கட்டுரை, ஆளுமைகள், புத்தகங்கள் 17 நிமிட வாசிப்பு

படிக்க வேண்டிய நேரத்தில் பேப்பர் மடித்த கலைஞரின் பிள்ளைகள்

முரசொலி செல்வம்
12 Dec 2021, 5:00 am
2

மிழ்நாட்டின் அரசியல் - இதழியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இதழ்களில் ஒன்று ‘முரசொலி’. திராவிட இயக்கம் திரண்டெழுந்த அதன் எழுச்சிமிக்க காலகட்டத்தில், 400-க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியான சூழலையும் உள்ளடக்கினாலும், திராவிட இயக்க இதழ்களில் ‘முரசொலி’ அளவுக்கு தொழில்முறைசார் நேர்த்தியான பத்திரிகை ஒன்று கிடையாது. திமுகவை அண்ணா தொடங்கியது முதலாக அண்ணாவின் மறைவுக்குப் பின் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று, அந்தக் கட்சியின் துடிப்பான செயலாற்றல் அலைவரிசையைத் தன் தலைமையின் கீழும்  முறைப்படுத்தியது வரையிலான காலகட்டமானது பத்திரிகையாளர் கலைஞர் கருணாநிதியின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

தமிழில் வெகுஜன பத்திரிகைகள் தொடர்பான ஆய்வுகளே அரிதானவை. அப்படியிருக்க திராவிட இயக்க இதழ்கள் - முரசொலி - தொடர்பான பதிவுகள் எவ்வளவு குறைவாக இருக்கும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. திராவிட இயக்கம், தமிழ்நாட்டைத் தாண்டியும் பொதுச் சமூகத்துக்கு ‘முரசொலி’யின் வரலாறு ஏன் முக்கியமானது என்பதற்கான பதில் இந்தியாவில் அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும் ஓர் அரசியல் பத்திரிகையை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்பதற்கான சான்றுகளில் ஒன்று ‘முரசொலி’ என்ற பதிலில் இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் மிகத் துடிப்பான எதிர்க்கட்சிகளில் ஒன்றாகச் செயலாற்றிய திமுகவின் அதிகாரபூர்வமற்ற பத்திரிகை அது. ‘முரசொலி’யின் 80 ஆண்டு கால வரலாற்றில், சற்றேறத்தாழ நான்கில் மூன்று பங்கு காலம் எதிர்க்கட்சிப் பத்திரிகையாகவே அது இருந்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமான நெருக்கடிநிலைக் காலகட்டத்தில், கடும் அழுத்தத்தை எதிர்கொண்ட பத்திரிகையும் அது.

கலைஞர் கருணாநிதியால் அவருடைய 18-வது வயதில், 1942-ல் தோற்றுவிக்கப்பட்ட ‘முரசொலி’ காலம் முழுமையும் ஒரு சின்ன கட்டமைப்பிலேயே செயல்பட்டுவந்திருக்கிறது. கிராமப்புற எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வரும் ஓர் இளைஞரின் பத்திரிகைக் கனவு இடைவிடாமல் தொடர்வதற்கு, நம் சமூகத்தில் குடும்பம் எனும் அமைப்பு எவ்வளவு உழைப்பையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ‘முரசொலி’யின் வரலாறு சொல்கிறது. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட கலைஞர் கருணாநிதியின் மொத்த குடும்பமும் ஏதோ ஒரு வகையில் அந்தப் பத்திரிகைக்குப் பங்களிக்க வேண்டியிருந்திருக்கிறது. படிக்கும் காலத்தில் வீட்டின் பிள்ளைகள் பத்திரிகை அலுவலகம் சென்று சந்தாதாரர்களுக்குப் பத்திரிகைகளை மடித்து அனுப்பும் வேலையில் ஈடுபடுகிறார்கள்; ரசீதுகள் எழுதுகிறார்கள்; பேப்பர் கட்டுகளைச் சுமந்து ரயில் நிலையத்துக்குக் கொண்டுசேர்க்கிறார்கள்.

பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ‘முரசொலி’யின் வரலாற்றை முழுமையாக எழுதும் சாத்தியம் மூவருக்கே இருந்தது. கலைஞர் கருணாநிதி, மாறன், செல்வம். தன்னுடைய முன்னோடிகள் இருவரும் தவறவிட்ட பணியைக் கையில் எடுத்திருக்கிறார் செல்வம். தன்னுடைய சகோதரரைப் போலவே ‘முரசொலி’யைத் தன் பெயருடன் அடையாளமாகவே பொருத்திக்கொண்டவரான ‘முரசொலி’ செல்வம், திமுகவுக்குள்ளும் அக்கட்சியின் முதல் குடும்பத்திலும் உள்ள அமைதியான செயற்பாட்டாளர். தன்னையும் தன் வாழ்வையும் கூடுமானவரை உள்ளடக்கிக்கொண்டு, கட்சிக்கும், பத்திரிகைக்கும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். 

கலைஞரின் சகோதரி சண்முகசுந்தரி மகனான ‘முரசொலி’ செல்வம், கலைஞரின் மகள் செல்வியை மணந்தவர் என்ற வகையில் அவருக்கு இருவழிச் சொந்தம். இன்றைக்குத் திமுகவின் முன்வரிசையில் இருக்கும் துரைமுருகன், இருந்திருக்க வேண்டிய வி.ஐ.டி. விஸ்வநாதன் போன்றோருக்கெல்லாம் நண்பராகவும், அவர்களில் முன்னவராகவும் செயல்பட்டவர்; அண்ணா, தன்னுடைய செயலராக அருகில் அமர்த்திக்கொள்ள பிரியப்பட்டவர்களில் ஒருவர் செல்வம். சட்டம் பயின்றவர்.

செல்வத்துக்கென்று தொழில் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் தெளிந்த ஒரு பாதை தென்பட்டபோதும் கட்சிக்காகவும் தன் தலைவர் - இயக்கத்துக்காகவும் பத்திரிகை வாழ்க்கையை வரித்துக்கொண்டவர்.  ‘முரசொலி’ தாக்குதலுக்குள்ளாகும் பல தருணங்களில் தாக்குதலுக்கான இலக்குகளில் ஒருவராக  இருந்தவர். முன்னுதாரணமற்ற வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூண்டு அமைக்கப்பட்டு, அதில் நிறுத்தி விசாரிக்கப்பட்ட வரலாறும் செல்வத்துக்கு உண்டு. 

தன்னுடைய வாழ்வனுபவங்களை ‘முரசொலி’யின் வரலாற்றின் ஊடாகக் கலந்து ‘முரசொலி’ நாளிதழிலேயே எழுதிவந்தார் ‘முரசொலி’ செல்வம். 100 அத்தியாயங்களாக, சட்டமன்றத்தில் அவர் விசாரிக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகளோடு நிறைந்த அந்தத் தொடர் இப்போது  நூலாக வெளிவந்திருக்கிறது. 

சீதைப் பதிப்பகம் வெளிக்கொணர்திருக்கும் ‘முரசொலி: சில நினைவலைகள்’ எனும் இந்நூல் தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியமான வருகை. கதையை அச்சுப் பத்திரிகைகள் பரிணாம வளர்ச்சியினூடாக தொடங்கி அரசியல் பின் நிழல்களின் சதியாட்டங்கள் வரை பிணைத்து இயல்பான நடையில் கூறிச்செல்கிறார் செல்வம். பரந்து விரிந்த தமிழ்நாட்டு அரசியல் பரப்பை அரிதான கோணத்தில் அமைந்த ஒரு ஜன்னலிலிருந்து பார்க்கும் அனுபவத்தை நூல் தருகிறது.

முன்னரே கூறியபடி இது ‘முரசொலி’யின் முழு வரலாறு இல்லை. ஆனால், அப்படி விரித்து எழுதப்பட வேண்டிய வரலாற்றுக்கும் தமிழில் இதழியல் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளுக்கும் முக்கியமான ஆவணம் என்று தாராளமாக இந்நூலைச் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் அவசியம் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பதிவுசெய்ய வேண்டியவர்கள் - அப்படித் தவறினால், வேறு எவராலுமே பகிரப்படாமல் வரலாற்றிலேயே புதைந்துபோகும் அனுபவங்களைக் கொண்டவர்கள் - என்று சொல்லத்தக்கவர்களில் ஒருவர் செல்வம். அவர் எழுத வேண்டிய முழு அனுபவ நூலுக்கான தொடக்கமாக இந்நூல் அமையட்டும்!

நம்முடைய 'அருஞ்சொல்' வாசகர்களுக்காக நூலிலிருந்து முக்கியமான ஒரு பகுதி, இங்கே தரப்படுகிறது.

லைஞரின் மூத்த பிள்ளை ‘முரசொலி’. அது அன்றாடச் செய்திகளைத் தாங்கிவரும் ஏடு மட்டுமல்ல; இந்த இயக்க வரலாற்றில் பின்னிப்பிணைந்துவிட்ட போர்வாளும் - கேடயமும் ஆகும்!

தினசரியானது முரசொலி

தி.மு.கழகத்தை முன்னிலைப்படுத்திய செய்திகள், விமர்சனங்கள் வந்தால்தான் பத்திரிகைகள் மக்களிடையே போய்ச் சேரும் என்பது இன்றைய நிலை. ஆனால், ஒரு காலகட்டத்தில் தி.மு.கழகச் செய்திகளை இருட்டடித்து கழக வளர்ச்சியை முடக்கிவிடலாம் என எல்லா ஏடுகளும் கங்கணம் கட்டிச் செயல்பட்ட நிலையில்தான் - வார ஏடாக இருந்த ‘முரசொலி’யை நாளேடாக நடத்தத் திட்டமிட்டார் கலைஞர்.

அன்றைய பிரசித்தி பெற்ற நாளேடுகளெல்லாம், ஒரு மணி நேரத்தில் 15 ஆயிரம், 20 ஆயிரம் பிரதிகளை அச்சடித்திடும் ‘ரோட்டரி’ போன்ற மெஷின் வசதிகளோடு வெளிவந்துகொண்டிருந்தன. அப்போது ‘முரசொலி’யில் இருந்தது ‘டபுள் கிரவுன்’ என்ற சிறிய அச்சு இயந்திரம்தான். அதற்கு உபயோகப்படுத்தும் தாள் ‘டபுள் கிரவுன்’ அளவு உடையதுதான். ஒவ்வொரு தாளாக அந்த இயந்திரத்துக்குள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பிடும் தாளில் 'முரசொலி'யின் இரண்டு பக்கங்கள்தான் அச்சடிக்க முடியும். பின்னர் இரண்டு பக்கம் அச்சடிக்கப்பட்ட தாளை மீண்டும் ஒவ்வொன்றாகச் செலுத்தி அடுத்த இரண்டு பக்கம் அச்சடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் ஆயிரம் அல்லது 1500 பிரதிகள் அடிப்பது என்பதே பெரிய காரியம்.

 

முடியுமா?  எல்லாரும் திகைத்து நின்ற நிலையில், ‘முடிந்த அளவு கழகக் கொள்கைகளைக் கொண்டு சேர்ப்போம் எனக் கூறி திகைத்தவர்களை முடுக்கிவிட்டார் கலைஞர்! இன்றுபோல நவீனச் சாதனங்கள் கிடையாது. ஒரு செய்தியை எழுதித் தந்தால் அது கம்போசிங் அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அச்சு கோர்க்கப்படும். அச்சு கோர்ப்பது என்பது, ஒவ்வோர் எழுத்தாக எடுத்து அடுக்கி வார்த்தைகளை வடிவமைப்பது ஆகும். தலைவர்கள் பேச்சை எழுதி, எழுத எழுத ஒவ்வொரு தாளாக அச்சு கோர்ப்பாளர்களிடம் அனுப்பி, அவர்கள் அச்சு கோர்த்த பின் அதனை நீண்ட ‘கேலி’களில் வைத்து மை தடவி, அதன் மேல் தண்ணீர் தடவி ஈரம் பதிந்த காகிதத்தை வைத்து மேலிருக்கும் ரோலரை இழுக்க அந்த எழுத்துகள் பேப்பரில் பதியும். அந்தத் தாளைத்தான் பார்த்து ‘புரூப்’ திருத்த வேண்டும். சில நேரங்களில் ‘கேலி’க்கு மேல் ‘ரோலர்’ இழுப்பவர்கள் சரியாக இழுக்காவிடில் கோர்த்த எழுத்துகள் அத்தனையும் சரிந்துவிடும், பின்னர் அதனைச் சரிசெய்து பணிகளைத் தொடர வேண்டும். இப்படிப்பட்ட வசதிகளோடுதான் 'முரசொலி' நாளேடு துவங்கி, பின்னர் தமிழக அரசியல் வரலாற்றில் அது ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகியுள்ளது.

பரபரப்பான விற்பனை

நாளேடாக ‘முரசொலி’ வெளிவரத் தொடங்கியதும் அதன் விற்பனை பரபரப்பாகியது. தேவையான பிரதிகளை அச்சடிக்க வசதி இல்லை. இரவு, பகல் 24 மணி நேரமும் ஓய்வின்றி அந்த ஒரு மெஷின் ஓடிக்கொண்டேயிருக்கும். இருந்தும் வாசகர்களுக்குக் காலத்தே கிடைக்காத நிலைதான். சில ஆண்டுகள் இப்படிச் செயல்பட்ட நிலையில், தேவையைச் சமாளிக்க மற்றொரு ‘டபுள் டெம்மி’ மெஷின் வாங்கிப் போடப்பட்டது. இரண்டு பக்கம் டபுள் கிரவுன் மெஷினில் அச்சாகும். அச்சடித்த அந்த பேப்பரை எடுத்து வந்து ‘டபுள் டெம்மி மிஷினில் மற்ற இரண்டு பக்கத்தை அச்சடிப்பார்கள். இருந்தும் வாசகர் வட்டம் விரிவடைந்ததால் மீண்டும் காலத்தே ‘முரசொலி’ கிடைக்காமல் இருந்தது!

தோழர்கள் ‘முரசொலி’க்காகக் காத்திருந்து வாங்கிச் செல்வர். இன்னும் பல இடங்களில் முதல் நாள் பேப்பர் மறுநாள் சென்றடைந்தாலும் அதனை வாங்கிப் படித்தனர். அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற தலைவர்கள் பேச்சு முழு அளவில் வரத் தொடங்கியது. ‘முரசொலி’க்கு அதன் விற்பனையைவிட படிப்போர் தொகை பெருகியது!

24 மணி நேரமும் இயந்திரங்கள் ஓய்வின்றி ஓடினாலும், 20 ஆயிரம் 25 ஆயிரம் பிரதிகள்தான் அச்சடிக்க இயன்றது என்றாலும் இலட்சக்கணக்கில் வாசகர்கள் பெருகினர். ஒரு பிரதி பலரால் படிக்கப்பட்டது! அந்தக் காலத்தில் சென்னையில் வீதிக்கு வீதி ‘கை ரிக்‌ஷா’ நிறுத்துமிடம் இருக்கும். அந்தப் பக்கம் சென்றால் ஒரு ‘முரசொலி’யை வாங்கி கை ரிக்‌ஷா இழுக்கும் தோழர் ஒருவர் படிக்க, அருகில் இருக்கும் மற்ற கை ரிக்‌ஷா தொழிலாளிகளும் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கும் காட்சிகள் ‘முரசொலி’யின் வீரியத்தை விளக்கிடும் நிகழ்வுகள்! படிப்பகங்கள், முடி திருத்தும் அகங்கள் எங்கும் ‘முரசொலி’யை ஒருவர் படித்து முடிக்கும் வரை காத்திருந்து பின்னர் மற்றவர் படித்திடும் காட்சிகளைக் காண முடியும்.

பிற நாளிதழ்களுக்கும் நெருக்கடி

இப்படியாக ‘முரசொலி’யின் இந்த வளர்ச்சி கண்ட பிற ஏடுகளுக்கு கழகச் செய்திகளை, தலைவர்களது பேச்சுக்களை வெளியிட்டே தீர வேண்டிய நிலை உருவானது. இதுவே ‘முரசொலி’க்குக் கிடைத்த முதல் வெற்றி!

எந்த இயக்கத்தை இருட்டடித்து அழித்துவிடலாம் என்று ஏட்டாளர்கள் நினைத்தார்களோ; அந்த இயக்கத்தின் சக்தி எத்தகையது என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களது ஏடுகளின் விற்பனை பெருக வேண்டுமானால் தி.மு.கழகச் செய்திகளை வெளியிட்டே தீர வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது ‘முரசொலி’.

பத்திரிகையின் விற்பனை உச்சத்தைத் தொட்ட நேரம் என்று சொன்னால், அது 1962 ஆம் ஆண்டு கழகம் நடத்திய விலைவாசி எதிர்ப்புப் போராட்ட காலகட்டம்தான். 1962 ஜூலைத் திங்களில், அந்தக் காலகட்டத்தில் விண் முட்ட விலைவாசி உயர்ந்திருந்தது! வாங்கும் சக்தி இழந்து பொதுமக்கள் தவித்துக்கொண்டிருந்தனர். அதைப் பொருட்படுத்தாதிருந்த அரசுக்கு மக்கள் அவலநிலையை எடுத்துக்காட்டிடும் வகையில் கலெக்டர் (மாவட்ட ஆட்சித் தலைவர்) அலுவலகங்கள் முன் அணி அணியாகச் சென்று மறியல் செய்வது என்று தி.மு.கழகம்  தீர்மானித்தது.

வேலூரில் அண்ணா, தஞ்சையில் கலைஞர், சென்னையில் நாவலர் எனக் கழக முன்னணியினர் அனைவரும் பங்கேற்று அணிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தி, கைதுசெய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர். சென்னையில் பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர். வடசென்னையில் சிறை செல்ல அணிவகுத்த தோழர்களைக் கைதுசெய்து ஏற்றிச் செல்லப் போதிய வசதி இன்றி, மறியலில் ஈடுபடாமல் தோழர்களைக் கலைத்திட தடியடிப் பிரயோகம் செய்யப்பட்டது. பல தோழர்கள் ரத்தக் காயமுற்றனர். சிலர் மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட ‘முரசொலி’ அலுவலகத்துக்கு ஓடி வந்தனர். சிறைக் கொட்டடிகள் நிரம்ப, நிரம்ப கைதுசெய்யப்பட்ட தோழர்களை அடைத்திட இடமின்றிக் கையைப் பிசைந்து நின்றது காவல் துறை.

சிறைக் கொட்டடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தோழர்களை அங்கே அடித்துத் துவைத்து வெளியேற்றினர் போலீஸார். கழகத் தோழர்களை நிலைகுலைய வைத்திட அரசு எடுத்த அந்த முயற்சியை முறியடித்து, எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் கழகத் தொண்டர்களுக்குப் புதிய உத்வேகம் பாய்ச்சியது ‘முரசொலி’.

அன்று ‘முரசொலி’யில் வெளியான பெட்டிச் செய்திகள் தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கின. ‘என்று தணியும் இந்த ரத்த வெறி மோகம்!’ ‘தென்னாட்டுக் காந்தி அண்ணா!’ ‘கழக முன்னணியினர் சிறையில் இன்று 5ஆம் நாள்!’ என்று வரிசையாகப் பெட்டிச் செய்திகள் தொடர்ந்தன.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையர்கள் போராட்ட வீரர்கள் மீது தாக்கிய கொடுமைகளையும் மிஞ்சியதாக அன்றைய ஆட்சியாளர் நடத்திடும் மிருகவெறித் தாக்குதல் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிட்டு வெளியான பெட்டிச் செய்திகள் ‘முரசொலி’ அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக எரிமலையாய் பொங்கிற்று.

போதுமான வசதிகள் இல்லை என்ற நிலையிலும், தாக்குண்ட தோழர்களின் புகைப்படங்களை முடிந்த அளவு ‘முரசொலி’ பிரசுரித்தது! அப்போது ‘முரசொலி’யின் ஒவ்வொரு பக்கமும், பெட்டிச் செய்திகளைத் தாங்கி வந்தது. ‘முரசொலி’யின் விற்பனை உச்சத்தை எட்டியது. ஏடுகளில் பெட்டிச் செய்தி என்பது அப்போதுதான் ஆரம்பித்தது.

விடியற்காலை நேரத்தில் அலுவலக வாசலிலேயே தோழர்கள் கூடி ‘முரசொலி’யை வாங்கிச் சென்றனர். தங்களுக்குத் தேவையான பிரதிகளைப் பெற்றுச் செல்ல முகவர்கள் நேரடியாக ‘முரசொலி’ அலுவலகத்துக்கே ஆட்களை அனுப்பிப் பெற்றுச் சென்றனர். ‘முரசொலி’ சென்னைப் பதிப்பு பொதுவாக விடியற்காலை 4.30 அல்லது 5 மணிக்குள் அச்சடித்து முடிக்கப்படும். ஆனால், மறுநாள் பகல் 12 மணி வரை தோழர்களும் முகவர்களும் காத்திருந்து அச்சடிக்க அச்சடிக்க ‘முரசொலி’யை வாங்கிச் சென்றனர். வெளியூர் பிரதிகளை அச்சடிக்க வேண்டும் என்பதற்காக, சென்னைக்கான தேவையை முழுதும் கொடுத்திட இயலாத நிலையில் அது நிறுத்தப்படும். இதனால், முகவர்களின் பிரதிநிதிகள் நிர்வாகத்தினருடன் சண்டையிடுவது அன்றாடக் காட்சிகளாயின.

தலைவர்கள் எல்லாம் சிறையில் இருக்க, சிறை சென்ற தொண்டர்கள் நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் மீது வெறித்தாக்குதல் நடத்திய நிலையில், அன்று கழகத் தொண்டன் அயர்ந்திடக் கூடாது, போராட்டக் குணம் மேலும் பீறிட்டு எழச் செய்யும் வகையில் ஆசிரியர் கலைஞர் சிறைபட்ட நிலையில், அண்ணன் முரசொலி மாறன் வழிகாட்டுதலில் ‘முரசொலி’ புதிய சரித்திரம் படைத்தது.

பணத்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல்

இப்படி ‘முரசொலி வாசகர் வட்டம்’ விரிந்து பெரிதாகப் பெரிதாக, ஒருகட்டத்தில் தேவையை நிறைவுசெய்யுமளவு உற்பத்தி செய்ய இயலாத நிலைக்கு அது தள்ளப்பட்டது. அப்போது அச்சடிக்கும் காகிதம் பெற ‘கோட்டா’ முறை இருந்தது. தேவைக்கேற்ற அளவு விண்ணப்பித்தாலும், அது முழுமையாகக் கிடைப்பதில்லை! அந்த நாட்களில் இந்த ‘கோட்டா’ முறையால் ஒரு பெரும் ஊழல் சாம்ராஜ்யமே நிறுவப்பட்டு நடந்துவந்தது. பேப்பரை வாங்கிக் கள்ளச் சந்தையில் விற்க பல ‘போலி’ ஏடுகள் உருவாக்கப்பட்டு நடைபெற்று வந்தன. இந்த ஏடுகள் விற்பனையை உயர்த்திக் காட்டி, அச்சடிக்கும் காகிதங்களைப் பெற்று, பெயரளவில் இருநூறு முன்னூறு பேப்பர்களை மட்டும் அச்சடித்துவிட்டு, மீதமிருந்த பேப்பர் பண்டல்களை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்றுப் பணம் பண்ணுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டவை.

இதுபோன்ற ‘போலி ஏடு’களுக்குத் தாராளமாகக் கிடைத்த காகிதம், உண்மையாக ஏடுகள் நடத்தியவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தது! 'முரசொலி'க்குத் தேவையான காகிதம் கிடைக்கப்பெறாததால், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் உருவானது. அந்த நிலையில் விளம்பரங்களே இல்லாது ஏடு நடத்துவது என்பது முடியாது என்ற காலகட்டத்தில், விளம்பரம் எதுவும் இன்றியும் - அச்சடிக்கும் காகிதத்தின் ஒரு பகுதியை அதிக விலை கொடுத்து வாங்கியும் நாளேடு நடத்துவது என்பது யாராலும் தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றாகும். ‘முரசொலி’ எந்தக் காரணத்தாலும் முடங்கிவிடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது, நிர்வாகத்துக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படும்போதெல்லாம் கலைஞர் மற்றும் அண்ணன் மாறன், திரைக்கதை - வசனம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொடுத்துதவி, தடங்கலின்றி ‘முரசொலி’ வெளிவர ஏற்பாடு செய்தார்கள்.

இதுகுறித்துக் கலைஞரே ஒருமுறை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியுள்ளார். “வார இதழ், நாளிதழாக மாறிய பிறகு படத்துறையில் நானும், தம்பி மாறனும் ஈட்டிய பணத்தை எல்லாம், ‘முரசொலி’ விழுங்கியும்கூட, ஒவ்வொரு நாளும் மூச்சு நின்றுவிடுமோ என்ற சந்தேகத்துடன்தான் நாளிதழ் வெளிவர வேண்டி இருந்தது” என்று தலைவர் குறிப்பிட்டுக் காட்டியது இங்கே நினைவுகூரத்தக்கது.

 

பேப்பர் மடித்த கலைஞரின் பிள்ளைகள்

இப்படி ‘முரசொலி’க்கு வரவேற்பு அதிகமாக அதிகமாக, செலவும் கூடி பல நேரங்களில் நிர்வாகத்தைத் திக்குமுக்காட வைத்தது. ஊழியர்கள் அதிகம் தேவைப்பட்டனர். நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ளதால், மேலும் ஊழியர்களை நியமிப்பது இயலாத காரியம் என, துணை ஆசிரியர் பொறுப்போடு, நிர்வாகப் பொறுப்பையும் பார்த்துவந்த அண்ணன் மாறன் கூறிவிட்டார்.

இந்தச் சூழலில், அந்தப் பணிகளைக் கலைஞரின் குடும்ப உறுப்பினர்களே செய்திட பணிக்கப்பட்டனர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான், கல்லூரி நேரம் முடிந்ததும் பகுதி நேரப் பணியாக ‘முரசொலி’யில் பணியாற்றினேன். அதேபோன்று உயர் நிலைப் பள்ளிகளில் படித்து வந்த அழகிரி, இன்றைய கழகத் தலைவர் ஸ்டாலின், மு.க.தமிழரசு என அனைவரும், மாலை நேரங்களில் ‘முரசொலி’ பணிகளில் தங்கள் பங்கைச் செலுத்தினோம்.

எனது மற்றொரு சகோதரர் அமிர்தம், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். ஓய்வு நேரத்தில் ‘முரசொலி’யின் புகைப்பட நிபுணராகப் பணிபுரிந்தார். (அண்ணா தேர்தல் அறிக்கை படிக்க, பக்கத்தில் கலைஞர் இருப்பது போன்ற படத்தை பலரும் பார்த்திருக்கக் கூடும். அது அமிர்தம் எடுத்த படம்தான்). இத்தகைய சூழலில் ஒவ்வொரு நாளும் ‘முரசொலி’யை அச்சடித்து அதனை விநியோகத்துக்காகப் புகைவண்டியில் அனுப்பும் வரை, ஒவ்வொருவரும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றுவர்.

வெளியூர் ஏடு காலை 11 மணி அளவில் அச்சடிக்கத் துவங்கினாலும், அடித்து முடிக்க இரவு 9 மணி அல்லது 9.30 மணி வரை அது நீளும். மற்றைய தின ஏடுகளெல்லாம் எக்மோர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து முதல் புகைவண்டி புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பே, புகைவண்டியிலுள்ள பார்சல் கோச்சில் ஏற்றப்பட்டு விடும். ஆனால், ‘முரசொலி’யின் நிலையோ வேறு.

அச்சடிக்க, அடிக்க முதலில் புறப்படும் புகைவண்டிக்கு ‘முரசொலி’யின் ஒரு பகுதியை எடுத்துச் செல்வோம்; பின்னர் அச்சடித்ததை அடுத்த வண்டி, அடுத்த வண்டி என்று புகைவண்டி நிலையங்களிலிருந்து கடைசி புகைவண்டி செல்லும்வரை ‘முரசொலி’ பார்சல் எடுத்துச்செல்லும் நிலைதான் நித்தம் நித்தம் இருந்தது. ‘முரசொலி’க்கென்று இருந்த ஒரே பார்சல் வேன், முதல் புகைவண்டிக்கான பார்சலை எடுத்துச் சென்றுவிடும். அந்த வேன் பார்சலை இறக்கிவைத்துவிட்டு திரும்பி வந்து அடுத்த ரயிலுக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை ஏற்படும். அப்போது தலைவர் கலைஞர் இருந்தால், அவர் காரிலோ அல்லது ‘முரசொலி’ மாறன் அவர்களின் ‘ஹெரால்டு’ காரிலோ, ஆட்டோவிலோ பார்சல்களை எடுத்துச் செல்ல வேண்டிவரும். பல நேரங்களில் அந்தப் பணிகளை இன்றைய கழகத் தலைவர் தளபதி, அழகிரி, தமிழரசு, அமிர்தம் போன்றோர் செய்துவந்தது அன்றாடக் காட்சிகள்.

விற்பனைக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு, நம்பர் பிளேட் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பது போக்குவரத்து போலீஸ் விதியாகும். பயணிகள் செல்லும் வாகனத்தில் விற்பனைக்கான பொருள் எடுத்துச் செல்லப்பட்டால், போக்குவரத்துப் போலீஸார் அதன் மீது நடவடிக்கை எடுப்பர்! அவசர நேரத்தில் ‘முரசொலி’ பார்சல்களை காரில் எடுத்துச் சென்ற ஸ்டாலின், அழகிரி, தமிழ் போன்றோர் காவல் துறையிடம் சிக்கிய நிகழ்வுகளும் உண்டு. உள்ளே இருப்பது ‘முரசொலி’ ஏடு என்பதை அறிந்த காவல் துறையினர் சிலர், “சரி, சரி, போய்விடுங்கள்” என்று விட்டு விடுவார்கள். ஒரு சிலர் வழக்குப் பதிவுசெய்துவிடுவர். பிறகு உரிய அபராதத் தொகை செலுத்திவிட்டு வண்டியை மீட்டு வருவதும் அவ்வப்போது நடைபெறும்.

இப்படி மற்றப் பிள்ளைகளை வருத்தி மூத்த பிள்ளை ‘முரசொலி’யைப் பேணிக் காத்தார் கலைஞர்!

உடன் படிக்கும் தோழர்கள், மாலை நேரங்களில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் காலம் செலவு செய்த நேரத்தில், கலைஞர் வீட்டுப் பிள்ளைகள் ‘முரசொலி’யில் பகுதி நேரப் பணியாளர்களாக ஊழியம் செய்துகொண்டிருந்தனர்! சமயங்களில் படிக்க வேண்டிய நேரத்தில்கூட பேப்பர் மடித்துக் கொண்டிருந்தனர்! பொருள் ஈட்டும் நோக்கோடு ‘முரசொலி’ நடத்தப்பட்டிருந்தால்கூட பரவாயில்லை; கலைஞர் ஈட்டிய பொருளையும் அது கரைத்துக்கொண்டிருந்தது! கலைஞரின் குடும்ப இளைஞர்கள் அனைவரும், கலைஞர் ஊட்டிய இலட்சிய வேட்கையில் தங்கள் இளமையைப் பலி கொடுத்துவந்தனர்! பெரியார், அண்ணா வழியில்தான் ஏற்றுக் கொண்ட இலட்சியம் நிறைவேற, தன்னை மட்டுமல்ல; தன் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் அந்த வழியில் பயணிக்க வைத்தார் கலைஞர்.

தோழர்களை வீறுகொண்டு எழச்செய்த கலைஞர் கடிதம்

போராட்டக் களங்களாயிருந்தாலும், தேர்தல் களங்களாயிருந்தாலும், கழகத் தோழர்களை வீறுகொண்டு எழுந்து பணியாற்றச் செய்ய, ‘முரசொலி’யில் கலைஞர் வடிக்கும் கடிதங்கள் மற்றும் கட்டுரைகள், பெட்டிச் செய்திகள் உத்வேகம் கொடுத்தன! ‘முரசொலி’யை அதன் தலைப்பு தெரியும் வகையில் மடித்து கையில் வைத்திருப்பதைத் தனது பெருமையாகக் கழகத் தோழர்கள் கருதினர்! ஒருபுறம் இடர்ப்பாடுகள், இன்னல்கள் பலமுனைத் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் ‘முரசொலி’ எழுச்சி முரசமாக நாளும் ஒலிக்க; கார்ட்டூன்கள், செய்திக் கட்டுரைகள், எதிரிகளுக்குச் சுடச்சுடப் பதிலளிக்கும் பெட்டிச் செய்திகள், கழகத் தலைவர்கள் - முன்னணியினர் பேச்சுகள், நாடி நரம்புகளை முறுக்கேற்றும் கவிதைகள் எனத் தயாராகிக்கொண்டேயிருக்கும்! அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ‘முரசொலி’யின் கண்ணோட்டம் என்ன என்பதறிய எதிர்க்கட்சியினரும் ஆர்வத்துடன் ‘முரசொலி’யைப் படிக்க ஆரம்பித்தனர்.

இத்தனை கஷ்ட நஷ்டங்களை ஏற்று, தான் உருவாக்கி நடத்திய ‘முரசொலி’யை கலைஞரின் கண்ணோட்டமானது, கட்சியைப் பலப்படுத்தும் ஆயுதமாக அதனை உருவாக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.

கலைஞர், ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொள்ளும் வரை, அதாவது, அவர் அமைச்சராகி அப்பொறுப்பை ஏற்பதால், ‘முரசொலி’ ஆசிரியர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட வரை, 'முரசொலி'யில் அவர் சம்பந்தப்பட்ட செய்திகளோ, அவருடைய பேச்சுக்களோ வரும்பொழுது, கலைஞர் எனும் அடைமொழி ஒருநாளும் வந்திருக்காது. ‘முரசொலி’  தலைப்பில்கூட, ‘ஆசிரியர் : மு.கருணாநிதி எம்.எல்.ஏ.’ என்றே இடம்பெறும். அறிஞர் அண்ணா, நாவலர் என்று தலைப்புச் செய்திகளில் குறிப்பிடப்படும். ஆனால், கலைஞர் சம்பந்தப்பட்ட செய்தி என்றால், ‘தோழர் கருணாநிதி’, ‘பொருளாளர் கருணாநிதி’ என்றே இருக்கும்.

தன்னை முன்னிலைப்படுத்தும் ஏடாக ‘முரசொலி’ இருக்கக்கூடாது; இயக்கத்தின் ஏற்றத்துக்குப் பயன்படும் ஏடாக இருக்க வேண்டும் என்பதில், கலைஞர் தனிக்கவனம் செலுத்தினார். ‘முரசொலி’யில் தலைவர் கலைஞர் வடிக்கும் எழுத்தோவியங்களில் தமிழ் கொஞ்சிடவும் செய்தது; போராட்டக் காலங்களில் கொதித்திடவும் செய்தது; நல்ல தமிழ் எழுத, பேச கற்றிடும் ஆர்வம் கொண்ட பலர், ‘முரசொலி’ படித்திடத் துவங்கினர்!

பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகிட ‘முரசொலி’ பாதை அமைத்துக் கொடுத்தது!‘முரசொலி’யில் சிலர் எழுதிய கட்டுரைகளைப் படித்து, எழுதியவர்களைக் கலைஞர் பாராட்டத் தவறியதில்லை! அவர்கள் தொடர்ந்து எழுதிட உற்சாகம் ஊட்டினார்!

இப்படி ‘முரசொலி’யை கலைஞர் தனது மூத்த பிள்ளையாக மட்டுமல்ல; எத்தகைய அடக்கு முறைகளையும் எதிர்கொண்டு, கழக வளர்ச்சிக்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதனை ஏற்று, எந்தவிதத் தியாகத்துக்கும் தயாராக இருக்கும் கொள்கை வீரனாகவும் வளர்த்தார்!

செய்திகளைத் (News) தாங்கிப் பல நாளேடுகள் வரும்போது, செய்தி மட்டுமின்றி, அந்தச் செய்தி குறித்து கழகக் கருத்தை விளக்கிடும் (VIEWS) வகையில் ‘முரசொலி’ விளங்கியது. அதற்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, மற்ற ஏடுகளிலிருந்து தனித்து விளங்கும் நிலையை உருவாக்கிக்கொண்டது!

நூல் விவரம்

முரசொலி: சில நினைவலைகள்
முரசொலி செல்வம்
பக்கங்கள் 504, விலை ரூ. 300
கௌரா பதிப்பக வெளியீடு
கௌரா ஏஜன்ஸீஸ், 1, சாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை
செல்பேசி: 9790706548, 9790706549; gowra09@gmail.com


2


1
பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   1 year ago

The Dravidian Movement, especially Dravida Munnetra Kazhakam witnessed a large number of newspapers, magazines, periodicals and other forms of publications. A good number of the leaders of the Party had their own newspapers, magazines etc. Where had all those gone except Murasoli? The history of Murasoli is the history of DMK. To that extent Murasoli stood with the ups and downs of the the Party and its leader Kalaignar Karunanidhi. The Article on Murasoli written by Murasoli Selvam is an opportunity to look back its history and an eye opener to younger generation who aspire for a role in media and politics..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Raja   1 year ago

இன்று ஒரு செய்தி, திருச்சியே அதிரும் அளவுக்கு அருண் நேருவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்,பிரியாணி, இன்ன பிற என்று..எத்தனை பெரிய அளவில் தூக்கி பிடித்தாலும் கருத்தியல் ரீதியாகவும் சரி, சித்தாந்த ரீதியாகவும் சரி எந்த நோக்கத்திற்காக திமுக ஆரம்பிக்கப்பட்டதோ அதில் முற்றிலும் தோற்று விட்டது என்பதுதான் நிதர்சனம். "தெற்கிலிருந்து உதித்த சூரியனே" இதற்கு மெய்முதல் காரணம் என்பதை வேதனையுடன் சுட்டி காட்ட வேண்டியுள்ளது. உயர்ந்த நோக்கத்திற்காக தங்கள் வாழ்வை, இளமையை, வேட்கையை  பறிகொடுத்து உழைத்த பல லட்சக்கணக்கானோர் ரத்தத்தில் உருவான வளர்ச்சிதான் திமுகவே தவிர தனிப்பட்ட ஒருவரின் வெற்றி பெருமிதம் அல்ல. படிக்க வேண்டிய நேரத்தில் பலரும் தங்கள் குடும்ப சொத்துக்களில், வயல்களில், கடைகளில் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்கள் தந்தையாரின் தொழிற்சாலைகளில் வேலை செய்வது தியாகம் அல்ல, நிச்சயமாக இல்லை. ஒரு வகையில் இது தொழிலை கற்று கொள்வது. தங்களுடையது என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டு செயலாற்றுவது அல்லது தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு செய்வது.  இளமையின் தூய்மையுடன் பரிசுத்தத்துடன் கிளம்பிய பலரும் இறுதியில் செக்கு மாடாக பல வழிகளில் தடித்த தோல் மட்டும் அல்லாமல் மனம் அனைத்தும் உணர்வற்று வாழ்ந்து முடிவது தினசரி நடப்பதுதான். இறக்கும் போது இலை உதிர்வதை போல் அதை வரவேற்று பிறந்த நோக்கத்தை பூர்த்தி செய்து விடை பெறுவது ஒரு வழி. இன்னொன்று வழி தவறி போய் கொண்ட உன்னத எண்ணங்களை எல்லாம் தவற விட்டு ஒரு தலைமுறைக்கு மேல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத வம்சத்திற்காக அனைத்தும் சேர்த்து கொண்டு அதிலும் அவநம்பிக்கை அடைந்து வேறு வழி இல்லாமல் விடை பெறுவது இன்னொரு வழி. மாபெரும் உழைப்பாளி, இலக்கியவாதி, உன்னத லட்சியத்துடன் கிளம்பிய கருணாநிதி இதில் இரண்டாவது வழியில் பாதை தவறி போனதுதான் மாபெரும் இழப்பு, அந்த இழப்பின் வலியை அவர் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாவிடினும் அவரின் இறுதி மூச்சு வரை அது தொடர்ந்து இருக்கலாம், அவருக்கு மட்டுமே அது புரியும்!

Reply 4 1

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

குற்றவியல் நடைமுறைச் சட்டம்த.செ.ஞானவேல்திருமாவளவன் சமஸ்பட்ஜெட்காதில் சீழ் வடிந்தால்?ரோவான் ஃபிலிப் பேட்டிமுரண்களின் வழக்குகேம்பிரிட்ஜ் சமரசம்ஆரூர்தாஸ்டி.வி.பரத்வாஜ் பேட்டிஒரு கோடிப் பேர்பஞ்சாப் முதல்வர்சுயமரியாதை இயக்கம்குடல்வால் அழற்சிதாழ்வுணர்ச்சிவளவன் அமுதன் கட்டுரைகள்ளக்குறிச்சிசட்டத்தின் கொடுங்கோன்மைஇந்திரா நூயி அருஞ்சொல்ஐந்து மையங்கள்அரசு ஊழியர்களின் கடமைலவ் டுடேவங்கி டெபாசிட்தனிமனித வரலாறுபரிணாம மானுடவியல்நடப்புக் கணக்கு பற்றாக்குறைநபர்வாரி வருமானம்சந்தேகத்துக்குரியதுதமிழ்நாட்டின் மொழிக் கொள்கைஉங்கள் சம்பளம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!