கோணங்கள், கலை 6 நிமிட வாசிப்பு

வசீகரமான நவீன கட்டிடங்களைக் கட்டிடுமா தமிழ்நாடு அரசு?

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
29 Oct 2021, 5:00 am
3

மிழகத்தின் வசீகரமான அரசுக் கட்டிடம் என்று எதைச் சொல்வீர்கள்?

நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, அவர்களால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை. "கடந்த அரை நூற்றாண்டில் தமிழக அரசு எழுப்பிய கட்டிடங்களில்...?" எனக் கேட்டால், ஒரு சிலர் வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், டைடல் பார்க், பின்னர் பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்ட புதிய சட்டமன்றக் கட்டிடம் என்று பதில் சொன்னார்கள்.

எனக்குத் திருப்தி இல்லை. ஏனென்றால், இவற்றைத் தவிர தமிழக அரசு கட்டிய ஆட்சியரகங்கள், நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள், காவல் துறைக் கட்டிடங்கள், அலுவலகங்கள், நினைவகங்கள் எல்லாமே பெரும்பாலும் ‘அழகானவை’ என்ற வரையறைக்குள் வருபவை அல்ல. நின்று பார்த்து வியப்பதற்கோ, வடிவமைப்பைக் கண்டு மலைப்பதற்கோ, அழகியல் நுகர்விற்கோ எத்தனை கட்டிடங்கள் இடம் தரும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா?

அழகியலை விடுங்கள்; அதற்கெல்லாம் சமூகத்திற்கு என்று கனவுகள் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்காவது உகந்தவையா? சென்னை, கோவை, மதுரை, தஞ்சை என நான் பார்த்த நகரங்களில் பெரும்பான்மைக் கட்டிடங்கள்  சுற்றுச்சூழலை மனதில் வைத்துக் கட்டப்பட்டதில்லை. தனியார் கட்டிடங்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

சமூகமும், அரசும் தங்களை எதிர்காலத்திற்குச் செல்லக் கூடியவர்களாகக் கருதவில்லை என்றால், அப்படியொரு சிந்தனையே வராது. உலகத் தமிழாராய்ச்சிக் கட்டிடத்தைப் பாருங்கள். ஏற்கனவே கிழடு தட்டிப்போயிருக்கும் தமிழ் ஆய்வைப் போலவே, கட்டிடமும் கிழடாகவே கட்டப்பட்டிருக்கிறது. வெறும் பயன்பாட்டைக் (utility) கருதி மட்டுமே கட்டப்பட்டதாக அல்லாமல், அவை சமகாலச் சிந்தனைகள், தத்துவங்கள், ரசனைகளை உள்வாங்கியவையாக இல்லை. சிமென்டாலான அக்கட்டிடங்களைப் பார்த்தால், பெருமிதமோ, கர்வமோ, வியப்போ உண்டாவதில்லை. இத்தனைக்கும், இவையெல்லாம் பலநூறு கோடிகளில் கட்டப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எது வசீகரமான கட்டிடம்?

எவை வசீகரமான கட்டிடங்கள் என்பதை எவற்றைக் கொண்டு தீர்மானிப்பது? அழகியல் பார்வை நிச்சயம் ஒருவருக்கொருவர் மாறுபடக் கூடியதே. ஆனால், கட்டிடம் ஒன்றைப் பார்ப்பவரைக் கனவில் ஆழ்த்தும் வகையில் கட்ட நிச்சயமாக முடியும்.  அல்லது ஒரு கோட்பாட்டை முன்வைப்பதும் சாத்தியமே. உதாரணத்திற்கு லாரி பேக்கர் கட்டிடங்களை எடுத்துக்கொள்வோம். அவை உள்ளூர் வளத்தை மட்டுமே பயன்படுத்துவதென்ற தத்துவத்தின்படி உருவானவை. 

கணிப்பொறி நிறுவனக் கட்டிடங்களைப் பாருங்கள், opaque கண்ணாடிகளால் ஆனவை. உள்ளே இருப்பவர் வெளியே பார்க்க முடியும், வெளியே இருப்பவருக்கு உள்ளிருப்பது எதுவுமே புலப்படாது. அதாவது, தனியார் நிறுவனங்கள் உலகைப் பார்க்கலாம், உலகம் தனியார் நிறுவனங்களைப் பார்க்கக் கூடாது. வெளிப்படைத்தன்மை எனும் கோட்பாட்டிற்கு எதிர்த்திசையில் இருப்பவை அவை.

அரசு அலுவலகங்களோ இதற்கு நேர்மாறாக அழுது வடியும் கட்டிடங்களில், குப்பைக் கூளங்களுக்கு நடுவே இயங்குகின்றன. அவற்றில் உள்ள கழிப்பறைகள் மனிதப் பயன்பாட்டிற்கு உகந்தவையா என்று சந்தேகமே எழும். அது தனிக்கதை. நாம் அரசு மருத்துவமனைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்போம். அவையெல்லாம் அனாதி காலம் முதலாக சகிப்புத்தன்மைக்கான பேருதாரணங்களாகவே உள்ளன. இங்கே கட்டிடவியல் கற்பவர்கள், கட்டிடக்கலை பயில்பவர்கள் யாராவது ஒருவர், ’அரசு கட்டிய இந்தக் கட்டிடத்தைப் பார்த்து நான் கட்டிடக்கலை கல்வி கற்பதில் ஆர்வம் அடைந்தேன்’ எனச் சொல்வாரா?

எளிமை, ஏழ்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாம் அதிநவீனக் கட்டிடம் ஒன்றைக் கட்டினால் அது, ‘அரசு சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை’, ‘சாதாரண மக்களைப் புறந்தள்ளக்கூடியவையாக ஆகிவிடும்’ என்பது போன்ற கருத்தைக் கொண்டிருக்கிறோம். குடிசைவாசி ஒருவர் கந்தலான ஆடை அணிந்து, அதிநவீனக் கட்டிடத்திற்குள் நுழைய கூச்சப்படுவார் என்பதை நிச்சயம் அரசு கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். 

ஆனால், குப்பைக் கூளங்களுக்கு மத்தியில் இயங்கும் அரசு அலுவலகங்களில் நுழைவதற்கும் அவர் அஞ்சக் கூடியவராகவே இருக்கிறார். ஏழ்மை நிரம்பிய சமூகத்தில்தான் கோயில்கள் மிகப் பிரம்மாண்டமாக எழுந்தன. இன்னும் 30 ஆண்டுகளில் ஏழைகள் இருப்பார்கள், ஆனால் குறைந்தபட்ச கல்வி அற்றவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள், அதிநவீன கட்டிடங்களைப் பாவிப்பதைக் கூச்சமாக உணர மாட்டார்கள்.

ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்க இருக்கையை எடுத்துக்கொள்வோம். ஐம்பது வருடங்களுக்கு முன்பென்றால், அவை பெரும் பணக்காரர்கள் அமரக் கூடியவை.  இன்றோ அப்படியொரு இருக்கைக்குப் பழகுவதற்கு, அதை அனுபவிப்பதற்கு 150 ரூபாய் நுழைவுச் சீட்டுப் போதும். நாம் மத்தியதர சமூகமாக மாறியிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நகரமயமான மாநிலங்களில் நாமே முதல் மூன்று இடங்களில் இருக்கிறோம். பொள்ளாச்சி போன்ற சிறுநகரை எடுத்துக்கொள்ளுங்கள், அது எவ்வளவு நவீனக் கூறுகளோடு இயங்குகிறது! அதைப் போன்ற ஒரு சிறுநகரத்தை நாம் வட இந்தியாவில் காண்பது அரிது. அரசும் தனியாரும் சேர்ந்து உருவாக்கிய வளர்ச்சி இது! 

கலைஞர் நூலகத்தையாவது...

தமிழ்நாடு அரசு மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூலகத்தை அமைக்கவிருக்கிறது. தென் தமிழகத்தின் முகமாக இருக்கும் நகரம் மதுரை. வியப்பிற்குரிய கோயில் ஒன்றைக் கொண்ட நகரம். அங்கே குவியும் வெளிநாட்டவருக்குக் காட்டுவதற்கு நம்மிடம் பழமை மட்டுமே உள்ளதென்பது எவ்வளவு வருத்தமானது!

அதிநவீனக் கட்டிடங்களை அவர்கள் பார்த்திருப்பார்கள்தான் என்றாலும், நாம் அவர்களுக்கு இணையாகச் சொல்ல ஒரு கட்டிடமாவது உண்டா? பணம் இங்கே பிரச்சினையா? ஓரளவிற்கு உண்மைதான். ஆனால், உலகமயக்காலத்தில் இன்றைக்கு உலகின் எந்த மூலையிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு என்று நிதி திரட்டிவிட முடியும். நல்கைகள் உட்பட. அதிநவீனம் என்பது கண்ணாடிச் சுவர்கள், விளக்குகள், மார்பிள் கற்கள், மின் தூக்கிகள் மட்டுமேயல்ல, அது சிந்தனையைக் குறிப்பிடுவதும்கூட!

மதுரையில் அமையவிருக்கும் நூலகத்திலிருந்து அரசு புதிய, சமகாலக் கட்டிடவியல் கோட்பாட்டை அறிவிக்க வேண்டும். அது அரசு கட்டவிருக்கும் வருங்காலக் கட்டிடங்கள் அனைத்திற்கும் வழிகாட்டக் கூடியதாகவும் இருப்பது நல்லது.  

அக்கோட்பாடு எவையெல்லாம் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும்?

1. ஆகக் குறைந்த அளவு சிமென்ட் பயன்பாடு

2. குன்றுகளை உடைத்துப் பெயர்த்த கற்களைத் தவிர்த்தல்

3. மறுசுழற்சிசெய்யப்பட்ட கட்டுமானப் பொருட்களைப் பெருமளவு பயன்படுத்துதல்

4. மின் பயன்பாட்டைக் குறைக்கும் வண்ணம் இயற்கையான காற்றோட்டம் உள்ள வகையில் வாயில்கள், சாளரங்கள், கதவுகள் அமைத்தல்

5. குறைந்த அளவே நீர் தேவைப்படும் கழிப்பறைகள்

6. மறுவடிவமைப்புச் செய்ய ஏற்புடைய வகையில் அமைத்தல்

7. வெப்பம் உமிழும் விளக்குகள், பொருட்களை முற்றிலும் தவிர்த்தல்

8. இயற்கையாகவே குளிர்ச்சி ஊட்டக்கூடிய பொருட்களை கூரைகள், சுவர்கள் கட்டப் பயன்படுத்துதல்

9. வடிவமைப்பில் சமகால, எதிர்காலவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துதல்

10. சுற்றுச்சூழல், அழகியல், பயன்பாட்டுவாதம், எதிர்காலவியல்!

இவையெல்லாம் சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியம்தான். அதற்குத் தேவை சிந்தனையும், கனவுமே. இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில்  உள்ளன. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் என மதிப்பிற்குரிய கல்வி நிறுவனங்களும் உள்ளன. ஏன் ஐரோப்பிய, அமெரிக்க கலைஞர்களையும், நிபுணர்களையும் பணிக்கு அமர்த்தலாம். அதற்கான சாத்தியத்தை ஏற்கனவே பொருளாதார ஆலோசனைக் குழு வாயிலாக இந்த அரசு சாதித்திருக்கிறது. மரங்களும், தாவரங்களும், புல்வெளிகளையும் சுற்றி அரசு அலுவலகங்கள் இயங்கும் காலமொன்றை நோக்கி நாம் நகர வேண்டும்.  சமூகம் எங்கே வேண்டுமானாலும் நிற்கட்டும், அரசு, கனவின், எதிர்காலத்தின் திசையில் மட்டுமே தனது கண்களைப் பதித்திருக்க வேண்டும். செல்வமும், அதிகாரமும் கொண்ட ஓர் அமைப்பே ஒரு நல்ல கனவை நிறைவேற்றக் கூடிய சாத்தியமும் உடையது.

ஒரு துணைநிலைச் சார் பதிவாளர் அலுவலகத்தின் உட்புறத்தில் நின்றிருக்கும் மரத்தில் சாய்ந்தபடி, பத்திரப் பதிவிற்குக் காத்திருக்கும் காலத்தில் என் தமிழ்நாட்டை இன்னும் அதிகமாக நேசிப்பேன்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தமிழ் எழுத்தாளர். வங்கியாளர். 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.








பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Vijaysekar    2 years ago

மிகச்சிறப்பான கருத்து அரசுகள் கோடான கோடிகள் வாரி இறைத்து கட்டடங்கள் கட்டப்பட்டு 20 ஆணடுகளில் மீண்டும் அதற்காக பராமரிப்பு பணிகள் என கட்டியதில் பாதி அளவு செலவு அதிலும் ஊழல் ,, சார் படிச்சவன் பாட்டக்கெடுத்தான் எழுதனவன் ஏட்டை கெடுத்தான் ங்கற கதைய Phd வரை படித்த PWD என்ன வரைபடம் தயாரித்ப்பார்களோ,, அட்லீஸ்ட் கர்நாடகத்தில் உள்ளதுபோல ஒரு விதான்சவுத பேர்செல்ல தமிழகத்தில் இல்லை மிகவும் வருத்தமான விசயம்,, இன்னும் எத்தனை காலத்திற்கு மதுரையையும் தஞ்சாவூரரையும் சுற்றுலாபயணிக்களூக்கு காட்டுவோம், அருமையான வரிகள் அரசுகள் யோசிக்க வேண்டும்,,

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சரவணமணிகண்டன்   2 years ago

கட்டடங்களை நிர்மாணிப்பதில் வசீகரத்தை விடுங்கள். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பயன்பாட்டுக்கு உகந்தவையாகவா கட்டடங்கள் கட்டப்படுகின்றன? சமீபத்தில்கூட இதுகுறித்து தனது ஆதங்கங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரன் விரிவாகவே எழுதியிருந்தார். பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டடங்கள்தான் என்றில்லை. மாற்றுத்திறனாளிகள் தங்களின் கல்வி மற்றும் அலுவல் நிமித்தமாக அன்றாடம் புழங்கும் இடங்கள் அவர்கள் அணுகக்கூடிய வகையில் இல்லை என்பதுதானே கள எதார்த்தமாக உள்ளது. உதாரணமாக, பூவிருந்தவல்லியின் கரையான்சாவடி மற்றும் கல்லறை ஆகிய இரு நிறுத்தங்களுக்கிடையே, சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பார்வையற்றோருக்காகச் செயல்படும் தேசிய பார்வையற்றோர் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் நிறுவனத்தின் மண்டல மையம் (NIEPVD) மற்றும் பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. முன்னது நடுவண் அரசாலும், பின்னது மாநில அரசாலும் நிர்வகிக்கப்படுகிறது. இந்த இரண்டு முக்கிய நிறுவனங்களின் அமைதல் காரணமாக, குறிப்பிடத் தகுந்த அளவில் பார்வையற்றோர் வசிக்கும் நடமாடும் இடமாகப் பூவிருந்தவல்லி இருக்கிறது. ஆனாலும், இந்தப் பகுதியின் சாலைகள், நடைபாதைகள் எல்லாமே இடுங்கலானவை, இடர் நிறைந்தவை. நெரிசல் மிகுந்த கண்காணிப்பற்ற சாலைகள், பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்ட நடைபாதைகள் என ஒரு பார்வையற்றவரின் பயன்பாட்டிற்கு எந்தவகையிலும் உகந்ததாக அவை இல்லை. பழைமை வாய்ந்த விக்டோரியா அரங்கை சுமார் 15 கோடி செலவில் சென்னை மாநகராட்சி புதுப்பிக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி படித்தேன். அதே விக்டோரியா மகாராணியின் பெயரால், போரில் பார்வையிழந்த வீரர்களுக்கான தொழிற்பயிற்சிக்கூடமாகத் தொடங்கப்பட்டு, இன்று பார்வையற்றவர்கள் கல்வி மற்றும் தொழில்பயிற்சி பெறும் பெருநிறுவனமாக நூறாண்டைக் கடந்து வளர்ந்து நிற்கிறது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 1937ல் எடுக்கப்பட்ட நடிகவேல் M.R. ராதா அவர்கள் நடித்த ராஜசேகர் தொடங்கி, இன்றைய மாஸ்டர் வரை படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட பள்ளி வளாகத்தின் பாரம்பரிய சிவப்புக் கட்டடம் ஆங்காங்கே விரிசல்விட்டு, சில பகுதிகள் பயன்பாடின்றிக் கைவிடப்பட்டிருக்கும் கையறுநிலையை என்னவென்று சொல்வது? இத்தனைக்குப் பிறகும் எங்களை நம்பிக்கையோடு இயக்குவது எங்கிருந்தோ நீளும் அன்புக் கரங்களும், “சார் உங்களுக்கு ரோட் க்ராஸ் பண்ணனுமா?” என ஒலிக்கிற பல சாமானியர்களின் அக்கறையான குரல்களுமே. அந்தக் குரல்களைப் பிரதியெடுக்குமா அரசு? ப. சரவணமணிகண்டன் பட்டதாரி ஆசிரியர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Melkizedek   2 years ago

ஐயா, கட்டுரை அருமை!!!! மிக அவசியமும் கூட .... நம் தமிழ் தேசத்தில் நான் பார்த்து வியந்த கட்டிடங்கள் 1.அனைத்து நீதிமன்ற பொது கழிப்பிடங்கள் 2. அரசு மருத்துவ மனை கழிப்பிடங்கள் 3. அரசு பேருந்து நிலைய கழிப்பறை.... கண்டிப்பா வேறு மாநிலத்தவர் அல்லது வேறு நாட்டவர் இவைகளை பார்க்கும் போது நம் கட்டிடவியல் நிபுணத்தை வியந்து பாராட்டுவர்!!! இன்னும் இருக்கிறது ஆனால் வேண்டாம் போதும்... ஒரு வேண்டுகோள்... கழிப்பறை ஆச்சர்யங்களையும் கட்டுரையாக எழுதுங்கள்.... அப்போது தான் இந்த அவலங்கள் தீரும்....

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கென்யா: கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பொருளாதாரம்இந்திநெருக்கடி நிலைதமிழாசிரியர் வரலாறுஜோ பைடன்ஆலிவ் மரத்தில் காய்க்கும் கணிதம்!ராஷ்டீரிய ஜனதா தளம்ப்ராஸ்டேட் சுரப்பிஅசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன்சிறப்புக் கூட்டத் தொடர்தண்ணீர்க்குன்னம் பண்ணைமஹிந்த ராஜபக்‌ஷபுஷ்கர் சந்தைசேற்றுப்புண்சமூகப் பிளவுபணப் பரிவர்த்தனைஅண்ணா பொங்கல் கடிதம்பத்திரிகைஎம்.ஜி.ராமச்சந்திரன்-சேஷாத்ரி தனசேகரன் எதிர்வினைபொருளாதாரத்தில் தமிழ்நாட்டை மிஞ்சிவிட்டதா உத்தர பிபொருளாதாரக் கொள்கைவயிற்றுப் புற்றுநோய்தேசியவாத அலைநெல்லி பிளைஇஸ்ஸாஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிட்விட்டர் பதிவுகள்உமேஷ் குமார் ராய் கட்டுரைமனநிலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!