கட்டுரை, பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரம் கடுமையான கட்டத்தைத் தாண்டிவிட்டதா?

ப.சிதம்பரம்
13 Dec 2021, 5:00 am
1

விவாதம் மீண்டும் களத்துக்குத் திரும்பிவிட்டது. அரசுத் தரப்பில் விவாதிக்க வேண்டியவர் பணி ஒப்பந்தக் காலம் முடிந்து புறப்படுவதற்குத் தயாராகிவிட்டார்.

இந்தியப் பொருளாதாரம் கடுமையான கட்டத்தை உண்மையிலேயே தாண்டிவிட்டதா? நாம் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி வீதம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டோமா? 2021-22-ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு (ஜூலை முதல் செப்டம்பர்) தொடர்பாகக் கிடைத்துள்ள தகவல்களையடுத்து மத்திய தரவுகள் அலுவலகத்தின் (சிஎஸ்ஓ) வளர்ச்சி பற்றிய சில மதிப்பீடுகள், அரசாங்கத்துக்கு சிறிதளவு மகிழ்ச்சியை ஊட்டியிருக்கிறது.

ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.4% தான் என்றாலும் அது போதாது என்று தள்ள முடியாது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த வளர்ச்சி வீதம் மைனஸ் 7.4% ஆக இருந்தது என்றாலும், இந்த வளர்ச்சியை ஒதுக்கிவிட முடியாது. 2021-22 முதலாவது காலாண்டில் ஏற்பட்ட 20.1% வளர்ச்சிக்கு அடுத்து தொடர்ச்சியாக இது இல்லை என்றாலும் அதே நிலைதான்.

அரசின் முகத்தில் சிறிதளவு மலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பவை - உயர் அதிர்வெண் குறியீடுகளாகக் கருதப்படும் வரி வருவாய் வசூலிப்பு, ஒருங்கிணைந்த வங்கிப் பரிவர்த்தனைகள் (யுபிஐ) தரவு, சரக்குப் போக்குவரத்து அதிகரித்ததை உணர்த்தும் இ-வே பில்கள், ரயில்கள் மூலம் நடந்துள்ள சரக்குக் கட்டணப் போக்குவரத்து அளவு, மின்சார நுகர்வு அதிகரிப்பு போன்றவை ஆகும். இவை அனைத்துமே எண்கள். மக்கள் அல்ல, அமைப்பு சாராத துறைகளை நம்பியிருக்கும் மக்களைப் பற்றியதல்ல. அந்தத் துறைகளைப் பற்றி நம்மிடம் தரவுகள் கிடையாது; பொருளாதார முப்பட்டத்தின் அடிப்பகுதியில் உள்ள சாமானியர்கள் எத்தனை கோடிப் பேர் என்ற எண்ணிக்கையும் நமக்குத் துல்லியமாகத் தெரியாது.

முதிர்ச்சியற்ற கொண்டாட்டம்

நிதி அமைச்சகத்தைத் சேர்ந்த அதிகாரிகள் இந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு, பொருளாதாரம் மீட்சியடைந்துவிட்டதாக பெருமிதப்பட்டாலும் இதர அமைச்சர்களும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் கலந்துகொள்ளாமல் அமைதியாகவே இருக்கின்றனர். வெகுஜன மக்களும் இதைக் கொண்டாடவில்லை. மத்திய தரவுகள் அலுவலகம் வெளியிட்ட மதிப்பீடுகளால் எழுந்த உற்சாகத் தலைப்புகள், ஊடகங்களிலிருந்து ஓரிரு நாள்களிலேயே விடைபெற்றுக்கொண்டன. அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டவை எவை என்றால் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் அபரிமிதமான விலையுயர்வு, சந்தையில் பொருள்களை வாங்க மக்களிடையே ஆர்வமில்லை என்ற செய்திகள்தான்.

அதே தரவுகள் அலுவலக மதிப்பீடுகள், மக்கள் தங்களுடைய தேவைக்கேற்ப முழு அளவுக்குக்கூட வாங்குவதில்லை, அதிகம் நுகர்வதில்லை என்றும் தெரிவிக்கிறது. வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படைகளாக இருக்கும் நான்கில் முக்கியமானது, சொந்தத் தேவைகளுக்கான நுகர்வு. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதத்தில் 55%-க்கு இந்தத் தனிப்பட்ட நுகர்வுதான் காரணமாக இருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுவதற்கு முந்தைய நிதியாண்டுகள் (2018-19, 2019-20), பெருந்தொற்று பாதித்த நிதியாண்டு (2020-21), பொருளாதார மீட்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருதப்படும் ஆண்டு (2021-22) ஆகியவற்றில் தனிப்பட்ட நுகர்வுகளின் அளவை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட நுகர்வுகளின் அளவு 2019-20-ம் ஆண்டில் இருந்ததைவிடக் குறைவு. இதில் மோசமான அம்சம் எதுவென்றால், அரையாண்டு மொத்த நுகர்வானது 2018-19-ல் இருந்த அரையாண்டு மொத்த நுகர்வைவிட குறைவு என்பதுதான். 2021-22-ல் அரையாண்டு மொத்த ஜிடிபி ரூ.68,11,471 கோடி என்பது, 2019-20-ன் அரையாண்டில் இருந்த மொத்த ஜிடிபி ரூ.71,28,238 கோடியைவிடக் குறைவு. பெருந்தொற்றுக்காலத்துக்கு முந்தைய நுகர்வு, வளர்ச்சி ஆகியவற்றை எட்டவே மேலும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

செலவில் சிக்கனம்

பெருந்தொற்றுக்காலத்துக்கு முந்தைய ஆண்டுகளில் நுகர்ந்ததைவிட, மீட்சியாண்டில் ஏன் மக்கள் குறைவாக நுகர்கின்றனர்? மக்கள் அனைவரும் இப்படியொரு முடிவை எடுக்கப் பல காரணங்கள் இருக்கலாம். அவை:

  • நபர்வாரி வருவாய் குறைந்து மக்கள் மேலும் ஏழைகளாகியிருக்கலாம்.
  • மக்களுக்கு இப்போது குறைவான ஊதியம்தான் கிடைக்கிறது.
  • மக்கள் தங்களுடைய வேலைகளை இழக்கின்றனர்.
  • மக்கள் தங்களுடைய தொழில்பிரிவுகளை மூடுகின்றனர்.
  • மக்களிடம் இப்போது செலவுக்குக் குறைவான பணம்தான் கையில் மிஞ்சுகிறது.
  • விலைவாசி உயர்வு மக்களை அச்சப்படுத்துகிறது.
  • மக்கள் இப்போது சேமிப்பது அதிகமாகியிருக்கிறது.

என்னுடைய கருத்துப்படி, இந்த எல்லா காரணங்களுமே சரியான விடைகளாக இருக்கக்கூடும். தரவுகள் காட்டுவதைப் பார்த்தால் ஏராளமானோர் முன்பு சம்பாதித்ததைவிட குறைவாகவே சம்பாதிக்கின்றனர். ஏராளமானோர் தாங்கள் பார்த்துவந்த வேலைகளை இழந்துவிட்டனர். வரிகள் அதிகரித்துவிட்டதால் செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் மக்கள் நுகர்வைக் குறைத்துவிட்டனர் (பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய எரிபொருள்கள் மீதான வரிகள் உயர்ந்திருக்கின்றன. ஜிஎஸ்டி வரி விகிதமும் அதிகமாகியிருக்கிறது).

ஏராளமான தொழில் பிரிவுகள் மூடப்பட்டுவிட்டன. கரோனா காய்ச்சலால் தாங்களும் பாதிக்கப்படுவோம் என்று அஞ்சி, ஏராளமானோர் வருவாயில் சிறிய பகுதியைச் சேமிக்கின்றனர்.

சில குடும்பங்களுடன் பேசியபோது, “எனக்கோ என் குடும்பத்தில் யாருக்காவதோ காய்ச்சல் வந்தால் என்ன செய்வது!” என்று பலர் அச்சத்துடன் தெரிவித்தனர். இது உண்மையான அச்சம். காரணம், அன்றாடம் வெளியாகும் புள்ளிவிவரங்களின்படியே வயது வந்தோரில் 50.8% பேருக்கு மட்டுமே இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. 85% பேர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் வயதுவந்தோரில் 15 கோடி பேர் ஊசியே போட்டுக்கொள்ளவில்லை. 

குழந்தைகள் – சிறார்களுக்கு ஊசி போடப்படவில்லை. ஆடம்பரமான திருமணங்கள், விமானம் நிறைய சுற்றுலாப் பயணிகள், குடும்பத்தோடு வெளியிடங்களில் விருந்துண்பது, வெள்ளிக்கிழமைகளில் தேவையான பொருள்களை வாங்கிக் குவிப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிகப் பெரிய நகரங்களிலும் இரண்டாவது நிலை நகரங்களிலும் மட்டுமே நிகழ்கின்றன. கிராமப்புறங்களில் சோகமான சூழலே நிலவுகிறது. மக்களிடம் அச்சம் அல்லது கவலை இன்னமும் படர்ந்திருக்கிறது.

தவறான பரிந்துரைகள்

பதவிக்காலம் முடிந்து விடைபெறும் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், இப்போதும் பொருளாதாரத்தின் வழங்கல்சார் பகுதியை (சப்ளை சைடு) மட்டுமே வலியுறுத்தி, இதன் மூலம் பொருளாதாரத்தை முடுக்கிவிட முடியும் என்று தவறாகப் பரிந்துரைக்கிறார். மக்களிடமிருந்தோ, சந்தையிடமிருந்தோ பொருள்களின் அளிப்புக்கு இணையான தேவையோ, அல்லது மிகு தேவையோ இருந்தால்தான் நாம் வழங்கல் பகுதி பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும். பொருள்களுக்கும் சேவைகளுக்குமான தேவை மந்தமாக இருக்கும்போது உற்பத்தியாளர்களும் விநியோகிப்பவர்களும் உற்பத்தியையும் விநியோகத்தையும் வெட்டத்தான் செய்வார்கள். மோட்டார் வாகனத் தொழில் துறையில் குறிப்பாக, பைக் – ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் உற்பத்தி, விற்பனையில் என்ன நடக்கிறது என்று பார்த்தாலே இது விளங்கிவிடும்.

பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கான சரியான பரிந்துரை, தேவையை அதிகப்படுத்துவதுதான். மோடி அரசு இதைத் தடுத்தது மட்டுமல்லாமல் சமயங்களில் ஏளனமும் செய்கிறது. தேவையைத் தூண்டுவதையும், மொத்த மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் அடித்தள மக்களிடம்தான் மேற்கொள்ள வேண்டும். எரிபொருள்கள் மீதும் சில சரக்குகள் மீதும் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். ஏழை மக்களிடம் நுகர்வுக்குத் தேவைப்படும் ரொக்கத்தை நேரடியாக வழங்க வேண்டும் என்றும் கூறிவருகிறேன். மூடப்பட்டுவிட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கும் மானிய உதவியை உடனடியாக வழங்கி, மீண்டும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உதவ வேண்டும் என்கிறேன். இந்த வேண்டுகோள்கள் அனைத்தும் கேளாச் செவிகளில்தான் விழுகின்றன.

இதனுடைய விளைவுதான் சமூகத்தின் மேல்தட்டில் உள்ள ஒரு சதவீத மக்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். முதல் பத்து சதவீத இடத்தில் உள்ளவர்கள் மேலும் பணக்காரர்களாகிவருகின்றனர். கடைசியிலிருக்கும் 50% மக்கள் மேலும் ஏழைகளாகிவருகின்றனர். மத்திய தரவுகள் அலுவலகம் வெளியிட்ட தகவல்களிலேயே களிப்படைந்து அரசு மேலும் திக்குமுக்காடிக் கொண்டிருந்தால், பொருளாதார நிலை குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தவறினால், இந்த அரசு கேளாச் செவியுடைய அரசு மட்டுமல்ல, மூளை மழுங்கிவிட்ட அரசும்தான் என்றே கருத நேரிடும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

இந்த அரசு தான் ஒரு elite citizens க்காக இயங்கும் அரசு என்பதை மீண்டும் , மீண்டும் தன் செயல்களால் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

வன்மத் தாக்குதல்சுற்றுலாமார்க்சிஸ்ட் கட்சிவாக்குப் பெட்டிசமஸ் - காந்திஎதிர்காலம் இருக்கிறதா?அருஞ்சொல் இரண்டாவது பிறந்த நாள்மருத்துவத் தம்பதிபற்களின் பராமரிப்புமுன்மாதிரிபாஸ்மண்டாபிற்படுத்தப்பட்டோர்எல்லாதொற்றுநோய்கள்மத்திய பட்ஜெட்மாநிலங்கள் மீதான மேலாதிக்கம்உணவுத் தன்னிறைமுன்பதிவுஇரு உலகங்கள்விமானப் படை‘அமுத கால’ கேள்விகள்அறிவியல் தமிழ்த் தந்தைகான்கிரீட்சமத்துவச் சமூகம்சீனா பறக்கவிடும் இந்தியக் கொடி!தூக்க மாத்திரைநட்சத்திரப் பேச்சாளர்அரசுப் பள்ளிமறக்கப்பட்ட பிரதமர்திருநம்பிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!