கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

மக்களின் மனவெளியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக

யோகேந்திர யாதவ்
11 Mar 2022, 5:00 am
1

உத்தர பிரதேச சட்டப் பேரவை பொதுத்தேர்தல் 2022 முடிவுகளுக்கு முன்னதாக வெளியான வாக்குக் கணிப்பு (Exit Polls) முடிவுகளைப் பார்த்தவுடன் பிலிப் ஓல்டன்பர்க் நினைவுதான் எனக்கு வந்தது. பாஜக ஆட்சி மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தொடரும் என்ற தகவல் துயரகரமாகத்தான் இருந்தது – ஆனால், வியப்பாக இல்லை. 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும், சமாஜ்வாதி கட்சியைவிட அது பெறும் வாக்கு சதவீதம் அதிகமாக – இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்ற கணிப்பு பயங்கரமாகவே இருந்தது.

பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் காட்டும் பொது திசை குறித்தும், அதனால் கிடைக்கப்போகும் முடிவுகள் குறித்தும் நான் வியப்படைவதே இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிலிப் ஓல்டன்பர்க், தேர்தல் முடிவுகள் தொடர்பாக எழுதிய கட்டுரை இப்படியெல்லாம் அதிர்ச்சி அடையவிடாமல் என்னைப் பக்குவப்படுத்தியிருக்கிறது.

என்னுடைய நண்பர்களோ இதை அப்படிப் பார்க்கத் தவறுகிறார்கள். என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானவர்கள், அரசியல் இயக்கத்தில் என்னோடு பயணிப்பவர்கள், தோழர்கள் – பாஜகவின் படுதோல்வியைத் தவிர வேறெதையும் முடிவாக அறிய விரும்பாதவர்கள். இரண்டு மாதங்களாக அவர்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம், மேற்கு உத்தர பிரதேசத்தில் எப்படி பாஜகவுக்கு ஆதரவு அடியோடு வற்றிவிட்டது, பூர்வாஞ்சலில் எப்படி தொகுதி தொகுதியாக அதற்கு எதிராக கொந்தளிப்பு அதிகரித்துவருகிறது என்று கதைகளையெல்லாம் பகிர்ந்துகொண்டனர். அத்துடன் மாநிலம் முழுவதும் அகிலேஷ் யாதவ் பேசும் பொதுக்கூட்டங்களுக்கு எப்படி மக்கள் திரள் திரளாக வருகிறார்கள் என்று காணொலிக் காட்சிகளைக் காட்டி பூரித்தனர்.

வாக்குக் கணிப்பு முடிவுகள் (இப்போது தேர்தல் முடிவுகளும்தான்) அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பெரிய சிறப்போ, பெரிய பாதகமோ இல்லாமல் இடைப்பட்டதான அரசு, தன்னுடைய தலைவரின் (யோகி) உருவத்தை அட்டையில் வரைந்து ஊர் ஊராக எடுத்துச் சென்று பரப்புரைச் செய்ததன் மூலமாகவேகூட வெல்ல முடியும் என்பதை – அதுவும் மிகப் பெரிய பெருந்தொற்றில் ஏராளமானோர் உயிரிழந்த ஓராண்டுக்குள், அரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக நடந்த விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு – என்பது எவரையுமே ஆச்சரியப்பட வைக்கும்தான்!

எது எனக்கு இந்தப் பக்குவத்தைக் கொடுத்தது? கடந்த ஆறு வாரங்களாக உத்தர பிரதேசம் முழுவதும் நான் மேற்கொண்ட சுற்றுப்பயணம் தந்த அனுபவங்கள் இப்படி அதிர்ச்சியோ வியப்போ ஏற்படாமல் என்னைப் பக்குவப்படுத்திவிட்டது!

யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மக்களுக்குள்ள அதிருப்திகளை ஒவ்வொன்றாக அவர்களே சொல்லக் கேட்டேன். மாநிலத்தின் வளர்ச்சி போதவில்லை, சட்டம்-ஒழுங்கு சரியில்லை, மக்கள் நலத் திட்டங்களும் சரியாக இல்லை என்றே கூறினர். பெருந்தொற்று ஏற்பட்டவுடனேயே பொது முடக்கம் குறுகிய கால அவகாசம் தந்து அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு முழுவதும் அடைந்த துயரை மக்கள் மறக்கவே மாட்டார்கள், கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பரவியபோது மாநில அரசு காட்டிய மெத்தனத்தால் மக்கள் மிகவும் துயரப்பட்டனர். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக எப்படி காற்றில் பறக்கவிட்டது என்பதை நாங்கள் ஆவணப்படுத்தியிருந்தோம் மேற்கு உத்தர பிரதேசத்தில் விவசாயிகளுடைய போராட்டத்தின் வலிமையை நான் நேரிலேயே பார்த்தேன்.

இவ்வளவுக்குப் பிறகும் மக்களிடையே ஆளும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வாகப் பெரும்பாலானவர்களிடம் எதையுமே பார்க்கவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்பதால் அல்ல. அதிகாரிகள் – அரசியலர்களின் செயல்களுக்கு எதிரான தங்களுடைய ஏமாற்றங்கள், புகார்களைத் தெரிவித்த மக்கள் அவற்றுக்காகத் தங்களுடைய வாழ்நிலையைத்தான் அதிகம் நொந்துகொண்டனர். இவை அனைத்தும் பாஜக அரசுக்கு எதிரான வாக்குகளாக மாறவில்லை. யாதவர்கள், முஸ்லிம்கள், ஜாதவர்களைத் தவிர மற்றவர்களிடையே யதார்த்த நிலை என்ன என்பது குறித்த பொதுவான இயல்பறிவு கூடுதலாகச் செயல்பட்டிருக்கிறது.

மக்களுடைய பொதுபுத்தி

கிராமப்புறங்களில் மக்களுடன் உரையாடியபோது அரசியலைக் கடந்து அவர்களுடைய பொதுவான சிந்தனை என்ன என்பது விளங்கியது. ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்; அரசாங்கம் என்ன செய்கிறது?’ என்று கேட்டால், அவர்கள் வரிசையாக தங்களுடைய கோரிக்கைகளையும் அரசின் மீது குற்றச்சாட்டுப் பட்டியலையும் வாசிக்கிறார்கள். அதை அப்படியே மனதில் வாங்கும் பத்திரிகையாளர், ‘ஓகோ இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் இவ்வளவு கோபத்தில் இருக்கிறார்களா?’ என்றே புரிந்துகொள்கிறார்.

படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, வேலை செய்தவர்களும் வேலையிழந்துவிட்டார்கள். பெருந்தொற்றுக்காலத்தில் மடிக்கணினி, இணையதளம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பெரும்பாலான குழந்தைகளால் ஆன்-லைன் வகுப்புகளில் படிக்க முடியவில்லை. உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஏராளமான முதியவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டார்கள். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு தானியங்களை விற்க முடியவில்லை என்றார்கள்.

இதற்கெல்லாம் மாநில அரசையும் முதல்வரையும்தானே குறை சொல்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஆதித்யநாத் அரசு எப்படி இருக்கிறது என்று கேட்டால் கிடைக்கும் பதில் வியப்பையே தருகிறது. “கண்ணியமான அரசு, நன்றாக வேலை செய்கிறார்கள்!” என்கிறார்கள். மேற்கொண்டு கேட்பதற்கு முன் அவர்களே இந்த ஆட்சியில் கிடைத்துள்ள இரண்டு நன்மைகளைப் பட்டியலிடுகிறார்கள். “ரேஷனில் வழக்கமான அரிசி, கோதுமை அளவோடு கூடுதலாகவும் குடும்பத்துக்குத் தருகிறார்கள், சமையல் எண்ணெய், பட்டாணியும் கிடைக்கிறது” என்கிறார்கள். சமாஜ்வாதி ஆதரவாளர்கள்கூட, “இந்த ஆட்சியில் எங்கள் வீட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று சொல்லி வைத்தார்போல எல்லா இடங்களிலும் நிம்மதியோடு ஒப்புக்கொள்கிறார்கள்.

அப்படியானால் இவ்வளவு நேரம் பட்டியலிட்ட குறைகள் எல்லாம் எதற்காக என்று கேட்டால், அவர்களே பாஜக சார்பில் நியாயப்படுத்துவதைப் போலப் பேசுகிறார்கள். “இதற்கெல்லாம் அரசு என்ன செய்ய முடியும்? கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது, விலைவாசி உயர்வும் அப்படித்தான்” என்கிறார்கள். பாஜக அரசு செய்த சாதனைகள் – அவை உண்மையோ, கற்பனையோ - எல்லா வாக்காளர்களுக்கும் தெரிந்திருக்கிறது. சமாஜ்வாதி கட்சியால் மக்கள்படும் துயரங்கள் என்று எதையும் பெரிதாகப் பேச முடியவில்லை. அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்று நான் சந்தித்த வாக்காளர் ஒருவரால்கூட கோர்வையாகக் கூற முடியவில்லை.

இப்படி மக்களுடைய மனங்களில் பதிந்துவிட்ட விஷயங்களை - அரசுக்கு ஆதரவு என்றோ, எதிர் என்றோ - புரிந்துகொள்வது தவறு. இங்கே அரசை மதிப்பிடும் நீதிபதிகளாக அல்லாமல், அரசை ஆதரிக்கும் வழக்கறிஞர்களைப் போலவே பேசுகிறார்கள். வாக்காளர்களில் பெரும்பாலானவர்களுடன் பாஜக உணர்ச்சிமயமான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் அவநம்பிக்கைகளை சற்று தள்ளி வைக்கிறார்கள், அரசின் தவறான நிர்வாகத்தை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள், தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைக்கூடத் தாங்க தயாராகிறார்கள், ‘தங்களவர்களுடன்’ சேர்ந்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களாக அயோத்தி பற்றியோ, காசி பற்றியோ பேசுவதில்லை. ஆனால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கே பேசப்படாமலேயே புரிகிறது.

சாதிகள் நிலை என்ன? எல்லா சாதிகளுக்கும் சமூகங்களுக்கும் இந்தப் பொதுபுத்தி என்பது இயல்பானது. சாதிகளின் எண்ணிக்கை, அவற்றின் வாக்காளர்கள் எண்ணிக்கையெல்லாம் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக இல்லை. யாதவர்கள் ஒட்டுமொத்தமாக சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தி பேச்சுவழக்கில் இதை 110% என்பார்கள்.

அசாதுதீன் ஒவைசி என்னதான் அழகாகப் பேசினாலும் முஸ்லிம்களுக்கு சமாஜ்வாதிக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை. தன்னுடைய ஆதரவாளர்கள் தன்னைவிட்டுப் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களுக்கும் யாதவர்களுக்கும் வழக்கத்தைவிட குறைவான தொகுதிகளைத்தான் அகிலேஷ் தந்தார். யாதவர்கள் தங்களுடைய வாக்குகள் யாருக்கு என்று வெளிப்படையாகவே காட்டினார்கள், முஸ்லிம்கள் கடைசிவரையில் வெளிக்காட்டாமல் வாக்களித்தார்கள். ஆனால், அவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாகத் திரண்டது நிச்சயம் சமாஜ்வாதி கட்சிக்கு பெரிய ஆதரவாக அமைந்தது ஆனால் ஆட்சியைப் பிடிக்க அது போதவில்லை.

சமாஜ்வாதி ஆதரவு மாய அலை?

யாதவர்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்களிடையேயும் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அதிகம் என்று என்னுடைய நண்பர்கள் தவறாகக் கணித்திருப்பதைக் கண்டேன். தாக்கூரான ஆதித்யநாத் மீது பிராமணர்களுக்கு இருந்த அதிருப்தி, வாக்குகளாக சமாஜ்வாதிக்கு சேரவில்லை. மேல்சாதி இந்துக்கள் பாஜகவுக்குத் தொடர்ந்து வலுவான வாக்கு வங்கியாகத் திகழ்கிறார்கள். விவசாயம் செய்யும் ஜாட்டுகள், குர்மிகள், மௌர்யாக்களின் வாக்குகள் சிறிதளவு பாஜகவைவிட்டு விலகின. ஆனால், என்னுடைய நண்பர்கள் கற்பனை செய்ததைப்போல - பெருமளவுக்கு அது இல்லை.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிஷாதுகள் சில தொகுதிகளைத் தவிர பாஜகவுக்கே கணிசமாக வாக்களித்திருக்கிறார்கள். அதிருப்தியுற்ற பகுஜன் சமாஜ் ஆதரவாளர்களுடைய வாக்குகள் நமக்குத்தான் கிடைக்கும் என்று சமாஜ்வாதி தொண்டர்கள் நினைத்தார்கள், அவை பாஜக பக்கம்தான் அதிகமாக விழுந்துள்ளன.

ஆட்சியைப் பிடிக்க 2017 பொதுத் தேர்தலில் பெற்ற 29% வாக்குகளைவிட கூடுதலாக 15% வாக்குகளை சமாஜ்வாதி பெற்றிருக்க வேண்டும், அதே வேளையில் பாஜக கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளில் மேலும் 5% இழந்திருக்க வேண்டும். அது பகீரதப் பிரயத்தனத்தால்தான் முடியும். சமாஜ்வாதிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை எல்லோருமே கவனித்தார்கள், ஆனால் அது எவ்வளவு விரிவானது, ஆழமானது என்பதுதான் கேள்வி.

இரண்டு முனைப் போட்டிகளில் வெற்றிக்கான இலக்கு மிகவும் அதிகமானது. சமாஜ்வாதி அதிக வாக்குகள் பெற்றால் மட்டும் போதாது, சமாஜ்வாதியின் லாபம், பாஜகவுக்கு நஷ்டமாகவும் இருக்க வேண்டும். பெண் வாக்காளர்களிடையேதான் பாஜகவுக்கு ஆதரவு அதிகம் என்று ‘இந்தியா டுடே -ஆக்சிஸ் மை இந்தியா’ கருத்துக் கணிப்பு தெரிவித்தது. இந்தக் கட்டுரையை எழுதும் அடியேன் உள்பட பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள் இந்த அம்சத்தை அடியோடு கவனிக்கத் தவறினோம்.

வாக்காளர்களுடன் பேசுங்கள்

முறைகேடுகள் மூலமாகத்தான் பாஜக வென்றது என்று கூற வேண்டாம். பாஜக அப்படியெல்லாம் செய்யக்கூடிய கட்சியல்ல, தேர்தல் ஆணையம் அதையெல்லாம் எதிர்த்து நிற்கும் என்பதல்ல என்னுடைய வாதம். வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது குறித்தே நாம் சிந்திக்கிறோம். மக்களுடைய மனவெளியைக் கைப்பற்றிவிட்டது பாஜக என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்.

இங்கேதான் பிலிப் ஓல்டன்பர்க் வருகிறார். இந்திய அரசியலைக் கூர்ந்து கவனித்து கணித்தவர், அதிகம் கொண்டாடப்படாதவர். 1984 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாபெரும் அலை உருவானத்தை அன்றைய அரசியல் பண்டிதர்களும் கட்சித் தலைவர்களும் கணிக்கத் தவறினர். அதுபற்றி 1988இல் கட்டுரை எழுதிய ஓல்டன்பர்க், “தேர்தல் போக்கு குறித்தும் முடிவுகள் எப்படி வரும் என்றும் அரசியல் தலைவர்கள், ஊடகர்கள், உள்ளூர் ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களுக்குள்ளேயே தங்களுடைய உளச்சார்புகளின்படியே பேசிக்கொண்டிருந்தனர், யாரும் சாதாரண மக்களை அணுகி அவர்களுடைய கருத்தைக் கேட்கவேயில்லை” என்றார். ஆனால், தேர்தல் முடிவுகளைக் கணிக்கும் நிபுணர்களோ மக்களைத்தான் அணுகுகின்றனர், அதனால்தான் அவர்களால் வெற்றிகரமாக கணிக்க முடிகிறது.

உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த கடந்த வாரங்களில் இந்த எண்ணமே திரும்பத் திரும்ப மனதில் தோன்றியது. இனி என்னுடைய தோழர்கள் தங்களுக்குள் பேசுவதையும் ஊடகங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதையும் கவனிப்பதை நிறுத்திவிட்டு, சாமானிய மக்களிடம் பேச வேண்டும் என்றே விரும்புகிறேன். வாக்காளர்களுடைய தார்மீக – அரசியல் பொதுபுத்தியைப் புரிந்துகொள்வதுதான் நமக்குள்ள அரசியல் சவால். இந்தப் பாடத்தைக் கற்க இப்போதும் நேரம் கடந்துவிடவில்லை, 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன!

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

6






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Karim   3 years ago

With all due respect, கட்டுரையின் சாராம்சத்தில் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது உடனடியாக மூலத்தை இணையத்தில் சென்று தேடிப் படித்தேன். முக்கியமாக பின்வரும் பகுதிகள்: “முறைகேடுகள் மூலமாகத்தான் பாஜக வென்றது என்று கூற வேண்டாம். பாஜக அப்படியெல்லாம் செய்யக்கூடிய கட்சியல்ல, தேர்தல் ஆணையம் அதையெல்லாம் எதிர்த்து நிற்கும் என்பதல்ல என்னுடைய வாதம். வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது குறித்தே நாம் சிந்திக்கிறோம். மக்களுடைய மனவெளியைக் கைப்பற்றிவிட்டது பாஜக என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்.வாதம். வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது குறித்தே நாம் சிந்திக்கிறோம். மக்களுடைய மனவெளியைக் கைப்பற்றிவிட்டது பாஜக என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்” *** “வாக்காளர்களுடைய தார்மீக – அரசியல் பொதுபுத்தியைப் புரிந்துகொள்வதுதான் நமக்குள்ள அரசியல் சவால். “ ஒரு வகையில் இது மிகக்கச்சிதமான மொழியாக்கம் அல்லது Edit. அதுவே போதாமையாக என் தமிழ் மனதிற்கு படுகிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மெய்நிகர்சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படைகேஸ்ட்ரொனொம்காட்டுக்கோழிஆஸ்துமாசர்வதேசம்சீர்மைஆரோக்கியத் தொல்லைகள்சொற்கள்பூஸான்மாத்ருபூமிஷமீம் மொல்லாஉதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியாஊட்டச்சத்துக் குறைபாடுஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன்புலப்ரே பாலகிருஷ்ணன் கட்டுரைசிறுநீரகக் கற்கள்திக தலைவர் கி.வீரமணி பேட்டிசெனட்இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை!தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்மிகச் சிறிய மாவட்டங்கள் தேவையா?திறந்தவெளிச் சிறைemployersவலுவான எதிர்ப்புவணிக அங்காடிநீரிழிவு நோய்புஷ்பாவரிக் குறைப்புபழங்குடி கிராமம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!