சமஸ் கட்டுரை, ஆளுமைகள், ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

தப்பு வந்தால் அலுவலகத்தையே பூட்டிவிடுவார்: முரசொலி செல்வம் பேட்டி

சமஸ் | Samas
22 Sep 2021, 5:00 am
0

ருணாநிதி தன் மூத்த பிள்ளை என்று குறிப்பிடும் ‘முரசொலி’ அண்ணாவின் காலத்திலேயே திமுகவின் அதிகாரப்பூர்வப் பத்திரிகைகளில் ஒன்றானது. கருணாநிதி தன்னுடைய 18 வயதில் ஆரம்பித்த ‘முரசொலி’க்கு இன்றைக்கு வயது 75. திமுகவைக் காட்டிலும் 7 வயது மூத்தது அது. கட்சியின் போர் முரசாக ஒலித்தாலும் ‘முரசொலி’யை வளர்த்தெடுத்ததில் கருணாநிதி குடும்பத்தினருக்கு முக்கியமான பங்குண்டு. அதன் இன்றைய நிர்வாக ஆசிரியர் செல்வம் ‘முரசொலி’ பந்தத்தைப் பற்றிப் பேசினார்.

 ஒருவகையில் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகை என்று ‘முரசொலி’யைச் சொல்லலாமா?

குடும்பமே உழைத்த கட்சிப் பத்திரிகை என்று சொல்லலாம். திமுக தொடங்குவதற்கு முன்பு, ஒரு அரசியல் தலைவராக உருவெடுப்பதற்கெல்லாம் முன்பு கருணாநிதி அவருடைய 18 வயதில் தொடங்கிய பத்திரிகை இது. பெரிய நிறுவனம் எல்லாம் அல்ல - ஒரு சாமானிய இளைஞனின் கனவு. அந்தச் சூழலில் யார் அவருக்கு உதவியாக இருந்திருக்க முடியும்? குடும்பமே ஓடினோம் என்றால், ஒரு பெரிய கட்டமைப்பில் நடந்த பத்திரிகை அல்ல இது – எல்லோருடைய உதவியும் தேவைப்பட்டது என்பதனால்தான். வீட்டில் யாராவது சும்மா உட்கார்ந்திருந்தாலே, ‘அங்கே போய் கொஞ்சம் வேலை பார்க்கலாமே!’ என்பார்கள். இப்படிதான் மாறன், அமிர்தம், நான், தமிழரசு, அழகிரி, ஸ்டாலின் எல்லாருமே இங்கு வந்தோம். வேலை என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? சந்தாதாரர் முகவரி பட்டியல் சரி பார்ப்பது, பார்சல் போடுவது இப்படிச் சின்னச் சின்ன வேலைகளாகத்தான் ஆரம்பிக்கும். இந்த 75 வருடங்களில் 50 வருடங்களுக்கு மேல் ஆட்சியாளர்களின் எதிர்த்து வந்துகொண்டிருக்கும் பத்திரிகை இது. அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். சின்ன அலுவலகம். சின்ன நிர்வாகம். ஆனால், நடந்தது முக்கியமான வேலை. நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றுதான் எல்லோரும் ஓடினோம்.

நீங்கள் ‘முரசொலி’க்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

ஆயிற்று 50 வருஷங்கள். சட்டம் படித்தபோது இருந்த கனவுகள் வேறு. இங்கு வந்த பின் எல்லாம் மாறிப்போயிற்று. பத்திரிகை வேலையின் ருசியும் காரணம் என்று சொல்லலாம். ஐந்து முறை முதல்வராக இருந்தவரே அன்றாடம் அலுக்காமல் இரண்டு மணி நேரமாவது இங்கு வந்துவிடுவார் என்றால், சவால் தரும் ருசிதானே காரணம்!

கருணாநிதிக்குக் கீழ் பணியாற்றுவது சிரமம் என்பார்களே?

அது உண்மைதான். அவர் மாதிரி யாராலும் கடுமையாக உழைக்க முடியாது. மொத்தம் 12 பக்கங்கள் என்றால், அந்தக் காலத்தில் 8 பக்கங்கள் வரை அவரே எழுதுவார். எல்லாம் அவருக்கு நேரத்திற்கு ஆக வேண்டும். பிழைகள் பொறுக்க மாட்டார். கோபம் வரும். தப்பு பார்த்துப் பொறுக்காமல், அலுவலகத்தையே பூட்டிவிட்டுப் போன நாட்களெல்லாம் உண்டு.

பத்திரிகை அலுவலகத்தையே பூட்டிவிடுவாரா?

ஆமாம். 'இப்படித் தமிழைக் காயப்படுத்தி பத்திரிகை நடத்தத் தேவையில்லை' என்று சொல்லி அலுவலகத்தைப் பூட்டி சாவியை சட்டைப்பையில் போட்டுக்கொண்டு போய்விடுவார். கஷ்டம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட யாரும் அவர் முன்பு அப்போது போய் நிற்க முடியாது. அப்புறம் தோதான ஆட்கள், அவருடைய வயதான நண்பர்கள் யாரையாவது அழைத்துக்கொண்டு போய் மன்றாடினால், கடுமையாக எச்சரித்துவிட்டு சாவியைத் திரும்பக் கொடுப்பார்.

உங்களுடைய அனுபவத்தில் ‘முரசொலி’க்குக் கடுமையான நாட்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

நெருக்கடிநிலைக் காலகட்டம். தணிக்கை என்ற பெயரில் எல்லாவற்றிலும் கை வைப்பார்கள் அதிகாரிகள். அப்படியும் ரொம்பப் பூடகமாக இலக்கிய நடையில் சில விஷயங்களை உள்ளே தள்ளிவிடுவார் கருணாநிதி. அவற்றையெல்லாம் விலாவரியாக விளக்கி ‘எப்படி இதையெல்லாம் விட்டார்கள் தணிக்கை அதிகாரிகள்?’ என்று கேட்டு ‘மக்கள் குரல்’ பத்திரிகையில் எழுதுவார்கள். விளைவாக, எழுதப்படும் எல்லாவற்றையுமே தூக்கிவிட ஆரம்பித்தார்கள் அதிகாரிகள். ஒருகட்டத்தில் வெறுத்துப்போய்தான், ‘வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்றெல்லாம் பகடிசெய்து எழுத ஆரம்பித்தார்.

சக பத்திரிகையாளர்களே பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிராக இருந்தார்களா?

பத்திரிகையாளர்கள், பத்திரிகை இதெல்லாம் மேல்பூச்சு வார்த்தைகள்தானே! அடிப்படையில் திமுக எதிர்ப்புணர்வு கொண்ட சில பிராமணர்கள் முன்னின்று அந்நாட்களில் நடத்திய பத்திரிகை அது. இதை மட்டுமா செய்தார்கள்? அவர் என்ன சொன்னாலும் எந்தப் பத்திரிகையிலும் வராத அந்நாட்களில் அவர் மீது அவ்வளவு அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எழுதுவார்கள். எல்லாவற்றையும் கடந்துதான் வந்தோம்.

பின் வந்த நாட்களில் எதை நெருக்கடியானதாகச் சொல்வீர்கள்?

எதாவது அச்சுறுத்தல், தொல்லைகளை இடையிலேயே ஓடிவிட்டதால், எதைத் தொல்லையென்று சொல்வதென்றே தெரியவில்லை. அதிமுக ஆட்சியில், எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனும் சூழலை அடிக்கடி உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். ஜெயலலிதா காலத்தில் உரிமை மீறல் என்று என்னைக் கொண்டுபோய் சட்ட மன்றத்தில் கூண்டிலேயே நிறுத்தினார்களே! எல்லாம் பழகிவிட்டது!

திமுகவை விமர்சிப்பவர்கள் மீதான ‘முரசொலி’யின் விமர்சனங்கள் பல சமயங்களில் தாக்குதல்களாக அத்துமீறியிருக்கின்றனவே?

ஊரில் ஒரு கதை உண்டு. ஒரு அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே அடிபிடி நடந்துகொண்டிருந்ததாம். அப்பா கேட்டாராம், ‘யாரடா சண்டையை ஆரம்பித்தது?’ அண்ணன் சொன்னானாம், ‘தம்பிதான் பதிலுக்கு அடித்துச் சண்டையை ஆரம்பித்தான் அப்பா’ என்று! நம்மூர் நியாயம் அப்படித்தான். இந்தியாவிலேயே அதிகம் குறிவைத்துத் தாக்கப்பட்ட இயக்கம் திமுக - தலைவர் கருணாநிதி. நாட்டிலேயே விளிம்புநிலையிலிருந்து வந்தவர்கள் அரசியலதிகாரத்தைக் கையில் எடுத்து, சமூக நீதியைக் கொண்டுவந்த வரலாற்றைக் கொண்ட இயக்கம் இது. அந்தக் காரணத்துக்காகவே தொடர் தாக்குதலுக்கும் உள்ளானது. தாக்குதலுக்குப் பதில் கொடுப்பவர்களைப் பார்த்துதான் இந்தச் சமூகம் எல்லாக் கேள்விகளையும் கேட்கிறது.

போன தலைமுறை திமுக தொண்டர்களிடம் ‘முரசொலி’க்கு இருந்த செல்வாக்கு இந்தத் தலைமுறையிடம் இருக்கிறதா?

சரிந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பத்திரிகைக் கட்டு அலுவலகத்திலிருந்து கடைக்குப் போகும் முன்பே நூற்றுக்கணக்கானவர்கள் அலுவலக வாசலில் மறித்துப் பத்திரிகையை வாங்கி போய் படித்த காலம் உண்டு. அந்தத் துடிப்பு இன்று எங்கே போயிற்று என்ற கேள்வி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், திமுக மட்டுமல்ல; எல்லாக் கட்சிகளிலுமே இளைய தலைமுறையிடம் சித்தாந்தரீதியாக ஒரு வறட்சியைப் பார்க்க முடிகிறது. இதை இந்தக் காலத்தின் பிரச்சினையாகத்தான் அணுக வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தச் சவாலையும் இயக்கம் கடக்கும்!

'தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூலிலிருந்து...'

- ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், 2017

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








உபைத் சித்திகிநடிகர் சூர்யாஆசிரியர் பயிற்சிகளின் அடிப்படைஎம்பிபிஎஸ்கோர்பசெவ் பற்றிய கட்டுரையும்மகேந்திர சபர்வால் கட்டுரை‘அதேதான்’ – ‘மேலும் கொஞ்சம் அதிகமாக’!மன்மோகன் சிங் அரசுமறைநுட்பத் தகவல்கள்ஹரி சிங்சமஸ் கட்டுரைக்கு எதிர்வினைஊழியர் சங்கங்களின் இழிநிலைஎஸ்.சந்திரசேகர் கட்டுரைவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்இளையராஜா இசைக் கல்வி மையம்: ஒரு முக்கியமான முன்னெடநவீன இயந்திரச் சூழல்பாதுகாப்பு மீறல்சட்டப்பேரவை தேர்தல்கிசுமுசாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்புஇயக்கச் செயல்பாடுகள்ஷிர்க் ஒழிப்பு மாநாடுபொருளாதாரக் கொள்கைகள்சு.ராஜகோபாலன் கட்டுரைவெற்றியைத் தர முடியாவிட்டால் மோடியை ஆர்.எஸ்.எஸ். நகுஜராத் சாயல்டி.வி.பரத்வாஜ்பணி மாற்றம்கம்பாரகேநடுத்தர வருமானம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!