கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு
மாமன்னன்: நாற்காலிக் குறியீடு
நானும் என் மனைவியும் ‘மாமன்னன்’ பார்க்கச் சென்றோம்.
ஐந்நூறு பேருக்கு மேல் அமரும்படியான பெரிய திரையரங்கை இப்போது இரண்டாகப் பிரித்து நவீனமாக்கி உள்ளனர். பழையதில் முன்பாதி ஒரு திரையரங்கம்; பின்பாதி மற்றொன்று. பின்னதில் பழைய பால்கனி பகுதி சேர்ந்திருக்கிறது. பால்கனி கொண்ட திரையரங்கில் ‘மாமன்னன்’ போட்டிருந்ததால் நிம்மதி. இன்னொரு அரங்கில் கடைசி இருக்கை கிடைத்தாலும் கஷ்டம்தான்.
திரைக்கு நெருக்கமாக இருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து அண்ணாந்து பார்க்க வேண்டும். ஏராளமான அண்மைக் காட்சிகளைக் கொண்டிருக்கும் ‘மாமன்னன்’ போன்ற படத்தைப் பார்ப்பது படுகஷ்டம். பூதங்களைப் போல உருவங்கள் தெரியும். வெளிச்சம் நேரடியாகக் கண்களைத் தாக்கும். கழுத்து வலியும் கண் பொங்கலும் சேர்ந்து வந்துவிடும். பால்கனி நாற்காலிகளில் உட்கார்ந்தால் பார்க்க நன்றாகவே இருக்கும். பால்கனி டிக்கெட் வாங்கினோம்.
உள்ளே போய் உட்கார்கையில் இன்னொரு பிரச்சினை. ஒரு வரிசையில் முதல் இருக்கையை அடுத்திருந்த இரண்டு இருக்கைகள் எங்களுக்கானவை. நான்காம் இருக்கையில் இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரை அடுத்து அவர் மனைவி. இளைஞரையும் அவர் மனைவியையும் இருக்கை மாறி உட்காரச் சொல்லலாமா என்று யோசித்தேன். இளைஞரது நாற்காலிக்கு அவர் மனைவி மாறி உட்கார்ந்துவிட்டால் அப்பெண்ணுக்கு அருகில் என் மனைவி உட்காரலாம். அடுத்து நான். வரிசையின் முதல் நாற்காலி காலி. அதற்கு யாரேனும் வந்தால் கண்டிப்பாக ஆணாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஒற்றையாக எந்தப் பெண்ணும் வர வாய்ப்பில்லை.
கொஞ்சம் யோசித்தேன். இளஞ்சோடிகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம், முதல் இருக்கைக்கு ஆள் வந்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கருதி, இளைஞருக்குப் பக்கத்தில் நான் உட்கார்ந்துவிட்டேன்.
வரிசையின் இரண்டாம் இருக்கையில் என் மனைவி. முதல் இருக்கை காலியாகவே இருந்தது. படம் ஓடிக்கொண்டிருக்கையில் நான் எதிர்பார்த்தது போலவே தாமதமாக ஆண் ஒருவர் முதல் இருக்கையில் உட்கார வந்தார். அடுத்து என் மனைவி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் “இதுதான் என்னோடது. பரவால்ல, பின்னால எடம் இருக்குது. அங்க நான் உக்காந்துக்கறன்” என்று அவராகவே எங்களுக்குக் கேட்கும்படி சொல்லிவிட்டுப் பின்னால் போய்விட்டார்.
இருக்கும் இடம், அதில் உட்காரும் பாலினம் எனச் சாதாரணத் திரையரங்கிலேயே நாற்காலிப் பிரச்சினை இந்தளவு இருக்கிறது. ‘மாமன்னன்’ இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் நாற்காலிப் பிரச்சினையைப் பேசுகிறது.
நாற்காலி எதற்கு?
தம் உடலைச் சிரமமில்லாமல் வசதியாக வைத்து உட்கார்ந்துகொள்வதற்கு மனிதர் உருவாக்கிய கருவிதான் நாற்காலி. ஒரு கருவியைக் கண்டுபிடித்துவிட்டால் அத்தோடு நின்றுவிடுவதில்லை. காலந்தோறும் அது வளர்ச்சியடைகிறது. அதை எளிதாகக் கையாளவும் கூடுதலாகப் பயன்படுத்தவும் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருக்கின்றனர்; மேம்படுத்துகின்றனர். அதன் வடிவமைப்பில் கலைநயம் சேர்க்கவும் தவறுவதில்லை.
நாற்காலியும் அப்படித்தான். அரசர் காலத்து நாற்காலி வகைகளை அருங்காட்சியகங்களிலும் அரண்மனைகளிலும் கண்டு வியக்கிறோம். சில நூறு ஆண்டுகளான நாற்காலிகள் வியப்பூட்டுகின்றன.
சமீபத்தில் மைசூரு சென்றிருந்தபோது அங்கிருந்த அரணமனை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்க்க வாய்த்தது. ரவி வர்மாவின் மூல ஓவியங்கள் கிட்டத்தட்ட இருபது அங்கே இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டு மைசூரு அரசர்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான நாற்காலிகள் அங்கே போடப்பட்டிருந்தன. ஓவியங்களின் மேல் கண் போனது போலவே நாற்காலிகளின் மீதும் பதிந்தன. எத்தனை விதமான வேலைப்பாடுகள்; வடிவமைப்புகள். ஒவ்வொன்றையும் நகர்த்த வேண்டுமானால் இரண்டு மூன்று ஆட்கள் தேவை. ஏன் நாற்காலிகளைத் தனியாகக் காட்சிக்கு வைப்பதில்லை என்று தெரியவில்லை.
கி.ரா.வின் நாற்காலி
இன்றும் பலவகையான நாற்காலிகளைக் காண்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளில் நாற்காலிப் பெருக்கத்திற்கு அளவில்லை. நாற்காலிப் பயன்பாடு ஜனநாயகமாகியிருக்கிறது. 1969ஆம் ஆண்டு கி.ராஜநாராயணன் எழுதிய சிறுகதை ‘நாற்காலி.’
இது நாற்காலிப் பிரச்சினையைப் பகடியாகச் சொல்லும் கதை. அத்துடன் நாற்காலி பற்றிய பல தகவல்களையும் அவர் கொடுக்கிறார். எந்த மரத்தில் செய்தால் நல்லது முதலிய விவரங்கள் கிடைக்கின்றன. முக்காலி ஒன்றிரண்டு வீட்டில் வைத்திருப்பதுண்டு. மற்றபடி உட்கார்வதற்குத் திண்ணைகளும் தூண்களும் மட்டுமே கிராமத்தில் பயன்பட்டன. நாற்காலி இருந்தால் அது செல்வச் செழிப்பான வீடு.
அந்தக் கிராமத்தில் யார் வீட்டிலும் நாற்காலியே கிடையாது. நாற்காலி செய்யத் தெரிந்த தச்சரும் இல்லை. வெளியூர்த் தச்சரைப் பிடித்து எப்படியோ நாற்காலி செய்கிறார்கள். வீட்டுக்கு நாற்காலி வந்த செய்தி ஊரில் தீப் போல் பரவிற்றாம். அதிசயத்தை எல்லோரும் வந்து வந்து பார்த்துப் போனார்களாம். அதிசய நாற்காலி என்னவாயிற்று?
இறந்தவர்களை உட்கார வைத்துச் சடங்குகள் செய்வதும் உட்கார்ந்த நிலையிலேயே புதைப்பதும் சில சாதிகளின் வழக்கம். பிணத்தைத் தரையில் உட்கார வைத்தவர்கள் இப்போது நாற்காலியை இரவல் வாங்கிக் கொண்டுபோய் உட்கார வைத்தார்கள். ஊரில் யாராவது சாகும் போதெல்லாம் நாற்காலி இரவல் போயிற்று. பிணம் உட்கார்ந்த நாற்காலியில் உயிருள்ள மனிதர் உட்கார விரும்புவார்களா? இப்படிப் பிரச்சினை போகிறது.
அந்த நாற்காலியோடு சேர்த்துச் செய்த இன்னொரு நாற்காலி அவர்கள் மாமன் வீட்டில் இருக்கிறது. ஒரு தந்திரம் செய்து மாமன் வீட்டு நாற்காலியை இரவல் வாங்கத் திருப்பிவிடுகிறார்கள். பின்னர் இறப்புக்காகவே அந்த நாற்காலியைத் தானமாகக் கொடுத்துவிடும் மாமாவின் பெருந்தன்மையை வியப்பதாகக் கதை நிறைவுபெறுகிறது. இறப்புச் சடங்கு ஒன்றை வைத்து நாற்காலிப் பிரச்சினையைக் கேலிக்குரியதாகக் கி.ரா.வின் எழுத்து மாற்றிவிடுகிறது.
நாற்காலிகள் பலவிதம்!
இன்று மரம், இரும்பு, நெகிழி, பிரம்பு என்று பல பொருள்களில் செய்த நாற்காலிகளைக் காண்கிறோம். வீட்டு வரவேற்பறை, மேடை, அலுவலகம், பொதுக்கூட்டம் என்று இடத்திற்குத் தக வெவ்வேறு வடிவமைப்புகளில் நாற்காலிகள் இருக்கின்றன. வயதுக்கு ஏற்றவை, இடத்திற்கு ஏற்றவை, உடல்நிலைக்கு ஏற்றவை என விதவிதமான நாற்காலிகள். ஒரே நாற்காலியைப் பலவிதமாகப் பயன்படுத்தவும் இயல்கின்றது. என்னதான் பிளாஸ்டிக்கை நாம் எதிர்த்தாலும் பிளாஸ்டிக் நாற்காலிகள் வந்த பிறகுதான் எல்லா வீடுகளிலும் நாற்காலிகளைப் பார்க்க முடிகிறது.
ஆனால், நாற்காலி வெறும் கருவியாக மட்டும் இல்லை. காலப்போக்கில் அது அதிகாரத்தின் குறியீடாக மாறிவிட்டது. சிங்க முகம் வடிவமைத்த கைப்பகுதியைக் கொண்டவற்றை அரியாசனம், சிம்மாசனம் என்று குறிப்பிடுகிறோம். அவை அரசர்களுக்கானவை. அவை மட்டுமல்ல, நாற்காலிகள் அனைத்துமே இப்போது அதிகாரச் சின்னங்கள்தான்.
செல்வம் தரும் அதிகாரம் நாற்காலியில் எதிரொலிக்கிறது. திரையரங்கில் முன்னிருக்கைகள் விலை குறைவு; பின்னிருக்கைகள் விலை மிகுதி. பாலினம் தரும் அதிகாரத்தை நாற்காலி காட்டுகிறது. ஆண்கள் நாற்காலியில் அமர எந்தத் தடையும் இல்லை. ஆண்களுக்கு முன்னால் பெண்கள் நாற்காலியில் அமரக் கூடாது. பண்பாடு தரும் அதிகாரம் நாற்காலிக்குள் பொதிந்திருக்கிறது. அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் அருகருகே உட்கார இயலாது.
வயது தரும் அதிகாரம் நாற்காலியில் ஏறியிருக்கிறது. வயது கூடியோருக்கு நாற்காலியை விட்டுவிட்டு இளையோர் நின்றுகொள்ள வேண்டும். அல்லது பெரிய நாற்காலிகளைப் பெரியவர்களுக்கு விட்டுவிட்டுச் சிறிய நாற்காலிகளில் சிறியவர்கள் உட்கார வேண்டும்.
பதவி தரும் அதிகாரத்தை நாற்காலி சுமக்கிறது. மேடையில் தலைவருக்கு அலங்கார நாற்காலி; பிறருக்குச் சாதாரண நாற்காலி. அலுவலகத்தில் அதிகாரிக்கு முதுகு நீண்ட நாற்காலி; அலுவலர்களுக்கு குறுமுதுகு நாற்காலி.
சாதி, மத அதிகாரம் நாற்காலியை உயிருள்ளதாகவே ஆக்கிவிடுகிறது. மதகுருவின் நாற்காலி அவரையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சாதியடுக்கில் மேலுள்ளோர் ஒருவரின் நாற்காலி மட்டும் ஓரிடத்திற்கு வந்தால் போதும்; அவரே வந்ததாகப் பொருள்.
இப்படி நாற்காலி என்பது ஏதோ ஒருவகை அதிகாரத்தைத் தன்னுள் ஏற்றிக்கொண்டிருக்கும் குறியீட்டுப் பொருள். கை வைத்த நாற்காலிக்கு ஒருபொருள்; கையில்லாத நாற்காலிக்கு ஒருபொருள். மர நாற்காலி உயர்வு; பிளாஸ்டிக் நாற்காலி கீழ்.
அஃறிணைப் பொருளும் அதிகாரமும்
நாற்காலிப் பயன்பாட்டை ஜனநாயகமாக்கிய பிளாஸ்டிக்கை ஏன் இழிவாகக் கருதுகிறோம் என்று தெரியவில்லை. விலை மலிவு என்பதுதான் காரணமாக இருக்குமோ? எல்லோரும் பயன்படுத்தும் பொருள் என்பதால் கீழானதாகிவிட்டதோ? படம் வெளியான பிறகு ஒரு புகைப்படம் பேசுபொருளானது.
உதயநிதி சோபாவில் அமர்ந்திருக்க வடிவேலுவும் மாரி செல்வராஜும் கைவைத்த பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்துள்ள புகைப்படம். மாரி செல்வராஜ் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது பற்றிக் கேள்விகள். அது வடிவேலு வீடு, வடிவேலும் பிளாஸ்டிக் நாற்காலியில்தான் உட்கார்ந்திருக்கிறார் என்றெல்லாம் விளக்கங்கள் வந்தன. பிளாஸ்டிக் நாற்காலி கீழானது என்னும் கருத்து எப்படி உருவாகியிருக்கும் என்பதுதான் எனக்குக் கேள்வியாக இருந்தது.
‘மாமன்னன்’ எல்லா வகைகளிலும் லாபமீட்டும் நோக்கைக் கொண்ட வணிகத் திரைப்படம். அதில் குறை சொல்வதற்குப் பல கூறுகள் உள்ளன. மிகுதியான குறியீட்டுப் பயன்பாடு ஒருகுறைதான். பன்றி, நாய், உடை, வாகனம், புகைப்படங்கள், சிலைகள் என ஏராளமான குறியீடுகள். பெயர்களும் குறியீடுகளே. திகட்டும் அளவுக்குக் குறியீடுகள்!
குறியீடுகளில் வெளிப்படையானதும் படத்தின் மையமானதுமான குறியீடு நாற்காலி. அதைச் செம்மையாகக் கையாண்டுள்ளார் மாரி செல்வராஜ். சாதியச் சமூகத்தில் அரசியலதிகாரத்தைப் பெறச் செய்ய வேண்டியிருக்கும் கடும்போராட்டத்தை இப்படத்தில் நாற்காலி உணர்த்துகிறது. சாதி, செல்வம் எல்லாம் உள்ளோட்டமாக இருந்தாலும் நாற்காலியின் முதன்மைப் பயன்பாடு அரசியலதிகாரம்தான்.
அஃறிணைப் பொருளாகிய நாற்காலியில் சாதாரணமாக உட்காரவும் அனுமதி கிடைக்காத ஒருவர், நாட்டை ஆளும் முதல்வரே எழுந்து நின்று மரியாதை தர வேண்டிய சபாநாயகர் நாற்காலியில் அமரும் வகையில் அரசியலதிகாரம் பெறுவதை இப்படம் சித்திரிக்கிறது. தன் வீட்டுக்கு வருவோரை எல்லாம் நாற்காலியில் அமர்த்திப் பேசுபவர், ‘உட்காரணும்’ என்று வலியுறுத்துபவர் மாமன்னன். அவர் தம் சாதியின் காரணமாக இன்னோரிடத்தில் எப்போதும் நின்றுகொண்டே இருக்கிறார்.
இத்தனைக்கும் அவர் பத்தாண்டு காலமாக அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். பெயரளவுக்குத்தான் அரசியலதிகாரம். பதவி கிடைத்தாலும் நாற்காலியில் உட்காரவே முடியாத போது எங்கிருந்து அதிகாரம் கிடைக்கும்? உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சில ஊராட்சித் தலைவர்களைக் கீழே உட்கார வைத்த செய்திகள் நினைவுக்கு வருகின்றன. மாமன்னன் தலைமுறைக்கு உட்கார அனுமதியில்லை. ஆதிக்க சாதியை அனுசரித்துச் சென்றால் சமமாக இல்லை என்றாலும் கையில்லாத நாற்காலியில் ஒரு ஓரமாக உட்கார இன்றைய தலைமுறைக்கு அனுமதி கிடைக்கிறது. அவ்வளவுதான். அதுவும் படத்தில் காட்சியாகி உள்ளது.
கதையிலும் கவிதையிலும் நாற்காலி
இவற்றை மாற்ற அதிவீரன் போன்ற ஒருவனைத் திரைப்படம் கொண்டுவந்து சேர்க்கிறது. “யாரு சொன்னாலும் அவரு என் முன்னால உட்கார மாட்டாரு” என்பவனிடம் “நீ சொன்னியா?” என்று அதிவீரன் கேட்கிறான். அந்தக் கேள்வி தரும் அதிர்ச்சியை ஆதிக்கத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
இப்படி ஒரே நாளில் மாமன்னனை நாற்காலியில் உட்கார வைக்க அதிவீரனால் முடிகிறது. சபாநாயகர் நாற்காலியில் மாமன்னன் அமர்ந்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ குறளை வாசிக்கும்போது ஒரு நிம்மதியை அடைந்து திரையரங்கை விட்டு வெளியேறுகிறோம். அந்த நிம்மதி நடைமுறையிலும் அமைய வேண்டும்.
நாற்காலி பற்றிய கவனம் எனக்கு எப்போதும் உண்டு. நாற்காலி பற்றிப் பலவிதமான பார்வைகளைக் கொண்ட படைப்புகளை எழுதியும் இருக்கிறேன். ‘மாமன்னன்’ படம் பற்றிய முகநூல் பதிவில் ‘நிறைய பொதுக் கூட்டங்களிலும் குடும்ப நிகழ்வுகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உட்கார்வதை அதுவும் நாற்காலியில் உட்கார்ந்துகொள்வதை பெரும் மானக்கேடாக நினைக்கும் சமூகம் நம்முடையது.
இன்றைய தொலைக்காட்சி சீரியல்களில் (உதா. பாண்டியன் ஸ்டோர்ஸ்) சர்வ சாதாரணமாக பெண்கள் கீழே அமர்வதும் ஆண்கள் நாற்காலியில் அமர்வது காட்சிப்படுத்தப்படுகிறது. என்னுடைய ‘இசை நாற்காலி’ என்னும் கதை இதை மையப்படுத்தியது. கணவனும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளும் மட்டுமே நாற்காலியில் அமர்வது கண்டு அதனில் அமர ஆசை கொள்ளும் ஒரு குடும்ப தலைவியின் கதை அது’ என்று என் ‘இசை நாற்காலி’ சிறுகதையைக் குறிப்பிட்டு மோனிகா (2023 ஜூலை 2) எழுதியிருந்தார். அக்கதை 1990களில் எழுதியது.
இன்னும் பலவற்றை எழுதியிருக்கிறேன். 1990இல் எழுதி ‘மனஓசை’ இதழில் தலைப்பின்றி, வீர.சந்தானத்தின் அருமையான நாற்காலி ஓவியத்தோடு வெளியான கவிதை இது:
உடைத்தெறிவோம்
நீர் கோத்து வீங்கிப்
பூஞ்சனம் பூத்த கால்களை
உள்ளங்கை பருத்து உப்பி
இரக்கம் செத்த கைகளை
அழுக்குத் திட்டுக்கள் தேங்கிச்
சொறி படர்ந்த முதுகினை
சூட்டின் வெம்மையில் உருகி
மரத்துத் தேய்ந்த உடலினை
தாள்களில் கவிழ்ந்து குதறி
முகம் சிதைந்த தலையினை
கனத்தில் வெம்பிக் கருகி
அழுகிப் புதைந்த இதயத்தை
உடைத்தெறிவோம்
நாற்காலிகளை.
நாற்காலியைப் பொருளாகக் கொண்டு எழுதியோர் பலருண்டு. ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ நாடகமும் சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. கதைகள் சொல்வன குறைவு; அன்றாட வாழ்வில் காணும் நாற்காலி அனுபவங்கள் பலப்பல. ஒரே ஒரு அனுபவத்தைச் சொல்லி இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.
என் மாணவரின் நாற்காலி
ஆத்தூர், அரசுக் கலைக் கல்லூரியில் 2016 முதல் 2020 வரை ஆசிரியராகப் பணியாற்றினேன். அக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த முன்னாள் மாணவர் சிவா, கார் ஓட்டுநராக வேலை செய்துகொண்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில் என்னை காரில் அழைத்துச் செல்வார். என் மாணவர் என்றே எல்லோரிடமும் சொல்வார்.
எங்களுக்குள் பரஸ்பர அன்பு மிகுந்தது. நான் ஆத்தூர் செல்வதற்குக் கொஞ்ச நாள் முன்னர் அவருக்குத் திருமணமாகியிருந்தது. நான் அங்கிருக்கும் காலத்தில் அவருக்கு மகள் பிறந்தாள். குழந்தையைப் பார்க்க வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னேன். “இப்ப வேண்டாங்கய்யா. நான் சொல்லும்போது வாங்கய்யா” என்றார்.
ஏதோ சில நாட்கள் கழித்து வரச் சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். அவர் அழைக்கவே இல்லை. “என்னப்பா ஆச்சு? உங்குழந்தைய எனக்குக் காட்ட மாட்டியா?” என்று கேட்டேன். தயக்கத்தோடு சொன்னார், “வீட்டுல நாற்காலி எதுவும் இல்லைங்கய்யா. சொந்தமா நாற்காலி வாங்கிப் போட்டுட்டு உங்களக் கூட்டிக்கிட்டுப் போறங்கய்யா” என்றார். நான் கீழே உட்கார்ந்துகொள்வேன், நாற்காலி வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் மசியவில்லை.
அவர் நாற்காலி வாங்குவதற்குள் அங்கிருந்து இடமாறுதல் பெற்று நாமக்கல் வந்துவிட்டேன். இப்போது இன்னொரு குழந்தைக்குத் தந்தையாகிவிட்டார். நாற்காலிகளும் வாங்கிவிட்டார். மகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். இன்னும் அவளை நான் பார்க்கவில்லை. “நாற்காலி வாங்கியாச்சுங்கையா. நீங்க வரலாம்” என்று சிவா அனுமதியும் கொடுத்துவிட்டார். இரு குழந்தைகளையும் பார்ப்பதற்காகவும் அவர் எனக்காக வாங்கிய நாற்காலியில் உட்கார்ந்துவிட்டு வரவும் ஒருமுறை ஆத்தூர் செல்ல வேண்டும். நன்னாள் அமையட்டும்!
பயன்பட்டவை:
1. கி.ராஜநாராயணன், கிடை குறுநாவலும் பன்னிரண்டு சிறுகதைகளும், 1991, அன்னம் (பி) லிட், சிவகங்கை, மூன்றாம் பதிப்பு.
2. பெருமாள்முருகன், மயானத்தில் நிற்கும் மரம், 2016, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
3. மோனிகா அவர்களின் முகநூல் பதிவு, 2023 ஜூலை 2.
தொடர்புடைய கட்டுரைகள்
மாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்
அசல் மாமன்னன் கதை
மாமன்னன்: கமல், காம்யு, காமெல், மாரி!
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.