கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான்: இரு பக்கக் காற்று

ஆசிம் அலி
02 Nov 2023, 5:00 am
0

ராஜஸ்தான் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் களத்தில் இதுவரை எந்தக் கட்சிக்கும் ஆதரவாக அலை அடிக்கவில்லை. முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிரான அதிருப்தி தரைக்கு அடியில் உருவானாலும், ராஜஸ்தான் மாநில பாஜக தலைமையிடம் நிலவும் ஆர்வமின்மை காரணமாகவும் உள்கட்சிப் பூசல்கள் காரணமாகவும் அந்த அதிருப்தி வெளியில் தெரியவும் இல்லை, பெரிதாக உருவெடுக்கவும் இல்லை.

இரண்டு முக்கிய அம்சங்கள்

ராஜஸ்தானில் இப்படிப்பட்ட அரசியல் நிலை புதிதும் அல்ல; ‘புயல்’, ‘கொந்தளிப்பு’ என்று எத்தனை வார்த்தைகளைப் போட்டு எழுத விரும்பினாலும் இந்த மாநில அரசியல் எப்போதுமே இப்படித்தான் சவசவவென்றே இருக்கும். கடந்த தேர்தல் ஆய்வறிக்கை சுட்டும் இரண்டு முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

  1. ராஜஸ்தான் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள், வாக்குப் பதிவுக்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் தங்களுடைய முடிவைத் தீர்மானிக்கிறார்கள்.
  2. இரண்டாவது, வேட்பாளர் தேர்வு மிக மிக முக்கியம். மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் (33%) முதல், சரிபாதி (50%) வரையில், உள்ளூர் வேட்பாளர்களுக்குத்தான் ஆதரவு தருகின்றனர். அதேசமயம் கடந்த இருபதாண்டுகளாக 20% வாக்காளர்கள் சுயேச்சைகளுக்கும் மூன்றாவது இடக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதையே கடமையாக மேற்கொண்டுவருகிறார்கள்!

முன்னிறுத்தப்படும் மோடி

காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே, இப்படிக் கடைசி நேரத்தில் முடிவுசெய்யும் வாக்காளர்களின் ஆதரவையும் பெறுவதற்கு வியூகம் வகுத்திருக்கின்றன. இந்த வாக்காளர்களைக் கவர, இதுவரை கடைப்பிடிக்காத புதிய முன்னுதாரணத்தை அவை ஏற்படுத்தியிருக்கின்றன. வேட்பாளர்களை முன்னிறுத்தாமல், தங்களுடைய கட்சிகளைச் சேர்ந்த – வாக்காளர்களால் மிகவும் விரும்பப்படுகிற தலைவர்களையே பிரச்சாரத்தில் முன்னிறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி முதல்வர் அசோக் கெலாட்டையும் பாஜக பிரதமர் மோடியையும் முன்னிலைப்படுத்திவருகின்றன.

ராஜஸ்தான் அரசியல் என்பது வெகு காலமாகவே சமஸ்தானங்களின் சூழ்ச்சிகளாலும் கட்சிகளின் கோஷ்டிப் பூசல்களாலும் தனி பாணியைக் கொண்டது. 1980களில் காங்கிரஸ் கட்சி மூன்று பேரை முதல்வர்களாக மாற்றி மாற்றி பதவியில் அமர்த்தி சமாளித்தது. ராஜஸ்தானின் முதல் பட்டியலின முதல்வரான ஜகந்நாத் பகாடியாவை, கட்சிக்குள் இரண்டு பெரிய கோஷ்டிகள் மோதும் நிலை ஏற்படும்போதெல்லாம் சமப்படுத்தும் துருப்புச் சீட்டாக காங்கிரஸ் மேலிடம் பயன்படுத்திவந்தது. கட்சியின் கோஷ்டிகள் பெரும்பாலும் பிராமணர்களையும் ஜாட்டுகளையும்தான் தலைவர்களாகக் கொண்டிருக்கும்.

1990களில் பைரோன் சிங் ஷெகாவத் (பாஜக), அசோக் கெலாட் (காங்கிரஸ்), வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக) ஆகிய மூவருமே, தலைமைக்கு எதிராகப் பூசல் செய்கிறவர்களை (மாற்றுக்கட்சியாக இருந்தாலும்) அரசியல் லாபத்துக்காக ஆதரிப்பதில்லை என்று பொது முடிவு எடுத்தார்கள். இதனால் இரு கட்சிகளிலும் மாநிலத் தலைமைகளை எதிர்ப்பவர்களுக்கு மதிப்பில்லாமல் போனது.

இதற்கு உதாரணம் தேவையென்றால் 2020இல் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உச்சபட்சமாக புரட்சிக்குரல் கொடுத்தும் பாஜகவின் மாநிலத் தலைமை ஆர்வம் காட்டாததால் அவருடைய புரட்சியை முறியடித்தார் கெலாட். கெலாட்டை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற காங்கிரஸின் தில்லி தலைமையே மிருதுவாக பின்னர் முயன்றும்கூட, கெலாட்டால் இதனால்தான் வெல்ல முடிந்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்

ப.சிதம்பரம் 16 Oct 2023

தனிப்பெரும் தலைவர் கெலாட்

ராஜஸ்தான் காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக அசோக் கெலாட் வளர்ந்திருப்பதை, கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக காங்கிரஸின் இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலருக்கு மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது என்று கட்சித் தொண்டர்களே வாதிட்டனர்.

காங்கிரஸ் கட்சியே நடத்திய சர்வேயில்கூட, ஆளுங்கட்சியின் பேரவை உறுப்பினர்களில் பலருக்கு எதிராக தொகுதியில் கடும் அதிருப்தி நிலவுவது தெரிந்தது. ஆனால், முதல்வர் கெலாட் தனது அமைச்சரவை சகாக்களில் பெரும்பாலானவர்களுக்கும் பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையோருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறார். இவர்களைத் தவிர தனக்கு விசுவாசமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் சுயேச்சைகளுக்கும்கூட போட்டியியிட வாய்ப்பளித்திருக்கிறார்.

சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது; கெலாட்டின் ஊழலுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் புஸ்வாணமாகிவிட்டது. தனக்கு விசுவாசமாக இருந்தால் போதும் என்று முதல்வர் கெலாட் பலருடைய ஊழல் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை என்று கட்சியினரே அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மாநில மக்களுக்கு, தான் புதிதாக அறிமுகப்படுத்திய சமூக நலத் திட்டங்களில் தலையிட்டு அதைக் கெடுக்காமல், எதையோ செய்துகொள்ளட்டும் என்று பேரவை காங்கிரஸ் உறுப்பினர்களின் கவனத்தைத் திசைத் திருப்பிவிட்டார் கெலாட் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் வகையில் பல அத்தியாவசியப் பொருள்களைக் குறைந்த விலையிலும் விலையில்லாமலும் வழங்கினார் கெலாட்.

இதனால் ஏழைகள், கடைசி நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பைதத் தீர்மானிக்கும் வாக்காளர்கள் ஆகியோருடைய ஆதரவைப் பெற்றுவிடுவார் கெலாட் என்கின்றனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பொது வேட்பாளர் மோடி

கெலாட்டுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியும் அவரைப் பதவியிலிருந்து அகற்ற முடியவில்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் ஒப்புக்கொண்டுவிட்டார் சச்சின் பைலட். காங்கிரஸ் தலைமையுமே, ‘ராஜஸ்தான் தேர்தலில் கெலாட் தலைமையில்தான் போட்டியிடுகிறோம், சமூக நலத் திட்டங்கள்தான் எங்களுடைய பிரச்சார வாகனம்’ என்று அறிவித்துவிட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னால் முதல்வரை மாற்றிய சோதனையால் ஆட்சியை இழந்ததிலிருந்து, காங்கிரஸ் தலைமை பாடம் கற்றுக்கொண்டுவிட்டது. ராஜஸ்தானில் கடந்த முப்பதாண்டுகளாக எந்த அரசியல் கட்சியும் அடுத்தடுத்த பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டதில்லை. இந்த முறை அதை முறியடித்துவிட காங்கிரஸ் தலைமை உறுதியாக இருக்கிறது.

இந்தத் தேர்தலில் கெலாட்டை வலுவாக எதிர்ப்பவர் பிரதமர் நரேந்திர மோடிதான். ஆம், ராஜஸ்தான் வாக்காளர்களிடையே மோடிக்குப் பெரிய ஆதரவு இருக்கிறது. அதனால்தான் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தது. இவர்கள் மோடியின் அரசியல் தூதர்கள் என்ற உணர்வு வாக்காளர்களுக்கு ஏற்பட வேண்டும் என்று அது விரும்புகிறது.

அடுத்து மக்களவைக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதிச் சுற்றுத் தேர்தலாக ராஜஸ்தான் தேர்தலை பாஜக தலைமை கருதுகிறது. எனவே, களத்தில் மோடிதான் அதன் பொது வேட்பாளர்.

பாஜகவின் தேர்தல் உத்தி ஓரளவுக்கு பொருத்தமானதும்கூட. 2019 பொதுத் தேர்தலில் ராஜஸ்தானில் 59% வாக்குகளை பாஜக பெற மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே காரணம். 2018 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றதைவிட 20% அதிக வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்தன. பாஜக குறிவைக்கும் சில தொகுதிகளில் மோடிக்கு செல்வாக்கு மிக மிக அதிகம்.

பாஜகவின் உள்முரண்

அரசியல் கள நிலவரம் என்றால் ராஜபுத்திரர்களும், பணியாக்களும் (வாணியர்கள்) பாஜக ஆதரவாளர்கள், பட்டியல் இனத்தவர்களும் முஸ்லிம்களும் காங்கிரஸ் ஆதரவாளர்கள். பிராமணர்கள், ஜாட்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள்தான் தேர்தல் முடிவைத் தேர்ந்தெடுக்கும் கடைசி நேர வாக்காளர்கள். 2018 ராஜஸ்தான் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் – 2019 மக்களவை பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் இந்தப் பிரிவு வாக்காளர்கள் அளித்த ஆதரவைப் பார்த்தாலே இது புரியும்.

பிராமணர்களின் வாக்குகள் 45% - 82%, ஜாட்டுகளின் வாக்குகள் 26% - 85%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 46% - 72%, பழங்குடிகள் 40% - 55%. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் ஆதரவு பெரிய அளவு ஊசலாட்டமாக இருக்காது என்றாலும் மோடியின் செல்வாக்கு தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று பாஜக நம்புகிறது.

தலைமையிலும் மோடிக்கும் கெலாட்டுக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது. சமூக நலத் திட்டங்கள் குறித்து அதிகம் பேசாமல், ராஜஸ்தானின் அடித்தளக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தே மோடி பேசுகிறார்.

வசுந்தரா ராஜ சிந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், அதேசமயம் அவருக்கும் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பளித்து கட்சிதான் பெரியது என்பதை உணர்த்தியிருக்கிறது மேலிடம். மோடி – ஷா இரட்டைத் தலைமை பிரச்சார இயந்திரத்துக்குத் தலைமை வகிப்பதையும் வேட்பாளர்கள் தேர்வில் செல்வாக்கு செலுத்தியதையும் பாஜகவின் மாநிலத் தலைவர்கள் பலர் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்

சமஸ் | Samas 16 Aug 2023

இரண்டு அம்சங்கள்  

இந்தத் தேர்தல் முடிவை ஒரு கட்சிக்கு சார்பாகத் திருப்பக்கூடிய அம்சங்கள் இரண்டு இருக்கின்றன.

  1. மூன்றாம் இட அரசியல் கட்சிகள் எவ்வளவு வாக்குகளைப் பெறப் போகின்றன என்பதைப் பொருத்தும் தேர்தல் முடிவு அமையலாம். காங்கிரஸுக்குக் கிடைக்க வேண்டிய பட்டியல் இன வாக்குகளை பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. 2019இல் பாஜகவுடன் கூட்டணிக் கட்சியாக இருந்த ஆர்எல்பி (ஹனுமான் பெணிவால்) பாஜகவுக்கு ஆதரவான ஜாட்டுகளுடைய வாக்குகளைப் பெற்று அதைத் தோல்விபெறச் செய்யக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ராஜஸ்தானின் 40 தொகுதிகளில் வெறும் 3% அல்லது அதற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி – தோல்விகள் ஏற்பட்டன. பிடிபி என்கிற பழங்குடி கட்சியும் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு அதிகமாகத் தெரிகிறது.
  2. இரண்டாவது அம்சம், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவகாரம். கடந்த ஆகஸ்ட் மாதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மேலும் 6% இடங்களை ஒதுக்குவதாக முதல்வர் கெலாட் அறிவித்தார். சில வாரங்களுக்கு முன்னால் இன்னொரு அறிவிப்பு மூலம் பிஹாரைப் போல ராஜஸ்தானிலும் சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற உத்தரவிட்டார். இவ்விரு செயல்களால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகள் காங்கிரஸுக்கு அதிகமாகக் கிடைக்கும்; அதே நேரத்தில் ஜாட்டுகள், மேல் சாதியினர் வாக்குகள் பாஜக பக்கம் குவிவதற்கும் வழிவகுத்துவிடும். ஆனால், மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகம். அத்துடன் பழங்குடிகளும், பட்டியல் இனத்தவரும் காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள்.

இந்தப் பேரவைத் தேர்தல் முடிவு எப்படியாக இருந்தாலும், ராஜஸ்தான் அரசியல் கட்டமைப்பின் மீது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தப் போவது நிச்சயம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்
ராஜஸ்தானின் முன்னோடித் தொழிலாளர் சட்டம்
மோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசிம் அலி

ஆசிம் அலி. டெல்லியைப் பின்புலமாகக் கொண்டு இயங்கும் சமூக அறிவியலர். அரசியல் விமர்சகர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3


மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாபிஹாரிகள்பானைபாஜக வெற்றியைத் தடுக்க மூன்றுவித உத்திகளே போதும்!சாவர்க்கர் சிறை அனுபவங்கள்ஏற்பாடுசெய்யப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம்கேரலின் ஆர். பெர்டோஸிகல்வியும்விழித்தெழுதலின் அவசியமா?நாயகன்அரசமைப்பு நிர்ணய சபைகலாச்சாரம்இரும்புமாநில நிதிநிலை அறிக்கைபீட்டர் அல்ஃபோன்ஸ் உள்ளதைப் பேசுவோம் பேட்டிஅறிவியலாளர்களின் அறிக்கைதஞ்சை பிராந்தியம்சில ஊகங்கள்பிராந்திய பிரதிநிதித்துவம்நெருப்பு வட்டத்துக்குள் அண்ணாமலைவி.பி.சிங்அ.முத்துலிங்கம் கட்டுரைசத்தீஸ்கர்: மாறும் ஆட்டக்காரர்கள்சமூக நீதிமாணவர் நலன்பொதுவுடைமை சித்தாந்தங்கள்திராவிட இயக்கம்500 மெகாவாட்எழுத்துச் சீர்திருத்தம்ஐஏஎஸ் அதிகாரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!