கட்டுரை, கலை, சினிமா, புத்தகங்கள் 3 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்: ரத்தமும் சதையும்

பயணி தரன்
11 Feb 2023, 5:00 am
1

நாங்கள் இந்த முறை தில்லியிலிருந்து சென்னைக்குப் போகும்போது, வேண்டும் என்றே ரயிலில் — அதுவும் இரண்டு இரவுகளும் ஒரு பகலுமாக 2,000 கிலோ மீட்டருக்கு மேல் ஓடும் ரயிலில் — பயணித்தோம். பார்க்கவும் படிக்கவும் நிறையவே இருந்தது. இந்தப் பயணத்தில் நான் வாசித்தது ‘ஜெய் பீம்’ நூல். த.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ‘ஜெய் பீம்’ படத்தின் திரைக்கதை வசனத்தின் அச்சு வடிவம்; கூடவே அது சம்பந்தமான அந்தப் படக் குழுவினரின் விரிவான உரையாடல்.

நூலின் அட்டையிலேயே ‘ஜெய் பீம் - திரைக்கதை, வசனம், பாடல்கள், உருவாக்க அணியினரின் கலந்துரையாடல், சந்துரு, சூர்யா, ஞானவேல் பிரத்யேக பேட்டிகளுடன்’ என்று உள்ளடக்கத்தையும் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். 

ஞானவேலுடனான சந்திப்பு

நூலை வாசிக்க எடுக்கும்போதே எனக்கு இயக்குநர் ஞானவேலுடன் நடந்த ஒரு சந்திப்பு நினைவுக்கு வந்தது.

ஞானவேல் ‘ஆனந்த விகடன்’ மாணவப் பத்திரிகையாளராக இருந்தவர். நான் ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர்’ திட்டத்தின் 1984இல் உருவான முதல் அணியின் மாணவன். ஆகவே, ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்’ பலருடன் பழகும் நல்வாய்ப்பு எனக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது.

நான் தில்லியிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் ஒருமுறை சென்றிருந்தபோது ஞானவேல் சந்திக்க விரும்பினார். நாங்கள் திருவல்லிக்கேணியில் சிற்றுண்டி சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சூர்யாவின் ‘அகரம்’ அமைப்புதான் முக்கிய உரையாடல் விஷயமாக எங்கள் இடையே இருந்தது. நான் சொன்ன முக்கிய கருத்து: “அகரம் மாணவர்களைப் படிக்கவைத்து வேலைக்கு அனுப்பும் சிறந்த செயலுடன், அவர்களை முடிவெடுக்கும் அதிகாரம் தரும் பொறுப்புகளில் அமர்த்தினால் சமூக மாற்றத்திற்கான பழம் தரும் மரங்களாக அவர்கள் செயல்படுவார்கள்.”

இதுபோக, ஞானவேல் திரைப்படம் பற்றியும் பேசினார். ‘கூட்டத்தில் ஒருவன்’ என்று ஒரு படம் இயக்கப்போவதாகச் சொன்னார். அவரது சமூகப் பார்வையின் அரசியல் தெளிவும், அது கலையில் செயல்படும் வகை பற்றிய கூர்மையும் பேச்சில் வெளிப்பட்டன. அந்தக் கூறுகள் இணைந்து வெளிப்பட்ட படமாக ‘ஜெய் பீம்’ படம் அமைந்திருந்தது; அப்படி எப்படி ஒரு படம் திகைந்து வந்தது என்பது இந்த நூலில் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. 

‘ஜெய் பீம்’ நூலைக் கையில் எடுத்ததுமே அந்த நூலின் பதிப்பின் தயாரிப்புத் தரம் என்னை வெகுவாக ஈர்த்தது. கெட்டி அட்டை, தெளிவான, கவர்ச்சியான அட்டை வடிவமைப்பு, நூலின் புதுமையான உள்ளடக்கத்தைத் தெளிவுபடுத்தும் அட்டைப்பட வரிகள், ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளிவந்தபோது வெளியான குறிப்பிடத்தக்கப் பாராட்டுகள், ஞானவேல் பற்றிய சுருக்கமான அறிமுகம் என்று பல விஷயங்களை அட்டையும் பின்னட்டையும் செய்கின்றன.

நூலின் உள்ளே முதலில் நம் கண்ணில் படுவது ஓர் ஓவியம். ‘ஜெய் பீம்’ படத்தின் கடைசி காட்சியில் குட்டிப் பெண் அல்லியும் சந்துருவைப் போலவே கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து செய்தித்தாள் படிப்பதான ஓவியம். பின்னணியில் செய்தித்தாள் படித்தபடி இவர்களைத் திரும்பிப்பார்க்கும் அம்பேத்கர். நூலுக்குப் பொருத்தமான வாசல்.

நூல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

இந்த நூல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொல்ல வேண்டும். ‘ஜெய் பீம்’ நூலானது ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை மட்டும் அச்சில் தரும் ஒன்றாக இருந்தால், அது ஒரு பெரிய விஷயம் கிடையாது. திரைக்கதையை எழுத்தில் வாசகர்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் அளிப்பது பரவலாக நிகழ்வது. தமிழிலும் ‘பராசக்தி’, ‘திருவிளையாடல்’ காலத்திலிருந்து திரைக்கதை வசனப் புத்தகங்கள் பிரபலம். நான் தமிழிலேயே பன்னாட்டுத் திரைப்படங்களின் திரைக்கதைகளையும் படித்திருக்கிறேன். செர்ஜி ஐசென்ஸ்டீன் இயக்கிய ‘பேட்டில்ஷிப் பொதெம்கின்’ (Battleship Potemkin - 1925), விட்டோரியோ டி சிகா இயக்கிய ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ (Bicycle Thieves - 1948) போன்ற படங்களின் திரைக்கதை நூல்கள் உடன் நினைவில் வருகின்றன. அந்த வகையில் திரைக்கதை - வசனத்தை மட்டும் கொண்டிருந்தால் ‘ஜெய் பீம்’ நூல் நமது இந்த மரபின் தொடர்ச்சியாக மட்டுமே எஞ்சி இருந்திருக்கும்.

ஆனால், திரைக்கதை - வசனம், பாடல்கள் போக, படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற தயாரிப்பாளர்கள், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நிஜ கதாநாயகரான நீதிபதி சந்துரு என்று பலரின் நேர்காணல்களும் உரையாடல்களும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் தனித்துவம். அந்த வகையில் ‘ஜெய் பீம்’ நூல் நம்மிடம் ஏற்கெனவே உள்ள மரபைக் கொஞ்சம் முன்நகர்த்துகிறது. இதுபோல் ஒரு திரைக்கதை நூலைத் தமிழில் (இருக்கலாம்) நான் வாசித்தது இல்லை.

எங்கள் வீட்டில் உள்ள சில திரைப்படங்களின் டிவிடிக்கள் நினைவுக்கு வருகின்றன.

ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்கு ‘ஸ்பெஷல் எடிஷன் டிவிடி’ என்று ஒரு மரபு உண்டு. இரண்டு டிவிடிகளைக் கொண்ட பெட்டிகளாக (கொஞ்சம் அதிக விலைக்கு) இவை விற்பனைக்கு வரும். இவற்றில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கும். அந்தத் திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்றவர்கள் நேர்காணல்கள், உரையாடல்கள் எல்லாம் காணொளிகளாக  இருக்கும்.  இவையெல்லாம் கூடி அந்தப் படத்தை சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கிற அனுபவத்தை இது கொடுக்கும். 

பட இயக்குநரின் காமென்டரி ஆடியோவைக் கேட்டபடி அந்தப் படம் முழுவதையும் பார்க்கலாம். ரன்னிங் காமெண்டரிபோல அவர் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியில் நடந்த விஷயங்களை, சிந்தனைகளைச் சொல்லிக்கொண்டே போவார். இதேபோல நடிகர்கள் பேசிய முழு படத்தின் காமென்டரியும் இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென்’ (No Country for Old Men), ‘த போர்ன் அல்டிமேட்டம்’ (The Bourne Ultimatum), ‘ராட்டடூயி’ (Ratatouille) போன்ற படங்கள் ஒவ்வொன்றையும் நான் இருபது முப்பது முறை பார்த்திருப்பேன் என்றால் அவற்றில் பாதிக்குப் பாதி இந்த காமெண்டரி திரையிடல் காட்சிகளாகத்தான் இருக்கும்.

எனக்கு ‘ஜெய் பீம்’ நூலை வாசித்தது அப்படியான அனுபவமாக இருந்தது. திரைக்கதையைத் தாண்டிய ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தையும் அதன் பின்னணியில் உள்ள  சிந்தனைகளை இவ்வளவு விரிவாகப் பதிவுசெய்த வகையில் தமிழில் இந்நூல் தனக்கென்று ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

அபூர்வ ரசவாதம்

சூர்யாவின் நேர்காணலில் முக்கியமான அம்சமாக அவர் ஒரு குடும்பத்தின் உறுப்பினராகச் சொல்லியிருக்கும் விஷயங்கள் சுவாரஸ்யப்பட்டன. அவரது மனைவி நடிகர் ஜோதிகா, ‘சூரரைப் போற்று’ படத்தைவிட ‘ஜெய் பீம்’ நன்றாக இருப்பதாக சூர்யாவிடம் சொல்கிறார். சூர்யாவின் பதின்ம பருவத்து மகள், “போலீஸாக நடித்துக்கொண்டிருந்த நீங்கள் நேர் எதிரான ஒரு கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இருக்கிறீர்கள். இந்தப் படத்துக்காக உங்களை மெச்சுகிறேன்” என்று சூர்யாவிடம் சொல்கிறார். ஒரு கலைஞரின் செயல்பாடுகள் அவருடைய குடும்பத்தில் எப்படிப் பார்க்கப்படுகின்றன என்பதையும் ஒரு கலைப் பயணம் எப்படியெல்லாம் மாறிக்கொண்டேவருகிறது என்பதையும் சூர்யாவின் பேட்டி விரிவாகச் சொல்கிறது. 

நூலில் உள்ள ஞானவேலின் நேர்காணலும் முக்கியமான பதிவு. ‘ஜெய் பீம்’ போன்ற படத்துக்கு சூர்யா போன்ற ஒரு பெருநட்சத்திரம் தேவையா என்ற கேள்விக்கு அவருடைய பதிலில் வெளிப்படும் நேரடித்தன்மையும் நடைமுறை வாழ்வு தொடர்பான புரிதலும் அவருக்குள்ள  அரசியல் தெளிவும் மெச்சக்கூடியவை. அதாவது, “சூர்யா மாதிரி புகழ்பெற்ற நடிகர் இல்லையென்றால், இந்தப் படத்தில் இப்படி ஒரு நீதிமன்ற அரங்கை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைப்பது பற்றி நீங்கள் கற்பனையே செய்ய முடியாது. இப்படிப் பல முடியாதுகளை நான் சொல்வேன். ஒரு பெருநட்சத்திரம் படத்துக்குள் வருவதால் பல விஷயங்கள் சாத்தியமாகின்றன” என்றார் ஞானவேல். சமரசமும், நெகிழ்வுத்தன்மையும் இரு தரப்பு உரையாடலின் முக்கியமான பகுதி என்கிறார். 

என்னதான் படத்தில் பார்த்திருக்கிறோம் என்றாலும், ‘ஜெய் பீம்’ திரைக்கதை - வசனங்களை எழுத்து வடிவில் வாசிக்கும்போது, ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் அரசியல் தெளிவு நம் முகத்தில் அறைகிறது. இதுதான் இந்தத் திரைக்கதையின் அடிநாதம். ஆனால், அது வெறும் வறட்டுத்தனமான பிரசாரமாகத் திமிர்ந்துவிடாமல் கதாபாத்திரங்களின் ஒருமை கெடாத அளவில் உள்ளே அமைந்திருப்பதை வசனங்களில் பார்க்க முடிகிறது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ ஏன் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பதைச் சொல்லும் காரணங்கள் இந்த நூலை நிதானமாக வாசிக்கையில் கிடைக்கின்றன.   ஆவணப் படமாகவோ அல்லது சூப்பர் ஹீரோ படமாக எந்த இடத்திலும் திசை மாறிவிட்டிருக்கும் அபாயம் கொண்ட, பல கிளைகளைக் கொண்ட ஒரு மிகச் சிக்கலான சமூகப் பிரச்சினை சார்ந்த கதையை எப்படி சமநிலையோடு கொண்டுசென்றிருக்கிறார்கள் என்பது உண்மையாகவே பாராட்டுக்கு உரியது ஆகும்.  அசல்தன்மையைக் கெடுத்துவிடாமல், திரைப்படக் கலையின் அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு நட்சத்திர நடிகரை உள்ளே வரவழைத்து சுவாரஸ்யமான கதை சொல்லலையும் கதாபாத்திரங்களின் வளர்ச்சியையும் கொண்டுவந்து அப்படியும் இந்தப் படத்தின் அடிநாதமான அரசியல் தெளிவை முன்வைப்பது ஓர் அபூர்வமான ரசவாதம். அது நடந்திருப்பது இந்தத் திரைக்கதை அமைப்பின் வழியாகத்தான். அடிக்கோடிட்டுப் படித்து ரசிக்க வேண்டிய விஷயம் இது.

பொக்கிஷமான நேர்காணல்கள்

கதை சொல்லும் விஷயத்திலும் பல சிக்கல்களை அழகுடன் கடந்திருக்கிறது திரைக்கதை. எடுத்துக்காட்டாக, துப்பறியும் அம்சங்களில் எப்படி ஒரு தகவல் யார் மூலம் எப்போது வெளியாகிறது என்பதும் அதில் பார்வையாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதும் கதைசொல்லலில் முக்கியமான அம்சங்கள். ‘ஜெய் பீம்’ படத்தின் சுவாரஸ்யம் கூடுவது இந்தக் கட்டங்களில் திரைக்கதை அமைப்பில் தெரியும் காலம் எனும் அம்சத்தைக் கையாண்டிருக்கும் முதிர்ச்சிதான்.

திரைக்கதைக்குப் பிறகு அந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுடனான நேர்காணல்கள் தித்திக்கின்றன. அதிலும், இப்படத்தின் நடிகர்கள், இருளர் சமூக மக்களுடன் பல மாதங்கள் தங்கியும் உணவு உண்டும், வேலை செய்தும் பேசியும், பயிற்சி பெற்ற விஷயங்களை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

நூலின் கடைசியில் வரும் நீதிபதி சந்துருவின் நேர்காணல் ஒரு பொக்கிஷம். இந்த வழக்கு ஆரம்பித்த காலத்திலிருந்து இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர்தான் அவர் இந்தப் படத்தைப் பார்த்தார் என்பதுவரை சொல்லப்பட்டனவும் கொள்ளப்பட வேண்டியனவும் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் அவர் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லி முடிக்கிறார்.

சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஒரு பழங்குடி இனப் பெண் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடிப் பார்த்து, சோர்ந்துபோன கணத்தில் ‘ஜெய் பீம்’ படம் பார்த்திருக்கிறார். சந்துரு அவர்களை அவர் வந்து சந்திக்க, மீண்டும் போராட்டம் உயிர்ப்புப் பெறுகிறது. ஜனநாயக மாதர் சங்கம் அவருடன் களம் இறங்குகிறது. தன் ஊரிலிருந்து சந்துருவுக்குக் கடிதம் எழுதும் அந்தப் பெண் சொல்கிறார்: “எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியாது. தோல்வி கிடைத்தால் அது என்னுடைய தவறு அல்ல, இந்த அமைப்பின் தவறு. நீதிக்குப் போராடுவதே என்னுடைய வெற்றி.”

இதைத் தொடர்ந்து நீதிபதி சந்துரு இப்படி முடிக்கிறார்: “இதுதான் ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்று நினைக்கிறேன்!” 

தமிழ் கடந்து செல்ல வேண்டிய நூல்

ஒருவகையில், ‘ஜெய் பீம்’ படம் பார்த்த பிறகு நமக்கு வரும் ரௌத்திரமும் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் இந்த நூலைப் படித்த பின்னும் வருகின்றன.

நூலை உருவாக்கிய பத்திரிகையாளர் சமஸ், ‘அருஞ்சொல்’ குழுவினர், இயக்குநர் த.செ.ஞானவேல், தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்குரியவர்கள்.

தமிழ் அல்லாத பிற மொழிகளிலும் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம்போல, இந்த நூலும் ஆங்கிலம் மற்றும் இன்னபிற இந்திய  மொழிகளில் வெளியாக வேண்டும்! 

நூல் விவரங்கள்

ஜெய் பீம்
திரைக்கதையும் உரையாடலும்

ஆசிரியர்: த.செ.ஞானவேல்

தொகுப்பாசிரியர்: சமஸ்

விலை: ரூ. 500-

அருஞ்சொல் வெளியீடு, சென்னை.
செல்பேசி: 63801 53325

- நூலை வாங்கும் விவரங்கள் -

த.செ.ஞானவேலுவின் ‘ஜெய் பீம்’ நூலைத் தனித்தும் வாங்கலாம்; அந்தத் திரைப்படத்தின் நிஜ நாயகரான நீதிநாயகம் கே.சந்துருவின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலுடன் இணைத்தும் வாங்கலாம். அப்படி சேர்த்து வாங்கினால், ரூ.1,100 விலை கொண்ட இரு நூல்களையும் ரூ.1,000 விலையில் தனது அஞ்சல் செலவிலேயே அனுப்பிவைப்பதுடன் கூடவே ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ் எழுதிய ரூ.150 விலை கொண்ட ‘லண்டன்’ நூலையும் பரிசாக அனுப்புகிறது ‘அருஞ்சொல்’. வீட்டிலிருந்தபடியே வாட்ஸப் வழியே செய்தி அனுப்பி, ஜிபே செய்து, கூரியர் மூலம் நூப் பெறலாம்.
வாட்ஸப் எண்: 63801 53325. நூலை வாங்கும் விவரம் கீழேயுள்ள படத்தில் விரிவாக உள்ளது! 

பயணி தரன்

பயணி தரன் எனும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் மதுசூதனன், இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக இருக்கிறார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார். கலை, இலக்கியம், சமூக நீதி, தன்மேம்பாடு தொடர்பில் எழுதுகிறார். தொடர்புக்கு: http://linktr.ee/payanidharan


1

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

மு.இராமநாதன்   4 months ago

படத்திலும் நூலிலும் உள்ள தெளிவு இந்த மதிப்புரையிலும் துலங்குகிறது. நன்குடையான் கட்டே தெளிவு.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

நுரையீரல்லலிதா ராம் கட்டுரைநபர்வாரி வருமானம்கோவை கார் வெடிப்புச் சம்பவம்தணிக்கைக் குழுசதைகள்தேவாலயம்வி.பி.மேனன்இமையம் பேட்டிதேர்தல் சீர்திருத்தம்கொலைகள்சமஸ் - ஜக்கி வாசுதேவ்அத்துமீறல்கள்அரவிந்தன் கட்டுரைகோபாலகிருஷ்ண காந்தி கட்டுரைமோடி - அமித்ஷாஆசை பேட்டிலாபமின்மைஆசுதோஷ் பரத்வாஜ்நீதிபதி!கள ஆய்வாளர்சின்னம்தமிழ் ஒன்றே போதும்நகர்மயமாக்கல்பெரியாறு அணைஹியரிங் எய்டுசோழர்கள் இன்று...கொல்கத்தாகாமாக்யா கோயில்தொங்கு பாலம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!