கட்டுரை, அரசியல் 7 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு எதிராக தேசம் திரளுகிறதா?

அஜோய் ஆசீர்வாத் மஹப்ராஷ்டா
03 Nov 2021, 5:00 am

டைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமானதாக இல்லையென்றால், மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று பொருள். 13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும், காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் இருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள இமாசலப் பிரதேசத்தில், ஆளும் பாஜகவுக்கு மோசமான தோல்வி கிடைத்திருக்கிறது. வங்கத்தில் பாஜக முழுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மகத்தான வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. 

அசாம் மட்டுமே விதிவிலக்கு. அங்கே முதல்வர் ஹிமந்த விஸ்வாஸின் தலைமை காரணமாக, ஐந்து சட்டமன்றத்  தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹூசுராபாத் தொகுதியில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி வேட்பாளரைத் தோற்கடித்திருக்கிறது பாஜக. என்றாலும் வென்றவர், ஏற்கெனவே அதே தொகுதியில் டிஆர்எஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு ஜெயித்தவர் என்பதால் இது முழுமையாக பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்க முடியாது. 

கவனம் ஈர்க்கும் காங்கிரஸின் வெற்றி

மகாராஷ்டிரத்தின் டேக்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடுமையான போட்டிக்கு நடுவே பாஜகவை 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர். இத்தனைக்கும் இந்தத் தொகுதியில் பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் உள்ளிட்ட தலைவர்கள் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனாலும், காங்கிரஸின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. பாஜக ஆளும் கர்நாடகத்தில் ஹங்கல் சட்டப் பேரவைத் தொகுதியை பாஜகவிடமிருந்து கைப்பற்றியதில் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் அதிக மகிழ்ச்சி இருக்கும். காரணம் இந்தத் தொகுதி மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஹவேரி மாவட்டத்தில்தான் இருக்கிறது.

ராஜஸ்தானில் வல்லப நகர் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டதுடன், தாரியாவாட் தொகுதியை பாஜகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். வல்லப நகரில் பாஜக வேட்பாளர் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தாரியாவாடிலும் பாஜகவுக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்திருக்கிறது. இதெல்லாம், ராஜஸ்தானில் பாஜகவின் செல்வாக்கு சரிந்துவருவதையே காட்டுகின்றன.

இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றியானது, தொண்டர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தரவல்லது. மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சர் வீரபத்திர சிங்கின் மனைவியுமான பிரதிபா சிங் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தொகுதியில்தான் பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் பேரவைத் தொகுதி இருக்கிறது என்பதால் இது அவருக்கு தனிப்பட்ட முறையிலும் பெரிய தோல்வியாகும். கடந்த 2019 தேர்தலில் இதே மண்டி தொகுதியில், பாஜக 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. அர்க்கி, ஃபதேபூர் பேரவைத் தொகுதிகளைத் தக்க வைத்துக்கொண்ட காங்கிரஸ், ஜுப்பல் கோத்காய் தொகுதியைக் கூடுதலாக பாஜகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் பிரமாண்ட வெற்றி

வட கிழக்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தோல்வியடைந்தது மட்டுமல்ல, அதன் வாக்குகள் ரைஜோர் தளம் என்ற மாநிலக் கட்சிக்கு மாறியிருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ளனவோ அங்கெல்லாம் மக்கள் அந்தக் கட்சிகளையே ஆதரித்துள்ளனர். மேகாலய வாக்காளர்கள், கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி), ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) ஆகியவற்றையே காங்கிரஸுக்கு மாற்றாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வங்கத்தின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொன்றிலும் 75%-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதற்குக் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் காப்புத்தொகையை (டெபாசிட்) தக்கவைப்பதற்குக்கூட பெரும்பாடு பட்டுள்ளன. மிகச் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக இம்முறை நான்கு தொகுதிகளிலும் தோற்றுவிட்டது. சாந்திபூர் தொகுதியில் மட்டுமே அதற்கு காப்புத்தொகை கிடைத்தது. மத்திய உள்துறை இணையமைச்சர் நிஷித் பிரமாணிக் நூலிழையில் வென்ற தின்ஹாட்டா பேரவைத் தொகுதியில் திரிணமூல் இம்முறை 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. (பேரவைத் தொகுதியில் வெற்ற பிரமாணிக், மத்திய அரசில் பதவி பெற்றதால் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்) நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இவ்வளவு பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வங்கத்தில் எந்த வேட்பாளரும் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதே இல்லை. இடதுசாரி வேட்பாளர்களுக்கு இத்தேர்தலில் ஆதரவு கூடியிருக்கிறது. பாஜகவுக்கு வாக்களித்த பலர் இப்போது மீண்டும் இடதுசாரி முன்னணி நோக்கி நகர்வதும் தெரியவந்துள்ளது.

ஆந்திர நிலவரம்

ஆந்திரத்தில் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜகவை 90,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. சிவசேனைக் கட்சிக்கு மகாராஷ்டிரத்துக்கு வெளியே முதன் முறையாக ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி கிடைத்திருக்கிறது. மராட்டியர்கள் அதிகம் வசிக்கும் தாத்ரா-நாகர் ஹவேலி மக்களவைத் தொகுதியில், கலாபென் தேல்கர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். இவர் இத்தொகுதியில் சுயேச்சை உறுப்பினராக முன்னர் இருந்த மோகன் தேல்கரின் மனைவி. பாஜக வேட்பாளர் படுதோல்வி அடைந்தார்.

ஹரியாணாவில் எல்லனாபாத் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய லோக தளம் கட்சித் தலைவர் அபய் சௌடாலா வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தொகுதியில் முன்னர் உறுப்பினராக இருந்த சௌடாலா, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். இத்தொகுதியில் போட்டி கடுமையாக இருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போல, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.

பிஹாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தின. தாராபூர், குஷேஷ்வர் ஆஷ்தான் தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் பெறப்போகும் தோல்விதான் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அரசியல் சந்நியாசத்துக்கு முதல்கட்டமாக இருக்கப்போகிறது என்று சமீபத்தில் பிஹார் திரும்பிய முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்  கூறியிருந்தார். காங்கிரசும், ஆர்ஜேடியும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

காங்கிரஸுக்கு 53

மஹாராஷ்டிரத்தில் மண்டி தொகுதி வெற்றியை அடுத்து மக்களவையில் காங்கிரஸின் பலம் 53 ஆக உயர்ந்திருக்கிறது. தாத்ரா-நாகர் ஹவேலி வெற்றிக்குப் பிறகு சிவசேனையின் வலு 19 ஆகியிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டதால் பாஜகவின் மக்களவை பலம் எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடர்கிறது.

இடைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு 3 பேரவைத் தொகுதிகள் கூடுதலாக - அதுவும் அசாமில் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் மூன்று பேரவைத் தொகுதிகளை இழந்திருக்கிறது. தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. தெலங்கானா விதிவிலக்கு. வங்கத்திலும் இமாசலத்திலும் பாஜகவுக்கு சரியான அடி விழுந்திருக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியோ பாஜக ஆளும் மாநிலங்களிலேயே நன்றாக ஆதரவைப் பெருக்கிக்கொண்டிருக்கிறது. தான் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது.

சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வு - குறிப்பாக பெட்ரோல்-டீசல் விலையுயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், தொழில் - வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலத்தில் முறையாகத் திட்டமிடாமல் ஊரடங்கை அமல்படுத்தி கோடிக்கணக்கான மக்களை - குறிப்பாக புலம்பெயரும் தொழிலாளர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது போன்றவற்றால் பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் அதற்கான எச்சரிக்கை மணிதான். தொடர்ந்து கட்சி இப்பிரச்சினைகளை அலட்சியம் செய்தால் அதற்கு வீழ்ச்சி நிச்சயம்.

© தி வயர் .இன்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி







பத்திரிகைகள்அம்பேத்கரின் இறுதி நாள்எழுத்துத் தேர்வுகலைக் கல்லூரிசங்கீத கலாநிதிகாந்தி செய்த மாயம் என்ன?தூசுசிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிஎஸ்.கிருஷ்ணன் கட்டுரைடிரான்ஸ் ஃபேட்மாவட்டங்கள்துணை முதல்வர்கள்தி இந்து சமஸ்நல்ல ஆண்கலோரிநாடாளுமன்றம்ஷிஃப்ட் கணக்குஇந்திய ஆட்சிப்பணிகாணொலிவெங்கய்ய நாயுடுஊடகர் ஹார்னிமன்தேசீய உணர்ச்சிமு.க.ஸ்டாலின்இருபத்தோராம் நூற்றாண்டில் மானுடம்: அருகிவரும் அறம்அகில இந்திய மசாலாதிஷா அலுவாலியா கட்டுரைமனவலிமைபுகைப்படத் தொகுப்புயானைமஹர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!