சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

ஜீவா செயல்முறை: இடதுசாரி சாத்தியத்தின் வெடிப்பு

சமஸ்
17 Dec 2021, 5:00 am
0

நீண்ட கால உறவு என்று சொல்லிட முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஜீவாவும் நானும் அவ்வளவு நெருக்கமாகிப்போனோம். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் அவருடைய பணிகள் வாயிலாக அவரை நான் அறிந்திருந்தேன்; என்னை அவர் என் எழுத்துகள் வாயிலாக அறிந்திருந்தார். சில சமயங்களில் செல்பேசி வழியாகப் பேசியிருந்தோம்.

ஈரோடு புத்தகக்காட்சிக்காக நண்பர் ஸ்டாலின் குணசேகரன் அழைத்திருந்த சமயம் ஜீவாவை சந்தித்தேன். நெடுநாள் உறவுகள் நெடுநாள் விட்டு சந்திப்பதான ஆற்றாமையுடன் இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். அந்தப் பயணத்தில் என்னோடு என் மனைவி, இரு குழந்தைகளும் வந்திருந்தனர். ஜீவாவுடன் இரு நண்பர்கள் வந்திருந்தார்கள். கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் மலைத்துப்போகும் அளவுக்கு விடுதியில் பேசிக்கொண்டிருந்தோம். தீரவே தீராதுபோல இருந்தது அந்தப் பேச்சு.

ஆக, மேலும் சில நாட்களுக்கு நாங்கள் பயணத்தை நீடிப்பது என்றும் அடுத்தடுத்த நாட்களில் சத்தியமங்கலம் வனப் பகுதியிலுள்ள பழங்குடிகள் கிராமங்களுக்குச் சென்று வருவது என்றும் முடிவானது. நண்பர் ‘சுடர்’ நடராஜ் அப்போதுதான் அறிமுகமானார். தாளவாடியில் வெளியே மழை பெய்ய ஒரு குடிலில் மணிக்கணக்காக உரையாடல் தொடர்ந்தது. இடதுசாரிகளை விமர்சித்து அந்த சமயத்தில் நான் ஏதோ ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். சில கூட்டங்களிலும் பேசியிருந்தேன். வழக்கம்போல இடதுசாரிகளிடம் சுயபரிசீலனை கோரும் அறைகூவல்தான். ஜீவாவை அது வெகுவாகக் கவர்ந்திருந்தது.

இந்தியாவில் வலதுசாரிகளின் எழுச்சிக்கு இடதுசாரிகளும் முக்கியமான காரணம்; இடது சிந்தனை ஒரு முழு மாற்றத்துக்கு உள்ளாக வேண்டும்; முக்கியமாக இடது சிந்தனையின் மையத்துக்கு காந்தி வர வேண்டும் என்று அவரும் எண்ணினார். நம்முடைய சமூகத்தில் தாராளர்கள் பலரையும் ஈர்க்கும் ஸ்காண்டிநேவிய முன்னுதாரணம் ஜீவாவையும் வெகுவாக ஈர்த்திருந்தது. ‘மகிழ்ச்சி என்பது என்ன? அதுதான் மனித வாழ்வின் உச்ச இலக்கு!’ என்று ஜீவா சொன்னார்.

அரசியத்துக்கு எதிராகவும், தனிநபர் சுதந்திரத்தைக் கொண்டாடவும் நமக்கு ஸ்காண்டிநேவிய நாடுகளைக் காட்டிலும் சிறந்த உதாரணங்கள் இல்லை என்றார். அதேசமயம், அரசியமும் யதேச்சதிகாரமும் தோய்ந்த சீன, வியட்நாமிய பொருளாதார அணுகுமுறைகளிலிருந்தும்கூட நாம் பெற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன என்றார்.

புவியியல் அடிப்படையில் மட்டும் அல்லாது பிரச்சினைகள் அடிப்படையிலும் ஐரோப்பாவைக் காட்டிலும் சீனாதான் நமக்கு அருகில் இருக்கிறது; சாதியம் போன்ற பாகுபாட்டு முறையிலிருந்து சீனம் பெற்ற விடுதலைக்கு உரிய கவனம் அளிக்காமல் அதன் பொருளாதார வெற்றியை நாம் உட்காண முடியாது என்ற ஜீவா, தனியார் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை என்று பல வடிவங்களுமான இடம் ஒரு பொருளாதாரச் சமூகத்தில் நீடிக்க வேண்டும்; சமூக நலத்தை உறுதிபடுத்துவது மட்டுமே அரசின் பொறுப்பு என்றார். 

நெடிய உரையாடல் வழியே நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி இருவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களின் கலவை நீட்சியாகவும், இந்தக் கலவைச் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்க முற்படுபவராகவும் எனக்கு ஜீவா தோன்றினார். அதேசமயம், சித்தாந்த ஒழுங்குகளுக்கும், அரசியல்சரித்தன்மைகளுக்கும் அப்பாற்பட்டு, நம்முடைய சமூகத்தின் தேவைக்கேற்ற விஷயங்களை வெவ்வேறு போக்குகளிலிருந்து பிரித்தும் சேர்த்தும் கலக்க முற்படும் உத்வேகத்தில் தன்னுடைய முன்னோடிகளையே திகைப்பில் தள்ளிவிடும் ஆவேசத்தை ஜீவா கொண்டிருந்தார்.

கோட்பாட்டின் அடிப்படையில் அரசியலை அணுகுவோருக்கு ஜீவா பேசும் அரசியல் குழப்பத்தைக் கொடுக்கலாம். தூய்மைவியர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கலாம். எளிதாக ஒதுக்கித்தள்ள நம் சமூகம் அதிகம் பயன்படுத்தும் ஆயுதமான ‘திரிபுவாதி’ எனும் முத்திரைக்குத்தலால் ஜீவாவைப் போட்டுத்தாக்கிவிட்டு நகர்ந்துவிடலாம். என்னுடைய அனுபவத்தில் ஜீவா அளவுக்குத் திறந்த மனதுள்ள ஓர் இடதுசாரியைத் தமிழ்நாட்டில் நான் சந்தித்திடவில்லை. ‘விசுவாசம் – கொள்கைப்பிடிப்பு இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு இயக்கத்துக்கும் அதன் தோல்விகளுக்கும் முட்டுக்கொடுப்பவர்களைக் காட்டிலும், தோல்வியை ஒப்புக்கொண்டு, தட்டுமுட்டிச் சென்றாலும், புதிய முயற்சிகளுக்கு வழி தேடி சறுக்கி விழுபவர்கள் முக்கியமானவர்கள்’ என்பது ஜீவாவின் பார்வையாக இருந்தது. அதனால்தான் தமிழ்நாட்டில் ஏனைய இடதுசாரி தலைவர்களைக் காட்டிலும் ஜீவாவுக்கு தா.பாண்டியன் நெருக்கமானவராகத் தெரிந்தார்.

விரைவில் ஈரோடு எனக்கு மிக நெருக்கமான நகரம் ஆகிவிட்டிருந்தது. இந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே நான் அதிகம் பங்கேற்ற நிகழ்ச்சிகள் என்றால், ஈரோடுதான் அதில் முதலிடம் வகிக்கும். ஜீவாவை சந்திக்கலாம் என்ற எண்ணத்திலேயே ஈரோட்டிலிருந்து வரும் எந்த அழைப்பையும் ஏற்றுக்கொள்வேன். தன்னுடைய மேன்மை, வயது, முதுமை எதையும் பொருட்படுத்தாத ஒரு நட்பு அவரிடம் இருந்தது. தங்கியிருக்கும் விடுதி தேடி காலையிலேயே ஜீவாவின் கார் வந்துவிடும்; இரவு நான் ரயிலுக்குப் புறப்படும்போதும் உடனிருப்பார். பேசிக்கொண்டே இருப்போம். நண்பர்கள் நடராஜ் அல்லது கலைக்கோவனுடன் இணைந்து மலைகளிலும் வனங்களிலும் பழங்குடி மக்கள் மத்தியில் பல நாட்கள் பயணித்திருக்கிறோம். 

ஒரு விஷயத்தில் ஆழக் கால் ஊன்றி சிந்தித்து, கோர்வையாக சிந்தனைகளை வெளிப்படுத்தும் முறைமை ஜீவாவிடம் கிடையாது. அந்தந்தச் சூழலுக்கான விஷயங்களை மேலோட்டமாகக் கையில் எடுத்துப் பேசுவார். ஆச்சரியமூட்டும் வகையில் மிக அநாயசமாக அபாரமான முடிவுகளை முன்வைப்பார். நீண்ட உரையாடல்களே ஜீவாவைக் கண்டடைவதற்கான சிறந்த வழிமுறையாக இருந்திருக்கிறது. எழுத்து அல்ல; பேச்சுதான் அவருக்கான சிறந்த வெளிப்பாட்டு வடிவம் என்று ஆரம்பக் காலத்தில் தோன்றியிருக்கிறது. பேச்சைக் காட்டிலும் செயல்பாடுதான் அவருடைய மிகச் சிறந்த வெளிப்பாடு வடிவம் என்று இப்போது தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எழுத்து, மொழிபெயர்ப்பு, மருத்துவம் என்று பல தளங்கள் சார்ந்தும் ஜீவா செயல்பட்டாலும், அவர் முன்னெடுத்த கூட்டுறவு இயக்கத்துக்கே நான் பிரதான கவனம் அளிக்க விரும்புகிறேன்; இதற்கு ‘ஜீவா செயல்முறை’ என்று பெயரிட நான் விரும்புகிறேன். ஓர் உதாரணத்துக்குக் கல்வி – மருத்துவம் இந்த இரு துறைகளையும் எடுத்துக்கொள்வோம். கல்வியும் மருத்துவமும் அடிப்படை மனித உரிமைகள் என்ற உண்மை பரவலான அளவுக்குப் பரவலாகாத இன்னொரு உண்மை இந்த இரு துறைகளுக்கும் உயிர்நாடியான பன்மைத்துவம் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்பதாகும்.

கல்வியும் சரி, மருத்துவமும் சரி; தொடர் கற்பனைக்கும் படைப்பூக்கத்துக்கும் முயற்சிக்கும் இடம் அளிக்க வேண்டிய துறைகள். இரு துறைகளும் அரசின் பொறுப்பாக மட்டுமே ஆக்கப்படும்போது இந்தியா போன்ற நாடுகளில் நேரும் இரு பெரும் துயரங்கள் என்னவென்றால், அரசால் எல்லோர்க்கும் இவற்றை முழுமையாகக் கொண்டுசேர்க்க முடிவதில்லை; அப்படிக் கொண்டுசேர்க்கப்படும் முயற்சியில் பன்மைத்துவமும் அடிபட்டுபோகிறது. இன்று அலோபதி மருத்துவ முறையும், மெக்காலே கல்வி முறையும் செலுத்திவரும் ஏகாதிபத்தியத்துக்கான அடிப்படையை உற்றுநோக்கினால் நான் சொல்லவரும் விஷயம் புரியும். இப்படிச் சொல்வதனால், அலோபதி முறை அல்லது மெக்காலே முறைக்கு எதிரி அல்ல நான். அவற்றின் முக்கியத்துவத்தையும் மனித குலத்துக்கு அவை ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பையும் வணங்குகிறேன். அதேசமயம், மாண்டிசோரி முறை அல்லது சித்த முறைக்கும் இங்கே உள்ள தேவையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கோருகிறேன். பொது நன்மைகளின் பெயரால்கூட எந்த ஒரு விஷயத்தையும் ஒற்றைத்தன்மைக்குள் தள்ளிவிடக்கூடாது.

ஜீவா ஒரு பள்ளிக்கூடத்தைச் சிந்தித்தபோது, குழந்தைகளுக்கு நல்ல சுதந்திரம் வழங்கும் ஒரு மாற்றுக்கல்விக்காகவே அதைச் சிந்தித்தார் என்பதை நாம் உணர வேண்டும். கூடவே செல்வந்தர்கள்தான் பெரும் காரியங்களை ஆற்ற முடியும் என்பதற்குப் பதிலாக சாதாரணர்களாலும் பெரும் காரியங்களை ஆற்ற முடியும் என்பதை அவர் முன்னெடுத்த கூட்டுறவு முறை நிரூபித்தது. ‘பேசிக்கொண்டே இருப்பதில் பிரயோஜனம் இல்லை. செயல்பாடு முக்கியம். ஒரு கோடி என்பது ஒருவருக்குக் கஷ்டம்; நூறு பேர் சேர்ந்தால் ஆளுக்கு ஒரு லட்சம்; எவ்வளவோ செலவழிக்கிறோம்; நாம் நம்பும் ஒரு விஷயத்தின் மீது ஒரு லட்சம் முதலீடு செய்தால் என்ன ஆகிவிடும்? அட, தோற்றேவிட்டால்தான் என்ன? குடி முழுகிடவாப்போகிறது?’

நம் சமூகத்தில் காரியங்களைப் பேசுவதற்கும் வளங்களுக்கும் குறைவில்லை. வளங்களை இணைப்பதும், காரியங்களைச் செயல் தளத்துக்கு மாற்றுவதுமே சவால். நாம் விரும்பும் கல்விச் சூழலை உருவாக்க நம்மில் சிலருடைய வளங்களை இணைத்து ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்குகிறோம். விஷயம் அதோடு முடிந்துவிடுவதில்லை. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நல்ல ஆசிரியர்கள் உருவாகிறார்கள். திறன்மிக்க மாணவர்கள் உருவாகிறார்கள். எல்லாவற்றுக்கும் மையமாக ஒரு லட்சியமும், அதைச் சுற்றி சில விழுமியங்களும் செழிக்கின்றன. கூடவே பள்ளிக்கூடத்தைச் சுற்றி ஒரு பொருளாதாரம் உருவாகிறது. பணம் புழங்கும் இடமாகவும் அது உருவெடுத்துவிடும் இடத்தில், முதல் போட்டவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்திருக்க மாட்டார்கள். ஊழல் கூடாது என்றால், இயல்பாக வரும் லாபத்தில் நியாயமான பங்கு அளிக்கப்படுவது அவசியம். இவ்வளவுக்கும் மத்தியில் அந்த அமைப்பு எளியோர்க்கும் எல்லோர்க்கும் இடம் அளிப்பதாக இருப்பது முக்கியம். இந்த விஷயங்கள் எல்லாவற்றையுமே பரிசீலித்து உள்வாங்கியிருந்தது ஜீவா செயல்முறை.

கூட்டுறவு என்பதைக் கூட்டுணர்வாக ஜீவா கண்டார். அதாவது, நிதியைப் பகிர்தல் என்பது இதில் பிரதானம் இல்லை; கனவைப் பகிர்தல், லட்சியத்தைப் பகிர்தல்; பொறுப்பைப் பகிர்தல். அதுவே பிரதானம். ஒருமுறை வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்படும் துண்டுப் பிரசுரத்துக்கான செலவைப் பத்துப் பேருடன் ஆளுக்கு நூறு ரூபாய் என்று ஜீவா பகிர்ந்துகொண்டதைக் கண்டேன். ‘கூட்டு சேரும்போதுதான் நாம் ஒரு சமூகமாக பலம் பெறுகிறோம்; நான் தனி ஆள் இல்லை; நான் இல்லாவிட்டாலும் இந்தக் காரியம் தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கும் வலுவே தனி; அதுதான் இந்த அமைப்பின் உயிர்நாடி’ என்றார்.

ஜீவா தன்னுடைய செயல்முறையைக் கொண்டு எவற்றையெல்லாம் சாதித்தார் என்று அளவிடுவதைக் காட்டிலும், ஜீவாவின் செயல்முறையை ஒரு முன்மாதிரியாகக் கொண்டால் எவற்றையெல்லாம் ஒரு சமூகமாக நாம் சாதிக்க முடியும் என்று அளவிட்டால் ஜீவாவின் முக்கியத்துவம் விளங்கும் என்று நினைக்கிறேன். தனி மனிதர்களுக்கு மட்டும் அல்லாது அரசுகளுக்கேகூட இது உத்வேகம் தரும் முன்மாதிரி. ஓர் உதாரணத்துக்கு, ஆண்டுக்கு ஆயிரம் கி.மீ. ரயில் பாதைகளை ஜீவா செயல்முறைமையின் கீழ் புதிதாக அமைப்பது என்று தமிழ்நாடு அரசு ஒரு முடிவெடுத்து இந்திய அரசுடன் பேசி சாத்தியப்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். அது உண்டாக்கும் விளைவு எத்தகையதாக இருக்கும்!

பெரியாரிடம் வளர்ந்து, மார்க்ஸிடம் பயின்று, காந்தியை வந்தடைந்த ஜீவாவை நான் காந்தியராகவே கண்டேன். ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கும்போதும் காந்தி நமக்குக் கொடுத்துச்சென்ற ஒரு மகத்தான உணர்வை உயிருள்ள சாட்சியமாக ஜீவாவிடமிருந்து பெற்றேன், அது:  சமூகத்துக்காக சிந்திக்கும்போது நாம் எவருமே தனிநபரும் இல்லை; சாதாரணரும் இல்லை! 

டாக்டர் வெ.ஜீவானந்தம் நினைவைப் பேசும் வகையில், அவரைப் பற்றிப் பல்வேறு ஆளுமைகளும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் நூல் ‘செயல் எனும் விடுதலை’. இதில் இடம்பெற்றுள்ள சமஸுடைய கட்டுரையே இதுவாகும். ஜெயபாரதி, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கி.ராஜநாராயணன், பழ.நெடுமாறன், குமரி அனந்தன், அ.மார்க்ஸ், ஜெயமோகன் என்று 41 பேருடைய எழுத்தைத் தாங்கி வெளிவந்திருக்கும் இந்நூல் ஜீவாவின் பல்வேறு பரிமாணங்களையும், அவருடைய வாழ்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. 

செயல் எனும் விடுதலை 
பக்கங்கள்: 312; விலை: ரூ.300 
மருத்துவர் ஜீவா அறக்கட்டளை வெளியீடு 
45பி, கலைமகள் சாலை, ஈரோடு - 638001.
செல்பேசி: 9865212020

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

4

1




அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தேவேந்திர பட்னாவிஷ்ஒன்றிய நிதிநிலை அறிக்கைதேசத் தந்தைபாரதியார்அந்தரங்க உரிமைதலைமைச் செயலகம்உபநிஷத்ஆசியாட்டிக் ராயல் சொசைட்டிதிட்ட அனுமதிகருணை அடிப்படையில்சின்ன மருத்துவமனைகளைச் சிந்திக்கலாம்தமிழர் பண்பாடு தமிழ்ப் பண்பாடுஉணவு விற்பனைஎஸ்.எம்.அப்துல் காதிர்ஜெய்பீம்எல்.இளையபெருமாளும் மதுவிலக்கும்ஹீனா ஃபாத்திமா கட்டுரைசட்டம் தடுமாறலாம்கல்வியியல்ராஜுதேர்தல் ஆணையத்தில் தன்னாட்சி அவசியம்சமூகவியல்அதிமுகவில் என்ன நடக்கிறதுபூனா ஒப்பந்தம்‘மற்றும்’ ஏன் ‘And’ ஆகாது?கேள்வி நீங்கள் - பதில் சமஸ்பொருளாதார நீதிபகவந்த் மான்முதல்வர் பதவிஜப்பான் பிரதமரின் புதிய பொருளாதாரத் திட்ட அறிவிப்ப

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!