கட்டுரை 10 நிமிட வாசிப்பு

கிரிப்டோ நல்லதா: என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

டி.வி.பரத்வாஜ்
03 Dec 2021, 5:00 am
0

கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்த, இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மக்கள் இடையே  டிஜிட்டல் செலாவணியைப் பயன்படுத்த ஆர்வம் பெருகிவருவதால் ரிசர்வ் வங்கி மூலம் புதிய செலாவணியைக் கொண்டுவரவும், ஏனைய கிரிப்டோ கரன்சிகளைத் தடைசெய்யவும் திட்டமிடுகிறது அரசு. இந்த விஷயம் முக்கியமானது என்பதாலும், ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம் என்பதாலும் தமிழ் வாசகர்கள் பயன் பெறும் வகையில் இந்த வாரம் முழுக்க இது தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது அருஞ்சொல். சரி, கிரிப்டோ நல்லதா, கெட்டதா - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்? இந்தியாவின் முக்கியமான பொருளியல் நிபுணர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் இஙகே!

பரக் வாக்னிஸ், அம்பேத்கர் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்

பாரம்பரியமாக சேமிப்புக்காக மக்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள். கிரிப்டோ  அந்த இடத்தைப் பிடித்துள்ளது. யாராலும் கட்டுப்படுத்தப்படாததால் இதன் மதிப்பு மாறிக்கொண்டேயிருக்கிறது; தங்கத்தைவிட பல மடங்கு மதிப்பு உயர்கிறது.

கிரிப்டோவைக் கொடுத்து ஸ்டோர்களில் சரக்குகளை வாங்க முடியாது, சேவைக்குத் தர முடியாது. அதைப் பணமாக மாற்றினால்தான் பயன்படுத்த முடியும். எனவே இதை கரன்சி (செலாவணி) என்று குறிப்பிடுவதே தவறு. அதேசமயம், எந்த விதமான சொத்தையும் தடைசெய்வது தவறு.  அப்படிச் செய்தால் கள்ளச் சந்தைதான் உருவாகும்.

நிதிச்சந்தை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அரசு விரும்பினால், கிரிப்டோவைத் தனது கட்டுக்குள் கொண்டுவரலாம் அல்லது தடை செய்யலாம். ஆனால், அரசு விரும்பும் பலன் கிட்டாது. மாறாக, அனுமதித்து சில விதிகளை நிர்ணயித்தால், கண்காணிக்கவும் லாபத்தின் மீது வருமானம் பெறவும் முடியும்.

தனியார் வசம், செலாவணிக்கு மாற்றாகக் கூடுதலாக ஒன்று இருப்பதால் அரசு தன்னுடைய செலாவணியின் மதிப்பை ஒழுங்காகப் பராமரிக்க அக்கறை காட்டும். ஜிம்பாப்வேயில் அரசு ரூபாய் நோட்டுகளை சகட்டு மேனிக்கு அச்சிட்டு அதன் மதிப்பைக் குலைத்துவிட்டது. மக்கள் அதைக் கைவிட்டுவிட்டு அமெரிக்க டாலர்களையே முக்கியப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தினர். பிறகு அரசு தனது செலாவணி மதிப்பை டாலருக்கு நிகராக கணக்கிட்டு அதை முறையாகப் பராமரித்தது. இதனால் பொருளாதாரமும் மேம்பட்டது. அதேசமயம் தனியார் செலாவணி தோற்ற உதாரணங்களும் உண்டு.

அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா, தொழிலதிபர், கிரிப்டோ முதலீட்டாளர்:

கிரிப்டோ கரன்சி என்பது சொத்து. செலாவணிகளின் தொகுப்பு. அரசாங்கம் ரூபாய் நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விடும்போது பணவீக்கத்தால் அதன் மதிப்பு சரிந்துவிடுகிறது. பிட்காயின்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கணிதமும் பிளாக்செயின் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதால் தேவையின்றி அது அதிகம் வெளியிடப்படுவதில்லை.

உலகில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பிட்காயினை இன்று  பரிமாற்றத்துக்கு ஏற்கின்றன. டிஜிட்டல் மூலம் பல பொருள்களை நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். பணத்தைப் பரிமாற்றத்துக்கும் பயன்படுத்தலாம், சேமித்தும் வைக்கலாம் என்பார்கள். ஆனால் ரூபாய் நோட்டுகளைச் சேமித்து வைப்பதால் பணவீக்கம் காரணமாக மதிப்பிழந்து, சேமிப்பாளருக்கு இழப்பே ஏற்படுகிறது.

கொடுக்கல் வாங்கலுக்கு மட்டுமே ரூபாயைப் பயன்படுத்தலாம். அரசின் பணக் கொள்கையைப் மக்கள் புரிந்துகொண்டால் வீதிக்கு வந்துதான் போராடுவர். அரசிடம் வருவாய் இல்லை, திட்டங்களுக்கு நிதியில்லை என்றால் ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விடுகிறது. இது பொருளாதார முடிவல்ல, அரசியல் முடிவு. செலவுக்கு மூலதனம் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு செலவுகளை அதிகப்படுத்துவதால் எல்லோர் கையில் இருக்கும் பணமும் மதிப்பிழக்கும்.

ஆஷிமா கோயல், பேராசிரியர், ரிசர்வ் வங்கி பணக்கொள்கைக் குழு உறுப்பினர்:

கிரிப்டோ கரன்சிகளை இறையாண்மையுள்ள எவரும் வெளியிடுவதில்லை. ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதியளிப்பதைப் போல யாரும், இதைக் கொடுத்தால் இவ்வளவு ரூபாயைத் தருவேன் என்று உறுதிமொழியும் அளிப்பதில்லை. இதன் மதிப்பு குலையாமல் பார்த்துக்கொள்ள எவரும் பொறுப்பேற்பதில்லை.

ஆரம்பத்தில் பிட் காயின்கள் சில வட்டாரத்தில் சில பேரால் மட்டும் பயன்படுத்தப்பட்டன. தொழில்நுட்பம் காரணமாக இப்போது பொதுவெளியில் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இதைச் செலாவணி (கரன்சி) என்று கூறினாலும் கரன்சியின் மூன்று வேலைகளை இது செய்வதில்லை. ஒரு காபி பத்து ரூபாய் என்றால் காபியை வாங்கி, குடித்து முடித்த பிறகு 10 ரூபாய் தந்தால் போதும், அதே மதிப்பு. ஆனால், பிட்காயின் மதிப்பு அப்படி இல்லை. காபியை வாங்கும்போது ஒரு மதிப்புக்கும் முடிக்கும்போது இன்னொரு மதிப்புக்கும் சந்தை மாற்றிவிடும். எனவே இது பரிமாற்றத்துக்கானதல்ல.

எனவே இதன் மதிப்பு இத்தனை ரூபாய் என்று அலகாக நிர்ணயித்துக்கொள்ளவும் முடியாது. எதிர்காலத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று சேமித்து வைக்கவும் முடியாது. இது ஒரு வகையான சொத்து. இதற்கு அடிப்படை மதிப்பு இல்லை. இதிலிருந்து லாப ஈவும் (டிவிடெண்ட்) பிறக்காது. ஏராளமானோர் இதை வாங்க விரும்பினால் மட்டுமே இதன் மதிப்பு உயரும். எப்படி அதிகமாகிறதோ அப்படியே சரியவும் வாய்ப்பு உண்டு. இது அதிகம் புழங்கினால் திடீரென மதிப்பு உயர்வதும், திடீரென மதிப்பு சரிவதும் நிகழ்ந்தால் நிதித்துறை ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தும் ஏற்படும்.

அரசு வெளியிடும் பணம் விலைவாசி உயர்வால் வாங்கும் சக்தியை ஓரளவு இழக்கும். ஆனால் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு சரியும்போது பூரா முதலீடுமே காணாமல் போய்விடும். ஏராளமானோர் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக கிரிப்டோவைப் பயன்படுத்தத் தொடங்கினால் செலாவணியின் அடிப்படை, வலுவிழப்பதுடன் பணக் கொள்கை மூலம் அரசு சாதிக்க நினைத்தவை அனைத்தும் தோல்வியடையும். செலாவணியை அச்சிடுவதால் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் (Seigniorage) (அச்சுக்கூலி கழிக்கப்பட்ட பிறகு கிடைப்பது) இழக்கப்பட்டுவிடும்.

கிரிப்டோவை சொத்தாக வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம், பொருள்களையும் சேவைகளையும் பெற பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். தடை செய்தால் கள்ளச்சந்தையில் இது புழங்கும். அரசே டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது நல்லது.

உஷா தோராட், ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர்:

டிஜிட்டல் கரன்சிக்கு இந்தியாவில் ஆதரவு அதிகமாவதை அடுத்து, அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழு கர்க் தலைமையில் 2019-ல் அமைக்கப்பட்டது. 'தனியார் கிரிப்டோ கரன்சிகளைத் தடைசெய்ய வேண்டும், சிலவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு தரலாம், உடனடியாகப் பணம் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியைக்கொண்டு வரலாம்' என்று கர்க் குழு பரிந்துரைத்தது. அரசு அதன் அடிப்படையில் மசோதா தயாரித்துள்ளது. தனியார் கரன்சிகளில் முதலீடு செய்வதில் உள்ள தொழில்நுட்ப, சட்ட, ஒழுங்காற்றுப் பிரச்சினைகளை கர்க் குழு விரிவாக ஆராய்ந்தது.

கிரிப்டோ கரன்சியின் மதிப்பு உயர்வது ஊக அடிப்படையிலானது மட்டுமே. இறையாண்மையுள்ள எந்த அமைப்பும், மதிப்புக்குண்டான தொகையை அளிப்பதாக உறுதியேற்பதில்லை. இதில் முதலீடு செய்தவர்கள் டிஜிட்டல் தொடர்பை இழந்துவிட்டால் (பாஸ்வேர்டு, கீ இழப்புகள்), முதலீடுசெய்ததைத் திரும்பப் பெற முடியாது. இதை யார் பயன்படுத்துகிறார்கள், யார் வெளியிடுகிறார்கள் என்பது ரகசியம் என்பதால் இதைக் குற்றச் செயல்களுக்கும் பணமாற்று மோசடிகளுக்கும் பயன்படுத்த முடியும்.

பொதுவெளியில் புழங்குவதாகக் கூறும் இதில் தனியார்களை முதலீடுசெய்ய அனுமதிப்பது சூதாட்டத்தை ஊக்குவிப்பதைப் போல ஆகிவிடும். கிரிப்டோ கரன்சிகளைப் பெறுவதற்கான இணைப்பகங்கள் (எக்சேஞ்சுகள்) என்பவை, வெளியிடும் அலுவலகங்கள் அல்ல. அவை இடைநிலை அமைப்பு மட்டுமே, அவற்றைக் கட்டுப்படுத்துவதால் இதன் செயல்களைத் தடுக்க முடியாது. எனவே இதில் முதலீடு செய்வோரை, நுகர்வோரைக் காப்பது அரசின் கடமை.

மூலதனக் கணக்கு நிர்வாகத்தின் கீழும் இதை அணுக வேண்டும். இதற்கு முதலீடு செய்கிறவர் எப்படி பணம் செலுத்துகிறார்? அதை யார் பெற்றுக்கொள்கிறார்கள்? இது அரசுக்கு அறிவித்த பிறகு செய்யப்படுகிறதா? இது வருமான வரிக் கணக்கில் இடம் பெறுகிறதா? இதில் கிடைக்கும் கூடுதல் ஆதாயம் என்னவாக கருதப்பட வேண்டும்? அதை எந்த வடிவில் பெறுகின்றனர்? அன்னியச் செலாவணி பரிமாற்றச் சட்டம், அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டம் இதற்குப் பொருந்துமா? அரசின் கவனத்துக்கே வராமல் கோடிக்கணக்கான ரூபாய்கள் ரகசியமாக வெளிநாடுகளில் பரிமாறப்படும் என்றால் அரசின் நிதி, செலாவணி கட்டுப்பாட்டு அமைப்பெல்லாம் வெறும் கேலிக்கூத்தா? இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றன.

பிரதாப் பானு மேத்தா, கல்வியாளர், அசோகா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்:

செலாவணி (பணம்) என்பது நம்பிக்கை, அரசியல், உளவியல் ஆகியவற்றின் கலவை. பணம் மதிப்புள்ளது என்பது மக்களுடைய நம்பிக்கை. பணம் மூலம் அதிகாரம் பெறலாம் என்பதால் அது அரசியல்.

ஒன்றுமில்லாததிலிருந்து எதையோ பெற உதவுகிறது என்பதால் உளவியல் தன்மையுள்ளது. பணத்தால் எதைச் சாதிக்க முடியும் என்பதைவிட நம்முடைய சமூகம் எப்படிப்பட்டது என்பதைப் பணம்தான் அவ்வப்போது தெரிவித்துக்கொண்டிருக்கிறது.

கிரிப்டோ கரன்சி என்பது தொழில்நுட்பத்தால் விளைந்த சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு. அரசின் தலையீடு இல்லாத தனியார் செலாவணி வேண்டும் என்ற ஆர்வம் சமூகத்தில் இருக்கிறது. கிரிப்டோ கரன்சிகள் வெளியிடப்படும் விதம் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்த அரசும் பணத்தின் மீது தனக்குள்ள கட்டுப்பாட்டை, அதிகாரத்தை இழக்க விரும்பாது. அரசு வெளியிடும் செலாவணி மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பது நவீன அரசுகளின் சாதனை. அதிலிருந்துதான் அரசுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் அதிகாரமும் கிடைக்கிறது.

கிரிப்டோ கரன்சி என்பது மந்திரத்தில் மாங்காய் விழும் விஷயம் அல்ல. அதற்கு தொழில்நுட்பம், அடித்தளக் கட்டமைப்பு இருக்கிறது. அரசுகளால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அரசியலுக்குப் பணம் முக்கியம் என்பதே அதன் சாதகம். அரசுகளின் மத்திய (ரிசர்வ்) வங்கிகள் வெளியிடும் செலாவணிகளை மிஞ்சும் அளவுக்கு கிரிப்டோ கரன்சிகளுக்கு நிலைத்தன்மை, திறன், அந்தரங்கம், பாதுகாப்பு கிடையாது. டிஜிட்டல் முறையால் மேலும் மேலும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகமும் செலாவணி நிர்வாகமுமே தோன்றும்.

கிரிப்டோ இப்போது வெறும் சொத்தாகத்தான் பார்க்கப்படுகிறது. நிதிசார்ந்த பொருள்கள் சில சமயம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன, சில சமயம் ஆபத்தாக முடிகின்றன. கிரிப்டோ கரன்சி சந்தைகளை, மற்றதன் தாக்கத்திலிருந்து காத்துவிட முடியாது. இதில் ஏராளமானோர் முதலீடு செய்யும்போது, அவர்களில் சிலர் சக்திவாய்ந்தவர்களாக இருக்கும்போது அவர்களுடைய உள்நோக்கத்துக்கேற்ப இதில் மாறுதல்கள் ஏற்படுவது நிச்சயம்.

இந்தத் துறையை வளரவிடாமல் தடுப்பதில் ரிசர்வ் வங்கி தீவிரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக ஏராளமானோர், ஏராளமான தொகைகளை இதில் முதலீடு செய்தால், இதனால் பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லை என்று பாவனை செய்ய முடியாது. எந்த அடிப்படையில் இதன் மதிப்பு கூடுகிறது என்பது வெளிப்படாதபோது இதில் அதிக முதலீடு செய்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் உணர்த்தப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கி இதைத் தடுப்பதாகக் கூறிவிட்டு சிலவற்றை மட்டும் அனுமதிப்பது பலன் தராது. இதை அனுமதிப்பதாக இருந்தால் முதலீடு வெளிநாடுகளுக்குப் போகாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உண்மையான பொருளாதாரத்துக்குச் செலவிட, அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே செலாவணி இருக்க வேண்டும் என்று கருதுவதால் சீனா இதற்குத் தடை விதித்திருப்பது, அவர்களைப் பொருத்தவரை சரிதான்.

உலகம் முழுக்க கரன்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. இந்தியாவில் சிறு முதலீட்டாளர்களுக்கு லாபமே இல்லை. எனவே கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றால் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியும் இந்திய அரசும் சிறு முதலீட்டாளர்களின் நிலை குறித்து யோசிக்க வேண்டும். வங்கிகளின் டெபாசிட்டுகள் மீதான வட்டியை குறைத்துக்கொண்டே போனால் எங்கே பணம் போட்டால் அதிக வருமானம் கிடைக்கும் என்றுதான் தேடுவார்கள். இந்த நிலைமைக்கு எது காரணம்; அரசியலா, பொருளாதாரமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இலக்கியத் தளம்ஜான் பெர்க்கின்ஸ் கட்டுரைவாழ்வாதாரம்மீண்டெழட்டும் அதிமுகதென்யா சுப்பிஎஸ்எல்விகர்ப்பப்பைக் கட்டிகள்சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?பொது தகன மேடைகாப்பியங்கள்பொருளாதாரக் குறியீடுவடக்குக்குப் பரிசும் பாராட்டும்!ஆர்.ப்ரியாலட்சியவாதிமோடியைக் கலவரப்படுத்திய காங்கிரஸ் அறிக்கைதுர்காவி.ரமணிசாலைஇல்லியிஸம்தேவ கௌடாதனியார் மருத்துவக் கல்லூரிகள்அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி உண்டா?மராத்தியர்கள்பணக்கார நாடுநேரு குடும்பம்மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?நச்சரிப்பு காதல் இல்லைஇழிவான பேச்சுகள்அரசியல் வருகைசாட்சியச் சட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!