பேட்டி, சினிமா, அரசியல், சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 7 நிமிட வாசிப்பு

காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது!: கமல் ஹாசன் பேட்டி

சமஸ் | Samas
05 Apr 2021, 5:00 am
0

ரசியல் தலைவர்களுடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் பயணிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஒவ்வொரு தலைவரின் பேச்சையும் கேட்கவும் மக்களில் எந்தெந்தத் தரப்பினர் கூடுகின்றனர், தலைவர்கள் பேசும் எந்த விஷயங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள், முக்கியமாகத் தலைவர்களுக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. அரசியலர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கமல் ஹாசன், மக்களிடம் இயல்பான ஒரு உரையாடலை உருவாக்கிக்கொள்கிறார். இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த மகத்தான கலைஞரை, அதுவும் ஒப்பனையற்ற முதிர்ந்த தோற்றத்தில் நேரில் காண்கையில் மக்கள் வாஞ்சையோடு ஓடிவருகிறார்கள். அன்போடு அவருடன் பேசவும், ஆசையோடு படம் எடுத்துக்கொள்ளவும் முந்துகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டமாகவே அது தெரிகிறது. ஆனால், அங்கே அரசியலும் தொழிற்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாக நீங்கள் குறிப்பிடும் ‘மையவியம்’ – அதாவது இடது, வலது இரண்டும் கலந்த நடுநிலையான சென்டரிஸம் – பேசும் கட்சிகள் உலகம் முழுக்க வெவ்வேறு போக்குகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இஸ்ரேலில் உள்ள மையவியக் கட்சிகளும் பிரேசிலிலுள்ள மையவியக் கட்சிகளும் ஒரேவிதமான சிந்தனைகளை, வெளிப்பாடுகளைக் கொண்டவை அல்ல. இடதுசாரிகளையோ வலதுசாரிகளையோ வரையறுப்பதுபோல மையசாரிகளைத் துல்லியமாக வரையறுக்கவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை; பெரும்பாலும் அவர்களுடைய போக்கு சமரசமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் நீங்கள் முன்னிறுத்தும் மையவியத்துக்கான அர்த்தப்பாடு என்ன?

ஜனநாயகம் என்று சொல்லும்போது சாக்ரடீஸ் சொன்னதும் இன்றைக்கு இருப்பதும் வேறுவேறு; இன்னும் சொல்லப்போனால், பிரிட்டனில் பேசுவதும், அமெரிக்காவில் பேசுவதும், நாம் இங்கே புழக்கத்தில் வைத்திருப்பதும் வேறுவேறு. சென்டரிஸமும் அப்படித்தான். இங்கே புழக்கத்தில் நமக்கானதை உருவாக்குவோம். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் நடுநிலைமை; அரசியலற்ற நிலை அல்ல இது. வள்ளுவர் போற்றும் நிலை. ஒரு திறந்த மனப்பாங்கு. மரபோ நவீனமோ பகுத்தறிந்து நமக்கான விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.

பிரான்ஸில், ‘மன்னராட்சியானது புரட்சி மூலம் தூக்கி வீசப்பட வேண்டும்’ என்று முடிவெடுத்தவர்களை இடதுசாரிகளாகவும், ‘மன்னராட்சியே நீடிக்கட்டும், புரட்சி தேவையற்றது’ என்று முடிவெடுத்தவர்களை வலதுசாரிகளாகவும் வரையறுத்துக்கொண்டால், ‘மன்னராட்சி போக வேண்டும், அதே சமயம் புரட்சி வேண்டியது இல்லை’ என்று முடிவெடுத்தவர்களை மையசாரிகள் என்று வரையறுக்கலாம். கேள்வி என்னவென்றால், புரட்சி நடக்காமல் எப்படி மன்னராட்சி முடிவுக்கு வரும்? புரட்சியை வன்முறை என்று வரையறுப்போமானால், மன்னராட்சியின் கொடுங்கோன்மையை என்னவென்று வரையறுப்பது? அப்படியென்றால், மையவியம் என்பது கிட்டத்தட்ட வலதுசாரிகளுக்கு அருகில் உள்ள நிலைப்பாடுதானே?

இல்லை. இருக்கும் அமைப்பிலுள்ள சமூகக் கொடுமைகள் அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை. அதே சமயம், வன்முறை அல்லது அத்துமீறல் மூலம் அதை நிலைநாட்டுவதும் எங்கள் வழிமுறை இல்லை. நான் போராட்ட வடிவங்களுக்கும்கூட இதைத்தான் சொல்கிறேன், அரசு அலுவலகங்கள் மீதும், பேருந்துகள் மீதும் கல் எறிவதுதான் போராட்ட வடிவம் என்றால், அத்தகைய போராட்டத்தில் எங்கள் இயக்கத்தினர் ஒருநாளும் பங்கேற்க மாட்டார்கள். ஆயுதப் படைகள் இல்லாமல் புரட்சி நடக்காது என்பது ஒரு பழைய நம்பிக்கை. புரட்சி என்பது வன்முறை வடிவத்திலிருந்து வெளியேறி நிறையக் காலம் ஆகிவிட்டது. அது வெற்றி பெறுமா என்று கேட்காதீர்கள். அந்த நம்பாமைதான் சென்டரிஸத்துக்கு எதிரி. இதற்கு உதாரணப்படுத்தும்போது நான் காந்தியை அழைத்துக்கொள்வேன். தன் கருத்தை விளக்கத் தடுமாறும்போது மார்டின் லூதர் கிங்கும் காந்தியைத்தான் அழைத்துக்கொண்டார்.

இந்தியாவில் இன்று மையவியக் கட்சிகளாக நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்கள்?

எங்களைத்தான் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு முன்பு மையவியக் கொள்கையோடு செயல்பட்டவர்களாக யாரையேனும் உணருகிறீர்களா?

இதுவரை சொல்லப்படவில்லை என்றாலும், நடுநிலைமைக்கு ஒரு பேருதாரணம் காந்தி.

காந்தி முன்னெடுத்த அரசியலை, அதாவது சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியலை அணுகுவதைவிடவும், அனைத்து மக்களுடைய நலன்கள் மற்றும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப்பாட்டின் அடிப்படையில் அரசியலை அணுகுவது எனும் காந்திய அணுகுமுறையை மக்களியம் என்றும் நாம் சொல்லலாம். காந்தியை மையவியர் என்று சொல்ல முடியுமா?

பெயர் என்ன வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். மக்கள்தான் சித்தாந்தத்துக்கு ஊற்று. மக்களுக்காகத்தான் சித்தாந்தம். அது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மக்களுக்குப் பயன்படவில்லை என்றால் அதைப் பிடித்துக்கொண்டு மக்களை விட்டுவிடக் கூடாது. மக்களுக்கு எது தேவைப்படுகிறதோ அது நோக்கி நகர வேண்டும். அவ்வளவுதான். தன்னை ‘சென்டரிஸ்ட்’ என்று காந்தி சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும், காந்தியின் காலகட்டத்தில் மக்கள் அந்த இடத்தை அவருக்குக் கொடுத்திருந்தார்கள் என்றே கருதுகிறேன். அதே சமயம், காந்தியை உதாரணப்படுத்துகிறேன் என்பதால், காந்தியம் என்றும் சென்டரிஸத்தை எடுத்துக்கொண்டுவிடக் கூடாது. இன்னும் எங்கள் கொள்கையைச் செழுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. ‘பணி தீராத வீடு’ என்று மலையாளத்தில் சொல்வார்கள். வேலை நடந்துகொண்டிருக்கிறது என்கிற அர்த்தத்தில். கிரஹ பிரவேசம் வந்துவிட்டீர்களே என்று கேட்டால், என்னுடைய தேவைக்காக வந்திருக்கிறேன்; ஆனால், இன்னும் வீடு இன்னும் கட்டி முடிந்த பாடில்லை.

ஒரு படைப்பாளி என்ற எல்லைக்குட்பட்டுப் பல சமயங்களில் துணிச்சலாக நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்ததை ஓர் உதாரணமாக இங்கே நினைவுகூரலாம். ஆனால், ஆட்சியாளர்களின் மறைமுகத் தாக்குதலில் எப்போது வேண்டுமானாலும் அடிபடலாம் எனும் எல்லைக்குக் கீழே இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட சினிமா கலைஞரின் மொழிக்கும், ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் மொழிக்கும் இடையில் பெரிய சுதந்திர வேறுபாடு உள்ளது. இப்போது நீங்கள் மேலும் துணிச்சலாகப் பேசலாம். ஆனால், உங்கள் மொழி பெரும்பாலான சமயங்களில் ஒரு பூடகத்தன்மையையே கொண்டிருக்கிறது. அச்சம்தான் அதற்குக் காரணமா?

அந்தப் பூடக மொழி ஆரம்பத்தில் இருந்தது; ‘ட்வீட்’ போடும்போது. ‘வேண்டாமே, சில பேருக்குப் புரியவே வேண்டாமே!’ என்று நினைத்திருக்கிறேன். இப்போது இறங்கிவிட்டேன். இந்த மொழி எல்லோருக்குமானது. வேண்டுமானால், என்னுடைய பழைய நகைச்சுவை இந்த மொழியில் குறைந்திருக்கலாம். நகைச்சுவைக்கு வேறு விதமாக – அவமானப்படுத்தலாக – அர்த்தம் கற்பிக்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன். மொழி ‘டாமினோ எஃபெக்ட்’ ஏற்படுத்தக்கூடியது. அளந்துதான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இனி நான் தனி ஆள் கிடையாது.

இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரம் ஒரு சூப்பர் மாநகராட்சி அளவுக்குத்தான் இருக்கிறது; அதுவும் மாநிலங்களையும் மாவட்டங்களைப் போல வெறும் நிர்வாக அலகாக மாற்றிவிட எண்ணும் ஒரு ஆட்சியின் கீழ் இந்தியா இன்று இருக்கிறது. உங்கள் கட்சி அதிகமாக அரசாங்க நிர்வாகம், ஊழல் இவற்றை முன்னிறுத்தியே பேசுகிறது. இது அரசியலை வெறும் நிர்வாக விஷயமாகச் சுருக்கிவிடாதா?

இல்லை. ஒரு விரிவான அரசியலின் ஒரு பகுதியாகவே நிர்வாகத்தைப் பேசுகிறோம். மாநில சுயாட்சி என்பதும் நிர்வாகத்தோடு பிணைந்ததுதான், இல்லையா? இந்தியா எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை நிர்வாகமாகவும் பார்க்கலாம்; அரசியலாகவும் பார்க்கலாம்.

இந்திய அரசமைப்பை மக்கள் நீதி மய்யம் எப்படிப் பார்க்கிறது?

அரசமைப்பின்படி ஆட்சியாளர்கள் நடந்துகொண்டாலே போதும். ஆனால், அப்படி நடப்பதில்லை என்பதுதானே பிரச்சினை!

அப்படியென்றால், அரசமைப்பில் மாற்றம் ஏதும் தேவை இல்லை என்கிறீர்களா; ஏனென்றால், மாநிலங்களை மையப்படுத்தியதாக அரசமைப்பை மாற்ற வேண்டியது அவசியம் என்று பேசும் மாநிலம் தமிழ்நாடு...

முழுக் கூட்டாட்சி நாடாக இந்தியா அமைய வேண்டும் என்ற அண்ணாவின் நிலைப்பாட்டில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் எனக்குப் பிடிக்கும். அண்ணாவையும் எனக்குப் பிடிக்கும். ஒருவேளை அண்ணாவைப் பிடிக்கவே இல்லை என்றாலும், அவரிடம் உள்ள நல்ல கருத்தை எடுத்துக்கொள்வேன் என்பதுதான் சென்டரிஸ்ட்டுகளின் நல்லத்தனம். அரசமைப்புச் சட்டம் ஒரு உயிருள்ள ஆவணம். குர்ஆன், பைபிள் மாதிரி அதை மாற்றி எழுத முடியாத நூலாக மாற்றிவிடக் கூடாது. அதே சமயம், நடப்பிலுள்ள ஆவணம் நமக்குக் காட்டும் வழிமுறைகளிலிருந்து ஆட்சியாளர்கள் வழுவக் கூடாது. அதுவே மக்களுக்கு அரசியலதிகாரத்தை உறுதிப்படுத்தும். அரசியலதிகாரத்திலிருந்தே எல்லா மாற்றங்களும் தொடங்குகின்றன.

அரசியலதிகாரம் முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், பண்பாட்டு அதிகாரம் அதைக் காட்டிலும் முக்கியம் இல்லையா? நீங்கள் தமிழ்நாட்டில் கடுமையாக எதிர்க்கும் திராவிட இயக்கக் கட்சிகளும் சரி; தேசிய அளவில் கடுமையாக எதிர்க்கும் பாஜகவும் சரி; பண்பாட்டுத் தளத்தில் அவர்களுடைய முன்னோடிகள் விதைத்ததன் பலன்களையே அரசியல் களத்தில் அறுக்கிறார்கள். பண்பாட்டுத் தளத்தில் வேர் கொள்ளாத எந்தக் கட்சியும் அரசியல் தளத்தில் தனித்துவத்தோடு நிலைத்திருப்பதும் இல்லை. நீங்கள் அரசியலில் மட்டும் பணியாற்றி மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என்று நம்புகிறீர்களா?

பண்பாட்டுத் தளத்தில் நான் தனியாகக் கட்சி நடத்திப் பாடங்கள் கற்பிக்க வேண்டியது இல்லை. அங்கு நடக்க வேண்டிய மாற்றங்களை ஒரு சமூகம் தன்னளவில் இயல்பாக நடத்திக்கொண்டே இருக்கிறது. கணவன் செத்தால் மனைவியும் கூடவே சாக வேண்டும் என்பது ஒருகாலத்தில் இந்தச் சமூகத்தின் பண்பாட்டில் இருந்திருக்கிறது, அது கொடுமை என்று சமூகம் உணர்ந்தபோது அது மாறி வழக்கொழிந்தும் போயிருக்கிறது.

ஆனால், அதை முன்னெடுக்க ஒருவர் தேவைப்படுகிறார், ஒரு இயக்கம் தேவைப்படுகிறது இல்லையா? சடங்குத் திருமணம் வேண்டாம் என்று சொன்னால் மட்டும் சமூகத்துக்குப் போதவில்லை; சுயமரியாதைத் திருமணம் என்று ஒரு வடிவத்தையும் கொடுக்க ஒருவர் தேவைப்படுகிறார் இல்லையா? நீங்கள் அதிகம் பேசும் காந்தி, பெரியார் இருவருமே பண்பாட்டுத் தளத்திலும்தானே பணியாற்றினார்கள்?

நான் அரசியலுக்கு வருவேன் என்றே நினைக்கவில்லை. தற்செயல். வரலாற்றின் தேவை. காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது. கோவைக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் திட்டமிட்டேனா? கிடையவே கிடையாது. காலம் அழைத்துவந்திருக்கிறது. என் மக்கள் அழைத்துவந்திருக்கிறார்கள். காந்தியும் பெரியாரும்கூட அப்படித்தான். அவர்கள் ஈடுபட்ட காரியங்களுக்காகப் பிள்ளைப் பருவம் முதலாகத் தயாராகிவந்தவர்கள் அல்ல அவர்கள். அடுத்து, காலமும் மக்களும் நம்முடைய கலாச்சாரத்துக்கு எதிரான கொடுங்கோல் முறைகளைத் தகர்க்க வேண்டிய பணிக்கு என்னை அனுப்புவார்களேயானால், அதற்கான திட்டங்கள் தன்னால் உருவாகிவிடும்!

-‘தி இந்து’, ஏப்ரல், 2021 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








அருவிஉணவுப் பதப்படுத்துதல்சாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்தமிழ் வம்சாவளிவெறுப்புணர்வுவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பவைக்கம்தொன்மைஓ.சி என்ற சி.எம்ராஜகோபாலசாமிமாநிலப் பணிசமதா யுவஜன் சபா (எஸ்ஒய்எஸ்)மாநிலங்களவையின் அதிகாரங்கள்மத்தியதர வர்க்கம்திருநெல்வேலி வெள்ளம்ஹலால்சரண்ஜித் சிங் சன்னிவிழிஞ்சம் துறைமுகம்கூட்டணியின் வலிமைச.ச.சிவசங்கர் பேட்டிஎங்கே இருக்கிறார் பிரபாகரன்?கிங்ஸ் அண்டு க்வின்ஸ்கருணாநிதி சமஸ்கெவின்டர்ஸ் நிறுவனம்பாலு மகேந்திரா சமஸ்சமூக ஒற்றுமைதூக்குத்தண்டனைகன்ஷிராம்ஆசியாரயில் டிரைவர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!