கட்டுரை, கலை, சினிமா, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாமன்னன்: கமல், காம்யு, காமெல், மாரி!

ஆசை
25 Jun 2023, 5:00 am
2

ன்று பெரிய தேவர் மகன் சக்தி தேவர் அரிவாளைக் கீழே போட்டுவிட்டார். ஆனால், அதன் வளைந்த முனை இன்று சமூக ஊடகங்கள் வரை கீறிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘மாமன்னன்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ குறித்து கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. முன்னதாக, மாரி செல்வராஜ் ‘தேவர் மகன்’ படத்தை விமர்சித்து எழுதிய பழைய கடிதமொன்றும் சமூக ஊடகங்களில் பரவுகிறது. 

நாம் சர்ச்சைகளை விட்டுவிட்டு, மாரி செல்வராஜ் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். ‘தேவர் மகன்’ படத்துக்கான எதிர்வினையாகவே ‘மாமன்னன்’ படத்தை எடுத்திருப்பதாகச் சொன்னார் மாரி செல்வராஜ். இந்தப் பதிலடி முறை தமிழுக்கு, குறிப்பாக திரைத் துறைக்குப் புதிதாக இருப்பதாலேயே அதிகம் இங்கே பேச்சு நிலவுகிறது. ஆனால், இது போன்ற பதிலடிப் படைப்புகளுக்கு ஏராளமான உதாரணங்கள் கலைத் துறையில் இருக்கின்றன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓர் இலக்கிய உதாரணத்தை இங்கே பார்ப்போம். 

வரலாற்றின் மறுவிசாரணை

பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யு (1913 - 1960) எழுதிய ‘அந்நியன்’ (தமிழில்: வெ.ஸ்ரீராம், க்ரியா) நாவலுக்குப் பதிலடி நாவலாக அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுத் பிரெஞ்சு மொழியில் எழுதிய ‘மெர்சோ: மறுவிசாரணை’ (தமிழில்: வெ.ஸ்ரீராம், க்ரியா) நாவலே சர்வதேசப் புகழ்பெற்ற அந்த முன்னுதாரணம். இரண்டு நாவலுக்குமான கால இடைவெளி 71 ஆண்டுகள். 

உலகின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று ‘அந்நியன்’. ஆல்பெர் காம்யுவுக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு முக்கியக் காரணம் இந்த நாவல். காமெல் தாவுதின் நாவல் சரியாக ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டில் வெளியானது.

முதலில் ‘அந்நியன்’ நாவல். இந்த நாவலின் நாயகன் பெயர் மெர்சோ. பிரான்ஸின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த அல்ஜீரியாவில் வசிக்கும் பிரெஞ்சுக்காரன். நாவலின் தொடக்க வரிகள் மிகவும் புகழ் பெற்றவை. மெர்சோவைப் பற்றியும் நாவலின் தொனி, போக்கு போன்றவற்றைப் பற்றியும் நமக்குத் தெளிவாக உணர்த்தக் கூடியவை. ‘இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்.’ 

இப்படிப்பட்ட மெர்சோதான் கடற்கரையில் ஒரு அராபியனைக் கொல்கிறான். நாவலில் அந்த அராபியனுக்குப் பெயர் கிடையாது. கொன்றதற்குக் காரணம் சூரியன்தான் என்று நீதிமன்றத்தில் சொல்கிறான். பொய் சொன்னால் தூக்கிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், மெர்சோ உண்மையையே சொல்கிறான். இதனால் அவனுக்குத் தூக்கு உறுதியாகிறது.

இந்த அலாதியான அலட்சியத்துக்கும் நேர்மைக்கும் இலக்கிய வாசகர்களாலும் விமர்சகர்களாலும் ‘அபத்த நாயகன்’ என்ற அடைமொழியுடன் மெர்சோ புகழப்படுகிறான். தமிழிலும் ஒருகாலத்தில் மெர்சோ கொண்டாடப்பட்டான். சின்னச் சின்ன, அழகிய சொற்றொடர்களைக் கொண்ட காம்யுவின் நடை உலகம் முழுவதிலும் மட்டுமல்ல தமிழ் இலக்கிய உலகிலும் பிரபலம். ‘அந்நியன்’ நாவலின் தொடக்கத்தில் மெர்சோவின் அம்மா சாவதுபோல், சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ (1981) நாவலின் தொடக்கத்தில் ஆல்பெர் காம்யு செத்துப்போகிறார்.

கதைப்படி மெர்சோ ஓர் எதிர்நாயகனாக இருந்தாலும் பிரெஞ்சுக்காரர்கள் அவனைக் கொண்டாடுகிறார்கள். அவனைப் படைத்த காம்யுவைக் கொண்டாடுகிறார்கள். சரி, மெர்சோ சுட்டுக்கொன்றானே பெயரற்ற அராபியன் அவனுடைய இனத்தவர்கள், அதுவும் பிரான்ஸ் அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்த இனத்தவர்கள் மெர்சோவையும் ‘அந்நியன்’ நாவலையும் ஆல்பெர் காம்யுவையும் எப்படிப் பார்த்திருப்பார்கள்? அதுதான் ‘மெர்சோ: மறுவிசாரணை’. 

ஆல்பெர் காம்யு

கமலும் மாரி செல்வராஜும்

இங்கேதான் கமலும் மாரி செல்வராஜும் வருகிறார்கள்.

‘அந்நியன்’ நாவலுக்கு எல்லா விதத்திலும் எதிர்வினையாக இந்த நாவலை காமெல் தாவுத் எழுதியிருக்கிறார். இந்த நாவலின் தொடக்க வரி இது: ‘இன்று அம்மா இன்னும் உயிரோடிருக்கிறாள்’. 

பிரெஞ்சு காலனியாதிக்கத்தால் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகம் விடாப்பிடியாகத் தன்னுடைய வாழ்வுறுதியைத் தக்கவைப்பதற்கான அடையாளமாகத் தெரியும் இந்த வரியை ‘அந்நியன்’ நாவலின் அபத்த நாயகனுடைய வரியையும் ஒப்பிட்டுக்கொள்ளலாம். அதேபோல் ‘அந்நியன்’ பிரெஞ்சு நாவலின் மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையும் ‘மெர்சோ: மறுவிசாரணை’யின் மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையும் சமம்.

ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின் மையம் மெர்சோ என்றால், காமெல் தாவுத் நாவலின் மையம் மெர்சோவால் சுட்டுக்கொல்லப்பட்ட, பெயர்வழங்கப்படாத அராபியன். நாவலில் 25 முறை அந்த அராபியன் குறிப்பிடப்பட்டும் அவன் பெயர் மட்டும் குறிப்பிடப்படவில்லை; மெர்சோ அராபியனைச் சுட்டதைவிட தனது அம்மாவின் சவஅடக்கத்தின்போது அவன் அழவில்லை என்பதைத்தான் நீதிபதிகளும் மற்றவர்களும் பெருங்குற்றமாகக் கருதுகிறார்கள். 

அராபியர்களின் இருப்பு – அடையாளம் -உயிர் எல்லாவற்றையும் சொற்பமாகக் கருதும் ஒரு மனநிலையின் வெளிப்பாடு இது என்று கருதி ‘மெர்சோ – மறுவிசாரணை’ நாவலை காமெல் தாவுத் எழுதுகிறார்.

தாவுத் செய்யும் முதல் வேலை அந்த அராபியனுக்குப் பெயர் கொடுப்பது. மூசா. அதுதான் முதலாவதும் முக்கியமானதுமான எதிர்வினை. ஏனெனில், மற்ற பிரதானப் பாத்திரங்களுக்குப் பெயரில்லாமல் ஒரு புனைவை எழுதுவது அந்தப் புனைவுக்குத் தத்துவரீதியிலான அர்த்தத்தையோ மர்மத்தையோ தருகிறது. ஆனால், கடுமையாக ஒடுக்குதலுக்கு உள்ளான ஒரு சமூகத்தைச் சேர்ந்த பாத்திரத்துக்குப் பெயர் குறிப்பிடாதது அல்லது அந்தப் பாத்திரத்தை உதிரியாகவோ எதிர்மறையாகவோ படைப்பது ஒரு இனத்தின் இருப்பை – அடையாளத்தை மறுதலிப்பது. அதனால்தான், ஓர் அல்ஜீரிய அராபியருக்கு ஒரு அராபியப் பாத்திரம் கொல்லப்பட்டதைவிட அது பெயரற்றுப் படைக்கப்பட்டிருப்பது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

வரலாற்றில் நாம் எஞ்சப்போவதன் மிகக் குறைந்தபட்சம் என்பது நம் பெயர். அது கூட இல்லையென்றால் என்ன செய்வது? ஒரு பேட்டியில் காமெல் தாவுத் இப்படிச் சொல்கிறார்: “மத்தியக் காலத்திலிருந்து வெள்ளையர்களுக்கு ஒரு பழக்கம் இருந்துவருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களின் மலைகள், பூச்சிகளுக்கெல்லாம் அவர்கள்தான் பெயர் வைக்கிறார்கள். அதே நேரத்தில் அங்கெல்லாம் அவர்கள் எதிர்கொள்ளும் மனிதர்களுக்குரிய பெயர்களை வெள்ளையர்கள் மறுக்கிறார்கள். அந்த மனிதர்களின் பெயர்களை நீக்குவதன் மூலம் அற்பமாகக் கொலைகளையும் குற்றங்களையும் செய்கிறார்கள். உங்கள் பெயருக்கு நீங்கள் உரிமை கோருவதன் மூலம் உங்களுக்கான மனிதத்துவத்துக்கும் நீங்கள் உரிமை கோருகிறீர்கள்; இப்படியாக நீதிக்கான உரிமையையும் கோருகிறீர்கள்.”

மூசாவின் தம்பி ஹரூன் மூலம் மெர்சோவையும் கடந்த காலத்தையும் காலனியாதிக்கத்தையும் கூடவே ஆல்பெர் காம்யுவையும் மறுவிசாரணை செய்கிறார் காமெல் தாவுத். ஆனால், காம்யுவை மட்டையடியாக அடித்து இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த நாவல் காமெல் தாவுத் ஆல்பெர் காம்யுவுடன் மேற்கொண்ட உரையாடல் ஆகும்.

இத்தனைக்கும் ஆல்பெர் காம்யு பிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிராகவும் அல்ஜீரியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டவர்தான். வன்முறை கூடாது என்ற நிலைப்பாட்டைத் தீவிரமாக வலியுறுத்தியதால் இரண்டு தரப்புகளாலும் வெறுக்கப்பட்டவர். ஆனாலும், அவர் ஆழ்மனதிலும் ஏதோ ஒரு இண்டுஇடுக்கிலிருந்து வெள்ளையாதிக்கமும் காலனியாதிக்கமும் வெளிப்பட்டிருக்கிறது என்றும், அதன் விளைவுதான் அராபியனின் பெயர்நீக்கமும் அடையாள நீக்கமும் என்றும் கருதியிருக்கிறார் காமெல் தாவுத். இந்த நீக்கங்களை விசாரணைக்கு உட்படுத்துகிறார் அவர்.    

காம்யு, காமெலிலிருந்து கமல், மாரிக்கு வருவோம். மாரி செல்வராஜ் கமலை விமர்சித்து முன்பு எழுதிய கடிதம், ‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழா காணொளிகள் ஆகியவற்றுடன் ‘தேவர் மகன்’ பற்றி இதழாளர் சுகுணா திவாகர் 2019இல் கமலைக் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்றும் காணக் கிடைத்தது. பல சமயங்களில், மனதால் பேசாமல் அதிகம் அறிவினால் பேசுகிறாரோ என்றும் அறிவுஜீவித்தனம் தொனிக்கும் தன் பேச்சினால் கேட்பவர்களைக் கவர நினைக்கிறாரோ என்றும் தோன்றும். ஆனால், ‘தேவர் மகன்’ படம் ஏற்படுத்திய எதிர்மறை தாக்கத்தைப் பற்றி சுகுணா திவாகர் கமலிடம் கேட்ட கேள்விக்கு கமல் சொன்ன பதில் ஆத்மார்த்தமும் அறிவார்த்தமும் கொண்டதாகவே தோன்றுகிறது.

கமல் பதில் கூறும்போது திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டார். பாடலை எழுதிய வாலிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அவரை விடுவித்துத் தானே பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டப் புரிதலின் போதாமையை அவர் உணர்ந்த பாங்கும் வெளிப்படுகிறது. உச்ச திரைக் கலைஞர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத குணம் இது. திரைக் கலைஞர்கள் என்ன பொதுவாகப் பலரிடமும் இந்தக் குணம் அரிதுதானே!

கமலிடம் நம்மில் பலருக்கும் இருப்பதைப் போலவே சமூகநீதி, சாதி போன்றவை பற்றி புரிதல் கோளாறு நிறைய இருக்கலாம். ஆனால், நிச்சயம் முற்போக்கு குணங்கள் அதிகம் கொண்டவர். பொதுவாக, பெரும் ஈகோ கொண்டவர் என்று சொல்லப்படும் அவரே மன்னிப்பு கேட்டுவிட்டார். அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்போமா என்ற கேள்விதான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது என்று எனக்குத் தோன்றியது. காம்யு இன்று இருந்திருந்தால் காமெலிடம் அவர் மன்னிப்பு கேட்டிருப்பார் என்றும்கூட தோன்றுகிறது.  

காமெல் தாவுத்

இங்கிருந்து மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ நோக்கிச் செல்ல விரும்புகிறேன். காமெலுக்கும் கமலுக்கும் முடிச்சுபோட இது உதவும்.  பரியேறும் பெருமாள் பார்த்தபோது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அந்தப் படத்தை அச்சுபிசகாமல் கமல் எடுத்திருந்தால் என்ன எதிர்வினை கிடைத்திருக்கும்? "ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நாயகன் இழிவுபடுத்தப்படுவதை, நசுக்கப்படுவதை இந்த அளவுக்கு ஏன் காட்ட வேண்டும்? அது அவர்களின் சுயமரியாதையைக் குலைக்காதா? எதிர்த்து அடிக்கக் கூடியவர்களாக ஏன் அவர்கள் காட்டப்பட்டிருக்கக் கூடாது? எப்போதும் மன்னிப்பவர்களாக அவர்கள் மட்டுமே ஏன் இருக்க வேண்டும்?' இப்படிப்பட்ட கேள்விகள் நிச்சயம் எழுப்பப்பட்டிருக்கும். எழுப்பியிருந்தால் அதில் நியாயம்கூட இருக்கலாம் என்றே கருதுகிறேன்.

இது எல்லாமே கோட்பாட்டு அளவிலான (Theoretical) கேள்விகள். வாழ்வனுபவம் சார்ந்தும், அதை ஒரு கலைஞர் வெளிப்படுத்தும் விதத்தைச் சார்ந்தும் இந்தப் படத்தின் பின்னே ஒலிக்கும் உண்மையான குரலின் பின்னணி என்ன என்பதைச் சார்ந்தும் அணுகும்போது மேற்கண்ட கேள்விகள் வலுவிழக்கவோ வலுப்படவோ செய்யலாம். மாரி செல்வராஜ் எடுத்தார், குறை காணப்படவில்லை. கமல் எடுத்திருந்தால் நிச்சயம் விமர்சிக்கப்பட்டிருக்கும். இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டைக் கத்தி’க்கு எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய விமர்சனத்தை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவனை ‘அட்டைக் கத்தி’ என்று அழைப்பதையும் அவன் ஹீரோயிசம் இல்லாத, தோற்கும் ஒருவனாக இருப்பதையும் கௌதம சித்தார்த்தன் விமர்சித்திருந்தார். ஏன், அந்தப் படத்தின் கதாநாயகனை மற்ற படங்களின் கதாநாயகன் போல ஒரு அதிநாயகனாகக் காட்டியிருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார். ‘பரியேறும் பெருமாள்’ படம் தொடர்பாக நான் பேசுவது இந்தக் கருத்தைத்தான்.

கமல் அச்சுஅசலாக அப்படியே எடுத்திருந்தால் விமர்சிக்கப்பட்டிருக்கும் என்று நான் கூறியதைப் போல இந்த என் கருத்தும் விமர்சிக்கப்படும். கோட்பாட்டளவிலான கேள்விகளுக்கும் வாழ்ந்துபெற்ற வலிக்குமான இடைவெளி குறித்து விமர்சனம் செய்யப்படலாம். இதற்கு வெளியில் உள்ளவர் – உள்ளே உள்ளவர் என்றெ எதிரெதிர் நிலைகள் முன்வைக்கப்படலாம். இந்த எதிர்நிலையைச் சமன் செய்வது மிகவும் கடினம். என்னதான் காந்தி தானும் ஒரு ‘தாழ்த்தப்பட்டவரே’என்று அம்மக்களோடு ஐக்கியப்படுத்திக்கொள்ள முயன்றாலும் ஒருபோதும் அவர் அம்பேத்கர் ஆக முடியாது. இந்த வேலியைக் கடப்பது கடினம். எனினும் அதற்காக ‘வெளியில் உள்ளவர்’ என்று கருதப்படுபவரிடமிருந்து வரும் குரலை, அது குறைபாடுடையதாக இருந்தாலும் ஆத்மார்த்தமாக இருக்கும் பட்சத்தில், அதைப் புறக்கணிப்பது, கடுமையாக விமர்சிப்பது சரியான அணுகுமுறையல்ல என்று கருதுகிறேன். 

காந்தி, பெரியார் ஆரம்பித்து பலரும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. அவர்களுக்கே இந்த நிலை என்றால் கமல் மீதான விமர்சனத்தைப் பற்றி என்ன சொல்வது. கமல் காமெல் ஆக முடியாதுதான். ஆனால், முயன்றால் காமெலைப் புரிந்துகொள்ள முடியும்; புரிந்துகொள்வார். நாமும் கமல்தான். காமெல் ஆக முடியாவிட்டாலும் காமெலுடன் கைகோப்போம். காமெலும் கமலை எதிரியாகப் பார்க்காமல் தோழமையுடன் பார்த்தால் எல்லோரும் மாமன்னர்களே! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


5

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   1 year ago

A good comparison of two creators, parallel to two writers of yesteryears.

Reply 2 0

veera   1 year ago

everyone is a father-in-law! ? haha

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கண்கள்பசுமை விருதுஉணவு அரசியல்ராஷ்டீரிய ஜனதா தளம்உயர்சாதி ஏழைகள்சோழர் காலம்ஆவின்: பாதுகாக்கப்பட வேண்டிய பால் கூட்டுறவு நிறுவனஆவின் நிறுவனம்எதிர்புரட்சிகுற்ற விசாரணைமுறைச் சட்டம்தமிழ் கலாசார ஆழ்மனதின் குரல்மொபைல்முதலீட்டியம்ராம ஜென்ம பூமிதொழிலாளர் கட்சிநிதியாண்டுதசை வலிவிஜய் ரூபானிகாவல் நிலையம்டார் எஸ் ஸலாம்கழுத்து வலிவலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதஞ்சாவூர் பாணிஜார்ஜியா மெலோனிமு.கருணாநிதிவிமர்சனம்மார்க்ஸிய அறிஞர்சமஸ் தொகுதி மறுவரையறைசுதந்திரத்தின் குறியீடு மயிர்பிராந்திய மொழிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!