கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு

குறட்டை ஏன்?

கு.கணேசன்
24 Dec 2023, 5:00 am
0

ளம் வயதானாலும் சரி, முதியோரானாலும் சரி, இரவுத் தூக்கத்தில் குறட்டை விடுவது ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. ஒரு மருத்துவப் புள்ளிவிவரப்படி முதியவர்களில் 45% பேர் குறட்டை விடுகிறார்கள். இவர்களில் 25% பேருக்குத் தொடர்ந்து இது தொல்லை தருகிறது என்பதால் தூக்கம் குறைந்து அவதிப்படுகிறார்கள்.

நாசியில் பிரச்சினை, தாடையில் பிரச்சினை, டான்சில் பிரச்சினை போன்றவை இருந்தால் குழந்தைகளுக்கும் குறட்டை ஏற்படும்.

ஒருவருக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கும்போது, குறட்டை விடுபவரைவிட அவருக்கு அருகில் தூங்கும் நபருக்குத்தான் இது பெருந்தொல்லையாக இருக்கிறது. போகப்போக, குறட்டை விடுபவருக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. குறட்டை காரணமாக தம்பதிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ளவர்களும் வரலாற்றில் இருக்கிறார்கள். இது பொதுவாக, பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகம் தொல்லை கொடுக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

குறட்டை வருவது ஏன்?

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. கண் விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?

தூங்கும்போது, தொண்டையில் மூச்சுக் குழல் தசைகள் தளர்ந்துவிடுகின்றன. அப்போது சுவாசப்பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதை வழியாக சுவாசக் காற்று பயணிக்கும்போது சத்தம் எழுகிறது. இதுதான் குறட்டை. இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்த இயல்புநிலைதான்.

சில சமயங்களில், மல்லாந்து தூங்கும்போது, தளர்வுநிலையில் உள்ள நாக்கும் சிறிது உள்வாங்கி தொண்டைக்கு வந்துவிடும். இதனாலும் குறட்டை வரும். கீழ்த்தாடை சிறிது உள்வாங்கி இருந்தாலும் குறட்டை வர வாய்ப்புண்டு.

உடல் பருமன், சைனஸ் தொல்லை, சளி, ஜலதோஷத்துடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில் அழற்சி, வாய் திறந்து தூங்குதல் போன்ற பலவற்றின் கலவையாக குறட்டை ஏற்படலாம். தைராய்டு பிரச்சினை, ஒவ்வாமை, கர்ப்பம், சிறிய நாசி, மாசுபட்ட சுற்றுச்சூழல் போன்றவை குறட்டைக்குப் பாதை போடும். புகைப்பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

குறட்டை ஆபத்தானதா?

குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதோடு, சில சமயங்களில் அறவே சத்தம் இல்லாமல் போவதை ‘உறக்க மூச்சின்மை’ (Obstructive Sleep Apnea) என்று சொல்வோம். அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.

ஆனால், இந்த மாதிரி நேரங்களில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப்பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக்கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது. இதனால் சில பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

இவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாக தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் இருப்பார்கள். தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. தூங்கி வழிவார்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத்துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோத்துக்கொள்ளும்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

சைனஸ் தலைவலிக்குத் தீர்வு என்ன?

கு.கணேசன் 12 Dec 2021

என்ன பரிசோதனை உள்ளது?

வழக்கமான எக்ஸ்-ரே, சிடி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள் சுவாசப்பாதையில் அசாதரணங்கள் உள்ளனவா என்பதைத் தெரிவிக்க உதவும். அத்தோடு, ‘உறக்க மூச்சின்மை’யை உறுதிசெய்ய ‘உறக்க ஆய்வுப் பரிசோதனை’ (Sleep study) இருக்கிறது. குறட்டையினால் சுவாசம் தடைபடுகிறதா, ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறதா போன்ற விவரங்களை இது தெரிவிக்கிறது.

என்ன சிகிச்சை உள்ளது?

உறக்க மூச்சின்மை ஆரம்பக்கட்டத்தில் இருந்தால், லேசர் அறுவை சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம். நாக்கு, தாடை, பற்கள் போன்றவற்றின் நிலையைச் சரிசெய்ய வாய்வழி கருவிகள் உள்ளன. தேவைக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைப்பார்.

பாதிப்பு தீவிரமாக இருந்தால், ‘சிபாப்’ (Continuous Positive Airway Pressure - CPAP) எனும் முகமூடியை உறங்கும்போது அணிந்துகொள்வதுதான் சிறந்த வழி. தண்ணீர்க் குழாயில் அடைப்பு ஏற்படும்போது பலத்த காற்றைச் செலுத்தினால் அடைப்பு விலகிவிடுகிறது அல்லவா? இந்த இயற்பியல் தத்துவத்தில் இயங்குகிறது, சிபாப் கருவி. இதிலிருந்து வெளிப்படும் காற்று தேவைக்கேற்ற அழுத்தத்துடன் மூச்சுப்பாதைக்குள் தொடர்ச்சியாகச் செல்வதால், குறட்டை விலகிவிடுகிறது.

இவற்றிலும் சரியாகவில்லை என்றால், ‘உவுலோபேலடோபரைங்கோப்ளாஸ்டி – யுபிபிபி’ (Uvulopalatopharyngoplasty – UPPP), ‘கோபிலேஷன் டர்பினோபிளாஸ்டி’ (Cobilation Turbinoplasty) எனும் இரண்டு வித அறுவைச் சிகிச்சைகள் மூலம் குறட்டைக்கு நிரந்தரத் தீர்வு காணலாம்.

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

உடல் பருமனைக் குறைக்க முதல் வழி

கு.கணேசன் 02 Jan 2022

தடுக்க என்ன செய்யலாம்?

  • குறட்டையைத் தவிர்க்க வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொள்வதுதான் சிறந்த வழி.
  • தூங்கும்போது தலைப்பகுதியை ஒரே திசையில் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
  • குறட்டையைக் குறைக்கச் சிறப்புத் தலையணைகள் உள்ளன.
  • மல்லாந்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.
  • உடல் எடையை சரிசெய்ய வேண்டும்.
  • தைராய்டுதான் பிரச்சினைக்கு மருந்து சாப்பிட வேண்டும்.
  • மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
  • போதைப்பொருள் பயன்பாட்டையும் நிறுத்த வேண்டும்.
  • தேவையில்லாமல் உறக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.
  • யோகா செய்யலாம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
சைனஸ் தலைவலிக்குத் தீர்வு என்ன?
உடல் பருமனைக் குறைக்க முதல் வழி
உடற்பருமனைக் குறைக்கும் முக்கிய வழிகள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2






சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்micro enterprisesபுபேஷ் குப்தாஸ்னிக்தேந்து பட்டாசார்யா கட்டுரைபாபர் மசூதி இடிப்புஎகிப்துவெஸ்ட்மின்ஸ்டர் முறைநிகழ்நேரப் பதிவுகள்143 ஆண்டுகள் பழமைஹிட்லர்சாஹேபின் உடல்கறுப்பின மக்கள்எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?ரிஷி சுனக்: திறக்கும் கதவுகள்பெண்கள் பாதுகாப்பு: கனத்த கேள்விகள்சமதா சங்கதான்புதிய கல்விச் சட்டம்ஈர்ப்புக்குழாய்சென்ட்ரல் விஸ்டாசிறைத் துறைலால்பகதூர் சாஸ்திரிசோழர் காலம்சகீப் ஷெரானி கட்டுரைமொழிபெயர்ப்புதலைமுறைவடக்கு வாழ்கிறதுஒன்றிய நிதியமைச்சகம்சிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிகழுத்து வலிடீஸ்டா நதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!