்தையும் நீரையும் சிதைக்கிறதோ அதே தொழில்நுட்பம் அவற்றை சரிசெய்யவோ அல்லது செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய உலகத்தை நிறுவவோ உதவும் என நம்புகின்றனர்.
நாம் நம் உடலைத்தான் நமது எல்லாமுமாகக் கருதுகிறோம்: நான் என்பது என் உடல். இந்த எண்ணமானது நீரையும் காற்றையும் நிலத்தையும் ஒருவர் மற்றொருவரையும் அவமதிக்கத் தூண்டுகிறது. ஆனால், நீரானது நமது உடலுக்கோ ஆன்மாவுக்கோ வெளியில் இருப்பது அல்ல.
எனது மூத்தோர் சொல்கின்றனர், உனது செவியை வெட்டிக்கொள், நீ உயிருடன் இருப்பாய். உன் கையை வெட்டிக்கொள், நீ உயிருடன் இருப்பாய். உன் கால்களை வெட்டினாலும்கூட நீ உயிருடன்தான் இருப்பாய். ஆனால், நீரை நம்மிடமிருந்து விலக்கினால் நம்மால் ஒரு வாரத்துக்கு மேல் வாழ முடியாது.
நாம் அருந்தும் நீரானது, நாம் சுவாசிக்கும் காற்றைப் போலவே, நம் உடலின் ஒரு பகுதியல்ல – அதுதான் நம் உடல். நாம் உடலுக்குச் செய்யும் ஒன்றை நீருக்கும் செய்கிறோம், நீருக்குச் செய்கிறதை உடலுக்கும்.
எல்லா நீருக்குமே கச்சிதமான நினைவாற்றல் இருக்கிறது என்றும், அது எப்போதும் தான் முன்பு இருந்த இடத்தை நோக்கி மீள முயன்றுகொண்டே இருக்கிறது என்றும் டோனி மாரிஸன் எழுதுகிறார். பூமியின் உடலுக்கு, தசைக்கு, வாய்க்கு, தொண்டைக்கு, கர்ப்பத்துக்கு, இதயத்துக்கு, ரத்தத்துக்கு, நமது துயரங்களுக்கு, பின்னோக்கிப் பின்னோக்கிப் பின்னோக்கி, நாம் பிற்பாடு என்னவாக ஆனோமோ அதைக் காட்டிலும் மேலானவர்களாக நாம் இருந்த அந்தக் காலத்துக்கு.
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை நாம் கூடிய விரைவில் நினைவில் கொள்வோமா? நீர்.
அதை நினைத்துக்கொண்டதும் நாம் நமது ஆதி நீருக்குத் திரும்புவோமா, அப்படித் திரும்புவதன் மூலம் நம்மையும் ஒருவர் மற்றவரையும் நோக்கித் திரும்பிச்செல்வோமா, மேலாகவும் தூய நிலையிலும்?
நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதையும் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நீர் மறந்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
ర
தமிழில்: இல.சுபத்ரா
(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)
தமிழில்:
இல.சுபத்ரா


1





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.