கட்டுரை, ஆரோக்கியம், விவசாயம் 5 நிமிட வாசிப்பு

எத்தியோப்பியா காட்டும் உணவுப் பாதை

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
28 Apr 2022, 5:00 am
0

நண்பர் ஒருவர், “இந்த வார இறுதியில் அட்டிஸ் போலாமா?” என்றொரு செய்தியை அனுப்பியிருந்தார். ‘அட்டிஸ்’ என்பது தான்சானியாவின் டார் எஸ் ஸலாம் பகுதியில் அமைந்துள்ள எத்தியோப்பிய உணவகம். எத்தியோப்பியாவின் தலைநகரான அட்டிஸ் அபாபா என்னும் பெயரின் சுருக்கம். உடனே ஒப்புக்கொண்டேன்.

எத்தியோப்பிய உணவில் மிக முக்கியமானது ‘இஞ்சிரா என்னும் உணவு வகை. தோசைக்கும், அப்பத்துக்கும் பிறந்த கலப்பு உணவு எனச் சொல்லலாம். தொழில் நிமித்தமாக அட்டிஸ் அபாபா செல்லும்போதெல்லாம் உண்ணும் உணவு இது.

ஆப்பிரிக்காவுக்கு ஏற்ற பயிர்

இஞ்சிராவைத் தயாரிக்கப் பயன்படும் சிறுதானியத்தை ஆங்கிலத்தில் ‘டெஃப்’ என அழைக்கிறார்கள். எத்தியோப்பியாவில் தோன்றிய இந்தச் சிறுதானியம், உண்மையிலேயே மிக மிகச் சிறிய தானியம். கடுகைவிடச் சிறியது. ஆனால், இதிலுள்ள புரதச் சத்துகளும் கனிமச் சத்துக்களும் மற்ற தானியங்களை ஒப்பிடுகையில் அதிகம். உலகில் கணிசமான  மக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல தானியங்களில் உள்ள க்ளூட்டென் ஒவ்வாமை உண்டு. இதில் க்ளூட்டென் இல்லை என்பதால், அவர்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதம். உலகச் சந்தைகளில், டெஃப் கிலோ 450 ரூபாய்க்கு விற்கிறது.

வறட்சியைத் தாங்கி வளரும் சக்தி கொண்ட டெஃப் தானியமானது, ஆப்பிரிக்கா போன்ற பாசன நீர்க் கட்டமைப்பு வசதியில்லா கண்டத்துக்கு மிகவும் ஏற்ற பயிர். இந்தியாவின் ராகி, கம்பு, சோளம், சாமை வரகுபோல.

உணவில் அதிக மாமிசமும், டெஃப்பால் செய்யப்பட்ட இஞ்சிராவும் உண்ணுவதால், எங்களில் உடல் பருமன் கொண்டவர்களை அதிகம் பார்க்க முடியாது என்பார்கள் எத்தியோப்பியர்கள். அது ஓரளவு உண்மைதான். எத்தியோப்பியர்கள் ஒல்லியாக உயரமாக, மற்ற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து மாறுபட்ட தோற்றத்தில் இருப்பார்கள். உடல் பருமன் கொண்டவர்களை அங்கே நான் அதிகம் கண்டதில்லை.

அட்டிஸ் உணவகம் ஒரு பழங்கால வீட்டின் முதல் தளத்தில், எத்தியோப்பியக் கலைப் பொருட்களுடன் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக இருந்தது. தொடக்க உணவாக, ரோஸ்ட்டட் இஞ்சிராவை ஆர்டர் செய்தோம். நம்ம ஊர் மைசூர் தோசைபோல பெரிபெரி (மிளகாய் சாஸ்) தடவி மிகச் சுவையாக இருந்தது. ஆனால், அதைச் சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாகவே வயிறு நிறைந்துவிட்டது. பின்னர் வந்த இஞ்சிராவுடன் கூடிய காளானைக் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டுவிட்டு, பார்சலாக வாங்கிக்கொண்டோம். 

இக்ரிசாட்

திரும்ப வீட்டுக்கு வருகையில், அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்ப மண்டலத்துக்கான பன்னாட்டுப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (International Crop Research Centre for Semi-arid Tropics – ICRISAT – இக்ரிசாட்) வெளியிட்டிருந்த ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை நினைவுக்கு வந்தது. அனிதா என்னும் மூத்த ஆராய்ச்சியாளர், நான்கு நாடுகளில் நடந்த எட்டு பரிசோதனைகளை ஒன்றிணைத்து வெளியிட்டிருந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இந்த ஆராய்ச்சிகள் சிறு குழந்தைகள், பால்வாடி செல்லும் குழந்தைகள், மற்றும் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளிடையே, 3 மாதம் முதல் 4.5 ஆண்டுகள் வரை நடத்தப்பட்டவை.

இந்தப் பரிசோதனைகளில், ராகி, சோளம், சிறுதானியக் கலவை (ராகி, கம்பு, குதிரைவாலி, கோடோ தானியம்) கொண்ட உணவுகளை உண்ட குழந்தைகளின் வளர்ச்சி, அரிசியை உணவாக உண்ட குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டது. அரிசி உணவை உண்ட மாணவர்களைவிட, சிறுதானிய உணவை உண்ட மாணவர்களின், சராசரி உயரம் 28.2%, எடை 26%, புஜத்தின் சுற்றளவு 39%, மார்பளவு 37% அதிகரித்திருந்தன என அந்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

ஆனால், இந்தியாவின் வேளாண் கொள்கைகள் கடந்த 70 ஆண்டுகளாக, நெல் மற்றும் கோதுமை சார்ந்தே உள்ளன. இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், இருந்த உணவுப் பற்றாக்குறையை நீக்க, உடனடியாக அதிக உணவு உற்பத்தி, அதற்கான பாசனக் கட்டமைப்புகள், அரசுக் கொள்முதல் என ஏற்படுத்தி முதல் 20 ஆண்டுகளில் உணவுத் தன்னிறைவை அடைந்தோம். ஆனால், அதையே அடுத்த 50 ஆண்டுகளாக எந்த மீளாய்வும் செய்யாமல் தொடர்ந்துகொண்டிருப்பது சரியானதாகத் தெரியவில்லை.

சென்ற ஆண்டு, இந்தியா 300 மில்லியன் டன் உணவுத் தானியங்களை உற்பத்தி செய்துள்ளது. அதாவது 30 கோடி டன் – 30 ஆயிரம் கோடி கிலோ.  தலைக்கு வருடம் 220 கிலோ உணவு தானியம் உற்பத்தியாகிறது. இது தேவைக்கு மிக அதிகம். இதற்காக மத்திய அரசு கொள்முதல் மானியமாக 1.80 லட்சம் கோடியைச் செலவிடுகிறது. மாநில அரசுகளும் பெரும் செலவு செய்கின்றன. இதில் பாதி, நெல்லுக்குச் செலவிடப்படுகிறது. உணவு தானியங்களில், மிக அதிக நீரைக் கோருவதும், மிகக் குறைவான ஊட்டச்சத்து கொண்டதுமான தானியம் நெல்தான். 

பல மாநிலங்களில் நீராதாரங்கள் வரைமுறையின்றிச் சூறையாடப்படுகின்றன. இந்தச் செல்திசை நீடித்து நிலைக்கக் கூடியதல்ல. எனவே, இந்தியாவின் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புக் கொள்கைகளை அரசுகள் மீளாய்வுக்குள்ளாக்க வேண்டியது உடனடித் தேவை.

தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன? 

தமிழ்நாட்டில், இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், சிறுதானிய உற்பத்திக்கெனத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்திலும் சிறுதானிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது அரசு.

இந்தத் திட்டத்தை அமல்படுத்துகையில், ஹைதராபாத்தில் உள்ள 'இக்ரிசாட்'டுடன் இணைந்து, அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளை ஒப்பிட்டு, எது மாணவர்களின் உடல் வளர்ச்சிக்கு அதிக உதவியாக உள்ளது என்னும் ஆராய்ச்சியைச் செய்யலாம். இக்ரிசாட்டின் ஆராய்ச்சி முடிவுகள் தமிழ்நாட்டிலும் உறுதிசெய்யப்பட்டால், தமிழ்நாட்டில் சிறுதானிய உற்பத்திக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நல்ல கொள்முதல் விலை கொடுக்கப்படலாம். 

பொது விநியோகத்திலும், அரிசியின் பங்கு குறைக்கப்பட்டு, சிறுதானியங்களின் பங்கு அதிகப்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் ராகிக்கு கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.25 ஆக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் கிலோவுக்கு ரூ.35 ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த அளவுக் கொள்முதல் விலை கொடுக்கப்பட்டால், அது தமிழ்நாட்டில் பின் தங்கியுள்ள மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி உழவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் கிடைப்பது அதிகரிக்கும். ராகி, கம்பு போன்றவை மிகக் குறைவான நீர்த் தேவை கொண்டவை.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் இருந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் இந்திய வேளாண் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. இன்று நாம் தேவைக்கு அதிகமாக உணவை உற்பத்தி செய்கிறோம். எனவே, இன்று நாம், சத்தான உணவை உற்பத்தி செய்தல், உழவர்களுக்கான சரியான கொள்முதல் விலையைக் கொடுத்தல், வேளாண்மைக்கான நீர்ச் செலவைக் குறைத்தல் போன்ற அடுத்த நிலைக் குறிக்கோள்களை நோக்கி நகர வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


5

8





உலகச் சூழலைப் புறக்கணித்த பட்ஜெட் உரைகல்விமுறைதொழில் வளர டாடா காட்டிய வழிவைஷாலி ஷெராஃப் கட்டுரைகும்பலின் தலைவர்பன்மொழி அதிகாரம்ஸ்கிரீனிங்வெறுப்பை ஊட்டும் பேச்சுநிதி வருவாய்விடுதலைப் புலிகள்அருஞ்சொல் ப.சிதம்பரம் பேட்டிஒரியன்டலிஸம்பஜ்ரங் பலிஅறிவுரைபார்ப்பனர்தமிழ்நாடு அரசியல்தென்னாப்பிரிக்க நாவல்செ.வெ. காசிநாதன்சிப்கோ ஆந்தோலன்இனவாதம்இணையதளம்குறட்டை விடுவது ஏன்?இத்தாலிஸ்ரீஹரிக்கோட்டாவட இந்திய கோட்டைகல்வியாளர்கள்பெக்கி மோகன் கட்டுரைஅருந்ததியர்ஆகஸ்ட் 15சமாதான பேச்சுவார்த்தை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!