ஆரோக்கியம், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

சைனஸ் தலைவலிக்குத் தீர்வு என்ன?

கு.கணேசன்
12 Dec 2021, 5:00 am
1

ழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா, சளி, இளைப்பு என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் வரிசைகட்டி வந்துவிடும். அதிலும் மூக்கில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால், அது சைனஸ் பிரச்சினையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும்.

சைனஸ் என்றால் என்ன?

நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப் பைகள் (Para Nasal Sinuses) உள்ளன. இதற்குப் பெயர்தான் சைனஸ். நாம் சுவாசிக்கும் காற்றை தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப் பைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்கு திரவம் தேங்கும்போது, அங்கு அழற்சி உண்டாகும். இதன் விளைவால் சைனஸ் பிரச்சினை (Sinusitis) ஏற்படுகிறது. 

சைனஸ் பாதிப்பு ஏன்?

சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை, ஆரோக்கியக் குறைவு இந்த மூன்றும்தான் சைனஸ் பிரச்சினையை வரவேற்கும் முக்கியக் காரணங்களாக முன்பு இருந்தன. இன்றைய வாழ்வியலில் குளிர்பானங்களைக் குடிப்பதும், பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதும் அதிகரித்திருப்பதால், ஒவ்வாமை குணங்கள் கூடுதலாகி, சைனஸ் பிரச்சினையைக் கொண்டுவந்து கொடுக்கின்றன. அடுத்து, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போது சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ என அழைக்கப்படுகிற மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.

அழற்சியே அடிப்படை

 மாசடைந்த காற்றில் கலந்து வரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும்போது, அங்குள்ள ‘சளிச் சவ்வு’ வீங்கி  அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை, வாசனை திரவியம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதைச் சாப்பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நீண்ட நேரம் நனைந்தால் இதே நிலைமைதான். சைனஸ் அறையில் அழற்சி அதிகமாகும்போதும், மூக்கில் சதை வளரும்போதும் இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும். அப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப்பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும்.

அறிகுறிகள் என்ன?

 அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். முகம் கனமாகத் தெரியும். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். பற்கள்கூட வலிக்கலாம். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியான மூக்குச் சளி வெளியேறும். சைனஸ் பாதிப்பு நீடித்தால், சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது; ருசியை உணர முடியாது.

பரிசோதனைகள் என்ன?

 சைனஸ் தொல்லையைக் கண்டறிய முகத்தை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது வழக்கம். இதில் சந்தேகம் வரும்போது சி.டி.ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ.ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். இப்போது மூக்கு எண்டோஸ்கோப்பி (Nasal endoscopy ) பரிசோதனை மூலமும் சைனஸ் பாதிப்பைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. இவற்றுடன் வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமையைக் கண்டறியும் பரிசோதனைகள், சளிப் பரிசோதனைகள் ஆகியவையும் மேற்கொள்ளப்படுவதுண்டு.

என்ன சிகிச்சை?

இந்தப் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த ஆன்ட்டிஹிஸ்டமின் மாத்திரைகளைச் சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது அவசரத்துக்கு உதவும். ஆனால் இதையே தொடர்ந்து மேற்கொள்வது நல்லதல்ல. சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். ஆனால், நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது.

இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்தலாம். இவற்றால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. மூக்கின் வெளிப்புறத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்துவதால், ரத்தத்தில் ஸ்டீராய்டு மருந்து கலப்பதற்கு வாய்ப்பில்லை. மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்தி காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகி சுலபமாக வெளியேறிவிடும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம். இவற்றை காலமுறைப்படி மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டும். நிவாரணம் கிடைக்கிறது என்பதற்காக நோயாளி சுயமாக அடிக்கடி இந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.

எண்டோஸ்கோப்பி உதவும்!

முன்பெல்லாம் சைனஸ் திரவத்தை வெளியேற்ற மூக்கினுள் துளை போடுவார்கள். இதற்குப் பயந்தே பலரும் சிகிச்சைக்கு வரத் தயங்குவார்கள். இந்த நிலைமை இப்போது இல்லை. எண்டோஸ்கோப்பி உதவியுடன், ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன சிகிச்சையில், வலி இல்லாமல் மிகத் துல்லியமாக சிகிச்சை அளிக்கமுடியும். மூக்கின் நடு எலும்பு வளைவு, சதை வளர்ச்சி போன்றவற்றையும் இந்தக் கருவி மூலம் சிகிச்சை  தர முடியும்.

தீய விளைவுகள் என்ன?

ஒருவருக்கு சைனஸ் தொல்லை நீடிக்குமானால், அல்லது அவர் சரியாக சிகிச்சைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், தன்னுடைய அன்றாடப் பணிகளை உற்சாகத்துடன் செய்ய முடியாது. கூர்மையான பணிகளில் அதிக கவனம் செலுத்தமுடியாது. அதனால் பணிகளின் தரம் குறையும். மேலும். சைனஸ் பாதிப்பு மிகவும் மோசமானால், சமயங்களில் அங்குள்ள நோய்த்தொற்று மூளைக்கும் பரவிவிடும். அப்போது மூளைக் காய்ச்சல், மூளையில் சீழ் கட்டுவது போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவிடும்.

தடுப்பது எப்படி?

சுயசுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் பேணுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சமச்சீரான உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஜலதோஷம் உள்ளவர்களின் அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமைப் பொருளைத் தவிர்க்க வேண்டும். தூசு, புகைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும்போது முகத்தில் மாஸ்க் அணிந்துகொள்ளலாம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் பிராணாயாமம் செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஐஸ், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

செய்யக் கூடாதவை என்னென்ன?

*          குளிர்பானங்களைக் குடிக்கவே கூடாது.

*          பனியில் அலையக் கூடாது.

*          புகைபிடிக்கக் கூடாது.

*          புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது.

*          மூக்குப்பொடி போடக் கூடாது.

*          அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.

*          மூக்கை பலமாகச் சிந்தக் கூடாது.

*          விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.

(தொடர்ந்து பேசுவோம்...)

கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1

1

1
பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Purusothaman.R   1 year ago

Thank you sir for your valuable information I have sinuses problems I take some points from your article

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சட்டத் சீர்திருத்தம் அவசியம்மக்களவைஏற்றுமதிபிலிப் எச். டிப்விக்பஞ்சாங்கக் கணிப்புதேசத் துரோகிஉற்றுநோக்க ஒரு செய்திதேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்அமித் ஷா கட்டுரைஆலிவ் மரத்தில் காய்க்கும் கணிதம்!சமஸ் ஃபேஸ்புக் குறிப்புகாங்கிரஸ் தோல்விகுறுங்கதைகெட்டதுதேவி லால்பிரதமர்கள்அண்ணா நூலகம்ஜனநாயகப் பண்புபார்வையிழப்புenglish languageஅருஞ்சொல் அருந்ததி ராய்அயோத்தி பிரதேசம்ரத்தமும் சதையும்ஒருங்கிணைப்பாளர்கள்பெண்கள்தெலங்கானா முதல்வர்சமூகப் பிரக்ஞைபொதுப் போக்குவரத்துமாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிஇலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வருமா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!