கட்டுரை, அரசியல், விவசாயம், பொருளாதாரம், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

எப்படி இருக்கிறது வேளாண் பட்ஜெட்?

பாலசுப்ரமணியம் முத்துசாமி
31 Mar 2023, 5:00 am
1

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் துறையின் பெயர், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை என மாற்றப்பட்டது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்தில், ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மாசனபு ஃபுகுவோகாவின் மேற்கோள் கையாளப்பட்டுள்ளது. வழக்கமாக, நிதிநிலை அறிக்கை என்பது துறையின் உயர் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் இருந்து தயாரிப்பது என்னும் நிலை மாறி, வேளாண் துறை அமைச்சர் தமிழ்நாட்டின் பல இடங்களுக்குப் பயணித்து உழவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் ஆலோசனைகளும் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் தமிழ்நாடு வேளாண் துறையின் அணுகுமுறைகளில் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றம்.

வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை 2023-24ஆம் ஆண்டில் தனது துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 18% அதிகரித்துள்ளது. முதலீடுகளையும் 18% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு வேளாண் துறைக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்ததின் காரணமாக, காவிரியில் நீர் வரத்து மிகவும் திருப்திகரமாக இருந்தது. காவிரியின் நீர் வரத்து நன்றாக இருப்பதை உணர்ந்து அரசு வழக்கமாக குறுவை சாகுபடிக்கான நீர் திறப்பதை 19 நாட்கள் முன்னதாகச் செய்தது. இதைத் தானே முன்னின்று செய்த முதல்வர், பின்னர் சில நாட்கள் கழித்து, தானே காவிரிப் படுகை பகுதிக்குச் சென்று நீர் வரத்து தொடர்பிலான ஆய்வை மேற்கொண்டார். அரசின் முனைப்பின் விளைவாக, கடந்த 2 ஆண்டுகளாக, படுகையில் நெல் சாகுபடிப் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது.

திமுக தன் தேர்தல் அறிக்கையில் 1 லட்சம் உழவர்களுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின்சார இணைப்புகளைக் கொடுத்திருப்பது, வேளாண்மைக்கு இந்த அரசு தரும் முக்கியத்துவத்தைக் கூடுதலாக உணர்த்துகிறது.

சிறுதானிய முன்னெடுப்பு

இந்த ஆண்டை உலக உணவு நிறுவனம் ‘சிறுதானிய’ங்களின் ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, சென்ற ஆண்டிலிருந்தே சிறுதானியங்கள் உற்பத்தி மேம்பாட்டுக்கான ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை அறிவித்து, நிறைவேற்ற முனைந்துள்ளது. சிறுதானியங்கள் மழையை நம்பியிருக்கும் மாவட்டங்களில் உற்பத்தியாகும் உணவு தானியம். இவற்றின் நீர்த் தேவை நெல்லை ஒப்பிடுகையில் மிகக் குறைவு. இந்த ஆண்டு, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு 2 கிலோ ராகி கொடுக்கும் திட்டத்தை வெள்ளோட்டமாக நடத்த அரசு முடிவுசெய்திருக்கிறது.

சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அமுதம், சிந்தாமணி, காமதேனு போன்ற கூட்டுறவு நுகர்பொருள் அங்காடிகள் வழியே விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் சிறுதானிய விழாக்கள் முன்னெடுக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடுகள், உணவு வகைகள் மக்களிடையே எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. இதுபோன்ற திட்ட அளவிலான இடையீடுகள் மிகவும் செயல்திறன் மிக்கவை என்பதால், இவை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

இதில் 70 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அரிசி என்பது நிகழ்காலத்தைப் போல 3 வேளை உணவாக இருக்கவில்லை. கம்பு, ராகி, சோளம் போன்ற தானியங்கள் தமிழர்களின் உணவில் முக்கிய இடம்பெற்றிருந்தன. ஆனால், பசுமைப் புரட்சித் திட்டங்கள் நெல்லுக்கும், கோதுமைக்கும் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, அவற்றின் உற்பத்தி அதிகரித்து, மற்ற தானியங்கள் நம் உணவுப்பழக்கத்தில் இருந்தது விலகிப்போயின.

அரசின் இந்த முன்னெடுப்பின் விளைவாக, சிறுதானியங்களுக்கான ஒரு நுகர்வு - கொள்முதல் என ஒரு கூடுதல் வணிகச் சங்கிலி உருவாகிவரும். அது உற்பத்தியாளர்களுக்கான ஒரு குறைந்தபட்ச விலையைப் பெற்றுத்தரும். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு. ஆனால், இதற்கான ஒதுக்கிடு ரூ.82 கோடி என்பது மிகவும் குறைவானதாக உள்ளது. இன்னும் அதிகரிக்கலாம்.

நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பு வேளாண் துறை, அரசின் இயற்கை வேளாண் கொள்கையை வெளியிட்டது. வேளாண் உற்பத்தியில் வேதிப்பொருட்கள் குறிப்பாக பூச்சி மற்றும் களைக்கொல்லிகள் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இவை மொத்த உணவுச் சங்கிலியிலும் ஊடுருவிவிட்டதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போக்கு அபாயகரமானது. எனவே, இந்தக் கொள்கை முன்னெடுப்பு வருங்காலத்துக்கு மிகவும் தேவையான ஒன்று என்னும் வகையில் வரவேற்கத்தக்கது ஆகும்.

தவறிப் பெய்யும் மழை

நிதிநிலை அறிக்கை பண்ணைக் குட்டைகளை அமைக்கும் ஒரு திட்டத்தையும் முன்வைத்துள்ளது. ஆனால், வெறும் 600 பண்ணைக் குட்டைகளை மட்டுமே அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மானாவாரிப் பயிர் மற்றும் தோட்டப் பயிர் சாகுபடியின் மிகப் பெரும் பிரச்சினையே, காலம் தவறிப் பெய்யும் மழைதான். கடந்த 70 ஆண்டுகளில் உற்பத்திப் பெருக்கம் என்னும் பேராசையால், நாம் நீர்த் தன்னிறைவு என்னும் ஒரு கருத்தாக்கத்தை மறந்துவிட்டோம். 

கிணறுகளை ஆழமாக வெட்டத் தொடங்கி, நிலத்தடி நீருக்காக ஒரு மறைமுகப் போட்டியை உருவாக்கிவிட்டோம். இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை உழவர்கள்தான். இதை முன்பே உணர்ந்து நம்மை காந்தியப் பொருளியல் நிபுணர் ஜே.சி.குமரப்பா எச்சரித்தார். ஆனால், நாம் காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை.

நிலத்தடி நீர் என்பது பூமி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகச் சேமித்துவந்த சொத்து. அதை 70 ஆண்டுகளில் நமது பேராசை காரணமாக பயன்படுத்தித் தீர்த்துவிட்டோம். இது நம் நாட்டின் தலையாய பிரச்சினை. இதை அரசு மிக முக்கியமான முன்னெடுப்பாகச் செய்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்களிலும் பண்ணைக் குட்டைகளை அமைக்க வேண்டும். 

இவை ஏற்கெனவே இருக்கும் கிணறுகள், போர்வெல் பம்புகள் அருகே அமைக்கப்பட்டு, அதீத மழை நீர் அவற்றுக்கும் செல்லும் வகையில் ஒரு முழுமையான திட்டமாக நிறைவேற்றப்படலாம். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை இத்துடன் இணைத்தால், அடுத்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு உழவரும் தத்தம் நிலத்தில் பெய்யும் மழையைச் சேமித்து பயன்படுத்தும் பண்ணைக் குட்டை வழிமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட முடியும்.

இனி இதன் மீதான விமர்சனங்கள்

கடந்த 50 ஆண்டுகளாக உழவர்களின் வருமானம், சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்துவருகிறது. தமிழ்நாடு போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில், வேளாண்மையை விட்டு தொடர்ந்து மக்கள் விரைவாக வெளியேறிவருகிறார்கள். இன்று 10%க்கும் குறைவான உழவர்கள் மட்டுமே தமிழ்நாட்டில், வேளாண்மையை முழுவதும் நம்பியிருப்பவர்கள் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

இதன் காரணம் எளிதானது. சராசரியாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் வைத்திருக்கும் உழவர்களின் (தமிழ்நாட்டு உழவர்களில் இவர்கள் 80%), மொத்த குடும்பமும் இணைந்து உழைத்தாலும் செலவுகள் போக வருடம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுவது கடினம். தோட்டம், மானாவரி நிலம் வைத்திருப்பவர்கள் நிலை இன்னும் மோசம். இதைவிட இருவரும் தொழிற்சாலையில் திறனில்லாத் தொழிலாளர்களாக வேலை செய்தால் அதிகப் பணம் ஈட்டிவிட முடியும்.

வேளாண் துறையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையாகப் பெயர் மாற்றம் செய்த அரசு, தன்னால் இயன்ற அளவுக்கு உழவர் நலனுக்குச் செய்துவருகிறது. ஆனால், அதன் பலன்கள் போதுமானவையாக இல்லை. எனவே, உண்மையான உழவர் நலம் என்பது அவர்களின் வருமானம் மற்ற துறைகளில் மக்கள் ஈட்டுவதற்கு இணையான அளவை எட்டுவதுதான்.

ஆனால், இன்றிருக்கும் கட்டமைப்பில் வருமானம் அப்படி உயர்வது சாத்தியமில்லை. இந்தப் பிரச்சினை இன்று உலகளாவிய பிரச்சினை. 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இந்திய உழவர், நவீன வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்காத ஆப்பிரிக்க உழவர், 440 ஏக்கர் வைத்திருக்கும் அமெரிக்க உழவர், 175 ஏக்கர் வைத்திருக்கும் ஐரோப்பிய உழவர் – இவர்கள் அனைவரும் பொதுவான எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை ஒன்றுதான். அது, ‘வேளாண்மையின் லாபமின்மை’.

ஒவ்வொரு ஆண்டும் குறையும் வேளாண் வருமானம், உழவர்களைப் பெரும் நஷ்டத்தை நோக்கிச் செலுத்துகிறது. ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீத உழவர்கள் வேளாண்மையைக் கைவிடும் அபாயம் நம் முன்னே நிற்கிறது.

இந்தப் பிரச்சினை ஒரு கட்டமைப்புப் பிரச்சினை. உலகில் எந்த நாடுமே உணவு உற்பத்தி இறையாண்மையை விட்டுக்கொடுப்பதில்லை. குறிப்பாக வளர்ந்த நாடுகள். எனவே, எவ்வளவு நஷ்டமானாலும், அவர்கள் பெருமளவு உற்பத்தி மானியத்தைக் கொடுத்து உழவர்களின் உற்பத்தியைத் தக்கவைத்துக்கொள்வார்கள். அதேபோல உலகில் எந்த நாடுமே, தம் மக்கள் உணவின்றி வாடவிட மாட்டார்கள். பெருமளவு உணவு தானிய மானியம் கொடுத்து காத்துக்கொள்வார்கள்.

இப்படி உற்பத்தி, நுகர்வு என இருபுறமுமே உலக நாடுகளால் மானியங்கள் கொடுக்கப்படும்போது, வேளாண் உற்பத்திக்கு லாபகரமான விலை கிடைக்காது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் உற்பத்தியாகும் நெல்லில் பாதி அளவு இலவசமாக ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படுகையில், உழவர்களின் நெல் உற்பத்திக்கு ஒருபோதும் சரியான விலை கிடைக்காது.

எனவே, இங்கே தமிழ்நாட்டு வேளாண் துறையின் வழக்கமான அணுகுமுறையான உற்பத்தி அதிகரிப்பு, அரசு கொள்முதல் உதவி என்னும் வழிமுறை வேளாண்மை லாபகரமாக மாற உதவாது. உடனடியாக உழவர்களின் வருமான உயர்வுதான் தீர்வு. இதைச் செய்யாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நாம் உழவர்களையும், வேளாண்மையையும் அழிவை நோக்கித் தள்ளுகிறோம் என்பதை அரசு எவ்வளவு விரைவில் உணர்கிறதோ, அவ்வளவு நல்லது.

அப்படி வேளாண் வருமானத்தை உயர்த்தவல்ல சில தீர்வுகளைக் காண்போம்.

குறுகிய காலத் தீர்வு

நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில், அடுத்த 7 ஆண்டுகளில், தமிழ்நாட்டு மின் உற்பத்தி 33,000 மெகா வாட் ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். அதில் முக்கியமான அளவு சூரிய ஒளி மின் உற்பத்தியாக இருக்கும். சூரிய ஒளி மின் உற்பத்திக்குத் தேவை நிலம் மட்டுமே. தமிழ்நாடு அரசு தன் மின் உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை உழவர்களின் நிலத்தில் உற்பத்திசெய்து பெற்றுக்கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்தினால்,

  1. அரசுக்கு மானிய பாரம் குறையும்.
  2. உழவர்களுக்கு வேளாண் உற்பத்தி அல்லாத ஒரு வருமானம் கிடைக்கும். குஜராத்தில் நடந்த ஒரு பரிசோதனையில், ஒரு இணைப்புக்கு வருடம் ரூ.60 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைத்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை பின்தங்கிய, வேளாண்மையை நம்பியுள்ள மாவட்டங்களான தஞ்சாவூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் முதலில் வெள்ளோட்டம் பார்த்துவிட்டு, படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றலாம்.

வேளாண் பொருள் உற்பத்தியின் லாபமின்மையை இந்தத் திட்டம் ஓரளவு உடனடியாகச் சரிசெய்யும்.

நீண்ட காலத் தீர்வு

விலையில்லா பொது விநியோகத் திட்டம் போன்ற திட்டங்களால், உணவு தானியங்களின் தேவை சந்தையில் அதிகம் இல்லாமல், உற்பத்திக்கு உழவர்களுக்குச் சரியான விலை கிடைப்பதில்லை என்பதை நாம் முன்னரே கண்டோம். 

எனவே, உழவர்கள் உணவு தானியங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்காமல், கலப்புப் பண்ணை முறைகளை உருவாக்க அரசு உதவி செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, பால் துறையில், உழவர் உற்பத்தியைக் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் ஆவின் நிறுவனம் போல, உழவர்கள் ஆடு, கோழி போன்றவற்றை வளர்த்து, இறைச்சி, முட்டை போன்றவற்றைக் கொள்முதல் செய்து, பதப்படுத்திச் சந்தை படுத்தலாம். இவற்றுக்கு உலக அளவில் தேவைகள் இருப்பதால் ஏற்றுமதியிலும் ஈடுபடலாம். இதில் மிக முக்கியமானது, ஆவின் போன்ற பெரும் அலகு உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாகும் வகையில் அரசு ஒரு நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்படலாம். இங்கே சுய உதவிக் குழுக்கள், உள்ளூர் உழவர் சந்தைகள் போன்ற சிறு அலகுகள் உதவாது.

இப்போதைய கட்டமைப்பில், உழவர்களின் உற்பத்தியை அரசு கொள்முதல் செய்து, தன் பொறுப்பில் வைத்திருந்து அது தொடர்பான செயல்பாடுகள் - சேமிப்பு, பதப்படுத்துதல், விநியோகம் என அனைத்தையும் தன் தலையில் போட்டுக்கொள்கிறது.

ஆவின் போன்ற ஓரளவு தன்னிறைவு பெற்ற பெரும் உற்பத்தியாளர் நிறுவனம் உருவானால், அது உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களின் கொள்முதல், பதப்படுத்துதல், விநியோகம் என எல்லா வணிகச் செயல்பாடுகளையும், தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளும். அரசுக்கு நிதிச் சுமையும், மேலாண் சுமையும் இருக்காது.

வேளாண்மையின் லாபமின்மையை, இப்போது இருக்கும் அரசு அணுகுமுறையினால், திட்டங்களால் தீர்க்க முடியாது. தற்காலிகமாகத் தள்ளிப்போட முடியும். இதனால் வேளாண் சிக்கல் தொடர்ந்து அதிகரித்து, ஒருநாள் பெரும் பிரச்சினையாக வெடிக்கும். அதற்கு முன்பு விழித்துக்கொள்ளுதல் நல்லது.

 

தொடர்புடைய கட்டுரைகள்

எப்படி இருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட்?
ஆவின் எப்படி பிறந்தது தெரியுமா?
வேளாண் பட்ஜெட்: சரியான நிதி ஒதுக்கீடு, தவறான இலக்கு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

உற்பத்தி ஆகும் இடத்தில் விலை கட்டுப்படி ஆகவில்லை என்று மண்ணில் கொட்டுகிறார்கள். ஆனால் 200-300 கிமீ தொலைவில் அதே பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தமிழக அரசு சரக்கு இரயில்களை வாடகைக்கு எடுத்து இலவசமாக இயக்கலாம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

முதல்வர் கடிதம்நான் செய்தேன்எல்.ஆர்.சங்கர் கட்டுரைநடிப்புஇன்றைய இசையில் இருக்கிறார்கள் சோழர்கள்: எஸ்.சிவக்கபழமையான நகரம்சிறுதானியங்கள்வங்கதேச வளர்ச்சிஎஸ்.சந்திரசேகர் கட்டுரைஇந்தியக் கல்விமுறைஅகில இந்திய மசாலாசுவாரசியமான காலத்தில் வாழ்வீர்களாகபொருளாதார நிலைமாற்றங்கள் செய்வது எப்படி?தியாக வாழ்க்கைஎல்லைப் பாதுகாப்புப் படைசலுகைசார் முதலாளித்துவம்ஓய்வுபெற்ற நீதிபதிகள்பாஸ்கர் சக்தி கட்டுரைஐராவதம் மகாதேவன்: சில நினைவுகள்புதிய அடையாளம்‘தி டெலிகிராப்’ நாளிதழுடன் வளர்ந்தேன்ஜெய்பீம் ஞானவேல் பேட்டிமருத்துவம்பாலின சமத்துவம்சுண்ணாம்பு செங்கல் நாட்டுச் சர்க்கரை கலவைசாரு நிவேதிதா சமஸ் ஜெயமோகன்அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17சமூகங்களை அறிவோம்அப் நார்மல் காதல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!