கட்டுரை, அரசியல், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

தைவானில் நெருப்பு அலைகள்

மு.இராமநாதன்
09 Aug 2022, 5:00 am
2

தைக் கொஞ்சம் கவனியுங்கள்...

ஜூலை 28: ‘நெருப்போடு விளையாடாதீர்கள். பொசுங்கிப்போவீர்கள்!’ சொன்னவர் சீன அதிபர் ஷி ஜிங் பிங். தொலைபேசியின் மறுமுனையில் இருந்தவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். எது நெருப்பு? தைவான் விவகாரம். எது விளையாட்டு? அமெரிக்க நாடளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி தைவான் போவதாகப் போட்டிருந்த திட்டம்.

ஜூலை 31: சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளுக்கு பெலோசி பயணம் போவார் எனும் செய்திக் குறிப்பை அவைத் தலைவரின் அலுவலகம் வெளியிட்டது. தைவானைப் பற்றிப் பேச்சு இல்லை.

ஆகஸ்ட் 1: பெலோசி சிங்கப்பூர் விஜயம்.

ஆகஸ்ட் 2 பகல்: பெலோசி கோலாலம்பூர் வருகை. தைவானுக்குப் போவாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை.

ஆகஸ்ட் 2 இரவு: பெலோசி தைவானின் தலைநகர் தைபை வந்திறங்கினார். நேரம் இரவு 10:43.

ஆகஸ்ட் 3: பெலோசி தைவான் அதிபர் சாய் இங் வென்னைச் சந்தித்தார். தைவானின் ஜனநாயகத்தைக் காப்பதில் அமெரிக்கா துணை நிற்கும் என்றார். ஜப்பானுக்குப் பயணமானார். நேரம் மாலை 6 மணி.

ஆகஸ்ட் 4: இது அமெரிக்காவின் பொறுப்பற்ற, அறிவுக்குப் பொருந்தாத, பித்தேறிய செயல் என்று சாடியது சீனா.

வார்த்தைகளோடு நிற்கவில்லை. தைவானைச் சுற்றிலுமுள்ள கடற்புரத்திலும் வான்வெளியிலும் ஏவுகணைகளைச் செலுத்தியது. போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டது. இது நான்கு நாட்களுக்குத் தொடரும் என்றும் அறிவித்தது. தைவான் கடற்பரப்பில் நீர்வழிப் போக்குவரத்தும் வான்வழிப் பயணங்களும் நின்றுபோயின. சில பொருளாதாரத் தடைகளையும் விதித்தது சீனா.

ஆகஸ்ட் 5: தென் சீனக் கடலில் நங்கூரமிடப்பட்டிருக்கும் ரீகன் எனும் அமெரிக்க விமானந்தாங்கிக் போர்க் கப்பல் இப்போதைக்கு பின் வலிக்கப்படாது என்று அறிவித்தார் ஜோ பைடன்.

ஆகஸ்ட் 7: தைவானைச் சுற்றி ஆறு இடங்களில் சீனா மேற்கொண்ட போர் பயிற்சியை முடித்துக்கொண்டது. அதேவேளையில், அடுத்த ஒரு வாரத்திற்கு கொரிய தீபகற்பத்தில் போர்ப் பயிற்சிகள் தொடரும் என்றும் அறிவித்தது. அமெரிக்காவுடன் நிகழ்த்தவிருந்த சில ராணுவ பேச்சு வார்த்தைகளையும் ரத்துசெய்தது சீனா. 

ன்ன நடக்கிறது தைவானில்? தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பு எங்கும் ஏன் உயர்ந்திருக்கின்றன நெருப்பு அலைகள்? சீனா ஏன் சினக்கிறது? தைவான் ஏன் எதிர்க்கிறது? இதில் அமெரிக்காவின் ஆர்வமும் பங்கும் என்ன? என்று வடியும் இந்தப் பதற்றம்?

இலையும் மரமும்

அகன்று கிளை பரப்பியிருக்கும் சீன மரத்தின் அருகில் ஒரு சிறிய இலையைப் போல் மிதக்கிறது தைவான் எனும் தீவு. சீனாவிற்கும் தைவானிற்கும் இடையே ஒரு நீரிணை. அதன் அகலம் வெறும் 100கி.மீ. ஆனால், அங்கே அரசியல் அலைகளுக்கு எப்போதும் குறைவிருக்காது.

இப்போது சீன ஏவுகணைகளின் பாய்ச்சலால் நெருப்பு அலைகள் மேலுயர்கின்றன. ‘தைவான் சீனாவின் ஒரு பகுதி, அது இடையில் பிரிந்தது, மீண்டும் இணைத்துக் கொள்வோம், என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு. ஆனால், நாங்கள் சுயேச்சையானவர்கள், சீனாவிற்குக் கீழடங்கி வாழ நாங்கள் தயாரில்லை என்கிறது தைவான். இந்த உரசலின் வரலாறு நெடியது.

நெருப்புக் கடலில் மிதக்கும் தீவு

16ஆம் நூற்றாண்டில் தொடங்கலாம். அப்போது தைவான் சுயேச்சையாக இருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் சிங் சாம்ராஜ்ஜியத்தின் (Qing Dynasty) கீழ் வந்தது தைவான். இது 17ஆம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. முதலாவது சீன - ஜப்பான் யுத்தத்தில் (1894-95) சீனா தோல்வியுற்றது; சீனாவின் சிங் அரசு, தைவானை ஜப்பானுக்குத் தாரை வார்த்தது. தைவான், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாறியது.

1912இல் சீனாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கோமிங்டாங் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசுக்கு ‘சீனக் குடியரசு’ (Republic of China-ROC) என்று பெயர். அப்போதும் தைவான் ஜப்பானியக் காலனியாகத்தான் இருந்தது. 1937இல் ஜப்பான் மீண்டும் சீனாவின் மீது போர் தொடுத்தது. இதுதான் இரண்டாவது சீன ஜப்பானிய யுத்தம். இது இரண்டாம் உலகப் போர் (1939-45) முடிவுக்கு வரும்வரை நீடித்தது. இரண்டாம் உலகப் போரில் சீனா, நேச நாடுகளின் (அமெரிக்கா- பிரிட்டன்- ரஷ்யா) கூட்டணியில் இருந்தது. ஜப்பான், அச்சு நாடுகளின் (ஜெர்மெனி - இத்தாலி) கூட்டணியில் இருந்தது. நேச நாடுகள் வென்றன. 1945இல் ஜப்பான் சரணடைந்தது, தைவானிலிருந்தும் வெளியேறியது. சீனக் குடியரசு (ROC) தனது ஆட்சிக் கரங்களைத் தைவானுக்கு நீட்டித்துக்கொண்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 1921இல் உருவானது. 1927ல் செம்படையைக் கட்டியது. மா சே துங் அதன் தளபதியானார். செம்படை, கோமிங்டாங் ராணுவத்தை எதிர்த்தது. எனில், ஓர் இடைக்கால ஏற்பாடாக, 1937இல் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படையும் கோமிங்டாங் கட்சியின் அரசபடையும் இணைந்து, பொது எதிரியான ஜப்பானை நேரிட்டன. இது ஜப்பான் தோல்வியடைந்த 1945 வரை நீடித்தது. அதன் பிறகு செம்படை தனது துவக்குகளை கோமிங்டாங் படைக்கு எதிராகத் திருப்பியது. உள்நாட்டு யுத்தம் உக்கிரமானது. 1949இல் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது; மக்கள் சீனக் குடியரசை (People Republic of China- PRC) நிறுவியது.

கோமிங்டாங் கட்சியினரும் அதன் தலைவர் சியாங் கை ஷேக்-உம் தைவானுக்குத் தப்பியோடினார்கள். இயன்றவரை சீனாவின் பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொண்டும் போனார்கள். தைவானில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். தங்கள் அரசுக்குச் சீனக் குடியரசு (ROC) என்றே பெயரையே நீட்டித்தார்கள். இந்த ஆட்சி சில மாதங்களே தாக்குப்பிடிக்கும் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், கொரிய யுத்தம் கணக்குகளை மாற்றிப்போட்டது.

ஒருங்கிணைந்த கொரியா 1910இல் இருந்தே ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்தது. இந்த நிலை 1945இல் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய அமெரிக்காவும் சோவியத் யூனியனும் உலகின் பல நாடுகளை தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. இதில் கொரியா, வட கொரியா, தென் கொரியா என்று இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. முன்னதில் சோவியத் ஒன்றியமும் பின்னதில் அமெரிக்காவும் செல்வாக்குச் செலுத்தின. 1950இல் இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் போர் மூண்டது.

வல்லரசுகள் இரண்டும் நேரடியாகப் போரில் இறங்கின. போர் மூத்திருக்கும்போது, வட கொரியாவிற்கு ஆதரவாகக் களம் இறங்கியது சீனா. இதைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அப்போதுதான் கிழக்காசியாவில் காலூன்றுவதற்காக பிலிப்பைன்ஸிற்கும் ஜப்பானிற்கும் இடையில் உள்ள தைவானில் தனது ராணுவ தளத்தை நிறுவியது அமெரிக்கா. கிழக்காசியச் சமன்பாடுகள் என்றென்றெக்குமாக மாறிப்போயின. (1953இல் வெற்றி தோல்வியின்றி கொரிய யுத்தம் முடித்துக்கொள்ளப்பட்டது. எனினும் இன்றளவும் கொரிய எல்லையில் பதற்றம் முடிவுக்கு வரவில்லை. அது வேறு கதை).

இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், 1945இல் அமைக்கப்பட்ட ஐ.நா.வில், வீட்டோ அதிகாரமுள்ள பாதுகாப்புக் கவுன்சிலுக்கான ஐந்து இடங்களையும் நேச நாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சியின் சீனக் குடியரசிற்கு (ROC) கவுன்சிலில் ஓர் இடம் கிடைத்தது. ஆனால், உள்நாட்டு யுத்தத்தில் தோற்று, 1949இல் அது தைவான் அரசாகச் சுருங்கிப்போன பிறப்படும் அந்த இடத்தை கோமிங்டாங்கே அனுபவித்து வந்தது. இதற்கு மேற்கு நாடுகளின் சம்மதமும் இருந்தது.

அந்த இடம் அகண்ட சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு (PRC) வழங்கப்படுவதுதான் முறையானது என்று அப்போது குரல் கொடுத்த நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருந்தது. 1971இல்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டது. தைவான் (ROC) வகித்துவந்த பாதுகாப்புக் கவுன்சில் இடம் சீனாவிற்குக் (PRC) கை மாறியது. அது முதல் தைவானுக்கு ஐ.நா.வில் இடம் இல்லாதாகியது. சீனா என்கிற பெயர் பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு மட்டுமே உரித்தாகியது.

தைவானை அங்கீகரிக்கும் எந்த நாட்டுடனும் சீனா ராஜீய உறவு வைத்துக்கொள்வதில்லை. இதனால் அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றுக்கும் தைவானோடு ராஜீய உறவுகள் இல்லை. எனினும், பல நாடுகளும் தைவானோடு ‘அலுவல் சாராத உறவைப் பேணுகின்றன. இந்திய அரசின் இந்திய - தைபை சங்கம் தைவானின் தலைநகர் தைபையில் இயங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளிலும் உலக சுகாதாரம், உலக வணிகம் போன்ற அமைப்புகளிலும் தைவான் 'சீனத் தைபை' என்கிற பெயரில் பங்கெடுக்கிறது.

அமெரிக்கா - தைவான் உறவு

இதில் 1979இல் அமெரிக்கா சீனாவுடன் ராஜீய உறவைத் தொடங்கியது. அதன் உடனிகழ்வாக தைவானுடனான ராஜிய உறவைக் கைவிட வேண்டி வந்தது. கூடவே, தைவான் சீனாவின் பகுதி எனும் ஒற்றைச் சீனா கொள்கையையும் அங்கீகரித்தது. தைவானில் நிறுவியிருந்த தனது ராணுவ தளத்தையும் கலைத்தது. எனினும் தைவானுடன்  அலுவல் சாரா உறவைத் தொடர்ந்தது. இதற்காகத் தைவானுடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது.

தொடர்ந்து சில உறுதிமொழிகளையும் வழங்கியது. தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை தொடரும், தைவானின் இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிக்கும், சீனாவுடன் சமரசமாகப் போகுமாறு தைவானை வலியுறுத்தாது முதலானவை அந்த உறுதிமொழிகள். இப்போதைய பெலோசியின் விஜயம் அமெரிக்கா ஏற்றுக்கொண்ட ஒற்றைச் சீனா கொள்கைக்கு எதிரானது, இதை ஊக்குவிக்க முடியாது, ஆகவேதான் இந்தக் கடுமையான போர்ப் பயிற்சி எச்சரிக்கைகள் என்கிறது சீனா. 

தைவான் அற்புதம்

1950 முதலாக ராணுவ உதவிகளை மட்டுமல்ல; பொருளாதார உதவிகளையும் அமெரிக்கா வாரி வழங்கியது. உதவிகளைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்ட தைவான், உள்கட்டமைப்பு, தொழில், வேளாண்மை என்று எல்லாத் துறைகளிலும் நாலு கால்ப் பாய்ச்சலில் முன்னேறியது. 2.3 கோடி மக்கள்தொகையே உள்ள போதும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருக்கிறது தைவான். 1965-1985-க்கு இடைப்பட்ட  இருபதாண்டு காலத்தில் தைவானின் பொருளாதாரம் 360% உயர்ந்தது என்கின்றன புள்ளிவிவரங்கள். ராணுவ ஆட்சியிலேயேகூட இந்த அற்புதம் நடந்தது என்பது ஒரு வினோதம்.

இன்றைக்கு உலகின் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தைவான்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. செல்போன்கள், மருத்துவ உபகரணங்கள், கார்கள், போர் விமானங்கள் முதலானவற்றில் முக்கியமான அங்கமாக விளங்குகிறது செமி-கண்டக்டர். உலகச் சந்தையில் விற்பனையாகும் செமி-கண்டக்டர்களில் 64% தைவானில் தயாராகின்றன. ஆகஸ்ட் 4 அன்று தைவானிலிருந்து சீனாவிற்கு இறக்குமதியாகும் மீன்கள், பழங்கள், மணல் முதலான பொருட்களுக்குத் தடை விதித்தது சீனா. ஆனால் செமி-கண்டக்டர்களை அந்தத் தடை தொடவில்லை. சீனா மட்டுமில்லை, இன்று உலகின் எந்த நாடும் இந்தச் சிற்றிலை தேசத்தின் செமி-கண்டக்டர் இல்லாமல் இயங்க முடியாது.

ஒற்றைச் சீனா

1949 முதல் 1987 வரை தைவானில் கோமிங்டாங்கின் ராணுவம்தான் அரசோச்சியது. 1980-ல் ஜனநாயக ஒளிக்கதிர் பரவத் தொடங்கியது. 1987 முதல், முறையான தேர்தல் நடந்து வருகிறது. இப்போது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கோமிங்டாங் எதிர்க் கட்சி. ஜனநாயகக் கட்சி தைவானின் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்கிறது. கோமிங்டாங் சீனாவோடு அனுசரித்துப் போக விரும்புகிறது. 

தைவான், திபெத், ஹாங்காங், மக்காவு உள்ளிட்ட 'ஒற்றைச் சீனா'வைக் கட்டுவதுதான் சீன அரசின் லட்சியம். ஹாங்காங்கைப் போல தைவானையும் ஒரு 'சிறப்பு நிர்வாகப் பகுதி'யாக (Special Administrative Region) மாற்றுவோம் என்று சொல்லி வருகிறது சீனா. ஹாங்காங் ஆட்சிக்கு 'ஒரு தேசம் ஈராட்சி முறை' (One Country Two Systems) என்று பெயர். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயாட்சி மிக்க மாநிலம் என்பது பொருள். அரசமைப்புச் சட்டம் தனியானது. நாணயம் வேறானது. சட்டமன்றம் இருக்கும். செயலாட்சித் தலைவர் (Chief Executive) தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த மாதிரியைத்தான் தைவானுக்கு முன்மொழிகிறது சீனா.

ஹாங்காங்கில் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்பது ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வாதம். எதிர்க்கட்சியான கோமிங்டாங், இயன்ற வரை சீனாவுக்கு இணக்கமாகப் போக விரும்புகிறது. ஜனநாயக முன்னேற்றக் கட்சி ஒற்றைச் சீனா எனும் கொள்கையை மறுதலிக்கிறது. எனில், இரண்டு கட்சிகளும் இப்போது பெலோசியை வரவேற்றன. கோமிங்டாங் கட்சியின் இளந் தலைமுறையினர் சீனாவுடனான இணக்கத்தை விரும்பவில்லை என்கிறார்கள். 

எனில், இந்தத் தர்க்கங்கள் எதுவும் சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான வணிக உறவுகளுக்குத் தடையாக இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிற்பாடு பரஸ்பர வணிகமும் முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. 2019-ல் தைவான்- சீனா வணிக உறவின் மதிப்பு ரூ.11லட்சம் கோடி (ஒரு ஒப்பீட்டுக்கு, இதே கால கட்டத்தில் இந்திய-சீன வணிக உறவு ரூ 6.5லட்சம் கோடி).

வணிக உறவு செழித்தாலும் பெரும்பான்மை தைவானியர்கள் சீனக் குடையின் கீழ் ஒதுங்க விரும்பவில்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். தைவானை 2049ஆம் ஆண்டிற்குள் சீனக் குடையின் கீழ் கொண்டு வருவதுதான் சீனாவின் இலக்கு. தைவானின் கடற்பரப்பில் இப்போது சீனா மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சி, அந்த இலக்கை அடைய சீனா தயங்காது என்கிற செய்தியைச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இப்போது சீனா தைவானின் மீது படையெடுக்குமா? அப்படிச் செய்தால் தைவானில் ரத்த ஆறு ஓடும். சீரழிவு நேரும். சர்வதேச அரங்கில் சீனாவின் மதிப்பு குன்றும். ஆகவே சீனா அப்படிச் செய்யாது என்று கருதலாம். தைவான் சீனக் குடையின் கீழ் அமைதியாக இணைந்து கொள்ளாவிட்டால், ராணுவப் படையெடுப்பிற்குச் சீனா தயங்காது என்பதுதான் சீனா தைவானுக்கு விடுக்க விரும்பும் செய்தி என்கிறார் பிபிசி செய்தியாளர் பிராங் கார்டனர். மறுபுறம், தைவானும் தனது தளவாடங்களைப் பலப்படுத்தி வருகிறது. தைவானுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இப்போதைய நெருப்பு அலைகள் தாழ்ந்துவிடும். அதற்கான சாத்தியங்களே அதிகம். ஆனால் அவை நெருப்பு அலைகள். அவை அவியாது. கனன்று கொண்டே இருக்கும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


3






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

சரளமான நடை.... மேலும் மேலும் ஊன்றிப் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தும் வலிய வார்த்தைகள்.... கட்டுரையின் ஆரம்பமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியும், முழுக்க முழுக்க விறுவிறுப்புடன் கட்டுரையைக் கொண்டு சென்ற விதமும் அருமை... பல கருத்துக்களை திறம்பட கையாண்ட கட்டுரையாளருக்கு நன்றிகள்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

“நெருப்போடு விளையாடாதீர்கள்..பொசுங்கிப்போவீர்கள்… சொன்னவர் சீன அதிபர் ஷி ஜிங் பிங். தொலைபேசியில் மறுமுனையில் இருந்தவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்”. அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த, திரு இராமநாதன் எழுதிய கட்டுரையின் இந்த ஆரம்ப வாசகங்களைப் படித்து அதிர்ந்து போனேன். யாருக்குப் பித்து பிடித்துள்ளது என்பதே நம்முன் உள்ள கேள்வி.. உலகின் பெரும் வல்லரசு எனக்கருதப்படும் அமெரிக்காவின் அதிபரைப்பா்த்து இவ்வார்த்தைகள் வீசப்படுமாயின், இதை சீன அதிபரின் எல்லை மீறல் என்பதா அல்லது அமெரிக்க அதிபரின் இயலாமை என்பதா? ஒன்று மட்டும் நிச்சயம்; சீனாவின் எல்லை விரிவாக்க ஆசைக்கு அளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள் தொகையிலும் பொருளாதார வலிமையிலும் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் சீனா உலக அமைதிக்கும மற்ற நாடுகளின் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது என்பதை உலக நாடுகள் உணர வேண்டிய தருணம் வந்து விட்டது.

Reply 9 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஈஸ்ட்ரோஜென்கேள்வி நீங்கள் பதில் சமஸ்இந்திய தண்டனையியல் சட்டம்கே.வி.அழகிரிசாமிபொருளாதர நெருக்கடிகற்பூரி தாக்குர்பொது விநியோகத் திட்டம்தமிழ் இலக்கியம்இந்தி மாநிலங்கள்ரெட் ஜெயன்ட் மூவிஸ்மொழிவழித் தேசியம்நிதிப் பங்கீடுஎக்ஸ் வீடியோஸ்மது ஒழிப்புநிகில் மேனன் கட்டுரைகுஜராத்திஇரட்டைத் தலைமைநிர்வாகம்ஓவியப் பாரம்பரியம்இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனஜோசப் பிரபாகர் கட்டுரைபாகிஸ்தான் அணிநாம் செய்ய வேண்டியது என்ன?dam safety billகற்பவர்களின் சுதந்திரம்நிதிச் சீர்திருத்தம்இசை மேதைகள்இந்தித் திணிப்பு போராட்டம்குற்றச்சாட்டுகள்தமிழக பட்ஜெட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!