கட்டுரை, சினிமா, அரசியல், சமஸ் கட்டுரை 4 நிமிட வாசிப்பு

மாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்

சமஸ் | Samas
14 Jul 2023, 5:00 am
1

காட்டுமன்னார்கோவில் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நேர்ந்த அவமதிப்பு இது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தவர் தன்னுடைய தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தார். நகரத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஒரு சிறுவன் திடீரெனக் குறுக்கிட்டான். அவனுடைய கையில் சின்ன கருங்கற்கள். வாகனத்தை நோக்கி வீசுபவன், கடுமையான ஆபாச சொற்களால் அவரை ஏசுகிறான். திருமாவளவன் வாகனத்திலும், அவரைப் பின்தொடர்ந்து வரும் வாகனங்களிலும் வந்தவர்கள் அதிர்ச்சியுடனும் ஆவேசத்துடனும் வண்டிகளைவிட்டு இறங்கி அந்தச் சிறுவனை நோக்கிப் பாய முற்படுகின்றனர். திருமாவளவன் தடுக்கிறார். அந்தச் சிறுவனுடைய டிசர்ட்டில் வரையப்பட்டிருக்கும் இன்னொரு கட்சியின் சின்னத்தைச் சுட்டிக்காட்டுகிறார். சிறுவன் கொஞ்ச நேரத்தில் ஓடிப்போகிறான்.

நான் அன்றைக்கு ஒரு பேட்டிக்காக திருமாவளவனுடன் கலந்துரையாட வேண்டியிருந்தது. இந்த விஷயம் குறித்துக் கேட்டபோது, “இத்தகைய சம்பவங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் சகஜம். ஜனநாயகரீதியாக தலித்துகள் முன்னகர்வதை சகிக்க முடியாதவர்கள் ஒரு கலவரத்துக்குத் திட்டமிட்டுத்தான் இதைச் செய்கிறார்கள். குழந்தைகளைக்கூட ஆயுதம் ஆக்கிவிடுகிறார்கள்!”

தமிழ்நாட்டில் திருமாவளவன் போன்ற ஒரு தலைவருடைய பெயர் அவருடைய துணிச்சலான பேச்சுகளாலும் செயல்படுகளாலும் அறியப்படுவது என்றாலும், ஒவ்வொரு தலித் தலைவரும் இப்படி வெளியே சொல்லாது கடக்கும் நூற்றுக்கணக்கான சம்பவங்களையும் இணைத்துக்கொண்டிருக்கிறது அவர்களுடைய அரசியல் வாழ்க்கை.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் திட்டக்குடியை மையமிட்டுச் செயலாற்றுபவர் சி.வெ.கணேசன். திமுகவின் மாவட்டச் செயலரும்கூட. கணேசன் பல ஊர்களுக்குத் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும்போது, அங்குள்ள முற்பட்ட சாதியினர் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதோ முகம் கொடுப்பதோகூட கிடையாது என்பதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். கடலூர் பிராந்தியத்தில் திமுக நடத்திய ஒரு கூட்ட மேடையில், அந்தப் பிராந்தியத்தின் எல்லா முக்கிய நிர்வாகிகளும் அமர்ந்திருக்க கணேசன் மட்டும் ஓரமாக நின்றுகொண்டிருப்பதைக் கட்சியின் தலைவரான ஸ்டாலின் கவனித்திருக்கிறார். சைகை காட்டி அழைத்தவர் தன் அருகே அமரச் சொல்லியிருக்கிறார். இதை எல்லோருன் கவனித்தாலும்கூட ஏனைய நிர்வாகிகளுக்கு அது உறைத்ததாகவோ, இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் பெரிய அளவில் சூழல் அங்கே மாறியதாகவோ தெரியவில்லை.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அசல் மாமன்னன் கதை

அரவிந்தன் கண்ணையன் 30 Jun 2023

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், திமுகவின் இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் பல வகைகளில் முக்கியமான ஒரு வருகை.

இதுவரை பொதுவெளியின் மையக் கவனத்துக்கு வராத தலித் தலைவர்களுடைய பிரச்சினையையும், ஆட்சியதிகாரத்தில் நிலவும் தீண்டாமை மற்றும் மேலாதிக்கத்தையும் இந்தப் படம் உரத்த குரலில் பேசுகிறது. துரதிருஷ்டவசமாக, கலை வடிவம் சார்ந்தும், விவாதத்தின் ஆழம் சார்ந்தும் ஒரு திரைப்படமாக 'மாமன்னன்' திருப்திகரமாக வரவில்லை என்றாலும், இப்படிப்பட்ட படங்களை உருவாக்கம் சார்ந்து விவாதிப்பதைவிடவும் பிரச்சினை சார்ந்து விவாதிப்பது முக்கியம் என்று எண்ணுகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக போன்ற ஓர் ஆளுங்கட்சியில் பத்தாண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையிலும்கூட, கட்சியில் தனக்கு மேல் மாவட்டச் செயலர் அதிகாரத்தில் இருக்கும் ஓர் ஆதிக்கச் சாதி அரசியல் வாரிசின் முன் உட்காரக்கூட முடியாத நிலையில் இருக்கும் தலித் தலைவருடைய வாழ்வையே படம் பேசுகிறது. தான் உட்பட தன் சமூகத்தைச் சார்ந்தவர்கள் சாதியத் தாக்குதலுக்கும், அவமதிப்புகளுக்கும் ஆளாகும்போதெல்லாம் நிர்ப்பந்தத்தின் பெயரால் அவற்றை விழுங்க வேண்டிய நிலையிலேயே தன் தந்தை இருப்பதற்கு எதிராகப் போராடும் மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். அடாவடியான ஆதிக்கச் சாதி மாவட்டச் செயலரைக் கட்சியின் தலைமை ஒருகட்டத்தில் நீக்கிவிட்டாலும், தன்னுடைய அரசியல் செல்வாக்கை அடுத்து வரும் தேர்தலில் வெல்வதன் மூலம் தலித் தலைவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அப்படி வென்றவரை, சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவியில் கட்சி அமர்த்துவதோடு படம் முடிகிறது.

தமிழ்நாட்டின் சூழல் படத்தின் சூழலுடன் ரொம்பவும் மாறுபட்டது இல்லை. திமுக அமைச்சர் ஒருவர் அட்டானிக்கால் போட்டு அமர்ந்திருக்க அவர் முன்பாக பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் நின்றுகொண்டிருந்த புகைப்படத்தைச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். அதிமுகவின் ஆட்சிக் காலகட்டத்தில் தலித் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய சொந்த கட்சியின் ஆதிக்க சாதியாட்களால் கத்திக்குத்து ஆளாகியும் அமைதி காக்க வேண்டியிருந்தது. திமுக, அதிமுக என்று கட்சிப் பாகுபாட்டுக்குள் செல்லாமல் ஏராளமான சம்பவங்களைப் பட்டியலிடலாம். ‘உச்சு’ கொட்டிவிட்டு கடக்கும் காலம் இனியேனும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையே மாறிவரும் சூழல் உணர்த்துகிறது.

சமீப காலமாக வெளிப்படலாகியிருக்கும் தலித் அரசியல் படங்கள் நடுத்தர வர்க்க தலித்துகளுடைய அபிலாஷைகளுடன் அப்பட்டமாகவே ஒரு முக்கியமான பிரச்சினையை முன்வைக்கின்றன. ‘சமூகநீதி என்பது சமூகத்தின் கடைசி மனிதருக்குமான அதிகாரம்; இனியும் பிராமணர் – பிராமணரல்லாதோர் முரண்களை மட்டும் பேசி காலத்தை ஓட்ட முடியாது; தலித்துகள் – தலித்தல்லாதோர் முரண்களும் விவாத மேஜையின் மையத்துக்கு வர வேண்டும்;  தமிழ்நாட்டினுடைய அதிகாரத்தின் மையத்தில் அமர்ந்திருக்கும் இடைநிலைச் சாதிகளுடைய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி அந்தச் சமூகங்கள் சிந்திக்க வேண்டும்!’

அரசியலதிகாரம்தான் சமூக விடுதலைக்கான திறவுகோலாக இருக்கிறது என்றால், அரசமைப்புச் சட்டத்தின் வழி தாங்கள் வென்றெடுத்த குறைந்தபட்ச அதிகாரத்தையும் மறித்து உட்கார்ந்திருக்கின்றன பிரதான அரசியல் கட்சிகள் என்ற கோபம் தலித்துகளிடம் இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மாமன்னன்: கமல், காம்யு, காமெல், மாரி!

ஆசை 25 Jun 2023

முற்றிலும் உண்மை. கிட்டத்தட்ட நாட்டின் சரிபாதி தலித் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நான்கில் ஒரு மாநிலம் நம்முடையது: உத்தர பிரதேசம் (20%), வங்கம் (10%), பிஹார் (8.2%), தமிழ்நாடு (7.2%). அதே போன்று மாநில மக்கள்தொகையில் தலித்துகள் அதிகம் பங்கு வகிக்கும் மாநிலங்களிலும் முன் வரிசையில் உள்ளது நம்முடையது: பஞ்சாப் (31.9%), இமாச்சல் (25.2%), வங்கம் (23.5%), தமிழ்நாடு (18%).

அரசியல் தளத்தில் இதற்கான அதிகாரத்தையோ பிரதிநிதித்துவத்தையோ தலித்துகள் பெறவே இல்லை. ஓர் உதாரணம், தமிழகத்தின் 38 மாவட்டங்களை அதிமுக 67 மாவட்டங்களாக நிர்வகிக்கிறது; எனில், தலித்துகள் 12 பேர் மாவட்டச் செயலர் பொறுப்பில் இருக்க வேண்டும்; ஒருவர்கூட இல்லை; அதேபோல, திமுக 72 மாவட்டங்களாக நிர்வகிக்கிறது; தலித்துகள் 13 பேர் மாவட்டச் செயலர் பொறுப்பில் இருக்க வேண்டும்; இருவர்தான் இருக்கின்றனர்.

இரு கட்சிகளுமே அமைச்சரவையில் குறைந்த எண்ணிக்கையிலேயே தலித்துகளுக்கு இடம் அளிக்கின்றன. அதுவும் பெரிய முக்கியத்துவம் இல்லாத துறைகள். இப்போதைய அரசில் மூன்று தலித்துகள் அமைச்சர் பதவியில் இருக்கின்றனர். கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பதில் இவர்களுக்கு உள்ள அதிகாரத்தை விடுங்கள்; குறைந்தபட்சம் தலித்துகள் பிரச்சினையையே பேசும் சுதந்திரம் இல்லை.

தமிழ்நாட்டை சமூகநீதி வரிசையில் முன்னுதாரணமாகப் பேசுவதில் இரு திராவிடக் கட்சிகளுமே சளைத்தவை இல்லை. ஆனால், முதல் தலித் முதல்வர்கள் எனும் வரிசையில், தாமோதரம் சஞ்சீவிய்யா (ஆந்திரம் - 1960), போலா பஸ்வான் (பிஹார் - 1968), ஜெகந்நாத் பஹாதியா (ராஜஸ்தான் - 1981), மாயாவதி (உத்தர பிரதேசம் - 1995) வரிசையில், தமிழகத்தை ஏன் சிந்திக்க முடியவே இல்லை எனும் கேள்வியை இங்கு யாரும் எழுப்பிக்கொள்ளவே இல்லை. குறைந்தபட்சம் திரைப்படத்திலும்கூட ஒரு தலித் முதல்வரை நாம் கற்பனை செய்ய முடியவில்லையே? இவ்வளவுக்கும் தலித் சபாநாயகர் எனும் யதார்த்தம் - சிவசண்முகம்  பிள்ளை - 1940களிலேயே இங்கு சாத்தியமான மாநிலம் தமிழகம்!

திமுக போன்ற பெருங்கட்சியின் முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருக்கும் உதயநிதி இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். கட்சியைத் தாண்டியும் ஓர் உள்ளுரையாடலுக்கு இது உதவலாம். ஆனால், படம் உருவாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் வேங்கைவயல் விவகாரம் நடந்தது; தலித்துகள் சங்கடத்தை எதிர்கொள்ளும் பல சம்பவங்கள் தொடர்கின்றன. படத்தில் இவ்வளவு உக்கிரமாகப் பேசும் உதயநிதி இந்தத் தருணங்களில் எல்லாம் என்ன பேசினார் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

படத்தில், வசதியாக தலித் தலைவரின் மகன் பாத்திரத்தில் உதயநிதி தன்னை  அமர்த்திக்கொண்டிருக்கிறார்; நிஜத்திலோ அவர் முதல்வரின் மகன் பாத்திரத்தில் இருக்கிறார். படம் ஒரு தலித் எம்எல்ஏ - ஒரு மாவட்டச் செயலருடைய பிரச்சினையையே எடுத்துக்கொண்டிருக்கிறது. நிதர்சனத்திலோ பெரும்பான்மை தலித் எம்எல்ஏக்கள், எம்பிகள் இந்தச் சிக்கலைக் கட்சியின் ஆதிக்க நிர்வாகிகளிடமிருந்து எதிர்கொள்கின்றனர். ஒருவேளை இவர்கள் அத்தனை பேர் பிரச்சினையையும் பேசும் படமாக இது இருந்து, அதில் முதல்வரின் பாத்திரத்தில் உதயநிதி நடித்திருந்தால், அப்போது படத்தில் வரும் தலித் தலைவர்களின் பிரச்சினையை எப்படி அணுகியிருப்பார்? 

இங்கே உதயநிதி என்று நான் குறிப்பிடுவது ஒரு உதயநிதியை மட்டும் இல்லை; தலித் அல்லாதோர் அரசியலின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகவே இந்தப் பெயரைப் பயன்படுத்துகிறேன். சமூக நிதர்சனத்துக்கும்  அடையாள முழக்கங்களுக்கும் இடையிலான இந்த இடைவெளியும் முரணும்தான் நாம் ஒவ்வொருவரும் முகங்கொடுக்க வேண்டியதும் தீர்க்க வேண்டியதும் ஆகும். இந்தப் படம் ஒரு சமூகப் பிரச்சினையை ரத்தமும் சதையுமாக முன்வைக்கிறது என்றால், இதன் மூலம் நமக்கு அறிமுகமாகும் அந்தச் சமூகச் சிக்கலுக்கு நம்மளவில் நாம் எப்படி முகம் கொடுக்கப்போகிறோம் என்ற கேள்விதான் எல்லாவற்றினும் முக்கியமானது. 

தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாக விரிப்பதற்கான நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. அப்படியென்றால், இந்தப் போக்கு இப்படியே தொடர முடியாது!

- ‘குமுதம்’, ஜூலை, 2023

 

தொடர்புடைய கட்டுரைகள்

அசல் மாமன்னன் கதை
மாமன்னன்: கமல், காம்யு, காமெல், மாரி!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

S.Dhanabalan   1 year ago

மற்ற மாநிலங்களில் பெரும்பாண்மை சாதிகளை சேர்ந்தவர் தான் முதல் அமைச்சர் ஆக ஆகிறார். இங்கே அப்படியா? காமராஜ் அவர்களுக்கு பிறகு மண்ணின் மைந்தர்கள் (வன்னியர், முக்குலத்தோர், பறையர், பள்ளர் முதலிய சாதிகளை சேர்ந்த) யாரும் முதல்வராக வர முடியவில்லை (விதி விலக்காக தட்டுத்தடுமாறி எடப்பாடி நான்கு ஆண்டு காலம் ஓட்டிவிட்டார்) இதற்கு பல காரணங்கள் உள்ளன என்பதும் உண்மை தான். நிலைமை இப்படி இருக்க பட்டியல் பிரிவு சாதிகளில் இருந்து முதல்வர் பதவிக்கு ஒருவர் வர வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? தமிழ் நாட்டில் தமிழ் பின்னணி கொண்ட சாதிகள் ஒருவர் மேல் ஒருவர் சந்தேக பட்டு முரண்பட்டு ஒழிந்து போகிறார்கள். இது பற்றி ஏன் எந்த படமும் பேசவில்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சைபர் வில்லன்கள்நிதிப் பங்கீடுசுந்தர ராமசாமிகடவுள் ஏன் சைவரானார்?பணக்காரர்கள்சைவம்உழவர் எழுக!thiruma interviewஅமைதிசுகந்த மஜும்தார்தலைபிற்போக்குத்தனமான ஏற்பாடுகள்அண்ணா இந்தி அருஞ்சொல்தேசப் பாதுகாப்புஉணவியல்நான் எதிர்காலத்தைச் சிந்திக்கிறேன்: லூலா பேட்டி370 இடங்கள்திருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்சட்ட மாணவர்கள்பொருளாதாரக் கொள்கைகள்செந்தில் முருகன் பேட்டிமத சுதந்திரம்ஆர்பிஐஎண்டோஸ்கோப்பிஉடல் எடைக் குறைப்புக்கான வழிகள்போன் பேவானதி சீனிவாசன்ஜவாஹர்லால் நேருதனித்த உயிரினங்களா அரசு ஊழியர்கள்?இந்து தேசியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!