கட்டுரை, கலை, சினிமா, கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு
ஒரு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் வணக்கம்
நான் அங்கம் வகிக்கும் வாட்ஸப் குழுமம் ஒன்றில் ஒரு நண்பர் இப்படி எழுதியிருந்தார்: “மலையாளிகள் தமிழர்களைப் ‘பட்டி’ என்று அழைப்பார்கள். பட்டி என்றால் ‘நாய்’ என்று பொருள்.” அவர் எழுதியதில் செம்பாகம் சரியானது. அதாவது, இரண்டாவது வாக்கியம்.
நான் 1980களின் பிற்பகுதியில் கொச்சியில் பணியாற்றினேன். அப்போது கட்டுமானப் பணிகளில் திறன் குறைந்த வேலைகள் தமிழர்களுக்குத் தரப்பட்டன. மலையாளிகளில் சிலர் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தமிழர்களைப் ‘பாண்டி’ என்று அழைப்பார்கள். அது மரியாதைக்குரிய விளியல்ல. அது ஒரு குழூஉக் குறி. அதாவது அந்த விளியைச் சபையில் சொல்ல மாட்டார்கள்.
இந்தப் ‘பாண்டி’யைத்தான் நமது வாட்ஸப் புலவர்கள் ‘பட்டி’யாகத் திரித்துவிட்டார்கள். இதைக் குழுமத்தில் தெரிவித்தேன். ஆனால், நண்பர் சமாதானம் ஆகவில்லை. மலையாளிகளுக்குத் தமிழர்கள் மீது மதிப்பு இல்லை என்பது அவரது கருத்து. அதேவேளையில் அவருக்கும் மலையாளிகள் மீது மதிப்பு இல்லை.
வாட்ஸப் உரையாடல் நடந்தது போன வாரம். இந்த வாரம் நான் பார்த்த படம் நண்பருக்கு பதில் சொல்லும் விதத்தில் அமைந்திருந்தது. அந்தப் படத்தின் பெயர் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. கவித்துமான தமிழ்ப் பெயரில் ஒரு மலையாளப் படம். பெயரில் மட்டுமல்ல படத்திலும் கவித்துவமும் தமிழும் ததும்பி நிற்கிறது.
கலைஞன் மம்மூக்கா
கொச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு யாத்திரை வந்த குழுவினர் தாங்கள் அமர்த்திக்கொண்ட பேருந்தில் ஊர் திரும்புகிறார்கள். இப்படிப் படம் தொடங்குகிறது. இவர்கள் எப்படிக் குழு சேர்ந்தார்கள்? அது படத்தின் கடைசிச் சட்டகத்தில்தான் சொல்லப்படும். ஜேம்ஸ் (மம்மூட்டி) குழுவின் ஒருங்கிணைப்பாளன்.
பேருந்து ஒட்டன்சத்திரம் அருகே வயல்களை ஊடறுத்துப் போகிறது. பயணிகள் நண்பகல் நேரத்து உறக்கத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். ஜேம்ஸ் பேருந்தை நிறுத்தச் சொல்கிறான். அருகாமைக் கிராமத்துக்கு நடந்துபோகிறான். அங்கு சுந்தரம் என்பவனின் வீட்டிற்குள் நுழைகிறான். சுந்தரத்தின் கூட்டிற்குள் பாய்கிறான். சுந்தரமும் ஜேம்ஸும் நேர்மாறானவர்கள். ஜேம்ஸ் கொஞ்சம் சிடு மூஞ்சிக்காரன், கருமி, தெய்வ நம்பிக்கை குறைவானவன், குடிப்பழக்கம் இல்லாதவன், கிறிஸ்தவன், மலையாளி. சுந்தரம் தமிழன், இந்து, பக்திமான், ரசிகன், கலகலப்பானவன், கொஞ்சம் குடிக்கவும் செய்வான். மாறுபட்ட பாத்திரங்களில் ஒரே நாயகன் நடித்த எண்ணற்ற இரட்டை வேடப் படங்களைப் பார்த்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் மம்மூட்டியே அப்பாவும் மகனுமாய் நடித்த ‘பரம்பரை’ எனும் மலையாளப் படம் சில நிமிடங்களுக்குப் பேருந்தில் காட்டப்படுகிறது. சிவாஜியின் ‘கௌரவம்’ படத்தில் அப்பாவும் மகனும் சண்டை போடுகிற காட்சி ஒன்றை மதுக்கடையில் அநாயாசமாக நடித்துக் காட்டுகிறான் சுந்தரம். ஆனால், இந்தப் படங்கள் எல்லாம் மிகை நடிப்பால் ஆனவை.
மாறாக ’நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் மம்மூட்டி அடக்கி வாசிக்கிறார். இரண்டு பாத்திரங்களுக்கும் மாறுபட்ட வாய்மொழியையும் உடல்மொழியையும் அவரால் தளும்பாமல் தர முடிகிறது. மம்மூக்கா நம் காலத்தின் ஆகப் பெரிய கலைஞர்களுள் ஒருவர் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபிக்கிறது. என்றாலும் படத்தின் சிறப்பு அங்கே முடிவதில்லை. அது படத்தின் கதையிலும் கட்டமைப்பிலும் விரிகிறது.
கதையை விரிக்கலாம்
ஜேம்ஸுக்குள் சுந்தரத்தின் ஆன்மா புகுந்துகொள்கிறதா? இறந்தவரின் ஆன்மா உயிரோடிருக்கும் ஒருவரின் உடலுக்குள் புகுந்துகொள்ளும் படங்களும் நமக்குப் புதியதல்ல (எ.க: சந்திரமுகி, சீதக்காதி). ஆனால், இதுபோன்ற படங்களில் கதையும் அதன் காரிய காரணங்களும் முழுமையாகச் சொல்லப்பட்டுவிடும். மாறாக நண்பகல் பல சாத்தியங்களை உள்ளடக்கி இருக்கிறது. அவரவர் விருப்பத்துக்கும் ரசனைக்கும் இணங்க விரித்துப் பொருள் கொள்ளலாம்.
சுந்தரம் காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது ஜேம்ஸின் வழியிலான மறுபிரவேசம். இந்தக் காலகட்டத்தில் கிராமம் நிறைய மாறியிருக்கிறது. சுந்தரத்தின் வாடிக்கையாளர்கள் வேறு நபரிடம் பால் வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அவனது நாவிதர் இறந்துவிட்டார். வெட்ட வெளியாகக் கிடந்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. கூட்டுறவு வங்கியில் கடன் கேட்கப்போன சுந்தரம் ஆள்மாறாட்டத்துக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறான். இவை சுந்தரத்தை நிலைகுலையச் செய்கின்றன.
தனது ஆன்மா இனி ஜேம்ஸின் உடலில் தங்க முடியாது என்று சுந்தரம் கருதியிருக்கலாம். கடைசியாக மகள் பரிமாறும் மதிய உணவை உண்கிறான். அது பலிச் சோறாக இருக்கலாம். கூரையின் மீதிருக்கும் ஒற்றைக் காகம் பறந்துபோகிறது. வீட்டிலிருந்து திண்ணைக்கு வருகிறான். அப்போது சுவரில் விழும் நிழல் அவன்கூட வருவதில்லை, வீட்டிற்குள்ளேயே நின்றுவிடுகிறது. இதைச் சுந்தரத்தின் ஆன்மா வீட்டில் தங்குவதாகவும், வெளியேறுவது ஜேம்ஸ் என்பதாகவும் வாசிக்கலாம். இது ஒரு சாத்தியம்.
நடந்தவை அனைத்துமே ஜேம்ஸின் கனவு என்பதாகவும் இந்தப் படத்தை வாசிக்கலாம். முதல் நாள் மொத்தக் குழுவினரும் நண்பகல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது பேருந்தின் ஜன்னல் சத்தத்துடன் கிறீச்சிடுவதை அடுத்துத்தான் சுந்தரம் இடைவழியில் இறங்குகிறான். அவனது ஆழ்ந்த உறக்கமும் கனவும் தொடங்குகிறது. அப்படிக் கருதலாம்.
அடுத்த நாள் முடித்திருத்தும் கடையில் தனது முகத்தைக் கண்ணாடியில் கண்டு சுந்தரம் அதிர்ச்சியடையும் இடத்தில் அதே கிறீச்சிடும் ஒலி வருகிறது. அதாவது, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஜேம்ஸ் எழுந்துகொள்கிறான். இப்படி வாசிக்கலாம்.
இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. அது ‘எல்லாமே நாடகம்’ என்பதாகும். இவர்கள் அனைவரும் சாரதா தியேட்டர்ஸ் எனும் நாடகக் குழுவினர். அது பேருந்தின் முகப்பில் எழுதியிருக்கிறது. அது படத்தின் இறுதிக் காட்சியில்தான் தெரியவரும். படத்தில் அந்தப் பேருந்தும் ஒரு பாத்திரம். ஆனால், அது படம் நெடுகிலும் பக்கவாட்டில் மட்டுமே காட்டப்படும். படத்தில் இன்னொரு சூட்சமமும் இருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளும் நாடக மேடையில் நிகழ்த்தப்படுவதைப் போல் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது காமிரா நிலையாக இருக்கும். கதை மாந்தர்கள் மேடை நடிகர்களைப் போல நகர்ந்துகொண்டிருப்பார்கள். ஒரு நாடகக் கலைஞனான ஜேம்ஸ் ஒரு நாடகமாகவே இந்தக் கதையை நிகழ்த்திப் பார்க்கிறான் என்பதாகவும் இந்தப் படத்தை வாசிக்கலாம். உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்கிற ஷேக்ஸ்பியரின் வசனமும் படத்தில் இடம்பெறுகிறது.
இன்னும் பலவிதமாகவும் இந்தப் படம் வாசிக்கப்படக்கூடும். அதற்கான எல்லா அழகியல் சாத்தியங்களையும் இந்தப் படத்திற்குள் பொதிந்துவைத்திருக்கிறார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி. எனினும் என்னைக் கவர்ந்த அம்சம் இந்தப் படத்தின் கதை ஒரு தமிழ்க் கிராமப் பின்புலத்தில், தமிழர் வாழ்வின் ஊடாகவும் தமிழர்தம் கலைகளின் வாயிலாகவும் சொல்லப்படுகிறது என்பதாகும்.
தமிழ் வணக்கம்
படம் ஒரு திருக்குறளில் தொடங்குகிறது. அது,
உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
ஒரு வகையில் இந்தக் குறளின் விளக்கவுரைதான் படம். சித்தர் மரபை அடியொற்றி கண்ணதாசன் எழுதிய ‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ என்கிற பாடல் பேருந்தில் ஒலிக்கிறது. அது அடுத்து விரியப்போகும் கதைக்களனுக்கு பார்வையாளனைத் தயாராக்குகிறது.
சுந்தரத்தின் வீட்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. அதுவும் படத்தில் ஒரு பாத்திரம். அதன் முன் எந்நேரமும் கால் நீட்டி அமர்ந்திருக்கிறார் சுந்தரத்தின் பார்வையற்ற அம்மா. சுந்தரம் வீட்டிற்குள் நுழைகிறபோது ‘ரத்தக் கண்ணீர்’ படம் ஓடுகிறது. தொடர்ந்து இடம்பெறும் விளம்பரங்களும், பாடல்களும் இன்னபிற படக்காட்சிகளுமே படத்தின் பின்னணி ஒலிக்கோர்வையாக அமைகின்றன.
‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’, ‘பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘இறைவன் இருக்கின்றானா’, ‘வீடுவரை உறவு’ முதலான பாடல்கள் பொருத்தமான இடங்களில் பொருள் சேர்க்கின்றன. இறுதிக் காட்சியில், இரண்டாம் நாள் நண்பகல் உறக்கத்திலிருந்து விழிக்கும் சுந்தரம், ஜேம்ஸாகிவிடுகிறான்.
தன் குழுவினரோடு பேருந்தை நோக்கிப் போகிறான். அந்தக் காட்சி ஓர் ஊர்வலத்தை ஒத்திருக்கிறது. பின்னணியில் ‘கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன’ ஒலிக்கிறது. காணமல்போன சுந்தரத்தின் இறுதி ஊர்வலமாக அந்தக் காட்சியை வாசிக்கலாம்.
ஒரு காட்சியில் இடைநின்றுபோன பேருந்தின் முன் விளையாடும் பிள்ளைகளை அம்மா அதட்டுவாள். இந்த ஊரில் உங்களைப் பிடித்துக்கொண்டுபோய் பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் என்பாள். என் வாட்ஸப் நண்பருக்கு மலையாளிகள் மீது இருக்கும் ஒவ்வாமை, அந்தப் பாத்திரத்துக்குத் தமிழர்களின் மீது இருக்கிறது. இதைத்தான் இயக்குநர் கலைத்துப்போடுகிறார். வேதனை எல்லோருக்கும் பொதுவானதுதானே! படத்தில் இப்படி ஒரு வசனம் வருகிறது. அந்தத் தமிழ்க் கிராமமே மலையாளப் பயணிகளுக்கு ஆதரவாக இருக்கிறது.
அப்போது தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையிலான நீண்ட எல்லைக்கோடு இல்லாதாகிறது. வள்ளுவரும் பட்டினத்தாரும், கண்ணதாசனும் சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் அந்தக் கலைந்த கோடுகளுக்குத் தத்துவார்த்தப் பொருள் தருகிறார்கள். இரண்டு சமூகத்தினரும் சுந்தரமும் ஜேம்ஸும் போல ஒரே உருவத்திற்குள் உறையும் இரண்டு பிரதிமைகள் ஆகிறார்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
சுதந்திரத்தின் குறியீடு மயிர்
லவ் டுடே: அநாகரீகம், ஆபாசம்
காந்தாரா: பேசுவது தெய்வமா, வேஷதாரியா?
4
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Murali Sekar 2 years ago
ஒரு படத்தை அதன் காட்சிகளை திறம்பட வரிசைப்படுத்தி விமர்சனம் செய்யலாம். அல்லது ஒரு புள்ளியில் ஆரம்பித்து விரிவு படுத்தி திரைப்படத்தின் காட்சிகளை கோர்வையாக விமர்சிக்கலாம். இராமநாதன் அவர்கள் இவ்விரண்டு உத்திகளையும் திறமையாக இந்த விமர்சனத்தில் பயன்படுத்தி உள்ளார்! நான் படித்த அளவில் இந்த திரைப்படத்தின் முழுமையான விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும். வாழ்த்துகள்! இப்படத்தின் என்னுடைய விமர்சனம் கீழே. ஒரு சட்டகத்தில் ஆரம்பித்து அதன் விளிம்புகளை தாண்டி எழுதி இருக்கிறேன். படித்து பாருங்கள்: From Murali From a Psychiatrist's Diary Saturday, 4 March 2023 நண்பகல் நேரத்து மயக்கம் - சட்டகத்துக்கு அப்பால் நண்பகல் நேரத்து மயக்கம் - சட்டகத்துக்கு அப்பால் நீங்க வீட்ல உட்கார்ந்திட்டு இருக்கீங்க. அப்போ உங்க வளர்ப்பு நாயோ பூனையோ அது பாட்டுக்கு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம தலை கீழ நடந்து போகுது. இல்ல உங்களோட ஹால்ல இருக்கற சோஃபா திடீர்னு காத்துல மிதக்கற மாதிரி ஒரு ஓரடி உயரத்துல பறந்த மாதிரி இருக்குதுன்னு வெச்சுக்கோங்க உங்களுக்கு உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும். ஏன்னு குழம்புவோம். பயப்படுவோம். நார்மல் நிலைமைக்கு கொண்டு வர்றதுக்கு முடிஞ்சதெல்லாம் செய்வோம் இல்லையா? இந்த படத்துலயும் அது தான் நடக்குது. வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்கு வேண்டா வெறுப்பா வேஷ்டிய கட்டிக்கிட்டு வந்த ஒரு மலையாளத்தான் ( அப்படித்தாங்க மம்மூட்டியே இந்த படத்துல சொல்லுவாரு!). அவருக்கு திருவள்ளுவர் யாரூனோ திருக்குறள் அர்த்தமோ தெரியாது. ஏன் தமிழே தெரியாது. தமிழ்நாட்டுல வண்டி ஓட்றவங்கள்லாம் நேரா வந்து அடிச்சி தள்ளிட்டு போயிட்டே இருப்பாங்கங்கற மாதிரியான அந்நிய மாநிலத்தை பற்றிய அர்த்தமில்லாத பயத்தோட தான் தன் தேசத்துக்கு திரும்ப போய்ட்டிருப்பாரு. தமிழ் சாப்பாடு பிடிக்காது, பாட்டு பிடிக்காது, கூட வந்தவங்கள பிடிக்காது, பொண்டாட்டியோட முழங்கால் வலி பிடிக்காது இப்படி எதுவுமே பிடிக்காத மனிதன் இறப்பை (சாக்காடு) போன்ற தூக்கத்தில ( உறங்குவது போலுஞ்) இருந்து எந்திரிச்சி தன் மலையாள முகமூடியை மறந்துவிட்டு வந்து விழுந்த தமிழ் முகமூடியை தன் மேல ஒட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்ங்கறது தான் படம். நாமளே தினமும் இந்த மாதிரி நிறைய முகமூடிய போட்டுக்கிட்டு தான் இருக்கோம். வேலை செய்யும்பொழுது நாம செய்யற வேலைக்கு தகுந்த மாதிரி, நண்பர்கள்கிட்ட ஒரு மாதிரி, வீட்ல ஒரு மாதிரி இப்படி பல வேஷங்கள். பல முகமூடிகள். ஆனா இது எல்லாமே அடிப்படையா இருக்கற ஒரே ஒரு நபர்கிட்ட இருந்து தான் வெளிப்படுது. ஒரு மனிதன். அவனிடமிருந்து பல முகமூடிகள். அதிலிருந்து பல வேஷங்கள். அதையே லிஜோ இந்த படத்துல கொஞ்சம் விரிவு படுத்தி ஒரு மனிதனும் அவனோட பல வேடங்களும்ங்கறத extend பண்ணி ஒரு மனிதன் அவனின் முகமூடிகள் என்பதோடு அவனே இன்னொரு மனிதனாகி அந்த புதிய மனிதனுக்கு பல வேடங்கள் இருந்தா என்னாகும்ங்கறது இந்த படத்துல காட்டப்பட்டிருக்கு. சட்டகம் அதாவது frame இந்த படத்துல ரொம்ப நல்லா உபயோகப்படுத்த பட்டிருக்கு. லிஜோ இத அவரோட எல்லா படத்துலயும் நல்ல பயன் படுத்தி இருப்பார். ஆனா இந்த படத்துல இதோட வீச்சு இன்னும் அதிகமா இருக்கு. ஒரு ஸீன் . Static camera ! லெஃப்ட் சைட்ல ஒரு ஜன்னல் வழியா தமிழக குடும்பமும் வலது கை பக்கம் இன்னொரு சட்டகத்துல கேரள குடும்பமும் இருக்கற மாதிரி எடுத்திருப்பாரு. அதாவது ஒரு பக்கம் அந்த மனிதனின் ஒரு சட்டகம் அவனுடைய ஒரு personality அதோட சேர்ந்த representations. இன்னொரு பக்கம் இன்னொரு சட்டகம் அதுல அவனுடைய இன்னொரு personality மற்றும் அதோட representations ! இதை பாக்கறப்போ நமக்கு என்ன தோணும்னா ஒரு மனிதன் ஒரு சட்டகம்ங்கற வரையறைய உடைக்க முடியும்னா ஏன் ஒரே ஒரு சட்டகத்தோட நிறுத்திக்கணும். இன்னும் பல சட்டகம் உருவாக்கலாம் இல்ல அப்படீன்னு தோணும் இல்லையா. அதையும் லிஜோ பண்ணி இருக்காரு. சந்தை கூடத்துல பல பேருக்கு முன்னால நின்னுக்கிட்டு கதையடிக்கற கேரக்டர் இன்னொரு சட்டகம் அதிலொரு மனிதன் அதன் வரையறைகளும் மாந்தர்களும். நைட்டு தண்ணி அடிக்கிற வைன் ஷாப்ல சககுடிகாரர்கள் புடை சூழ இன்னுமோர் சட்டகமும் அதிலொரு மனிதனும் அதன் வரையறைகளும் மாந்தர்களும்ன்னு இப்படி நிறைய. படம் முழுக்க. ஒரு சில பிம்பங்கள் கோட்ட தாண்டாம இருக்கும் அதுனால அவனுக்கு பெரிய குழப்பமோ சோதனையோ அந்த சட்டகத்துல இருக்காது. ஆனா ஒரு சிலதுல இந்த கோட்ட தாண்டும்பொழுது தன் முகத்தையே குழப்பத்துடன் நோக்கும் வேறொரு முகம் தாங்கிய கண்ணாடியாகவும், ஸ்டாம்ப் பேப்பர்ல கையெழுத்து போட்டு கவர்மெண்ட் ஆஃபீஸ்ல கடன் கேக்குற போது அடிச்சி நீ யாருடான்னு கேக்கற ஆளாகவும் மாறும். அப்போ தான் இந்த கோட்ட தாண்ட கூடாதுன்னு நமக்கு உரைக்கும். அதனால இது மாதிரியான அத்து மீறல்களை தவிர்த்தோம்னா நாமளும் எடுத்த சட்டகத்துக்குள்ள ஆட்டம் போட்டுட்டு பல சட்டகங்களை கட்டி ஆண்டு கொண்டும் போய்க்கிட்டே இருக்கலாம். இந்த சட்டகம் நிறைய வருது இந்த படம் முழுக்க. மொட்ட வெய்யிலு! கேமரா வீட்டுக்குள்ள இருக்க அதுக்கு முன்னால நிழலா சில மனித உருவங்கள் இருட்டா இருக்கற வீட்டுக்குள்ள. வெளிய கேரக்டர் TVS 50 ஒரு ஜன்னல தாண்டி அப்புறம் கதவை தாண்டி அப்புறம் இந்த பக்கம் இருக்கற ஜன்னல் தாண்டின்னு போயிட்டே இருக்கு. அதாவது நமக்கு வெளிச்சம் போட்டு காட்ட படறதுனால தெரியற காரெக்டர்ஸ் ரெண்டு தான்1 ஆனா அவனோட மனசுக்குள்ள இருக்கற இருட்டுக்குள்ள நிழலா பிம்பமா பல காரெக்டர்ஸ் இருக்குங்கறது தான் இதுல சொல்ல வந்திருக்குன்னு நினைக்கிறேன்! இந்த மாதிரியான பல நிழல்கள் நம்ம எல்லாத்துக்குள்ளையும் இருக்குது அப்படிங்கறது தான் இந்த படத்தோட நம்மள ஓட்ட வைக்கிற விஷயம்! நாம இப்படி சட்டம் சட்டமா தாண்டி ஒடினோம்னா நம்ம கூட சேர்ந்தவங்க பின்னாலயே ஓடி வருவாங்க இந்த படத்துல வர்ற மாதிரி. TVS 50 ல இந்த பக்கம் போகும் போது கேரள வாழ்க்கையும் அதன் பிம்பங்களும் துரத்துது. டக்குனு திரும்பி அந்த பக்கம் போனா அங்குட்டு தமிழ்நாட்டு வாழ்க்கை அதோட பிம்பங்களோட தொரத்துது. தொரத்தறது தெரியாம TVS 50 ய அதாங்க வாழ்க்கைய ஓட்டணும். தெரிஞ்சா தெளிஞ்சிடும்! தெளிஞ்சா குழம்பிடும் ! எல்லாமே முடிஞ்சிடும்! தூக்கம் கலைஞ்சிடும்! ஆனா இது மாதிரி ஆகாம படம் முழுக்க ஒரு மயக்க நிலையிலேயே இருக்கறதுனால முடிஞ்ச அளவுக்கு நண்பகல் நேரத்துல இந்த படத்தை பாக்காதீங்க. படத்துல எங்கயாவது தொலைஞ்சி போயிடுவீங்க! இல்லன்னா முழுச்சிக்குவீங்க! இந்த மலையாள படத்துல மம்மூட்டிக்கு இணையான ஹீரோன்னா தமிழ் படம் தான். தமிழ் படத்து ஸீனு பாட்டுன்னு அது பாட்டுக்கு நாய்க்குட்டி மாதிரி ஒரு ட்ராக்ல கூட வந்துட்டே இருக்கும். ஒரு சில இடத்துல ட்ராக் ரெண்டும் ஒத்து போகும். ஆனா நிறைய இடத்துல அபத்தம் தான். தமிழ் சினிமாவுக்கே உண்டான அபத்தம். தமிழ்நாட்டு வாழ்க்கைல சினிமாவால நடக்கற அபத்தம். இதை சரியா காட்டி இருக்காரு லிஜோ. கண்ணு தெரியாத பாட்டி கெக்கே பிக்கேன்னு சம்பந்தமே இல்லாம சிரிக்கற இடம் எல்லாம் நாமளும் ஒண்ணா கலந்து கெக்கே பிக்கேன்னு ஆகிட்டு இருப்போம். வேதாந்தத்துல ஒரு கருத்து இருக்கு. நீங்க எல்லாத்தையும் மறுத்து கிட்டே வந்தாதான் எல்லாத்துக்கும் முதன்மையான உண்மை பொருள அடைய முடியும்ங்கறது தான் அது. நமக்கு அதிகமா அறிவுகள் வர வர தேவை இல்லாம குழப்பிக்கிட்டு காண வேண்டிய ஆதி உண்மைய உணராம போயிடுவோம். இந்த படத்துல ஐந்தறிவு படைத்த நாயும் கண் பார்வை இழந்த அம்மாவாலயும் தான் உருவம் மாறிய ஆனா குணம் மாறாத மனிதரை ஏத்துக்க முடியுது. அதிக அறிவு அதிக தடங்கல் ஆதி அந்தத்த கண்டு பிடிக்க! உண்மையான அன்பை உணர! இல்லனா தமிழ்நாட்டு மனைவி மாதிரி நடந்துக்கோங்க. 'ஆளு வேற மாதிரி தான் இருக்காரு ஆனா அவர் மாதிரியே பேசறாரு நடந்துக்கறாரு அதுக்கு மேல என்ன வேணும்' அப்படீன்னு. படத்தோட கடைசி ஸீன் . வேன் போகுது அந்த பிரதான கதா பாத்திரத்தை ஏந்தியபடி அதன் சகபாடிகளுடன்! ஒரு அரங்கத்தை அதன் சட்டகத்துக்குள் முடித்த பின் வேறொரு தளத்தை நோக்கி! ஒரு நாடக கம்பெனி தன்னோட கூடாரத்த தூக்கி கிட்டு போற மாதிரி! எங்கே எந்த இடத்தில தடை படுமோ அதன் பயணம்! யாருக்கு தெரியும்! இந்த படத்தை பாக்கும்பொழுது ஒன்னே ஒன்னு தான் உங்க கிட்ட கேட்டுக்குவேன். இப்படியெல்லாம் நடக்குமா, மம்மூட்டிக்கு பேய் பிடிச்சிடுச்சா இல்ல இது கனவா அப்படீங்கற உங்களுடைய சட்டகத்தை ஒரு பக்கமா வெச்சிட்டு அதையெல்லாம் தாண்டி படத்தை பாருங்க. டைரக்டர்க்கு மரியாதை குடுத்து அவரோட சட்டகத்தை எல்லாம் மீறிய பயணத்த அவர் கூடவும் அந்த கேரக்டர்களோடையும் பயணிங்க ! ஒரு புது அனுபவத்த அடைங்க! http://muralisekar.blogspot.com Murali at 12:41 Share No comments: Post a Comment › Home View web vers About Me Murali View my complete profile Powered by Blogger.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Cdr k chinnaiya 2 years ago
படம் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லாத என்னை படம் பார்க்க தூண்டியது இந்த கட்டுரை படம் பார்க்கும்போது மனதில் பளீர்என்று உரைத்தது கட்டுரை ஆசிரியரின் கூர்ந்து அறியும் திறன். Observing power.. வியக்க வைக்கும் திறமை.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Cdr k chinnaiya 2 years ago
நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. எனினும் ஆசிரியரின் இந்த அருமையான கட்டுரையை படிக்கும் பொழுது ஒரு கடினமான செய்யுளுக்கு ஒரு நல்ல விளக்க உரையை படித்தது மற்றும் . படத்தோடு பயணிப்பது போன்ற உணர்வு வருகிறது. அழகிய தமிழ் தெளிவான நடையுடன் உள்ள ஒரு அருமையான கட்டுரை படித்த முழு திருப்தி வருகிறது வாழ்த்துகள் ஆசிரியரே எழுதிக் கொண்டே இருங்கள்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.