ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பேசுபொருளாகியிருக்கிறார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. ‘கிங் ரிச்சர்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக இவ்விருதுக்கு அவர் தேர்வுசெய்யப்பட்டார். இது வில் ஸ்மித் பெறும் முதல் ஆஸ்கர் விருது ஆகும். ஆஸ்கர் நிகழ்ச்சிகளால் ஆராவாரமாக விழாக் கோலம் பூண்டிருந்த டால்பி அரங்கை ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் வில் ஸ்மித். நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் இந்த விழாவில் தன்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியில், வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட்டை உருவக்கேலிசெய்யும் விதமாகப் பேசினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித், மேடைக்குச் சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். அரங்கம் ஸ்தம்பித்தது. ஆனபோதிலும், நிலைகுலையாமல் தன் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார் கிறிஸ் ராக். கீழே போய் அமர்ந்த பின்னரும் ஆத்திரம் அடங்காத வில் ஸ்மித், "என் மனைவியைப் பற்றிப் பேசுவதை நிறுத்து!" என்று கத்தினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டுபோனார். பிறகு, தனது செயலுக்காகக் கண்ணீர்விட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டார் வில் ஸ்மித். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு உலகம் முழுவதும் உருவக்கேலி தொடர்பான விவாதத்தை உருவாக்கியது. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. விவாதத்தில் ஏராளமாகக் கொட்டிய கருத்துகளில் இருவருடைய கருத்துகள் இருவேறு பார்வைகளைத் தருவதாக இருந்தன. தன் வாசகர்களுக்கு 'அருஞ்சொல்' அவற்றை இங்கே தருகிறது.
கார்த்திக் வேலு
வில் ஸ்மித் ஆஸ்கர் மேடையில் வைத்து கிறிஸ் ராக்கை அறைந்தது – ஹாலிவுட் / ஆஸ்கர் தரத்துக்கு நோக்கினால் ஓவர் ரியாக்க்ஷன் என்றே நினைக்கிறேன். உருவக்கேலி தவறு என்று எளிமையான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டு அப்படி அடித்தது சரிதான் என்று சிலர் ஆதரிக்கிறார்கள்.
இப்படி ஆதரிப்பவர்கள் பலர் ஆஸ்கர், கோல்டன்குளோப் போன்ற விருதுகளில் இதுபோல் பிற காமெடியன்கள் பேசுவதை இதற்கு முன் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. ரிக்கி ஜார்விஸ், பில்லி கானலி போன்றோர் எல்லாம் மேடையில் பேசுவதைக் கேட்டால் கிறிஸ் ராக் பேசியது ஒன்றுமே இல்லை என்று தோன்றும். இப்படி 'எல்லை'களை மீறி பேச வேண்டும் என்றே இவர்கள் நிகழ்ச்சிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.
ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் இப்படி எந்த அரசியல்சரிகளுக்கும் உட்படாமல் ஒருவரை ஒருவர் கிண்டல் அடிப்பது நெடுங்காலமாக தொடரும் ஒரு வழக்கம்தான். பல சமயங்களில் அது எல்லை மீறும். ஆனாலும், எப்படியாவது பல்லைக் கடித்துக்கொண்டு ஏற்றுகொள்வார்கள். நடிகர்களே நடிகர்களை மகிழ்விக்க வேண்டுமானால் அந்த எல்லைகளை அவர்கள் தாண்ட வேண்டியிருக்கிறது. சில சமயம் அப்படி எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைக் கொண்டு பலர் பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்களையும் போட்டு உடைப்பார்கள். (உம்: ஆஸ்கர் விருதுகள் எப்படி பெரும்பாலும் வெள்ளையின நடிகர்களுக்கே கிடைக்கிறது என்பது). இப்படி 'பேசாப்பொருளை பேசுவது' ஒவ்வொரு முறையும் நடக்கும்
இப்படி ஒருவரைத் தனியே அடையாளப்படுத்தி அவரை எப்படி எல்லாம் நக்கல் அடிக்க முடியுமோ அப்படி அடிப்பதை ரோஸ்டிங் (roasting) என்கிறார்கள். நாம் தமிழில் ஒருவரை "வைத்து செய்வது" என்று சொல்கிறோம் இல்லையா அதுதான் இது. ஒருவரின் ஒப்புதலின்பேரிலேயே இது நடக்கும்; அவரும் அதில் கலந்துகொண்டு ரசிப்பார் ( சில விஷயங்கள் புண்படுத்தினாலும்). ஒபாமாவே அப்படி ஒரு விருந்தில் இப்படி வைத்துசெய்யப்பட்டார். இப்படி வில் ஸ்மித் அறைந்ததுபோல எல்லோரும் ஆரம்பித்தால் ஸ்டாண்ட் அப் காமடியன்கள் எல்லோரும் கடையை மூடிவிட்டு ஐஸ் கிரீம் விற்க போக வேண்டியதுதான்.
சீக்கிரமே யாராவது இது போன்ற பழைய ஆஸ்கர் மோனோலாகுகளை எடுத்து எடிட்செய்து போடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்போதுதான் இது ஹாலிவுட்டுக்கு இதெல்லாம் புதிதல்ல என்பது பரவலாகப் புரியும்.
இங்கே ஒரு சாம்பிளுக்காக கோல்டன் குளோப் நிகழ்ச்சியில் ரிக்கி ஜார்விஸ் பேசியதன் சுட்டி அளிக்கிறேன். https://www.youtube.com/watch?v=iJOb9xHggS4
இதில் ஒவ்வொரு வரியுமே யாரோ ஒருவரை 'வைத்துசெய்வது'தான். இது ஏதோ ஒரு முறை நடந்தது அல்ல மொத்தம் ஐந்து முறை ரிக்கி ஜார்விஸ் இந்த விருது நிகழ்வை வழங்கியிருக்கிறார். எல்லை மீறுகிறார் பிடிக்கவில்லை என்றால், ஏன் அவரையே திரும்பத் திரும்ப அழைக்க வேண்டும்?
இதில் ஓர் உளவியல் உள்ளது. இது போன்ற செலிபிரட்டிகள் 24/7 புகழ் வெளிச்சத்தில் வாழ்பவர்கள். தொடர்ந்து பாராட்டுகளும் அங்கீகாரங்களும் குவியும் புள்ளியில் வாழ்பவர்கள். அவர்களைக் குறித்து நக்கலாக மேடையில் ஒருவர் வைத்துசெய்வதில் 'சுருக்' என்று தைக்கும் ஒருவிதப் பரவசம் உள்ளது. பெரும்பாலும் சுயபகடியாக அதை சிரித்துக் கடந்துபோய்விடுவார்கள், அரிதாகவே இப்படிக் கைகலப்பாகும்.
ஹாலிவுட்காரர்கள் உருவக்கேலி என்பதை எல்லாம் எதிர்ப்பவர்களாக இருந்தால் அதை அவர்களின் படங்களில் முதலில் செய்யட்டும். செலிபிரட்டிகள் அவர்களுக்குள்ளேயே கிண்டல்செய்துகொள்வார்கள்; நாளை சேர்ந்துகொள்வார்கள். பெண்களுக்காக வில் ஸ்மித் குரல் கொடுக்கிறார் என்றெல்லாம் நாம் நினைத்துக்கொள்வது நாம் இங்கிருந்து சில்லரையைச் சிதறவிடும் விஷயங்களே!
கார்த்திக் வேலு, எழுத்தாளர். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் வசிக்கிறார்.
மனுஷ்ய புத்திரன்
கிங் ரிச்சர்ட் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர். கிறிஸ் ராக்கை மேடையில் கன்னத்தில் அறைந்த சம்பவம் வைரலாகியிருக்கிறது.
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டைப் பற்றி அவரது தலைமுடி தொடர்பில் கிறிஸ் ராக் கேலிசெய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார்.
பொதுவாக உருவக்கேலி, பாலியல் கேலிகள் என்பது நம் ஊர் மேடைகளில் மிகவும் சகஜம். அது சார்ந்த குறைந்தபட்ச சென்சிட்டிவிட்டிகூட இல்லாத செயல்களைச் சலிக்காமல் எவ்வளவோ பேர் எவ்வளவோ மேடைகளில் செய்திருக்கின்றனர். தமிழில் சினிமா நகைச்சுவை, கிரிக்கெட் கமென்டரி, யூட்யூபர்கள் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இந்த உருவக்கேலிக்குப் பஞ்சமே இல்லை.
கேலிகள் மட்டுமல்ல; ஒருவரைப் புகழ்கிறோம் என்கிற பெயரில் புண்படுத்துகிற செயல்களையும் எவ்வளவோ பேர் மேடைகளில் கூச்சமில்லாமல் செய்திருக்கின்றனர். உதாரணமாக நான் இருந்த பல மேடைகளில் என்னைப்பற்றி “இவர் உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஊனமில்லை” என்பதை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு மேடையில் பத்திரிகையாளர் ஞாநி என்னை இப்படிப் 'புகழ்ந்தார்'. "மனுஷ்ய புத்திரன் படிக்காமல் இருந்திருந்தால் ஏதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்திருப்பார்." இப்படி எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். ஜெயமோகன் என் உடல்நிலையை மையமாக வைத்து என் கவிதைகள் தொடர்பாக ஓர் இலக்கியக் கருத்தாக்கத்தையே உருவாக்கினார்.
பொதுவாக என் உடல்நிலையோடு தொடர்புபடுத்தி என் வாழ்வையும் கலையையும் யாராவது மதிப்பிடும்போது எனக்கும் எழுந்துபோய் ஓர் அறை விட வேண்டும் என்பதுபோல்தான் இருந்திருக்கிறது.
மனுஷ்ய புத்திரன், கவிஞர்; 'உயிர்மை' இதழின் ஆசிரியர்.
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Seyed Bukhari 3 years ago
இது ஒருவகை ஊனம்.ரசனை குறைபாடு.பிறரின் இயலாமை கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும் அல்லது தன் இயலாமையை மூடி மறைக்கும் மோசடி.சக மனிதனை மனிதனாக கருதாத சமுகத்தில் நகைச்சுவை விமர்சனம் கழிவிரக்கம் பகடி கேலி என அடுக்கி கொண்டே செல்லும் அத்துனையும் அறிவுக்கும் மானத்திற்கும் ஒவ்வாத ஒருவகை தீராத நோயாகும்.முள்ளம் பன்றி தலையா என்பதை நகைச்சுவையாக பகடியாக பேசி பழகிய பார்த்து ரசித்து பழகிய சமுகத்தில் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது.இது கலை!இதுபோன்ற கலையை ரசிக்க வேண்டுமே ஒழிய விவாதிக்க கூடாது.விவாதிப்போர் இதில் பங்கெடுக்க கூடாது என அதிகபட்ச அறிவுரையும் கூறப்படும். மொத்தத்தில் அறிவும் மானமும் மனிதர்களுக்கு அழகென்றால்... இவையெல்லாம் மனிதர்களுக்கு எதிரான நாகரிகத்திற்கு முரணான அசிங்கம்.யார் ஒருவரையும் பாதிக்காத எல்லோரையும் ரசிக்க வைக்கும் நகைச்சுவைக்கு அறிவும் கருத்தும் ஆழ்ந்த தெளிவும் புலமைத்துவமும் அவசியம். அது இல்லையென்றால் gladiator ம் ஆணவப் படுகொலையும் ரசிக்க தக்க அம்சமாகி விடும். சக மனிதனை அழ வைத்து அவனின் நட்பை நன்மதிப்பை தொலைத்து விட்டு சிரிப்பது சிரிப்பே அல்ல.அது ஆணவமாகும்.ஆனவம்!ஊனத்தில் பெரியது.... ஊனத்தின் ஊற்றாகும்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.