கட்டுரை, கலை, சினிமா, அறிவியல் 4 நிமிட வாசிப்பு
ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001: ஸ்பேஸ் ஒடிஸியின்’ முதல் காட்சியில் எலும்பை ஆயுதமாக்கிக் கொலை செய்யும் ஒரு குரங்கு, பரிணாம வளர்ச்சியில் அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்தை அடைந்ததை கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ பேசுவதில்லை என்றாலும், அந்தக் குரங்கிடம் தோன்றாதவை ராபர்ட் ஜெ ஓப்பன்ஹெய்மருக்குத் தோன்றுவதை இந்தப் படம் பேசுகிறது.
குற்ற உணர்வு, அறவுணர்வின் தடுமாற்றங்கள், அரசியல் முடிவுகள். இவை எவையும் ஆயுதத்தால் கொலை செய்யும் அந்த முதல் குரங்கிற்கு இல்லை. உண்மையில் இயற்கையில் குற்றம் என்பதே இல்லை. குற்ற உணர்வு நாகரிகத்தின் (civility) அடிப்படைகளில் ஒன்றாக பின்னர் எழுந்தபோதும், ஆயுதங்களின் மீதான காதல் இதுவரையில் குறைந்திருக்கவில்லை.
அணு ஆயுதங்கள், ஹைட்ரஜன் குண்டுகள் இப்போது அறிதுயிலில் வைக்கப்பட்டிருக்க, டிரோன்களும், கொத்துக் குண்டுகளும் சிறுசிறு துண்டுகளாக நம்மீது பறக்கின்றன. மிகப் பெரியவற்றை நாம் அஞ்சுகிறோம், சிறியவை உருவாக்கும் அழிவுகளின் கூட்டுத்தொகை நம் பார்வைக்குத் தப்பிவிடுகிறது.
கொலைக் கருவி
காட்சிகள் தொடங்கும் முன்பாக, மனிதர்களுக்குத் தீயைக் கொடுத்ததற்காக காலாகாலத்திற்கும் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கும் புரோமிதியஸின் கதை திரையில் தோன்றுகிறது. தன்னுடைய பணியின் காரணமாக ஒருவர் கொலைக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அதை அரசிடம் அளித்தால் அவரை நாம் குற்றவாளியாகக் கருத முடியுமா? ஓப்பன்ஹெய்மர் ஏற்றுக்கொண்டிருந்த பணியை நம்மால் இவ்வாறு சாதாரணமாக அணுக முடியாது.
அவர் செய்தது தன்னுடைய அறிவை குறிப்பாக அப்போதுதான் புதியதாக வெடித்துக் கிளம்பிய ஏறக்குறைய இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் அவரே சொல்வதைப் போல, புரட்சிகரமான அறிவியல் அறிவின் ஒரு முக்கியக் கண்டுபிடிப்பாளர் தனது அறிவை ஆயுத உருவாக்கத்தில் பயன்படுத்துவதால் எழும் குற்ற உணர்வை, அன்றாடம் நம்முடைய உலகியல் செயல்களால் எழும் சாதாரண அறத்தடுமாற்றங்களோடும், அடுத்த நிமிடம் நாம் கடந்துவிடுகிற குற்ற உணர்வோடும் நாம் ஒப்பிட முடியுமா? நாம் அனைவரும் குற்ற உணர்வில் சமத்துவத்தை அடைகிறோமா?
அணுகுண்டைப் பயன்படுத்தி பெரும் பேரழிவின் முகத்தை (திரைப்படத்தில் பிரபஞ்ச ஆற்றல் என்று ஓரிடத்தில் சொல்லப்படுகிறது) நிகழ்த்திக் காட்டிய ஓர் அரசை, அதன் அதிபரை நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிவதைப் போல அதன் பின்னணியில் இயங்கிய ஆயுதக் கண்டுபிடிப்பாளரின் பொறுப்பு, அவரது செயலின் முக்கியத்துவம், அவரது தேர்வின் மீதான விமர்சனம் இவற்றை எளிதாக விவாதிக்க முடிவதில்லை. நமக்கு ஒரு விமர்சனக் கருதுகோள் ஒன்று தேவைப்படுகிறது. அந்தக் கருதுகோளின் வழியாக நாம் இச்சிக்கலை அணுக முயல்வோம்.
விமர்சனக் கருதுகோள்
குவாண்டம் இயற்பியல் நமது கருதுகோளின் நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்கக்கூடியது. நான் அறிந்தவரை, குவாண்டம் இயற்பியலின் ஓர் அங்கமான அணு இயற்பியல் இரண்டு முக்கியமான முடிவுகளை நம்முன் வைக்கிறது. அணுவின் உள்ளே நிகழ்பவற்றை அடிப்படையாக் கொண்டு இவ்வுலகை நாம் பார்க்கிற விதத்தையும் குவாண்டம் இயற்பியல் மாற்றியிருக்கிறது. ஏறக்குறைய இந்திய மெய்யியல் கோட்பாடுகளில் முக்கியமான தோற்ற மெய்மை அல்லது தோற்றப் பொய்மைக்கு அருகே செல்லும் கோட்பாட்டை முன்வைத்தது.
ஒன்று, ஒளி என்பது துகள்களாகவும், அலைகளாகவும் இருக்கும் இரட்டைத்தன்மை (Duality). இரண்டாவது, ஒரு பரிசோதனையின் முடிவு எதனைக் கொண்டு அப்பரிசோதனையின் முடிவை ஆராய்கிறோமோ அதனைப் பொறுத்து மாறுபடும் என்பது.
முதல் முடிவை விடுங்கள், ஒளி எப்படி இருந்தாலும் நாம் கவலைப்படத் தேவையில்லை. இராண்டாவது முடிவு மிகவும் சிக்கலானது. ஒரு நிகழ்வு, அது விவரிக்கப்படும்போதுதான் நிகழ்கிறது என்று சொல்வதற்கு ஒப்பானது. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகால மேற்கத்திய இயற்பியல் கோட்பாடுகளின் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்திய தெகார்த்திய, நியுட்டனிய பார்வைக்கு முற்றிலும் எதிராகவும் அமைந்தது.
குவாண்டம் இயற்பியல் நாம் உலகைப் பார்க்கும் பார்வையில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கும் அதேசமயம், நாம் பயன்படுத்தும் ஜிபிஎஸ், கோள்களின் இருப்பிடத்தை அறியும் பழைய கிரேக்க முறையின் அடிப்படையில் இயங்குகிறது. நிச்சயத்திற்கு ஓர் இடம் இருக்கிறது அதேசமயம் அது நிச்சயமானதும் அல்ல. இந்த முரண்பாடே குவாண்டம் இயற்பியிலின் கோட்பாட்டுப் பங்களிப்புகளில் நம்மைத் தலைசுற்ற வைப்பது.
கிறிஸ்டோபர் நோலன் இந்த அறிவியல் முரண்பாட்டை தனிமனிதர், அரசியல், வரலாறு, அதிகாரத்தின் இயக்கம் இவற்றை ஒரு சேரப் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கும், அணுகுண்டு உருவாக்கம், அவரது தளர்வான கம்யூனிஸ ஆதரவினால் மெக்கார்த்தி காலத்தில் அவர் மீது சோவியத் ரஷ்ய உளவாளி என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, தனிவாழ்வில் அவரது நம்பகமற்ற செயல்பாடுகளின் கலவையான ஓப்பன்ஹெய்மரின் வாழ்வின் முக்கியமான பகுதியை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னணி
காட்சிகளின் துவக்கத்தில் அல்லது இடையிடையே தோன்றும் துகள்கள், அலைகளைக் கொண்டு நாம் அக்காட்சியின் பார்வைக் கோணத்தை அணுகலாம். ‘இன்செப்சன்’ திரைப்படத்தில் சிறுபம்பரம் சுற்றும் அதே நுட்பம் என்றாலும் ஒரு காட்சியின் துவக்கமும் முடிவும் (குண்டுவெடிப்புச் சோதனையைத் தவிர) பல்வேறு காட்சிகளின் இடையிடையே சொருகி வைக்கப்பட்டிருப்பதால் அந்நுட்பம் இன்னும் சிக்கலானதாக மாறிவிடுகிறது.
அ-நேர்கோட்டுக் கதையாடல் (narrative), சிதறல் சிதறலான காட்சிகள் என திரைப்படத்திற்கு என்று ஓர் அடிப்படை இயங்குதளம் இருக்கிறதா என்ற கேள்வியை படம் முழுக்க எழுப்பினாலும், அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளான ஓப்பன்ஹெய்மரின் தடுமாற்றங்களை, சிதறுண்ட மனதை, மாறுபடும் பார்வைக் கோணத்தை விவரிப்பதற்குப் பொருத்தமான கதையாடலாகவும் அமைந்திருக்கிறது.
நாம் இப்போது ஒரு விவாதத்தைத் துவங்குவோம். பணியின் பொருட்டு, அல்லது தான் கண்டுபிடித்த ஒரு கோட்பாட்டை ஆயுதம் செய்வதற்கு ஒருவர் பயன்படுத்தினால் அவரை நாம் அதன் விளைவுகளுக்குக் குற்றவாளி ஆக்கலாமா? அதேசமயம், அணு ஆயுதத்தைவிட இன்னும் வீரியமான பேரழிவைத் தரக்கூடிய ஹைட்ரஜன் குண்டைக் கண்டுபிடித்த அறிவியலாளரை நாம் ஓப்பன்ஹெய்மரைப் போலவே குற்றத்தில் சமமாக நடத்துவோமா?
கொலை வாளைச் செய்யும் கொல்லர் மட்டுமல்ல அதனைப் பயன்படுத்திக் கொலை செய்பவரும் ஒரு கதையாடலில் சிக்கியிருக்கிறார். அது நாட்டைப் பாதுகாப்பது, அழிவைத் தடுப்பது, நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது எனும் கதையாடல். ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டு பாவிப்பிற்கு ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ஹாரி ட்ருமனைச் சந்திக்கும் காட்சியின் ஆழம் அதன் கால அளவில் தப்பிப் போகாமல், நம்முன் ஒரு கேள்வியாக எழும் வாய்ப்பை அழுத்தமாகக் கொண்டிருக்கிறது.
ஒரு கைக்குட்டையின் அசைவில் வரலாற்றில் நிகழக்கூடிய பார்வைக் கோண முரண்பாட்டை எளிதாகக் கடத்துகிறார் நோலன். அறிவியலும், அரசு அதிகாரமும் இணையும்போது, அதுவும் ஒரு வரலாற்றுக் காலத்தின் நெருக்கடியின் பின்னணியில் இணையும்போது ஏற்படும் அழுத்தங்கள் நமது பார்வையின் அளவுகோலில் துகளாகவும் அமையலாம் அல்லது அலையாகவும். அரசியல் பின்னணியில்தான் அணுக வேண்டும் என்ற ஒரு பார்வையை மற்றொரு குவாண்டம் இயற்பியலாளரான வெர்னர் ஹெய்சன்பர்க் அவருடைய ‘இயற்பியலும் மெய்யியலும்’ நூலில் அளிக்கிறார்.
இந்தச் சிக்கலை, மனித வரலாற்றில் மனிதர்கள் தங்களின் மீதே செய்துபார்த்த பரிசோதனைகளில் ஒப்பற்றதும், பேரழிவைத் தந்ததுமான இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அணுகி ஒரு நியாயத்தை அளிக்க முடியும். போரில் யாருக்கு என்ன செய்வதென்றே தெரியாது, கொல்வதைத் தவிர. யார் முதலில் கொல்கிறாரோ அவரே வெற்றியாளர். வெற்றிக்கு யார்தான் முந்துவதில்லை!
குற்ற உணர்வு
ஓப்பன்ஹெய்மர், ’நானே மரணமும் உலகை அழிப்பவனுமானேன்’ எனும் பகவத் கீதையின் வசனத்தைச் சொல்கிறார். அவருடைய குற்ற உணர்விற்கு (அவர் ஒருபோதும் அணுகுண்டுப் பயன்பாட்டிற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கவில்லை) கீதையின் அடிப்படையில் விடுதலையை வழங்கிவிட முடியும். எதனையும் நியாயப்படுத்துவதற்கு நமக்குத் தேவை கதையாடலும், குறிப்பிட்ட காலகட்டத்தின் அழுத்தங்களின் பின்னணியுமே. ஒன்றின் முடிவே அதன் துவக்கத்தை தீர்மானிக்கிறது.
இவ்வருடம் புக்கர் விருது வாங்கிய நாவலான ‘டைம் ஷெல்டரில்’ அதன் ஆசிரியர் கியார்கி கோஸ்படினோவ் 1936 செப்டம்பர் 1 அன்றோடு மனிதர்களின் காலம் முடிந்துவிட்டது என எழுதுகிறார். உலகப் போரின் கண்டுபிடிப்புகள், பின்விளைவுகள், பனிப்போர், நேட்டோ (அதை உருவாக்கியவரும் ஹாரி ட்ருமன்தான்) என ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று எனத் தொடரும் நீர்வளைய விளைவுகள் (ripple effect) முழு அளவிலான அழிவில்தான் நிற்கும். அழிவு முற்றாக நிகழ்ந்த பிறகு அழிவை அறிபவர் என்ற ஒருவர் இல்லாதபோது அழிவு என்பது உண்மையில் நிகழ்ந்ததுதானா?
மனிதர்கள் யாருமே இல்லாதபோது நிலவு என்ற ஒன்று இருக்காதா? இவ்வாறு குவாண்டம் இயற்பியலாளரைப் பார்த்துக் கேட்ட ஐன்ஸ்டினும், ஒப்பன்யெஹ்மரும் சந்திக்கும் காட்சியோடு இப்படம் முடிகிறது. எவ்வாறாயினும் நாம் இருவருமே இதனைத் துவக்கி வைத்துவிட்டோம் என்கிறார் ஒப்பன்யெஹ்மர்.
வழக்கமாக அறிவியலின் பரப்புரையாளராகத் தோன்றும் நோலன் இத்திரைப்படத்தில் அதனை குற்ற உணர்வின் இரட்டைத்தன்மையின் ஆடிகளின் கீழே வைத்துப் பார்க்கிறார். அது துகளாகவும், அலையாகவும் தெரிகிறது எனும் போதும், திரையரங்கை விட்டு வெளியேறுகிறவர்கள் ஆழ்ந்த அமைதியில் வெளியேறுவதைப் பார்த்தேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் வணக்கம்
ஜெய் பீம்: ரத்தமும் சதையும்
சுதந்திரத்தின் குறியீடு மயிர்
4
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.