கட்டுரை, சட்டம், ஆரோக்கியம் 7 நிமிட வாசிப்பு
உடல் உறுப்பு தானத் திட்டம் சீரமைக்கப்படுமா?
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு, நவீன உடல் உறுப்பு தானம் என்னும் வெற்றிகரமான பொதுநலத் திட்டத்துக்கு அஸ்திவாரமிட்டது. இன்று இத்திட்டம், நாடெங்கும் பின்பற்றப்படும் ஒரு முன்மாதிரித் திட்டமாக ஆகியிருக்கிறது.
மூளைச்சாவு அடைந்த உடல்களில் இருந்து, உறுப்புகளைத் தானமாகப் பெற்று, உடல் உறுப்புகள் செயலிழந்து, சாவை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளைக் காப்பதற்கான இந்தத் திட்டம், 2008 அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் ஆதரவோடு, பொதுநலத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், தன்னார்வல நிறுவனங்கள் என இத்துறைக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு குழுவினால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டமானது, வெளிப்படைத்தன்மை, திட்டமிடுதலில் அனைவரின் பங்கேற்பு, மையப்படுத்தப்படாத தன்னாட்சி நிர்வாகம், நெகிழ்வுத்தன்மை முதலிய கூறுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இதனால், சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த உறுப்பு தானத் திட்டம், மிக வேகமாக, வெற்றிகரமாகத் தமிழ்நாட்டில் வளர்ந்தது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி மருத்துவ இதழ்களில், இதன் வெற்றி பேசுபொருளானது. உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டமொன்றிலும் இதன் வெற்றி விதந்து பேசப்பட்டிருக்கிறது.
ட்ரான்ஸ்டான்
குறைவான நிதியாதாரங்களை வைத்துக்கொண்டு, செயல்திறன் மிக்க இந்த உறுப்பு தானத் திட்டத்தை, இந்திய மாநிலங்களில் வெற்றிகரமாக உருவாக்கியது தமிழ்நாடுதான் எனச் சொல்ல வேண்டும். இந்தத் திட்டம் வேகமாக வளர்ந்து, கல்லீரல் மற்றும் இருதய மாற்று சிகிச்சைகளும் தமிழ்நாட்டில் அதிகமாக நடக்கத் தொடங்கின. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, மாற்று உறுப்பு தேவைப்படும் நோயாளிகள், தமிழகம் வந்து, இந்தத் திட்டத்தில் பங்கேற்றுப் புத்துயிர் பெற்றனர்.
இந்தத் திட்டத்தை அணுகி ஆராய்கையில், சமீப காலங்களில், பல குறைபாடுகள் உருவாகியுள்ளது தெரியவருகிறது. 2009 தொடங்கி, தொடர்ந்து ஆண்டுகள் உறுப்பு தானத் திட்டத்தில், இந்தியாவின் முதன்மை மாநிலமாக விருதுகள் பெற்ற தமிழ்நாட்டில், 2016 முதல் சிகிச்சைகள் குறைந்துள்ளதைக் காண முடிகிறது. இந்தக் காலகட்டத்தில், நிகழ்ந்த ஒரே மாற்றம், தமிழக உறுப்பு தானச் செயல்பாடுகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல அனுமதித்தது மட்டுமே.
1994இல் உருவாக்கப்பட்ட மத்திய மனித உறுப்பு மாற்றுச் சட்டத்தில் பல குறைகள் இருந்தன. 2008இல் தமிழக அரசு, சில மாத இடைவெளிகளில், 7 அரசு ஆணைகளை வெளியிட்டு, இந்தக் குறைகளைக் களைந்தது. தமிழக உறுப்பு தானத் திட்டம் பெரும் வெற்றியை அடைவதில், இந்த 7 அரசாணைகள் முக்கியப் பங்கு வகித்தன.
மூளைச் சாவு அடைந்த உடல்களில் இருந்து தானமாகப் பெறப்படும் உறுப்புகளை, எவ்வாறு தேவைப்படும் நோயாளிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது மிகவும் சிக்கலான பணியாகும். தமிழக அரசு, இத்துறையில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் பயனாளிகளில் பங்கேற்பு வழியாக உருவாக்கிய இவ்விதிகள், சிக்கல்களைக் களைந்து, செயல்பாடுகளை எளிதாக்கின.
மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருப்போர் பட்டியல் ஒன்று தன்னாட்சி பெற்ற நிர்வாக அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டு, உறுப்பு பங்கீடு முதலான செயல்பாடுகள் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு குழுவால் வழிநடத்தப்பட்டன.
பல மாநிலங்கள், தமிழகம் வெளியிட்ட அரசாணைகளை அப்படியே நகலெடுத்து அவற்றின் அடிப்படையில், தங்கள் மாநிலத்தில் உறுப்பு தானத் திட்டத்தை நடைமுறைப்படுத்தின. தமிழக உறுப்பு மாற்று சிகிச்சை அமைப்பின் நடவடிக்கைள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு முறைசார்ந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என ஒரு எண்ணம் உருவாகி, ‘ட்ரான்ஸ்டான்’ (Transaplantation Organisation of Tamilnadu) – தமிழக உறுப்பு மாற்று நிறுவனம், 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
நோட்டோ
1994இல் உருவாக்கப்பட்ட மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம் 2011இல் மாறுதலுக்குள்ளாக்கப்பட்டு, அதன் விதிமுறைகள், 2014இல் மத்திய அரசால் வெளியிடப்பட்டன. நமது அரசமைப்புச் சட்டப்படி, சுகாதாரத் துறை மாநில அரசின் கீழ் வருவது ஆகும். எனவே மத்திய அரசின் விதிமுறைகள், மாநில அரசுகளால் ஏற்கப்பட்டு, சட்டமாக மாற்றப்பட்டால்தான் நடைமுறைக்கு வரும்.
2011இல் மாற்றப்பட்ட மத்திய அரசின் சட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், அது தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனம் (National Organ and Tissue Transplant Organisation – NOTTO) - நோட்டோ என மையப்படுத்தப்பட்ட நிறுவனம் ஒன்றை உருவாக்குவதைப் பேசுவதுதான். 2011 சட்டம், இந்த நோட்டோ நிறுவனத்துக்கு, மாநில உறுப்பு மாற்று நிறுவனங்களின் செயல்முறைகளை நெறிப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுக்கிறது. இது பலவிதங்களில், மாநில உறுப்பு மாற்று நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதித்து, செயல்திறனைக் குறைக்க வல்லது.
ஆரம்பத்திலிருந்தே, இந்த நோட்டோ நிறுவனம், மாநில உறுப்பு மாற்று சிகிச்சை அமைப்புகளைப் புறக்கணித்து நேரடியாக மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளிடம் தொடர்புகொண்டு, உறுப்பு தானம் வேண்டுவோர் தகவல்களைத் தான் நிர்வகித்துவரும் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கச் சொன்னது. தமிழ்நாடோ இது போன்ற கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையில், நோட்டோ நிறுவனம் கொடுத்த அழுத்தத்தைத் தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைவுக்குப் பின்பு, இந்த நிலை மாறியுள்ளதுபோலத் தெரிகிறது. துரதிருஷ்டவசமாக, தமிழக உறுப்பு மாற்று சிகிச்சைத் திட்டத்தின் வெற்றி, அரசியல் தளத்தில், தேவையற்ற பக்கவிளைவுகளை உருவாக்கிவிட்டது. அது வரையில், சுகாதாரத் துறை நிர்வாகத்தில் பெரிதும் தலையிடாமல் இருந்த அரசியல் தரப்பு, தமிழக உறுப்பு மாற்று நிறுவனத்தின் வெற்றிகளுக்காக, வருடாவருடம் இந்திய அரசு வழங்கும் விருதுகளை, தங்கள் ஆட்சியின் சாதனைகளாகக் காட்டிக்கொள்வதற்கான வாய்ப்பாகக் கருதிக்கொண்டது.
மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும்
2011இல் மாற்றப்பட்ட மத்திய சட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை எதிர்த்து, தமிழக உறுப்பு தானச் சட்டம் உருவானதன் பின்னணியில் இருந்த முக்கியமான சிலர், மத்திய அரசின் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வெற்றிகரமாக இயங்கிவரும் தமிழக உறுப்பு தானத் திட்டத்துக்குப் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு, அரசுக்குக் கடிதம் எழுதினார்கள்.
ஆனால், மத்திய அரசின் தொடர் அழுத்தத்துக்குத் தமிழக அரசு பணிந்ததுபோலத் தெரிகிறது. 2020 மார்ச் 24ஆம் தேதி, தமிழக அரசு இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. என்ன காரணத்தாலோ, இவ்வளவு முக்கியமான மாற்றமானது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இதுபற்றி பத்திரிகை அறிவிப்போ, இந்தத் திட்டத்தின் பங்களிப்பாளர்களுக்குச் செய்தியோ அரசு தரப்பில் இருந்து சொல்லப்படவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, ‘ட்ரான்ஸ்டான்’ புதிய விதிகளுக்கேற்ப மாற்றப்பட்ட படிவத்தை உபயோகிக்குமாறு சுருக்கமாக ஒரு சுற்றறிக்கை மட்டும் வெளியிட்டது.
வழக்கமாக, அனைத்து அரசாணைகளையும் தனது வலைதளத்தில் வெளியிடும் ‘ட்ரான்ஸ்டான்’ நிறுவனம், இந்த முக்கியமான அரசாணையை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. மிக அரிதான அறுவை சிகிச்சைகள் போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் பத்திரிகைகளுக்குச் செய்தி வழங்கும் தமிழக அரசு, இந்த மாற்றத்தைப் பற்றிப் பேசாமல் அமைதியாக இருப்பது, தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை, மத்திய அரசுக்கு விட்டுக்கொடுத்து பணிந்துபோவதைக் காட்டுகிறது.
தன்னாட்சி நிர்வாகம், தொடர் உழைப்பு இவற்றால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உறுப்பு மாற்று அமைப்பின் மீதான அதிகாரத்தை இழந்திருக்கிறோம். சுகாதாரம் என்னும் மாநிலப் பட்டியலின் கீழ் வரும் துறையை, மத்திய அரசுக்கு விட்டுக்கொடுப்பது வருத்தத்துக்குரிய செயலாகும். இது ட்ரான்ஸ்டான் நிர்வாகத்தின் செயல்திறனைப் பாதித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 3 years ago
மிக வேதனையான விடயம். ஆளும் மாநில அரசு மருத்துவ துறையை கவனிக்க வேண்டும். Corona பேரிடரில் நிறைய உறுப்பு தானம் பற்றி ஆராய்ச்சி செய்து, அதன் மூலம் கிடைக்கும் தரவை பற்றி கொண்டு உறுப்பு தானத்தின் அடுத்த நிலைக்கு சென்று இருக்கலாம்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.