கோணங்கள், ஏன் எதற்கு எப்படி? 4 நிமிட வாசிப்பு

சீனா - தைவான் இடையே என்ன பிரச்சினை?

எஸ்.அப்துல் ஹமீது
13 Oct 2021, 5:00 am
1

சீனா அதன் தேசிய தினத்தை அக்டோபர் 1 அன்று கொண்டாடியது. அப்போது, சீன அதிபர் ஜின்பிங், “தைவானை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டும்” என்று பேசினார். இதன் தொடர்ச்சியாக, சீனா ராணுவ விமானங்கள் தைவானின் வான்வெளியில் பறந்தன; இது  தைவானில் பதற்றச் சூழலை ஏற்படுத்தியது. இந்நிலையில், அக். 10 அன்று தேசிய தினத்தைக் கொண்டாடியது தைவான். “சீனா ஒரு ஜனநாயகமற்ற நாடு. அதன் அழுத்தத்துக்கு தைவான் ஒருபோதும் பணியாது” என்று அப்போது குறிபிட்டார் தைவான் அதிபர் சாய் இங் வென். என்ன நடக்கிறது அங்கே? பார்ப்போம்!

 

என்ன பிரச்சினை?

சீனாவிலிருந்து 100 மைல் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய தீவுதான் தைவான். 1683 முதல் அது சீனாவின் ஜிங் வம்சத்தின் ஆட்சி எல்லைக்குள் இருந்துவந்தது. இருநூறு ஆண்டுகள் ஓடின. 1894-ல் சீனா மற்றும் ஜப்பான் இடையே போர் ஏற்பட்டது. அதில் சீனாவை வென்ற ஜப்பான் தனது காலனியாதிக்கத்துக்குள் தைவானை கொண்டுவந்தது.  ஆனால், அது நீடித்திருக்கவில்லை. இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் தோல்வி அடைந்ததையெடுத்து, தைவான் மீண்டும் சீனா வசம் வந்தது. சீனா - தைவான் இடையிலான பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி இதுதான்.

தைவான் சீனா வசம் வந்த சமயத்தில் சியாங் கை ஷெக் சீனாவில் ஆட்சியில் இருந்தார். அந்த சமயத்தில் சீனாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. மவோ தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் சீனாவில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். அந்த மோதலில், சியாங் கை ஷெக் தைவானுக்குத் தப்பியோடி அங்கு ஆட்சியை நிறுவினார். மட்டுமல்லாது, தன்னை முழு சீனத்துக்கும் தலைவராக முன்னிறுத்தினார். ஐநாவில் சீனாவின் பிரதிநிதியாக அவர் இடம்பெற்றார். ஏனைய நாடுகளும் அவரை ஒருங்கிணைந்த சீனாவின் தலைவராக அங்கீகரித்தன.

நீண்ட காலம் இது நீடித்திருக்கவில்லை. சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் வலிமை பெற்று, சீனாவின் தலைநகராக பெய்ஜிங்கை முன்னிறுத்தினர். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு இடையே ஐநா சபை, சியாங் கை ஷெக் தலைமையை மறுத்து, கம்யூனிஸ்ட்டுகள் தலைமையை அங்கீகரித்தது. “உலக நாடுகள் தைவானை சீனாவின் தலைமையிடமாகக் கருதி அதனுடன் வர்த்தக உறவில் ஈடுபடக்கூடாது. ஒரே சீனாதான் இருக்கிறது. பெய்ஜிங்தான் அதன் தலைநகர்” என்று கம்யூனிஸ்ட்டுகள் அறிவித்தனர். ஏனைய நாடுகளும் அதை ஏற்றுக்கொண்டன. அமெரிக்காவும் ‘ஒரே சீனா’ உடன்படிக்கையை மேற்கொண்டது. இதனால் தைவான் உலக நாடுகளின் உறவிலிருந்து தனித்துவிடப்பட்டது.

எப்படி வலுவான நாடானது தைவான்?

தைவான் இதுகுறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. அது தன்னைத் தனி நாடாகவே கருதிக்கொண்டது. 1980-களில் தைவான் அரசியலில் படிப்படியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜனநாயக தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. இந்தக் காலகட்டம் தைவானின் போக்கில் மிக முக்கியமான காலகட்டம். பொருளாதாரரீதியாக தன்னை வலுவான நாடாக மாற்றிக்கொள்ள  வேண்டிய நிர்ப்பந்தத்தில் தைவான் இருந்தது.

தைவான் அதன் பொருளாதாரக் கட்டமைப்பைத் தொழில்நுட்பம் சார்ந்து உருவாக்கியது. விளைவாக உலக நாடுகள் அதனுடன் உறவைக் கொள்வது தவிர்க்க முடிதாதது ஆனது. உதாரணமாக, தற்போது மின்னணுச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ‘செமி கண்டக்டர்கள்’ தயாரிப்பில் தைவான்தான் முதன்மை நாடாகத் திகழ்கிறது. அதன் செமிக் கண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான ‘டிஎஸ்எம்சி’யை நம்பிதான் அமெரிக்கா மற்றும் சீனாவின் கார் தாயாரிப்பு நிறுவனங்கள், மொபைல் மற்றும் கணினித் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், வர்த்தகரீதியாக தைவானுடன் வலுவான உறவைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக, தவிர்க்க முடியாத நாடாக தைவான் தன்னை கட்டமைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா எப்படி அணுகுகிறது?

அமெரிக்காவை விட்டுவிட்டு நாம் சீனா - தைவான் விவகாரத்தைப் பேச முடியாது. சீனாவுடன் அமெரிக்கா ‘ஒரே சீனா’ உடன்படிக்கை மேற்கொண்டிருந்தாலும், அதிகாரபூர்வமற்ற வழியில் தைவானுடன் அது நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. தைவான் சீனாவின் கைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகக் கவனமாக இருக்கிறது. தைவானின் பாதுகாப்பு நாடாக அமெரிக்கா தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ராணுவரீதியிலான உதவியை தைவானுக்கு வழங்கிவருகிறது.

தைவான் மீது அமெரிக்கா ஆர்வம் காட்டுவதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. 1. தைவான் சீனாவின் கைக்குச் சென்றுவிட்டால், ஆசியப் பிராந்தியத்தில் மேலும் பெரும் சக்தியாக சீனா உருவெடுத்துவிடும். அது தனது இருப்புக்கு ஆபத்தாகிவிடும் என்று அமெரிக்கா கருதுகிறது. 2. தொழில்நுட்ப ரீதியாக, தைவானின் இருப்பு அமெரிக்காவுக்கு மிக அவசியமானது. நவீன தொழில்நுட்பங்கள் தைவானிடமிருந்தே அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. தைவான் சீனாவின் கைக்குச் சென்றுவிட்டால், இந்த வர்த்தக உறவு தடைபட்டுவிடும். அது அமெரிக்காவில் பொருளாதாரரீதியாக மட்டுமல்ல, தொழில்நுட்பக் கட்டமைப்புரீதியிலும் நெருக்கடியை ஏற்படுத்தும். 3. சீனாவுடன் போர் ஏற்பட்டால், தைவானைத் தளமாகக்கொண்டு அமெரிக்காவால் சீனாவின் மீது தாக்குதல் நடத்த முடியும்.  எனவே, தைவானை சீனாவிடமிருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு உள்ளது.

சீனாவின் திட்டம் என்ன?

பரந்த சீனாவாக உருவெடுக்கும் கனவு சீன அரசுக்கு உண்டு. 2049-க்குள் தைவான் மட்டுமல்ல, திபெத்தையும் உள்ளடக்கிய பெரும் தேசியமாக உருவெடுக்கும் திட்டத்தில் சீனா இருக்கிறது. சீனா ஒருபோதும் தைவானைத் தனிநாடாகக் கருதியதில்லை. தங்களிடமிருந்து பிரிந்துபோன ஒரு மாகாணம் என்றுதான் தைவானை சீனா  கருதுகிறது.  சீன அரசு ‘ஒரு நாடு இரண்டு அமைப்பு’ என்ற கொள்கையை முன்வைத்து, தைவான் தங்களுடன் இணைய வேண்டும் என்று கூறுகிறது. அதாவது, தைவான் நிர்வாகரீதியாக சுயாதீனமாக இயங்கிக்கொள்ளலாம். ஆனால், அது தனிநாடாக அல்ல, சீனாவின் அங்கமாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை தைவான் ஏற்க மறுக்கிறது. ஏனென்றால், இந்தப் ஒப்பந்தந்தின்படிதான் ஹாங்காங் சீனாவுடன் இணைக்கப்பட்டது. ஆனால், ஹாங்காங்கின் சிறப்புரிமையை பறிக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது. 

தைவானியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

தைவானில் தற்போதைய தலைமுறையினர், தாங்கள் சீனாவுடன் பண்பாட்டுரீதியாக எந்தப் பிணைப்பையும் உணர்வதில்லை என்று கூறுகின்றனர். தைவானின் மக்கள் தொகை 2.38 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் தங்களை முழுமையான தைவானியராகவே உணர்வதாகக் கூறுகிறார்கள். அனைத்துக்கும் மேலாக அவர்கள் ஜனநாயகச் சூழலுக்குப் பழக்கப்பட்டுவிட்டனர்.  இந்தச் சூழலில்தான் தைவானிய மக்கள் ஒருசேர சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றனர். ஆனாலும், இரு நாடுகள் இடையில் சில அணுக்க நெருக்கமும் உண்டு.

அது என்ன அணுக்க நெருக்கம்?

சீனா - தைவான் இடையிலான பிரச்சினை அரசியல் தளத்தில் தீவிரம்கொண்டிருக்கும் அளவில் பொருளாதாரத் தளத்திலும், இரு நாட்டு மக்களிடையிலான உறவிலும் தீவிரமாக இல்லை. 10 லட்சம் தைவானியர்கள் சீனாவில் வசிக்கின்றனர். இரு நாட்டு மக்கள் இடையே பரஸ்பர உறவு இருக்கிறது. தவிர, பொருளாதாரரீதியாகவும் சீனா - தைவான் இடையே வலுவான உறவு இருக்கிறது. சீனாவில் தைவானிய நிறுவனங்கள் 60 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்துள்ளன. ஒருவகையில் இந்த பொருளாதார ரீதியிலான உறவு, தைவான் மீது சீனா போர் தொடுப்பதற்கான  தீவிரத்தை மட்டுப்படுத்துகிறது. 

தைவான் தனி நாடாக நீடிக்குமா?

அது சந்தேகம்தான். தைவான் அரசுக்கு என்று தனி அரசமைப்பு இருக்கிறது; தனி ராணுவம் இருக்கிறது; ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்றாலும் தைவான், ‘ரிப்பளிக் ஆஃப் சீனா’ என்பதாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது. ‘ரிப்பளிக் ஆஃப் தைவான்’ என்ற இடம் நோக்கி நகரவில்லை. அப்படி அது நகரும்பட்சத்தில், தைவான் மீது போர் தொடுக்க சீனா தயங்காது. எனவே, தைவானுக்குள் அது முழுச் சுதந்திர நாடாக மாற வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும், ‘ரிப்பளிக் ஆஃப் தைவான்’ ஆன  மாறுவதற்கான முயற்சிகளை அது தீவிரமாக மேற்கொள்ளவில்லை. மேலும், மாவோ பாதையில் சீனாவின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் இருக்கிறார். அந்த வகையில், பெரும் தேசியமாக சீனாவை உருவாக்கும் பயணத்தின் பகுதியாக தைவானை சீனாவுடன் இணைக்கும் முயற்சிகளை வரும்காலங்களில் தீவிரமாகவே மேற்கொள்வார். அது அப்பிராந்தியங்களுக்கிடையில் மட்டுமல்லாமல் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Piku   2 years ago

//தமிழ்நாட்டிலிருந்து போட்டித் தேர்வுக்குகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், அன்றாடம் ஒரு பதிவையேனும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘அருஞ்சொல்’ செயலாற்றுகிறது.// - மிக தேவையான முடிவு. தமிழ்நாட்டில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஆங்கில தினசரிகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. தமிழ் தினசரிகள் பெரும்பாலும் ஒற்றைச் சார்புநிலை கொண்டதாக இருப்பதும் கவலைக்குரிய செயல். அருஞ்சொல்லின் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்று. கூடவே, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம் இருந்து கட்டுரைகள் வரவழைத்து தகுதியான படைப்புகளுக்கு இடமளிப்பதும் தேர்வர்களுக்கு பயிற்சியாகவும் ஊக்கமாகவும் அமையும். அருஞ்சொல்லின் அருஞ்செயலாகவும் அமையும். சுருக்கமான தகவல்களுடன் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும் எளிமையான கட்டுரை. நன்றி!

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பதவி விலகவும் இல்லைபொருளாதார மந்தநிலைபத்மினிகடகம்கார்கேசிங்களம்கலைக் கல்லூரிதங்கள் நல்வாழ்வுக்கு தாங்களே பணம் தரும் ஏழைகள்!அப்துல் மஜீத்: ஆயிரத்தில் ஒருவர்நார்வேசைபர் குற்றம்கபால நகரம்ஒன்றிய அரசுஅரசமைப்புச் சட்ட மௌனமும்சர்தார் படேல்சொத்துகுடியரசுthe wireஇளம் பருவம்ஃபாலி சாம் நாரிமன்: நீதித் துறையின் பீஷ்மர்அரசர் கான்ஸ்டன்டடைன்தலித் அரசியலின் எதிர்காலம்கோர்பசெவ் கடைசிக் கட்டுரைஆர்.எஸ்.நீலகண்டன்கொலைவெறி தாக்குதல்எஸ்.சந்திரசேகர் கட்டுரைஅலுவலகம்தென்காசிகுளோக்கல்இடைக்கால அரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!